ஆசிரியர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசிரியர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

மோடிக்கு பயந்து கழிவறையில் ஒளிந்துகொண்ட குழந்தைகள்...!

                  இரண்டு நாட்களுக்கு முன்பு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ''குரு உத்சவ்'' என்ற பெயரில் பிரதமர் நரேந்திரமோடி எதிர்கால வாக்காளர்களான இன்றைய பள்ளி மாணவ - மாணவியர்களை தன்  பக்கம் கவர்ந்திழுப்பதற்காக நாடு முழுதும் உள்ள பள்ளி குழந்தைகளுடன் ''வீடியோ கான்பரன்சிங்'' மூலம் மாலை இரண்டு மணிநேரம் பேசி உரையாடினார். பொதுவாக அந்த நேரம் என்பது குழந்தைகள் வகுப்புகளை முடித்து களைப்படைந்து ஓய்ந்து போய் வீடு சென்று சேரும் நேரம். குழந்தைகளின் அந்த ஓய்வு நேரத்தை பிரதமர் மோடி பிடுங்கிக்கொண்டார் என்று தான் சொல்லவேண்டும். நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் கட்டாயமாக பெரிய திரையில் குழந்தைகளுக்கு காண்பிக்கவேண்டும் என்றும், பள்ளிக் குழந்தைகள் அனைவரும் முழுமையாக அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு உறுதிசெய்யவேண்டும் என்றும் மத்திய - மாநில அரசுகள் பள்ளிகளை கெடுபிடி செய்தன. பதிலுக்கு பள்ளிகளும் குழந்தைகளிடம் ''உங்களுக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ... கட்டாயமாக அன்றைய தினம் விடுமுறை எடுக்கவோ அல்லது நிகழ்ச்சிக்கு முன்பே வீட்டிற்கு விரைந்து சென்றுவிடுவதோ கூடாது'' என்று பள்ளிகள்  இன்னொரு பக்கம் குழந்தைகளை கெடுபிடி செய்தன.
               அரசு எதிர்ப்பார்த்தது போல் நாட்டிலுள்ள எல்லா பள்ளிகளும் மோடியின் பேச்சை ஒளிப்பரப்புவதற்காக பெரிய திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாட்டிலுள்ள பெரும்பாலான குழந்தைகள் மோடியின் பேச்சில் ஈர்ப்புக்கொள்ளவில்லை. தொடர்ந்து உட்கார்ந்து மோடியின் பேச்சை கேட்பதற்கு இருப்பும் கொள்ளவில்லை.  மாறாக குழந்தைகள்  இதிலிருந்து தப்பிக்கிறது எப்படி என்று தான் யோசித்தார்கள். மோடி பேசிக்கொண்டிருந்த போதே பெரும்பாலான குழந்தைகள் உச்சா வருவதாக சொல்லி வகுப்பறையை விட்டு கழிவறைக்கு சென்று பதுங்கியிருக்கிறார்கள். விளையாட்டு மைதானத்தில் பதுங்கியிருக்கிறார்கள். பல பள்ளிகளில் குழந்தைகள் உச்சா போவதற்கு கூட அனுமதி மறுக்கபட்டிருக்கிறது. அந்த நேரம் என்பது குழந்தைகள் தங்கள் வீட்டில் சிற்றுண்டி உண்ணும் நேரம் என்பதால், பெரும்பாலான குழந்தைகள் பசியோடு இருந்திருக்கிறார்கள். குழந்தைகள் சாப்பிடுவதற்கு பள்ளி நிர்வாகமும் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அந்த அளவிற்கு குழந்தைகளை ''கட்டிப்போட்டு'' பிரதமரின் பேச்சை கேட்க செய்திருக்கிறார்கள். என்ன கொடுமையடா சாமி...? மோடியின் ''குரு உத்சவ்'' என்பது குழந்தைகள் மீதான வன்முறையாகவே கொண்டாடப்பட்டிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.
               பாவம் மோடி....! அவர் எதிர்ப்பார்த்தபடி அவரையோ அல்லது அவரது பேச்சையோ குழந்தைகள் ரசிக்கவில்லை. மாறாக அவருக்கு பயந்து ஓடி ஒளிந்துகொண்டார்கள்  என்பது தான் உண்மை.

வியாழன், 4 செப்டம்பர், 2014

மோடியின் ''குரு உத்சவ்'' - பள்ளிகளில் கெடுபிடி...!

                 நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவித்த காலத்திலிருந்தே ஒரே ''திணிப்பு'' தான். நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன்னரே மோடி தான் பிரதமராக வருவார் என்ற ''கருத்துத் திணிப்பு'' ஆட்சிக்கு வந்த பின்பு ''ஹிந்தி திணிப்பு'' பின்னர் ''சம்ஸ்கிருத திணிப்பு'' ரம்சான் நோன்பிருந்த இஸ்லாமிய இளைஞன் வாயில் ''சப்பாத்தி திணிப்பு'' இப்போது ஆசிரியர் தினத்திற்கு பதிலாக ''குரு உத்சவ்'' என்ற ''பெயர் திணிப்பு'' அந்த விழாவையொட்டி பள்ளிக்குழந்தைகளின் மீது மோடியின் ''காட்சி திணிப்பு'' ஒரே திணிப்பு தான் போங்க. ''திணிப்பு புகழ்'' மோடி என்று எதிர்கால வரலாறு பேசும். மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, மோடி மூளையில் உதித்ததை கூச்சப்படாமல் மக்களிடம் திணித்து விடுவார்.
             அப்படித்தான் இத்தனை ஆண்டுகளாக நாடு முழுதும் மறைந்த இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை கல்வியாளர் - அறிஞர் என்ற முறையில் ''ஆசிரியர் தினமாக'' சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. மோடி ஆட்சிக்கு வந்தாரு ஆசிரியர் தினத்தை ''குரு உத்சவ்-ன்னு'' மாத்திட்டார். அந்த புதிய பெயரை பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைங்க மூளையில கட்டாயமாக திணிச்சார். குரு  உத்சவ் என்ற பெயரில் நாட்டிலுள்ள எல்லா பள்ளிகளிலும் செப்டம்பர் - 5 அன்று மாலை ''மோடி உத்சவ்'' நடக்கும் என்றும், நேரலையில் பள்ளிக்குழந்தைகள் மத்தியில் ஒன்றரை மணி நேரம் காட்சிக் கொடுப்பார் என்றும், அதற்கான ஏற்பாடுகளை செய்து பள்ளிக்குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை ''கட்டாயம்'' பார்க்கச் செய்யவேண்டுமென்றும் நரேந்திரமோடி மற்றுமொரு ''திணிப்பை'' செய்திருக்கிறார். 
              இப்போது நாட்டுல ஜெனங்க - குழந்தைங்க எல்லோரும் டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனையும் மறந்துட்டாங்க... ஆசிரியர் தினத்தையும் மறந்துட்டாங்க. அதுமட்டுமா காலையில் பள்ளிக்கு வந்துட்டு பாடம் சொல்லிக்கொடுத்து விட்டு, பாடம் படித்துவிட்டு ஆசிரியர்களும், மாணவ - மாணவியர்களும் களைச்சிப் போயி வீடு சென்று சேரும் நேரத்தில், உத்சவத்தை பாரு... மோடிய பாருன்னு மாலை 5.30 மணி வரையில் ஸ்கிரீன்ல அந்த மூஞ்சியே பார்த்துகிட்டு இருக்கணும்னு கட்டாயமா திணிச்சதுல ஆசிரியர்களும், பொதுமக்களும், பள்ளிக் குழந்தைகளும் கொதிச்சிப்போயி இருக்கிறாங்க. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கெடுபிடி செய்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதுவும் தனியார் பள்ளிகளில் கேட்கவே வேண்டாம். சுற்றறிக்கை எட்டடி பாஞ்சா... நிர்வாகமோ  பதினாறு அடி பாய்வார்கள். மோடி நிகழ்ச்சி பிடிக்கிறதோ அல்லது பிடிக்கலையோ அவசியம் நாளைய தினம் கட்டாயம் பள்ளிக்கு வந்துவிடவேண்டும். பள்ளிக்கு வராம லீவு போட்டாலோ அல்லது வந்துட்டு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னரே கிளம்பிவிட்டாலோ டி. சி கொடுக்கப்படுமென்று நிர்வாகம் கெடுபிடி செய்கிறது. இந்த கட்டாய திணிப்பைப் பற்றி நிர்வாகத்திடம் கேட்டால், அரசு இப்படித்தான் எங்களை கட்டாயப்படுத்துகிறது என்று சொல்கிறார்கள். 
              ''குரு உத்சவ்''-ல மோடி என்னன்ன ''சேஷ்டைகளை'' செய்யப்போகிறாரோ என்று ஆசிரியர்களும், குழந்தைகளும் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

வியாழன், 5 செப்டம்பர், 2013

யார் நல்லாசிரியர்....?

      
     
''மாற்று'' - வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட எனது கட்டுரை : 

              இன்று  ஆசிரியர்  தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 -ஆம் தேதி நாடு முழுதும் ”ஆசிரியர்கள் தினம்” சிறப்பாக கொண்டாடுப்படுகிறது.  மத்திய – மாநில அரசுகள் கடந்த காலங்களில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர் – ஆசிரியைகளை தேர்ந்தெடுத்து ”நல்லாசிரியர் விருது” அளித்து வருகிறது.
           ஆனால் நம் மனதில் எப்போதும் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். விருது பெற்றவர்கள் மட்டுமே நல்லாசிரியர்களா..? இதில் அரசியல் தலையிடு இல்லையா? தேர்வு முறைகளில் நியாமான வகையில் இருக்கிறதா? இத்தகைய கேள்விகள் இருந்தாலும் விருதுபெறாத பெற விரும்பாத  மற்ற ஆசிரியர்களெல்லாம் நல்லாசிரியர்கள் இல்லையா..?  அப்படியென்றால், யார் நல்லாசிரியர்..? இப்படியெல்லாம் கேள்விகள் நமக்குள்ளே எழுந்து கொண்டே இருக்கும்.
          தூய்மையான குடிநீர் இல்லாமலும், ஊட்டச்சத்துள்ள  உணவு  இல்லாமலும், வாழ இருப்பிடமில்லாமலும், சுகாதாரமான கழிப்பிட வசதி இல்லாமலும்,  கல்வி பெரும் சூழல் இல்லாமலும், பாதுகாப்பும் பரிவும் இல்லாமலும் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான வசதியற்றக் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் மட்டும் அரசு ஆசிரியராக பணிபுரிந்து கொண்டு, தன் வீட்டுக் குழந்தைகளை மட்டும் தன்னலத்தோடு தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறார்களே…. அந்த ஆசிரியர்கள் நல்லாசிரியர்களா..?
         மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று வாழ்க்கை நடத்தும் ஆசிரியர்கள், இந்த கல்விக்காக ஏங்கும் – கல்விக்காக தவிக்கும் மாணவ சமூகத்தின் ஒட்டுமொத்த நன்மைக்காக தனது வருமானத்தில் சிறு பகுதியையோ அல்லது மற்றவர்களை விட தங்களுக்கு அதிகமாக கிடைத்துள்ள ஓய்வு நேரத்தையோ செலவிடாமல்,  தன் வருமானத்தை மேலும் பெருக்கிக் கொள்ள காலையிலும் மாலையிலும் தனி வகுப்பு நடத்துகிறார்களே…. அந்த ஆசிரியர்கள் நல்லாசிரியர்களா..?
         மனித மாண்புகளையும், மனித உரிமைகளையும், மனிதநேயத்தையும் கற்றுக் கொடுக்காமல், பன்னாட்டுக் கம்பெனிகளில்  அடிமை வேலைகள்  செய்ய கற்றுக் கொடுக்கும் இன்றைய கல்வி முறையின் குறைகளைப் பற்றி சற்றும் சிந்திக்கத் தெரியாமலேயே, தான் உண்டு  தன் வேலை உண்டு என்ற வாழ்வியல் சிறைக்குள்ளே பிள்ளைகளை  அடைத்து, எதிர்காலத்தில் தவறுகளை தட்டிக்கேட்கவும், அநீதிகளை எதிர்க்கவும் எண்ணமில்லாத  மனிதர்களாக, தோல்விகளை தாங்கிக்கொள்ள முடியாத கோழைகளாக மாணவர்களை உருவாக்குகிறார்களே…. அந்த ஆசிரியர்கள் நல்லாசிரியர்களா..?
  • எந்த ஓர்  ஆசிரியர்,  தான்  பணி செய்யும் பள்ளிகளில்  வகுப்பறை சுதந்திரத்தையும் வகுப்பறை ஜனநாயகத்தையும் கடைப்பிடித்து மாணவர்களை சுதந்திரமாக பேசுவதற்கும், சிந்திப்பதற்கும் வாய்ப்பளிக்கின்றாரோ..
  • எந்த ஓர் ஆசிரியர், தன் ஓய்வு நேரத்தை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பள்ளிக்கு வெளியே தனி வகுப்பு எடுப்பதை தவிர்த்து, கல்விக்காக ஏங்கும் மாணவர்களை கைகொடுத்து கரையேற்றத் துடிக்கின்றாரோ..
  • எந்த ஓர் ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவர்கள் ஒருவர் கூட வெளியில் தனிவகுப்புக்கு செல்லும் கட்டாயத்தை  உருவாக்காமல்  தன்னலமில்லாமல் நேர்மையாக கல்வி அளிக்கின்றாரோ…
  • எழுதப் படிக்க மட்டும் கற்றுக்கொடுப்பது ஓர் ஆசிரியரின் பணியல்ல.. வெறும் மனப்பாடத் திறமையில் தகவல் தொகுப்பாக மாணவர்களை தகுதியானவனாக மாற்றுவது ஓர் ஆசிரியரின் கடமையல்ல.. மாறாக ஒட்டு மொத்த சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் விருப்பு வெறுப்பின்றி விசாரணை செய்வதும், அதன் மூலம் சமூக அநீதிகளைக் களைவதும், ஒரு சிலர் மட்டும் அனுபவிக்கும் முறையற்ற செல்வப் பகிர்வை ஒழித்து உலகில் உள்ள அனைவருக்கும் பயனுடையதாக மாற்றுவதும் ஓர் ஆசிரியரின் நோக்கமாக இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட ஆசிரியர்களே மிக சிறந்த ஆசிரியர்களாக இருக்க முடியும். அவர்களே இந்த தேசத்தின் நல்லாசிரியர்கள் என்பதை நாடு உணரவேண்டும். இத்தகைய நோக்கோடு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நாம் சொல்வோம் ஒரு வாழ்த்து ஆசிரியர் தின நல்வாழ்த்து.

இப்படியும் ஒரு பேராசிரியர்...! இவர் தான் நல்லாசிரியர்....!

 
இப்படியும் ஒரு பேராசிரியர்....!!!

இந்திய சுதந்திர வேள்வியில் மாணவர்கள் குதித்திருந்த நேரம் அது...! 
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் மாணவர்களின் யாகசாலையாக இருந்தது....!

சைமன் கமிஷனுக்கு எதிராக கங்கை ஆற்றினுள் நீந்திச்  சென்று பி.ராமமூர்த்தி தன் சகமாணவர்களொடு கறுப்புக் கோடி கட்டிய பல்கலைக்கழகம் அது தான் !

அப்போது  அங்கு அவர் பேராசிரியராக  இருந்தார் !

பிரிட்டிஷ் போலிஸ் மோப்பம் பிடித்துவிட்டது...! பல்கலைக்கழக  வளாகத்தைச் சுற்றி வளைத்து மாணவர்களை பிடிக்க விரும்பியது...!  அன்று அந்த பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் அந்த பேராசிரியர் தான்...! பல்கலைக்கழக  வளாகத்திற்குள் போலீசார் வரக்கூடாது என்று உத்திரவிட்டார்...!

அதுமட்டுமல்ல சுதந்திர வேட்கையில் திளைத்திருந்த மாணவர்களை பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கமாட்டேன் என்று அறிவித்தார்...!

அவரையும் மீறி போலிஸ் உள்ளே நுழைந்தால் என்ன செய்வது ...?

மாணவர்கள் துணைவேந்தரை சந்தித்தார்கள்...! நிலைமையை அவரும் பரிசீலித்தார்...! 

"நீங்கள் வளாகத்தில் இருக்கும் வரை உங்களுக்கு நான் பாதுகாப்பு...! என்னையும் மீறி போலிஸ் நுழைந்தால் .... கவலைபடாதீர்கள்...! இரவோடு இரவாக  கிராமப்புறங்களுக்கு ஓடிவிடுங்கள்...! அந்த கிராமத்து மக்கள் உங்களை போலீசிடமிருந்து காப்பாற்றுவார்கள்...!" என்று மாணவர்களுக்கு தைரியம் கொடுத்தார் அந்த துணைவேந்தர் !

மறுநாள் போலீஸ் பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த போது அவர்கள் தேடிவந்த மாணவர்கள் அங்கு இல்லை...! 

அந்த துணைவேந்தர் வேறு யாருமில்லை... அவர் தான் பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்...!
 
இந்தியாவின் தூதுவராக மாஸ்கோ சென்று ஸ்டாலினை சந்தித்த ஒரே இந்தியர் !!!
 
தோழர் காஷ்யபன் அவர்கள் கட்டுரையிலிருந்து....!