செவ்வாய், 29 நவம்பர், 2011

கோவா திரைப்பட விழாவில் 2 ஆவணப் படங்களுக்கு தடை - கொலைவெறி.. கொலைவெறி... ஏனடா...?

  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- 
  கலைஞர்கள்  சங்கம் கண்டனம்.......  

                     கோவாவில் நடைபெறும் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் இரண்டு படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் கண் டனம் தெரிவித்துள்ளது. ஓவியர் எம்.எப்.உசேன் தயாரித்த ஆவணப்படத்தையும், பகத்சிங் தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட குறும்படத்தையும் விழாவில் தடையின்றித் திரையிட வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது.  

பண்பாட்டு அடக்குமுறை   

              கோவாவில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்திய பன்னாட்டு திரைப்பட விழா, திரைப்பட ஆர்வலர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிற ஒரு நிகழ்வாகும். தற்போது நடைபெற்று வரும் ‘42வது இந்திய பன்னாட்டுத் திரைப்பட விழா - கோவா 2011’ திரையிடலிலிருந்து இரண்டு முக்கியமான படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது திரைப்பட ஆர்வலர்களுக்கும் கருத்துச் சுதந்திரத்தை நேசிப்பவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
              உலகப் புகழ்பெற்ற இந்திய ஓவியர் அமரர் எம்.எப். உசேன் இயக்கிய ‘த்ரூ தி அய்ஸ் ஆஃப் தி பெய்ன்ட்டர்’ என்ற, ஒரு ஓவியரின் பார்வையில் வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிற ஒரு ஆவணப்படம், இந்த விழாவில் திரையிடப்படுவதாக இருந்தது. கடந்த ஞாயிறன்று (நவ.27), அதன் திரையிடல் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
                “படம் தொடர்பான நுட்பச்சிக்கல்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். எல்லாம் நல்லபடியாக முடியுமானால் படம் திரையிடப்படும்” என்று விழாவின் இயக்குநர் அறிவித்திருப்பது கண்துடைப்பாகவே இருக்கிறது. ஏனென்றால் இந்தப் படத்தின் உள்ளடக்கங்கள் குறித்து எவ்வித எதிர்ப்பும் எந்தத் தரப்பிலிருந்தும் வரவில்லை. மாறாக, இந்து ஜனஜாக்ருதி சமிதி என்ற இந்துத்துவ அமைப்பு ஒன்று, இந்தப் படத்தைத் திரையிட்டால் அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்படும் என்று அச்சுறுத்தியதன் பின்னணியிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
       அப்பட்டமான மதவெறி நோக்கத்திற்காக எம்.எப். உசேன் அவர்களை நாட்டை விட்டே விரட்டிய கும்பல்கள், அவர் மறைந்த பின்பும் அந்த வெறி அடங்காதவர்களாக அவரையும் அவரது சிந்தனைகனையும் இருட்டடிக்க முயல்கின்றன. இந்தப் பண்பாட்டு அடக்குமுறை உத்திக்கு அரசும் விழா குழுவினரும் அடிபணிந்துவிட்டது வெளிப்படையாகத் தெரிகிறது.

எது தேசவிரோதம்?   

         இதே போல், இரண்டு நாட்களுக்கு முன்பாக ‘இன்குலாப்’ என்ற குறும்படத்திற்கும் இந்த விழாவில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. கவுரவு சாப்ரா இயக்கிய இந்தக் குறும்படம் பகத்சிங் தியாகத்தை பின்னணியாக கொண்டு, இன்று நாட்டில் தலைவிரித்தாடும் சமத்துவமின்மை, மதவெறி, சாதியம், ஊழல், வேலையின்மை, பன்னாட்டு நிறுவனங்களுக்காக வளைக்கப்படும் சட்டங்கள், மரபணு நீக்கப்பட்ட விதைகளுக்கு அனுமதி போன்ற கேடுகள் பற்றி இரண்டு இளைஞரகள் உரையாடுவதாக அமைந்ததாகும். தேச விரோதக் கருத்துகளை இந்தப் படம் கொண்டிருப்பதாகக் கூறி, இதற்கு தணிக்கைச் சான்று வழங்க தணிக்கைக் குழு மறுத்திருக்கிறது. பகத் சிங் இதற்காகத்தான் இன்னுயிர் நீத்தாரா எனக் கேட்கும் இந்தப் படம் உண்மையில் தேச நலனை நோக்கமாகக் கொண்டதேயாகும். வயதுவந்தோருக்கான சான்றிதழ் அளிக்குமாறு இயக்குநர் கோரியதையும் தணிக்கைக் குழு ஏற்கவில்லை. அதைச் சாக்கிட்டு விழாவிலும் அந்தப் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் ஆட்சியாளர்களின் கொள்ளை கொலைகளை அம்பலப்படுத்துகிற ஒரு சிறிய கலைப்படைப்பே இந்தப் படம்.
             இந்த இரு படைப்புகளும் இவ்வாறு அவமதிக்கப்பட்டிருப்பதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, மக்கள் தங்கள் தேர்வுப்படி கலையாக்கங்களைக் காணும் சுதந்திரத்தின் மீதான கொடூரத் தாக்குதலுமாகும். இந்திய பன்னாட்டு திரைப்பட விழா அமைப்பாளர்கள் இந்த இரு படங்களையும் தடையின்றித் திரையிட நடவடிக்கை எடுக்க வேண்டும், தணிக்கைக்குழு ‘இன்குலாப்’ படத்திற்குச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சங்கம் வலியுறுத்துகிறது.

சனி, 26 நவம்பர், 2011

''WALMART SUPER MARKET '' வந்தா நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்து போயுடுமுங்க...!

நல்ல காலம் 
பொறக்கப்போவுது...                    
நல்ல காலம் 
பொறக்கப்போவுது... 

                  சில்லறை வர்த்தகத்துல அந்நிய நேரடி முதலீடு வந்தா நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்து போயுடும்னு பாராளுமன்றத்துல மந்திரிங்கல்லாம் சொல்லுறாங்க. 
               ஒரு மந்திரி சொல்லுறாரு... ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமாம். நல்ல விஷயம்தானுங்கள... 
                    அப்புறம் இன்னொரு மந்திரி சொல்லுறாரு... சில்லறை வர்த்தகத்துல அந்நிய நேரடி முதலீடு வந்தாக்கா... அந்த பணவீக்கம் குறைந்து போயுடுங்கலாம்... இதுவும் நல்ல விஷயம்தானுங்கள...
                    அப்புறம் இன்னொருத்தர் சொல்லுறாரு... ''வால் மார்ட்'' சூப்பர் மார்கெட் வந்துடுச்சினா... குறைவான விலைக்கு பொருட்களெல்லாம் கிடைக்குமாம்... அப்புறம் என்னங்க நமக்கு கஷ்டம்...  இதை ஏங்க நாம எதிர்க்கணும்...?
                மேலே பாத்தீங்களா எவ்வளவோ பெரிய சூப்பர் மார்கெட்... சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் மாதிரி இருக்குல்ல... சூப்பருங்க...
50,000 முதல் 75,000   சதுர மீட்டர் வரை பரப்பளவு உள்ள மெகா சுப்பர் மார்கெட்டுங்க இது.. இதுல கெடைக்காத பொருட்களே இல்லைங்கலாம்... அம்புட்டு பொருட்களும் கிடைக்குமாம். ஒரு லட்சம் நம் வீட்டுக்குத் தேவையான ஒரு லட்சம் பொருட்கள் இங்கே கிடைக்குமாம்.
 



























            
            இங்கே கிடைக்காத பொருட்களே இல்லைங்க... அன்றாட உணவு தயாரிப்புகளுக்கு தேவையான...சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் முதல் அனைத்து வகை மளிகை சாமான்கள்...  காய்கறி வகைகள்... பழ வகைகள்... ஆடு, மாடு, பன்றி, கோழி இறைச்சி வகைகள்... மீன் வகைகள்... கொறித்து சாப்பிடுவதற்கு தின்பண்டங்கள்... பாணி பூரி... பிசா வகைகள்...  டீ, காபி... குளிர் பானங்கள், ஐஸ் கிரீம்... இப்படி எல்லாம் ஒரே குடையின் கீழ் கிடைக்கும்.  
             எல்லா வகை மருந்துப்பொருட்களும் அங்கெ கிடைக்கும்... டாக்டர்களும் உள்ளே இருப்பார்கள்... மற்றும் திருமணம் ஆகி புதுக்குடித்தனம் நடத்த வீட்டுக்குத் தேவையான அத்துணை பொருட்களும்... பீரோ, கட்டில், கிரைண்டர், மிக்சி, வாஷிங் மிஷின், பிரிட்ஜி, மேசை, நாற்காலி, பாத்திரங்கள், செல்போன், டி.வி., அழகு சாதனப்பொருட்கள், பரிசுப் பொருட்கள்... என அப்பப்பா... இப்படி பல வகைகள் அங்கெ கொட்டிக்கிடக்குமுங்க ...
               பசி ஆறுவதற்கு டிபன் கடை கூட உள்ளே இருக்கும்... மயங்கி கிடப்பதற்கு மதுபானக்கடைகளும், பார்களும் அங்கே மிதந்து வரவேற்கும்.
            இவை எல்லாவற்றையும் வாங்கிவிட்டு பில் போடுவதற்கு ''அனாவசியமாக'' கியூவில் நிற்கவேண்டாம்.  ஏ.டி.எம். மிஷின் போல ஆங்காங்கே பில் போடுகிற மிஷின் வைக்கப்பட்டிருக்கும். நாமே பில் போட்டு பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு வரவேண்டியது தான். இங்கே போயி பொருட்களை வாங்கினா... காசையும் மிச்சப்படுத்தலாமாம்... நேரத்தையும் மிச்சப்படுத்தலாமாம்... இது ரொம்ப நல்லா இருக்கு இல்ல...
              
                 நீங்களும்,  உங்க வீட்டு அம்மணியும்  காலையில எழுந்து பிரஷ் பண்ணிட்டு... உங்க காரை எடுத்துகிட்டு வால்மார்ட் போனிங்கன்னா... அங்க சர்வீஸ் ஸ்டேஷன் -இல் காரை விட்டுட்டு... அங்கேயே முடிவெட்டுற கடை இருக்கும்... அங்கே முடி வெட்டிகிட்டு... பக்கத்துலேயே ''மசாஜ்'' பண்ணி... ''பாத்'' பண்ணி விடுவாங்க.... அதெல்லாம் முடிச்சிகிட்டு... அங்கேயே ''ரெடிமேடு டிரஸ்'' எல்லாம் விற்பாங்க... அதை வாங்கி போட்டுக்கிட்டு...  
                 நல்லவேளையா அங்கேயே அம்மணிக்கு ''பியூட்டி பார்லர்'' இருக்கும்... அங்கே போய் அழகு படுத்திக்கொள்ளலாம்... பிறகு அங்கேயே டிபன் முடிச்சிட்டு ... அப்புறமா வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்கள், காய்கறிகள், பழங்கள், ஸ்நாக்ஸ், மட்டன், சிக்கன், பிஷ், குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள்... இப்படியாக எல்லாத்தையும் வாங்கிட்டு... இடையில டீ..காப்பி சாப்பிட்டிட்டு, இப்படியே ஷாப்பிங் பண்ணிட்டே இருந்தீங்கன்னா...''லஞ்ச் டைம்'' வந்துடும்... அதுக்கும் கவலைப்பட வேண்டாம்... அங்கேயே ''ஹோட்டல்...''  சாரி ''ரெஸ்டாரென்ட்'' இருக்கும்... அங்கே சாப்டுட்டு... மீண்டும் ''ஷாப்பிங்'' பண்ணிட்டு...    
                அதுக்குள்ளே மாலை நேரம் வந்துடும்... அப்போது சாப்பிடவேண்டிய ''ஸ்நாக்ஸ், டீ, காப்பி'' எல்லாம் சாப்பிடுட்டு... மீண்டும் ஷாப்பிங் செய்து டி.வி. விளம்பரத்தில் பார்த்த விடுபட்ட  பொருட்களையும் தேடி அலசி பார்த்து வாங்கிட்டு... நீங்க வாங்கினப் பொருட்களையெல்லாம் கையிலயோ.. தலையிலேயோ தூக்கிகிட்டு அலையவேண்டாம்.. அங்கேயே ''ட்ராலி'' நிறைய இருக்கும்... அம்புட்டு பொருளையும் அதுக்குள்ளேயே அடுக்கிக்கலாம்...
                    அதுக்குள்ளயே..  இரவும்  வந்துடும்... அப்படியே சுத்தி நோட்டம் விட்டீங்கன்னா... கவர்ச்சியா லைட்டெல்லாம் போட்டு ''பார்'' உங்களை வரவேற்கும்... அங்கே போகாம வீட்டுக்கு போயிட்டா நமக்கும் மரியாதை கிடையாது... அந்த ''பாருக்கும்'' மரியாதை கிடையாது... அரசாங்கம் நடத்துற  ஒயின் ஷாப்பை விட... பார் - ஐ விட இது சூப்பரா இருக்கும்... நைட்டு படுத்தா தூக்கம் வர்றதுக்கு இங்க போயி கொஞ்சம் ஊத்திகிட்டு... அங்கேயே ''டின்னர்'' - ஐயும்  முடிச்சிகிட்டு... நீங்க காலைல சர்வீஸ் ஸ்டேஷன் -ல உங்க காரை விட்டீங்கள ஞாபகம் இருக்கா... அது இப்போ சர்வீஸ் எல்லாம் முடிஞ்சி புதுப்பொலிவுடன்  ''கார் பார்கிங்''- ல உங்களுக்காக ''வெயிட்'' பண்ணும்...  
            நீங்க வீட்டுக்கு கிளம்பரத்துக்கு  முன்னாடி, காலையிலிருந்து இரவு வரை வாங்கின அத்துணை பொருட்களின் ''பில்''லையும் செட்டில் செய்யணும்... உங்க ''பர்ஸ்''-ல இருக்கிற ''கிரடிட் கார்டை''யோ... ''ஏ. டி. எம்  கார்டை''யோ கொடுத்தீங்கன்னா... நீங்க கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தையெல்லாம் உறிஞ்சி எடுத்துக்கொள்வார்கள்... அல்லது கையில பணத்தை வெச்சிருந்தீங்கன்னா... உங்க பர்சையும், பாக்கெட்டையும் காலிப் பண்ணிட்டு  தான் உங்கள வெளியே விடுவாங்க...   பிறகு நீங்க சந்தோஷமா உங்க காரை எடுத்துக்கொண்டு அங்கேயே பெட்ரோலும் போட்டுக்கிட்டு, பிறகு  உங்க வீட்டுக்குப் போயி படுத்து தூங்கிட வேண்டியது தான்...
             இது ரொம்ப நல்லா இருக்கு இல்ல...
             இப்போ நாம் இவ்வளவு பொருட்களையும் வாங்கணும்னா... நாலு நாட்கள் ஆகும்... மாளிகைக்கு ஒரு இடம் போகணும்... காய் - பழத்துக்கு ஒரு இடம் போகணும்... துணி - மணிங்க வாங்கணும்னா ஒரு இடத்துக்கு போகணும்... மீன் வாங்கணும்னா ஒரு இடத்துக்கு போகணும்... ஹோட்டலுக்கு ஒரு இடம் போகணும்... காரை ஒரு இடத்துல விட்டுட்டு காலு வலிக்க நடக்கணும்... இந்த கஷ்டமெல்லாம் இந்த ''வால்மார்ட்'' - ல  கிடையாதுங்க...  
            இங்கு விலைகளும், வெளியில நாம் வாங்குற விலையை விட இங்கு மிக குறைவுங்கலாம்... காசும் மிச்சம்... நேரமும் மிச்சமுங்க...
               அது மட்டுமில்லைங்க... அமெரிக்க வால்மார்ட் - ல  துப்பாக்கி, கைத்துப்பாக்கி, வெடிமருந்து போன்றவைகளும் விக்கிறாங்களாம்... ஹை... ஜாலி நம் வீட்டுக் குழந்தைங்களும் இனி துப்பாக்கி எல்லாம் வெச்சுகிட்டு விளையாடுவாங்க...
                      இந்தியாவுல இந்த வால் மார்ட் சூப்பர் மார்கெட்ட.. இந்திய பெருமுதலாளி மிட்டலுக்கு சொந்தமான பாரதி நிறுவனத்தோடு சேர்ந்து நடத்தப்போறாங்கலாம் ... அந்த சூப்பர் மார்கெட்டுக்கு இந்தியாவுல என்ன பேரு  வெச்சிருக்காங்க தெரியுமா...? ''பெஸ்ட் பிரைஸ் - BEST PRICE''.
     இந்த பெயரை திட்டமிட்டு தான் வெச்சிருக்காங்களாம்... ''பெஸ்ட் பிரைஸ்'' என்றால் வெளியில் உள்ள விலையை விட இங்கே விலை   குறைவாக இருக்கும் என்று அர்த்தமாம்... இந்த பெயரை ஏன் வெச்சாங்கன்னா... அதுக்குப் பின்னாடியும் ஒரு மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கு...
              பாராளுமன்றத்திலேயும், வெளியிலேயும் இடதுசாரிகளும் மற்றவர்களும்... சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிப்பதை எதிர்த்தும், வால்மார்ட்டை எதிர்த்தும் போராட்டம் நடத்துகிறார்கள் அல்லவா...?  அப்படின்னா என்ன அர்த்தம்... வால்மார்ட் நடத்துற ''பெஸ்ட் பிரைஸ்'' கடையையும் எதிர்க்கிறார்கள்  என்று தானே அர்த்தம்.... இந்தியாவுல பெஸ்ட் பிரைஸ் கடைகளெல்லாம் மக்களுக்கு பொருட்களெல்லாம் விலை மலிவா கொடுக்குற கடைகள்... நமக்கெல்லாம் நல்லது செய்யற கடைகள்  என்கிற எண்ணத்தை மக்களுக்கு உண்டுபண்ணிவிடுவதால்... அந்த கடைகளெல்லாம் இந்தியாவிற்கு   வேண்டாம் என்று இடதுசாரிகள் சொன்னால் - போராடினால், இடதுசாரிகள் - கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க    தங்களுக்கு  வேண்டாதவர்களாக மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக - மக்களை கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக திருப்புவதற்காகவே    பெருமுதலாளிகள் இந்த பெயரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அதன் சூழ்ச்சியை புரிந்துகொள்ளுங்கள்...                  அதுமட்டுமல்ல... இப்படி விலை குறைவாக இருக்கிறது என்ற காரணத்தால் நாமெல்லோரும் நிச்சயமாக அங்கே தான் பொருட்களை வாங்குவோம்... அப்படி வாங்கும் போது, பரம்பரை பரம்பரையாக - குடும்பம் குடும்பமாக சில்லறை வர்த்தகத்தில் ஈடுப்பட்டிருப்போரின் கடைகள் என்னவாகும்... மக்கள் வருகை இல்லாவிட்டால், பொருட்களின் வியாபாரம் நடக்காவிட்டால் அவர்கள் தங்கள் கடைகளை இழுத்து மூடவேண்டியது தான்.... அப்படி மூடினால் இந்தியாவில் சில்லறை வர்த்தகம் செய்யும் ஏழு கோடி குடும்பங்கள் பாதிக்கப்படும்... சில்லறை வர்த்தகம் என்றால் சிறு சிறு முதலாளிகள் மட்டுமல்ல... அதில் வேலை செய்பவர்கள், விற்பனையாளர்கள், மற்ற பணியாளர்கள், சுமை தூக்குபவர்கள், மாட்டு வண்டி - ரிக்சா - மூன்று சக்கர வண்டி - ஆட்டோ தொழிலாளர்கள் இப்படியாக பல கோடி பேர் வேலை இழப்பார்கள்... அதைப்பற்றி நமக்கென்னங்க கவலை... அப்படின்னு நாம் வழக்கம் போல் இருந்துவிடலாம்....
                ஆனால்... இந்த கடைகளெல்லாம் மூடப்பட்ட பின், இந்த ''பெஸ்ட் பிரைஸ்'' கடையில விக்கிற பொருட்களின் விலைகள் எல்லாம் நான்கு மடங்கு - ஐந்து மடங்காக தாறுமாறாக உயர்ந்துவிடும். அது எவ்வளவு விலையானாலும், நாம் உண்டு உயிர்வாழ்வதற்கு  அவ்வளவு விலைகளையும் கொடுத்து தான் வாங்கவேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுவிடுவோம் என்பதை மறந்து விடாதீர்கள். 
             இந்திய மக்களே... தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்... ''வால்மார்ட்'' நமக்கு தேவையா...?  ''பெஸ்ட் பிரைஸ்'' நமக்கு தேவையா...? சில்லறை வியாபாரிகளும், தொழிலாளர்களும், பொதுமக்களும் வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய ''அந்நிய நேரடி முதலீடு'' நமக்கு தேவையா..? சிந்தித்துப் பாருங்கள்...! செயல்படுங்கள்..!

வியாழன், 24 நவம்பர், 2011

பவார் வாங்கிய அறை - ஒட்டுமொத்த இந்திய மக்கள் ஆட்சியாளர்களுக்கு கொடுத்த மரண அடி..!



                             இன்று புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது, மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரை இளைஞன் ஒருவன் அறைந்தது என்பது நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் தொடர்ந்து அரங்கேறிவரும் ஊழல்களாலும் விலைவாசி உயர்வுகளாலும்    வெறுப்படைந்த இளைஞன் ஒருவன்  ''ரௌத்திரம்'' பழகியிருக்கிறான். சரத் பவார் என்ன யேசுநாதரா... ஒரு கன்னத்துல அறைந்தால் மறு கன்னத்தை காண்பிப்பதற்கு...? இல்லையே...! அறை   வாங்கிட்டு   ஆடிப் போய்ட்டார்.
                   இந்த நிகழ்ச்சியை பற்றி கேள்விப்பட்ட இந்திய மக்கள் அனைவருக்கும் ரொம்ப சந்தோசம் தான். நம்மால் முடியாததை அந்த இளைஞன் செய்திருக்கிறானே என்று ஒரே சந்தோசம் தான் போங்க..!
            ஆனால் இந்த நிகழ்ச்சி என்பது,  ஒட்டு மொத்த இந்திய மக்களின் கோபத்தின் வெளிப்பாட்டைத் தான் காட்டுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இன்று பவாருக்கு கொடுக்கப்பட்ட அடி என்பது ஒட்டு மொத்த  ஆட்சியாளர்களுக்கும்  கொடுக்கப்பட்ட  மரண அடியாகும் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. 
                எத்தனை நாள் தான் ஆட்சியாளர்கள் கொடுக்கும் அடியை மக்கள் வாங்கிக்கொண்டே இருப்பார்கள்.... தாங்கிக்கொண்டே இருப்பார்கள்.
                இது போன்ற  நிகழ்ச்சிக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாதாம்... இந்த நிகழ்ச்சியைப் பற்றி பிரதமர் சர்வசாதாரணமாக சொல்கிறார். ''அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...''

புதன், 23 நவம்பர், 2011

DAM 999 - மீண்டும் மீண்டும் இன உணர்வுகளை தூண்டியே பிழைப்பை நடத்தாதீர்கள்...!

                    தமிழ்நாடு  மற்றும்  கேரளா மாநில எல்லைப்பகுதியில் உள்ள முல்லை பெரியாறு அணை என்பது இரு மாநிலங்களுக்கிடையே நீண்ட காலமாகவே ஒரு சட்ட போராட்டத்தை உண்டாக்கி ஒரு கவுரவப் பிரச்சனையாக மாறி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அணையின் உயரத்தை அதிகபடுத்தி  நீர் மட்டத்தை உயர்த்தவேண்டும் என தமிழ்நாடு முயற்சி செய்த போது கேரளா அதை எதிர்த்தது. அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால், அணை உடைந்துவிடும் என்று கூறி மேலும் நீர் மட்டத்தை உயர்த்த கேரளா இன்று வரை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
              116 ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லை பெரியாறு அணை இன்று பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளது.   அந்த அணையின் கீழ் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளாதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அடிக்கடி  ஏற்படும் பூமி அதிர்ச்சிகளால் அணை உடைந்துவிடுமோ என்கிற அச்சம் அந்த பகுதி மக்களிடையே அதிகரித்துள்ளது. எனவே தற்போதைய சூழ்நிலையில் - அடிக்கடி பூமி அதிர்ச்சி ஏற்பட்டு வருவதால், மேலும் கால தாமதம் செய்யாமல் இப்போது இருக்கின்ற பழைய அணையை உடைத்து விட்டு புதிய அணையை கட்டவேண்டும் என்று கேரள அரசு முயற்ச்சித்து வருகிறது. 
                 ஆனால் இந்த பிரச்சனையில் ஆரம்ப காலத்திலிருந்தே, தமிழகத்தில் ஓட்டுக்களை நம்பியே பிழைப்பை நடத்தக்கொண்டிருக்கக்கூடிய திராவிடக்கட்சிகள்  இதை ஒரு மக்கள் பிரச்சனையாகவோ அல்லது ஒருதேசியப் பிரச்சனையாகவோ பார்க்கத் தவறிவிட்டன. இதை ஒரு இனப்பிரச்சனையாக திசைத் திருப்பி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்  என்று தான் சொல்லவேண்டும். இது இரு மாநிலங்களுக்கிடையே ஒரு  கவுரவப் பிரச்சனையாகவும் மாற்றப்பட்டுள்ளது.

              இந்த சூழ்நிலையில் தான், இன்னும் சில தினங்களில் திரையிடப் போகும், டேம் 999 - என்கிற ஆங்கில திரைப்படம் இன்று தமிழகத்தில் ஒரு மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மிகப்பழமை வாய்ந்த இந்த அணையை உடைத்து புதிய அணை கட்டப்படாவிட்டால், என்ன ஆகும் என்பதை மக்கள்  புரிந்துகொள்ளும்   சினிமா மொழியில் எடுக்கப்பட்டு திரைக்கு வர காத்திருக்கிறது. ஆனால் அதற்குள் மிகப் பெரிய சர்ச்சை. இந்தப் படத்தை தமிழகத்தில்  திரையிடக்கூடாது என்று  தமிழக அரசியலில் காணாமல் போன வைகோ, ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்களெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு போராடுகிறார்கள்.
                தமிழகத்தில் இன உணர்வுகளை தூண்டி அரசியல் நடத்தும் இவர்களுக்கு இத்தனை நாட்களாக ஈழப்பிரச்சனை கை கொடுத்து வந்தது. ஆனால் இப்போது அந்தப் பிரச்சனையும் காலாவதியாகிவிட்டது. வேறு எந்தப் பிரச்சனைகளும் இப்போதைக்கு கைவசம் இல்லை.  பாத்தாங்க... DAM 999 என்கிற சினிமாப் படத்தை கையிலெடுத்துக் கொண்டு மக்களை திசைத் திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
                  1949 - இல் ஆரம்பிக்கப்பட்டு இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டிவிட்டு ஆட்சிக்கு வந்த   திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமல்லாமல், திமுக - வின் வாரிசுகளான அதிமுக, மதிமுக, போன்ற திராவிடக்கட்சிகளும் இன உணர்வுகளை தூண்டித்தான்  மக்களை குழப்பி தங்களின் அரசியல்  பிழைப்பை  நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
                  இப்படியாக இந்தி... இந்திக்கு பிறகு தமிழீழம்...இதன் பிறகு இன்றைக்கு கூடங்குளம், முல்லை பெரியாறு அணை போன்ற பிரச்சனைகளை கையிலெடுத்து தமிழக மக்களுக்காக போராடி வருவதாக காட்டிக்கொண்டு, அதன் மூலம் அரசியல் லாபம் பார்க்க துடிக்கிறார்கள்.
                 இந்த முல்லை பெரியாறு  விஷயத்தில் மத்திய அரசும் தலையிட்டு, நீதிமன்றத்தின் மூலமாகவும், அணை சம்பந்தப்பட்ட பொறியாளர்கள், நிபுணர்கள் கொண்ட குழுவின் மூலமாகவும்  அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து, இரு மாநிலங்களும் ஏற்று கொள்ளும் படியான  முடிவுகளை எடுக்கவேண்டும் என்பது தான் நம் அனைவரின் விருப்பமாக இருக்கிறது.
               இதை விடுத்து திரைப்படத்தை பார்த்து ஏன் பயப்படவேண்டும். அந்த திரைப்படத்தில் பயனுள்ளக் கருத்துக்கள் இருந்தால் அதை நாம் உதறி தள்ளிவிடக்கூடாது. எனவே திரைப்படத்தை அனுமதியுங்கள். கருத்து சொல்லும் உரிமையை தடுக்காதீர்கள். ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு தடைப்போடாதீர்கள்...

நரேந்திர மோடியின் மற்றுமொரு நரவேட்டை அம்பலம்....!

                             உண்மையிலேயே நரேந்திர மோடி என்றாலே இரத்த வாடை தான் அடிக்கிறது. இரத்தத்தால் தோய்த்தெடுத்த வரலாற்றை படைத்தவர் தான் இந்த நரேந்திர மோடி என்பது மூடி மறைக்கப்பட்ட அவரது நரவேட்டை சாதனைகள்  இப்போது ஒவ்வொன்றாக வெளியே வரும் போது தான் தெரிகிறது. நல்லவன் போல் முகமூடி அணிந்து உலா வந்தவன் தான் இந்த இரத்தவெறி பிடித்த மோடி என்பதை இப்போதாவது மக்கள் உணரட்டும். 
                   கடந்த 2004 ஜூன் 15 அன்று காவல்துறையுடனான மோதலில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் இஸ்ரத் ஜஹான் மற்றும் மூன்று பேர் காவல்துறையுடனான மோதலில் இறக்கவில்லை என்றும்  அவர்கள் நான்கு  பேரும் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும்  குஜராத் உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக்குழு அண்மையில் கூறியுள்ளது. அன்றைக்கு கொல்லப்பட்ட அந்த நான்கு பேரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டு, முதலமைச்சர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய வந்தவர்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டும் அவர்கள் மீது சுமத்தப்பட்டது. 
                இதுகுறித்து விசாரித்த அகமதாபாத் மாநகர நீதிபதி எஸ்.பி.தமங், 243 பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கை ஒன்றை சென்ற செப்டம்பர் 2009  - ல்   தாக்கல் செய்தார். இது சம்பந்தமான பல்வேறு விபரங்களைக் கண்டுபிடித்து நீதிபதி தமங் அன்றே  ஆய்வறிக்கையாக தந்திருக்கிறார்.
                    காவல் துறையினர் முதலமைச்சரிடமிருந்து பாராட்டு பெறவும்,  தங்கள் பதவி உயர்வுக்காகவுமே  தான் அவர்கள் இந்த என்கவுன்ட்டர் நாடகத்தை நடத்தி நான்கு அப்பாவி இளைஞர்களை கொன்றிருக்கிறார்கள்  என்ற உண்மையையும் வெளியிட்டிருந்தார்.
                   குஜராத் காவல்துறையினர், முதலமைச்சருக்கு இரத்த அபிஷேகம் செய்து மனம் குளிர வைத்திருக்கிறார்கள்.
          ஆனால் இந்த அறிக்கையை மாநில அரசு ஏற்காமல் உயர்நீதிமன்றத்திற்குச் சென்றது. உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக்குழுவும் தற்போது இது என்கவுன்ட்டர் அல்ல, காவல்துறையினர் நடத்திய படுகொலைச் செயல்தான் என்றுஉறுதி செய்துள்ளது.
                       இந்த சம்பவம் மட்டுமல்லாமல், தொடர்கதையான “என்கவுன்ட்டர்கள்” நரேந்திர மோடியின் மீதான கறையைத் துடைக்கிறோம் என்று கிளம்பிய காவல்துறை அதிகாரிகளின் வேட்டை தீவிரமாக நடந்திருக்கிறது. 2003ம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இதுபோல்  கொல்லப்பட்டிருக்கிறார்கள். குஜராத்திற்கு வந்து நரேந்திர மோடியைக் கொல்ல வந்தார்கள் என்று அனைவரின் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இதுபோன்ற என்கவுன்ட்டர் நாடகத்தின் மூலம் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
                     இப்படியான ''போலி  என்கவுன்ட்டர்களை'' எல்லாம் குஜராத் உயர்நீதிமன்றம் விசாரணை செய்து, இந்த சம்பவங்களுக்கெல்லாம் காரணமான முதலமைச்சர் நரேந்திர மோடி மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் தண்டனை வழங்கவேண்டும். இதைத் தான் பாதிக்கப்பட்ட குடும்பங்களும், போது மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

செவ்வாய், 22 நவம்பர், 2011

ஜெயலலிதாவின் முதலைக் கண்ணீர்..!

ஆடு நனையுதே என்று.....  

              முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட தமிழகத்திலுள்ள பொதுத்துறை நிறுவனங்களைக் காப்பாற்ற மத்திய அரசு எந்தவித உதவியும் செய்யலையாம்.   அந்த பொதுத்துறை  நிறுவனங்கள் முற்றிலும் செயலற்றுப் போகாமல் காப்பாற்றப்பட வேண்டுமேன்னு துடிச்சிப்பூட்டான்கலாம்.  அதனால  தான்  வேறு வழியே இல்லாமல்   அரசு - பால், பஸ், மின்சார  கட்டண உயர்வு முடிவை எடுத்ததாம்.  இப்படியாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கட்டண உயர்வை நியாயப்படுத்தியிருக்கிறார்.  எப்போதுமே... ''என் தலைமையிலான அரசு'' என்றும், ''என் அரசு.. நான்...'' என்றெல்லாம் கூசாமல் தன்னைப்பற்றியே பெருமையடித்துக்கொள்ளும் ஜெயலலிதா, இந்த கட்டணங்களின் உயர்வை அறிவிக்கும் போது மட்டும்  தன்னை முன்னிலை படுத்திக்கொள்ளாமல், தனக்கு சம்பந்தமில்லாத வேறு அரசு செய்வது போன்று சொல்வதை கவனித்தீர்களா...?
                பொது மக்களின் பயன்பாட்டிற்காக உருவாகப்பட்டு, இன்றைக்கு  திவாலாகும் சூழ்நிலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை உயிர்ப்பிப்பதற்கும், இந்த நிறுவனங்கள் மக்களுக்கு தொடர்ந்து தங்களது சேவையை ஆற்றிடுவதற்கும்  தான் கட்டணத்தை உயர்த்தியதாக மிகுந்த வருத்தத்தோடு சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. 
               ஆடு நனையுதே என்று ஜெயலலிதா வருத்தப்படுவது என்பது ஒன்றும் விசித்திரமானது அல்ல...
                            இந்தப் பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்றுவதற்கு  ஜெயலலிதா மத்திய அரசை எதிர்த்து போராடவேண்டியது தானே நியாயமானது. அதை விடுத்து மக்களை தாக்குவது என்பது எந்தவகையில் நியாயமானது. பொது   மக்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொள்வார்கள் என்ற நினைப்புத் தானே ஜெயலலிதாவிற்கு இந்த தைரியத்தைக்கொடுத்தது. 


                இதைப் பார்க்கும் போது எனக்கு ஒரு கதை தான் ஞாபத்திற்கு வருது...
அது என்னன்னா...? 


               ஒருத்தர் ஒரு கழுதைய வளர்க்கிறாரு... அந்த கழுதைய அவர் எப்போதும் அடிச்சிகிட்டே இருப்பாரு... நின்னா அடிப்பாரு... உக்காந்தா அடிப்பாரு... சாப்டா அடிப்பாரு... பொதி சுமந்து போனா அடிப்பாரு.. எறக்கி வெச்சா அடிப்பாரு... தூங்கினா அடிப்பாரு... இப்படியே எப்போதும் அடிச்சிகிட்டே இருப்பாரு...
               பக்கத்து வீட்டுல ஒரு கழுதை இருந்துது.... ஒரு நாள் இந்த கழுதை.. அந்தக் கழுதையைப் பார்த்து... என்ன உன் மொதலாளி எப்பப்பாரு உன்ன அடிச்சிகிட்டே இருக்காரு.. வெளியில போகும் போது அறுத்துகிட்டு ஓடிட வேண்டியது தானே...ன்னு கேட்டுச்சு...
              அதற்கு அந்தக் கழுதை இந்தக் கழுதையிடம், நீ நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் கேனையன் கெடையாது. என் மொதலாளிக்கு ஒரு அழகான பொண்ணு இருக்கா... அந்த பொண்ணுக்கு ஒரு முறைப் பையன் இருக்கான்... ஒரு நாள் அந்தப் பையன் மொதலாளிகிட்ட பொண்ணு கேட்டான். 
              மொதலாளிக்கு கோபம் வந்துடுத்து. இந்தக் கழுதைக்கு கட்டிக் கொடுத்தாலும் கட்டிக்கொடுப்பேன்.... ஆனா உனக்கு கட்டித் தரமாட்டேன்னு சொல்லிட்டார்... அதனால தான் அவரு எவ்வளவு அடிச்சாலும் வாங்கிட்டே இருக்கேன்னு சொல்லுச்சாம்.


                 அழகான பொண்ணுக்கு ஆசைப்பட்ட கழுதையைப்போல, இன்றைக்கு  தமிழக மக்கள் இலவசப்பொருட்களுக்கு ஆசைப்பட்டுக்கொண்டு  அரசு எவ்வளவு அடித்தாலும், வாங்கிக் கொள்கிறார்கள். முன்பெல்லாம், ஆட்சியாளர்கள் மக்களின்  தலையில் அடித்தார்கள். முதுகில் அடித்தார்கள். இப்போது வயிற்றில் அடிக்கிறார்கள்... இந்த மக்கள் அதையும் சந்தோஷமாக வாங்கிக்கொள்கிறார்கள் என்பது தான் வயிற்றெரிச்சல் ஆன விஷயமாகும். ஒருத்தராவது போராட வருகிறார்களா...?  எல்லாம் இலவசங்கள் செய்யும் மாயம் தான்... இந்த மக்களுக்கு இலவசங்களை கொடுப்பதற்காகத் தான் அவர்களிடமே இப்படி கட்டண உயர்வின் மூலம் வசூல் செய்து அவர்களுக்கே இலவசங்களை அள்ளித் தருகிறார் ஜெயலலிதா என்பதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்பது தான் வேதனையளிக்கக்கூடிய அம்சமாகும். 

                     இது எப்படி இருக்கிறது தெரியுமா...? நோஞ்சான்  நாய்க்கு, அதன் வாலையே வெட்டி, அதுக்கே சூப்  வெச்சி கொடுத்த கதையா இல்ல  இருக்கு.    

திங்கள், 14 நவம்பர், 2011

குழந்தைகளுக்கு ஆனந்த சுதந்திரம் கொடுப்போம்...!

                    இன்று குழந்தைகள் தினம். இந்த நாள் என்பது இன்று ஒரு நாள் கொண்டாட்டமாக முடிந்துவிடக்கூடாது.  ஆண்டு முழுதும் அவர்கள் தினம் தான். ஆனால் இன்றைக்கு நம் வீடுகளில் என்ன நடக்கிறது ? குழந்தைகளுக்கு வந்த சோதனை என்ன..? பெற்றோர்களால் அவர்களின் சுதந்திரமான சிந்தனைகளும், விளையாடும் உரிமைகளும் மறுக்கப்பட்டிருக்கின்றன என்பது தான் உண்மை.
              பெற்றோர்களின் ஆசை என்ற பேரால், குழந்தைகள்  அவர்களின் உண்மையான உரிமைகள் மறுக்கப்பட்டு, புத்தகத்துக்குள் சிறை வைக்கப்படுகின்றனர். இதனால் அவர்களின் உள்ளே தேங்கிக்கிடக்கும் அளவில்லாத திறமைகளும், அபரிதமான ஆற்றல்களும், இவைகளினால் ஏற்படும் வளர்ச்சிகளும் முடங்கிப் போய்விட்டன. 
             குழந்தைகளின் எண்ணங்கள், கற்பனைகள், ஆசைகள் என்னவென்று ஆராயாமல், பெற்றோர்களின் ஆசைபடி - அவர்களின் எதிர்பார்ப்புப்படி குழந்தைகளை மாற்ற நினைப்பது என்பது, குழந்தைகளின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிப்பதாகும். குழந்தைகள் என்ன கூண்டுக்குள்ளே அடைத்து வைத்து வளர்க்கப்படும் சோதனை எலிகளா...? 
            பெற்றோர்களின் இப்படிப்பட்ட பேராசைகளினால், குழந்தைகள் என்னென்னவெல்லாம் இழந்திருக்கிறார்கள்..? விளையாட்டுகள், மனித உறவுகள், நண்பர்கள், ஓய்வு நேரங்கள், சுதந்திரமான சிந்தனைகள், கற்பனைகள், ஆசைகள் - இவைகளைக் கொண்ட ஒரு கனவு உலகத்தையே தொலைத்திருக்கிறார்கள். இதற்கு யார் காரணம்...? குழந்தைப்பருவத்தில் இவைகள் அத்தனையையும் அனுபவித்துவிட்டு, கல்வியில் வேலைவாய்ப்பில் தங்களால் செய்யமுடியாத காரியங்களை எல்லாம்  தங்கள் குழந்தைகளின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள நினைக்கும் பெற்றோர்கள் தான் இதற்கெல்லாம் காரணம் என்பது வெளிப்படையான உண்மை. 

                   தங்கள் குழந்தைகள் எல்லாப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கவேண்டும், முதல் இடத்தில் தேர்ச்சி பெறவேண்டும், பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கவேண்டும், அதனால் குழந்தைகள் புத்தகப்ப்ழுவாகவே மாறவேண்டும்  - போன்ற பெற்றோர்களின் கண்டிப்பான திணிப்பால் இன்று குழந்தைகளின் நியாயமான ஓய்வு நேரமும், விளையாட்டு நேரமும் ஓடி ஒளிந்துவிட்டன.
                   வீட்டில் தான்  இப்படி என்றால், குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. இன்றுக் கல்வி வியாரமயமானதால், கட்டணக் கொள்ளைக்காக தங்கள் பள்ளி முதன்மை பெறவேண்டும் என்ற பேராசைகளினால் பள்ளி நிர்வாகமும் குழந்தைகளின் விளையாட்டு நேரத்தை ஒழித்துக்கட்டி விட்டனர். பள்ளி அட்டவணைகளில் விளையாட்டு நேரம் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த நேரத்தை ஏதோ ஒரு பாட வகுப்பு கட்டாயமாக பிடுங்கியிருக்கும் என்பது தான் கொடுமையான விஷயமாகும். 
              குழந்தைகளோடு கூடி விளையாடிய விளையாட்டுகளான - கபடி, நொண்டி விளையாடுதல், கண்ணாம்பூச்சி, கோகோ, பல்லாங்குழி, சுங்குரக்காய், கோலி விளையாடுதல், கில்லி - கிட்டிப்புள் - அப்பப்பா எத்தனை விளையாட்டுகள். இவைகள் அத்தனையும் குழந்தைகளுக்கு உடல் நலத்தையும், மன நலத்தையும் கொடுத்தன. இன்று இது போல் விளையாட்டுகள் எல்லாம்  இல்லாது போனதால், குழந்தைகளோடு இயற்கையாகவே வளர்ந்து வரும் சுயசிந்தனை, சுயமாக முடிவெடுக்கும்  ஆற்றல், தைரியம் போன்றவைகள் எல்லாம் அவர்களுக்குள்ளேயே அழிந்து போய்விட்டன.
                         இன்று பள்ளிகளிலும், நாம் வாழும் இடங்களிலும் குழந்தைகள் சுதந்திரமாக ஓடித்திரிந்து விளையாடுவதற்கு தேவையான விளையாட்டுத் திடல், பூங்கா, நீர்நிலைகள், திறந்தவெளிகள் ஆகியன  காணாமல் போய்விட்டன என்பது வருத்தமளிக்கக்கூடிய விஷயமாகும்.            
         அனால் இன்றோ குழந்தைகள் சுதந்திரமாய் விளையாடாததால், மன அழுத்தம்  ( Mental Depression ), ஒற்றைத் தலைவலி ( Migraine ), மன  உளைச்சல் போன்ற மன ரீதியான நோய்களுக்கு குழந்தைகள் இரையாகிறார்கள் என்பதும் உண்மை.   
               இது அவர்களது பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட விஷயம்  அல்ல. உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம்,  சமூக உறவு, கூட்டுச் செயல்பாடு, சிந்தனையாற்றல், கற்பனைத் திறன்  உள்ளிட்ட வருங்காலத் தலைமுறை வளர்ச்சி சம்பந்தப்பட்ட - அவர்களின் ஒளிமயமான எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயமாகும். . குழந்தைகளுக்கு நியாயமாக கொடுக்க வேண்டிய ஓய்வு நேரத்தையும், விளையாட்டு நேரத்தையும், அற்புதமான விளையாட்டுகளையும்,  விளையாட்டு இடங்களையும்  அவர்களிடமே மீட்டுத்தருவோம்.         இது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை மட்டுமல்ல. அரசின் கடமையும் ஆகும்.
                         குழந்தைகளுக்கு ஆனந்த சுதந்திரம் கொடுப்போம்... குழந்தைகளைக்  கொண்டாடுவோம்...!                                            

சனி, 12 நவம்பர், 2011

ரஷ்யாவில் எழுச்சிமிக்க புரட்சிதினம்....!

              சோவியத் யூனியன் சிதறுண்டு போன பிறகு  உலகின் முதல் புரட்சி நடைபெற்று 94 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ரஷ்யக் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களும், பொதுமக்களும்  கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர். கடந்த  2010 - ஆம் ஆண்டு மேதினத்தன்று மீண்டும் நிறுவப்பட்ட ஸ்டாலின் நினைவிடத்தில் பொதுமக்கள் கூடி மலரஞ்சலி செய்தனர். 











                தலைநகர் மாஸ்கோவில் உள்ள வெர்ஸ்க்யா சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாகச் சென்றனர். பெரும்பாலானவர்கள் கைகளில் செங்கொடிகளை ஏந்தியிருந்ததால் சாலை முழுவதும் செம்மயமாகக் காட்சியளித்தது. இந்த ஊர்வலத்திற்கு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கென்னடி ஜூகானோவ் தலைமை வகித்தார். நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்றும், ஒவ்வொரு ரஷ்யருக்கும் அந்த வெற்றியால் பலன் கிடைக்கும் என்றும் அவர் ஊர்வலத்தில் பேசும்போது குறிப்பிட்டார். சிவப்பு அமைச்சரவையில் பங்கேற்கப்போகும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பெயர்களையும் அவர் பட்டியலிட்டார்.
                  புரட்சியைக் கொண்டாடும் வகையில் வெர்ஸ்க்யா சாலையில் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக ஊர்வலம் நடந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் 3 முதல் 5 ஆயிரம் பேர் வரை இந்த ஊர்வலத்தில் பங்கேற்பது வழக்கம். ஆனால் இம்முறை ஊர்வலத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தையும் தாண்டிச் சென்றுவிட்டது. பொதுவாக, இந்த ஊர்வலத்தில் வயதானவர்களே கடந்த ஆண்டுகளில் பங்கேற்று வந்தனர். ஆனால் தற்போது நடந்த ஊர்வலத்தில் கம்யூனிஸ்டு இளைஞர் யூனியனில் உறுப்பினர்களாக உள்ள இளைஞர்கள் ஏராளமான அளவில் திரண்டிருந்தார்கள்.  

புதன், 9 நவம்பர், 2011

துரத்தியடிக்கப்பட்ட சென்னை ''அங்காடித் தெரு'' தொழிலாளர்கள்...!

                   சென்னையில் ஒரு ''அங்காடித் தெரு'' - அது தான் தி. நகரில் இருக்கும் ரங்கநாதன் தெரு. எப்போதும் ஓய்வில்லாமல் இயங்கிக்கொண்டே இருக்கும் தெரு. இந்த தெருவில் கிடைக்காத பொருட்களே கிடையாது. சின்ன குண்டூசி முதல் பெரிய்ய்யய்ய யானை வரைக் கிடைக்கும். இங்கு கிடைக்கும் பொருட்கள் தரமானதா.. சொல்லப்படும் விலைகள்  நியாயமான விலை தானா... ஆராய்வதை விட மக்கள் தங்கள் ஊர்களில் விற்கப்படும் பொருட்களின் விலையை விட இங்கு குறைவாகவே இருக்கும். அங்கு விற்கப்படும்  அத்தனைப் பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கும் என்பது தான் இந்த தெருவின் முக்கிய அம்சமாகும். அதனால் தான் தினமும் லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.
                  பொங்கல், ரம்சான், கிருஸ்துமஸ், தீபாவளி  போன்ற பண்டிகைகள்  ஆனாலும் சரி... கல்யாணம், காதுகுத்தல், புதுமனை புகுவிழா - இப்படி பல்வேறு குடும்ப விழாக்கள் ஆனாலும் சரி இங்கே மக்கள் குடும்பம் குடும்பமாக கூடிவிடுவார்கள். அத்தனை பொருட்களும் அவர்களின் தேவைக்கேற்பவும், வசதிக்கேற்பவும் இங்கே தான்  கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழகம்  மற்றும்  புதுவையிலுள்ள அனைத்து பகுதிகளிலிருந்து மக்கள் வருவார்கள். காலையில் இந்த தெருவில் பொருட்கள் வாங்குவதற்கு நுழைந்தார்களானால் நாள் முழுக்க தேவையான பொருட்கள் அத்தனையையும் வாங்கிவிட்டு  இரவில்  தான் வீடு திரும்புவார்கள்.
                         எந்த எதிர்பார்ப்போடு மக்கள் கூடுகிறார்கள் என்றால் அந்த அளவிற்கு  அங்கே 75000 வகையானப் பொருட்கள் அங்கே கிடைக்கிறது என்பதும் இன்னொரு சிறப்பம்சமாகும்.  அத்தனை வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதென்றால் அது சம்பந்தமான தொழிலாளர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்... உண்மையிலேயே விரல் விட்டு ''எண்ணிப்'' பாருங்கள். 
              1 .  விற்பனையாளர்கள் ( இரு பாலர்களும் )
              2 .  மேற்பார்வையாளர்கள் ( இரு பாலர்களும் ) 
              3 .  மேலாளர்கள்  ( இரு பாலர்களும் )
              4 .  சமையல் கலை தொழிலாளர்கள் ( சமையல் செய்து பரிமாறி      
                    இலையை எடுத்து சுத்தம் செய்பவர்கள் வரை
              5 .  சுமை தூக்கும் தொழிலாளர்கள் 
              6 .  லாரி, வேன், ஆட்டோ, மூன்று சக்கர சக்கர சைக்கிள் ஓட்டும்   
                    தொழிலாளர்கள்  
              7 .  லிப்ட்  இயக்குபவர்கள்
              8 .  டீ, காபி விற்பனையாளர்கள்
              9 டீ, காபி போடும் தொழிலாளர்கள்
            10 டீ, காபி கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள்
            11 .  இங்குள்ள கடை வாசலையும், கடைகளையும், கடைகளிலுள்ள  
                    கழிப்பறைகளையும் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் 
            12  . மின்சாரம்  மற்றும் தண்ணீர் சம்பத்தப்பட்ட வேலைகளை செய்யும்
                    தொழிலாளர்கள்
            இவர்களைத் தவிர சாலை ஓரத்தில் டீ, காபி, குறைந்த விலை சாப்பாடு போன்றவை விற்கப்படும் தள்ளுவண்டிக்கடைகள்,   கையேந்தி பவன்கள் , வட மாநிலங்களிலிருந்து பிழைப்புக்காக வந்து போடப்பட்டிருக்கும் கடைகள் மற்றும் உள்ளாடைகள், கைக்குட்டைகள், ஆயத்த ஆடைகள், ஷூ, செருப்பு, சாக்ஸ், சீப்பு, கண்ணாடி, அலங்கார பொருட்கள், அலங்காரச் சாயங்கள், பொம்மைகள், விளையாட்டு சாமான்கள், தலையில் - கழுத்தில் - கைகளில் - கால்களில் அணிவது... அப்பப்பா... எத்தனை வகையான பொருட்கள். அத்தனையும் பெண்களையும், குழந்தைகளையும் கவரும் பொருட்கள். அதனைப் பொருட்களையும் விற்பனை செய்யக்கூடியவர்கள் யாரென்று ஆய்வு செய்தால்... படித்து விட்டு வேலைக் கிடைக்காதவர்கள், பார்வை - கை - கால் இல்லாத மாற்றுத்திறனாளிகள், வயதான பெற்றோர்களை பார்த்துக்கொள்ளும் இளைஞர்கள்,  சகோதரிகளின் திருமண பொறுப்பை ஏற்றிருக்கும் சகோதரர்கள், குழந்தைகளின் படிப்புக்காக உழைக்கும் பெற்றோர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதானப்  பெற்றோர்கள்   என  அந்த அங்காடித் தெருவில், வயிறார சாப்பிட முடியாவிட்டாலும் உயிர் வாழ்வதற்காகவாவது  இப்படியாக பிழைப்பு நடத்துபவர்கள் லட்சம் பேர் இருப்பார்கள். இவர்களெல்லாம் வெளியூரிலிருந்து பிழைப்புக்காக சென்னை வந்தவர்கள்.
               இவர்கள் அத்தனை பேரும் இன்றைக்கு, நீதிமன்ற ஆணைப்படி ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளும்  விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டது என்று சொல்லி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தனை வகையான தொழிலாளர்களும் அந்த அங்காடித்  தெருவிலிருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ளனர் என்பது வேதனையான விஷயமாகும்.
              இங்குள்ள கடைகளின் கட்டிடங்கள் விதிப்படி காட்டப்படாதது என்பது இந்த தொழிலாளர்கள் செய்த குற்றமா..? ஆட்சியாளர்கள் செய்த குற்றம்..!
இந்த தெருவிலுள்ள அத்துணைக் கடைகளும் தமிழக ஆட்சியாளர்களுக்கு - ''அய்யாவாக'' இருந்தாலும் சரி, ''அம்மாவாக''  இருந்தாலும் சரி.. இந்த ஆட்சியாளர்களுக்கும், கழக கண்மணிகளுக்கும், ரத்தத்தின் ரத்தத்திற்கும், இரு கழகங்களின் குண்டர்களுக்கும், ரவுடிகளுக்கும், போலீஸ்காரர்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும், மற்றும் மின்வாரியம், மாநகராட்சி, வருமானவரி அலுவலகம், விற்பனை வரி அலுவலகம் என இங்கெல்லாம் வேலை செய்யும் அதிகாரிகளுக்கும் இந்த அங்காடித் தெருவில் உள்ள ''பெரிய்ய்ய்ய'' கடைகளெல்லாம்  வாயை இளித்துக்கொண்டே பணம் கொடுக்கும் தானியங்கி எந்திரம் - ஏ . டி. எம். என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
              இன்று ஏற்பட்டிருக்கும் இத்தனை பிரச்சனைகளுக்கும் இது தான் காரணமாகும்.    

மம்தாவின் ரவுடித்தனமும், ஏமாற்று வேலையும்....!

மம்தா பானர்ஜியின் 
ரவுடித்தனம்...!                

                
          மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்ன செய்தார் தெரியுமா...? கொல்கத்தாவில் உள்ள ஒரு காவல்  நிலையத்துக்குள் அடாவடியாக - அதிரடியாக நுழைந்தார். காவல் நிலையத்தின் செயல்பாடுகளை சோதனை செய்ய அல்ல.  குற்றம் புரிந்து, அங்கு பிடித்து வைக்கப்பட்டிருந்த திரிணமூல் கட்சித் தொண்டர்கள் இரண்டு பேரை விடுவித்திருக்கிறார் என்பது தான் அதிர்ச்சி தரும் விஷயம் ஆகும். குற்றம் செய்து பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்கள் அவரது கட்சியினை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல அவரது உறவினரும் ஆவார்கள்.
                    சென்ற இடதுசாரிகள் ஆட்சியின் போது தான், குற்றம் செய்து கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட தங்கள் கட்சியின் குண்டர்களை விடுவிக்க காவல் நிலையத்திற்குள் புகுந்து அடாவடித்தனம் செய்தார் என்பதை அந்த மாநிலமே பார்த்திருக்கிறது. ஆனால் இன்றோ தான்   சட்டத்தை காப்பாற்றவேண்டிய ஒரு முதல்வர் என்பதையே அவர் மறந்து செயல்பட்டிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். முதல்வராக பதவியேற்கும் போது ''விருப்பு வெறுப்புகளுக்கு  இடம் தராமல் சட்டங்களை காப்பாற்றுவேன்'' என்று   எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு  எதிராகவும் செயல்பட்டிருக்கிறார் என்பதை தான் இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. 
                 இது பொறுப்பு வாய்ந்த ஒரு முதலமைச்சர் செய்கின்ற வேலை அல்ல. மம்தா பானர்ஜி ஒரு ரவுடியைப் போல் நடந்துகொண்டிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
  மம்தாவின் ஏமாற்று வேலை...!          
                 
அண்மையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலின் விலையை உயர்த்தியது. அப்போது தான் மம்தாவின் ஏமாற்று நாடகம் ஆரம்பமானது. மம்தாவின் கட்சியும் இடம்பெறும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் இப்போது தான் முதல் முறையாக பெட்ரோல் விலையை ஏற்றுவது போல் வானத்துக்கும் பூமிக்கும் ருத்ரத்தாண்டவமே ஆடினார்.
                 அமைச்சரவையிலிருந்து விலகப்போகிறோம் என்றார். ஆட்சிக்குக் கொடுத்துவந்த ஆதரவை திரும்பப் பெறப்போகிறோம் என்றார். என் கட்சியை சேர்ந்த எம்.பி-க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கப்போவதாகவும், அவரிடம்   எங்கள் அதிருப்தியை தெரிவிக்கப்போகிறோம் என்றும் கூறினார். .
மன்மோகன் சிங்கை விட்டேனா பார் என்று கொக்கரித்தார். ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவது பற்றி மம்தா யோசிப்பதாகவும் மம்தா கட்சியிலிருந்து செய்திகளை கசியவிட்டனர்.
                 ''கைப்புள்ள வந்துட்டான்.. அவன் ரத்தத்த பாக்காம விடமாட்டான்..'' என்ற ''வின்னர்'' படத்துல வர்ற வடிவேலு டயலாக்கு கணக்கா...  மக்கள் எல்லோரும் ''மம்தா எழுந்துட்டாங்கடா.. அவங்க ரெண்டுல ஒன்னு பாக்காம விடமாட்டங்கடா...'' என்று, ஆட்சிக்கு என்ன நடக்க போவுதோ என்று மக்கள் எல்லோரும் அவரது அசைவுகளையே பார்த்துக்கொண்டிருந்தனர்.   
                கடைசியில அந்த பெரியண்ணன் ''மண்'' மோகனனை அவங்களால பாக்கவே முடியல... அப்புறம் லோக்கலிலேயே இருக்கிற சின்ன  அண்ணன் பிரணாப்பை பாத்தாங்க... அவர் என்ன அடி கொடுத்தார்னு தெரியல... புலி போல பிரணாப் வீட்டுக்குள்ள போன மம்தா, வெளியே வரும் போது எலி மாதிரி ஆயிட்டாங்க...! என்ன நடந்துன்னே தெரியல... மம்தாவின் சுருதி அப்படியே மாறிப்போச்சி...
                ஆரம்பத்தில் பெட்ரோல் விலைஉயர்வை திரும்பப் பெறாவிட்டால் மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவோம் என எச்சரித்த மம்தா பானர்ஜி,  பிரணாப் முகர்ஜி சந்திப்புக்குப் பின் ''மத்திய அரசு மீண்டும்   பெட்ரோல் விலையை உயர்த்தினால் இரண்டாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக்கொள்வோம்'' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
               இது தான் மம்தாவின் மக்களை ஏமாற்றும் நாடகத்தின் உச்சக்கட்டமாகும். இது யாரை ஏமாற்றும் வேலை...? எப்போதுமே மக்கள் ஏமாந்து கொண்டிருக்க மாட்டார்கள்..!

திங்கள், 7 நவம்பர், 2011

உயிர் துச்சமென நீதிக்காகப் போராடும் இரும்பு பெண்மணி...!

                    இவர் 1972 - ஆம் ஆண்டில் பிறந்தவர். மணிப்பூர் மாநிலத்தின் ''இரும்புப் பெண்மணி'' என்று அன்போடு அழைக்கப்படுபவர். இன்று உலகமே இவரை திரும்பிப்பார்க்கிறது. இவர் பெயர் தான் ஐரோம் ஷர்மிளா. இவர்  2000 ஆம்  ஆண்டு  நவம்பர் 4  முதல் இன்று வரை உண்ணா விரதம் இருந்து வருகிறார். இப்போது பதினோரு ஆண்டுகளை முடித்து பன்னிரெண்டாவது ஆண்டாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஆனால் இந்த உண்ணாவிரதத்தை   நம் நாட்டில் உள்ள எந்த தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் கண்டுகொள்ளவே இல்லை என்பது தான் வேதனையானது. 
              அருணாச்சலப்பிரதேசம் , அசாம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதக்குழுக்கள் பல வளர்ந்து அவைகளின் பலத்திற்கேற்ப அந்த மாநிலங்களை நம் தேசத்திலிருந்து தனியாக பிரிக்கும் முயற்சி செய்தபோது, அந்த தீவிரவாதக்குழுக்களை ஒடுக்குவதற்காக Armed Forces (Special Powers) Act (AFSPA) என்கிற  ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் சென்ற   1958 - ஆம் ஆண்டு செப்டம்பர் 11 - ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டம் 1990 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கும் நீட்டிக்கப்பட்டது.
                   ஆயுதப்படையின் கட்டுப்பாட்டுக்குள்  இந்த மாநிலங்கள் இருந்ததால் 
ஆயுதப்படையினரின் எதேச்சதிகாரப்போக்கு என்பது கட்டுக்கடங்காமல் போனது. தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதும், அப்பாவி பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும் போன்ற கொடிய செயல்களையே செய்துவந்தனர். இவர்களின் எந்த செயல்களுக்கும் நீதிமன்ற விசாரணை கூட கிடையாது.
             இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், சென்ற பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 2  -ஆம் தேதியன்று, மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலுக்கு அருகேயுள்ள மாலோம் என்ற புறநகர்ப் பகுதியில் அசாம் துப்பாக்கிப் படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள் நடத்திய கண்மூடித்தனமானத் துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்; 34 பேர் படுகாயமுற்றனர்.  சுட்டுக்கொல்லப்பட்ட அனைவரும் சாலையோரத்தில் பேருந்துக்காகக் காத்து நின்ற அப்பாவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
                 ஐரோம் ஷர்மிளா, மாலோம் படுகொலை நடந்த மூன்றாவது நாளே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை விலக்கக்கோரித் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.  அவரின் போராட்ட உறுதியையும், அவரது போராட்டத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் கண்டு  மணிப்பூர் மாநில அரசு மிரண்டு  போனது. எனவே  ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஒருசில நாட்களிலேயே அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவுசெய்து கைது செய்தது.  பிறகு அவரை மருத்துவமனையில் அடைத்து வைத்து அவருக்கு வலுக்கட்டாயமாகத் திரவ உணவை இன்று வரை  மூக்கின் வழியாகச் செலுத்தி வருகிறது. அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை அறை, கிளைச் சிறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
                அதேப்போல் கடந்த   2004 - ஆம் ஆண்டு,   மனோரமா  என்ற பெண் ஆயுதப்படையினரால்  பலமுறை பாலியல் வன்முறை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டாள். இதை கண்டித்து மெயிரா பைபிஸ் என்ற குழுவைச் சேர்ந்த பெண்கள் முழு நிர்வாணமாக இந்திய இராணுவ முகாம் முன் சென்று, ''இந்திய இராணுவமே எங்களையும் கற்பழி.. எங்களையும் கொலை செய்.. எங்கள் சதைகளையும் எடுத்துக் கொள்..'' என்று மனோரமா படுகொலையைக் கண்டித்து அவர்கள் முழங்கியது நாட்டையே  உறைய வைத்தது. ஆயுதப்படையின் இந்தச் செயலும் ஐரோம் ஷர்மிளாவின் கோபத்தை அதிகமாக்கியது.
          ஐரோம் ஷர்மிளா, தனது போராட்டத்தைத் தொடங்கிய காலத்திலிருந்து,  கடந்த பதினோரு ஆண்டுகளில் ஒருமுறைகூடத்  தனது சொந்த வீட்டிற்குச் செல்லவில்லை. அவர் கடந்த பத்தாண்டுகளாக எந்தவிதமான திட உணவையும் உட்கொள்ளாததால், அவரது முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு எந்த வேளையிலும் அவர் மரணத்தைச் சந்திக்கக் கூடும் என்ற அபாயகரமான கட்டத்தில் இருந்து வருகிறார். இருந்தாலும்  அவர் தனது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார்.
             ஐரோம் ஷர்மிளாவுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே நடைபெறும் இந்த யுத்தத்தின் மீது ஆட்சியாளர்களுக்கும் அக்கறையில்லை. சகல அதிகாரமும் பெற்றிருக்கும் சிறப்பு ராணுவப்படையை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்  என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அந்த இரும்பு பெண்மணியின் உயிரையும் காப்பாற்றவேண்டும். இதைத் தான் உலகம் எதிர்ப்பார்க்கிறது.  

எழுச்சிகொள் இந்தியா...எழுச்சிகொள்...! புரட்சி தானாய் எழும்...!

மாற்றத்திற்கான 
போராட்டம் தான் புரட்சி...!    

மூடிய சன்னலும்
நம்மிரு கண்களும்
திறந்திருந்தால் தான்
நம் அறிவுக்கு
வெளிச்சம் கிடைக்கும்...
எனவே
சன்னலையும்
கண்களையும்
திறந்து வை...
வெளியே நடப்பதைப்
பார்... உனக்கு 
தானாக கோபம் வரும்...      

                 இன்று காலை தான் தோழர். அ. குமரேசன் அவர்களின் கவிதையைப் பார்த்ததும் என் மனதில் உதித்தது இந்த  புதுக்கவிதை.
             அதுவும் இன்று நவம்பர் ஏழு - புரட்சி தினம்.. இந்த நாள் மனிதகுல விடுதலைக்காகவும்,  உரிமைகளுக்காகவும் போராடுபவர்கள் நினைத்துப் பார்க்கும் நாள்.  அவர்கள் மட்டுமல்ல, ஏகாதிபத்தியத்தின் - முதலாளித்துவத்தின் சுரண்டலினால் பாதித்த -  பலியான உலக மக்கள் அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டிய நாள். வழக்கம் போல் இன்று இந்த நாளை பார்க்கமுடியாது. இன்று இந்த நவம்பர் ஏழு எந்த சூழ்நிலையில் வந்திருக்கிறது.
              ஆறு மாதங்களுக்கு  முன்பு தான்  எகிப்து மற்றும்  லிபியா போன்ற நாடுகளில் அந்த நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் பொங்கி எழுந்தார்கள்... ஏன் அந்த கோபம்...?
          இதோ கடந்த ஒரு மாத காலமாகவே  அமெரிக்கா நாடு  முழுவதும், ஆஸ்திரேலியா மற்றும்  பல ஐரோப்பிய நாடுகளிலும் இன்று வரை  மக்களின்  எழுச்சி ஆங்காங்கே உயர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறதே... ஏன் இந்த கோபம்..?
             இந்தியாவைப் போலவே அங்கேயும்... அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு,  கடுமையான வேலையில்லா திண்டாட்டம்,   பெருகி வரும் வேலையிழப்பு, பெரிய நிறுவனங்களும், பெருமுதலாளிகளும் மக்களை ஏமாற்றிச் செய்யும் சுரண்டல்கள், எப்போதும் உயராமல் நிற்கும் சம்பளம், குறைந்து வரும் வாங்கும்  சக்தி.... இப்படி எல்லாவற்றாலும் பாதிக்கப்பட்ட - பலியான அந்த மக்கள் தான் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும் கொதித்து எழுந்து வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.             
             இது போன்ற சுரண்டல்களுக்கும், அநியாயங்களுக்கும் எதிராக 1917 - ஆம் ஆண்டே எழுந்த உரிமைக்கான எழுச்சிப் போராட்டம் தான் இந்த ''நவம்பர் - ஏழு''.  
                  உலகமெங்கும் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் தான், இந்தியாவிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தான்தோன்றித்தனமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், பெருமுதலாளிகளுக்கும், பெரிய நிறுவனங்களுக்கும் காட்டுகிற சலுகைகளும்,  மக்களுக்கு எதிராக செய்கிற தாக்குதல்களும் இந்திய மக்களை பெரிதும் வதைக்கிறது என்பதை மக்கள் உணர்ந்து தான் இருக்கிறார்கள்.
                இங்கேயும் இன்று ஆட்சியாளர்கள் பல்வேறு கோணங்களில் மக்களை வதைக்கிறார்கள்..
                # தறிகெட்டு உயர்ந்துகொண்டே போகும் விலைவாசி.. நாம் அன்றாடம் பயன்படுத்தும் மளிகை சாமான்கள், அரிசி, எண்ணெய், பருப்பு வகைகள், காய்கறிவகைகள் - இவைகளின் விலைகளை கேட்டாலே மயக்கம் வரும்.. மாமிசங்களை வாங்க முடியாத ஏழை - எளிய மக்கள் வாங்கி சாப்பிடும் முட்டையின் விலைக் கூட அவர்களுக்கு எட்டாத தூரத்தில் உயர்ந்துகொண்டே போகிறது.
                 # உழைப்பாளி மக்களின் - ஊழியர்களின் ஊதியம் உயராமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.  
                   #  பி. எப். போன்ற  மக்களின் சேமிப்பிற்கு வரி குறைக்கப்படுகிறது. அதே சமயத்தில் மக்கள் வாங்கும் வீட்டுக் கடன்களுக்கு வரி உயர்த்தப்படுகிறது.            
              # உயராத ஊதியம் - உயர்ந்து கொண்டே போகும் விலைவாசி அதனால் குறைந்துகொண்டே போகும் மக்களின் ''வாங்கும் சக்தி''.
               # அதனால் பெரும்பாலோர் வீடுகளில் ஏற்படும் உணவு பற்றாக்குறை. குழந்தைகளுக்கு பெண்களுக்கு சத்தான உணவு குறைவு.  நோய்கள் அதிகரிப்பு.                இவைகளெல்லாம்  அன்றாடம் நம் வீடுகளில் சாதாரணமாக நாம் பார்க்கும் விஷயங்களாகும்.
               #  நாட்டில் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்கள் பதினைந்து கோடி பேர். அதேபோல்  வேலையிழக்கும் இளைஞர்கள்  இன்னொரு பக்கம்.
                #  இது மட்டுமா... அரசே தான்தோன்றித்தனமாக செய்யும் பெட்ரோல் - டீசல் - சமையல் கேஸ் விலை உயர்வு.
               ஓ.. இந்தியனே...!  இவைகளெல்லாம் நீ அன்றாடம் சந்திக்கும்  - தீர்க்கப்படாமல் உயர்ந்துகொண்டே போகும் பிரச்சனைகள் என்பதை நீ உணர்கிறாயா..? இதைப் பார்த்து உனக்கு கோபம் வராதா..? 
                  நாம் அடிமைகளாய் இருந்த காலத்திலேயே  நம் முன்னோர்களுக்கே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மீது கோபம் வந்ததில்லை. முப்பது கோடி ஜெனங்கள் வாழ்ந்த இந்த நாட்டில் வெறும் இரண்டு லட்சம் பேர் தானே  இந்த தேசத்தின் விடுதலைக்காக போராடியவர்கள். மற்றவர்களெல்லாம் விடுதலைப் போராட்டத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு சொகுசாய் வாழ்ந்தவர்கள் தானே. அவர்கள் வாரிசுகள் தானே நாம். நாம் மட்டும் எப்படி இருப்போம். எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல் அப்படி தானே இருப்போம்.
               நமக்கு கோபம் என்பதே வராது. 
              தெருவில் போகும் நாயை கல்லால் அடித்தால் கூட அது திரும்பி குறைக்கும்... தன்னை அடித்தால் நாய்க்குக் கூட கோபம் வரும்.
                  பாதையில் ஓரமாய் சென்றுக்கொண்டிருக்கும் பாம்பை கம்பால் தட்டினால் அது திரும்ப சீரும்... பாம்புக்கும் கோபம் வரும்...
                  ஒரு கோலி சோடாவை எடுத்து அதன் தலையில் கட்டைவிரலை வைத்து தட்டிப் பாருங்கள். புஸ்ஸ் -ன்னு சத்தம் வரும். கோலி சோடாவுக்கு கூட தலையில் தட்டினால் கோபம் வரும்.
                  ஆனால் என்ன தட்டினாலும் கோபம் வராத ஒரே ஜென்மம் நாம்ப தான். என்ன தட்டினாலும் கோபமே வராது.
                 முன்பு... ஆட்சியாளர்களும் முதலாளிகளும் தலையில் அடித்தார்கள்... முதுகில் அடித்தார்கள்... இப்போதோ வயிற்றில் அடிக்கிறார்கள்...
              அப்போதும் நமக்கு கோபம் வரவில்லை என்பது தான் இந்த நாட்டின் வேதனையான விஷயமாகும்.
                எப்போது கோபம் வரும்.. மீண்டும் மேலே உள்ள அந்தக் கவிதையை படியுங்கள்... ரௌத்திரம் பழகுங்கள்.. இங்கேயும் எரிமலைகள் இருக்கத்தான் செய்கின்றன.. அவைகளை விழித்தெழச் செய்யுங்கள்... எழுச்சியுறச் செய்யுங்கள்... மாற்றத்திற்கான போராட்டம் தான் புரட்சி...
              விழித்தெழு... இந்தியா... விழித்தெழு..!!!.
                            எழுச்சிகொள்... இந்தியா...எழுச்சிகொள்...!!!
                                           புரட்சி செய்... இந்தியா... புரட்சி செய்....