புதன், 31 ஆகஸ்ட், 2011

இந்திய முஸ்லிம்களின் முதலாவது கல்வி நிறுவனம்..!

      ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், அண்ணாமலைப்பல்கலைக் கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் என தேசத்தலைவர் பெயராலும் நிறுவனர்கள் பெயராலும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால் நிறுவனரின் பெயரை அறிய வாய்ப்பில்லாமல், அமைந்த இடத்தின் பெயரைக் கொண்டு விளங்குவது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம். அலிகர் என்பது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரில் அமைக்கப்பட்டுள்ளது முஸ்லிம் பல்கலைக்கழகம் என்றால் அந்தச் சமுதாயத்தினருக்கென்றே அது நிறுவப்பட்டுள்ளது என்ற கருத்து உருவாகலாம். ஆனால் இந்தப் பல்கலைக்கழகம் அனைத்து சமயத்தினருக்கும் இடம் கொடுத்தது; கொடுக்கிறது. இதன் முதலாவது மாணவனும் ஒரு இந்து; பட்டதாரியும் இந்து என்பது பலரும் அறியாத தகவலாகும். பின்னர் ஏன் இது முஸ்லிம் பல்கலைக்கழகம் எனப் பெயர் பெற்றது? அது ஒரு சுவாரசியமான வரலாறு.
          இந்திய நாட்டை பிரிட்டிஷார் ஆட்சி செய்தபோது ஆங்கில மொழியைக் கற்கலாமா? அது இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையல்லவா? என்ற ஐயம் எண்ணற்ற முஸ்லிம்களின் உள்ளத்தில் இருந்தது. மேற்கத்திய கல்வித்திணிப்பு தங்ளைக் கிருத்தவர்களாக மாற்றவே என இஸ்லாமியர்கள் பயந்தனர்.
         இதே போன்ற அச்சம் இந்து சமயத்தவருக்கும் இருந்தது. “எவர் தன் குழந்தைகளை மிஷனரி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்களோ அவர்கள் சாதியைவிட்டு ஒதுக்கப்படுவார்கள்” என்ற அறிவிப்பு அக்கால நாளிதழ்களில் வெளியிடப் பட்டன.
       இத்தகைய நிலைமையை கவனத்தில் கொண்டு பரிசீலித்தால் தான் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் தேவையும் தன்மையும் விளங்கும். முஸ்லிம் சமுதாயத்தினரின் அச்சமும் ஐயமும் கலந்த கேள்விகளுக்கு சர்.சையது அகமது கான் என்பவர் அளித்த பதில் வித்தியாசமானது.
       “இஸ்லாமிய மதச் சட்டங்கள் பிறமொழிகளுக்கு எதிரியல்ல. நாம் எந்த மொழியையும் பயிலலாம். இஸ்லாத்தைச் சாராத பாரசீக மொழியை நாம் பலகாலமாக ஏற்கெனவே பயின்றுள்ளோம். எனவே ஆங்கில மொழி பயிலுதல் இஸ்லாத்தால் அனுமதிக்கப்பட்டதே” என்றார்.
        அதேவேளையில் ஆங்கில மொழிக் கல்விக்கான வரம்பு என்ன என்பதிலும் அவர் தெளிவாக இருந்தார். “இந்தியர்களின் வயிற்றுப் பிழைப்புக்கான கல்வியை மட்டுமே ஆங்கில அரசு கொடுத்து வருகிறது. இத்தகைய கல்வித்திட்டம், இந்தி யர்களை, நம்பிக்கையுள்ள அரசு வேலைக்காரர்களாக மட்டும் மாற்றுமே தவிர, அவர்களை அறிவாளிகளாக வளர்க்காது. உண்மையான கல்வியின் பயனானது மனிதனின் அறிவுக் கண்ணைத் திறந்து அறி வையும் ஒழுக்கத்தையும் இணைத்து ஒழுக்கமான அறிவு ஜீவியாக மாற்றியமைப்பதாகும்” என்று மக்களி டம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் சையது அகமதுகான்.
       ஆங்கில வழி கல்வி குறித்து இவ்வளவு தெளிவான பார்வை கொண்டிருந்த சையது அகமதுகான் தான் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் நிறுவனர். 1817 ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று பிறந்த இவர் தன்னிடம் இருந்த பெருஞ்செல்வத்தால் இதை உருவாக்கினாரில்லை.
           1857 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய்க் கிளர்ச்சியின்போது அவரது வாழ்க்கை நிலையும் மனநிலையும் எப்படி இருந்தது என்பதை அவரது வார்த்தைகளிலேயே காணலாம்.
          1857 - இல் ஏற்பட்ட கிளர்ச்சிக்குப் பின் சூரையாடப்பட்ட என் வீடோ சொத்தோ என்னுள் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் என்னை நொடிய வைத்ததெல்லாம் பொது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட, கொடுமையும் அழிவும்தான். இனியும் நான் இந்தியாவில் இருக்க விரும்பவில்லை என்றேன். அது தான் உண்மையும் கூட...!

          இந்த மனச்சோர்வு என்னை முதியவனாக்கித் தலை முடியை வெளுக்கச் செய்தது. முராதாபாத் அடைந்த போது, எங்கும் அழிவின் சின்னங்களே காணப்பட்டன. பசியும் பட்டினியுமாய் அலையும் மக்கள் மட்டுமே தென்பட்டனர். எல்லோர் முகத்திலும் கவலையின் கோடுகள்;
            வர்ணிக்க இயலாத இந்தக் கோரக் காட்சிகள் என்னை உலுக்கின. ‘எங்கே போகப் போகிறாய்’ ‘எங்கு சென்று ஒளிந்து கொள்ளப் போகிறாய்’ என மனம் என் உயிரைப் பிழிந்தது. ‘இல்லை நான் போக மாட்டேன்’ எங்கும் போகமாட்டேன். வாழ்விழந்த என் மக்களின் மனதைச் சிறுகசிறுகத் தேற்றப் போகிறேன்’ என என் மனசாட்சி பலம் கொண்ட மட்டும் கதறியது. இதனால் இந்தியாவைவிட்டு வேற்று நாட்டில் குடியேறும் எண்ணத்தை நான் கைவிட்டேன். ‘இந்த மண்ணிலே தான் ஆயுள் முழுவதும் வாழ்ந்து மீளா நித்திரைக்குச் செல்வேன்’ என்று மனதின் மூலையில் ஒர் அசுர பலத்துடன் நம்பிக்கை குரல் ஒலித்தது. நான் நிமிர்ந்து நின்றேன்.
            இப்படி நிமிர்ந்து நின்றவர்தான் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கென ஒருபல்கலைக்கழகத்தைத் தோற்றுவிக்க விரும்பினார். இதற்காக ஊரெங்கும் அலைந்து திரிந்து நிதி திரட்டினார். “எனது நண்பர்களும் நான் அவர்களைச் சந்திப்பதைத் தவிர்க்கின்றனர். காரணம், அவர்களை நிதி உதவச்சொல்லி தொடர்ந்து கேட்பதால் என் முகமே ஒரு அமைதியான பிச்சைப் பாத்திரமாகிவிட்டது” எனும் அளவுக்கு அவரது நிதி திரட் டல் இருந்தது.
        பிச்சைப்புகினும் கற்கை நன்றே என்றார் ஒளவையார். பிச்சைப் புகினும் கற்பித்தல் நன்றே என்பது சையது அகமது கானின் கொள் கையாக இருந்தது.
       இப்படி திரட்டப்பட்ட நிதியில் இருந்துதான் மொகமதன் ஆங்கிலோ ஒரியண்டல் (எம் ஒ ஏ) கல் லூரி 1875 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதிஅலிகரில் நிறுவப் பட்டது. இந்திய முஸ்லிம்களின் முதல் நவீனக் கல்வி நிறுவனம் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும். இந்தக் கல்லூரி தான் 1920ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அலிகர் முஸ்லிம் பல் கலைக்கழகமாக மாறியது.
              ஆங்கிலம் வழி கல்வி கற்கலாம் என்று இதன் நிறுவனர் சையத் அகமது கான் கூறினாலும் தாய் மொழிக் கல்வியே சரியானது என்பதில் உறுதியாக இருந்தார். இதற்காக அறிவியல் நூல்களை உருது மொழியில் மொழியாக்கம் செய்ய ஊக்கமளித்தார்.
       முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கென்று சில விதிமுறைகளையும் ஏற்படுத்தினார். சன்னி - ஷியா என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஒரே இடத்தில் தொழுகை நடத்த வேண்டும்; சமய வேறுபாடின்றி அனைத்து மாணவர்களும் ஒரே விடுதியில்தான் தங்கியுள்ளனர். எல்லாத்துறையில் பயிலும் மாணவர்களுக்கும் உலக நாகரிக வரலாறு கட்டாயப்பாடமாக இருக்க வேண்டும் என்பது போன்ற நடை முறைகள் இப்போதும் பின்பற்றப்படுகின்றன.
       இந்தியாவிலேயே இருபத்து நான்கு மணிநேரமும் செயல்படும் ஒரே நூலகமாக விளங்குகிறது இங் குள்ள மௌலானா ஆசாத் நூலகம் என்பது வியப்புக்குரிய தகவல் அல்லவா?
     இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தனியாக இயங்குவது சிறப்புக்குரியது.
      இஸ்லாமிய சமூகத்து இளைய தலைமுறையை நவீன காலத்துக் குத் தயார்படுத்த பல்கலைக் கழ கக்கனவுடன் கல்லூரியைத் தொடங்கிய சையது அகமது கான் 1898 ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று மறைந்தார்.
          அவர் செய்து முடிக்க எண்ணியப் பணிகள் ஏராளம், என்றாலும் எதார்த்தம் என்ன என்பதை அவர் உணர்ந்தே இருந்தார். “மறையும் சூரியனின் கதிர்களை இழுத்துப் பிடித்துப் பகலை நீட்டிக்கவும் காலையில் உதிக்கும் சூரியனின் கதிர்களைக் கட்டிப்போட்டு இரவை நீட்டிக்கவும் இயலாதவனாய் நான் உள்ளேன்” என்று வாழ்நாளின் போதாமையை அவர் நாசூக்காகத் தெரிவித்தார். காலம் அவரைத் தன்வயப்படுத்திக் கொண்டது.
      ஆனாலும் அவரது முயற்சியால் உருவாக்கப்பட்ட கல்லூரி என்பது பல்கலைக்கழகமாகி தற்போது 30 ஆயிரம் மாணவர்கள் 1700 ஆசிரியர்களுடன் (இவர்களில் 30 சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்) செயல் படுவது முயற்சிக்குக்கிடைத்த வெற்றியின் அடையாளம் எனலாம்.
     இது போன்று சர் சையத் அகமது கானின் வாழ்க்கை லட்சியங்கள் உள்ளிட்ட பல தகவல்களை டாக்டர். எஸ். சாந்தினி பீ எழுதி விடியல் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சர் சையது அகமது கான் வாழ்க்கை வரலாறு நூல் பதிவு செய்துள்ளது.

நன்றி : தீக்கதிர்

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

உயிர் நமக்கு துச்சமில்லை தான் - ஆனால் உயிரை மாய்த்துக்கொள்வது தவறான செயல்..!

நேற்று முன்தினம் இருபது வயதே ஆன இளம்பெண் செங்கொடி ராஜீவ் கொலை குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து, தன்னைத் தானே தீயிட்டு கொளுத்திக் கொண்டு தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்ச்சி என்பது தமிழக மக்களின் நெஞ்சை உலுக்கியது.  இறந்து போன அந்த பெண் செங்கொடி, சமூகக் கொடுமைகளை வீதி நாடகங்கள் மூலம் இடித்துரைக்கும்  கலைக்குழுவைச் சார்ந்தவர். தப்பாட்டக் கலைஞர். நிச்சயமாக அவர் நெஞ்சுரமிக்க - வீரமிக்க பெண்ணாகத் தான் இருந்திருப்பார். அப்படிப் பட்ட பெண்ணே இப்படிப்பட்ட முடிவுக்கு வந்ததென்பது மிகவும் வருந்தத்தக்கது. இனஉணர்வு என்பதை அவருக்கு விஷமாக ஊட்டப்பட்டிருக்கிறது.  இன உணர்வுகளை - இன வெறியை  தூண்டிவிடும்...  தங்களை தமிழினத்தின் தலைவர்களாக காட்டிக்கொள்ளும் சீமான், வைகோ, திருமாவளவன், நெடுமாறன்  போன்றவர்கள் தான் இதற்கு காரணமானவர்கள். இவர்களே இந்த பெண்ணின் மரணத்திற்கு பொறுப்பானவர்கள்.  பேச்சுரிமை என்ற பெயரில் இவர்கள் ஆற்றும் உரைகளேல்லாம் இனவெறியை தூண்டும் அளவிற்கு இருக்கிறது.  இவர்களுக்கு இது தான் தொழில். இவர்களின் அரசியல் இலாபத்திற்காக, இது போன்று இனவெறியைத் தூண்டி,  இளைஞர்களை பலி கொடுத்து அதில் குளிர் காய்பவர்கள் தான் இவர்கள். இதே மூன்று கொலையாளிகளுக்காக இவர்கள் தீக்குளிப்பார்களா..?
                       இந்த  தேசத்தின்  விடுதலைக்காக பிரிட்டிஷ் படையோடு போர் செய்து போர்முனையில் உயிர்த் தியாகம் செய்தார்களே.. ஜான்சி ராணி லக்குமி பாய், திப்பு சுல்தான், வீரபாண்டிய கட்டபொம்மன் - இவர்களைப் பற்றி சீமான் - வைகோ போன்றவர்களெல்லாம் இன்றைய மாணவர்களுக்கு - இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுத்திருப்பார்களா...? தேசத்தின் விடுதலைக்காக ஏப்ரல் 13 , 1919 அன்று ஜாலியன்வாலாபாக்கில் உயிர்த் தியாகம் செய்தார்களே பெண்கள் - குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பேர் - அவர்களைப் பற்றி சொல்லிக்கொடுத்திருப்பர்களா இவர்கள்..? இந்த தேசத்தின் விடுதலைக்காக தூக்குமேடையை முத்தமிட்டார்களே - மாவீரர்கள் பகத் சிங், ராஜ குரு , சுபதேவ், உத்தம்சிங் போன்ற இளைஞர்களைப் பற்றி இந்த
தமிழினத்தலைவர்கள் - இன மானத்தலைவர்கள் இன்றைய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் சொல்லிக்கொடுத்திருப்பார்களா..? அல்லது இன்றைய இளைஞர்கள் இவர்களைப் பற்றி நினைத்து தான் பார்த்ததுண்டா..?
            இப்படிப்பட்ட  சரியான வழிகாட்டுதல் இல்லாமல், இது போன்ற பொறுப்பில்லாத தலைவர்களின் பொறுப்பில்லாத உணர்ச்சிமிக்க வசனங்களை கேட்டு, உணர்ச்சிவசப்பட்டு இது போன்று   தங்கள் உயிரையே மாய்த்துக்கொள்ளும் முடிவை எடுப்பது என்பது அறிவுடமையாகாது. ஒரு குற்றவாளிக்காக தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வது பெருமையளிக்கும் செயலல்ல.. இது வீரமரணமும் அல்ல என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ளவேண்டும். எங்கள் அருமை இளைஞர்களே....   கண்மூடித்தனமாக அற்ப உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்காதீர்கள். பகுத்தறிவோடு கலந்த நல்ல சிந்தனைகளே நமக்கு நல்ல வழிகாட்டும். இன்றைக்கு இளைஞர்களுக்கு நல்வழி காட்டக்கூடிய நல்ல அமைப்பு  தேவைப்படுகிறது. அதைத் தேடுங்கள்... அதில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.. நீங்களும் ஜான்சி ராணி அளவிற்கு, கேப்டன் லக்ஷ்மி அளவிற்கு, தோழர் லீலாவதி அளவிற்கு நாளைய சரித்திரம் புகழும்படி வாழலாம்..

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

அன்னா அசாரேவின் நாடகம் முடிவுக்கு வந்தது - இறுதியில் அசாரேவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது...!

                    தமிழ்நாட்டில் ஆடி மாதம் அம்மன் கோயில் திருவிழா மாதிரி கடந்த 13 நாட்களாக புதுடெல்லி ராம்லீலா மைதானம் விழாகோலம் கொண்டிருந்தது என்று தான் சொல்லவேண்டும். நாட்டில் பசியால் வாடிக்கொண்டிருக்கும் பல சாப்பிடுவதற்கு எவ்வளவு கோடி வேண்டுமென்றாலும் செலவு பண்ணலாம். ஆனால், ராம்லீலா மைதானத்தில் ஒருவர் சாப்பிடாமல் இருக்க கடந்த பதிமூன்று நாட்களாக பலகோடி ரூபாய்களை செலவு செய்திருக்கிறார்கள் என்பது தான் ஒரு கொடுமையான தகவலாகும். மேடையில் இருக்கும் அன்னா மட்டும் ஒன்றும் சாப்பிடாமல் உட்கார்ந்து கொண்டிருப்பார். அவரை சுற்றி இருப்பவர்களும், அவரை வேடிக்கை பார்க்க குழந்தைகளுடன் வந்தவர்களும் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். அன்னாவுக்கு மட்டும் அவ்வப்போது எவர்சில்வர் டம்ளரில் தண்ணீர் கொடுப்பார்கள்.
                        சிறு சிறு வியாபாரிகள் அன்னாவுக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நம்ம ஊரு கோயில் திருவிழா போல் பல சாலையோரக் கடைகளும், பட்டாணி, மணிலா, பாணி பூரி, ஐஸ் கிரீம், குல்பி, பலூன், ஹசாரே தொப்பி, வெள்ளரி பிஞ்சு, குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள்  என சிறு சிறு கடைகளும்,  தள்ளுவண்டிக்கடைகளும், சிறிய உணவகங்களும் என கடந்த பதிமூன்று நாட்களாக ராம்லீலா மைதானமே கலை கட்டியது. இப்படி சாப்பிட்டு போடப்பட்ட குப்பைகள் எல்லாம் அந்த மைதானத்தில் மலை போல் குவிந்து கிடைக்கின்றதாம்.
          இன்னும்  அன்னா உண்ணாவிரதத்தை தொலைக்காட்சியில் தொடர்ந்து போட்டுக்காட்டி பலகோடி  ரூபாய்களை சுருட்டிய தொலைக்காட்சிகளும் உண்டு.   அதுமட்டுமல்ல, அன்னாவின் உண்ணாவிரதம்  இன்னும் சில நாட்கள் தொடர்ந்திருந்தால், ராட்டிணம் மற்றும் சிறுவர் ரயில் என அவைகளும் வந்திறங்கியிருக்கும்.
                     இப்படியான பதிமூன்று நாள் அன்னாவின் உண்ணாவிரத நாடகம் இன்று காலை முடிவுக்கு வந்தது. ஆனால் அதை முடிவுக்குக் கொண்டுவர அன்னாவும், அன்னாவின் குழுவினரும் படாத பாடுபட்டுவிட்டனர் என்று தான்
சொல்லவேண்டும். 
               நடப்பு பாராளுமன்றக் கூட்டத்தொடரிலேயே அன்னா அசாரே ''முன்மொழிந்த''  ''ஜன் லோக்பால்'' மசோதாவை நிறைவேற்றிட வேண்டும் என்கிற கோரிக்கையுடன் தான் அன்னாவின் உண்ணாவிரத நாடகம் அரங்கேறியது. ஆனால்  கழுதை தேய்ந்து  கட்டெறும்பு ஆனது போல் உப்புச்சப்பில்லாத மூன்று நிபந்தனைகளையாவது தீர்மானமாக நிறைவேற்றினால் போதும்  என்கிற  அளவுக்கு அன்னா இறங்கி வந்தார் என்பது தான் உண்மை. அந்த தீர்மானம் கூட பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு  இன்னும்  நாள் பிடிக்கும் என்கிற சூழ்நிலையிலும், உண்ணாவிரதமும் ஏழு  நாட்களை தாண்டி  கடந்துவிட்ட சூழ்நிலையிலும் உண்ணாவிரதத்தை எப்படி முடிவுக்குக்கொண்டுவருவது என்ற குழப்பத்திற்கு அன்னாவும் அவரது குழுவினரும் வந்துவிட்டனர். அதனால் அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்தனர். இறுதியில் அன்னாவுக்கு நெருக்கமாய் இருக்கக்கூடிய ஆர். எஸ். எஸ் தூண்டுதலின் பேரில் பாரதீய ஜனதா கட்சி உதவிக்கரம் நீட்டியது. பா. ஜ. கட்சி தான்  தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் அழுத்தத்தைக் கொடுத்தது.
                                       அதன் காரணமாகத் தான், நேற்று சனிக்கிழமை ஒரு நாள்  சிறப்புக் கூட்டத்தை நடத்தி பாராளுமன்றத்தில் அன்னா சொன்ன நிபந்தனைகளை தீர்மானமாய் நிறைவேற்றப்பட்டது. அன்னா எதிர்பார்த்து - கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் தொடங்கியது போல் நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே ''ஜன் லோக்பால்'' மசோதா நிறைவேற்றப் பாடாமல் அன்னா அசாரே ஏமாற்றமடைந்தார் என்பது  யாராலும் மறுக்கமுடியாத உண்மை. தான் கேட்டுக்கொண்டது போல் ''ஜன் லோக்பால்'' மசோதா நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் தீர்மானத்தை காரணம் காட்டி அன்னா அசாரே ஒருவழியாய்  உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். வேஷத்தை கலைத்துக் கொண்டார்.
                       இதன் மூலம், பாராளுமன்றமும், அரசியலமைப்புச் சட்டமும் தான் நம் தேசத்தில் உயர்ந்தது என்பது நிருபணமாகியுள்ளது என்பது நிம்மதியளிக்கிறது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி எங்கே..? திரை மறைவில் நடக்கும் மர்மம் என்ன..?

         கடந்த ஒரு மாத காலமாக மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் தலைவர் திருமதி.சோனியா காந்தி அவர்கள் பற்றிய செய்தி என்பது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. அவர் வகிக்கும் பதவி என்பது பிரதமர் பதவிக்கு நிகரானது. மத்தியில் ஆளும் கூட்டணியின் தலைவர். பொதுவாக, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள் என்றால் - அதுவும் அறுவை  சிகிச்சை செய்யப்பட்டால் அவரின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கடந்த கால  மரபு.ஆனால் இதுவரை அவர் சிகிச்சை பற்றியோ உடல்நிலை பற்றியோ எந்த வித அறிக்கையையும் அரசு பாராளுமன்றத்திற்கு அளிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே கூட, பாராளுமன்றத்திலோ அல்லது வெளியிலோ சோனியா காந்தியைப் பற்றி பேசவில்லை. அதில் இருக்கும் மர்மம் தான் என்ன என்றும் நமக்கு புரியவில்லை. காங்கிரஸ் கட்சியும் கூட சோனியாவைப் பற்றி பேசாமல் வாய் மூடி இருக்கிறார்கள்  என்பதை பார்க்கும் பொது தான்  நமக்கு சந்தேகம் எழுகிறது.
                     அப்படி என்ன தான் அவரது அறுவை சிகிச்சையில் இரகசியம் அல்லது மர்மம் இருக்கிறது. பொதுவாகவே ஒருவரது நோயைப் வெளியே சொல்வது என்பது மருத்துவ தர்மம் ஆகாது என்றாலும், அதிலும்  ஒரு பெண்மணியின் உடல்நிலையை பற்றி  வெளியிடுவது என்பது  நாகரீகமாக இருக்காது என்றாலும் தன கட்சித் தலைவரின் உடல்நிலை குறித்து  அறிந்துகொள்ளும் அக்கறை என்பது அவர் கட்சியினற்கு இருக்க வேண்டுமே.
அது இல்லாதிருப்பது ஏன் என்பதில் தான் நமக்கு சந்தேகம் வருகிறது.                           மற்றொரு சந்தேகமும் இயற்கையாகவே எழுகிறது.. நம் நாட்டிலேயே சிறந்த மருத்துவம் மருத்துவமனைகளும் கிடைக்கும்  போது  சோனியா  காந்தி மட்டும் எதற்காக வெளிநாடு செல்லவேண்டும். கடந்த காலங்களில் இந்திய பிரதமர்களே - வாஜ்பேயி மற்றும் மன்மோகன் சிங் போன்றவர்களே உள்நாட்டில் தானே அறுவை சிகிச்சை செய்து கொண்டார்கள். வாஜ்பேயி மாற்று மூட்டு அறுவை சிகிச்சையை மும்பையில் தான் செய்துகொண்டார். ஐ. எம்.எப் -பென்ஷனரும் அமெரிக்க அடிமையுமான மன்மோகன் சிங் கூட தன் இதய அறுவை  சிகிச்சையை  அமெரிக்காவில் செய்துகொள்ளாமல் புதுடெல்லியில் தானே செய்துகொண்டார்.
              அப்படியே வெளிநாட்டில் தான் சிகிச்சை செய்து கொள்வேன் என்ற முடிவெடுத்து சென்றாலும், விமானத்தில் செல்லும் போது அவசர உதவிக்கும்,  அதேப்போல் வெளிநாட்டு மருத்துவ சிகிச்சையில் உதவி செய்யவும்,  வெளிநாட்டு மருத்துவர்களுக்கு இந்தியாவில் தாங்கள்  செய்த மருத்துவத்தைப் பற்றி விளக்கமளிக்கவும்,  தன் குடும்ப மருத்துவரையோ அல்லது வேறு உள்நாட்டு மருத்துவரையோ சோனியா காந்தி அழைத்துச் செல்லாமல், மகன், மகள் மற்றும் மருமகன் - இவர்களை மட்டுமே அழைத்துச் சென்றது ஏன்..? என்கிற சந்தேகமும் நமக்கு எழுகிறது.

அமெரிக்காவிலிருந்து வரும் தகவல்கள்..

                    அமெரிக்க பத்திரிக்கையாளர்களும், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும் அமெரிக்காவில் சோனியா காந்தி எந்த  மருத்துவமனையில் சிகிச்சை  பெறுகிறார் என்பதை நேரில் கண்டறிய, சில முக்கிய மருத்துவமனைகளில் அலசி தேடியிருக்கிறார்கள். எங்குமே சோனியா காந்தி தங்கி சிகிச்சை பெறுவதற்கான அறிகுறியே இல்லை என்று தான் அவர்களும் சொல்கிறார்கள். பிரதமருக்கு இணையானவர் சிகிச்சை என்பதால், அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரகம்  பரபரப்பாக இருக்கவேண்டும். அவர்களும் மருத்துவமனையிலிருந்து மருத்துவ அறிக்கையை பெற்று வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அங்கிருக்கும் இந்திய தூதரகமும் அமைதியாக தானே இருக்கிறது.
                இப்படியாக சோனியா காந்தி  வெளிநாட்டுப் பயணம்  பற்றிய பல சந்தேகக் கேள்விகள் எழுகின்றன.
                இந்த சூழ்நிலையில் தான் சுப்பிரமணியம் சாமி சொல்வது சரியாக இருக்குமோ என்கிற சந்தேகமும் கூடவே எழுகிறது.
                வெளிநாட்டு வங்கிகளில் இந்திய மோசடிக் கூட்டத்தினர் போட்டிருக்கும் கருப்புப்பணம் பற்றிய விபரங்கள் வெளிவரத் தொடங்கிய சூழ்நிலையில் தான் சோனியா காந்தியின் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்கிற சுப்பிரமணியம் சாமி தருகிற தகவல்களையும் நாம் ஒதுக்கிவிடுவதற்கில்லை.
               அன்னா அசாரேவின் பரப்பான உண்ணாவிரத நாடகத்தில் பாராளுமன்ற நிகழ்வுகளும், சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணமும், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பள்ளி-கல்லூரிக் கட்டணக் கொள்ளை போன்ற மக்களின் அன்றாடப் பிரச்சனைகளும் ஓரங்கட்டபட்டுவிட்டன என்பதை இந்திய மக்கள் அனைவரும் கவனிக்க வேண்டும்.

புதன், 24 ஆகஸ்ட், 2011

அன்னா அசாரே உண்ணாவிரதமும், இடதுசாரிகளின் போராட்டமும்...

2 ஜி - ஸ்பெக்ட்ரம் - 1,76,000 கோடி மெகா ஊழல் , காமன்வெல்த் விளையாட்டு ஊழல், அ. ராசா, கனிமொழி, ராசாத்தி அம்மாள், தயாளு அம்மாள், டாடா, நீரா ராடியா, சுரேஷ் கல்மாடி, ஷீலா தீட்சித் - இவர்களையெல்லாம் உங்களுக்கு நினைவிருக்கிறதா..? அநேகமாக இவர்களை நீங்கள் முற்றிலும் மறந்து போய் இருப்பீர்கள்.  இதற்காகத் தானே கார்பொரேட் முதலாளிகளும், என். ஜி. ஓ -க்களும் சேர்ந்து ஒரு அன்னா அசாரேவை உருவாக்கி உட்கார வைத்திருக்கிரார்கள். இது ஒருவகை மூளைச் சலவை என்பதை மறந்துவிடாதீர்கள். அன்னா அசாரேவின் உண்ணாவிரதம் என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தி,  உங்கள் மூளையில்  ஆழமாக பதிவாகியிருந்த 2-ஜி, காமன்வெல்த் விளையாட்டு போன்ற மெகா ஊழல்களின் பதிவுகளை உங்களுக்குத் தெரியாமலேயே - அறுவை சிகிச்சை இல்லாமலேயே உங்கள் மூளையிலிருந்து அப்புறப்படுத்திவிட்டார்கள் என்பது தான் உண்மை. இப்போது அன்னா அசாரே மட்டும் தான் நம் நினைவுகளை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்.  அதுமட்டுமல்லாமல், இயற்கையிலேயே இந்தியர்களுக்கு மறதி நோய்  என்பது உண்டு.  ஆகவே நடந்த மெகா ஊழல்களை இப்போது நாம்    மறந்து விட்டோம்,
             இதற்காகத் தான் ஆட்சியாளர்களும், பா.ஜ.க.-வும், கார்பொரேட் முதலாளிகளும், என். ஜி. ஒ.-க்களும் அன்னா அசாரேயை உண்ணாமல் உட்காரவைத்திருக்கிறார்கள். ஒருவன் சாப்பிடுவதற்கு - அவன் பசியை ஆற்றுவதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்யலாம். அனால், ஒருத்தர் சாப்பிடாமல் இருப்பதற்கு எவ்வளவு  கோடியை செலவு செய்கிறார்கள் பாருங்கள். அசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு என்ஜிஓ-க்களும், கார்பொரேட் முதலாளிகளும் சேர்ந்து கோடிக்கணக்கில் பணத்தை இரைக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது இவர்கள் எப்படி ஊழலை ஒழிக்கப் போகிறார்கள் என்கிற கேள்வி தான் எழுகிறது. 
                 சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று டில்லி நகரே குலுங்கியது. ''இந்தியா கேட்'' முதல் அசாரே உண்ணாவிரதம் இருக்கும் ராம் லீலா மைதானம் வரை  மக்கள் வெள்ளமென திரண்டு சென்றுகொண்டிருந்தனர். இவ்வளவு கூட்டமா..? 
அத்தனைக் கூட்டமும் ஊழலை எதிர்த்து எழுந்தக் கூட்டமா..? அல்லது உண்ணாவிரதமிருக்கும் அன்னாவை பார்க்கக் கூடியக் கூட்டமா..? ஊழலுக்கு எதிராகத் தான் கூடினார்கள் என்றால் இதே அன்னா  அசாரே ஊழலை   எதிர்த்து
மறியல் போராட்டம் செய்தாரென்றால் இப்படி கூடுவார்களா..? அப்படியென்றால் இந்தக் கூட்டத்தை ஈர்த்தது எது..? அன்னா அசாரேவா..? அல்லது அவரது உண்ணாவிரதமா..?

ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ளவேண்டும்..!             


                        லோக்பால் மசோதா என்பது அன்னா அசாரே போராட்டத்தினால் உருவானதல்ல. நாற்பத்து மூன்று ஆண்டுகளாகவே கடந்த ஆட்சியாளர்களால், ஒருமித்தக் கருத்து ஏற்படவில்லை என்று காரணம் கூறி  கிடப்பில் போடப்பட்ட மசோதா என்பது நம் நாட்டு மக்களுக்கு - குறிப்பாக இளையத்தலைமுறையினற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த நாற்பத்துமூன்று ஆண்டுகளாகவே இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமென்று இடதுசாரிகள் பாராளுமன்றத்திலும், வெளியிலும் போராடிவந்திருக்கிறார்கள். 1948 - ஆம் ஆண்டிலிருந்தே ஆட்சியாளர்கள் செய்த ஊழல்களை வரிசையாக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த ஊழல்களை எதிர்த்த இடதுசாரிகளின் போராட்டங்களில் ஏன் இந்த மக்கள் கலந்துகொள்ளவில்லை. ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த தேசத்தில் இவர்களுக்கு மட்டுமே அருகதை இருக்கிறது.                                      ஏனென்றால், பல ஆண்டுகளாக இடதுசாரிகள் ஆட்சியிலிருந்த  கேரளா, மேற்குவங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் இடதுசாரி முதலமைச்சர்கள் மீதோ அல்லது அமைச்சர்கள் மீதோ அல்லது எம்.எல்.ஏ-க்கள் மீதோ அல்லது எம். பி -க்கள் மீதோ இதுவரை ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதா..? இலஞ்சம் வாங்கியதாகவோ அல்லது சொத்துச் சேர்த்ததாகவோ குற்றம் சாட்டமுடியுமா..? இப்படிப்பட்டவர்கள் தான் ஊழலை தடுக்க முடியும். ஊழலை ஒழிக்க முடியும். இவர்கள் மட்டுமே ஊழலை எதிர்த்தப் போராட்டத்தை நடத்த அருகதையுள்ளவர்கள்.

அன்னா அசாரே கேட்பது என்ன..?

                                   அன்னா மத்திய அரசை  ரொம்பத் தெளிவாகத் தான் கேட்கிறார். ஊழலை ஒழிப்பதற்கு ஜன் லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றவேண்டும். ஆனால் அதை நான் சொல்வது போல் இருக்கவேண்டும் என்று கேட்கிறார். ஒரு சட்டம் இயற்றுவது என்பது மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய பாராளுமன்றத்தின் பணியாகும். பாராளுமன்றம் தான் நாட்டின் மிக உயர்ந்த ஜனநாயக அமைப்பாகும். அந்த ஜனநாயக அமைப்பில் இடம் பெற்றிருக்கக் கூடிய அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் சேர்ந்து தான் மசோதாவை உருவாக்கவேண்டுமே ஒழிய, என். ஜி. ஓ -க்களின் பிரதிநிதியான அன்னா அசாரே தான் சொல்வதை தான் அரசு ஏற்றுக்கொள்ள  வேண்டும் என்று உண்ணாவிரதம் இருப்பது என்பது மக்களைத் திசைத் திருப்பும் செயலாகும்.
                         லோக்பால் மசோதாவில் அவரது தேவை என்னவென்றால், அந்த மசோதாவில் என். ஜி. ஓ-க்களையும் கார்பொரேட் கம்பெனிகளையும் சேர்க்கக்கூடாது என்பது தான் என்.ஜி.ஓ-க்கள் மற்றும் கார்பொரேட் கம்பெனிகளால் நடத்தப்படும் அன்னாவின் உண்ணாவிரதத்தின் பின்னணியாகும் என்பதை மக்கள்  புரிந்துகொள்ளவேண்டும்.

ஊழலை தடுப்பது எப்படி..?

                 இந்த தேசத்திலிருந்து  ஊழலை விரட்டியடிப்பதற்கு இப்போது நம்          
நாட்டில் இல்லாத - அரிதான விஷயங்கள் மூன்றுத் தேவைப்படுகிறது. அவைகள்  (1)  தனிமனித ஒழுக்கம்
                       (2)  பொது வாழ்க்கையில் தூய்மை 
                       (3)  அரசியலில் நேர்மை  
  இவை மூன்றும் இருந்து விட்டால் நம் நாட்டில் ஒழுக்கமான - தூய்மையான - நேர்மையான ஆட்சியை - ஊழலற்ற ஆட்சியை நம்மால் பார்க்கமுடியும். இப்படிப்பட்ட ஆட்சியைத் தான் கடந்த காலங்களில் மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும், திரிபுராவிலும் இடதுசாரிகள் மக்களுக்கு கொடுத்து வந்திருக்கிறார்கள். அவர்கள் மீது நம் சிந்தனைகளையும் எண்ணங்களையும் திருப்புவோம். நமக்கு மாற்று சிந்தனைத் தேவை. மேலே சொன்ன மூன்றும் கொண்ட ''மாற்று உலகம்'' நமக்காக காத்திருக்கிறது. ''மாற்று உலகம்'' சாத்தியமே.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

தை - தமிழ்ப் புத்தாண்டு - மதச்சாயமோ அரசியல் சாயமோ பூசாதீர்கள்..

               சமச்சீர் கல்விக்குப் பிறகு, தமிழக சட்டமன்றத்தில் பிறந்து இரண்டே ஆண்டுகள் ஆன தை - தமிழ்ப் புத்தாண்டு திமுகச் சாயமும் மதச்சாயமும் பூசப்பட்டு  பலியிடப்பட்டது. இப்போதெல்லாம் தமிழக சட்டமன்றம் திமுக ஆட்சிக் காலத்து ஆடுகளை பலிகொடுக்கும் பலிபீடமாய் மாறிவிட்டது. தினமும் சட்டமன்ற உறுப்பினர்களெல்லாம் சட்டமன்றத்திற்குள் நுழையும் போதெல்லாம் இன்றைக்கு எந்த ஆடு பலியாகப் போகிறதோ என்று ஒரு மிரட்சியுடன் தான் உள்ளே நுழைகிறார்கள். 
                        அப்படித் தான் திமுக ஆட்சிக்காலத்தில் 2008 - ஆம் ஆண்டில் சட்டப்பூர்வமாக மாற்றப்பட்ட தை - தமிழ்ப் புத்தாண்டு என்பதை தற்போதைய ஆட்சியாளர்கள் இன்னொரு சட்டத்தின் மூலம் சித்திரை - தமிழ்ப் புத்தாண்டாக மாற்றிவிட்டனர். அதற்கு முதலமைச்சர் சோதிடம், வானசாஸ்திரம், மதம் போன்ற அறிவியலுக்கோ வரலாற்றுக்கோ பொருந்தாத சான்றுகளை அள்ளி வீசி, திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதியின் சுய விளம்பரத்திற்காக தமிழ்ப் புத்தாண்டு  என்பது தை முதல் நாளாக மாற்றப்பட்டது என்று கூறி ''சுவாஹா'' என்று முடித்து விட்டார்.
                தை - தமிழ்ப் புத்தாண்டாக கடைபிடிப்பதற்கான நியாயமான சான்றுகள் கடந்த கால வரலாற்றிலும், இலக்கியங்களிலும் உள்ளன என்பதை தமிழர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
                தமிழ்நாட்டில் 2008க்கு முன்பும் வழக்கத்தில் இருந்த சித்திரை முதல் நாள் புத்தாண்டு வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்கு பின் 78ம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்களால் நம்பப்பகிறது. சில வரலாற்று ஆசிரியர்கள் கனிஷ்கன் என்ற அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுகின்றனர். பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை தமிழ்மக்களிடம் பழக்கத்தில் வந்துள்ளது. இந்த ஆண்டு கணக்கீடு பற்சக்கர முறையில் அமைந்துள்ளது. அறுபது ஆண்டுகள் ஒரு சுழற்சியாக கருதப்படுகிறது. இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பரபவ முதல் அட்சய என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை என்பது தமிழறிஞர்களின் வாதம்.
              இதையொட்டி குமரிக் கண்டமாக தமிழர் நிலப்பரப்பு பரந்து விரிந்திருந்த காலம் தொட்டே தை முதல் நாளே தமிழர்கள் புத்தாண்டாக கொண்டாடினர் என்று கூறி, தனித் தமிழர் இயக்கத் தலைவர் மறைமலை அடிகளும் 500க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்களும் புலவர்களும் வரலாற்று ஆசிரியர்களும் ஒன்று கூடி விவாதித்து, கடந்த 1921-ம் ஆண்டில் அறிவித்தனர். இந்த அறிவிப்பை 1971ம் ஆண்டு ஆட்சியிலிருந்த தமிழக அரசு ஏற்றுக்கொண்டது.
            அப்போதிலிருந்து தமிழர்களின் ஆண்டு என்பது திருவள்ளுவரின் பிறப்பை (இயேசு கிறித்துவுக்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் திருவள்ளுவர் என்கிறது தமிழ் வரலாறு) மையமாகக் கொண்டு கணிக்கப்பட்டது. தமிழக அரசுத் துறை சார்ந்த அனைத்து ஆவணங்களிலும் திருவள்ளுவராண்டும், தை முதல் நாளை மையப்படுத்திய புத்தாண்டு முறையும் நடைமுறையிலிருந்தது. அரசிதழிலும் இது வெளியாகியுள்ளது. தை முதல் நாள்தான் புத்தாண்டு என்று தமிழக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசு ஆணையாக அறிவிக்கப்பட்டது

 பண்டை காலத்திலேயே தை புத்தாண்டு :

                   உலகில் பூர்வகுடி மக்களாக சில ஆராய்ச்சியாளர்களால் கருதப்படும் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் குமரி கண்டம் என்று அழைக்கப்படுகின்றது. அங்கு வாழ்ந்த தமிழர்கள் இயற்கையை வணங்கி வந்தார்கள். மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை  என  இவை தான் மாறி மாறிப் பருவக் காலங்களாக  மனிதனை ஆண்டு வந்ததால்,  தமிழன் ''ஆண்டு'' என்று அழைத்தான் என்று சொல்லப்படுகின்றது.  மேல்நாட்டு அறிஞர் சிலேட்டர் என்பவர் தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் முன்னதானது  என்று கூறியுள்ளார். தொல்காப்பியத்திலும், சங்க  நூல்களிலும் காணப்படும் வானியல்  செய்திகள் உருப்பெற்றமைக்கு பல்லாயிரமாண்டுகள் பிடித்திருக்கும் என்று கூறப்படுகின்றது. ஆரியர் ஊடுருவலுக்கு முன்னரே தமிழர்கள் வானியலில் அரும் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.  பண்டையத் தமிழர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தை கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள்  சூரியன் மற்றும் சந்திரன்  ஆகியவற்றின் இயக்கத்தையும் பருவங்களையும் அறிந்திருந்தனர் என்றும் இயற்கையை  ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பகுத்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழர்களின் கால பகுப்பு :

பொழுது, நாழிகை :   

"வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு,மாலை, யாமம்" என்று ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக பகுத்திருந்தனர். அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பை அறுபது நாழிகைகள் எனவும் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறு பொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன.
  1  நாழிகை -  24 நிமிடங்கள்
60  நாழிகை - 1440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்
1440 நிமிடங்கள்- 24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் - 1 நாள்
இவ்வாறு இன்றைய நவீன காலக் கணிப்பீட்டு முறையுடன் அச்சொட்டாகப் பொருந்தும் வகையில், பண்டையத் தமிழரின் காலக் கணிப்பீட்டு முறைமை மிகவும் நுட்பமாகக் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பருவ பகுப்பு

தமிழன் காலத்தை ஆறு பருவங்களாகப் பகுத்தான்.
1. இளவேனில் - தை - மாசி மாதங்கள்
2. முதுவேனில் - பங்குனி - சித்திரை மாதங்கள்
3. கார் - வைகாசி – ஆனி மாதங்கள்
4. கூதிர் - ஆடி - ஆவணி மாதங்கள்
5. முன்பனி - புரட்டாசி – ஐப்பசி மாதங்கள்
6. பின்பனி கார்த்திகை - மார்கழி மாதங்கள்

தமிழர்களின் ஆண்டு பகுப்பு                                            

 • 2 கண்ணிமை - 1 நொடி
 • 2 கை நொடி - 1 மாத்திரை
 • 2 மாத்திரை - 1 குரு
 • 2 குரு - 1 உயிர்
 • 2 உயிர் - 1 சணிகம்
 • 12 சணிகம் - 1 விநாடி
 • 60 விநாடி - 1 நாழிகை
 • 2 1/2 நாழிகை - 1 ஓரை
 • 3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்
 • 2 முகூர்த்தம் - 1 சாமம்
 • 4 சாமம் - 1 பொழுது
 • 2 பொழுது - 1 நாள்
 • 15 நாள் - 1 பக்கம்
 • 2 பக்கம்(30 நாள்) - 1 மாதம்
 • 6 மாதம் - 1 அயனம்
 • 2 அயனம்(12 மாதங்கள்) - 1 ஆண்டு
 • 60 ஆண்டு - 1 வட்டம்
-என்று தமிழர்களால் தெறிப்பளவு (Time Measure) முறையில் ஆண்டுகள் கணக்கிடப்பட்டு வந்துள்ளன

அறிஞர்கள் பார்வையில் தமிழ் புத்தாண்டு

               பண்டையத் தமிழர் தம் தாய் மொழியாக தமிழையும், தமது நாகரீகத்தையும், தம் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை, தமது நாகரீகத்தின் அடையாளமாக காலக்கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்-கோண்டிரடோஸ், எஸ்.ஜி.வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.
இந்த மெய்யியலாளர்களின் கருத்துப்படி ஆதிக்குடியினரான உலகின் மூத்த தமிழ்க் குடியினர், அவர்களது மொழி மற்றும் வாழ்வியல் கூறுகளை பூமியின் சுழற்சியை சரியாக மதிப்பிட்டும், இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பகுத்தும் தமது காலக் கணிப்பீட்டு முறைமைகளை உருவாக்கியவர்களாவர்.
                ''காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு தொடக்கத்தை இளவேனிற் காலத்தின் ஆரம்ப நாளாகக் கொண்டு தை மாதத்தினை தனது இனத்துக்கான புத்தாண்டாகப் பிரகடனப் படுத்திக்கொண்டான்''
                 பொங்கல் திருநாளைத் தமிழர்கள் புதுநாள் என்றே அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முந்தைய  நாளை, போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது, போக்கு - போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது - போகியது - போகி) பொங்கல் என்பது பொங்குதல் - ஆக்குதல். இது தொழிற் பெயர். புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது. எனவே போகி என்பது போக்கிய நாளானது. (பழைய ஆண்டு) புது நாள் என்பது புத்தாண்டாகவும் கொள்ளப்பட்டது. எனவே தமிழரின் புத்தாண்டு பழந்தமிழரின் காலக் கணிப்பீட்டுக்கு அமைவான தை மாதம் முதலாம் நாளிலேயே கொண்டாடப்பட வேண்டும்.

''தை'' முதல் நாளே தமிழன் புத்தாண்டு என்று கூறுவதற்கான சான்றுகள் :

               தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம், உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம் உழைப்பையும், தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம். "தை பிறந்தால் வழி பிறக்கும்" எனும் தமிழர் முதுமொழியை "புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்" என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.
              தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பல்வேறு இன மக்களும் தத்தமக்குரிய புத்தாண்டை இளவேனில் காலத்திலேயே கொண்டாடுகின்றனர்.  அன்றைய தினமே தத்தமது புதுப் பணிகளையும், நற்செயல்களையும் தொடங்குகின்றனர். ஆனால் சித்திரை மாதத்தில் குறிப்பாகத் தமிழர்கள் எந்த நற்செயல்களையும் தொடங்குவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
              தை மாத தொடக்க நாளை தமிழர்கள் தைப்பொங்கல் நாளாக காலம்  காலமாக கொண்டாடி வருகின்றனர். அதில் தோரணங்கள் கட்டுதல், புதுப் பானையில் புது நீர் அள்ளி பொங்கல் வைத்தல், பொங்கும் போது “பொங்கலோ பொங்கல்” என ஆரவாரம் செய்தல், பொங்கலை பரிமாறி உண்ணல், புத்தாடை அணிதல், முன்னோர்க்கு படையல் இடுதல், மாடுகளுக்கு உணவளித்தல், பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல் போன்ற செயல்பாடுகள் தமிழர்களிடையே பழங்காலந்தொட்டு இருந்து வருகின்றன.
              இவை அனைத்தும் நீண்ட நெடுங்காலமாக யப்பானியர்களாலும் கடைப்பிடிக்கப் படுகின்றது. இது அவர்களுக்கும் எமக்கும் இடையிலான ஒரு வரலாற்றுப் பண்பாட்டு ஒருமைப்பாடு இருந்திருக்க வேண்டும் என சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
               இந்த தைப்பொங்கல் நாள் பண்டையக் காலம் தொட்டே சமயச்சார்பற்று அனைத்து தமிழர்களது  திருநாளாக விளங்குகின்றது. அதேப் போன்றே தை மாதம் முதல் நாள் தொடங்கும் தமிழ் புத்தாண்டு நாள்; உலகில் தமிழ் பேசும் அனைவரதும் புத்தாண்டு பிறப்பு நாள் என்பது தமிழ் அறிவியலாளர்களின் ஆய்வில்  முடிவாகியுள்ளது.
                 தமிழ்ப் புத்தாண்டு  பற்றிய வரலாற்றை தமிழ்  மக்களும், தமிழக அரசும் புரிந்துகொள்ளவேண்டும்.

புதிய மருத்துவமனை - மருத்துவக்கல்லூரிக்கு Dr. முத்துலட்சுமி ரெட்டி பெயரிடுங்கள்..

                 தற்போது ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிடத்திற்கு விடிவுக்காலம் வந்தாச்சு. தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் - குறிப்பாக ஏழை- எளிய மக்கள் அனைவரும் பல்வேறு நோய்களுக்கும் தரமான உயரிய சிகிச்சையினை இலவசமாக பெரும் வகையில் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத் தக்கதே. இந்த மருத்துவமனை மூலம் ஏழை  - எளிய மக்களுக்கு இலவசமாய் மருத்துவம் கிடைப்பது மட்டுமல்லாது, மருத்துவம்  பயின்ற, மருத்துவம்  சார்ந்த கல்வி பயின்ற - வேலை தேடும் இளைஞர்கள்  ஆயிரக்கணக்கானோருக்கு    வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
    
தமிழக அரசுக்கு அன்பான ஆலோசனை :
                    அந்த புதியக் கட்டிடத்தில் உருவாகும் புதிய மருத்துவமனைக்கும் மருத்துவக்கல்லூரிக்கும் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் பெயரை வைத்தால் மிகப் பொருத்தமாக இருக்கும். டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் பல பெருமைகளைச் சேர்த்த முதல் இந்தியப் பெண்மணி என்பதில் நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விஷயமாகும். அவரது வாழ்க்கை  வரலாறே இன்றையத் தலைமுறையினருக்கு  - குறிப்பாக பெண்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்கும். 
                     அவர் தன் மாணவப் பருவத்திலிருந்தே பல்வேறு முற்போக்கான செயல்களைச் செய்திருக்கிறார். இவர் அதுவரை ஆண்கள் மட்டுமே படித்து வந்த மருத்துவக்கல்லூரியில் இந்தியாவிலேயே  மருத்துவம் பயில சேர்ந்த முதல் பெண்மணி இவர் தான் என்பது மெய்சிலிர்ப்பாய் இருக்கிறது. அதுவரையில் இந்தியாவில் மருத்துவப் படிப்பென்றால் ஆண்கள் மட்டுமே சேர்ந்து படிக்கும் ஒருதலைப் பட்சமான சமூகத்தின் பழக்கத்தை தான் மருத்துவம் பயின்று  உடைத்தெறிந்தார். இந்தியாவிலேயே மருத்துவம் பயின்ற முதல் பெண்மணியும் இவர் தான்.
                           அது மட்டுமல்ல, பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரும் இவர் தான் என்பது பெண்களுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விஷயமாகும். தமிழக மேலவையின் முதல் பெண் துணைத் தலைவர்  என்கிறப் பெருமையும் இவரையே சாரும். இந்த காலத்தில் தான் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் பெண்குழந்தைகளுக்கு இலவச கல்வி திட்டத்தைக் கொண்டுவந்தார் என்பதும் ஒரு மறக்க முடியாத வரலாறு ஆகும். சென்னையில் உள்ள அடையாறு புற்று நோய் மருத்துவமனையினை தொடங்கி வைத்து நடத்தியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் என்பது பலருக்கும் தெரியாத செய்தியாகும். பெண்ணுரிமை - பெண்விடுதலை ஆகியவற்றிற்கு ஓயாமல் போராடிய முற்போக்காளர். சுதந்திர போராட்ட வீரர்களான சரோஜினி நாயுடு அம்மையார், டாக்டர். அன்னி பெசன்ட் அம்மையார், காந்தி மற்றும் தந்தை பெரியார் போன்ற தலைவர்களோடு தொடர்பு வைத்திருந்தார். தந்தை பெரியார் அவர்களோடு இருந்த நட்பு தான் தேவதாசி முறை ஒழிப்புக்கு வழிகாட்டியது.
                          இப்படியாக பல்வேறு  பெருமைகளையும் திறமைகளையும் கொண்ட முத்துலட்சுமி ரெட்டி  அம்மையார் அவர்களின் 125 - ஆவது பிறந்தநாளை ( 30 ஜூலை 1886 ) கொண்டாடும் இந்த  நேரத்தில் அவரது பெயரை புதிய மருத்துவக்கல்லூரிக்கும், மருத்துவமனைக்கும் சூட்டுவது என்பது பொருத்தமாக இருக்கும். அவரது வாழ்க்கையே இன்றைய பெண் குழந்தைகளுக்கு வழிகாட்டுதலாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

சனி, 20 ஆகஸ்ட், 2011

தோழர். எம். கே. பாந்தே மறைவு - உலக உழைப்பாளி வர்க்கத்திற்கே பேரிழப்பு.

             சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைமைக்குழு  உறுப்பினரும், முதுபெரும் தொழிற்சங்கத்தலைவரும், உழைப்பாளி வர்க்கத்தின் உன்னதமான தோழருமான தோழர்.  எம். கே.  பாந்தே அவர்கள்  இன்று அதிகாலை நடுநிசிக்குப் பிறகு 12.30 மணி அளவில்  மாரடைப்பால்   ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் காலமானார். 
             தோழர். பாந்தே அவர்களின் இறுதிவரை அயராத தொழிற்சங்கப் பணியும், அரசியல் பணியும் வியக்கத்தக்கது. சர்வதேச தொழிற்சங்க மேடைகளிலும், இந்திய தொழிற்சங்க மேடைகளிலும்   தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான தாராளமயம், தனியார்மயம், உலகமயம் - இவைகளை எதிர்த்து  இறுதி வரை கடுமையாக குரல் கொடுத்து வந்தவர். 
                  இந்த ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் 22 - ஆம் தேதி அன்று புதுடெல்லியில் எல். ஐ. சி முகவர் சங்கம் - LICAOI சார்பில் முகவர்களுக்கெதிரான அரசின் நடவடிக்கைகளை கண்டித்து நடத்தப்பட்ட தர்ணா போராட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றியதும் , அடுத்த நாள் 23 - ஆம் தேதி கடுமையாக உயர்ந்துவரும் விலைவாசி உயர்வைக் கண்டித்து அதே இடத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து நடத்திய மிகப்பிரம்மாண்டமான பேரணியில் உரையாற்றியதும் நான் அவரை கடைசியாக பார்த்த நிகழ்ச்சி. இன்றும் நெஞ்சைவிட்டு அகலாத உரை - காட்சி.
                 அவரது மறைவு என்பது உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும்.
                    மறைந்த தோழர். எம். கே. பாந்தே அவர்களுக்கு வீரவணக்கத்தையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

ஊழல் இல்லா இந்தியாவை உருவாக்குவோம்..!

                                                                  
ஊழல் புற்றுநோயை                      
வேரறுக்க போராடுவோம்!         
தோழர் என்.சங்கரய்யா அழைப்பு
                                                                 
                                                                    
                                                                  

              அனைத்துப் பகுதி மக்களும் ஒன்று திரண்டு போராடி ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா அழைப்பு விடுத்தார்.

            நாட்டின் 65வது சுதந்திரதினமான ஆகஸ்ட் 15 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் “ஊழல் எதிர்ப்பு, பொதுவாழ்வில் தூய்மை, மக்கள் நலனுக்கே முன்னுரிமை” என்ற முழக்கத்தை முன்வைத்து சுதந்திரதின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய, கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக்குழு தலைவர் என். சங்கரய்யா இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். அவரது உரையின் முக்கிய பகுதிகள் வருமாறு:

               ''இன்று ஊழல் என்ற புற்றுநோய் நாட்டை அழித்துக் கொண்டிருக்கிறது. இடதுசாரிகள் ஊழலுக்கு எதிராக இயக்கம் நடத்தி வருகிறார்கள். அரசியல் வேறுபாட்டைக் கடந்து உழைப்பாளிகள், விவசாயிகள், வியாபாரிகள், நடுத்தர வர்க்கத்தினர் என மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும். அப்போதுதான் ஊழலை ஒழிக்க முடியும்.
              ஊழலுக்கு எதிரான மக்களின் உணர்வுகளை சில சக்திகள் திசைதிருப்ப முயற்சி செய்கின்றன. அவர்களுடைய அரசியலுக்கு நாட்டுமக்கள் பலியாகக்கூடாது. ஊழலை ஒழிக்கும் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டா, இல்லையா என்ற சர்ச்சை எழுப்பப்படுகிறது. 120 கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற நாடாளுமன்றம்தான் சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் கொண்டது. நாடாளுமன்றம் சரியான - ஊழலை ஒழிக்கக்கூடிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
            பிரதமர் உள்ளிட்ட அனைவரையும் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண் டும். அவ்வாறு செய்தால் உறுதியற்ற நிலை உருவாகும் என்பது தவறு. சட்டத்தில் யாரும் விதிவிலக்கானவர்கள் அல்ல. தலைவர்களையும், அதிகாரிகளையும் இச்சட்டத்திற்குள் கொண்டு வந்தால் தான் ஒரு அச்ச உணர்வு இருக்கும்.
           நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளுக்காகப் பணம் கொடுக்கப்பட்டது குறித்து தில்லி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அவர்கள் அரைமனதோடு இந்த வழக்கை விசாரித்தனர் என்று உச்சநீதிமன்றம் விமர்சித் திருப்பதை நினைவுப்படுத்துகிறேன்''


 தோழர். என்.சங்கரய்யா  அவர்களை பற்றி...                             

                        தோழர். சங்கரய்யா அவர்கள் ஊழலை ஒழிப்பதற்காக திடீரென்று  அவதாரம் எடுத்த பரமாத்தமா கிடையாது. இவர்  ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். இந்த தேசத்தின் விடுதலைக்காக கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து போராடிய வீரம் செறிந்த போராளி. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாமலேயே, போராடியதாக பொய்சொல்லி ''தியாகி பென்ஷன்'' வாங்கும் காங்கிரஸ்காரர்கள் மத்தியில் , ''தேசத்தின் விடுதலைக்காக போராடியது என்பது எங்களது கடமை.  எங்கள் கடமைக்கு - வீரம் செறிந்த போராட்டத்திற்கு விலை பேசவேண்டாம் என்று  கூறி அரசு தரும் தியாகி பென்ஷன்- ஐ  இன்று வரை  அரசிடமிருந்து வாங்காத  வாங்க மறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களில் இவரும் ஒருவர் என்பது  நமக்கெல்லாம் பெருமையளிக்கக் கூடிய விஷயம் ஆகும்.
               இவரும்  இவரது கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியும் இந்தியாவில் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ஊழலுக்கு எதிரான இயக்கங்களை நடத்தி வருகின்றனர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகவே பிரதமரையும், நீதித் துறையும் இணைந்த ''லோக்பால்'' மசோதா தேவை என்று தொடர்ந்து போராடிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவராக தோழர். என். சங்கரய்யா பணி  புரிந்து  வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.

புதன், 17 ஆகஸ்ட், 2011

அரசால் செய்யப்படும் உயிர் கொலையே மரண தண்டனை..!


                     சென்ற ஒரு வாரமாக இப்போது வரை  தமிழகத்தில் ஒரே பரபரப்பு... கடந்த 1991 - ஆம் ஆண்டு  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டு, சாட்சிகள் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையில்  சிறப்பு நீதிமன்றத்தால் மரணதண்டனை அளிக்கப்பட்டு, பிறகு உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்து, உச்சநீதிமன்றமும் மரணதண்டனையை உறுதி செய்து பின் மத்திய அரசுக்கு கருணை மனு அளிக்கப்பட்டு அதுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், இறுதியாக தங்கள் கருணை மனுவை தாயுள்ளத்துடன் கவனித்து, தங்கள் மீது இறக்கம் காட்டி மரணதண்டனையை ரத்து செய்வார்கள் என்று நம்பிக்கையோடு எதிர் பார்த்திருந்த சூழ்நிலையில் இந்திய குடியரசுத் தலைவர் அம்மா பிரதீபா பாட்டில் அவர்களும் அந்த கருணை மனுவை நிராகரித்து மரணதண்டனையை உறுதி செய்தது என்பது குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேருக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல் மனித நேயம் கொண்டோர்க்கும், மனித உரிமைகள்  மீது அக்கறை உள்ளவர்களுக்கும் அது ஒரு பேரதிர்ச்சியாக தான் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
.     பொதுவாகவே, இன்றைக்கு மரணதண்டனையை எதிர்த்தும்  மரணதண்டனையை ரத்து செய்யக்கோரியும்  நாட்டின் பல பகுதியில் உள்ள மனிதநேயமிக்கவர்கள் - மனித உரிமை ஆர்வலர்கள் என பலர்   உரத்த குரல் எழுப்பி வருகிறார்கள். பல ஆண்டுகளாகவே இந்த கோரிக்கை என்பது எழுப்பப் பட்டு தான் வருகிறது. இன்று ராஜீவ் கொலையாளிகள் என்று சொல்லப்படுகிற மேலே சொன்ன மூன்று பேரையும் தூக்குக்கயிறு நெருங்கி வருவதால்,  தங்களை தமிழினத் தலைவர்களாக பிரகடனப்படுத்திக்கொள்பவர்கள் எல்லாம் அவர்கள் மூவரையும் காப்பாற்றுவதற்கு போராடி வருகிறார்கள்.  
                   கடந்த பல ஆண்டு காலமாகவே மரணதண்டனைக்கு எதிரான பிரச்சாரங்களை செய்து வரும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நீதியரசர். வி. ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள், '' மரணதண்டனை என்பது அரசின் கோழைத்தனத்தை குறிப்பதாகும். அது  எந்த பலனையும்  கொடுக்காது. மரணதண்டனை விதிப்பது என்பது முட்டாள்தனமானது. நீதித்துறையில் உள்ள தூக்குதண்டனை என்கிற இந்தக் கறையை நீக்கவேண்டும்'' என்று மரணதண்டனையைப் பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
                   தண்டனை என்பது குற்றவாளிகளை திருத்துவதற்கு தானே அன்றி சாகடிப்பதற்கு அல்ல. கொன்றுவிடுவதால் அவன் திருந்துவதற்கு வாய்ப்பில்லையே. இதுவரை கொலைக் குற்றவாளிகளுக்கு நீதி மன்றத்தினால் தூக்கு தண்டனை கொடுத்ததில் நாட்டில் கொலைக்குற்றங்கள்
குறைந்தாதா என்றால், அப்படியொன்றும் இல்லையே..! மாறாக, ஆண்டாண்டு அதிகரித்துக்கொண்டு  தானே இருக்கிறது. அது மட்டுமல்ல ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாது. கொலை  செய்வதவனை  தூக்கிலிடுவது  என்பது ஒரு  கொலைக்கு சமமானது. இது அரசே  செய்கிற  கொலை ஆகும்.  இது மனிதத்தன்மையற்றது. காட்டுமிராண்டித்தனமானது. உயிர் வாழும் உரிமை என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும்.  அரசும் சமூகமும்  மதிப்பு மிக்க மனித உயிர்களை மதித்திடவேண்டும்.
                      நீதியரசர். வி. ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அப்பாவி இளைஞர்களை தூக்கிலிடுவதை நான் பார்த்திருக்கிறேன்'' என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார். அன்றும் இன்றும் தூக்குதண்டனை என்பது ஆட்சியாளர்களின் கொடிய முகமாகவே இருக்கிறது.
               முன்பு ஒருமுறை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான கமிஷன் மரணதண்டனையை தடை செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்திய போது, அந்த ஓட்டெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாதது வெட்கக்கேடானது. உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் தூக்குதண்டனையை - மரணதண்டனையை ரத்து செய்திருக்கின்றன. ஆனால்  இந்தியா உட்பட வெறும் 58 நாடுகளில் மட்டுமே மரணதண்டனை என்பது நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
                   மரணதண்டனையை ஒழிப்பதற்கு ஒரு மக்கள் இயக்கம் தேவைப்படுகிறது. அதற்கு நீதியரசர் வி. ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள் தலைமையில் அணி திரள்வோம்.

           ராஜீவ் கொலை குற்றவாளிகளை கருணை அடிப்படையில் காக்க வேண்டி ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற  நீதிபதி நீதியரசர் வி. ஆர். கிருஷ்ண அய்யர் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


 ------------------------------------------------------------------------------------------------------

                                                                                                                                 ஆகத்து 14, 2011 

மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு,

                 இந்தியாவின் தலைமை நீதிமன்றத்தால் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று இளைஞர்களும் தூக்கிலிடப்படப் போவதை அறிந்து மிகவும் மன வருத்தம்  அடைந்தேன். அநியாயமாகக் கொல்லப்பட்ட திரு.இராசிவ்காந்தி அவர்களின் மனைவி சோனியா அவர்களும் இவர்களைக் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உடன்படுவதாகக் கூறினார். இவர்களின் உயிரைக் காக்க நான் மேற்கொண்ட அனைத்து முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டன.

                 அன்புள்ளம் கொண்ட அம்மையார் அவர்களே, இவர்களின் உயிரைக் காக்க தண்டனைக் குறைப்பு நடவடிக்கை எடுக்கத் தங்களை வேண்டுகிறேன். தங்களின் பரந்த மனத்தோடு, மனிதநேய அடிப்படையிலும் கருணை அடிப்படையிலும் இம்மூவர் உயிர் காக்க வேண்டுகிறேன். இந்த மனிதநேயச் செயலுக்கு வையம் முழுதும் பரவிக்கிடக்கும் தமிழர்கள் அனைவரும் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பர்.  தங்களின் நல்லாட்சி சிறக்கவும் தங்களின் புகழ் பரவவும் அந்தக் கடவுள் உங்களுக்கு அருள்வாராக !

வாழ்த்துகளுடன்

தங்கள் உண்மையுள்ள,


(வி.ஆர். கிருஷ்ண அய்யர்)

பெறுநர்
மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா
முதல் அமைச்சர், தமிழ்நாடு
போயஸ் தோட்டம்
சென்னை
தமிழ்நாடு


செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

அன்னா ஹசாரே என்ன மகாத்மாவா..? - அன்னா - காங்கிரஸ் - பா. ஜ .க இணைந்து நடத்தும் கூட்டு நாடகம்..!

                    ஊழல் என்பது இந்தியாவில் காலம் காலமாக  ஒரு அங்கிகரிக்கப்பட்ட தொழிலாக செம்மையாக நடந்துகொண்டே தான் இருக்கின்றன.  ஆனால் பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள் மட்டுமே ஊழலை எதிர்த்து பாராளுமன்றத்திலும் வெளியிலும் போராடிவந்தனர். ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக்பால் மசோதாவை கொண்டுவரவேண்டுமென்றும் வலியுறுத்தி வந்தனர். அப்போதெல்லாம் மத்திய அரசு அதை பற்றி கண்டுகொள்ளாமலே இருந்து வந்தது.
                     ஆனால்  சமீப காலமாக, மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்ததிலிருந்து புற்றிலிருந்து பாம்புகள்  ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வருவது போல் ஏகப்பட்ட ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளியே அம்பலமாவதைப் பார்த்து மக்களே அதிர்ந்து போயிருக்கிறார்கள். அப்போது தான்  கதைகளில் வருவது போல் - இதிகாசத்தில் கம்சனை ஒழிக்க அவதாரம் எடுத்த கிருஷ்ண பரமாத்மா போல் - இந்தியாவில் ஊழலை ஒழிக்க அன்னா ஹசாரே அவதாரம் எடுத்தது போல் ஊடகங்கள் ஊதி பெரிதாக்குகின்றனர். நாடெங்கும் அவரின் பெயரால் ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் முளைத்துவிட்டன. அன்னா ஹசாரே ஒரு மகாத்மாவைப் போல் காட்சித் தருகிறார். ஏதாவது ஒரு கதாநாயக நடிகர்களுக்குப் பின்னாலேயே சென்று பழக்கப்பட்ட இந்திய இளைஞர்களுக்கு அன்னா ஹசாரே ஒரு கதாநாயகனாக - இந்தியன் தாத்தாவாக தெரிகிறார்.
                      பா. ஜ. க. -வும், சில அரசு சார்பற்ற நிறுவனங்களும், கார்ப்போரேட் கம்பெனிகளும்  அன்னா ஹசாரெக்குப்  பின்னால் இருந்துகொண்டு இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் அன்னா ஹசாரே டெல்லியில்
நடைபெறும் ஊழலை மட்டுமே எதிர்த்து போராடுவார். ஆனால் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் - குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கும் கர்நாடகா மாநில  முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பற்றியோ அல்லது குஜராத் மாநில முதலமைச்சர் மோடியைப் பற்றியோ அல்லது   ஊழல் செய்து  கொள்ளை இலாபம் சம்பாதித்த அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, டாடா, கலாநிதி மாறன்  போன்ற கார்ப்போரேட்  முதலாளிகளைப்  பற்றியோ  வாயை திறக்க மாட்டார்.
                            இந்தியாவில்  ஒரு பக்கம்  ஊழல்  ஆறு    வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது. மத்திய அமைச்சர்களும், மாநில முதலமைச்சர்களும் பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்திருக்கிறார்கள். இது அரசின் பணம் - மக்களின் பணம் என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டேப் போகும் விலைவாசியோ மக்களை பிழிந்தேடுக்கிறது. இன்றைக்கு   மக்களின் கவனமெல்லாம் - பார்வையெல்லாம் - சிந்தனையெல்லாம் இவை இரண்டின்  மீது  தான்   பதிந்திருக்கிறது. மக்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை மன்மோகன் சிங் நன்கு அறிவார்.
                      ஆக குழம்பிப் போயிருக்கும் மக்களை திசைத்திருப்ப வேண்டிய கட்டாயத்திற்கு மன்மோகன் சிங் தள்ளப்பட்டிருக்கிறார்.  மக்களின் உணர்வுகளை திசைத் திருப்பவேண்டி தான்  பாரதீய ஜனதா கட்சியுடன் சேர்ந்து கொண்டு பாராளுமன்றத்தை முடக்கும் நாடகத்தையும், அன்னா ஹசாரேவுடன் சேர்ந்துகொண்டு உண்ணாவிரதம் - கைது நாடகத்தையும் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதா கட்சியும் சேர்ந்து நடத்துகிறார்கள் என்பதை மக்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும்.

ஊழலை ஒழிப்பதற்கு அரசிடம் மந்திரக்கோல் இல்லை - பிரதமர் பதவிக்கே லாயக்கில்லாதவரின் பொறுப்பற்ற பேச்சு...!

               சுதந்திரம் பெற்று நேரு காலத்திலிருந்து இன்றைக்கு மன்மோகன் சிங் காலம் வரை காங்கிரஸ்காரன்களாக இருந்தாலும் சரி - பி.ஜே.பி- காரன்களாக இருந்தாலும் சரி ஒருவரையொருவர் ஊழலில் சளைத்தவர்கள் இல்லை என்பதை நாடே அறியும்.  நாடு சுதந்திரம் பெற்ற பிறகு,  1948 - லிருந்து  பல்வேறு ஊழல்களை இந்த நாடு  சந்தித்து வருகிறது என்பது தான் மறைக்க முடியாத உண்மை. 2009 - ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, உலக அரங்கில் இந்தியா தலை குனிந்து நிற்கும்படி, வகை வகையான ஊழல்களை அரங்கேற்றி வருவதை இந்த நாடே அறியும். 2 G ஸ்பெக்ட்ரம்  ஊழல்,  ஆதர்ஷ் வீடு கட்டுவதில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டில் ஊழல், பிரச்சார் பாரதியில் ஊழல் என புற்றிலிருந்து பாம்புகள் வெளியே வருவது போல் வந்துகொண்டிருக்கின்றன. பிரதமரும், அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் அந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். பல்வேறு  காங்கிரஸ் - பா. ஜ. க. கட்சியினர் ஆட்சி செய்யும் மாநிலங்களில் முதலமைச்சர்களும் மாநில அமைச்சர்களும் ஊழல்  செய்து சிக்கி இருக்கிறார்கள். இவைகளை எல்லாம் பார்த்து   நாடே கொந்தளிப்பில் இருக்கிறது. 
                    ஆனால் பிரதமரோ எது நடந்தாலும் வாயையே திறக்கமாட்டேன் என்கிறார். அப்படியே திறந்தாலும் '' எனக்கு எதுவும் தெரியாது'' என்று சொல்வதற்கு மட்டும் வாயை திறக்கிறார். எதுவும் தெரியாமல் நமக்கு ஒரு பிரதமர் எதற்கு..? என்பது தான் நம்முடையக் கேள்வியாகும். ஊழல் செய்து கைதானவர்களேல்லாம், இந்த  ஊழல் பற்றி பிரதமருக்கும் தெரியும் என்று ஒரே மாதிரி பதிலைத் தான் சொல்கிறார்கள்.
                  அப்படியென்றால் பிரதமர் ஊழல் செய்யட்டும் என்று வேடிக்கைப் பார்த்திருந்தாரா..? என்பதும் நமது கேள்வியாகும். அதுமட்டுமல்ல ஒரு அமைச்சர் தவறு செய்கிறார் என்றால் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை தானே அந்த பொறுப்பை ஏற்கவேண்டும். பிரதமருக்கும் ''இணைந்த பொறுப்பு'' தானே( Joint responsibility ) உண்டு என்று தானே இந்திய அரசியல் சாசனமும் சொல்கிறது. எதுவும் தெரியாத பிரதமருக்கு இதுவும் தெரியாதா..? என்பது தான்
நமக்குத் தெரியவில்லை. 
                  இதற்கெல்லாம் பொறுப்பேற்று  பதவி விலகி வேண்டிய பிரதமர்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என ஊழலுக்கெதிரான    பல்வேறு இயக்கங்கள் நாடு  முழுதும் நடைபெற்றுவரும் சூழ்நிலையில், நேற்று சுதந்திரதின விழாவில் மன்மோகன் சிங் பேசும் போது,   ''ஊழலை ஒழிப்பதற்கு  அரசிடம்       மந்திரக்கோல் இல்லை''    என்று திருவாய்  மலர்ந்திருக்கிறார். ஒரு பொறுப்பான பதவியிலிருப்பவரின் பொறுப்பான பேச்சா இது என்று சந்தேகமாய் இருக்கிறது.
                நாடு முழுதும் இவ்வளவு ஊழல்கள் நடந்த வண்ணம் இருக்கிறது.  அதை தடுப்பதற்கு எந்த முயற்சியும்  - நடவடிக்கையும் எடுக்காமல், ஊழலை ஒழிப்பதற்கு அரசிடம் மந்திரக்கோல் இல்லை என்று சொல்வது மன்மோகன் சிங்  பிரதமர் பதவிக்கே லாயக்கில்லாதவர் என்று  தான் பொருள்.    
               வெளிப்படையான அரசு நிர்வாகமும் - நிர்வாக நடவடிக்கைகளும் இருந்தால் போதும்  ஊழலை ஒழித்துவிட முடியும்... இதைச் செய்வாரா மன்மோகன் சிங்..? 

பிரதமரே செய்யும் நில அபகரிப்பு - மக்கள் எங்கே செல்வார்கள் ?

              
                   இந்திய பிரதமர் மன்மோகன் சிங்  தொடர்ந்து எட்டாவது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றுகிறாராமா..!  இதற்கு முன் நேருவும், இந்திரா காந்தியும் தான் அதிக முறையாக கொடி ஏற்றியிருக்கிறார்களாமா..! அதிக முறை கொடியேற்றிய பிரதமர்களில் இவரு மூன்றாவது காங்கிரஸ் பிரதமராமாமாமா...! பத்திரிகைகள் மன்மோகன் சிங்கைப் பற்றி ஒரே பெருமை பீற்றல்.. பிதற்றல்.. தாங்க முடியல..
                             அன்றைய தினம் நேரு, இந்திரா காந்தி போன்றவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவிட்டு நம் மக்களுக்காக நம் மக்களிடம் உரையாற்றுவார்கள். மன்மோகன் சிங்கோ நம்  தேசக்கொடியை ஏற்றிவிட்டு அமெரிக்க   முதலாளிகளுக்காக கண்ணாடிக் கூண்டிலிருந்து நம்  மக்களிடம்  மக்களிடம் உரையாற்றுவார்.   அப்படியே தான் இருக்கட்டும்.. இந்த எட்டு ஆண்டுகளில் அவர் என்ன தான் சாதித்தார். சொல்லமுடியுமா..? சொல்லமுடியும்.. பல்வேறு சட்டங்கள் மூலம் அமெரிக்க முதலாளிகளுக்கும்,  இந்திய பன்னாட்டு முதலாளிகளுக்கும் தைரியமாக இந்த தேசத்தையே  கூறு போட்டு விற்றவர்.. இன்றும் விற்பவர்.
                   நேற்றைய தினம் செங்கோட்டையில் அவர் பேசியது என்ன தெரியுமா..? ''புதிய தொழிற்சாலைகளை நிறுவவும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்தவும் நகர்ப்புறங்களை விரிவுபடுத்தவும் அனைத்து தரப்பாரிடமும் கருத்தொற்றுமை ஏற்படுவது அவசியம். தொழிற்சாலைகளை நிறுவவும் அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்கவும் நகர்ப்புறங்களை விரிவாக்கவும் நிலங்கள் தேவைப்படுகின்றன. அந்த இடங்கள் விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் சொந்தமானதாக இருக்கும்போது அவர்களுடைய வாழ்வாதாரங்களைப் பறிக்காமல், அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிடாமல் செயல்பட வேண்டியது அரசின் கடமையாகிறது. அதற்காகவே விவசாயிகள், நிலத்தைச் சார்ந்துள்ள நிலமற்ற விவசாயக்கூலிகள், கிராமப்புற மக்கள், பழங்குடிகள் போன்றோரின் நலன்களைக் காக்கும் வகையில் அனைத்து தரப்பாரிடமும் ஆலோசனைகள் பெற்று புதிய சட்டம் இயற்றப்படவிருக்கிறது'' இதை படிக்கும் போது ஏதோ நல்லவரைப்போல - மக்கள் மீது அக்கறையுள்ளவர் போல நமக்கு தோன்றும்.
                  மக்கள் நிலங்களை அபகரிக்கும் இந்த புதிய சட்டம் எதற்கு. ஏற்கனவே அரசின் தவறானக் கொள்கையினால் விவசாயத்தில் வருமானம் இல்லாமல், கந்து வட்டிக்கு கடன் வாங்கி, திருப்பித் தரமுடியாமல் இந்த நாட்டில் தினம் ஐம்பது விவசாயிகள் நொந்து போய் தற்கோலை செய்து கொண்டு சாகிறாகள். அவர்களைப் பற்றிய அக்கறை இந்த பிரதமருக்கு இல்லை.. விவசாயம் வீழ்ச்சியடைந்து  விட்டதால், வேலை இழந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் இன்றைய தினம் கட்டுமான தொழில் செய்யவும், இரவு நேரங்களில் சாலைகளை பெருக்கும்   துப்புரவுப்  பணி செய்யவும்  கிராமப்புறங்களிலிருந்து நகர்புறங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றிய சிந்தனை துளிக் கூட இந்த பிரதமருக்கு இல்லை.. ஆனால் விவசாயிகள், நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்கள், கிராமப்புற மக்கள், மலை வாழ் பழங்குடி இன மக்கள் - என இவர்கள் வயிற்றில் அடித்து விட்டு,  அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகள் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு அவர்களின்  நிலங்களை அபகரிப்பது - அதற்கொரு சட்டம் போடுவது நியாயம் தானா..? 
                          நகர்புற விரிவாக்கம் என்ற பெயரில் பன்னாட்டு கம்பனிகளின் விமானப் போக்குவரத்துக்கு விமான நிலையம் அமைப்பதற்கும், ''வால்மார்ட் '' என்கிற அமெரிக்க சூப்பர் மார்க்கெட் -ஐ நம் நாட்டில் தொடங்கவும், (  சில்லறை வர்த்தகத்தில் நூறு சதவீத அந்நிய நேரடி முதலீட்டினை  மன்மோகன்  அரசு  அனுமதிக்கிறது. அதனால் நம் நாட்டில் பரம்பரை பரம்பரையாக  மளிகைக்கடை, காய்கறிக்கடை, மீன் கடை, துணிக்கடை வைத்திருந்து வியாபாரம் செய்பவர்கள் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு போகவேண்டியது தான் )  தொழிற்சாலைகள் என்ற பெயரில் அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகளின் தொழிற்சாலைகளை - அதுவும் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட கெமிக்கல் தொழிற்சாலைகளை இங்கே அமைப்பதற்கு இலவசமாய் நிலத்தைக் கொடுத்து - மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்றவற்றை 24 மணிநேரமும்   இலவசமாய் விநியோகம் செய்து ( அதன் மூலம் மக்களுக்கு ஐந்து மணிநேர மின்வெட்டு - அதை பற்றியும் பிரதமருக்கு கவலை இல்லை என்பது வேறு விஷயம் ) அரசுக்கு வரவேண்டிய வரிகளிலும் அவர்களுக்கு விலக்களித்து - சிறப்புப் பொருளாதார மண்டலம்  என்ற பெயரில் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கும் தான்  இன்றைக்கு  இந்திய பிரதமர் இந்திய மக்களிடமிருந்து சட்டப்பூர்வமாக செய்யப்போகும்  நில அபகரிப்பு என்பதை தான் நேற்று சுதந்திர தின  விழாவில் அவர்  பேசினார்  என்பதை  அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு பெயர் தான் '' நாட்டின் வளர்ச்சி - முன்னேற்றம்'' என்கிறார் பிரதமர். ஆனால் இந்த  சட்டத்தால்  யாருக்கு வளர்ச்சி..? யாருக்கு முன்னேற்றம்..? என்பது நம்முடைய கேள்வி ஆகும்..
                 எனவே அமெரிக்க முதலாளிகளுக்காக அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு கருத்தொற்றுமை அடிப்படையில் அனைத்து தரப்பாரிடமிருந்தும் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது என்று கேட்டுக்கொண்டு இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.   
                    எச்சரிக்கை : நாம் கொஞ்சம் ஏமாந்தா வேட்டியையும் உருவிக்கொள்வார் நம் பிரதமர் ஜாக்கிரதை.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமா..?

                ''ஆடுவோமே - பள்ளு பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று '' - என்று பாரதி கனவு கண்டான். இந்த தேசம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே நமக்கு  ஆனந்த சுதந்திரம் கிடைத்து விட்டாதாய் நம்பிக்கையுடன் எழுதப்பட்ட கவிதை வரிகள் இவை. அவர் இப்போது உயிருடன் இருந்தால் இந்த நாடு  போகிற போக்கைப் பார்த்து நொந்து போயிருப்பார்.
                நமக்கு சுதந்திரம்  கிடைத்திருக்கிறதா என்றால்.. கிடைத்திருக்கிறது. ஆனந்த சுதந்திரம் கிடைத்திருக்கிறதா என்றால்.. இல்லை என்பது தான் உண்மை. ஆனந்த சுதந்திரம் என்றால் என்ன ? மாவீரன் பகத்சிங் வார்த்தைகள் தான் இதற்கு உண்மையான பதிலாக இருக்க முடியும்.  
''பாலுக்கு அழும் குழந்தை; கல்விக்கு ஏங்கும் மாணவன்;
வேலை தேடும் இளைஞன்; வறுமையில் வாடும் தாய்;                                  இவர்கள் இல்லாத இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா''                உண்மையான ஆனந்த சுதந்திரம் என்பது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், மருத்துவம் - இவை எல்லாமும் எல்லோரும் பெற்றால் தான் உண்மையான சுதந்திர இந்தியா ஆகும். ஆனால் மேலே சொன்ன அத்தனையையும் நம்மிடமிருந்து பறித்துக்கொள்ளும் ஆட்சியாளர்கள் கையில் தான் இந்த   நாடு சிக்கித் தவிக்கிறது என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும். 
                ''பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ; நாங்கள் சாகவோ'' என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சுரண்டலை  எதிர்த்து சீறினானே பாரதி. அதே நிலைமை தான் இன்றும். தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற பெயரில் நம் நாட்டின் செல்வங்கள்  - சொத்துக்கள்  - வளங்கள்  அனைத்தும்  இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளால், அவர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகளால், இந்திய - அமெரிக்க பெருமுதலாளிகளால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் சுரண்டப்படுகிறது - கொள்ளையடிக்கப்படுகிறது. அதனால் இந்தியா இரண்டு இந்தியாவாக பிரிந்து கிடக்கிறது.


தொலைந்து போன பொருளாதார விடுதலை..  
         
ஒன்று : வளமான இந்தியா ( Shining India )  மற்றொன்று : வாடும் இந்தியா ( Suffering India )     என்றவாறு இந்திய ஆட்சியாளர்களே பிரித்து வைத்திருக்கிறார்கள். ''வளமான இந்தியாவில்'' ஆட்சியாளர்களின் சலுகைகளை பெற்றும், மக்களை சுரண்டியும்  வளமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். இவர்களுக்காகத் தான் ஆட்சியாளர்கள் ஆட்சி நடத்துகிறார்கள். இங்கே உள்ள பணக்காரர்கள் பல லட்சம் கோடிகளை சுருட்டி மேலும் மேலும் பணக்காரர்களாகின்றனர். அதே சமயத்தில் ''வாடும் இந்தியாவில்'' வாழும் மக்கள் பொருளாதாரத்தில் ஆட்சியாளர்களால் பின்னோக்கித்  தள்ளப்பட்டு  ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகவே வறுமையில் வாடுகிறார்கள். இவர்கள் அரசால் திணிக்கப்படும் வரிச் சுமைகள், அரசு நடவடிக்கை எடுக்காததால் உயர்ந்து கொண்டேப்போகும் விலைவாசி, அதிகாரத்திலிருப்பவர்கள் - ஆட்சியாளர்கள் செய்யும் சுரண்டல்கள் இவைகளால் இந்த மக்களின் பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகையில் 95 சதவிதத்தினர்களான இவர்களைப் பற்றிய அக்கறை என்பது ஆட்சியாளர்களுக்கு இல்லை. ஊழல் என்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தலை விரித்தாடுகிறது. மக்களுக்கு சேரவேண்டிய நிதியை ஊழல் செய்து சொத்து சேர்க்கிறார்கள். இங்கே ஊழல் என்பது அறிவிக்கப்படாமலே தேச உடைமை செய்யப்பட்டிருக்கிறது.

கனவாகிகொண்டேப் போகும் சமூக விடுதலை..

              சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் ஆகியும் இந்தியாவில் சமூக விடுதலை என்பது ஒரு தொலைதூரக் கனவாகவே - ஒரு எட்டாக் கனியாகவே உள்ளது. தீண்டாமைக் கொடுமை என்பதும் நம் நாட்டில் பல இடங்களில் இப்போதும்  கொழுந்து விட்டு எரிந்து கொண்டுதான் இருக்கிறது. அரசின் திட்டங்கள் ஒடுக்கப்பட்ட பகுதியில் வாழும் கடைசி மனிதன் வரை போய்   சேர்வதில்லை என்பது தான் உண்மை. இன்றைக்கு அரசுத் துறைகளும், அரசு சார்ந்த துறைகளும்  தனியார்மயமாவதால், போராடிப்பெற்ற இடஒதுக்கீடு  என்ற உரிமை மெல்ல மறைந்து கல்வியிலும்  வேலைவாய்ப்பிலும்  இடஒதுக்கீடு என்பதே காணாமல் போய்கொண்டிருக்கிறது. அவர்களைப் பற்றி ஆட்சியாளர்களும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
             ஆனந்த சுதந்திரம் என்பது வெறும் அரசியல் சுதந்திரம்  மட்டுமன்று, அதனுடன் பொருளாதார சுதந்திரமும்,   சமூக சுதந்திரமும் சேர்ந்ததே. மூன்றும் சேர்ந்த ஆனந்த சுதந்திரம் பெற்றால் தான் பகத்சிங் சொன்னது போல்..
''பாலுக்கு அழும் குழந்தை; கல்விக்கு ஏங்கும் மாணவன்;
வேலை தேடும் இளைஞன்; வறுமையில் வாடும் தாய்;                                  இவர்கள் இல்லாத இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா''