திங்கள், 31 மார்ச், 2014

''கல்கி'' பத்திரிகையின் பார்வையில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள்....!...


நன்றி: கல்கி (ஏப்ரல் 6)

மிகச்சிறந்த வேட்பாளர்...!

              ‘கம்யூனிச இயக்கத்தின் தொழிலாளர் நலன் மற்றும் தொழில் வளர்ச்சிக்கென அடித்தளமாக அமைந்திருந்தன, தோழர் அனந்த நம்பியார் மற்றும் தோழர் எம்.கல்யாணசுந்தரம் ஆகியோர் அடுத்தடுத்து பணியாற்றிய மக்களவைக் காலங்கள். 1962லிருந்து 1980வரையிலான பதினெட்டு ஆண்டுகளில் திருச்சியில் பாய்லர் ஆலைi மற்றும் அதனைச் சார்ந்த சிறு தொழிற்சாலைகள், துப்பாக்கித் தொழிற்சாலை ஆகியவை அமைய இவர்களின் முயற்சிகள் இன்றியமையாததாக இருந்துள்ளன. பொன்மலை ரயில்வே பணிமனை இங்கு வந்து அமைவதற்கும், பின்னாளில் இங்கிருந்து வேறிடம் செல்ல இருந்தபோது அதனைத் தடுத்து நிறுத்தியதும் கம்யூனிஸ்ட் எம்பிக்களின் சாதனை.இன்றைக்கு திருவெறும்பூர், துவாக்குடி பகுதிகளில் ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறு தொழிற்சாலை கள் பரந்து விரிந்து இயங்கி வருவதற்கு மேற்குறிப்பிட்ட கம்யூனிஸ்ட் எம்.பிக்களின் தொடர்முயற்சிகளை மறுக்க முடியாதது........சிட்டிங் எம்.பி.யான அதிமுகவின் ப.குமார், தொகுதிக்குள் பெயர் சொல்லிக்கும்படியாக ஏதும் செய்யவில்லை என்கின்றனர் வாக்காளர்கள். இந்நிலையில் அதிமுக வேட்பாளராக அவரே திருச்சியில் மீண்டும் போட்டியிடுகிறார். “திருச்சி பார்லிமென்ட் தொகுதியின் இன்றையவளர்ச்சியும் நாளை வளர்ச்சியும் பெரிய கேள்விக்குறிதான். போட்டியிடுவதிலேயே மிகச்சிறந்த வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் ஸ்ரீதர்....” என்கிறார் நடுநிலையாளர் ஒருவர்.

இந்த எளிமை ரொம்ப பிடிச்சிருக்க...!

                 “இதுவரைக்குமான தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின், முதல் பெண் வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்ச்செல்விதான்.பொதுவாக வேட்பாளர்கள் கலந்து கொள்ளும் அந்தந்தக் கட்சிகளின் செயல்வீரர்கள் மற்றும் அறிமுகக் கூட்டங்களுக்கு சாரை சாரையாகக் கார்கள் அணிவகுத்துச் செல்லும். அந்த ஏரியா முழுவதும் கார்களாக இருக்கும். ஆனால், மார்க்சிஸ்ட் வேட்பாளர் தமிழ்ச்செல்வி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், இரு சக்கர வாகனங்களும் சைக்கிள்களுமே அணி வகுத்துச் செல்கின்றன. தொகுதிவாசிகளுக்கு இந்த எளிமை ரொம்பப் பிடிச்சிருக்காம்!

நிரந்தர ஆதரவு உண்டு....!

                     “திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டி. முப்பத்தியாறு ஆண்டு காலப் பொதுவுடைமைக் கட்சி அனுபவம் மிக்கவர். பல போராட்டங்களில் பங்குபெற்றவர். பஞ்சாலை மற்றும் தோல் தொழிற்சாலைகள் மிகுந்த இத்தொகுதியில் இரண்டு கம்யூனிஸ்ட்களுக்கும் நிரந்தர ஆதரவு உண்டு. பழனியில் தலித்களுக்காக இடம்பெற்றுத்தர தற்போது வரை போராடி வருபவர்

உழுகிற நாளில் ஊருக்குப் போய்விட்டு அறுக்கிற நாளில் அரிவாளோடு வருவதா?

 

 கட்டுரையாளர் :தோழர்.ஜி.ராமகிருஷ்ணன், 
               மாநிலச்செயலாளர்            
               மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி       

 
                 “நான் மின்சாரப் பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். மின்சாரத்தைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். விரைவில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும்” மதுரையில் அஇஅதிமுக வேட்பாளருக்கு வாக்குகள் சேகரிக்கும் பிரச்சாரத்தின்  போது முதலமைச்சர் ஜெயலலிதா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
            தமிழகத்தில் கோடை வெயில் தனது உக்கிரத்தைக் காட்டத் துவங்கியுள்ள வேளையில், மக்களை மேலும் துயரத்தில் மின்வெட்டு தள்ளிவரும் நிலையில், கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் வார்த்தைகளை சொல்லி வருகிறார் முதலமைச்சர். மேலும் “சில இடங்களில் மின் உற்பத்தி பிரச்சனையால், ஓரிரு நாட்கள் தமிழகத்தில் சில மணிநேரம் மின்வெட்டு இருந்தது. அந்த மின்வெட்டும் விரைந்து சரிசெய்யப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்திருக்கிறார். நான் மார்ச் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கோவைத் தொகுதிக்கு தேர்தல் வேலையாக சென்றிருந்தேன்.
            அங்கு சுமார் நான்கு மணி நேரம் மின்வெட்டு இருந்தது. இந்த மின்வெட்டு சிறு, குறு தொழில்களைக் கூடுதலாக பாதிக்கிறது. கோவை மாநகரத்தில் மட்டுமல்ல, சென்னையைத் தவிர மாநிலம் முழுவதும் இதே நிலைமைதான். தற்போது மின்வெட்டால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பொருளாதாரச் சுழற்சியில் ஒரு கண்ணி அறுந்தாலும் ஒட்டுமொத்த வளையமும் கழன்றுவிடும். உற்பத்தி பாதிப்பால், தொழிலாளர்களுக்கு வேலையின்மை, அதனால் அவர்களின் குடும்பங்கள் துயரில் ஆழ்தல் என்கிற துயரச் சுழற்சி அல்லவா உருவாகி வருகிறது. இந்த அவலநிலை கண்டு கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்று எப்படி கூறுகிறார் தமிழக முதலமைச்சர்? திருப்பூர், இந்தியாவிற்கு அதிகமான அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஒன்றாகும். மின்வெட்டால் அங்கும் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
                இப்படி உற்பத்தி பாதிப்பதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகிறது. மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்று வருகிறது. மின்வெட்டு அவர்களையும் பாதிக்கிறது. பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம் என்று எப்படி கூறுகிறார் தமிழக முதலமைச்சர்? 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம்ஆண்டு வரையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்தவித மின்திட்டங்களும் நடைமுறைக்கு வரவில்லை. இந்தப் பத்தாண்டு காலத்தில் அஇஅதிமுகவும், திமுகவும் தலா ஐந்தாண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருந்தன. தற்போது மாறி, மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு இருவருமே தப்பித்துக் கொள்ளும் வழியைத் தேடுகிறார்கள்.
                    ஆனால்இல்லாத மின்சாரத்திற்கு மின்கட்டணத்தை ஏற்றுவதில் மட்டும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் இருந்தனர். தனது ஆட்சியின்போது ஆண்டுதோறும் மின்கட்டணத்தை திமுக உயர்த்தியது. 2009-10 ஆண்டில் 954 கோடி ரூபாய்க்கு மின்கட்டணம் உயர்ந்தது. மின்வெட்டு இல்லாத மாநிலமாக்குவோம் என்று ஆட்சிக்கு வந்த அஇஅதிமுக, 2011 ஆம் ஆண்டில் 42 சதவிகிதம் அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்தியது. மக்கள் கடும் துயரத்துக்குள்ளாகினர். மின்வாரியத்தின் வருமானம் 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. தனியார் நிறுவனங்களிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை 12 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி ஆட்சியாளர்கள் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்கள். மின்வாரியத்திற்கு நட்டம் என்றால், எந்தக் கல்லாவிற்கு பணம் செல்கிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
            2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்குக் கிடைத்த தோல்விக்கு மின்வெட்டு ஒரு முக்கியமான காரணமாகும். மின்மிகை மாநிலமாக மாற்றுவோம் என்று அஇஅதிமுக தலைமை வாக்குறுதி அளித்தது. தற்போது மக்களைப் பார்த்து கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர்.தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அஇஅதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த அவல நிலைக்குக் காரணம் என்பதோடு, மத்திய ஆட்சியாளர்களின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் மின்னுற்பத்தியைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்க தனியார் மின்னுற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்று அதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர். காங்கிரஸ், பாஜக, திமுக, அஇஅதிமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் கைகளைத் தூக்கி ஆதரவளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் மட்டுமே இதைக் கடுமையான எதிர்த்தன. தனியார்மயக் கொள்கை மக்களுக்குப் பலன் அளிக்கவில்லை. ஏற்கெனவே மின்னுற்பத்தி நடந்துவரும் மின்வாரிய மின்நிலையங்களின் ஆயுளும் முடிந்து கொண்டிருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு கூடுதலாக வாரி வழங்கத் தயாராக இருக்கும் அரசுகள் மின்வாரியத்திற்கு வழங்கினால், நட்டத்தில் ஓடுவதாக சொல்லப்படும் மின்வாரியம் அபாரமாக தனது பணியைச் செய்யத் துவங்கிவிடும். தனியார் நிறுவனங்களுக்கு அவசியமே இருக்காது.
                “உழுகிற நாளில் ஊருக்குப் போய்விட்டு, அறுக்கிற நாளில் அரிவாளோடு வந்து என்ன பயன்“ என்றொரு சொல்வடைதான் நினைவுக்கு வருகிறது. நீண்டகாலத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கையில் அதுபற்றித் திட்டமிடாமலேயே அஇஅதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இருந்துவிட்டு தற்போது அரசியல் லாவணி செய்வதில் கவனம் செலுத்துகின்றன. இந்த கடுமையான பாதிப்பு உருவாவதற்குக் காரணமான கொள்கைகளை நடைமுறைப்படுத்திய காங்கிரஸ் மற்றும் பாஜக, அதற்கு ஆதரவாக கை தூக்கிய மதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் மின்வெட்டிற்கான உண்மையான காரணத்தைச் சொல்லாமல் தட்டிக் கழிக்கின்றன.
              இந்த நாசகரக் கொள்கைகளைத்தான் பாஜகவும் பின்பற்றுகிறது. அதனுடன் அணி சேர்ந்துள்ள தேமுதிக தலைமை இதுபற்றி மூச்சுவிடுவதில்லை. வருகிற தேர்தலில் இந்த வெற்று லாவணிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரச்சனைகளைத் தீர்க்க மாற்றுக் கொள்கைகளோடு வரும் இடதுசாரிக்கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

ஊழலின் ஊற்றுக்கண் யார்...? - காங்கிரஸ் கட்சியா...பாஜக-வா...?


கட்டுரையாளர் : தோழர்.பிரகாஷ் காரத்             
                                 பொதுச்செயலாளர்,          
                                 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                                    

          மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் ‘தி இந்து‘ ஆங்கில நாளேட்டின் அனிதா ஜோசுவாவிற்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு அரசு அமைவதற்கான வாய்ப்புகள் குறித்தும், ஊழல் உள்பட இடதுசாரிகளால் எழுப்பப்பட்டு வரும் அதே பிரச்சனைகளை எழுப்பிடும் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகமான அரசியல் ஆதாயம் கிடைப்பதற்கான காரணங்கள் குறித்தும் பேசினார். 
அவரது பேட்டியிலிருந்து ....!

          உறுதியான தலைமைக்காக கூக்குரல் எழுந்து வருகிற நேரத்தில் மூன்றாவது மாற்றுக்கு - குறிப்பாக மூன்றாவது அணி ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து குழப்பம் நிலவி வருகிற போது - இடமிருக்கிறதா?

           (பாஜகவின் பிரதமர் வேட்பாளராகிய நரேந்திர) மோடியின் அரசியல் கோட்பாடுகளிலிருந்து முரண்படுபவர்கள் நாங்கள். வலுவான தலைவருக்கான குரல் என்பது கார்ப்பரேட் ஊடகத்தின் கூக்குரலும் கூட. இன்றைய நிலைமையில் தங்களுக்கான விஷயங்களை செய்து கொடுப்பதில் மோடி தாராளமாக இருப்பார் எனக் கருதுவதால் (பிரதம மந்திரி) மன்மோகன் சிங்கிடமிருந்து இவர்களது பார்வை மோடியின் பால் திரும்பியிருக்கிறது. அது மட்டுமின்றி, வலுவான சர்வாதிகார ஆட்சி என்பதனையே பெருவணிக நிறுவனங்களும், கார்ப்பரேட்டுகளும் விரும்புகின்றன. நிலையான ஆட்சி, சட்டம், ஒழுங்கு என்ற பெயரில் எல்லா அதிருப்திகளும் கைவிடப்படுகின்றன. இத்துடன் இந்துத்துவா கொள்கையும் இணைக்கப்படும்போது அது மிக அபாயகரமான கலவையாக ஆகிறது. எனவேதான், இதற்கு எதிரானதொரு நிலையை நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் கூடுதலான கூட்டாட்சி முறையை, மத்திய அரசிடம் குவிந்துள்ள அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். தனிநபரைப் பற்றி மறந்துவிடுங்கள், இத்தகையதொரு சர்வாதிகார ஆட்சி முறை மத்திய அரசின் கைகளில் குவிந்திடுவதனை நாங்கள் விரும்பவில்லை. பாஜகவால் எப்போதும் முன்வைக்கப்படுகின்ற, நிர்வாக அதிகாரம் அனைத்தையும் ஒரு நபருக்கு அளித்திடுகிற ஜனாதிபதி ஆட்சி முறையை நாங்கள் ஏற்கவில்லை. இந்தியா போன்றதொரு தேசத்தில், இத்தகைய ஆட்சி முறை மிக மோசமான விளைவுகளையும், பிரிவினைவாத தாக்கத்தையும் ஏற்படுத்தும். இந்தியா மிக அதிகமான வேறுபாடுகளை தன்னுள்ளடக்கியுள்ள, பூகோள ரீதியாக விரிந்து பரந்திருக்கிற நாடாகும். சர்வாதிகாரம் இங்கு செல்லாது.

          தற்போது நடந்த முடிந்துள்ளவற்றைப் பார்க்கும்போது, காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு அணியை உருவாக்கிட தேர்தல்களுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அவசரகதியிலானவை எனத் தோன்றுகிறதா?

               காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு எதிராக ஒன்றாக இணைந்திடுவதற்கான விழைவையும், தேர்தல்களுக்குப் பிறகு இத்தகைய மாற்றுக்கு ஒரு வடிவம் கொடுக்கப்படும் என்பதனையுமே பிப்ரவரி 25 அன்று நாங்கள் அறிவித்தோம்.

             ஆனால், அந்த அறிவிப்பின்போது உங்களுடன் இருந்தவர்களில் சிலர் இப்போது வெளியேறியிருப்பது என்பது ஒரு பின்னடைவுதானே?
              பின்னடைவுதானே? கூட்டு மேடையில் இருந்த கட்சிகள் தங்களுக்குள்ளே தேர்தல் கூட்டணியை ஏற்படுத்திக்கொள்ள முடியாது என்பதனை துவக்கத்திலேயே நாங்கள் அறிவோம். இந்த கட்சிகள் - பெரும்பாலும் மாநில கட்சிகள் - எல்லாம் தேர்தல்களிலே அவர்களது சொந்த பலத்தை அதிகரித்துக் கொள்ளவே செயல்படுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, அகில இந்திய அளவில் நாங்கள் ஒன்றிணைந்தது என்பது, இக்கட்சிகளிடையே ஏதாவது ஒரு வடிவத்தில் தேர்தல் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அவரவர் மாநிலத்தில் காங்கிரஸ் அல்லது பாஜகவிற்கு எதிராக களம் இறங்குவது என்பதில் அவர்கள் அனைவருக்கும் பங்கிருந்தது. அந்தஅடிப்படையில் தேர்தலுக்குப் பின் நாங்கள் இதனை ஒருமுகப்படுத்திடுவோம்.

            பிப்ரவரி 25 அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் பெரும்பாலானோர் இதனை “மூன்றாவது அணி” என்று அழைப்பதனை தவிர்த்தனரே, அப்படியானால் அது கைவிடப்பட்டுவிட்டதா?

            ஒரு திட்டத்தின் அடிப்படையில் உருவாகும் ஒரு பொதுவான மேடைதான் ஒரு அணி என்பதாகும். ஆனால் அப்படி எதுவும் இல்லாதபோது நாங்கள் ஏன் அவ்வாறு சொல்லிக் கொள்ள வேண்டும்? தேர்தலுக்கு பின்னர் ஒரு அணியாக அமைவதற்கு இது ஒரு வாய்ப்பு என்றே நாங்கள் கூறினோம். தேர்தலுக்குப் பின்னர் நாங்கள்ஒரு பொதுவான செயல்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து, அதன் பின்னர் ஓர் அணியை ஏற்படுத்திடலாம்.

                  இடதுசாரிகள் பல ஆண்டுகளாக கையிலெடுத்தபோதும் சிறிய விளைவுகளே ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் சிலவற்றையே இன்றைக்கு ஆம் ஆத்மி கட்சி கையிலெடுக்கிறது; ஆனாலும் அதன் எதிரொலி பெரிதாக இருப்பது ஏன்?

            கார்ப்பரேட் ஊடகங்கள் அவர்களை விளம்பரம் செய்கிறது. 2005ம் ஆண்டு, எரிவாயுவின் விலையை உயர்த்துவதற்காக என முதலமைச்சர்கள் குழு அமைக்கப்பட்ட போதே அப்பிரச்சனையை நாங்கள் கையிலெடுத்தோம். இப்பிரச்சனை ஆம் ஆத்மி கட்சி கையிலெடுத்தால் அதனால் பாதிப்பில்லை. இடதுசாரியினர் இதனை கையிலெடுக்கிறபோது, அவர்கள் இதனை விடுவதில்லை, தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். ஒரு சில தனிநபர்களை குறி வைப்பது என்பதல்ல இது. இது கொள்கைப்பூர்வமான பிரச்சனையாகும். இக்கொள்கைகள் திரும்பப் பெறப்படுவதற்கான முயற்சிகளையே நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். எங்களது கொள்கைப்பூர்வமான அடிப்படை நிலைபாட்டில் செல்வாக்கு மிகுந்த வட்டத்திற்கு ஏற்புடைமை இல்லை. எனவே, அதனை புறக்கணித்திட விரும்புகிறார்கள். எனவே, இத்தகைய கொள்கைகளை நாங்கள் விமர்சிப்பது என்பது, இக்கொள்கைகளின் ஆணிவேரை கேள்விக்குள்ளாக்குவது என்பதாகும். ஆம் ஆத்மி கட்சியோ, இந்த அடிப்படைக் கொள்கைகள் எதனையும் கேள்விக்கு உள்ளாக்காமல், வெறும் பிரச்சனைகளை மட்டுமே கையிலெடுக்கின்றனர்.மத்தியதர வர்க்கத்தினரில் ஒரு பகுதியினர் தனியார்மயக் கொள்கையினை ஏற்றுக் கொள்கின்றனர். எனவே,ஊழல் என்பதனை நன்னெறிசார்ந்த விஷயமாக மட்டும் பார்த்து கேள்விக்கு உள்ளாக்கிடுவது என்ற நிலைபாடு அவர்களுக்கு சௌகரியமாக உள்ளது. தனியார்மயக் கொள்கைகளே இத்தகைய ஊழல்களைஎல்லாம் உருவாக்குகின்றன என்று நாங்கள் சொல்கிறோம். மேலும், தற்போதைய நவீன-தாராளமய முதலாளித்துவ அமைப்புமுறையில் ஊழல் என்பது மூலதனத்தை குவிப்பதற்கான ஒரு கருவியே ஆகும்.
தமிழில்: எம். கிரிஜா 

சனி, 29 மார்ச், 2014

இடதுசாரிகளே நாட்டின் இன்றைய தேவை...!

          
       காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், கடந்த பத்தாண்டுகளில் தங்களின் சாதனைகளாக மக்கள் முன் வைத்திருப்பது உணவுக்கான உரிமை (Right to food), தகவலுக்கான உரிமை (Right to information) மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் (Land Acquisition Act) ஆகியவை தான். ஆனால் இவை மூன்றும் ஐ.மு.கூ-1 அரசின் முதல் நான்கு ஆணடுகளில் இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். 2004ம் ஆண்டில் ஐ.மு.கூ.-1 அரசிற்கு குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் தான் இடதுசாரிகள் ஆதரவு அளித்தனர். இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தால் தான் இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. இந்திய நாட்டில் வளங்களுக்கு எந்தவித குறைவுமில்லை. ஆனால் வளங்கள் அனைத்தும் பணக்காரர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களின் கஜானாவை நோக்கித் திருப்பப்படுகின்றன.
           கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரும்பணக்காரர்களுக்கும் அளிக்கப்பட்டு வரும் சலுகைகள், இடதுசாரிகள் முன்வைக்கும் ''மாற்றுப்பொருளாதாரக் கொள்கைகள்'' மூலம் நிறுத்தப்படும்; அவர்களிடம் சரியான முறையில் வரி வசூல் செய்யப்படும்; அதன் மூலம் கிடைக்கும் வருவாயை இந்தியத் திருநாட்டின் வளர்ச்சிக்கு திருப்பிவிட வேண்டும்.
            அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சியில் செய்யப்படும் முதலீடு அதிகரிக்க அதிகரிக்க நாட்டில் புதிது புதிதாக வேலைவாய்ப்புகள் பெருகும். அதன்மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இதற்கு மாறாக, காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொருளாதாரக் கொள்கைகளால், புதிது புதிதாக ஊழல்களும், முறைகேடுகளும் உருவாகிக்கொண்டிருப்பதை மக்கள் உணர வேண்டும்.
        வருகிற நாடாளுமன்றத் தேர்தல் இந்திய நாட்டின் ஏழை-எளிய நடுத்தர மக்களைப் பொறுத்தவரையில் மிக மிக முக்கியமான தேர்தல் ஆகும். இந்த தேர்தல் இந்திய நாடு வருங்காலத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பொருளாதாரக் கொள்கைகளை தீர்மானம் செய்யக்கூடிய தேர்தல் என்பதை மக்கள் உணரவேண்டும். இந்திய மக்கள் நான்கு சாலைகளின் சந்திப்பில் நின்று கொண்டு இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறார்கள். மாற்று பொருளாதாரக் கொள்கைகள் தான் சரியான பாதை, அதுவே மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என சரியான பாதையை இடதுசாரிக் கட்சிகள் கை காட்டிகளாக நின்று சொல்கின்றனர். அடுத்து அமையக்கூடிய நாடாளுமன்றத்தில் இத்தகைய மாற்று பொருளாதாரக் கொள்கைகளை கொண்டு செல்லவும், மக்கள் ஒற்றுமையை உறுதிப்படுத்தவும், இடதுசாரி எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது மிக மிக அவசியமானது. 
           நாட்டில் கொட்டிக்கிடக்கும் எண்ணற்ற வளங்களின் பயன்கள் அனைத்தும், கோடானுகோடி மக்களுக்கும் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் திருப்பிவிட வேண்டியது காலத்தின் காட்டாயம்!
           அசாம் மாநிலத்தில் பார்பேட்டா, தேஜ்பூர், சில்சார் ஆகிய 3 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். கவுகாத்தியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சீதாராம் யெச்சூரி ஆற்றிய உரையின் பகுதிகள் இவை. 
தொகுப்பு : வெ.ராகுல்ஜி

மோடியும் டாடாவும்...!

          
            வளர்ச்சிக்கு முன்மாதிரி குஜராத் என்று முதலாளிகளும், ஊடகங்களும் பெருமிதத்துடன் பேசியும் எழுதியும் வருகின்றன. ஆனால் குஜராத்தின் வளர்ச்சி யாரைச் சென்று அடைந்திருக்கிறது என்ற கேள்விக்கு இவர்கள் பதிலளிக்காமல் மௌனம் சாதிக்கின்றனர். அல்லது இடத்தைக் காலி செய்து விட்டு செல்கின்றனர். அவர்கள் போல் நாம் இருக்க முடியாது. வளர்ச்சியின் பங்குகள் வளர்ச்சிக்கு உழைத்த மக்களுக்கும், உழைப்பாளிகளுக்கும் சென்று அடையவேண்டும். ஆட்சிக்கட்டிலில் வெள்ளையன் அமர்ந்திருப்பதற்குப் பதிலாக ஒரு வேற்று நிறத்தவன் உட்காருவதல்ல சுதந்திரம். மாறாக சுதந்திரத்தின் பலன் அனைத்தும் மக்களைச் சென்று அடைய வேண்டும். அதுதான் சுதந்திரம் என்று இலக்கணம் வகுத்தான் மாவீரன் பகத்சிங். இந்தியாவில் இது நடக்கவில்லை என்பது உண்மை. அதே வேளையில் குஜராத் மட்டும் வளர்ச்சியில் பிரகாசிப்பதாக மோடியும்,பாஜகவும் பீற்றி வருகின்றனர்.
            மக்களைச் சென்றடையாத வளர்ச்சி என்ன வளர்ச்சி என்று பாமரன் கேட்கிறான். வளர்ச்சி மக்களைச் சென்று அடைய வேண்டும் என்று மோடி ஒரு போதும் கவலைப்பட்டதில்லை. அவர் கவலைப்படுவதெல்லாம், முதலாளிகள் வருத்தப்படாமல் லாபம் சம்பாதிக்க வேண்டுமே என்றுதான். அதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். இன்ஸ்டண்ட் காபி தான் துரித உணவுகளின் முன்னோடி இருந்தது. அதையடுத்து இப்போது பலவகை துரித உணவுப்பண்டங்கள் வந்துவிட்டன. ஆனால் மோடியின் ஆட்சியில் இன்ஸ்டண்ட் நிலம் கிடைக்கிறது. மோடி அரசு அளிக்கும் நிலம் யாருக்கு கிடைக்கிறது என்பதுதான் கேள்வி? அவர் உபரிநிலங்களை கையகப்படுத்தி ஏழை விவசாயிகளுக்கு அளிக்கவில்லை. மாறாக நல்ல விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து பறித்து முதலாளிகளுக்கு அடிமாட்டு விலையிலும் மலிவாகவும் வழங்கி வருகிறார். தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற  நிலங்களை ஏலத்தில் விற்பதற்குப் பதிலாக, ''துடிக்கும் குஜராத்'' எனும் பெயரில் நடந்த மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடும் முதலாளிகளுக்கு கிட்டத்தட்ட இனாமாக வழங்கி வருகிறார். டாடா நிறுவனத்துக்கு இந்த விஷயத்தில் லாட்டரி அடித்தது என்று கூறலாம்.
           மேற்கு வங்காளத்தின் சிங்கூர் கிராமத்தில் இருந்து மம்தா கட்சியினர் நடத்திய வன்முறையால் விரட்டப்பட்ட டாடா நிறுவனத்துக்கு சனந்த் கிராமத்தில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தார் மோடி.. டாடா நிறுவனம் சிங்கூரில் இருந்து குஜராத்தில் நிறுவப்படும் என்று டாடா அறிவித்த இரண்டு நாட்களில் நிலம் ஒதுக்கப்பட்டது. டாடாவுக்கு 1100 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. டாடாவுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் சந்தை விலை சதுர மீட்டருக்கு ரூ.10 ஆயிரமும் அதற்கு மேலும். ஆனால் மோடி அரசு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.900 பெற்றுக்கொண்டு 1100 ஏக்கர் நிலத்தை விற்றது. இந்த சலுகை போதாது என்று அதற்கு ரூ.33 ஆயிரம்கோடி மதிப்புள்ள சலுகைகளும் வழங்கியது. மேலும் டாடா நிறுவனம் நிலத்தின் விலையை ஆறுமாதங்களுக்கொரு முறை ரூ.50 கோடி வீதம் செலுத்தலாம் என்றும் கூறிவிட்டது. டாடாவுக்கு விற்கப்பட்ட நிலம் யாருடையது? இந்த நிலத்தை குஜராத் அரசு கால்நடை பல்கலைக்கழகத்துக்காக ஒதுக்கியிருந்தது. முதலில் இந்த ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்தது. உரிய நடவடிக்கைகள் பின்பற்றப்படாமல் இந்த நிலம் டாடாவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நில ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மையும் இல்லை. மேலும் டாடா நிறுவனம் நூற்றுக்கு பத்து பைசா வட்டியில் அரசிடம் இருந்து ரூ.9570 கோடி கடன் பெற்றுள்ளது.
இந்தக் கடனை இருபது வருடங்களுக்கு டாடா நிறுவனம் திரும்பச் செலுத்த வேண்டியதில்லை. இந்த நிலப்பரிமாற்றத்துக்கு மேலும் பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஸ்டாம்ப் டூட்டி கட்ட வேண்டியதில்லை. பதிவுக்கட்டணம் கிடையாது. சாலை மற்றும் ரயில் இணைப்புகள் உடனடியாக அரசால் வழங்கப்படும். உப தொழில்களுக்கு துரிதமாக நிலங்கள் ஒதுக்கப்படும். சலுகை விலையில் நீர் விற்கப்படும். டாடாவின் நானோ கார் நிறுவனத்துக்கு இவ்வகையில் அரசு வழங்கிய சலுகையின் மொத்த மதிப்பு ரூ.33 ஆயிரம் கோடியாகும். சனந்த் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள டாடா நானோ கார் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் ஒவ்வொரு காரிலும் அரசின் அல்லது வரி செலுத்தும் பொதுமக்களின் இழப்பு கிட்டத்தட்ட 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும். இந்த காரில் இருந்து கிடைக்கும் லாபம் எதுவும் அரசுக்கு அல்லது மக்களுக்கு கிடைக்காது. அது மொத்தமாக டாடாவின் வங்கிக்கணக்கில் டெபாசிட் ஆகும்.
              இந்த தொழில் முனைப்பைத்தான் மோடியின் கிரீடத்தில் மற்றுமொரு ரத்தினம் என்று பாஜகவும் பிக்கி, அசோசாம் போன்ற வர்த்தக முதலாளிகள் அமைப்புகளும் கூறி புளகாங்கிதம் அடைகின்றன. இது போன்ற சலுகைகளை ஏராளமான பெருநிறுவனங்களும் அடைந்து வருகின்றன. எல் அண்ட் டி, அதானிகள், அம்பானிகள், எஸ்ஸார்கள் போன்ற நிறுவனங்களுக்கு குஜராத் அரசு வழங்கிய சலுகைகள் ஏராளம். அவை குறித்த விவரங்கள் ஊடகங்களில் ஏராளமாகக் கிடைக்கின்றன. எனவேதான் நிறுவனங்களின் ஊடகங்கள் மோடி அலை வீசுவதாக சுனாமியை கிளப்பி வருகின்றன. சாதாரண மனிதனின் வயிற்றில் அடித்து விட்டு சலுகை சார் முதலாளிகள் அரசுப்பணத்தை கொள்ளையடித்துச் செல்கின்றனர். இது போன்ற சலுகைகளை மனிதகுல மேம்பாட்டுக்குரிய சேவைகளில் மோடி அரசு அளிக்கவில்லை. மாறாக மனிதர்களின் மலத்தை மனிதர்கள் அள்ளுவது ஒரு தெய்வீக அனுபவம் என்று மோடி வர்ணிக்கிறார். கல்வி, பொது சுகாதாரம், ஆரோக்கியம், பொது விநியோகம், வேலை உற்பத்தி போன்றவற்றுக்கு அரசு நிதி வழங்குவதில் ஆயிரத்தெட்டு நடைமுறைகள் தடையாக உள்ளன.
            செல்வந்த முதலாளிகளுக்கு அனைத்தும் தடையின்றி கிடைக்கும் என்பதுடன் இருக்கும் கட்டுப்பாடுகளும் கருணையுடன் அகற்றப்படும். ஆனால் அதுவே சாதாரண மனிதர்களுக்கென்றால் அவையனைத்தும் தடுக்கப்படும், நிறுத்தப்படும், மறுக்கப்படும். இந்த வகையில் ஐமு கூட்டணிக்கும் மோடிக்கும் வேறுபாடு கிடையாது. ஐமு கூட்டணிக்கு எதிராக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றுக் கொள்கை கொண்ட அரசை மோடியால் தரமுடியாது.

(நிலோத்பல் பாசுவின் கட்டுரையைத் தழுவி எழுதியவர் தாஸ்)

வாரணாசியில் மோடி - பின்னணி என்ன...?


  கட்டுரையாளர் :  பிரகாஷ் காரத்                    
                                பொதுச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                                   
       மக்களவைத்தேர்தலில் நரேந்திர மோடி வாரணாசியிலிருந்து போட்டியிடுகிறார். அச்சுறுத்தலுடன் கூடிய அரசியல் செய்தியை தருவதாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. தீவிரமான இந்துத்துவா கொள்கையே தேர்தல் பிரச்சாரத்தின் உள்ளடக்கமாக இருக்கும் என்ற சமிக்ஞையை பாஜக-வும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தருகின்றன. வாரணாசியிலிருந்து மோடி போட்டியிடுவதன் நோக்கம் பற்றி அதிகாரப்பூர்வமாக பாஜக எதுவும் கூறாத போதும், வாரணாசியிலிருந்து மோடி போட்டியிடுவதால் மக்களவைத்தேர்தல்களில் உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதியிலும், அதனை ஒட்டியுள்ள பீகார் மாநிலத்தின் பகுதிகளிலும் அக்கட்சிக்கு பலன் கிடைத்திடும் என ஊடகத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான காரணம் மூடி மறைக்கப்படுகிறது.
                20 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி மதவாத இந்துத்துவாவின் அதிர்ஷ்ட நாயகனாக எல்.கே.அத்வானி முன்னிறுத்தப்பட்டாரோ, அதுபோல தற்போது அதனுடைய புதிய அதிர்ஷ்ட நாயகனாக மோடி முன்னிறுத்தப்படுகிறார். வாரணாசியிலிருந்து மோடி போட்டியிடுவது என்பது, அந்த புனிதமான நகரத்தின் ஆன்மீகத் தன்மை குறித்தும், அங்கு எவ்வாறு இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் பொருளாதாரம் பின்னிப் பிணைந்திருக்கிறது - இஸ்லாமிய நெசவாளர்களால் தயாரிக்கப்பட்ட பனாரஸ் பட்டுப் புடவைகள் இந்து வர்த்தகர்களால் வியாபாரம் செய்யப்படுகிறது, பிரபல ஷெனாய் கலைஞரான பிஸ்மில்லாகான் மதநல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்தார் -என்றெல்லாம் கார்ப்பரேட் ஊடகத்தை தேனொழுகப் பேச வைத்துள்ளது. இத்தகையதொரு சூழலை முன்னெடுத்துச் சொல்கிற வாரிசுதாரராக பரம்பரை சொத்தை அடைபவராக மோடியை முன்னிறுத்தும் முயற்சியே இது ஆகும்.

மோடி - இந்துத்துவாவின் அதிர்ஷ்ட நாயகன்              

              உண்மையில் சொல்லப்போனால், நிச்சயமாக அப்படி எதுவுமில்லை. இரண்டாவதாக குஜராத்தின் மற்றொரு இடத்திலிருந்து போட்டியிடுவதுடன், வாரணாசியிலிருந்தும் மோடி தேர்தலில் போட்டியிடுவது என்பதில் மிகவும் அச்சுறுத்தக்கூடிய மற்றும் கூடுதல் அபாயகரமான சங்கேத குறியீடும் அடங்கியுள்ளது. மதவாதத்தின் வரலாறும், வன்முறையை தூண்டுவதற்கான அதன் அடாவடியான முயற்சிகளும், உத்தரப்பிரதேசம் மதரீதியாகப் பிளவுபட்டபோது அதில் முக்கிய இலக்காக வாரணாசி இருந்தது என்பதெல்லாம் வேண்டுமென்றே மேலோட்டமாகப் பார்க்கப்படுகிறது அல்லது பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. 23 ஆண்டுகளுக்கு முன்பு, 10-ஆவது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றபொழுது, 1991ம் ஆண்டில் என்ன நடந்தது என்பதனை திரும்பிப் பார்த்திட வேண்டும்.
                1990ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆர்எஸ்எஸ்-சும் பாஜக-வும் சேர்ந்து அத்வானியின் ரதயாத்திரையை துவக்கின. அக்டோபர் மாதத்தில் அத்வானியின் ரதயாத்திரை நிறுத்தப்பட்டு, அவர் பீகாரில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நாட்டின் பல பகுதிகளில் வெடித்த மத மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆர்எஸ்எஸ்-விஎச்பி தலைமையில் நடத்தப்பட்ட ராமர் கோவில் இயக்கத்தின் இலக்காக இருந்த பாபர் மசூதி அமைந்துள்ள அயோத்தி, உத்தரப்பிரதேசத்தில் கலவரத்தின் மையப்புள்ளியாக இருந்தது. அயோத்தியில் பாபர் மசூதி, வாரணாசியில் க்யான்வாபி மசூதி மற்றும் மதுராவில் ஈத்கா ஆகிய மூன்று இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள இடங்கள் இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென விஷ்வ இந்து பரிஷத் கூக்குரல் எழுப்பியது. அயோத்தியில் ராமர் கோவில், காசியில் சிவன் கோவில் மற்றும் மதுராவில் கிருஷ்ணர் கோவில் ஆகியன கட்டப்பட்டுள்ளன. 

வாரணாசி - வகுப்புவாத வன்முறைக்கான இலக்கு                   

                இவ்வாறாக, வாரணாசி நகரம் இந்துத்துவா வகுப்புவாத சக்திகளின் முக்கிய இலக்கானது. அதுவரை வாரணாசி நகரமானது வகுப்புவாத சக்திகளின் செல்வாக்கிற்கு அப்பாற்பட்டதாக இருந்தது. வாரணாசி நகரத்திலும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளிலும் மதச்சார்பற்ற அரசியல் சக்திகளே செல்வாக்கினைப் பெற்றிருந்தன. எனினும், ராமஜென்மபூமி இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது ஷிலபூஜன் யாத்திரையை துவங்கிய பின்பு இந்நிலைமை மாறிப் போனது. 1989ல் இந்நகரத்தில் முதன்முறையாக மதமோதல் ஏற்பட்டது. நவம்பர் 1991ல் அடுத்த கட்ட மதக்கல வரம் நடைபெற்றது. நவம்பர் 8ம் தேதி நடை பெற்ற சம்பவத்தில் ஒரு மதத்தினைச் சார்ந்தமக்கள் கொல்லப்பட்டனர், இதற்கு பழி வாங்கும் விதமாக நவம்பர் 13 அன்று மீண்டும் படுகொலைகள் நிகழ்ந்தன.
              இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியான மதன்புராவில் காவல் துறை நுழைந்து, அங்கு வசித்து வந்த பிரபல மருத்துவரான டாக்டர் அனீஸ் என்பவரை வெளியே இழுத்து வந்து அவரை அடித்துநொறுக்கியது. பின்னர் காவல் துறையின் பாதுகாப்பில் இருந்தபோது அவர் உயிரிழந்தார். இந்தவன்முறை சம்பவத்தின்போது கிட்டத்தட்ட 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதியன்று பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடைபெற்றதற்கு பிறகு வந்த ஆண்டில் இந்நகரத்தில் மக்கள் மதரீதியாக பிளவுபடுவது உச்சகட்டத்தினை எட்டியது. விஎச்பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பாபர்மசூதி இடிப்பு சம்பவம் நடைபெற்றதனையடுத்து தொடர்ச்சியாக வன்முறையில் ஈடுபட்டனர். “ஹர ஹர மகாதேவ”, “அல்லாஹு அக்பர்” ஆகிய முழக் கங்களின் பின் இரு மதத்தை சார்ந்தவர்களும் அணிதிரள்வது அதிகரித்தது. வாரணாசி நகரமானது இந்துத்துவா சக்திகளின் கொத்தளமாக மாறிப்போனது.

களத்தில் சிபிஎம்            

                 அடுத்து வந்த அனைத்து மக்களவைத் தேர்தல்களிலும், வாரணாசி தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. 2004ம் ஆண்டு மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதரீதியான பிளவு மக்கள் மத்தியிலே அதி கரித்து வந்த பின்னணியில் 1991, 1996 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் பாஜகவிற்கு எதிராக போட்டியிட்டது. 1991ல் ஜனதா தள கட்சியின் ஆதரவுடனும், பின்னர் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடனும் தேர்தலில் போட்டியிட்டு, நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் இரண்டாவது இடத்தைப் பெற்றது. அனைத்து சந்தர்ப்பங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது வாரணாசி தொகுதியின் கிராமப்புற பகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றது. அதே நேரத்தில் நகர்ப்புற பகுதிகளில் பாஜக பெரும்பாலான வாக்கு களைப் பெற்றது.
                    1996 மற்றும் 1998-99 ஆகிய கால கட்டத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகபெற்ற செல்வாக்கினை அதனால் தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை. 2004 மற்றும் 2009 மக்களவைத் தேர்தல்களில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 80 தொகுதிகளில் வெறும்10ல் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடிந் தது. இழந்த செல்வாக்கினை மீண்டும் பெறு வது என்பது பாஜகவிற்கும், அதன் பிரதம மந்திரி வேட்பாளாரான நரேந்திர மோடிக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். 16வது மக்களவைக்கான தேர்தல்களை மனதில் கொண்டு, ஆர்எஸ்எஸ்-பாஜகஆகியன உத்தரப்பிரதேசத்தில் மதரீதியான பிளவை உண்டாக்குகிற சூழலை ஏற்படுத் திடுவதுடன், திட்டமிட்டு மதரீதியிலான பதற்றத்தை உருவாக்கிடவும் நீண்ட காலதிட்டத்தை செயல்படுத்தின. மோடியின் முக் கிய தளபதியான அமித் ஷா உத்தரப்பிரதேச மாநில பாஜகவின் பொறுப்பாளராக ஆக்கப்பட்டார். 

உத்தரப்பிரதேசத்தில் மதமோதலுக்கான வரைபடம்                

                    2012 பிப்ரவரியில் நடைபெற்ற தேர்தல்களில் சமாஜ்வாதி கட்சி அபார வெற்றி பெற்று அரசினை அமைத்த பிறகு இந்த வரைபடம் செயல்படுத்தப்பட துவங்கப்பட்டது. சமாஜ்வாதி கட்சி இஸ்லாமியர்களுக்கு ஆதரவான கட்சி என்கிற மிக மோசமான மதரீதியிலான பொய்ப்பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ்சும் அதன் பரிவாரங்களும் முழுமூச்சாக கட்டவிழ்த்து விட்டன. பசுக்கள் இஸ்லாமியர்களால் உணவுக்காக கொல்லப்படுவதாகவும், இஸ்லாமிய இளைஞர்கள் இந்துப் பெண்களை ஆசை காட்டி ஏமாற்றுவதாகவும் மற்றும் இதர மதஉணர்வை தூண்டக் கூடிய பிரச்சனைகள் திட்டமிட்டு எழுப்பப்பட்டன.
                  கோசிகலன்பகுதியில் முதல் முறையாக மதமோதல் நடைபெற்றபோது, சிறுபான்மை இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலில் கிராமப்புற பகுதிகளைச் சார்ந்த மக்கள் ஈடுபடுத்தப்பட்டது கவலையளிப்பதாக இருந்தது. அடுத்து வந்த இரண்டாண்டு காலத்தில், பிரதாப்கர், பரேய்லி, சஹரன்பூர், பைசாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநிலம் முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலான மதமோதல் நிகழ்வுகள் அரங்கேறின. பைசாபாத்தின் நகர்ப்புற பகுதியில் மோதல் நிகழ்வுகள் நடைபெற்ற பிறகு, அம்மாவட்டத்தின் இதர கிராமப்புற பகுதிகளிலும் மோதல்களை தூண்டிவிடுவதற்கான முயற்சிகளும் அதே சமயத்தில் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக செப்டம்பர் 2013ல் முசாபர்நகர் மதக்கலவரம் நடைபெற்றது.
                பல நூறாண்டுகளாக ஜாட் பிரிவு மக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாக வசித்து வந்த கிராமங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், கிராமப்புற மக்களை மதரீதியாக அணிதிரட்டுவதில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வெற்றி பெற்றுள்ளதையே வெளிப்படுத்தின. அதுவரை உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற மதமோதல் நிகழ்வுகள் எல்லாம் நகர்ப்புற பகுதிகளையே மையமாகக் கொண்டு நடைபெற்று வந்தன. 2011 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற மதரீதியிலான வன்முறைகள் என்பன, 1990 களின் துவக்க ஆண்டுகளில் நடைபெற்ற அதிர்ச்சியில் உறையச் செய்த மதமோதல் நிகழ்வுகளுக்குப் பிறகு மாநிலம் முழுவதிலுமாக முதன்முறையாக நடைபெற்ற மோதல் நிகழ்வாகும். இப்படித்தான் மோடியின் நுழைவிற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டது. 2013ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதியன்று மோடிவாரணாசியில் பேரணி ஒன்றை நடத்தினார். கூட்டமேடையின் பின்னணியில் சிவபெருமானின் மிகப்பெரிய உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.
          சோமநாதரின் மண்ணிலிருந்து பாபா விஷ்வநாத்தின் பூமிக்கு வந்திருப்பதாக அக்கூட்டத்தில் மோடி பேசினார். சோமநாத்திலிருந்துதான் மோடி தனது ரதயாத்திரையைத் துவக்கினார். “ஹர ஹர மகாதேவ்” என்கிற மதரீதியான மந்திரத்தைப் போல் “ஹர ஹர மோடி” என்ற மந்திரத்தை பாஜக தொண்டர்கள் உச்சாடனம் செய்தனர். இவர்களது இந்த நடவடிக்கையானது, அந்நகரத்தில் வசித்துவரும் இஸ்லாமியர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு 1992ல் இந்துத்துவா வெறியர்கள் உச்சாடனம் செய்த முழக்கங்களை நினைவுபடுத்துவதாக இருந்தது. 

மிகப்பெரிய யுத்தம்                   

                    வாரணாசியில் இருந்து பாஜகவின் வேட்பாளரான மோடி தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது, உத்தரப்பிரதேசத்தில் அரங்கேற்றிட வேண்டிய நாடகத்திற்கு சங்பரிவார் எழுதிய கதை வசனத்தின் ஒரு பகுதியே ஆகும். இது பீகாருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவர்களது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலானது உத்தரப்பிரதேச மாநில மக்களை கடந்த 15 ஆண்டுகளாக உற்சாகப்படுத்திடவில்லை என்பது உண்மை யாகும். இந்த உண்மையின் பின்னணியில், இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் குறித்து வெளிப்படையான பிரச்சாரம் எதுவும் இருக்காது என்றபோதும், அதே அரசியல் ரீதியிலான செய்தி ஒளிவுமறைவாகவும், இரகசியமாகவும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. ராமர் கோவிலுக்கான தீவிரமான இந்துத்துவா பிரச்சாரம் முன்னெடுத்துச் செல்லப்பட்டபோது பார்க்கப்பட்ட பழைய முகங்கள் எல்லாம் இன்று இவர்களுக்கிடையேயான சண்டை சச்சரவுகளில் பின்னுக்குப் போயுள்ளனர். மீண்டும் பாஜகவில் இணைந்துள்ள கல்யாண் சிங் தனது மகனை வேட் பாளராக நிறுத்தியுள்ளார்.
              உமா பாரதியும், சாக்ஷி மஹராஜூம் கூட இம்மாநிலத்திலிருந்து தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். “இந்து தேசியவாதி” என தன்னைத் தானே பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் மோடிதான் இந்த யுத்தத்தினை நடத்திட இவர்களால் தேர்வு செய்யப்பட்ட நபர் ஆவார். எனவே, இது ஏதோ வாரணாசியில் மோடிக்கு எதிராக நடைபெறும் போராட்டம் மட்டுமல்ல. இந்திய நாட்டின் மிகப்பெரிய மாநிலத்திலும், நாடு முழுவதிலும் மீண்டும் தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்திட முயலும் ஒட்டுமொத்த இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டமாகும். வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடிக்கு எதிராக பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்கிடும். இதில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் மற்றும் முக்தர் அன்சாரியின் குவாமி ஏக்தா தள் ஆகிய கட்சிகளும் அடங்கும். 2009ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளாராகப் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்த அன்சாரி, மாபியா கும்பலை நடத்தி வருபவர். தற்போது இவர் சிறையில் இருக்கிறார். இத்தகையதொரு சூழலில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.
             இந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்பாளரின் பெயரை ஒரு மாதத்திற்கு முன்பே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. ஒரு வலுவான பொதுவான காங்கிரசல்லாத மதச்சார்பற்ற வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்திடுவதற்கான இசைவு ஏற்பட்டிருக்குமேயானால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது தேர்தல் களத்திலிருந்து தனது வேட்பாளரை திரும்பப் பெற்றிருக்கும். அத்தகையதொரு கூட்டு மேடை என்பது இல்லாத சூழலில், வாரணாசி தொகுதியில் இடதுசாரிக்கட்சியின் போட்டியிடுவதும், ஆர்எஸ்எஸ்-பாஜகவின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்திடு வதற்கான அரசியல் பிரச்சாரத்தை வலுவான முறையில் நடத்திடுவதும் அவசியமாகும்.
தமிழில் : எம்.கிரிஜா               

வெள்ளி, 28 மார்ச், 2014

குஜராத் - குல்பர்க் குடியிருப்பில் 68 பேர் படுகொலை - மோடி குற்றவாளியே!

 
 

  நீதியை காலம் தாழ்த்த திட்டமிட்ட சதி...!           
  - அறிஞர்கள் கடும் கண்டனம்...!         

           குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு முஸ்லிம் மக்களுக்கு எதிராக மோடி அரசின் ஆதரவோடு பாஜக - ஆர்எஸ்எஸ் மதவெறிக்கூட்டம் பயங்கர வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட போது அகமதாபாத் நகரிலுள்ள குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு வளாகத்தில் 68 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.
              இந்த வழக்கில் ''மோடியும் ஒரு குற்றவாளியே'' என இந்தியாவின் பல்வேறு துறை அறிஞர்கள் மீண்டும் ஒருமுறை குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் உண்மையை நிலைநாட்டியுள்ள சமூகஆர்வலர்களை குறிவைத்து மோடி அரசு அராஜக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதையும் இந்த அறிஞர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
                 இதுதொடர்பாக தில்லியில் பிரபல வரலாற்று அறிஞர்கள் டாக்டர் ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப், மூத்த பத்திரிகையாளர் சசிக்குமார், பொருளாதார அறிஞர்கள் பேராசிரியர் பிரபாத் பட்நாயக், பேராசிரியர் சி.பி.சந்திரசேகர், பேராசிரியர் ஜெயதிகோஷ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பல துறைநிபுணர்களும் சமூக ஆர்வலர்களும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-         

                2002ம் ஆண்டில் குஜராத் மாநில அரசின் ஆதரவுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட மதவெறி வன்முறைத் தாண்டவத்தில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பிப் பிழைத்துள்ளோருக்கு நீதி கிடைத்திட போராடி வரும் சமூக ஆர்வலர்கள் டீஸ்டா செதல்வாத், ஜாவேத் ஆனந்த் மற்றும் இம்மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மூவரின் மீதும் எப்படியேனும் பொய்யாகக் குற்றம் சாட்டி சிக்கவைத்திட மோடி அரசும், குஜராத் காவல்துறையும் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
                நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் என்ற அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்களாக இருப்பதுடன், குஜராத் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான போராட்டத்தில் முன்னிற்பவர்களாகவும் இருப்பதால் டீஸ்டா செதல்வாத் மற்றும் ஜாவேத் ஆனந்த் ஆகியோர் மோடி அரசால் குறி வைக்கப்படுகின்றனர்.
              இந்த அமைப்பினைச் சார்ந்த வழக்கறிஞர்களின் இடையறாத முயற்சிகள் காரணமாகவே, குஜராத் வன்முறையின்போது பெருங்குற்றம் புரிந்த 117 குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்களால் ஆயுள் தண்டனைகள் அளிக்கப்பட்டுள்ளன. நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் தொடர்பு கொண்டிருந்த பாஜகவின் சட்டமன்ற உறுப்பினரும், மோடி அரசின் அமைச்சர்களில் ஒருவருமான மாயா கோட்னானி மற்றும் குஜராத் மாநில பஜ்ரங்தள் அமைப்பின் தலைவர் பாபு பஜ்ரங்கி ஆகியோரும் இந்த குற்றறவாளிகள் பட்டியலில் அடங்குவர்.
                 இந்நிலையில்தான், மேற்கண்ட சமூக ஆர்வலர்களைப் பழிவாங்கிடும் உள்நோக்கத்துடன் மோடி அரசு பல்வேறு இழிநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, குஜராத் உயர்நீதிமன்றத்தின் முன் ஜாகியா ஜாப்ரியின் மேல்முறையீட்டு மனுவிசாரணைக்கு வந்துள்ளநேரத்தில், பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி கிடைப்பதை காலம் தாழ்த்திடவும், நீதிமன்ற நடைமுறையை தடம் புரளச் செய்திடவும் திட்டமிட்டே மோடி அரசு செயல்படுகிறது.
                 குஜராத் மாநிலத்தின் முதல்வரும், உள்துறை அமைச்சருமான நரேந்திர மோடி மற்றும் 59 பிரபல அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிவில் பணியாளர்கள் மீது படுகொலை உள்ளிட்ட இதர கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுக்களை ஜாப்ரி சுமத்தியுள்ளார். மோடிக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கான எல்லா முகாந்திரமும் இருப்பதாக இந்த வழக்கில் உச்சநீதி மன்றத்தால் நீதிமன்ற முகவராக நியமிக்கப்பட்ட ராஜூ ராமச்சந்திரனும் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
            2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதியன்று அகமதாபாத் நகரின் குல்பர்க் குடியிருப்பு வளாகத்தினுள் கட்டுக்கடங்கா வெறியுடன் நுழைந்த கும்பல், காவல் துறையினர் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, தங்களது வெறியாட்டத்தை அரங்கேற்றினர். இதில் குல்பர்க் குடியிருப்போர் சங்கத்தின் நிர்வாகிகள் மூவரது உறவினர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், தற்போது மேற்கண்ட சங்க நிர்வாகிகள் மூவரின் மீதும்கூட “ஏமாற்று வழக்கு”பொய்யாகப் புனையப்பட்டுள்ளது. இந்த மூவரில் ஒருவரான தன்வீர் ஜாப்ரியின் தந்தையும், முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான ஈஷான் ஜாப்ரியும், வேறு 68 நபர்களும் இந்த வெறியாட்டத்தின் போது ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர்.
           மேற்கண்ட ஈஷான் ஜாப்ரியின் மனைவிதான் தற்போது மோடியைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியுள்ள ஜாகியா ஜாப்ரி.மோடி மீதான இந்த வழக்குகளில் உண்மையை நிலைநாட்ட உறுதியுடன் செயல்பட்டு வரும் டீஸ்டா செதல்வாடும், ஜாவேத் ஆனந்தும், தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பாகவும் ஏற்கனவே நீதிமன்றங்களில் விரிவான வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். குஜராத் மாநில காவல் துறையானது வதந்திகளை பரப்பியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
                   எனவே அவர்கள் மீதான சட்டவிரோத நடவடிக்கைகளையும் பொய் வழக்குகளையும் உடனடியாக குஜராத் காவல்துறையும் மோடி அரசும் கைவிட வேண்டும்; குஜராத்தில் இப்போதேனும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

திங்கள், 24 மார்ச், 2014

அத்வானி - ஜஸ்வந்த்சிங் -ஹரேன் பாண்டியா - சற்றுப் பின்னோக்கி பாருங்கள்...!


   கட்டுரையாளர் : தோழர். அன்வர் உசேன்         
        
          பாரதீய ஜனதாக் கட்சியினுள் கடும் உள்குத்து நடந்துகொண்டிருக்கிறது. பா.ஜ.க. உருவாக பாடுபட்ட பல மூத்த தலைவர்கள் மோடியால் ஓரம் கட்டப்படுகின்றனர் எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
              அத்வானி மோடியின் கட்டுப்பாடிற்குள் இருக்க விரும்பவில்லை. எனவே குஜராத்திற்கு பதிலாக அவரை ஆதரிக்கும் சவுகான் முதல்வராக உள்ள போபாலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அது அத்வானிக்கு மறுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். மூலமாக மோடி மீண்டும் ஒரு முறை அத்வானியை மண்டியிட வைத்தார்.
             ஜஸ்வந்த்சிங்கின் சொந்த ஊர் இராஜஸ்தானில் பார்மர் தொகுதி. அங்கு அவர் போட்டியிட விரும்பினார்.ஆனால் அவருக்கு அந்த தொகுதி ஒதுக்கப்படவில்லை. எனவே அவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
            மோடிக்காக தனது வாரணாசி தொகுதியை முரளி மனோகர் ஜோஷி தாரைவார்க்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டார்.
                யஷ்வந்த்சின்கா, லால்ஜிடாண்டன், கைலாஷ் மிஸ்ரா, உமாபாரதி, சூர்யபிரதாப் சாஹி ஆகியோர் தொகுதி மறுக்கப்பட்டுள்ளனர்.
             தனது கருத்தை தலைமை புறக்கணிக்கிறது என பகிரங்கமாக சுஷ்மா சுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
                 மோடியின் இந்த செயல்பாடுகள் சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் மோடியின் குணத்தை புரிந்தவர்கள் இத்தகைய நிகழ்வுகளினால் அதிர்ச்சி அடையமாட்டார்கள்.

ஹரேன் பாண்டியாவின் படுகொலை - சற்றுப் பின்னோக்கி பாருங்கள் :

              2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பா.ஜ.க.வால் நியமிக்கப்பட்டார். இந்திய அரசியல் சட்டப்படி ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். குஜராத்திலேயே எல்லீஸ்பிரிட்ஜ் தொகுதிதான் பாஜகவுக்கு சாதகமான தொகுதி என மோடி மதிப்பிட்டார். எனவே அந்த தொகுதியின் உறுப்பினர் ஹரேன் பாண்டியாவை அழைத்து தான் போட்டியிட வசதியாக ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தினார். ஹரேன் பாண்டியா கேசுபாய் பட்டேல் மந்திரிசபையில் உள்துறை மற்றும் தகவல் துறை அமைச்சராகவும் இருந்தவர். மோடியின் சமகாலத்து சங் பரிவாரத் தலைவர்.
             அவர் தனது தொகுதியை மோடிக்கு விட்டுத்தர மறுத்துவிட்டார். மோடி கடுமையாக மிரட்டியும் ஹரேன் பாண்டியா அசரவில்லை. எனவே மோடி ராஜ்கோட் தொகுதியில் 24.02.2012 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு 14000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆனால் பொதுத்தேர்தலில் இத்தொகுதியில் பா.ஜ.க. 28000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.ஹரேன் பாண்டியா தன்னை அவமானப்படுத்திவிட்டதாக மோடி கருதினார். அவரை பழிவாங்கிட காத்திருந்தார். இடைத்தேர்தலில் வென்றதும் ஹரேன் பாண்டியாவை அமைச்சரவையிலிருந்து விலக்கினார். பின்னர் 2002 தேர்தலில் அவருக்கு போட்டியிட அனுமதியை மோடி வழங்கவில்லை.
                    எனவே அத்வானி, அருண் ஜெட்லி, வாஜ்பாய் ஆகியோரிடம் ஹரேன் பாண்டியா புகார் செய்தார். அவர்கள் ஹரேன் பாண்டியாவுக்கு போட்டியிட அனுமதிக்குமாறு மோடியை வற்புறுத்தினார்கள். இதனைத் தவிர்க்க மோடி மருத்துவமனை ஒன்றில் சேர்ந்து எவரிடமும் பேசுவதை தவிர்த்தார். எனினும் ஹரேன் பாண்டியா முக்கியமான தலைவர் என்பதால் அவர் போட்டியிட வேண்டும் என மேலிடம் வற்புறுத்தியது. ஹரேன் பாண்டியா போட்டியிட்டால் தான் போட்டியிலிருந்து விலகிவிடுவதாக மோடி கூறினார். வேறு வழியின்றி மேலிடம் ஹரேன் பாண்டியாவை கைகழுவி விட்டது.தேர்தலுக்கு சில மாதங்களுக்கு பிறகு ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இதுவரை கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் ஹரேன் பாண்டியாவின் மனைவியும் அவரது தந்தையும் இந்த படுகொலை ஒரு அரசியல் படுகொலை எனவும் அதனை செய்தது யார் என்பது அனைவரும் அறிந்த ரகசியம் எனவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். என்கவுண்டர்களில் சிக்கி சிறையில் உள்ள மோடிக்கு வலது கரம் போன்று செயல்பட்ட வன்ஜாரா போன்ற அதிகாரிகளிடம் தனது கணவரின் கொலை குறித்தும் விசாரிக்க வேண்டும் என ஹரேன் பாண்டியாவின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
                தன்னை எதிர்க்கும் சங்பரிவாரத்தின் ஊழியர்களையே தன் பாதையிலிருந்து ‘அகற்றுவது’ எப்படி என்பதை கை வந்த கலையாக கொண்டவர் மோடி. அன்று குஜராத்தில் செய்ததை இன்று அகில இந்திய அளவில் செய்கிறார்.இத்தகைய நபர் பிரதமர் ஆனால் ஜனநாயகம் என்ன பாடுபடும் என்பதை வைகோக்களும் விஜய்காந்த்களும் இன்னும் தேர்தலுக்கு பிறகு அவருக்கு ஆதரவு தர காத்திருப்போரும் உணர்ந்து கொள்வது நல்லது.
நன்றி : 
 

வெள்ளி, 21 மார்ச், 2014

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்போம்...!                   16வது மக்களவைத் தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை வியாழனன்று தில்லியில் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.ஜி. பவனில் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, சீத்தாராம் யெச்சூரி எம்.பி., பிருந்தா காரத், ஏ.கே.பத்மநாபன் ஆகியோர் வெளியிட்டனர்.                                

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:

            மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் குறித்து கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு :

           ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிக முக்கியமான படுதோல்வி என்பது, உணவுப்பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணைத்தாண்டி உயரப்பறந்த கொடுமையை தடுத்து நிறுத்துவதற்கு வழி யில்லாமல் முற்றிலும் தோல்வியடைந்தது என்பதுதான் 2007ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஏழு ஆண்டு காலம் ஒட்டுமொத்த இந்திய மக்களும் இரட்டை இலக்க உணவுப் பணவீக்கத்தின் பிடியிலேயே சிக்கியிருந்தனர் என்பதே உண்மை.

வேலையின்மை :

          ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது மிகப்பெரிய தோல்வி, வேலைவாய்ப்பை எந்தவிதத்திலும் உரு வாக்கவில்லை என்பதே. 2005-2010ம் ஆண்டு களுக்கு இடையில் ஐந்தாண்டு காலம், வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதிம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்துள்ளது. 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் ஒவ்வொரு மூன்று பட்டதாரிகளில் ஒருவர் இதுவரையிலும் வேலையில்லாதவராகவே இருந்து வருகிறார்.

ஐ.மு.கூ அரசின் பொருளாதாரக் கொள்கைகள் :

                தனது ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு நாட்டின் ஒட்டுமொத்த ஏழை-எளிய மக்களிடமிருந்து அனைத்து வளங்களையும் பணக்காரர்களுக்கு கைமாறச் செய்தது. ரூ.5ஆயிரம் கோடியும் அதற்கு மேலும் சொத்துக்கள் கொண்ட பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2003ம் ஆண்டில் 13 என்று இருந்தது; இது தற்போது 56 என அதிகரித்துள்ளது.
            அதாவது, பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.இந்த அரசு, நிலங்களாக இருந்தாலும் சரி, தாது வளங்கள், இயற்கை எரிவாயு வளம் அல்லது தொலைபேசி அலைக்கற்றை உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் அனைத்து இயற்கை வளங்களையும் பெரும் வர்த்தகக் கம்பெனிகள் கொள்ளையடிப்பதற்கு அனுமதித்துள்ளது.2009க்கும் 2013க்கும் இடையிலான காலத்தில் மட்டும் பெரும் பணக்காரர்களுக்கு வரிச்சலுகைகள் என்ற பெயரில், வரித் தள்ளுபடி என்ற பெயரில் ரூ.21 லட்சம் கோடி அளவிற்கு எண்ணிப்பார்க்க முடியாத மிகப்பெரும் தொகை வாரி வழங் கப்பட்டுள்ளது.மறுபுறத்தில், மக்களின் அன்றாட வாழ்க் கைக்கான செலவினங்கள் கடுமையாக வெட்டப்பட்டுள்ளன.
          குறிப்பாக உணவு, பெட்ரோலியப் பொருட்கள், உரம் உள்ளிட்ட அடிப்படையான பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்கள் சரமாரியாக வெட்டப்பட்டுள்ளன.இந்தியாவில் பல்பொருள் சில்லரை வர்த்தகத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதித்துள்ளது. இதன்விளைவாக இத்துறையில் நேரடியாக ஈடுபடும் 4 கோடி மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
          அரசு சொல்வதுபோல, அதன் கொள்கைகளை செயல்படுத்த முடியாமல் போனதால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படவில்லை; மாறாக இந்தக் கொள்கைகளையெல்லாம் செயல்படுத்தியதன் விளைவாகவே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தீவிரமாக பின்பற்றப்பட்டு வரும் இத்தகைய நவீன தாராளமயக் கொள்கைகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டிய அவசியத் தேவை எழுந்துள்ளது.

ஊழல் மற்றும் மெகா ஊழல்கள் :

         உயர்மட்டத்தில் நடக்கும் ஊழலைப் பொறுத்தவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்னெப்போதும் இல்லாத விதத்தில் `சாதனையை’ எட்டியுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரிப் படுகை ஒதுக்கீட்டு ஊழல், கிருஷ்ணா - கோதாவரி இயற்கை எரிவாயு நிர்ணய விவகாரத்தில் நடந்த ஊழல் போன்றவை இந்த ஆட்சிக்காலத்தில் நடந்த மிகப்பெரும் ஊழல்கள்.
           ஆனால் அதே நேரத்தில், ஊழலைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்காலம் எந்தவிதத்திலும் சிறந்தது என்று சொல்வதற்கில்லை. தற்போது நடந்துள்ள தொலைத்தொடர்பு மற்றும் நிலக்கரிப் படுகை ஒதுக்கீடுகளில் நடந்துள்ள மெகா ஊழல்களின் துவக்கப்புள்ளியே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக்காலத்தில்தான் இருந்துள்ளது. கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் நடந்த பாஜக அரசு சுரங்க ஊழலில் மிகவும் கேடுகெட்ட விதமாக அம்பலப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மதவெறியை முறியடிப்போம் :

               மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர் தல் அறிக்கையில், நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் மதவெறி நடவடிக்கைகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்துக் களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஆழமான பிரிவினையை ஏற்படுத்த இந்துத் துவா மதவெறி அமைப்புகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. சமீபகாலத்தில் நடந்த மிக மோசமான வன்முறை என முசாபர் நகரில் நடந்த மதவெறி வன்முறையை குறிப்பிட முடியும். பெரும்பாலான மதவெறி வன்முறைகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் தலைமையில் இயங்கும் பல்வேறு மதவெறி அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன என்பது தொடர்ந்து அம்பலப்பட்டு வரு கிறது. இத்தகைய மதவெறி சக்திகளை தடுத்து நிறுத்துவதில் காங்கிரசும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் அப்பட்டமாக தோல்வியடைந்துள்ளன.

பாஜக: பிற்போக்குவாத மாற்று :

          பாரதிய ஜனதா கட்சியும், அதன் தலைமை அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒரு நவீன மதச்சார்பற்ற அரசு என்ற கோட் பாட்டிற்கு நேர் எதிரான சித்தாந்தத்தை முன் வைத்து செயல்படுகின்றன.இன்றைய தினம் பாஜகவால் தனது பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடியும், அவரால் உருவாக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குஜராத் மாடலும் பெரும் வர்த்தகம் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன் என்பதோடு தீவிரமான மதவெறியையும் இணைத்து அவை இரண்டையும் முன்வைக்கிற ஒரு ஆபத்தான கலவையே ஆகும். குஜராத் மாடல் என்பது முழுக்க முழுக்க கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன் சார்ந்தது ஆகும். தொழிலாளர்களு க்கு மிக மிகக் குறைவான ஊதிய விகிதமும், அதிகபட்ச ஊட்டச்சத்து குறைபாடு, அதிகபட்ச குழந்தை இறப்பு விகிதம், அதிகபட்ச கர்ப்பி ணித் தாய்கள் மரணவிகிதம் என்பது உள்பட மிக மோசமான சமூக நிலை மைகளும்தான் மோடி யின் குஜராத் மாடல்.

மாற்றுக் கொள்கைகள் :

         காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகளிலிருந்தும், அவை நடத்தும் மோசமான அரசியலில் இருந்தும் இந்த நாட்டை மீட்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதை நிறைவேற்ற, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் தளங்களில் மாற்றுக் கொள்கைகள் தேவைப்படு கின்றன. அத்தகைய ஒரு மாற்றை உருவாக்கிடவே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிக ளும் போராடுகின்றன.

சில முக்கிய அம்சங்கள் : 

* இந்த அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் முக்கியமான ஆலோ சனைகள் இடம்பெற்றுள்ளன.
* அனைவருக்கும் பொது விநி யோக முறையை உறுதிசெய்யும் ஒரு புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படும்(வருமான வரி செலு த்துவோர் மட்டும் விலக்கு). ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 35 கிலோ உணவுதானியம் அல்லது தனி நபர் ஒருவருக்கு 7 கிலோ உணவு தானியம், இதில் எது அதிகமோ அந்த அளவு உணவுதானியம், அதிகபட்சம் கிலோ ஒன்றுக்கு ரூ.2 விலையில் வழங்குவது உறுதிசெய் யப்படும்.
விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும் :
* பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணய அதிகாரம் அரசின் வசமிருந்து தளர்த்தப்பட்டது ரத்து செய்யப்படும்; பெட்ரோலியப் பொ ருட்கள் மீதான கலால் மற்றும் சுங்க வரிகள் குறைக்கப்படும்.
* விவசாய உற்பத்திப் பொருட் களைப் பொறுத்தவரை நாடாளு மன்ற நிலைக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்டதன்படி, முன்பேர வர்த் தகத்தில் ஈடுபடுத்தப்படுவது தடை செய்யப்படும்.
* பெரும் பணக்காரர்கள் மீது வரி விதிப்பு, பெரும் வர்த்தக நிறுவனங் களின் லாபங்கள் மீது வரிவிதிப்பு, வரி ஏய்ப்போர் மீது கடும் நடவடிக் கை, கருப்புப் பணத்தை கைப்பற்று வது, யூக வணிகத்தில் பணத்தை முன் வைத்து சூதாடுவதைத் தடுப்பது, ஆடம்பரப் பொருட்கள் மீது அதிக பட்ச வரிவிதிப்பு போன்ற நடவடிக் கைகள் மூலம் அரசுக்கான நிதி ஆதார தளம் விரிவுபடுத்தப்படும்.
* விவசாய உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்கு பொது முதலீடு அதி கரிக்கப்படும்.
நிதி ஆதாரம் திரட்டுதல் :
* நீண்டகால மூலதன லாபங்கள் மீதான வரியை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் ஊக முதலீட்டின் மூலம் பெறப்படும் லாபங்கள் மீது வரி விதிப்பு உறுதிசெய்யப்படும். பங்கு பரிவர்த்தனைகள் மீது வரி விதிப்பு அதிகரிக்கப்படும்.
* கறுப்புப் பணத்தை கண்டு பிடித்து மீட்க, குறிப்பாக ஸ்விஸ் வங்கிகள் மற்றும் வரி ஏய்ப்புக்கான சொர்க்கங்களாகத் திகழும் பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத் தை கைப்பற்றுவதற்கான நடவடிக் கை துவக்கப்படும்.
மொரீசியஸ் மற்றும் இதர நாடுகளுடன் ஏற்கெனவே அமலில் உள்ள இரட்டை வரி தவிர்ப்பு ஒப் பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும்; இதன்மூலம் இந்தச் சட்டத்தை பயன் படுத்தி (மொரீசியஸ் பாதை) இந்தியா விற்குள் நுழையும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வது தடுக்கப்படும்.
மத்திய - மாநில உறவுகள் :
மத்திய வரி வருவாய்த் தொகுப் பிலிருந்து மாநிலங்களுக்கு 50 சதவீதம் பகிர்ந்தளிக்கப்படும்; சந்தை களில் மாநிலங்கள் கடன்பெறுவதற் கான பங்கு 50 சதவீதமாக அதிகரிக் கப்படும்.
* மத்திய அரசால் நடத்தப்படும் பல்வேறு திட்டங்கள் நிதி ஆதாரத் தோடு மாநில பட்டியலில் கொண்டு வரப்பட்டு, மாநிலங்கள் மூலமே நிறைவேற்றப்படும்.
நிலச்சீர்திருத்தம் :
* நில உச்சவரம்பு சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கான தற் போதைய நடவடிக்கைகள் நிறுத்தப் படும்; நிலச்சீர்திருத்தத்தை முறையா கவும் முழுமையாகவும் அமலாக்கிட விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்.
* உச்சவரம்புக்கு மேல் உள்ள அனைத்து உபரி நிலங்களும் கை யகப்படுத்தப்பட்டும், விவசாயம் செய்வதற்கு ஏற்ற அனைத்து தரிசு நிலங்களும் வரையறை செய்யப் பட்டும், நிலமற்ற ஏழை- விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக விநி யோகிக்கப்படும்; இதில் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்; அப்படி வழங்கப்படும் நிலங்களில் பெண்களுக்கும் சம உரிமையை உறுதி செய்யும் விதத்தில் கூட்டுப் பட்டா வழங்கப்படும்.
வெளியுறவுக் கொள்கை :
* பன்முக உலகை மேம்படுத்தும் விதத்தில் சுயேச்சையான மற்றும் அணிசேரா வெளியுறவுக் கொள்கை பின்பற்றப்படும். பிரிக்ஸ் மற்றும் ஐபிஎஸ்ஏ அமைப்புகளை வலுப்படு த்த நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
* லிபியாவில் நடந்தது போல, தற்போது சிரியாவிலும் உக்ரை னிலும் நடந்துகொண்டிருப்பது போல, அமெரிக்காவும் அதன் தலை மையிலான நேட்டோ ராணுவக் கூட்டணியும் பிற நாடுகளில் அத்துமீறி தலையீடு செய்வதையும், அரசாங்கங்களை பலவந்தமாக மாற்றுவதையும் கடுமையாக எதிர்ப் போம்.
பெண்கள் :
* நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் கொண்டுவரவும் அதை நிறைவேற்றி டவும் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த மசோதா ஏற்கெனவே மாநிலங் களவையில் நிறைவேற்றப்பட்டுள் ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலன் :
* தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தை நிறை வேற்றுவதற்காக ஒரு மத்திய சட்டம் நிறைவேற்றப்படும்; பழங்குடி மக்களுக்கான துணைத் திட்டத்தைப் பொறுத்தவரை, மத்தியிலும் மாநிலங் களிலும் தாழ்த்தப்பட்டோரின் மக் கள் தொகைக்கு சமமான விதத்தில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும்.
* பழங்குடி மக்களின் வன உரி மைகள் பாதுகாக்கப்படும்; வனங்க ளிலிருந்து சட்டவிரோதமாக அவர் களை வெளியேற்றும் நடவடிக் கைகள் நிறுத்தப்படும்.
சிறுபான்மையினர் :
* சச்சார் கமிட்டியின் பரிந்துரை களை நிறைவேற்றும் பொருட்டு, பழங்குடி மக்களுக்கான துணைத் திட்டத்தைப் போலவே முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கான ஒரு துணைத் திட்டம் வரையறை செய் யப்படும்; வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்டத் துறைகளில் சிறப்பு முன் முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு, முஸ்லிம் மக்கள் அதிக மாக வாழும் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு சீரிய கவனம் செலுத் தப்படும்.
* ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் அறிக்கை முன்வைத்துள்ள பரிந் துரை அமலாக்கப்படும்; அதில் உட னடியாக, நாடு முழுவதும் பரவி யுள்ள முஸ்லிம் சமூகத்தினர் அனை வரும் ஓபிசி(இதர பிற்படுத்தப்பட் டோர்) பிரிவின் கீழ் கொண்டுவரப் பட்டு, மாநில வாரியாக இட ஒதுக்கீடு களில் முன்னுரிமை அளிக்கப்படும்.
கல்வி மற்றும் சுகாதாரம் :
கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் நிதி ஒதுக்கப்படும்.
சுகாதாரத்திற்கு மொத்த உள் நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 5 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப் படும். இதில் அதிகபட்ச நிதி மத்தி யிலிருந்து ஒதுக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
ஊதியம், ஓய்வூதியம் :
* நுகர்வோர் விலைவாசி குறி யீட்டு எண் அடிப்படையில் குறை ந்தபட்சக் ஊதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் என்று உறுதி செய் யப்படும்.
* மூத்த குடிமக்களைப் பொறுத் தவரை, மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் அல்லது அவர்கள் பெற்ற வருமா னத்தில் குறைந்தபட்சம் 50சதவீதம்- இதில் எது அதிகமோ அந்தத் தொகை கிடைக்கும் விதத்தில் முதி யோர் ஓய்வூதியத் திட்டம் அனை வருக்கும், அரசின் பொது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அளிக்கப் படுவது உறுதி செய்யப்படும்; ஓய்வூதி யம் என்பது அனைத்து குடிமக்க ளின் உரிமையாக ஒவ்வொருவருக் கும் உறுதிசெய்யப்படும்.
ஊழல் எதிர்ப்பு :
* ஊழல் தடுப்புச் சட்டம் திருத் தப்பட்டு வலுப்படுத்தப்படும்; லோக் பால் சட்டத்தின் வரையறை விரிவுப் படுத்தப்படும்; அதன்கீழ் அனைத்து ஒப்பந்தங்கள், நிறுவனங்களுடனான புரிந்துணர்வு உடன்பாடுகள்அல்லது அரசு மற்றும் தனியார் துறையின் அனைத்து நிதி உடன்பாடுகளும் கொண்டு வரப்படும்.
தனியார் நிதித்துறை நிறுவ னங்கள், தனியார் வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், அனை த்து பொது - தனியார் கூட்டு திட்டங் களும் லோக்பால் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.

சட்டத் திருத்தங்கள் : 

* ஒரு மாநிலத்தை பிரிப்பது அல்லது மறுசீரமைப்பது தொடர்பாக நாடாளுமன்றம் முடிவெடுப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட மாநில சட்ட மன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டி யதை உறுதி செய்யும் விதத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 3 திருத்தப்படும்.
ராணுவப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்படும்; அதற்கு பதிலாக, ராணுவப் படைக ளுக்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்காத - சட்டத்திற்குட்பட்டு செயல்படும் அதிகாரங்களை கொண்ட ஒரு புதிய பொருத்தமான சட்டம் கொண்டுவரப்படும்.
* பாலின உறவுகள் தொடர்பாக தனிநபர் விருப்பங்கள் சார்ந்த உறவு களை குற்றம் என தீர்மானிக்காத விதத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 திருத்தப்படும்.
* சட்டவிதிகளிலிருந்து மரண தண்டனையை நீக்கும் விதத்தில் இந்திய தண்டனைச் சட்டம் திருத்தப்படும்.
நன்றி :
Prakash Karat releases CPIM Election Manifesto | 10tv

வியாழன், 20 மார்ச், 2014

மாற்றம் சாத்தியமே - அதுவே இந்தியாவின் இன்றைய தேவை...!


அ. சவுந்தரராசன், எம்.எல்.ஏ., அவர்களின் உரை...!

             எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கி என்று சொல்வார்கள். அது போல இப்போது நமது எல்லா சக்திகளும் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி என்று எண்ணி நாம் செயல்பட வேண்டிய நேரம் இது. நாடாளுமன்ற தேர்தலில் யார் என்ன செய்தார்கள் என்று பார்ப்பதில் தான் நாம் தீர்க்கமான முடிவிற்கு வர முடியும். நம்மைப் பொறுத்த வரையில் நாம் இந்த நாட்டின் உழைப்பாளி மக்களின், நடுத்தர வர்க்க மக்களின், தொழிலாளிகளின், விவசாயிகளின், ஏழை எளிய மக்களின், மிகப் பெரும்பான்மை மக்களின் வாழ்கைக்கான தேவைகளை நிறை வேற்றுவதற்கான கொள்கைகளை பின் பற்றுபவர்களாக, பெரு முதலாளிகளுக்கு சாதகமாக இல்லை என்பதான கொள்கைகளை பின்பற்றுபவர்களாக இருக்கிறோம்.
           மாருதியில் ஒரு அதிகாரி கொலைசெய்யப்பட்ட சம்பவத்தை பயன்படுத்தி தொழிற்சங்கத்தை முடக்குவதற்காக 147 பேரை சிறையில் அடைத்து வைத்துள்ள சம்பவத்தை எடுத்துக் கொண்டால், அவர்களை ஜாமீனில் விடும்படி கோரிநீதிபதியை அணுகினால், நீதிபதி சொல் லக் கூடிய காரணம் இன்றைய உலகமயச் சூழலில், இவர்களை வெளியேவிட்டால் வெளி நாடுகளில் இருந்து வர வேண்டிய மூலதனம் இந்தியாவிற்குள்ளே வராது என்பதாகும். நீதிமன்றமே பிரச்சாரத்தை நடத்துகிறது. தொழிலாளி தன்னை ஒன்றுபடுத்திக் கொள்வதை, ஒரு சக்தியாக்கிக் கொள்வதை, இன்றைய உலகமய சமூகம் ஏற்காது, இன்றைய சட்டம் ஏற்காது. நீதிகள் ஏற்காது. ஸ்ரீபெரும்புதூரிலே, சென் னையிலே எத்தனை தாக்குதல்களை சந்தித்துள்ளோம் என்று அறிவோம். ஆகவே, நம்முடைய பலத்தை நாம் நிலை நிறுத்திக் கொண்டால்தான் நமக்கென்று இருக்கின்ற உரிமைகளைக் கூட நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.எதைச் செய்தாலும், எந்த நடவடிக்கை எடுத்தாலும், அது முதலாளிகளுக்கு இறுதியில் நன்மையை அளிக்க வேண்டும் என்ற வகையில்தான் ஆட்சி யாளர்களால் கொள்கைகள் உருவாக்கப் பட்டு பின்பற்றப்படுகின்றன.
           அன்றைக்கு பொதுத்துறைகளை உண்டாக்கி யதும், இன்றைக்கு அவற்றை சிதைப் பதும் முதலாளிகளுக்காகத்தான். அன்றைய முதலாளிகள் சிறிது பலவீன மானவர்களாக இருந்தார்கள். ஆகவே பொதுத்துறை தேவைப்பட்டது. பொது மக்களின் பணம் தேவைப்பட்டது. அதன் மூலம் கட்டமைப்புகள் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் மின்சாரம், போக்குவரத்து போன்ற கேந்திரமான துறைகள் அரசு மட்டுமே நடத்தப்பட வேண்டிய துறைகள் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இப்போது முதலாளிகள் பலத்தைப் பெற்ற பிறகு அவற்றை அவர்கள் கையில் கொடுத்துவிடுவோம் என்ற கொள்கை நிலைப்பாடு. அதிகமான விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும், இன்று இரயில்வே உட்பட அனைத்துக் கேந்திரமான துறைகளிலும் தனியாரை அனுமதிப்பதும், அவுட் சோர்சிங், காண்டிராக்ட் என்றுதனியார்மயப்படுத்தும் முயற்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அதே போல கனரகத் தொழிற் சாலைகளில் தீர்மானிக்கும் சக்தியாக அரசு இருக்க வேண்டும் என்ற நிலைமாறி தனியார் கைகளுக்குக் கொண்டு செல்லும் முயற்சி தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
               1968-69ம் ஆண்டுகளில் பெட்ரோலியத் துறை தனி யாருக்குப் போய்விடக் கூடாது என்பது முடிவாக இருந்தது. கேந்திரமான ஒன்று மக்களுக்கு அவசியம், நாட்டிற்கு அவசியம், பொருளாதாரத்திற்கு அவசியம், சமூக இயக்கத்திற்கு அவசியம் என்று இருக்கின்ற எந்த ஒரு பொருளையும் தனியாரின் ஆதிக்கத்திற்கு விடக்கூடாது என்றிருந்தது. எனவே, அது தனியார் கையில் செல்லக்கூடாது என்று சொல்லப்பட்டது. பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்றவை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரப் பட்டன. ஆனால், இன்று நிலைமையே வேறு. இயற்கை எரிவாயுவில் ஓஎன்ஜிசியை விட ரிலையன்சிடம் அதிகமாக உள்ளது. ரிலையன்ஸ் உட்பட பலதனியார் நிறுவனங்கள் பல இலட்சக் கணக்கான கோடி ரூபாயை உபரியாக பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இரண் டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ரிலையன்சுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது. பிஜேபியை எடுத்துக் கொண்டால் பெரு முதலாளிகளுக்குச் சாதகமான இது போன்ற விஷயங்களில் ஒரு சிறு முணுமுணுப்புக் கூட கிடையாது என்பது தான். காரணம் இரண்டு கட்சி களுமே பெரு முதலாளிகளைப் பொறுத்த வரையில் ஒன்றுபோல் தான் உள்ளன. அதே போல கேந்திரமான துறைகளிலே தனியார்மயம் தேவை என்பதிலும் ஒரே நிலைப்பாட்டினையே கொண்டுள்ளன.இரும்பு, செம்பு போன்றவற்றில் எல்லாம் அரசின் கட்டுப்பாடுகள் இருந் தன.
மின்சாரத் துறையிலும் தனியார்மய முயற்சி. 60 முதல் 70 சதமானம் உற்பத்தி என்பது நம் கையில், அரசின் கையில் இருக்குமானால் முதலாளிகள் மிரட்டுகிறார்கள் என்று சொல்கின்ற நிலை இருக்காது. தமிழ்நாட்டில் 72 ஐடிஐ நிறுவனங் கள் அரசுக்குச் சொந்தமாக உள்ளன. கிட்டத்தட்ட 700 ஐடிஐ நிறுவனங்கள் தனியாருக்குச் சொந்தமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற் றில் பெரும்பாலானவற்றில் மாணவர் களே இல்லை. இன்றைக்குத் தமிழகஅரசாங்கம் என்ன செய்து கொண் டிருக்கிறதென்றால், இந்த தனியார் நிறுவனங்களில் படிக்கும் மாணவர் களுக்கான செலவினை அரசாங்கமே அவர்களுக்கு வேண்டிய கட்டணத்தை கொடுத்துவிடும். தனியாரிடம் படிப் பதற்கு அரசாங்கம் பணம் கொடுக்கும் என்பதை விட உயர்ந்த தரத்தோடு உயர்ந்தகட்டமைப்போடு வேண்டிய ஆசிரியர்களோடு வேண்டிய உபகரணங் களோடு அரசாங்கமே ஐடிஐ நிறுவனங்களை நடத்த முடியும். ஆனால்,அப்படி செய்வதில்லை. அதேபோல் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் இதேநிலைதான். எல்லா கல்வி நிறுவனங் களையும் நாட்டுடைமையாக்குகிறோம் என்று அறிவிக்கின்ற கொள்கையாவது அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும்.தாராளமயம் என்றால் என்ன? அரசு எந்தவிதமான பொறுப்பையும் எடுத்துக் கொள்ளாது என்பது தான் தாராளமயம். சந்தை எதை வேண்டுமானாலும் தீர் மானித்துக் கொள்ளும். அதில் அரசு தலையிடாது. அரசு மக்களுக்குத் தேவையான கல்வி, சுகாதாரம் போன்ற அடிப் படை வசதிகளை அளிப்பதில் தலை யிடாது என்பது தான் தாராளமயம். முத லாளிகளுக்கு தாராளம் - ஏழைகளுக்கு ஏமாற்றம் என்பதுதான் தாராளமயம். கட்டுப்பாடு என்பதே இருக்காது என்பது இருக்கக்கூடாது.
                 அப்படி இருந்தால் வசதிபடைத்தவர்கள் மேலும் வளர்வதும், ஏழை எளிய மக்கள் மேலும் நசிவதும் தடுக்கப்பட முடியாமல் போய்விடும்.யார் இந்த நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்? பல்வேறு ஏமாற்றுக் கோஷங்களை வைத்து ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாம் வலுப்பட வேண்டுமென்றால், தொழிலாளிகளின் எண்ணிக்கை விவசாயிகளின் எண்ணிக்கை வலுப் படுத்தப்பட வேண்டியுள்ளது. நாடாளு மன்றத்திலே நமக்கு சாதகமாக ஒரு சிறு மாற்றத்தை ஒரு சிறு திருப்பத்தை கொண்டு வர முடியும் என்றாலும் அதை யும் நாம் பயன்படுத்த வேண்டும் என்பது நமது நிலைப்பாடு. விளைவைப்பற்றி கவலைப்படாமல் தாராளமயக் கொள்கையை அமலாக்கி வரும் காங்கிரஸ் கட்சி. ஊழல் என்பதே தாராளமயத்தின் நேரடியான பலன், நேரடியான விளைவு. எந்த கட்டுப்பாடும் இன்றி வர்த்தகம் செய்யலாம், வியாபாரம் செய்யலாம் என்ற அரசாங்கக் கொள்கை. எதை வேண்டுமானாலும் பணத்தைக் கொண்டு சாதிக்கலாம் விலைக்கு வாங்க முடியும் என்ற கொள்கையின் விளைவு. அதை எதுவும் கட்டுப்படுத்தாது என்ற கொள்கை. அலைக்கற்றை ஊழல் -. 1,76,000 கோடி ஊழல்.
முதலாளிகள் எல்லோரும் கூட்டாக சேர்ந்து கொண்டு அரசாங்கத்துடன் கை கோர்த்து நடத்திய கொள்ளை. ஊழலைப் பொறுத்த வரையில் பாரதீய ஜனதா கட்சியை எடுத்துக் கொண்டால் அதற்கு கடுகளவும் மாற்றுக் கருத்து கிடையாது. இரண்டு கட்சிகளுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. நிலக்கரியை சூறையாடுவது, இந்தநாட்டின் கனிம வளங்களை, இயற் கை வளங்களை சூறையாடுவது என்றுஊழல் தொடர்கிறது. தமிழ்நாட்டின்கனிம வளங்களை இந்த நாட்டின் கனிம வளங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்குமானால், அரசாங்கத்திற்கு மக்களுக்குத் தேவை யானவற்றை நிறைவேற்ற தேவை யான ஆதாரங்கள் இருக்கும். வங்கிகள் உட்பட அனைத்தையும் தனியார்மயப்படுத்துவோம் என்பது அர சின் நிலைப்பாடு. வக்கீல்கள் கூடவெளி நாட்டிலிருந்து வந்து வாதாடி விட்டுப் போகலாம் என்று இன்று யோசிக் கிறார்கள். அவரவருக்கு வரும் போது மட்டும் அந்தந்த பகுதியினருக்கு கோபம் வருகிறது. இது மாற்றப்பட வேண்டும். காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் அல்லாமல் ஒருவரை யொருவர் சார்ந்து பலர் சேர்ந்து நடைபெறக்கூடிய ஒரு ஆட்சி அமையு மானால்தான் ஏதாவது ஒரு கட்டுப் பாட்டினை கொண்டு வர முடியும். ஒரே யடியாக முதலாளிகளுக்கு சாதகமாக இல்லாமல் சிறிதளவாவது சாதாரண மக்களுக்கு சாதகமாக, வேலையில்லாத் திண்டாட்டம் உட்பட்ட அனைத்துப் பிரச் சனைகளிலும் ஏதேனும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இரண்டும் அல்லாத இன்னொன்றை உருவாக்க வேண்டியுள்ளது.
               அதற்கு நாம் முயற்சி செய்கிறோம். ஆனால் என்ன பிரச்சாரம் செய்யப் படுகிறதென்றால் பலமான நிலையான ஆட்சி வேண்டும் என்று. அது யாருக்குத் தேவை சாதாரண மக்களுக்கா?முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது இடதுசாரிகளுடன் ஆதவுடன் இருந்தது என்பதால் நினைத்த தையெல்லாம் செய்துவிட முடிய வில்லை. ஆனால் இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது அதற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் போய்விட்டது. கட்டுப்பாடு இருக்கும் போது நம்மால் ஏழை-எளிய மக்களுக்கு சாதகமான சில விஷயங்களை செய்ய முடியும் என்பதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் 1 சான்று. அமெரிக் காவிற்கே நாட்டை அடமானம் வைக்கும் நிலைக்கு வந்தபோது தான் நாம் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தோம். அப்படிப் பட்ட வலுவான சக்தியாக நாம் தற்போது உருவாக வேண்டும். அதேபோல அப் போது நமக்கு அமைச்சர் பதவிகள் உட் பட பல சலுகைகளை அளிக்க முன் வந்தபோது நாம் அதனை ஏற்கவில்லை. மக் களுக்கு சாதகமான சில விஷயங்களை அமலாக்க வேண்டும் என்பதில் தான்நாம் குறியாக இருந்தோம். இது தான்இடதுசாரிகளின் நேர்மை. ஆனால் இன்று திமுகவும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து வெளியே வந்துள்ளது. இது கிண்ட லுக்கும் கேலிக்கும் உரியதாக மாறியிருக் கிறது. அனைத்து நாடுகளிலும் எப்போது தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வீதிக்கு வந்தார்களோ அப்போதுதான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தேர்தல் என்பது இப்போது வருகிறது. நாம் நமது சொந்தபலத்துடன் இருக்க வேண்டும்.
             தொடர்ச்சியாக நாம் செய்ய வேண்டியது பொது வான பிரச்சனைகளின் மீது மக்களை அணி திரட்ட வேண்டும். பிஜேபி அல்லாத காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய வேண்டும்.வெண்மணி திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாக தொழிலாளி மக்கள் திரண்டார்கள். சொந்தக்காலில் திரண்ட பெருங்கூட்டம் என்று பத்திரிகைகள் எழுதுமளவிற்கு தொழிலாளிகள் திரண்டனர். நம்முடைய வர்க்கத்தின் நன்மைக்கான போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கான நிகழ்ச்சி என்ற அடிப்படையில் பெருந்திரளாக அணிதிரண் டனர். வர்க்கப் போரை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதற்கான சான்று. மாற்றம் முக்கியம்- மாற்றம் சாத்தியம்- மாற்றம் அவசியம் என்று சாதாரண மக்களை நம்மால் நெருங்க முடியும்.

புதன், 19 மார்ச், 2014

வாழும் வரலாறு தோழர். இ. எம். எஸ்...!


கட்டுரையாளர் : தோழர். ஜி. ராமகிருஷ்ணன்          
                                தமிழ் மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                                              
                  சிலர் வரலாற்றில் இடம் பெறுவார்கள், சிலர் வரலாற்றை உருவாக்குவார்கள். இதில் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்தான் தோழர் இ.எம்.எஸ். ஒரு சனாதன ஜமீன் குடும்பத்தில் 1909-ல் பிறந்தவர் அவர். ஆண்டுக்கு 50,000 மரக்கால் நெல் குத்தகைதாரர்களிடமிருந்து மட்டும் அவருடைய குடும்பத்துக்கு வரும். வீட்டு வேலைகளைச் செய்ய மட்டும் 12 நாயர் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் இருந்தனர். எனில், எப்படிப்பட்ட செல்வச் செழிப்பான குடும்பத்திலிருந்து அவர் வந்தவர் என்பதை விளக்க வேண்டியதில்லை.
தன் குடும்பத்துக்கென்று எதையும் வைக்காமல், அவ்வளவு சொத்துகளையும் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சி கொடுத்த ஓர் அறையில் காலமெல்லாம் வாழ்ந்து மறைந்தார் அந்த மனிதர்.
                      தான் விரும்பும் மாற்றத்தைத் தன்னிடத்திலிருந்து தொடங்கியவர் இ.எம்.எஸ். தன் பள்ளிப் பருவத்தில் குடுமியை எடுத்தவர், கல்லூரிப் பருவத்தில் பூணூலை அறுத்தெறிந்தார். ‘நம்பூதிரி இளைஞர் சங்க’த்தின் தலைவர்களில் ஒருவராக இருந்த அவர், இத்தகைய சீர்திருத்தத்தை மற்றவர்களும் கடைப்பிடிக்க வற்புறுத்தினார். இதுகுறித்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.
                சென்னைச் சிறையில் இருந்தபோது இ.எம்.எஸ். பூணூல் அணியாததைப் பார்த்த, அப்போது அவருடன் சிறையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, இ.எம்.எஸ்-ஸுக்குப் பூணூல் ஒன்றை அளித்திருக்கிறார். அந்தப் பூணூலை வாங்கிய இ.எம்.எஸ். பிராமணர் அல்லாத ஒரு தண்டனைக் கைதியிடம் கொண்டுபோய்க் கொடுத்தார்.
              நாடு முழுவதும் திரண்ட விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி, தோழர் இ.எம்.எஸ்-ஸையும் இழுத்தது. 1932-ல் கல்லூரியை விட்டு வெளியேறி, காந்தி அறைகூவல் விடுத்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருக்க நேர்ந்தது. வரலாற்றுத் துறை மாணவரான
                      இ.எம்.எஸ். கல்லூரியை விட்டு வெளியேறியபோது, அவரது பேராசிரியர் “நீ வரலாற்று மாணவன் மட்டுமல்ல; வரலாற்றை உருவாக்க வேண்டியவன்” என வாழ்த்தியிருக்கிறார். 1927-ல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் இ.எம்.எஸ். பங்கேற்றார். பூரண சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்தவர்கள் பக்கம் இ.எம்.எஸ். நின்றார்.
காந்தியால் கவரப்பட்டு, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று ஒன்றரை வருடச் சிறை வாழ்க்கைக்குப் பிறகு விடுதலையாகி வெளியே வந்தவர், இரண்டு வருடக் குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் அவர்மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அறிந்து தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். 

தலைமறைவுக் காலம் கற்றுக்கொடுத்த வாழ்க்கை               
 
                    சுமார் ஆறாண்டுக் காலம் இ.எம்.எஸ். தலைமறைவு வாழ்வை மேற்கொண்டார். ஆசார அனுஷ்டானங்களில் நியதிகளைக் கடைப்பிடித்து வளர்ந்த பெரியதொரு பிரபுத்துவக் குடும்பத்திலிருந்து கட்சிக்கு வந்த தோழர் இ.எம்.எஸ்., தலைமறைவு வாழ்க்கையின்போது மிகச் சாதாரண வாழ்க்கையை நடத்தும் ஏழை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மீனவர்கள் ஆகியோரது குடிசைகளில், அவர்களுடன் இரண்டறக் கலந்து, அவர்கள் தந்த உணவை - அசைவம் உட்பட - உண்டு எந்தவித எதிர்ப்புமின்றி, கட்சி ஊழியம் செய்தார்.
அந்தக் காலகட்டத்தில் வரலாற்றையும் அரசியலையும் மார்க்ஸியக் கொள்கைகளையும் ஆழமாக அலசத் தொடங்கிய இ.எம்.எஸ்., மெல்ல மெல்ல காந்தியிட மிருந்து விலகி, புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார். அப்போது தலித் மக்களுடன் வாழ்ந்ததுதான் தன் வாழ்வில் பெரிய தாக்கத்தை உருவாக்கிய நாட்கள் என்று அவரே தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.
                சுதந்திரத்துக்காக ஆவேசமாக காந்தி போராடினாலும், சமுதாயச் சீர்திருத்தத்தில் அவருடைய பங்களிப்பு போதாது என்று இ.எம்.எஸ். கருதினார். இதனால் காந்தியிடமிருந்தும் நேருவிடமிருந்தும் விலகி, ஜெயப் பிரகாஷ் நாராயணன் தலைமையிலான காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1936-ல் தோழர் இ.எம்.எஸ்-ஸை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்த்த பெருமை தோழர் சுந்தரய்யாவைச் சாரும்.
தோழர் இ.எம்.எஸ். யாரும் நம்ப முடியாத அளவுக்குப் பரந்த வாசிப்பு உள்ளவர். படித்ததைப் போலவே எல்லாத் துறைகளைப் பற்றியும் எழுதிக் குவித்தார். அவருடைய எழுத்துகள் 100 தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
                   1937-ல் மலபார் பகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டு சென்னை ராஜதானியில் சட்டமன்ற உறுப்பினரானார். (தமிழக சட்டமன்றத்தில் முன்னோடி உறுப்பினர்களில் இ.எம்.எஸ்-ஸும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது) சென்னையைத் தலைநகரமாகக் கொண்ட அன்றைய அரசு மலபார் விவசாயிகள் பிரச்சினைபற்றி ஆய்வு செய்து அறிக்கை அளித்திட அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட வல்லுநர் குழுவில் தோழர் இ.எம்.எஸ்ஸும் இடம்பெற்றிருந்தார்.
                  இந்தக் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அளித்த அறிக்கைக்குத் தனது மாற்றுக் கருத்தை ஒரு குறிப்பாக அளித்தார். (அன்றைய விவசாயிகள் நிலைமையும், அதற்கு இ.எம்.எஸ். அளித்த தீர்வையும் இப்போதும் பேராசிரியர்கள் பாராட்டுகிறார்கள். அவர் அளித்த தீர்வு, எதிர்காலத்தில் தேசம் தழுவிய விவசாயிகள் இயக்கங்களின் முழக்கங்களாக மாறின.)
             தோழர் இ.எம்.எஸ். தான் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் நிலவிய வரலாற்றுச் சூழலைத் தாண்டிச் சிந்தித்தவர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மொழிவழி மாநிலப் பிரிவினைக் கோரிக்கைகள் எழுந்தபோது, ‘ஐக்கிய கேரளம்’ நூலை இ.எம்.எஸ். எழுதினார். தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் என மொழிவழி மாநிலங்கள் அமைவதற்கு வித்திட்ட பல முன்னோடிகளில் தோழர் இ.எம்.எஸ்-ஸும் ஒருவர். 

நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி           
 
                 1957-ல் நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி இ.எம்.எஸ். தலைமையில் கேரளத்தில் அமைந்தது. 28 மாதங்களே நீடித்த இந்த ஆட்சியின் குறுகிய காலத்தில், உபரி நில விநியோகம், குத்தகை விவசாயிகளின் நில வெளியேற்றத் தடுப்பு, குடியுரிமைப் பாதுகாப்பு (மனைப்பட்டா), கல்வியளிப்பதில் அரசின் பங்களிப்பை உறுதிப்படுத்துதல், பரந்துபட்ட சுகாதார அடிப்படைக் கட்டமைப்பை நிறுவுதல் போன்ற பல திட்டங்களைக் கொண்டுவந்தார்.
                கல்வி, சுகாதாரம், பிறப்பிலேயே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்ற மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளில் இன்றும் கேரளம் முதலிடத்தில் இருப்பதற்குத் தோழர் இ.எம்.எஸ்-ஸின் பங்களிப்பு முக்கியமானது. 

கட்சி பெரிதா, தனிநபர் பெரியவரா?               
 
             தோழர் இ.எம்.எஸ். இரு முறை முதல்வராக இருந்திருக்கிறார். தவிர, கட்சியின் பொதுச் செயலாளராக 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். ஆனால், என்றைக்குமே தான் என்ற செருக்கோ அகங்காரமோ அவரிடம் வெளிப்பட்டது இல்லை. ஒரு சின்ன உதாரணம், அவர் முதலமைச்சராக இருந்தபோது, கேரள அரசு நிறைவேற்றிய ஒரு சட்டத்தில் தவறு இருந்தது பின்னர் தெரியவந்தது. இதற்காகக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு அவரைப் பகிரங்கமாகக் கண்டித்தது.
               அவர் டெல்லியிலிருந்து கூட்டம் முடிந்து திருவனந்தபுரம் வந்தபோது அவர்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைபற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, தவறு நடந்த துறைக்கான அமைச்சர் அவர் இல்லை என்றாலும், ஒரு முதல்வராகத் தவறுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட அவர், “என் கட்சியே என்னைக் கண்டிக்காவிட்டால் வேறு யார்தான் என்னைச் சரிசெய்ய முடியும்?” என்று கேட்டார். 

வாழ்நாள் சாதனை              
 
              அவருடைய கடைசிக் காலத்தில் அவரைச் சந்தித்த பத்திரிகையாளர் ஒருவர், ‘‘உங்களுடைய வாழ்க்கையின் சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?” என்று கேட்டபோது, “ஒரு சனாதன ஜமீன் குடும்பத்தில் பிறந்த என்னைப் பின்னாளில், பாட்டாளி வர்க்கம் தன் தத்துப்பிள்ளையாக ஏற்றுக்கொண்டதையே வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டார் இ.எம்.எஸ். ஊழலும் யதேச்சதிகாரமும் அரசியல் யதார்த்தம் ஆகிவிட்ட சூழலில் வாழ்கிறோம். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணராக வழிகாட்டுகிறார் தோழர் இ.எம்.எஸ். 

(இன்று இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு நினைவு நாள்).
  தொடர்புக்கு: gr@tncpim.org          
நன்றி :
Return to frontpage