மத்திய பட்ஜெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மத்திய பட்ஜெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 மார்ச், 2015

கார்ப்பரேட் ஏழைகளும் பன்னிரண்டு பூஜ்யங்களும்...!

                                                                                                     
கட்டுரை : பி.சாய்நாத், மூத்த பத்திரிக்கையாளர்                   
           
           தங்கம், வைரம் மற்றும் ஆபரணங்கள் ( இவையெல்லாம் சாதாரண மக்கள் பயன்படுத்திடும் பொருட்களா என்ன? ) போன்றவை இறக்குமதி செய்யப்படும்போது அவற்றின் மீது விதிக்கப்படும் சுங்கவரியில் 75,592 கோடி ரூபாய் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இத்தொகையானது மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டத்திற்கு `முன்னெப்போதும் இருந்திராத அளவு’ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையைக் காட்டிலும் இரண்டு மடங்கிற்கும் கூடுதலான ஒன்றாகும்.
            மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் என்பது பல நூறு கோடி மனித உழைப்பு நாட்களை பல லட்சக்கணக்கான கிராமப்புற ஏழைக் குடும்பங்களுக்கு கடந்த பத்தாண்டுகளில் அளித்தது என பேராசிரியர் ஜெயதி கோஷ் குறிப்பிடுகிறார். ஏழை மக்களுக்கு பயனளித்திடும் இத்தகையதொரு திட்டத்திற்கு வெறும் 34,699 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் விலைமதிப்பு மிக்க ரத்தினங்கள் மீது தள்ளுபடி செய்யப்பட்ட வருமானத்தின் அளவு என்பது மொத்தமாக சுங்க வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட தொகையில் நான்கில் ஒரு பகுதியாகும்.
          விவசாயத்திற்கான ஒதுக்கீடு என்பது முந்தைய ஆண்டோடு ஒப்பிட்டு பார்க்கிறபோது 5,000 கோடி ரூபாய்க்கும் மேலாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தங்கத்தின் மீதான சுங்க வரிச் சலுகை என்பது கடந்த 12 மாதங்களில் இருந்த அளவை விட ஐந்து மடங்கிற்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.

42 டிரில்லியன் ரூபாய்               

           இதனிடையே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகை என்பது 42 டிரில்லியன் ரூபாய் (ஒரு டிரில்லியன் என்பது நூறாயிரம் கோடி) என்ற அளவை இந்த ஆண்டு தாண்டியுள்ளது. வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை கொண்டு வருவோம் என நரேந்திரமோடி அரசு சூளுரைத்ததே, அந்த கருப்புப் பணத்திற்கு சொந்தக்காரர்களாக இருப்பவர்களுக்கு புரிந்திடும்படி சொல்ல வேண்டும் எனில், இதனை 678 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என குறிப்பிட வேண்டும்.
          42 என்கிற எண்ணுக்குப் பிறகு வருகின்ற பன்னிரண்டு பூஜ்யங்களைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் கார்ப்பரேட் ஏழைகளுக்கு(?!) நிவாரணமாக 5,89,285.2கோடி ரூபாய்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதுவே, தனிநபர் வருமான வரியில் அளிக்கப்பட்டுள்ள லேசான சலுகையை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனில், கார்ப்பரேட்களுக்கு நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ள தொகையின் அளவு 5.49 லட்சம் கோடி ரூபாய்கள் (சுமாராக 88 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும்.
          கார்ப்பரேட் வருமான வரி, கலால் வரி மற்றும் சுங்கத் தீர்வை ஆகிய மூன்று பிரிவுகளில் மட்டும் தர்ம தாராளத்துடன் சலுகைகள் இவர்களுக்கு அள்ளி வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அளிக்கப்பட்டுள்ள 5.49 லட்சம் கோடி ரூபாய்களோடு சேர்த்து கடந்த பத்தாண்டுகளாக கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகை என்பது 42.08 டிரில்லியன் ரூபாய்களாகும். பொதுமக்களின் வரிப்பணத்தில் இந்த கார்ப்பரேட் விருந்தாளிகள் கும்மாளமடித்து வருகிறார்கள்.

140 சதவீதம் அதிகம்                 

              2005-06ம் ஆண்டிலிருந்துதான் தள்ளுபடி செய்யப்பட்ட வருமானத்தின் பட்டியலை அரசு வெளியிடத் துவங்கியது. எனவேதான் கடந்த 10 ஆண்டுகளாக அளிக்கப்பட்ட தொகை என சொல்கிறோம். உண்மையில் சொல்லப் போனால், இன்னும் கூடுதலான காலத்திற்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அப்படியானால் இதற்கு முந்தைய ஆண்டுகளில் அளிக்கப்பட்ட சலுகைகளை எல்லாம் கூட்டினால் மொத்தத் தொகை எவ்வளவாக இருக்கும்? நிச்சயம் அது ஒரு மிகப் பெரியதொரு தொகையாக இருந்திடும்.
          கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகை தொடர்பான புள்ளிவிவரங்கள் அளிக்கப்பட ஆரம்பித்த பின்னர் உள்ள தொகைகளை கூட்டினால் அது 5.49 லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும். இந்த அளவிற்கு இதற்கு முன்எப்போதும் அளிக்கப்பட்டதில்லை. இந்த ஆண்டு அளிக்கப்பட்டுள்ள சலுகை என்பது, இத்தகைய புள்ளிவிவரம் நமக்கு கிடைக்கத் துவங்கிய ஆண்டான 2005-06ம் ஆண்டில் அளிக்கப்பட்ட சலுகையின் அளவை விட கிட்டத்தட்ட 140 சதவீதம் அதிகம் ஆகும். 

மோடியின் புதிய பாணி                 

              இந்த ஆண்டு சலுகைகள் என்பது புதிய பாணியில் அளிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு பார்த்தோமேயானால், கார்ப்பரேட்டுகளின் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரியில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 2013-14ம் நிதியாண்டு வரை இது கார்ப்பரேட் வரி செலுத்துவோரின் மிக முக்கியமானதொரு செலவினமாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரி செலுத்துவோருக்கு அளிக்கப்படும் `ஊக்கத்தொகை’ என இதற்கு புதிதாக நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. ஆம்.. இது கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகையே ஆகும். அரசிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்ட ஒன்றல்ல. பாஜக அரசின் கீழ், `வீண் செலவாகிய’ மானியங்கள் அளிப்பது என்ற பழைய நடைமுறை மீண்டும் இடம் பெறாது என “நம்புவதாக” சென்ற ஆண்டு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார். மேலும், நிலவுகின்ற காலச்சூழலைப் பொறுத்து அது அமைந்திடும் என்றும் குறிப்பிட்டார். எனவே, தற்போது அத்தகையதொரு காலச்சூழல் அவரைப் பொறுத்தவரை கனிந்துவிட்டது. முந்தைய ஐமுகூ அரசின் பட்ஜெட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட கார்ப்பரேட்டுகளின் வருமானத்தின் மீதான வரி என்பது 57,793 கோடி ரூபாய்களாகும். மோடி அரசின் முதலாவது ஆண்டில், அது 62,399 கோடி ரூபாய்களாக ஆனது. அதாவது கிட்டத்தட்ட 8 சதவீதம் அதிகரித்தது. இந்த ஆண்டு இத்தொகையின் அளவு இன்னமும் கூடுதலான ஒன்றாகவே இருந்திடும். ஏனெனில், தற்போது மதிப்பீடு செய்யப்பட்ட அல்லது இடைக்கால தொகையே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும்171 கோடி ரூபாய் சலுகை                

           மதிப்பீடு செய்யப்பட்டு அளிக்கப்பட்ட தொகையை எடுத்துக் கொண்டாலும் கூட, அதாவது வருமான வரியில் அளிக்கப்பட்டுள்ள சலுகையை மட்டும் எடுத்துக் கொண்டால், 2014-15 நிதியாண்டின் ஒவ்வொரு நாளிலும் 171 கோடி ரூபாய்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகையாக அளிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 7 கோடிக்கும் கூடுதலான ரூபாய்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த தொகையோடு, தள்ளுபடி செய்யப்பட்ட கலால் வரித் தொகையான 1.84 லட்சம் கோடி ரூபாய்களையும், தள்ளுபடி செய்யப்பட்ட சுங்க வரியான 3.01 லட்சம் கோடி ரூபாய்களையும் சேர்த்து கணக்குப் போட்டால், மொத்தமாக இவர்களுக்கு 5.49 லட்சம் கோடி ரூபாய்கள் அளிக்கப்பட்டுள்ளது என்பதனைப் பார்த்திட இயலும்.

கேட்காதீர்கள்... அது ரகசியம்               

         இந்திய நாட்டு வங்கிகளின் வாராக் கடனாக உள்ள பல லட்சம் கோடி ரூபாய்களில் பெரும்பகுதி இத்தகைய சலுகைகளை அனுபவித்தவர்களிடமிருந்து வரவேண்டிய ஒன்றாகும். ஆனால், ரகசியக் காப்பு சட்டத்தின்படி இவர்களது பெயர்களை வெளியிட இயலாது. இதற்கு முன்எப்போதும் இருந்திராத அளவு கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு இந்த ஆண்டு கூடுதலானதொரு தொகையை அருண் ஜெட்லி ஒதுக்கியிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.
            உண்மையில், வரிகள் வாயிலாக அரசிற்கு கிடைத்திடும் வருமானம் என்பது உற்சாகமளிக்கக் கூடிய வகையில் இருந்தால்... இன்னமும் கூடுதலாக 5000 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்படும் என்றே ஜெட்லி குறிப்பிட்டார். ஒரு நிகழ்வு நடைபெற்றால் அதனையடுத்து மற்றொன்று நிகழும் என்று சொல்லும்போது அது அவ்வாறு நடைபெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதுமட்டுமின்றி, கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள 34,699 கோடி ரூபாய்கள் என்பது உண்மையில் குறைவான தொகையே அன்றி கூடுதலான தொகையல்ல. ஏற்கனவே, மத்திய அரசு இந்த ஆண்டு 6000 கோடி ரூபாய்களை மாநில அரசுகளுக்கு அளித்திடாமல் பாக்கி வைத்துள்ளது.
            எனவே, பேராசிரியர் ஜெயதி கோஷ் குறிப்பிட்டுள்ளபடி, அடுத்த ஆண்டு ஒதுக்கப்படுகிற புதிய தொகை என்பது 30,000 கோடி ரூபாய்களை விட குறைவான ஒன்றாகவே இருந்திடும். எது எவ்வாறு இருந்தாலும் இத்திட்டத்திற்கென ஒதுக்கப்படுகிற தொகை பணவீக்கம் மிக அதிகமாக இருந்த மூன்றாண்டுகளில் இருந்த அளவே இருந்திடும். அதாவது சுமார் 33000 கோடி ரூபாய்களாகவே இருந்திடும். ஆனால், இது குறித்து ஜெட்லி மீது மட்டும் குற்றம் சாட்டுவது சரியாக இருக்காது. இதற்கான துவக்கப்புள்ளி ப.சிதம்பரம் காலத்திலேயே வைக்கப்பட்டுவிட்டது.

121 ஆண்டுகளுக்கு செலவழிக்கலாம்!              

         கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு தற்போது செய்யப்படும் நிதி ஒதுக்கீட்டின் அளவின்படி பார்த்தால், முதலாளிகளுக்கு சலுகையாக அளிக்கப்படுகிற 42 டிரில்லியன் ரூபாய்களைக் கொண்டு அடுத்து வருகின்ற 121 ஆண்டுகளுக்கு அதனை செயல்படுத்திடலாம். ஆனால், நாடாளுமன்றத்தின் அவையிலே இத்திட்டத்தை இழிவுபடுத்தி பேசுகின்ற பிரதமரைக் கொண்ட நாடாக இருக்கும் வரை, இதனை நாம் செய்திட மாட்டோம்.
34 ஆண்டுகளுக்குமானியம் தரலாம்!              
         தற்போது உணவு மானியத்திற்கு அளிக்கப்படும் தொகையின் அளவீட்டின்படி, இந்த 42 டிரில்லியன் ரூபாய்களைக் கொண்டு அடுத்து வரும் 34 ஆண்டுகளுக்கு இந்த மானியத்தை மக்களுக்கு தொடர்ந்து அளித்திடலாம். “குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான திட்டங்களுக்கான நிதியில் 22 சதவீதம் வெட்டப்பட்டுள்ளது”, “குழந்தைகளின் ஒட்டுமொத்த கல்விக்கான திட்டங்களுக்கான ஒதுக்கீடு 25 சதவீதம் வெட்டப்பட்டுள்ளது” என குழந்தைகளின் உரிமைகளுக்கான மையம் தெரிவிக்கிறது.
            இந்நிலையில், 42 டிரில்லியன் ரூபாய்களைக் கொண்டு சுகாதாரம் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான திட்டங்களுக்கான நிதிகள் வெட்டிச் சுருக்கப்பட்டதை மாற்றியமைத்திடலாம்.
குழந்தையா? தங்கமா?                 
         ஆனால், தள்ளுபடி செய்யப்பட்ட வருமானம் குறித்த பட்டியலைப் பார்த்தால் கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் இலவசங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் மதிப்பு மிகுந்த ரத்தினங்கள் மீது தள்ளுபடி செய்யப்பட்ட சுங்க வரித் தொகை என்பது 2014-15ம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்தத் தொகையில் 10 சதவீதமாகும். 2005-06 முதலான பத்தாண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், இறக்குமதி செய்யப்பட்ட தங்கம், வைரம் மற்றும் ஆபரணங்கள் மீது தள்ளுபடி செய்யப்பட்ட சுங்க வரி என்பது 4.3 டிரில்லியன் ரூபாய்களாகும்.
           குழந்தைகளின் மேம்பாட்டை தடுத்து நிறுத்தி, தங்கத்தை அதிகரித்திடும் நடவடிக்கையே இது. சலுகையாக அளிக்கப்படுகிற இந்த 42 டிரில்லியன் ரூபாய்கள் எல்லோருக்குமானது. இதனுடைய பலன் அனைவருக்கும் கிடைக்கிறது என இத்தகைய “ஊக்கத் தொகைக்கு” வக்காலத்து வாங்குகிறவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இத்தகைய சலுகையின் பெரும்பகுதி செல்வச் சீமான்களையே சென்றடைகிறது என்பது மறைக்க முடியாத உண்மையாகும்.
ஏழையின் பணம்                 
             இவ்வாறாக செல்வந்தர்களுக்கு வாரி இறைக்கப்படும் மக்களின் வரிப்பணம் குறித்த விவரங்கள் பொதுமக்களுக்கு முழுமையாகத் தெரிந்திடவில்லை. உதாரணமாக சொல்லவேண்டுமெனில், பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடனாக நிலுவையில் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய்களில் பெரும்பகுதி இத்தகைய செல்வந்தர்களால் திருப்பிச் செலுத்தப்படாதவை ஆகும். ஆனால், ரகசியக் காப்பு என்ற பெயரில் இவர்களது பெயர்கள் வெளியிடப்படுவதில்லை. கார்ப்பரேட் ஊடகமும் இவர்களது பெயரை வெளியிடாமல் இருப்பதில் ஆனந்தம் அடைகிறது.
            தங்களிடம் உள்ள சிறு சிறு தங்க நகைகளை அடமானம் வைத்து அதனை திருப்ப முடியாமல் போகிற சாதாரண மக்களின் நகைகள் ஏலம் விடப்படுவது குறித்த விளம்பரங்களையும், சிறு தொகையை பெற்று திருப்பிச் செலுத்தாதவர்கள் குறித்த விளம்பரங்களையும் ஊடகத்தில் நாம் பார்க்கிறோம். இதுதான் இவர்களது நியாயமும் தர்மமும் ஆகும். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத நூற்றுக் கணக்கான செல்வந்தர்களின் பட்டியலை கடந்த ஆண்டு வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்டபோது கார்ப்பரேட் ஊடகம் கனத்த மௌனத்தையே சாதித்தது.
        இதற்கு மேலும் இதனை மூடி மறைத்திட முடியாது என்ற நிலை தோன்றுகின்ற வரை இந்த மௌனம் நீடிப்பதனை பார்க்க முடிகிறது. இதுமட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளிடமிருந்து நிலம் பறிக்கப்பட்டு, மிக மலிவானதொரு விலையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கை மாற்றப்பட்டுள்ளன. செல்வந்தர்களுக்கு இவற்றையெல்லாம் வாரி இறைக்கிறவர்கள் தான் ‘இலவசம்’ என்பது சாத்தியமல்ல என சொல்கிறார்கள்.
தமிழில் : எம்.கிரிஜா                                 
நன்றி : தீக்கதிர்

வெள்ளி, 11 ஜூலை, 2014

மக்களை ஏமாற்றும் மோடியின் பட்ஜெட்...!

                       ''வளர்ச்சி நாயகன்'' மோடி ஆட்சிக்கு வந்தால் கடந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உயர்ந்துகொண்டே போன அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அடக்கி கட்டுப்படுத்திவிடுவார் என்று என்றெல்லாம் சொல்லி மக்களை நம்பவைத்து, அவர்களின் ஓட்டுக்களை வாங்கி ஆட்சியில் அமர்ந்த ''வளர்ச்சி நாயகன்'' நரேந்திர மோடி தன்  சுயரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாக காட்டுகிறார். பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்து மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு ''அல்வா'' கொடுத்துகொண்டே இருக்கிறார். அந்த ''அல்வா'' வழங்குதலின் ''ஹைலைட்டாக'' அமைந்தது தான் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் என்பதை மக்கள் உணர்ந்துகொண்டார்கள். 
               ஏழை எளிய மக்களுக்கு சாதகமாக பட்ஜெட்டில் எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. விவசாயம், தொழிற்சாலைகளுக்கு பட்ஜெட்டில் இடமளிக்கவில்லை. அதனால் புதிய வேலைவாய்ப்புகளுக்கும் வாய்ப்பில்லை. மக்களின் வாழ்வாதாரம் உயர அவர்களின் வருமானத்தை உயர்த்தும் எண்ணம் பட்ஜெட்டில் துளியும் இல்லை. வருமானம் தான் உயரவில்லை. ஏறும் விலைவாசியையாவது குறைக்கும் யோசனை கொஞ்சம் கூட இல்லை என்பது வெட்கக்கேடானது. ஆனால் மாதச் சம்பளக்காரர்களுக்கு ஒருசில சில்லறைச் சலுகைகளை தந்து திருப்திப்படுத்திவிடலாமென்று நினைத்துவிட்டார் மோடி. 
            வருமான வரிச்சலுகை 2 இலட்சத்திலிருந்து 2.5 இலட்சமாக உயர்த்தியும்,  80-C - சேமிப்புக்கான வரிச்சலுகையாக ரூ.1 இலட்சமாக இருந்ததை 1.5 இலட்சமாக உயர்த்தியும் அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் மாதச்சம்பளக்காரர்களை தனது ஆதரவுக் கூட்டமாக மாற்றிவிடலாம் என்று பகல் கனவு கண்டிருக்கிறார் மோடி. ஆனால் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பே பாராளுமன்றத்தையே மதிக்காமல் பெட்ரோல், டீசல், சமையல் காஸ், சர்க்கரை ஆகியவற்றின் விலைகளையும், இரயில் கட்டணங்களையும் கடுமையாக உயர்த்திவிட்டு, பட்ஜெட்டில் வருமான வரி சம்பந்தமான சில்லரைச் சலுகைகளை தந்து மக்களை ஏமாற்றியிருக்கிறார் நரேந்திர மோடி என்பதை யாராலும் மறுக்கமுடியாது. 
             அத்தியாவசியப்பொருட்களின் விலையுயர்வை தடுப்பதற்கு - விலையேற்றத்திற்கு காரணமான ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்வதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காததன் மூலமாகவும், மேற்கண்ட அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை இவராக உயர்த்தியதன் மூலமாகவும் மக்களின் வாங்கும் சக்தியை குறைத்துவிட்டு சேமிப்பிற்கு 1.5 இலட்சமாக  உயர்த்தியது என்பது நகைப்பிற்குரியது.  இது யாரை ஏமாற்றுகிற வேலை. ஒரு பக்கம் உழைப்பாளி மக்களின் - ஊழியர்களின் வருமானம் உயரவில்லை. இன்னொரு பக்கம் அதற்கு நேரெதிராக விலைவாசி விண்ணை நோக்கி உயர்ந்துகொண்டே போகிறது. இந்த சூழ்நிலையில் இவர்களால் எப்படி சேமிக்கமுடியும்...? - இவர்கள் சேமிப்பிற்கு எங்கே போவார்கள்...? என்கிற பொதுபுத்தி கூட மத்திய நிதியமைச்சருக்கு இல்லாமல் போனது நம்முடைய துரதஷ்டம் தான். வாங்கற சம்பளம் காய்-கறி வாங்கறதுக்கும், மளிகை சாமான்கள் வாங்கறதுக்கும், வண்டிக்கு பெட்ரோல் போடறதுக்குமே சரியா இருக்கு. இதுல எங்கிருந்து சேமிக்கிறது. இந்த சலுகை சாதாரண நடுத்தர மக்களுக்கு எந்தவகையிலும் பயன்தராது. பாத்துகிட்டே இருங்கள்... கூடியவிரைவில் மோடியின் அடிவருடிகள் வழக்கம்போல் மோடிக்கும், அருண் ஜெட்லிக்கும் ''பொருளாதார மேதைகள்'' என்ற நாமத்தை சூட்டினாலும் சூட்டுவார்கள். நாம்ப பார்க்கத்தான் போறோம்.
              மொத்தத்தில் தனக்கு வாக்களித்த மக்களைப் பற்றிய அக்கறையில்லாமல், மாற்றம் விரும்பிய மக்களை ஏமாற்றம் அடையச்செய்த மோடியின் பட்ஜெட் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வியாழன், 22 மார்ச், 2012

இன்சூரன்ஸ் மீது சத்தம் போடாமல் குறி வைத்த மத்திய பட்ஜெட்...!

சேமிப்பை ஒழித்துக் காட்டும் மத்திய அரசின் முயற்சி...!

           இதுவரை இந்திய மக்களின் சேமிப்பு நிதியின் மீதான மத்திய அரசின்   கொள்கை என்பது ''வரி விலக்கு - வரி விலக்கு - வரி விலக்கு'' ( EXEMPT -  EXEMPT - EXEMPT ) என்பதாகும். ஆனால் அமெரிக்காவின் கட்டளைப்படி  ''வரி விலக்கு - வரி விலக்கு - வரி விதிப்பு'' ( EXEMPT -  EXEMPT -TAX )என்ற கொள்கை மாற்றத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க விசுவாசிகளான மத்திய ஆட்சியாளர்கள் முயற்சி செய்து வந்தனர். இதை 2004 - ஆம் ஆண்டிலேயே அன்றைய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தன்னுடைய பட்ஜெட் உரையில் கோடிட்டுக் காட்டினார் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. 
             அதன் பொருள் என்னவென்றால், இதுவரையில் மக்கள் சேமிப்புக்காக தாங்கள் சேருகிற இன்சூரன்ஸ், பி. எப்., தேசிய சேமிப்பு பத்திரம், வங்கி சேமிப்பு போன்ற சேமிப்புகளுக்கு அந்தந்த ஆண்டுகளுக்கும் ''வரி விலக்கு'' பெறுகிறார்கள். அதேப்போல் அந்த சேமிப்புகளுக்கு ஆண்டுதோறும் கொடுக்கப்படும் வட்டி மற்றும் போனஸ் ஆகிய வருமானத்திற்கும் ''வரி விலக்கு'' பெறுகிறார்கள். அதேப்போல் இறுதியில் முதிர்வுத் தொகைகளை திரும்பப்பெறும் போதும் ''வரி விலக்கு'' பெறுகிறார்கள். இது மக்களிடம் சேமிப்பை ஊக்குவிப்பதற்காக கொடுக்கப்பட்ட வரிச்சலுகை ஆகும்.
        ஆனால்,  இப்போதோ... முதிர்வுத்தொகைக்கு ''வரி விதிப்பு'' என்ற கொள்கை மாற்றத்திற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கான அறிகுறிகள் இந்த பட்ஜெட்டில் தெரிகிறது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
              அண்மையில் சென்ற 16 - ஆம் தேதி  பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியினால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்பது சாதாரண மக்களுக்கு எதிரான பல்வேறு முன்மொழிவுகளை கொண்ட பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகளும், பல்வேறு எதிர்க்கட்சிகளும் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியும், குட்டிக்காட்டியும் வருகின்றன. 
               அப்படிப்பட்ட இந்த பட்ஜெட்டில் இன்சூரன்ஸ் சேமிப்பில் இதுவரை வழக்கமாக கொடுக்கப்பட்ட வருமானவரிச் சலுகை என்பது   இந்த முறை கடுமையாக ''இறுக்கப்''பட்டுள்ளது. 
            அதாவது இன்சூரன்ஸ் சேமிப்பில் இதுவரை.... வருமானவரிச் சட்டம் - பிரிவு - 80 C  அடிப்படையில் ஒருவர் தான் தேர்ந்தெடுக்கும் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரிமியம் என்பது அந்த பாலிசியின் காப்புத்தொகையில் 20 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் ரூ.1,00,000 காப்புத்தொகைக்கு இன்சூரன்ஸ் எடுக்கிறார் என்றால் அவர் கட்டவேண்டிய பிரிமியம் என்பது  ரூ. 20,000 - மாகவோ அல்லது அதற்கு குறைவாகவோ இருக்கவேண்டும்.   இருபது சதவீதத்திற்கு மேல் பிரிமியம் இருந்தால், வருமானவரிச் சலுகைக்கு இருபது சதவீதம் மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். அதேப்போல் மக்கள் கட்டக்கூடிய பிரிமியம் இருபது சதவீதத்திற்கும் அதிகமாக   இருந்தாலும், திரும்பப்பெறும் முதிர்வு பலன் மற்றும் இறப்பு ஈடு தொகை எவ்வளவு இலட்சமாக இருந்தாலும், கோடியாக இருந்தாலும் இவைகளுக்கும் வருமானவரிச் சட்டம் - பிரிவு - 10 (10 D ) அடிப்படையில்  வருமானவரிச் சலுகை உண்டு. அதன் மூலம் ஒரு பைசா கூட வரி பிடித்தம் செய்யாமல் முழு தொகையும் மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
              ஆனால், 2012  - 2013 மத்திய பட்ஜெட்டில் மக்களின் எதிர்கால சேமிப்பான இன்சூரன்சில் மத்திய அரசு கடுமையை காட்டியுள்ளது. அது என்னவென்றால்...
            காப்புத்தொகையில் 20 சதவீதமாக அனுமதிக்கப்பட்ட பிரிமியத்தொகை என்பது   இனி வருங்காலத்தில்  10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு....  ரூ.1,00,000 காப்புத்தொகை என்றால், பிரிமியம் என்பது  ரூ. 10,000 - மாகவோ அல்லது அதற்கு குறைவாகவோ இருக்கவேண்டும். பத்து சதவீதத்திற்கு மேல் பிரிமியம் இருந்தால் பத்து சதவீதம் மட்டுமே வரிச் சலுகைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதுமட்டுமல்ல, பத்து சதவீதத்திற்கும் மேல் பிரிமியம் கட்டக்கூடிய அந்த பாலிசியின் முதிர்வு பயன் அல்லது இறப்பு ஈடு பெறும் போது வருமானவரி பிடித்தம் செய்யப்பட்டு பாலிசிதாரருக்கு தரப்படும். 
              இந்த மாற்றம் என்பது 01 - 04 - 2012 தேதிக்கு பிறகு எடுக்கும் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு மட்டுமே பொருந்தும். 
            இன்று இதை மக்கள் அனுமதித்தால் நாளை அனைத்துப் பாலிசிகளுக்கும் வருமானவரி பிடித்தம் செய்ய  மத்திய அரசு தயங்காமல் முயற்சி மேற்கொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. 
          இது உழைப்பால் சேர்த்த மக்களின் சேமிப்புகள் அனைத்திற்கும்  படிப்படியாக வரிவிதிப்பதற்கான முன்னோட்டமாகும். ஏற்கனவே வங்கிகளில் ''FIXED DEPOSIT '' என்று சொல்லக்கூடிய ''நிரந்தர வைப்புநிதியின்'' முதிர்வுத்தொகைக்கு வருமானவரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதையும் மத்திய அரசு சத்தமில்லாமல் புகுத்தியது. இதை அறியாத மக்கள் - குறிப்பாக பணி ஓய்வு பெற்றவர்கள்  தங்கள் பணத்தை பத்திரமாக இருக்கும் என்றும், பலமடங்கு பெருகும் என்றும் இந்த வைப்புநிதியில் தான் போட்டுவைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. PAN CARD வைத்திருப்பவர்களிடம் 10 சதவீதமும், PAN CARD இல்லாத ''பஞ்சப்பரதேசிகளிடம்'' 20 சதவீதமும் வருமானவரியாக பிடித்தம் செய்யப்படுகிறது என்கிற உண்மையை மக்களிடம் சொல்லவேண்டும்.
            இப்படியே மக்கள் வங்கி சேமிப்பு, இன்சூரன்ஸ் சேமிப்பு போன்றவற்றிற்கு வருமானவரி விதிக்கும் அரசின் போக்கை அனுமதித்தால் அடுத்து PROVIDENT FUND ,  தபால் அலுவலக சேமிப்பான NSC பத்திரம் போன்ற  அனைத்து சேமிப்பிற்கும்  வருமான வரி விதிக்கும் தைரியம் மத்திய அரசுக்கு வந்துவிடும்.
               இரயில் கட்டணத்தை உயர்த்தியதற்காக இரயிவே அமைச்சரை பதவி விலகச் செய்த மம்தா, சாதாரண மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் பொது பட்ஜெட்டைக் கொடுத்த மத்திய நிதியமைச்சரை பதவி விலக சொல்வாரா..?

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்? - மத்திய நிதியமைச்சருக்கு தொழிற்சங்கங்கள் ஆலோசனை...!

                                                                                                               
பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்?  - மத்திய நிதியமைச்சருக்கு  தொழிற்சங்கங்கள் ஆலோசனை
              
                 தொடர்ந்து மிகக் கடுமையான அளவிலேயே நீடித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதத்திலும், தீவிரமடைந்து வரும் வேலையின்மை பிரச்சனை மற்றும் பெருமளவில் நிகழ்ந்துவரும் வேலைப் பறிப்பை தடுத்துநிறுத்தும் விதத்திலும், உழைக்கும் மக்களுக்கான சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்கும் விதத்திலும், கொள்கைகளையும், திட்டங்களையும் எதிர் வரும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டுமென அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வலியுறுத்தியுள்ளன.
                         இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சரிடம், பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைகள் அடங்கிய மனு ஒன்றை சிஐடியு, ஏஐடியுசி, பிஎம்எஸ், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐயு டியுசி, ஏஐசிசிடியு, யுடியுசி, டியுசிசி, எல்பிஎப் மற்றும் சேவா ஆகிய மத்திய தொழிற்சங்கங்கள் அளித்துள்ளன.

இந்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரங் கள் வருமாறு:-

                                     இன்றைக்கு நிலவும் உலகப் பொருளாதாரச் சூழலில் நமது நாட்டின் பொருளாதார நிலைமை மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது. நிதி அமைச்சகம் எங்களுக்கு அனுப்பிய இந்திய பொருளாதாரத்தின் நிலைமை குறித்த குறிப்பில் அது பிரதிபலிக்கவில்லை என்றே கருதுகிறோம். மிகக் கடுமையாக நீடித்துவரும் விவசாய நெருக்கடியால் அதிகரித்துள்ள துயரத்திற்கு இடையே, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வானளாவ உயரும் அளவிற்கு நிலைமையை மோசமாக் கியுள்ள பணவீக்கத்தின் விகிதம் ஏற்றுக் கொள்ளமுடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது; மிகப்பெரும் அளவிற்கு வேலைகள் பறிக்கப்பட்டுள்ளன; வேலையின்மைக் கொடுமை நாளுக்குநாள் தீவிரமடைந்து வரு கிறது. இந்த அடிப்படையான பிரச்சனைகள் குறித்து நிதியமைச்சகத்தின் அறிக்கையில் மீண்டும் முழுமையான கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றே கருதுகிறோம்.
                    எதிர்வரும் பட்ஜெட்டானது வறுமை, வேலையின்மை, சமூகக் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படையான பிரச்சனை களுக்கு தீர்வுகாணும் விதத்தில் மக்கள் சார்ந்த பட்ஜெட்டாக இருக்கவேண்டும். அந்த அடிப்படையில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சில குறிப்பிட்ட ஆலோசனைகளை முன் வைக்கிறோம்.

* மேலும் மேலும் தொடர் விளைவாக அதிகரித்துவரும் விலைவாசி உயர்வை தடுத்துநிறுத்தவும், பணவீக்கத்தைக் கட்டுப் படுத்தவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான முன்பேர ஊக வணிகத்தை தடைசெய்ய வேண்டும்; அனைவருக்கும் பொது விநியோக முறையை அமலாக்கி, அதை வலுப்படுத்த வேண்டும்; பணவீக்கத்தை தடுக்கும் நடவடிக்கை களில் ஒன்றாக பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரிகள், தீர்வைகள் போன்றவற்றை முறைப்படுத்த வேண்டும்.

* வேலையின்மை பிரச்சனை மேலும் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், பெரு மளவில் வேலைகள் பறிக்கப்பட்டுவரும் நிலையில், அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனங்கள், இந்திய தொழிலாளர் மாநாட்டின் 43 வது அமர்வு பரிந்துரைத்ததின் படி வேலைக்கு ஆள் எடுப்பதற்கான தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு வழங்கப்படும் அனைத்துவிதமான ஊக்க நிதிகளும், அந்நிறுவனங்கள் தொழிலா ளர்களை வேலைப்பறித்து வீட்டிற்கு அனுப்பு வது, விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாய ஓய்வு கொடுப்பது, வேலைகளையே முடக்கி வைப்பது, கதவடைப்பு செய்வது, கூலியை சரமாரியாக வெட்டுவது போன்ற நடவடிக்கை களில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைக ளுடனேயே அளிக்கப்பட வேண்டும்; மேலும் இந்நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை உரு வாக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்க வேண்டும்.

* சத்துணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம், கல்வி தொண்டர்கள், கவுரவ ஆசிரி யர்கள், கல்விப்பணியாளர்கள் என பெரும் எண்ணிக்கையில் உழைக்கும் மக்கள் ஈடு பட்டு வருகிற துறைகள் ஒழுங்குப்படுத்தப் பட வேண்டும்; சமூக சுகாதார நடவடிக்கை களில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் உட்பட அனைவரும் குறைந்தபட்சக் கூலி மற்றும் சமூகப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும். பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் உச்சநீதி மன்ற வழிகாட்டுதலின் படி ஐசிடிஎஸ் திட் டத்தை அனைத்துக் குழந்தைகளுக்குமான தாக விரிவுபடுத்திட வேண்டும்.

* மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதச் சட்டத்தின் வாய்ப்புகள் நகர்ப்புறப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்; அதே நேரத்தில் இந்தியத் தொழி லாளர் மாநாட்டின் 43 வது அமர்வு ஏகமனதாக பரிந்துரைத்ததின் படி உத்தர வாதமான சட்டப் பூர்வமான கூலியுடன் கூடிய வேலை குறைந்த பட்சம் ஆண்டு ஒன் றுக்கு 200 நாட்கள் வழங் கப்படவேண்டும்.

* வறுமைக்கோடு என்பதன் அடிப்படை யில் விதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுப் பாடுகளையும் நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்; குறிப்பாக முறைசாராத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம் - 2008ன் கீழ் அமையப்பட்டுள்ள திட் டங்களில் பலனடைவதற்கான தகுதி யைப் பொறுத்தவரை, வறுமைக்கோடு என்ற பெயரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படவேண்டும்; மேலும், இந்தியத் தொழி லாளர் மாநாட்டின் 43 வது அமர்வு மற்றும் தொழிலாளர் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆகியவை அளித்த பரிந்துரை யின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள காண்ட்ராக்ட் / தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட 43.5 கோடி முறைசாராத் தொழி லாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங் கிட, தேசிய முறைசாராத் தொழிலா ளர் நிதி யத்திற்கு போதிய நிதியினை இந்தப் பட் ஜெட்டில் ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

* பொதுச் சொத்துக்களை உருவாக்கிட வும், கவுரவமான வேலை வாய்ப்புகளை உரு வாக்கிடவும், அரசின் முதலீடு அவசியம் அதி கரிக்கப்பட வேண்டும். இதற்காக பொதுத் துறை நிறுவனங்கள் அவசியம் வலுப்படுத்தப் பட வேண்டும்; விரிவுபடுத்தப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுவது உட னடியாக தடுத்துநிறுத்தப்பட வேண்டும்; இந்த நிறுவனங்களின் மிகப்பெரும் இருப்புத் தொகையும் உபரியுமாக சேர்த்து ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது; இந்தத் தொகை பலவீனமான மத்திய பொதுத் துறை நிறுவனங்களை மறுசீரமைக்கவும், இதர மத்திய பொதுத் துறை நிறுவனங்களை நவீன மயமாக்கவும், விரிவுபடுத்தப்பட வேண்டும். மத்திய பொதுத்துறை நிறுவனங் கள் சராசரி யாக 0.75:1 என்ற அளவிலேயே பங்குக்கடன் கள் வைத்திருக்கின்றன; ஆனால் தனியார் நிறுவனங்கள் 2.3:1 என்ற அளவில் பொதுத் துறை நிறுவனங்களை விட மிகக் அதிகமான அளவிற்கு கடன் வைத் திருக்கின்றன. எனவே பொதுத்துறை நிறுவனங்கள் வங்கி களிடமிருந்து மேலும் கூடுதலாக கடன் பெறுவதற்கும், பங்குகளை விற்பதன் மூலம் நிதியாதாரத்திற்கு திரட்டு வதற்கு பதிலாக வங்கிக் கடன்கள் மூலமாக நிதியாதாரத்தை திரட்டுவதற்கு அனுமதிக்கப் பட வேண்டும்.

* சமீபத்திய உலகப் பொருளாதார நெருக் கடி காலத்திலும்கூட சோதனைகளை எதிர் கொண்டு உறுதியுடன் நின்ற வங்கிகள் மற் றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளடங்கிய நிதித்துறை மேலும் ஊக்கத்துடன் செய லாற்ற அனுமதிக்கப்பட வேண்டும், விரிவாக் கப்படவேண்டும், அவற்றின் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும், அவற்றின் பொதுத்துறை குணாம் சத்தை பல வீனப்படுத்தும் விதத்திலும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீர்குலைவு நடவடிக்கை களை திணிப்பதற்குப் பதிலாக அவற்றை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வங்கி, இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் சீர்திருத்தத்திற்கான முயற்சிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தொழில் நிறுவனங்கள் வங்கிகளைத் துவக்க அனு மதிக்கப்படக்கூடாது.

* பாரம்பரியத் தொழில்துறைகளான சணல், ஜவுளி, தோட்டக்கலை, கைத்தறி மற் றும் கயிறு போன்றவை எதிர்கொள்ளும் நெருக்கடிகளை சமாளித்து முன்னேற பட் ஜெட்டில் நிதி ஆதாரம் ஒதுக்கப்பட வேண்டும்.

* ஆரம்பக்கல்விக்கு பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவேண்டும்; குறிப்பாக, குழந் தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு மிகச்சிறந்த ஆயுதமாக வந்துள்ள கல்வி உரிமைச்சட்டத்தை முழுமையாக அமல் படுத்தவேண்டியதன் பின்னணியில் இந்த ஒதுக்கீடு அவசியம்.

* மூலப்பொருட்கள் மற்றும் தாதுவளங் களின் ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட வேண் டும்; இந்தத் துறைகளில் உள்நாட்டில் வேலைவாய்ப்பை தொடர்ச்சியாக உருவாக் கும் விதத்திலும், இப்பொருட்களின் மதிப் பினை மேம்படுத்தும் விதத்திலும் அரசு நேரடியாகவோ, அல்லது பொருத்தமான நிதி நிர்வாக முறையின் அடிப்படையிலோ ஏற்று மதியை கறாரான முறையில் கண்காணிக்க வேண்டும். இன்னும் குறிப்பாக, இரும்புத்தாது ஏற்றுமதி உடனடியாக தடைசெய்யப்பட வேண்டும். உள்நாட்டில் உள்ள இரும்பு எஃகு உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இரும்புத்தாது ஒதுக்கீடு செய் யப்படவேண்டும்.

* இன்றைய நிலையில் நடைமுறையில் உள்ள நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் கணக்கிடும் முறையானது தொழிலாளர் களுக்கு மிகப்பெருமளவில் நிதி இழப்பை ஏற் படுத்தும் விதத்திலேயே உள்ளது. இந்த நடை முறை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். அகவிலைப்படி திருத்தம் செய்வது தற்போது 6 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அதை 3 மாதங்களுக்கு ஒரு முறை என மாற்ற வேண்டும்.

* தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை தீர்மானிக் கும்போது, அது சமூகப் பாதுகாப்பின் ஒரு பகுதி என்ற முறையிலும், கடுமையான பணவீக்கம் நிலவிக்கொண்டிருக்கிறது என்ற கண்ணோட்டத்திலும் பார்க்கப்பட வேண்டும். 20 ஊழியர்கள் இருந்தால் வருங்கால வைப்புநிதித் திட்டத்திற்குள் (இபிஎப்) சம்பந்தப்பட்ட நிறுவனம் கொண்டுவரப்படும் என்ற வரம்பு, இபிஎப் டிரஸ்டிகளின் மத்திய வாரியம் பரிந்துரைத் ததின்படி 10 ஊழியர்கள் என்ற அளவில் நிர்ணயிக்கப்படவேண்டும். தொழிலாளர் பென்ஷன் திட்டத்தின்கீழ் கிடைக்கும் ஓய்வூதிய பலன்களை அரசாங்கம் தன் னிச்சையாக வெட்டிச்சுருக்கியது. இது மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வரப்படவேண்டும். தொழிலாளர் பென் ஷன் திட்டம் தொடர்ந்து நீடிக்க அரசு மற் றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படவேண்டும்; தொழிலாளர் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்ததின்படி ஒவ்வொரு தொழிலா ளருக்கும் குறைந்தபட்ச நியாயமான ஓய் வூதியம் கிடைக்க வழிசெய்திட வேண்டும். மேலும், சிறப்பு டெபாசிட் திட்டத்தின்கீழ் தொழிலாளர்கள் சேமித்துள்ள தொகைக்கு 9.5 சதவீதம் அளவிற்கு வட்டி விகிதம் உயர்த்தித்தரப்படவேண்டும்.

* அனைவருக்கும் உத்தரவாதமான ஓய் வூதியம் கிடைக்கவேண்டும்.

* அனைத்து வேலைகளும் குறைந்த பட்ச கூலிச் சட்டத்தின்கீழ் அவசியம் கொண்டுவரப்படவேண்டும்; மாதம் ஒன் றுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.10 ஆயி ரத்திற்கு குறையாமல் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

* ஊதியம் மற்றும் போனஸ், வருங்கால வைப்புநிதி ஆகியவற்றை பெறுவதற்கான அனைத்து உச்சவரம்புகளும் நீக்கப்பட வேண்டும்; பணிக்கொடையின் அளவு அதி கரிக்கப்படவேண்டும்.

* நிரந்தரத் தன்மைகொண்ட வேலை களை காண்ட்ராக்ட்மயமாக்கக்கூடாது; அவுட்சோர்சிங் என்ற பெயரில் வெளியில் கொடுத்து வாங்குவதும் கூடாது. காண்ட் ராக்ட் எனும் நடைமுறை ஒழிக்கப்படும் வரை, அந்த முறையில் பணியாற்றும் தொழி லாளர்களுக்கான கூலியும் இதர பலன்களும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை அல்லது நிறு வனத்தின் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு எந்த முறையில் வழங்கப்படுகிறதோ அதே முறையில், அதே விகிதத்தில் வழங்கப் படவேண்டும்.

* வருமானவரி விலக்கிற்கான உச்ச வரம்பு, ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.3 லட்சமாக உயர்த்தப் படவேண்டும்; மேலும், வீட்டு வசதி, மருத் துவ வசதி மற்றும் கல்வி வசதிகள் போன் றவை வருமானவரி வரம்பிலிருந்து விலக்கப் படவேண்டும்.

* சில்லரை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரும் கார்ப்பரேட் நிறு வனங்கள் நுழைவதை தடைசெய்யவேண் டும். (ஐஎன்என்)



நிதி ஆதாரத்தை எப்படி திரட்டுவது?

* இறக்குமதி செய்யப்படும் மின் உற்பத்தி சாதனங்கள் மீதான தீர்வை அதிகரிக்க வேண்டும்.

* உள்நாட்டில் உள்ள எண்ணெய் வயல்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பெட்ரோலிப் பொருட் களை ஏற்றுமதி செய்யும்போது அவற்றின்மீது இரட்டைவரி விதிக்கப்படவேண்டும்.

* அதிக அளவில் வரி செலுத்துவதற்கு திறன்படைத்த பெரும் பணக்காரப் பிரிவினர் மற்றும் பணக் காரர்கள் மீது வரிவிதிப்பை உறுதிசெய்யும் விதத்திலான ஒரு முற்போக்கான வரி விதிப்புமுறை கொண்டு வரப்படவேண்டும். பெரும் நிறுவன சேவைத் துறைகள், பெரும் வணிகர்கள், மொத்த வியாபாரங்கள், தனியார் மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் போன்றவை பரந்துவிரிந்த மற்றும் கூடுத லான வரிவிதிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படவேண்டும். ஆடம்பரப் பொருட்கள் மீது வரியை அதிகரிக்க வேண்டும். இதற்கு மாறாக, அத்தியாவசியப் பொருட்கள் மீதான மறைமுக வரிகளை பெரு மளவிற்கு குறைக்கவேண்டும். இந்த நிலையில், வரி வருவாயில் 86 சதவீதத்தைப் பூர்த்திசெய்கிற மறைமுக வரிவிதிப்பின்கீழ் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

* தற்போது நடந்துகொண்டிருக்கும் இரும்புத்தாது ஏற்றுமதி மீது ஏற்றுமதித் தீர்வையை அதி கரிக்கவேண்டும்.

* பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இதுவரையில் செலுத்தியிருக்கவேண்டிய வரி ரூ.3 லட்சம் கோடி அளவிற்கு பாக்கி இருக்கிறது. இந்த வரிப்பாக்கி அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே, மேலும்மேலும் குவிந்துகொண்டிருக்கும் வரிப்பாக்கியை வசூ லிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும். இப்படி மிகப்பெரிய அளவிற்கு நடந்துள்ள வரி ஏய்ப்பு மற்றும் பெரும் நிறுவனங்கள் வரி செலுத்துவதில் காட்டப்பட்ட தாராளத்தின் விளைவாக 2009 - 2010ம் நிதியாண்டில் மற்றும் ரூ.2 லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர அனுமதிக்கக்கூடாது.

* இந்திய பொருளாதாரத்தில் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவர சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, வரி விதிக்கப்படாத சொர்க்கங்களாகத் திகழும் சில மேலை நாடுகளில் குவிக்கப்பட்டுள்ள கணக்கில் வராத மிகப்பெருமளவிலான பணம் மீட்கப் படவேண்டும். இந்தப் பணம் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பயன்படுத்தப் படவேண்டும்.

* வங்கிகளில் பெருமளவில் கடன் வாங்கிவிட்டு, திட்டமிட்டே தாங்கள் திவாலாகிவிட்டதாக பொய்க் கணக்குக் காட்டும் பெரும் கார்ப்பரேட் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து அந்தப் பணத்தை மீட்க வேண்டும். இத்தகைய நிறுவனங்கள் புதிதாக கடன் பெற அனுமதிக்கப்படக்கூடாது.

* நீண்டகால அடிப்படையில் பெறப்படும் மூலதன லாபங்கள் மீதான வரி அறிமுகம் செய்யப்பட வேண்டும்; பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் மீது அதிகபட்ச வரி விதிக்கப்படவேண்டும்.

* தகவல் தொழில்நுட்பத்துறை, அவுட்சோர்சிங் துறை, கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் போன்றவை வியாபார நோக்கத்தில் இயங்கும் பட்சத்தில் அவை சேவை வரி வளையத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும்.