இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 மார்ச், 2013

அமெரிக்க கண்டனத்தீர்மானத்தை கண்மூடித்தனமாக ஆதரிப்பது பேராபத்தில் முடியும்...!




                    ஏற்கனவே சென்ற ஆண்டு இதே ஜெனிவா ஐ. நா. மனித உரிமைக்கழகத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே போன்ற நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்த இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது நினைவிருக்கலாம். அதற்கு தமிழகத்திலிருக்கும் இரு பெரும் திராவிடக்கட்சிகளும், உள்நாட்டு தமிழர்களை மறந்து விட்டு இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய தமிழர்களின் உயிர்களை பலி வாங்கும் தமிழக தமிழினத்தலைவர்களுமே காரணம் என்பதை தமிழக மக்கள் மறந்திருக்கமுடியாது.
         அதேப்போல் இந்த முறையும், ஜெனிவா ஐ. நா. மனித உரிமைக்கழகத்தில் நடைபெறவிருக்கின்ற கூட்டத்தில் மீண்டும் அமெரிக்கா, தமிழர்களை கொன்றுக்குவித்த இலங்கை அரசுக்கு  எதிராக இன்னொரு கண்டனத்தீர்மானத்தை கொண்டுவரவிருக்கிறது. அமெரிக்க ''பிணந்தின்னி கழுகு'' இலங்கையை வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. அது இரத்தம் பார்க்காமல் விடாது. அதற்கு முன்னோட்டம் தான் இந்த கண்டனத்தீர்மானம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஆப்கானிஸ்தானம், பாகிஸ்தான், இராக், பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் அப்பாவி மக்களை, குழந்தைகளை கொன்று குவித்த அமெரிக்காவிற்கு இலங்கையின் மீது கண்டனத்தீர்மானம் கொண்டுவர் என்ன அருகதை இருக்கிறது...? மனித உரிமை மீறல் பற்றி  பேச  அமெரிக்காவிற்கு என்ன யோக்கியதை இருக்கிறது...? ஒரு நாட்டின் இறையாண்மையை - ஜனநாயகத்தை மதிக்காத அமெரிக்காவிற்கு ஜனநாயகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமையிருக்கிறது...?
           ஒரு நாட்டிலுள்ள தனக்கு வேண்டிய ஒன்றை அபகரிக்கவேண்டுமேன்றால், அந்த நாட்டின் உள்ளே அத்துமீறி நுழைவதற்கு முதல் அஸ்த்திரமே இது போன்ற கண்டனத் தீர்மானங்கள் தான் என்பதை யாரும் மறந்திருக்கமுடியாது. இது தான் அமெரிக்காவின் கடந்தகால வரலாறு. அந்த வகையில் இங்கே இலங்கையில் அமெரிக்காவிற்கு தேவையான ஒன்று அதன் கண்ணை உறுத்திக்கொண்டிருக்கிறது. அது தான் இலங்கையின் வடமுனையில் உள்ள ''திருகோணமலை'' என்ற இடம். தற்போது ஆசியா மற்றும் அரபு நாடுகளை மிரட்டி தன்னுடையக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கு, தென்முனையிலுள்ள  கன்யாகுமரிக்கு தெற்கே 2200 கி. மீ தொலைவில் உள்ள ''டியாகோ கார்ஷியா'' என்றக் குட்டித் தீவில் அமெரிக்கா கடந்த 1974 - ஆம் ஆண்டு முதல் இராணுவத்தலங்களையும், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதக்கிடங்குகளையும் அமைத்துள்ளது. அமெரிக்காவைப் பொருத்தவரை ஆசிய நாடுகளுக்கு அருகில்  வரவேண்டும். குறிப்பாக இந்தியாவிற்கு அருகில் வரவேண்டும்  என்பது தான் அமெரிக்காவின் ஆசை - எண்ணம். அதற்காகத் தான் திருகோணமலை அமெரிக்காவிற்கு தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாது, அரபு நாடுகளிலிருந்து தினந்தோறும் இலங்கை வழியாக சீன நாட்டிற்கு செல்லும் எண்ணெய்க் கப்பலை தடுத்து நிறுத்துவதற்கு அமெரிக்காவிற்கு திருகோணமலை தேவைப்படுகிறது.
         முன்பு திருகோணமலை உட்பட இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த விடுதலைப்புலிகளின் நட்பைப் பெற்றது. அதற்கு விடுதலைப்புலிகள் இராஜீவ்காந்தி மீதுகொண்டிருந்த வெறுப்பை பயன்படுத்திக்கொண்டு வலுவான நட்பைப் பயன்படுத்திக்கொண்டது.  அந்த வலுவான நட்பின் மூலம் ஒன்றுபட்ட இலங்கையை துண்டாடுவதற்கு விடுதலைப்புலிகளுக்கு துணைநின்றது என்பதை மறந்துவிடாதீர்கள். இலங்கை இராணுவத்திற்கு எதிராக உள்நாட்டுப் போர் நடத்துவதற்காக அமெரிக்கா விடுதலைப்புலிகளுக்கு கூச்சமில்லாமல் இராணுவ உதவிகளை செய்தது. போரின் மூலம் இலங்கை அரசை வீழ்த்திவிட்டு, விடுதலைப்புலிகளின் கனவு நாடான தமிழீழத்தை சுதந்திர நாடாக - தனி நாடாக பிரகடனப்படுத்தி ஐ. நா சபையின் மூலம் அங்கீகரித்து விடலாம். அதன் மூலம் தான் செய்த இராணுவ உதவிக்கு விடுதலைப்புலிகளிடமிருந்தே திருகோணமலையை பரிசாகப் பெற்றுவிடலாமென்ற கனவில் மிதந்திருந்தது அமெரிக்கா. அண்மையில் சூடான் நாட்டை இரண்டாக பிளந்து தெற்கு சூடானின் எண்ணெய்க் கிணறுகளை சுருட்டிக்கொண்டது அமெரிக்கா என்பதை அறிந்துகொள்ளுங்கள். அமெரிக்கா இலங்கையிலும் இதே பார்முலாவைத் தான் பயன்படுத்துகிறது.   ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டை, இறையாண்மையை சிதைப்பது என்பதும் மனித உரிமை மீறலே என்பதை அனைவரும் உணரவேண்டும்.
           இதெல்லாம் ஒரு புறமிருக்க, திருகோணமலைக்கு அமெரிக்கா  குடியேறிவிட்டால், அது இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இந்தியாவின் பாதுகாப்பிற்கு, இறையாண்மைக்கு பேராபத்தாய் முடியும் என்பதை அனைவரும் புரிந்துகொண்ட செயல்படவேண்டும். வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அமைதிக் குலைந்துவிடும். எப்போதும் பதற்றமாகவே காணப்படும். இப்போது இருப்பதை விட இந்திய மீனவர்களின் நிலைமை மோசமாகிவிடும். போரையே பார்த்திராத தமிழகத்தின் அமைதிக் குலைந்து விடும்.
          இதற்கு இந்திய அரசு அமெரிக்காவிற்கு துணைப்போவது என்பதும், அதனுடைய தீர்மானத்தை ஆதரிப்பது என்பதும் பேராபத்தில் முடியும்.

வியாழன், 15 மார்ச், 2012

இலங்கையில் கால் பதிக்க துடிக்கிறது அமெரிக்கா - அதற்கு இந்தியா ஏன் அதரவு தரவேண்டும்...?

       ஜெனீவாவில் நடந்துவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான கண்டனத்  தீர்மானம் ஒன்று  அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் ஆகிய நாடுகளில் மனித உரிமை மீறல்களை தயங்காமலும், அச்சமில்லாமலும் செய்த அமெரிக்கா தான் இந்த கண்டனத் தீர்மானத்தைக் கொண்டுவருகிறது. இதன் மூலம்  மனித உரிமைகள் மீது அக்கறையுள்ள மனித நேயமிக்க நாடாக தன்னை உலக நாடுகள் மத்தியில் காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 
           இலங்கைத் தமிழர்கள் மீது அமெரிக்காவிற்கு திடிரென்று அப்படி என்ன அவ்வளவு அக்கறை...? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பிறகு ஏன் இலங்கை அரசின் மீது அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டுவரவேண்டும். 
             பொதுவாக அமெரிக்கா ஒரு நாட்டின் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவருகிறது என்றால்,  ஒன்று அந்த நாட்டின் மீது ஆக்கிரமிப்பு செய்யப்போகிறது அல்லது போர் தொடுக்கப்போகிறது என்று பொருள் அல்லது ஒரு நாட்டில் உள்ள எதோ ஒன்றை  எதிர்ப்பார்த்து அது கிடைக்காமல் போய் அதனால் அந்த நாட்டின் மீது எரிச்சல் அடைந்திருக்கிறது அல்லது கோபம் அடைந்திருக்கிறது என்றும் பொருள். 
           இலங்கை அரசின் மீது அமெரிக்காவிற்கு அப்படி என்ன எரிச்சல்...? அப்படி என்ன கோபம்...?   அமெரிக்கா எதிர்ப்பார்த்த  ஒன்று என்ன இலங்கையில் கிடைக்காமல் போய்விட்டது...?  ஆம்... அமெரிக்கா தன் கைக்கு வரும் என்று எதிர்ப்பார்த்த ஒன்று அதன் கைக்கு கிடைக்காமல் போனது தான் இலங்கை மீதான அதன் எரிச்சல்.

             அமெரிக்கா நீண்ட காலமாகவே இலங்கையின் வடபகுதியில் உள்ள திரிகோணமலை மீது ஒரு கண் வைத்திருந்தது. அதற்கு காரணம் உண்டு...! இலங்கையின் தென் கடற்கரைப் பகுதியில் இந்தியப்பெருங்கடலில் - இந்திய தென் முனையிலிருந்து  சுமார் 2200 கிலோ மீட்டர் தொலைவில் ''டீகோ கார்சியா - DIEGO GARCIA'' என்ற தீவு உள்ளது. நீங்க உலக வரைபடத்தைப் பார்த்தால்  கண்ணுக்குத் தெரியாத தீவு ஒன்று தெரியும். அது இங்கிலாந்திற்கு சொந்தமான தீவு ஆகும். ஆனால் அந்த தீவை அமெரிக்கா தன் கைவசம் வைத்துள்ளது.  அந்த தீவில் தான் அமெரிக்காவிற்கு சொந்தமான விமானப்படை மற்றும் கடற்படை தளங்கள் உள்ளன. அதை படத்தில் காணலாம்.  அதுமட்டுமல்லாது. நிறைய ஆயுதங்களும்,  ஏவுகணைகளும் அங்கே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த படைத்தளம் என்பது  ஆசியப்பகுதியில் உள்ள இராக்,  ஈரான்,  இந்தியா, சீனா, வடகொரியா  போன்ற நாடுகளை தன் இராணுவப்பார்வைக்குள் வைத்துக்கொள்வதற்காகவே 1971 - ஆம் ஆண்டில்  அமெரிக்காவால் நிறுவப்பட்டது.  முன்பு இராக் நாட்டோடு போர் செய்த போது இங்கிருந்து தான் படைகள் எல்லாம் உடனுக்குடன் அங்கு அனுப்பப்பட்டது. இப்போதும் கூட ஈரானை தாக்குவதற்காக இங்கு படைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
              சகல வசதிகளோடு இந்த தீவு இருந்தாலும், அமெரிக்கா திருப்தியடையவில்லை. காரணம், இந்த தீவானது மேலே சொன்ன நாடுகளிலிருந்து மிக தொலைவில் உள்ளது. அதனால் அமெரிக்கா இந்த நாடுகளுக்கு அருகில் வரவேண்டும் என்று ஆசைப்பட்டது. அப்போது தான் திருகோணமலை அதன் கண்ணில் பட்டது. அந்தப்பகுதி கிடைத்துவிட்டால் இந்தியாவிற்கு பக்கத்திலேயே வந்து விடலாம் என்பது மட்டுமல்ல... அரபு நாடுகளிலிருந்து இலங்கை கடற்பகுதி வழியாக  சீனாவிற்கு செல்லும் எண்ணெய் கப்பல் போக்குவரத்தையும் நிறுத்திவிடலாம் என்பது போன்ற கனவில் அமெரிக்கா கனவு கண்டது. ஆனால் திருகோணமலையோ  அப்போது விடுதலைப்புலிகள் வசம் இருந்தது. அதனால் அமெரிக்காவிற்கு  விடுதலைப்புலிகளின் தயவு தேவைப்பட்டது. 
              எனவே விடுதலைப்புலிகளின் நட்பைப் பெறுவதற்கும்,  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மீண்டும் பிரதமராக வந்துவிடக்கூடாது என்ற அமெரிக்காவின் எதிர்ப்பார்ப்புக்கும்,   ராஜீவ்காந்தியின் உயிர் விலைப்பேசப்பட்டது. விடுதலைப்புலிகளும் பழி தீர்த்துக்கொண்டனர். அமெரிக்காவின் எண்ணமும் நிறைவேறியது. பிறகு விடுதலைப்புலிகளும் அமெரிக்காவும் நண்பர்கள் ஆனார்கள்.
              இந்த நட்பைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகள் வசம் இருக்கும் திருகோணமலைக்கு குடிபெயர்ந்து விடலாம் என்று வடைக்காக காத்திருந்த குள்ளநரிப் போல் காத்திருந்தது. ஆனால் இலங்கை ஒரே நாடாக இருந்தால் அது நிறைவேறாது என்பதை உணர்ந்த அமெரிக்கா, ஏற்கனவே தனி நாடு என்ற கோரிக்கையுடன் உள்நாட்டிலேயே இலங்கை அரசுடன் போராடிக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்து இலங்கை இராணுவத்துடன் மோதவிட்டது. விடுதலைபுலிகளுக்கும், இராணுவத்திற்கும் நடைபெற்ற கடுமையான சண்டையில் விடுதலைப்புலிகள் அமைப்பு பூண்டோடு அழிக்கப்பட்டு, பிரிவினைவாதம்  ஒழிக்கப்பட்டுவிட்டது. 

              இன்று திருகோணமலை என்பது ஒன்றுபட்ட இலங்கையில் ஒரு பகுதியாக உள்ளது. அமெரிக்கா என்ற குள்ளநரி எதிர்ப்பார்த்த வடை கிடைக்காமல் போய்விட்டது. அமெரிக்காவின் நீண்ட காலக் கனவு நிறைவேறாமல் போய்விட்டது. இது தான் இன்றைக்கு அமெரிக்காவுக்கு இலங்கை மீது உண்டான எரிச்சலும் கோபமும் ஆகும். அதனால் தான் இலங்கை அரசின் மீது மனித உரிமை மீறல் எதிரான கண்டனம் என்ற பெயரில் தன் எரிச்சலையும் கோபத்தையும் அமெரிக்கா வெளிகாட்டியுள்ளது. 
                இந்த சூழ்நிலையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஏன் இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை இங்குள்ள அரசியல் கட்சிகள் சற்று சிந்திக்க வேண்டும். தேர்தல் ஓட்டுக்காக இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூச்சல் போடுவது என்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. இந்த தீர்மானத்தை அமெரிக்கா ஏன் கொண்டுவரவேண்டும்..? என்பதை தமிழர்கள் நன்கு யோசிக்கவேண்டும். இலங்கை தமிழர்கள் மீது அமெரிக்காவிற்கு அப்படி என்ன அக்கறை என்பதையும் யோசிக்க வேண்டும்...?
            நியாயப்படிப் பார்த்தால் இந்த கண்டனத் தீர்மானத்தை இந்தியா தான் கொண்டுவந்திருக்க வேண்டும். ஏனென்றால் இலங்கையில் நடைபெற்றக் கொடுமைகளை நேரடியாகப்பார்த்து இரத்தக்கண்ணீர் வடித்தவர்கள் நாம் தான். அப்பாவித் தமிழர்கள், நம்முடைய சகோதர- சகோதரிகள், நம் வீட்டுக் குழந்தைகளும், வயதானவர்களும் தான் கொடுமையான முறையில் கொல்லப்பட்டனர். இன்றைக்கு மிச்ச மீதி இருக்கிற தமிழர்களும் தன் சொந்த நாட்டிலேயே வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். இதை நம் மத்திய - மாநில அரசுகள் கண்கூடாகப் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றன. அப்படி இருக்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தனியாக ஒரு தீர்மானத்தை கொண்டுவர இங்குள்ள மத்திய - மாநில அரசுகளுக்கு ஏன்  எண்ணம் வரவில்லை...? அமெரிக்கா கொண்டுவந்த இந்த தீர்மானத்தை ஆதரிக்கக் கூச்சல் போடும் எதிர்கட்சிகள், இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிராக தனியாக கண்டனத் தீர்மானம் ஒன்றைக்கொண்டு வரவேண்டும்  என்று ஏன் கூச்சல் எழுப்பத் துணியவில்லை.

             ஏன் அமெரிக்காவின் வாலை பிடித்துக்கொண்டு அலைய வேண்டும்...? நமக்கென்று தனித்தன்மையும், மனித நேயமும், அநீதிகளுக்கெதிரான போர்க்குணமும் உண்டு. அதை நாம் காப்பாற்றுவோம்.

திங்கள், 3 அக்டோபர், 2011

இந்தியாவில் கழிப்பறையை விட கைப்பேசிகள் அதிகம் - கவலைப்படாத மத்திய அரசு

சுகாதார வசதி பற்றாக்குறை : யுனிசெப் மதிப்பீடு


                இந்தியாவில் திறந்தவெளியில் 63.8 கோடி பேர் மலம் கழிக்கிறார்கள். அதனால்  சுகாதார வசதி என்பது இந்தியாவில் பற்றாக்குறையாக இருக்கிறது என்று அண்மையில் யுனிசெப் (UNICEF) நிறுவனம் உலகளவில் மதிப்பீடு செய்ததில் இந்தியாவைப் பற்றி இவ்வளவு அழகாக குறிப்பிடுகிறது.
                 இந்தியாவில் போதிய சுகாதார வசதி இல்லாததால் 63.8 கோடி மக்கள் திறந்தவெளிப் பகுதிகளில் மலம் கழிக்கிறார்கள் என யுனிசெப் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. அப்படியென்றால், இந்தியாவில் அத்தனை கோடிப்  பேருக்கும் கழிப்பிடவசதி கிடையாது என்பது தான் அதற்கு பொருள் ஆகும்.
                உலக அளவில் உலகளவில் திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களில்,  58 சதவீதம் பேர் இந்திய மக்கள் என்பதை கேட்கும் போது நாமெல்லாம் வேதனைப்படவேண்டும். சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் கழிந்த பின்னும் 
மக்களுக்கு கழிப்பறை வசதி செய்துத்தராத ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.  கடந்த 64 ஆண்டுகளாக எத்தனை முறை மத்திய - மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளை இந்த நாட்டு மக்கள் பார்த்திருக்கிறார்கள். இதுவரை பதினோரு ஐந்தாண்டு திட்டங்களை பார்த்துவிட்டு, இதோ பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் தொடக்கத்தை பார்க்கப் போகிறார்கள். மத்திய திட்டக்குழுவில் இதுவரையில் எத்தனை தலைவர்களையும், துணைத் தலைவர்களையும் இந்த நாடு பார்த்திருக்கிறது. 
ஆனால் இதுவரையில் எந்த அரசும் அதைப் பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.
                  யுனிசெப்பின் 2008ம் ஆண்டு மதிப்பீட்டின் படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 54 சதவீதம் பேர் திறந்த வெளிகளில் மலம் கழிக்கிறார்கள். அப்படியென்றால் 50 சதவீதத்திற்கும் மேலான மக்கள் என்பது தானே இதற்கு பொருள்.  என்ன தான் பொருளாதார முன்னேற்றம் பற்றி பிரதமரும் மற்றவர்களும் பீற்றிக்கொண்டாலும், இத்தனை கோடி மக்கள் கழிப்பறையே இல்லாமல் இருக்கும் போது நாடு பொருளாதாரத்தில் முன்னேறி என்ன பயன்..? அல்லது இத்தனை கோடி மக்கள் கழிப்பறைக்கே வசதியில்லாத போது யாருடையப் பொருளாதாரம் தான் முன்னேறுகிறது என்பது தான் நமது கேள்வி..?
                அனால் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளும், உரிய சுகாதார வசதி இல்லாத நாடுகள் பட்டியலில் அடுத்தடுத்து வருகின்றன. இருப்பினும் இந்தியாவைக் காட்டிலும் இந்த நாடுகளில் அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தன் மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை  செய்து கொடுக்கின்றனர் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
                    இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேலானவர்களுக்கு கழிப்பறை இல்லாதது என்பது   மிகவும் வெட்கக் கேடானது என மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெட்கமில்லாமல் கூறியிருக்கிறார். 12வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் இந்தப் பிரச்சனை சரி செய்யப்பட்டு, 2017ம் ஆண்டில் இந்தியாவில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலையைத் தவிர்ப்போம் என்றும் உறுதியளித்திருக்கிறார் என்பதை இந்திய மக்கள் வரும் ஆறு ஆண்டுகளில் மறந்துவிடக்கூடாது.