பாரத ரத்னா விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரத ரத்னா விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 நவம்பர், 2013

சச்சின் கிரிக்கெட்டில் ரத்தினம் தான், ஆனால்.....?

 கட்டுரையாளர் : அ. குமரேசன்,            
                                 பத்திரிக்கையாளர்                       
           இந்திய விளையாட்டுக் களத்தில், அதிலும் கிரிக்கெட் விளையாட்டில் சச்சின் டெண்டுல்கர் நிச்சயமாக ஒரு ஒளிவீசும் ரத்தினம்தான். தனது ஆட்டமுறைக்கு என உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றிருக்கிற, இந்தியாவில் கோடிக்கணக்கானவர்களை பக்தர்களாகவே பெற்றிருக்கிறவர் அவர்.
              ‘பாரத ரத்னா’ விருதினை அரசு அறிவிக்காமலே விட்டிருந்தாலும் அவருக்கு அந்த அன்பை விடவும் பெரிய விருது எதுவும் இருக்கப்போவதில்லை. இந்தியாவில் கிரிக்கெட் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருப்பதில், அவரது திறமையும் நுட்பமும் மிக்க பங்களிப்பு தலையாய ஒன்று. அதனால்தான், ஓய்வு பெறுவதற்கு முந்தைய தனது கடைசி ஆட்டத்தின் முடிவில், அவ்வளவு பெரும் மக்கள் திரள் முன்னிலையில் அவர் கண்ணீருடன் விடைபெற்றபோது, அதைத் தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருந்த அனைவருமே உணர்ச்சிவசப்பட்டார்கள்.
              பொதுவாக இப்படிப்பட்ட விருதுகள் ஒருவர் ஓய்ந்து ஒதுங்கி மறக்கப்பட்ட பிறகுதான் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் சச்சின் புகழ் வெளிச்சத்தில் இருக்கிறபோதே, துடிப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறபோதே, இளமை வயதின் விளிம்பில் நிற்கிறபோதே இந்த விருது வழங்கப்படுகிறது. அதுவும், அவர் அவ்வாறு ஓய்வு பெற்ற நாளிலேயே பிரதமர் இதை அறிவிக்கிறார்.
            இது நம் நாட்டிற்கு ஒரு மாறுபட்ட அனுபவம்தான்.ஆயினும், நாட்டின் மிக உயர்ந்த விருது சச்சினுக்கு வழங்கப்படுவதில் உள்ள சில உறுத்தல்களைக் குறிப்பிடத்தான் வேண்டியிருக்கிறது.முதலில் சொல்ல வேண்டியது, இவரோடு சேர்த்து ‘பாரத ரத்னா’ அறிவிக்கப்பட்டுள்ள மூத்த அறிவியலாளர் சி.என்.ஆர். ராவ் பின்னுக்குத் தள்ளப்பட்டு அவரது முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருப்பது.
        திட வேதியல் துறை அறிவியலாளரான அவர் இங்கே அடிப்படை வேதியியல் கல்வியைக் கட்டிக்காப்பதில் முன்னின்றவர். அவரது ஆராய்ச்சி நூல்களும், பல ஆய்வு நிறுவனங்களை உருவாக்கிய முயற்சிகளும் நாட்டின் அறிவியல் களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை.
            இந்தியாவின் சுயமான எதிர்கால முன்னேற்றத்தில் அறிவியலுக்கு உள்ள இடத்தைப் புரிந்துகொண்டவர்கள் அனைவரும் ராவ் இந்த விருதைப் பெறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறார்கள். இளம் அறிவியலாளர்கள் இதனால் ஊக்குவிக்கப்படுவார்கள், அது அறிவியல் வளர்ச்சிக்கு மேலும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அவருக்கு மட்டுமேயாக இப்போது இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தால், அதையொட்டி அவரைப் பற்றியும், அறிவியலைப் பற்றியும் நாடு முழுவதும் இப்போது பேசப்பட்டுக்கொண்டிருக்கும். ஆனால், சச்சின் கழுத்தில் போடப்படும் மாலைகளின் குவியலுக்கு அப்பால் அறிவியலாளரின் சிறப்பு ஓரங்கட்டப்படுவது ஆரோக்கியமானதுதானா?சச்சினுக்கு இந்த விருதை வழங்க வேண்டும் என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே கோரிக்கைகள் எழுந்தன.
             அடுத்தடுத்து விரைவாக, விளையாட்டுத் துறையினருக்கும் வழங்கத்தக்க வகையில் பாரத ரத்னா விதிகள் திருத்தப்பட்டதிலும், அவர் ஓய்வுபெறுவதையொட்டி உருவான உணர்ச்சிமயமான சூழலுக்காகக் காத்திருந்து அறிவிக்கப்பட்டதிலும் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்ற கேள்வி எழவே செய்கிறது.
               அரசியல் உள்நோக்கம்தான் இருக்கிறது என்று நேரடியாகக் கூற முடியாவிட்டாலும், கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பைப் பெற்றவருக்கு இந்த விருதை அளித்ததன் மூலம் அந்தக் கோடிக்கணக்கானோரின் ஆதரவைத் தன் பக்கம் இழுக்க முடியாதா என்ற உள்நோக்கம் இல்லவே இல்லை என்றும் கூறிவிட முடியாது. இப்படிப்பட்ட உத்திகளில் காங்கிரசார் கரைகண்டவர்களாயிற்றே!ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான சேவைகள் என்ற அடிப்படையில் இல்லாமல், தனிப்பட்ட சாதனைகளுக்காக மட்டும் நாட்டின் உயர்ந்த விருதை வழங்குவது பற்றிய வினாக்களும் புறப்படத்தான் செய்கின்றன.
               நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சச்சின் அங்கே மக்கள் பிரச்சனைகள் பற்றிப் பேசியிருக்கிறாரா? விளையாட்டுத்துறையில் மலிந்திருக்கிற பிரச்சனைகள் பற்றியோ, நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகள் பற்றியோ கருத்துக் கூறியிருக்கிறாரா? நாடாளுமன்றத்திற்கு வெளியே, ஐபிஎல் தில்லுமுல்லுகள் உள்ளிட்ட விவகாரங்களிலும் இதர சமூக நிகழ்ச்சிப்போக்குகளிலும் எந்த அளவுக்குத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்? 1992ல் அயோத்தி அக்கிரமத்தைத் தொடர்ந்து மும்பையில் மதவெறிக் கும்பல் சூலாயுதங்களோடு தெருவில் இறங்கியபோது, சுனில் கவாஸ்கர் அவர்களைத் தடுத்து நிறுத்தி சிறுபான்மை மக்களுக்கு அரணாக நின்றது நினைவுக்கு வருகிறது.
   கார்ப்பரேட் நிறுவனங்களின் வர்த்தக விளம்பரச் சரக்காகவும் தன்னை உருவாக்கிக்கொண்டவர் சச்சின். விளையாட்டின் மூலமாகவும் விளம்பரங்களின் மூலமாகவும் கோடிக்கணக்கில் பணம் ஈட்டினார். அதெல்லாம் அவரது திறமைக்கும் புகழுக்கும் கிடைத்த அங்கீகாரங்கள் என்றே வைத்துக்கொண்டாலும், அவரை அனைத்து இளைஞர்களுக்குமான முன்னுதாரணமாகக் கொள்ள முடியுமா? தலையிடத் துடிக்கும் சமூக அக்கறையோ தட்டிக் கேட்கும் அரசியல் விழிப்புணர்வோ இல்லாத தலைமுறைகள் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே கார்ப்பரேட் பிரம்மாக்களின் திட்டம்.
           அதைக் கட்டமைக்கிற வேலைக்கு இந்த நட்சத்திரமும் பயன்படுகிறாரே என்ற ஆதங்கம், சமுதாயத்தை அரசியல்படுத்த விரும்புகிற எவருக்கும் ஏற்படவே செய்யும்.கிரிக்கெட் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டு, நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளும் தேசிய விளையாட்டும் கூட கடைக்கோடிக்கு ஒதுக்கப்பட்டதிலும், ஒற்றை ரசனையில் சமுதாயத்தை வார்க்கிற உள்நாட்டு-வெளிநாட்டு கார்ப்பரேட் கனவான்களின் செயல்திட்டம் இருக்கிறது.
தெரிந்தோ தெரியாமலோ அதற்கும் சச்சின் போன்றோர் உதவுகிறார்கள்.இதைச் சொல்வதால், சச்சின் என்ற கிரிக்கெட் நட்சத்திரத்தின் தனித்துவமான அசத்தல் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுவதாகாது. விளையாட்டுத் துறை சார்ந்த அந்தச் சாதனைகளுக்கான உயர்ந்த அங்கீகாரம், இப்படிப்பட்ட விருதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.
       ஏன், விளையாட்டுத்துறையைப் பிடித்துள்ள பல்வேறு நோய்களிலிருந்து அதனை மீட்பதற்கான உயர் பொறுப்புகளை, அதற்கான வயது இருக்கிறபோதே வழங்கலாமே? அது அவரைப் பெருமைப்படுத்தியதாகவும் இருக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு நிறுவனம் (பிசிசிஐ) உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகளை மீட்கலாம் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துமே...அணியில் விளையாடிக்கொண்டிருந்தவர் என்ற முறையில் பல்வேறு பிரச்சனைகளில் அவரது மவுனம் புரிந்துகொள்ளத் தக்கதுதான்.
         இனியேனும் சமுதாயத்தைக் கண்கொண்டு பார்ப்பாரா....? மனம் திறந்து பேசுவாரா...? மாற்றமுயல்வோருக்குத் தோள் கொடுப்பாரா...? அப்படியெல்லாம் செய்வாரானால் ரத்தினம் பல மடங்கு ஒளி வீசும். பாரதம் பார்க்கத்தான் போகிறது.
நன்றி :

சனி, 16 நவம்பர், 2013

சச்சினுக்கு ''பாரத ரத்னா'' விருது - இது நியாயம் தானா....?

 
                                                                                                                                        
         
                                                                                                                                                                   
                                                                                                        
         
          சச்சின் டெண்டுல்கர் இன்று தான் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று மைதானத்தை வெளியேறுகிறார். இன்னும் அவர் தன் வீட்டிற்கு கூட போய் செர்ந்திருக்கமாட்டார். அதற்குள் பிரதமர் அலுவலகத்திலிருந்து சச்சினுக்கு ''பாரத ரத்னா'' விருது என்ற அறிவிப்பு வந்துவிட்டது. ''பாரத ரத்னா'' விருதென்ன விளையாட்டு சமாச்சாரமா சாதாரணமா எல்லாருக்கும் தூக்கிக்கொடுக்க...?
           சூதாடிகளுக்கும், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் இந்தியாவின் மிக உயரிய பரிசு ''பாரத ரத்னா''  விருது கொடுப்பது சரிதானா..? முறை தானா...? நியாயம் தானா....?                                                        
              சச்சின் ஒரு குறிப்பிட்ட விளையாட்டின் தனிப்பட்ட சாதனைப் படைத்த வீரர் தான் என்பதை யாரும் மறுக்கவில்லை. சச்சின் உலகம் முழுதும் அறியப்பட்டவர் என்று சொல்ல முடியாது. ஆனால்  கிரிக்கெட் விளையாட்டை பற்றி அறிந்த நாட்டிலுள்ள மக்களால் நன்கு அறியப்பட்டவர் தான். ஏனென்றால்  உலகம் முழுதும் அனைவராலும் விளையாடப்படும் விளையாட்டுமல்ல. உலகம் முழுதும் பரவிக்கிடக்கும் விளையாட்டுமல்ல. கிரிக்கெட் என்ற விளையாட்டே போய் சேராத நாடுகள் உள்ளன. கிரிக்கெட் பற்றியே அறியாத மக்களும் கோடிக்கணக்கில் உள்ளனர். ஏனென்றால் வெறும் பத்து நாடுகளில் மட்டுமே விளையாடப்படும் விளையாட்டு தான் இந்த கிரிக்கெட் என்ற விளையாட்டு. அதனால் தான் ஒலிம்பிக் போட்டி போன்ற உலக அளவிலான போட்டிகளில் இதுவரை கிரிக்கெட் சேர்க்கப்படவில்லை என்பதற்கான மிக முக்கிய காரணம். கிரிக்கெட் விளையாட்டு என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய 10 காலனி நாடுகளில் மட்டுமே விடுதலைக்குப் பின் இன்றும் ஆடப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்கள் அடிமைகளை கிரிக்கெட் விளையாடவிட்டு வேடிக்கைப்பார்த்து போழுதுபோக்கியிருக்கிறார்கள். 
                அப்படிப்பட்ட விளையாட்டில் சாதனை செய்தாரா சச்சின் என்றால் கேட்டால், நிச்சயமாக சாதனை செய்திருக்கிறார் என்று சந்தேகமில்லாமல் சொல்லலாம். நாமெல்லாம்  பெருமைப்படத்தக்க அளவில் சாதனை புரிந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. அனால் அவை அத்தனையும் ஒரு  தனிமனித சாதனை தான் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 
 அவர் அப்படிப்பட்ட சாதனைகள் புரியவேண்டும் என்பதற்காகவே ஆட்சியாளர்களால் அவருக்கு வாய்ப்புகளும், நேரங்களும், விளம்பரங்களும், ஊக்கமும்  கொடுக்கப்பட்டு சச்சினால் செய்யப்பட்டிருக்கும் சாதனைகள் தான் அத்தனையும்  என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.   கிரிக்கெட் ஆடும் அத்தனை வீரர்களுக்கும் இதே போல் வாய்ப்புகளும், நேரங்களும், விளம்பரங்களும், ஊக்கமும்  கொடுக்கப்பட்டால் அவர்களும் தனிமனித சாதனைகளை நிச்சயம்  செய்துகாட்டுவார்கள்.
                 அதுமட்டுமல்ல, இன்றைக்கு உலகமய சூழலில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக கிரிக்கெட் மைதானம் என்பது ஒரு சூதாட்டக்களமாக மாறிவிட்ட சூழ்நிலையில் - கிரிக்கெட் என்பது பண மழை  கொட்டுகிற விளையாட்டாக மாறிவிட்ட இந்த சூழ்நிலையில்  கிரிக்கெட் என்பது சாதனை படைக்கும் களமாக இல்லாமல், பணம்  - சொத்து சேர்க்கும் கஜானாவாக மாறிவிட்டது. 
               அப்படி சம்பாதித்த பணத்திற்கு சச்சின் போன்ற பெரிய கிரிக்கெட் வீரர்கள் அரசுக்கு கட்டவேண்டிய வரியை சரியாக - முறையாக - நியாயமாக கட்டியிருப்பார்களா....? என்றால்... இல்லை... இல்லவே இல்லை என்பது தான் உண்மை. அதை வருமானவரித்துறையும் கண்டுகொள்வதே இல்லை என்பதை யாராலும் மறுக்கமுடியாது. சச்சினும் இதில் விதிவிலக்கல்ல. இவர் இப்படியாக கிரிக்கெட் ஆடியும், விளம்பரங்களில் நடித்தும் ''கொள்ளையாக'' சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கிறார். இவர் தேசியக்கொடியை பிடிப்பதற்கே அருகதையில்லாதவர். 
               இவர் ஒரு நேர்மையான இந்திய குடிமகன்  இல்லை என்பதுமட்டுமல்ல, ஓர் உண்மையான இந்திய குடிமகனாகவும் அவர் நடந்துகொள்ளவில்லை என்பதையும் இந்த நாட்டு மக்கள் அறிவார்கள். பெப்சி, பூஸ்ட், மெட் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இவர் தான் நிறுவனத் தூதராக இருந்து, அந்த கம்பெனிகளின் விளம்பரத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்தவர் என்பதையும் இந்த நாடு அறியும். இப்படிப்பட்டவர் எப்படி ஓர் உண்மையான இந்தியக் குடிமகனாக இருக்கமுடியும் என்று சொல்லுங்கள்.
              இப்படிப்பட்டவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டால் அது எப்படி சரியாக இருக்கும் - நியாயமாக இருக்கும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.
             இதுவரை கலை, இலக்கியம், அறிவியல்   மற்றும் பொதுச்சேவை துறைகளில்  பெருமைப்படத்தக்க சாதனைகள் படைத்தவர்கள் மட்டுமே ''பாரத ரத்னா'' விருது பெற முடியும் என்ற விதிமுறை  நடைமுறையில் இருந்து வருகிறது. பிற துறைகளில் சாதித்தவர்களும் இந்த விருதை பெற முடியும் என்று விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டு சென்ற 2011 - ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி மத்திய அரசு அறிவிப்பு  வெளியிட்டது. அப்போதே இவருக்கு  இந்த உயரிய விருதினை தருவதற்காகவே, பாரத ரத்னா விருது பெறுவதற்கான விதிமுறையில் மத்திய அரசு திருத்தம் செய்கிறது என்ற விமர்சனம் வந்தது. விளையாட்டுத் துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கும் பாரத ரத்னா விருது  வழங்க தான் இந்த மாற்றம் என்று அரசு பொதுவாக சொல்லியிருந்தாலும் அதில் நியாயம் இருக்கிறது. ஆனால் டெண்டுல்கருக்காக தான் இந்த மாற்றம் என்று வெளிப்படையாகவே தெரிந்ததும் நாட்டின் அனைத்துப்பகுதிகளிலிருந்து எதிர்ப்புக் கிளம்பவே மத்திய அரசின் முயற்சி கைவிடப்பட்டது. 
              ஆனால் இன்று ஓய்வுபெறும் ஒரு உணர்ச்சிமிக்க சூழ்நிலையில் - யாரும் எதிர்ப்பார்க்காத இந்த சூழ்நிலையில் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு என்பது துரதஷ்டமானது. ''பாரத ரத்னா'' விருதின் மாண்பும், பெருமையும் காப்பாற்றப்படவேண்டுமானால், மத்திய அரசு சச்சினுக்கு ''பாரத ரத்னா'' விருது கொடுப்பதாக எடுத்திருக்கும் முடிவை திரும்பப்பெறவேண்டும். ''பாரத ரத்னா'' விருதை வழங்கி பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு சச்சினைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று காங்கிரஸ் கட்சி பகல் கனவு காண்கிறது.
                             சென்ற 1954-ம் ஆண்டிலிருந்து பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. மக்களையும், தேசத்தையும் பற்றி தன்னலமில்லாமல்  சிந்தித்தவர்களும், நம் தேசத்தை பெருமைக்குள்ளாக்கியவர்களுமான சர் சி.வி.ராமன், சி.வி.ராஜகோபாலாச்சாரி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்  ஆகிய  இவர்களில் தொடங்கி, இதுவரை 41 பேருக்கு ''பாரத ரத்னா'' விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
             கடந்த காலங்களில் இந்த உயரிய விருதினை ஜவஹர்லால் நேரு, டாக்டர் ராஜேந்திர பிரசாத், அமார்த்தியா சென், ஜெயபிரகாஷ் நாராயண், டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் அம்பேத்கர், எம். எஸ். சுப்புலட்சுமி, பண்டிட் ரவி சங்கர், உஸ்தாது பிஸ்மில்லாகான், மொரார்ஜி தேசாய், எம். ஜி. ராமச்சந்திரன், ராஜீவ் காந்தி,  லதா மன்கேஷ்கார், அன்னை தெரசா, கான் அப்துல் காபார் கான், நெல்சன் மண்டேலா.... போன்ற உலகின் - தேசத்தின் - சமூகத்தின் உயர்ந்த தலைவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட இந்த உயரிய விருதினை பெறுவதற்கு மேலே குறிப்பிடப்பட்டவர்களின் தகுதிகளில் ஏதாவது ஒரு தகுதியாவது ''கிரிக்கெட் சூதாடி'' சச்சின் டெண்டுல்கருக்கு உண்டா...? என்பதை அவரே தன்னை எடைபோட்டுப்பார்க்கவேண்டும்.  நீங்களும் யோசித்துப்பாருங்கள்.         

சனி, 17 டிசம்பர், 2011

சச்சினுக்கு ''பாரத ரத்னா'' விருது - இது சரியோ...? இது முறையோ...?

                    சூதாடிகளுக்கும், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் இந்தியாவின் மிக உயரிய பரிசு ''பாரத ரத்னா''  விருது கொடுப்பது சரிதானா..? முறை தானா...?  
              சச்சின் ஒரு விளையாட்டு வீரர். அதுவும் உலகம் முழுதும் அனைவராலும் விளையாடப்படும் விளையாட்டுமல்ல... உலகம் முழுதும் பரவிக்கிடக்கும் விளையாட்டுமல்ல... வெறும் பத்து நாடுகளில் மட்டுமே விளையாடப்படும் விளையாட்டு தான் இந்த கிரிக்கெட் விளையாட்டு. அதனால் தான் ஒலிம்பிக் போட்டி போன்ற உலக அளவிலான போட்டிகளில் இதுவரை கிரிக்கெட் சேர்க்கப்படவில்லை.
                அப்படிப்பட்ட விளையாட்டில் சாதனை செய்தாரா என்றால்... சாதனை செய்திருக்கிறார்... நாமெல்லாம்  பெருமைப்படத்தக்க அளவில் சாதனை புரிந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. அனால் அவை அத்தனையும் ஒரு  தனிமனித சாதனை... 
             அவர் அப்படிப்பட்ட சாதனைகள் புரிவதற்காகவே, ஆட்சியாளர்களால் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு செய்திருக்கும் சாதனைகள் தான் அத்தனையும். இதே போல் வாய்ப்புகள்  கிரிக்கெட் ஆடும் அத்தனைப் பேருக்கும் கொடுக்கப்பட்டால் அவர்களும் தனிமனித சாதனைகளை அவர்களது ஆட்டத்தில் செய்துகாட்டுவார்கள்.
                 அதுமட்டுமல்ல, இன்றைக்கு உலகமய சூழலில் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக கிரிக்கெட் என்பது ஒரு சூதாட்டமாக மாறிவிட்டா சூழலில் - கிரிக்கெட் என்பது பணம் கொட்டுகிற விளையாட்டாக மாறிவிட்ட சூழ்நிலையில்  கிரிக்கெட் என்பது சாதனை படைக்கும் களமாக இல்லாமல், மனம் சேர்க்கும் - சொத்து சேர்க்கும் கஜானாவாக மாறிவிட்டது. 
               அப்படி சம்பாதித்த பணத்திற்கு சச்சின் போன்ற கிரிக்கெட் வீரர்கள் அரசுக்கு கட்டவேண்டிய வரியை சரியாக - முறையாக - நியாயமாக கட்டியிருப்பார்களா....? என்றால்... இல்லை... இல்லவெ இல்லையெ...! இவர்களுக்கு அரசாங்கமே இவர்களுக்கு கொடுக்கும்  வரிச்சலுகையை இவர்கள் அனுபவிப்பது மட்டுமல்லாது... தங்களுக்கு வரும் வருமானத்தை முறையாக அரசுக்கு காட்டுவதுமில்லை.... முறையாக கட்டவேண்டிய வரியையும் இதுவரை கட்டியதுமில்லை...
              இவர் ஒரு நேர்மையான இந்திய குடிமகன்  இல்லை என்பதுமட்டுமல்ல, ஓர் உண்மையான இந்திய குடிமகனாகவும் அவர் நடந்துகொள்ளவில்லை என்பதையும் இந்த நாட்டு மக்கள் அறிவார்கள். பெப்சி, பூஸ்ட், மெட் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இவர் தான் நிறுவனத் தூதராக இருந்து, அந்த கம்பெனிகளின் விளம்பரத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்தவர் என்பதையும் இந்த நாடு அறியும். இப்படிப்பட்டவர் எப்படி ஓர் உண்மையான இந்தியக் குடிமகனாக இருக்கமுடியும் என்று சொல்லுங்கள்.
              இப்படிப்பட்டவருக்குத் தான் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டால் அது எப்படி சரியாக இருக்கும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.
             இதுவரை கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் பொது சேவை துறையில் சாதித்தவர்கள் மட்டுமே பாரத ரத்னா விருது பெற முடியும் என்ற விதி நடைமுறையில் இருந்துவந்தது. பிற துறைகளில் சாதித்தவர்களும் இந்த விருதை பெற முடியும் என்று விதியில் மாற்றம் செய்யப்பட்டு சென்ற நவம்பர் 16-ம் தேதி அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய  விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
            இப்படிப்பட்ட இவருக்கு தான், இந்த உயரிய விருதினை தருவதற்காகவே, பாரத ரத்னா விருது பெறுவதற்கான விதியில் மத்திய அரசு இப்போது புதிய திருத்தம் செய்துள்ளது. விளையாட்டுத் துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கும் பாரத ரத்னா பரிசு வழங்க தான் இந்த மாற்றம் என்று பொதுவாக சொல்லியிருந்தாலும் அதில் நியாயம் இருக்கிறது. ஆனால் டெண்டுல்கருக்காக தான் இந்த மாற்றம் என்றால் அதில் நியாயம் இல்லை.
                             சென்ற 1954-ம் ஆண்டிலிருந்து பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. மக்களை பற்றி சிந்தித்தவர்களும், தேசத்தை பெருமைக்குல்லாக்கியவர்களுமான சர் சி.வி.ராமன், சி.வி.ராஜகோபாலாசாரி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்  ஆகிய  இவர்களில் தொடங்கி, இதுவரை 41 பேருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது.
             கடந்த காலங்களில் இந்த உயரிய விருதினை ஜவஹர்லால் நேரு, டாக்டர் ராஜேந்திர பிரசாத், அமார்த்தியா சென், ஜெயபிரகாஷ் நாராயண், டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் அம்பேத்கர், எம். எஸ். சுப்புலட்சுமி, பண்டிட் ரவி சங்கர், உஸ்தாது பிஸ்மில்லாகான், மொரார்ஜி தேசாய், எம். ஜி. ராமச்சந்திரன், ராஜீவ் காந்தி,  லதா மன்கேஷ்கார், அன்னை தெரசா, கான் அப்துல் காபார் கான், நெல்சன் மண்டேலா.... போன்ற உலகின் - தேசத்தின் - சமூகத்தின் உயர்ந்த தலைவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட இந்த உயரிய விருதினை பெறுவதற்கு சச்சின் டெண்டுல்கருக்கு மேலே சொன்னவர்களில் ஏதாவது ஒரு தகுதியாவது உண்டா...? என்பதை அவரே தன்னை எடைபோட்டுப்பார்க்கவேண்டும்.