மம்தா பானர்ஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மம்தா பானர்ஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

உச்சக்கட்டத்தில் மம்தாவின் வெறியாட்டம்

         

 
             









               மேற்குவங்க மாநிலத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்று நான்கு ஆண்டுகள் முடியுறும் வேளையில் மாநிலத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் அறிவிக்கப்பட்டு சென்ற வாரம் அதற்கான தேர்தல்கள் கட்டம் கட்டமாக நடைபெற்றன. தேர்தல்களை ஜனநாயகத்திற்கு உட்பட்டு, நியாயமான முறையிலும், நேர்மையான முறையிலும் அமைதியுடன் நடத்தவேண்டிய மம்தாவின் தலைமையிலான அரசு ஜனநாயகத்தையும், நியாயத்தையும், நேர்மையையும் காற்றில் பறக்கவிட்டு, அராஜகத்தையும், அட்டுழியங்களையும் கட்டவிழ்த்து விட்டு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நடத்தியிருக்கிறது. 
            பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் தன் மீது நம்பிக்கை வைத்து, கடந்த 36 ஆண்டுகளாக மாநிலத்தில் கோலோச்சியிருந்த இடதுசாரிகளை இறக்கிவிட்டு, மம்தாவை அரியணையில் ஏற்றிய மக்கள்  இன்று மம்தாவின் மீது அதிருப்தியில் இருப்பதால் வெற்றிபெறுவது சிரமம் என்ற நிலையில் மம்தா இந்த உள்ளாட்சி தேர்தலை அராஜகமான தேர்தலாக நடத்தி சாதனை புரிந்திருக்கிறார்.
  வாக்காளர்கள் ஓட்டுப்போடாத வண்ணம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். மீறி ஓட்டுப்போட வரும் பொதுமக்கள் மீது   மம்தா கட்சியை சேர்ந்த ரவுடிகளே கையெறி குண்டுகளை வீசுவதும், துப்பாக்கிகளால் சுடுவதுமான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டனர். அந்த ரவுடிகளுக்கு மம்தாவின் காவல்துறையே துணைக்கு நின்றது. காவல்துறையினரே அமைதியான முறையில் ஓட்டுப்போட வரும் பொதுமக்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். பல இடங்களில் பொதுமக்களே இந்த அராஜக கும்பலுக்கு எதிராக வெகுண்டெழுந்திருக்கிறார்கள்.
                அதுமட்டுமல்லாமல் மம்தாவின் ரவுடிகள் ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுவது, துரத்தியடிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு கள்ளவோட்டு போடுவது போன்ற அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். மம்தா கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்களை மிரட்டியிருக்கின்றனர். இவர்கள் பேச்சை மீறி நிற்கும் இடதுசாரி வேட்பாளர்களை கொலை வெறியுடன் தாக்கியிருக்கின்றனர்.
           இப்படியாகத்தான் மம்தா உள்ளாட்சித் தேர்தலை மிக அருமையாக நடத்திஇருக்கின்றார். முதல்வராக பதவியேற்ற நாளிலிருந்து வெளிப்பட்ட மம்தாவின் வெறியாட்டம் இன்று உச்சத்தை தொட்டுயிருக்கிறது.
               அவசர நிலை காலத்தில் மேற்குவங்க மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த அன்றைய காங்கிரஸ் கட்சியின் முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே நடத்திய  காட்டாட்சியை விட இன்றைக்கு மம்தா நடத்தும்  ஆட்சி காட்டுமிராண்டித்தனமாகவும் அராஜகமாகவும் உள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆணவத்தின் உச்சத்தில் - அராஜகத்தின் உச்சத்தில் வெறியாட்டம் போடும் மம்தாவிற்கு மக்கள் பாடம் கற்பிக்கும் காலம் வெகு தொலைவில்  இல்லை.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

மம்தாவின் மலிவான அரசியல் - கே.பாலபாரதி எம்.எல்.ஏ.

 நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்

            ஒருவரின் நிஜ முகத்தைத் தெரிந்து கொள்ள அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்துப் பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். மக்களுக்காக போராடுவதாக காட்டிக் கொண்டிருந்த மம்தாவுக்கு மேற்கு வங்க மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்து விட்டு அவஸ்தைப்படுகிறார்கள். மம்தா முதல்வரான பின்னர் மேற்கு வங்க மக்கள் சந்திக்கும் வேதனைகள் ஏராளம். சமீபத்தில் 22 வயதான சுதிப்தா குப்தா என்ற மாணவர் இறந்து போனார். ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தின் மாணவர் அவர். கல்லூரிகளில் மாணவர் பேரவைகளுக்கான தேர்தல்களை மேற்கு வங்க அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதை எதிர்த்த இந்திய மாணவர் சங்கத்தினர் களத்தில் இறங்கிப் போராடினார்கள். சுதிப்தாவும் மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
         மம்தா அரசின் காவல்துறை, மாணவர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது. கைது செய்யப்பட்ட மாணவர்களை வேனில் ஏற்றிச் செல்லும் போது சுதிப்தா குப்தாவை மிருகத்தனமாக வேனிலிருந்து வெளியே தூக்கி எறிந்துள்ளனர் காவலர்கள். பலத்த காயமுற்று, முகம் சிதைந்து, கால் முறிந்து, குற்றுயிரும் குலை உயிருமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்து போனார். இதனால் மாணவர்கள் ஆவேச முற்றனர். மாணவர் சுதிப்தாவின் உடலைப் பார்க்க வந்த முதலமைச்சர் மம்தா, காவல்துறைக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். “நடந்தது ஒரு விபத்துதான். இதுபோன்ற விபத்துகள் திரிணாமுல் தொண்டர்களுக்கு ஏராளமாக நடந்துள்ளது” என்று மிக அனாயசமாகக் கூறிவிட்டு காரில் ஏறிப் பறந்து விட்டார். நீதி விசாரணைக்கு மறுத்துவிட்டார்.பள்ளி, கல்லூரிகளில் மாணவர் அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 34 ஆண்டுகால இடது முன்னணி ஆட்சியில் தொடர்ந்து நடந்து வந்தது. இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகளின் மாணவர் அமைப்புகளும் மற்ற அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகளும் முறையாக இத்தேர்தலில் பங்கேற்று வந்தனர். இத்தேர்தல்கள் அனைத்தையும் மம்தா அரசு தற்போது ரத்து செய்து விட்டது. இதை எதிர்த்து மாணவர்கள் கிளர்ந்தெழுந்தார்கள். இவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையைப் பயன்படுத்தியுள்ளார் மம்தா. போலீசாரும் இளம் மாணவரின் ரத்தம் பருகி வெறியாட்டம் நடத்தி இருக்கிறார்கள். 2011 தேர்தலில் திரிணாமுல் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களும் ஊடகங்களும் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
         ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக மணலை கயிறாகத் திரிப்பதிலும் வானத்தை வளைப்பதிலும் திரிணாமுலும் மம்தாவும் வல்லவர்களாக விளங்கினார்கள். ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்கிய இடது முன்னணி அரசின் திட்டத்தை மிகவும் இழிவுபடுத்தி, ‘இது மத்திய அரசினுடைய திட்டம் மாநில அரசினுடைய திட்டம் இல்லை’ என்று வாய் கூசாமல் பொய் பேசியவர்தான் மம்தா, ஆனால் ஒரு கிலோ அரிசி ரூ5.65க்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு விற்பனை செய்கிறது. ரூ.3.65-ஐ கூடுதல் மானியமாக வழங்கி இரண்டு ரூபாய் அரிசி திட்டத்தை இடது முன்னணி அரசு அமல்படுத்தியது என்பது தான் மறக்க முடியாத உண்மை. ‘இஸ்லாமிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது இந்துக்களின் கோட்டாவில்தான்’ என பி.ஜே.பிக்கு ஒரு படி மேலே நின்று மம்தா குற்றம் சுமத்தினார். பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு தவிர, முஸ்லிம் மக்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஒதுக்கீட்டை இந்தியாவிலேயே மேற்கு வங்க அரசுதான் செய்தது.மத்திய ஐ.மு.கூட்டணி ஆட்சியில் ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது 1.80 லட்சம் பேருக்கு வேலை தந்ததாக விளம்பரப்படுத்திக் கொண்டார். ஆனால் ரயில்வே பட்ஜெட்டில் 1.80 லட்சம் பேருக்கு புதிதாக ஊதியம் வழங்குவதற்குரிய நிதி ஒதுக்கீடோ, அறிவிப்போ எதுவும் இல்லை என்பதுதான் உண்மை. ‘ரயில்வே துறையில் பயணிகள் கட்டணத்தையோ, சரக்குக் கட்டணத்தையோ உயர்த்த மாட்டேன்’ என்றும் ‘வரி போட மாட்டேன்’ என்றும் தன்னைக் காட்டிக் கொண்டார். ஆனால் ரயில்வே துறையை பெரும் கடனாளித் துறையாக மாற்றிச் சென்றதே மம்தா தான்.முதல் இரண்டு ஆண்டுகளில் மொத்தமாக 65,539 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதன் காரணமாகத்தான் தற்போது இரண்டு மடங்காக ரயில் கண்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களை வழங்கியதாக அள்ளி விட்டார்.
          நாடு முழுமைக்கும் இரண்டு ஆண்டுகளுக்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு ரூ.1 லட்சம் கோடிக்கு குறைவாகத்தான் இருந்தது. பிறகு எங்கே மேற்கு வங்கத்தில் மட்டும் ஒரு லட்சம் கோடிக்கான திட்டம் வந்தது. இப்படி பல பொய்களைச் சொல்லி, தேர்தலில் மம்தா வெற்றி பெற்றாலும் மக்களுக்கான ஆட்சி நடத்துவதில் படுதோல்வியைத் தழுவியுள்ளார். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதில் மம்தா புதிய சாதனையே படைத்துள்ளார். எந்த நேரத்தில் எதைப்பேசுவார். யாரை எப்படித் தூக்கியெறிவார் என்பது யாருக்கும் தெரியாது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுள்ளது.உரவிலை உயர்ந்தபோது, ‘பாரதப்பிரதமரை நான் அடிக்கவா முடியும், அப்படியே அடித்தால் என்னை பெண் குண்டர் எனக் கூறுவார்கள்’ என விமர்சனம் செய்தார்.மம்தா பற்றி முகநூலில் பேராசிரியர் ஒருவர் கேலிச்சித்திரம் வரைந்ததற்கு, உடனடியாக அவரை கைது செய்தார். புத்தகக் கண்காட்சியைப் பார்க்கச் சென்ற போது மக்கள் கூட்ட நெரிசலில் கார் சிக்கிக் கொண்டதால் வந்து சேர தாமதமான நேரத்தில் ஆவேச முற்று காவலர்களை சவுக்கால் அடிக்க வேண்டுமென்று கடுமையாகச் சாடினார். எந்த இடத்திலும் கோபப்படுவார். யாரை வேண்டுமானாலும் எப்படியும் விமர்சிப்பார். தன்னைப்பற்றிய சிறு விமர்சனத்தையும் தாங்கிக் கொள்ள மாட்டார். இடது முன்னணி ஆட்சிக்கு எதிராக எந்த சிங்கூர் விவசாயிகளைப் பயன்படுத்தினாரோ அவர்களுக்கு இன்னமும் நிலத்தை மீட்டுத்தர முடியவில்லை. ஆனால் அந்த நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறித்து பழைய நிலப்பண்ணையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
          இவர் ஆட்சிக்கு வந்த பிறகு 93 சி.பி.எம் தோழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துக் கொண்டுள்ளது. சி.பி.எம். முன்னாள் அமைச்சர் அப்துல் ரஜாக் முல்லாவை காவல்துறை நேருக்கு நேராக சுட்டது. கல்லூரிப் பேராசிரியர்களை திரிணாமுல் குண்டர்கள் கல்லூரிக்குள் சென்று கடும் தாக்கதல் நிகழ்த்தினார்கள். மருத்துவம், சுகாதாரம் மிகவும் பின்தாங்கிய நிலைக்குச் சென்றுள்ளது. சுதிப்தா மரணத்திற்குப் பின்னால் மிட்னாப்பூர் திரிணாமுல் மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜினாமா செய்துள்ளார். ‘ இளம் மாணவர்களின் உள்ளங்களைப் புரிந்து கொள்ளாதவர்’ என்று மம்தாவை விமர்சனம் செய்துள்ளார். 
          மேற்கு வங்க மாநிலம் என்பது ஸ்ரீபரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், அன்னை தெரசா, ராஜாராம் மோகன்ராய், சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத்தாகூர், 23 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்த ஜோதிபாசு... இப்படிப்பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க தலைவர்கள் வாழ்ந்தது. அப்படிப்பட்ட வங்க மண்ணில் மம்தாவின் மலிவான அரசியல் நடவடிக்கை கேலிக்குரியதாக உள்ளது.  
          நிதி தருகிறேன் என்று முதல்வர் முன் வந்தபோது சுதிப்தாவின் தந்தை வாங்க மறுத்து விட்டார். “நிதி தேவையில்லை. நீதிதான் தேவை” என்று கூறிய அந்த தந்தையின் வீரமும் உறுதியும் வங்க மண்ணின் வீரம் செறிந்த வரலாற்றுத் தொடர்ச்சியே ஆகும். பதவி என்பது மக்களுக்கான சேவை, எளிமை என்பது இயல்பு நிறைந்த வாழ்க்கை என மக்களோடு மக்களாக வாழ்பவர்களே சிறந்த தலைவர்களாக இருக்க முடியும். “இறப்பு என்பது துரதிர்ஷ்ட வசமானது, இந்த மாணவர் இறந்ததும் துரதிர்ஷ்டவசமானதுதான்” என்று சுதிப்தாவைப் பார்க்க வந்த முதல்வர் மம்தா சொல்லியிருக்கிறார்.உண்மை தான்! இறப்பு என்பது துரதிர்ஷ்டவசமானதுதான்! ஆனால் அதைவிட துரதிஷ்டம் அவர் மேற்கு வங்கத்தின் முதல்வரானதுதான்!

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

நீதித்துறையின் மீது மம்தாவிற்கு ஏனிந்த கொலைவெறி....!

             மேற்குவங்க சட்டசபையின் ஆண்டுவிழாவையொட்டி, நேற்றுமுன் தினம் சட்டசபையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பேசிய  முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, நீதித்துறையை தாறுமாறாக தாக்கிப் பேசியது என்பது நீதித்துறையை சார்ந்தவர்கள்  மட்டுமன்றி, அனைத்துப் பொதுவான மக்களையும் முகம் சுளிக்கச் செய்திருக்கிறது என்பது தான் உண்மை. 
         மம்தா அப்படி என்னா தான் கேட்ட வார்த்தையில பேசியிருப்பார்...? இதோ கீழே...?
''இன்று ஒரு சில தீர்ப்புகள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன. பணம் வாங்கிக் கொண்டு, பணம் கொடுத்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்படுகிறது. சட்டசபையில் இதை கூறுவதற்கு எனக்கு வருத்தமாக உள்ளது. பல்வேறு பிரச்னைகளுக்கு விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது. இதுபோன்ற விசாரணை கமிஷன்களால் எந்த பயனும் இல்லை''
            இதை சொல்லுறதுக்கு ரொம்பத் தான் வருத்தபடுகிறார்களாம்..! மேற்குவங்கத்தில் அடாவடித்தனமான ஆட்சியை நடத்திகினு, இந்த அம்மணி நீதித்துறையை குறை சொல்லுவது என்பதும்,  குற்றம் சொல்லுவது என்பதும் நமக்கெல்லாம் சிரிப்பைத் தான் வரவழைக்கிறது. 
            அப்படி என்ன நீதித்துறையின் மீது அப்படியொரு கோபம்...? கொலைவெறி...? இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் மனித உரிமை கமிஷன் மம்தாவின் தலையில் ஒரு இடியை தூக்கிப்போட்டது. நான்கு மாதத்திற்கு முன்பு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரும், அவரது நண்பரும், மம்தாவை விமர்சித்து வலைத்தளங்களில் கார்ட்டூன்  போட்டார் என்பதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதை யாராலும் மறந்திருக்கமுடியாது. 
                இந்த நிகழ்வுகளை விசாரித்த மேற்குவங்க மனித உரிமை கமிஷன், இரண்டு நாட்களுக்கு முன்னர் தான், பாதிக்கப்பட்ட இருவருக்கும் தலா 50,000 ரூபாய் இழப்பீடாகத் தரவேண்டும் என்று மேற்குவங்க மாநில அரசை பணித்தது.
           மனித உரிமை கமிஷன் மாநில அரசுக்கு அனுப்பிய இந்த கட்டளை   என்பது தான்தோன்றித்தனமாகவும் அடாவடித்தனமாகவும் நடந்து கொள்ளும்  மம்தாவின் தலையில் பேரிடியாக விழுந்தது. அதனால் எரிச்சலடைந்த  மம்தா அடுத்த நாளே மாநில சட்டசபையிலேயே - முதலமைச்சர் என்கிற முறையில் தான் இப்படிப் பேசுவது தவறு என்று தெரிந்திருந்தும், அவ்வாறு பேசியிருப்பது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. விஷமத்தனமானது. மேலும் இந்த செயல் என்பது நீதித்துறையை மிரட்டும் செயலாகும். அதுமட்டுமல்ல, ஒரு மாநில முதலமைச்சரே இதுபோல்  விமர்சிப்பதன் மூலம் மாநில மக்களுக்கு நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கையையும் மரியாதையையும்  இழக்கச் செய்யும் என்கிற குறைந்தபட்ச அறிவுக்கூட இல்லாமல் மம்தா நடந்து கொண்டிருப்பது என்பது முதலமைச்சர் பதவிக்கே லாயக்கற்றவர் என்பதையே காட்டுகிறது.

வியாழன், 14 ஜூன், 2012

ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுக்காக காசு கேட்கும் மம்தா பானர்ஜி....!



  














   தற்போதைய குடியரசுத்தலைவரின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடையும் சூழலில், ஆறு மாதத்திற்கு முன்பே இந்திய நாட்டின்  அடுத்த ஜனாதிபதி யார் என்பதை ஊடகங்கள் ஆரூடம் சொல்ல ஆரம்பித்தது. இந்த இடைப்பட்ட காலங்களில் ஒவ்வொரு ஊடகங்களும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை எல்லாம் ஜனாதிபதியாக்கிப் அழகு பார்த்தார்கள். ஆனால் ஒரு பக்கம் மத்தியில் கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி செய்துகொண்டிருக்கும் - ஆளும் கூட்டணியின் தலைமைக் கட்சியான காங்கிரஸ் கட்சியோ குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை இதுவரை அறிவிக்காமலேயே காலதாமதம் செய்து வருகிறது. இன்னொரு பக்கம் குழம்பியக் குட்டையில் குடியரசுத்தலைவர் என்ற பெரிய மீன்  இல்லாவிட்டாலும், ஒரு ''குடியரசுத் துணைத்தலைவர்'' என்ற சின்ன மீனையாவது பிடிக்க  முடியுமா என்று ''வாடியிருக்கும் கொக்கைப்'' போல பாரதீய ஜனதா கட்சி நடப்பவைகளை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கிறது. 
                 இந்த சூழ்நிலையில் தான் நாட்டில் ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்தேறியது. தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே தனது கட்சி வேட்பாளரை அறிவிப்பது போல குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வருவதற்கு முன்பே தன்னுடைய கட்சி ஆதரிக்கும் வேட்பாளராக நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரும், பழங்குடி இனத்தை சேர்ந்தத் தலைவருமான பி.ஏ.சங்மா  அவர்களை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திடிரென  அறிவித்தார். மற்றக் கட்சிகளையும் அவரது வேட்பாளரை ஆதரிக்கும் படியும் வேண்டுகோள் விடுத்தார். ஒடிஷா மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரும் ஆதரவுக்கரம் நீட்டினார். 2014 - ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்தே ஜெயலலிதா இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் களம் இறங்கியிருக்கிறார் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. 
            காங்கிரஸ் கட்சித் தலைமையோ தன்னுடைய வேட்பாளரை அறிவிக்க முடியாமல் தினறிக்கொண்டு,  கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களிடம்  ஆலோசனை கேட்டு வருகிறார். சோனியா அம்மா ஒரு கழுதையைக் காட்டினாலும் நாங்கள் ஓட்டுப்போட தயாராக இருக்கிறோம் என்ற தகவலை தன்  ''அடுத்த வாரிசு'' மூலம் சொல்லியனுப்பி திமுக தலைவர் மு. கருணாநிதி தெரிவித்துவிட்டார். 
           ஆனால்  நேற்று இன்னொரு திருப்பமாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூட்டணித் தலைவர் சோனியாவை சந்தித்த போது வாய்ப்புள்ள வேட்பாளராக பிரணாப் முகர்ஜி மற்றும் ஹமீது அன்சாரியின் பெயர்களை சோனியா மம்தாவிடம் முன்மொழிந்திருக்கிறார். மேற்குவங்கத்தில் ஆரம்பக் காலம்தொட்டு அரசியலில் தனக்கு எதிர் துருவத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பிரணாப் முகர்ஜி- யை வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மம்தா தயாராக இல்லை. 
             அதே சமயம் ஜெயலலிதாவைப் போல் குடியரசுத்  தலைவர் தேர்தலில் தானும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று நினைத்த மம்தா பானர்ஜி சோனியாவை சந்தித்தப் பிறகு,  ஜெயலலிதா நிதிஷ் குமாரோடு இணைந்தது போல் இவர் முலாயம் சிங்கோடு இணைந்து கொண்டு, தன் பங்குக்கு  மூன்று பேர்களின் பெயர்களை வேட்பாளராக தன்னிச்சையாகவே அறிவிக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி போன்றப் பெயர்களை மம்தா தடாலடியாக அறிவித்தார். இந்தப் பெயர்களை அறிவிப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்லாமலேயே - அவர்களுக்கு தெரியாமலேயே அறிவித்தது என்பது வேடிக்கையானது.  மம்தா தன்  பெயரையும் அறிவித்ததைக்கண்டு சோம்நாத் சட்டர்ஜியே அதிர்ந்து போய்விட்டார். 
                மம்தாவின் இந்த சித்து வேலைகள் எதற்காக என்றால்...? மத்திய அரசிடம் அவர் கோரிக்கை வைத்து இதுவரை கைக்கெட்டாமல் இருக்கும் ''சிறப்பு நிதிக்காக'' தான் இந்த சித்து வேலைகள் என்பதை நாடே அறியும். மம்தா தான் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் மக்களை கவருவது போல் எந்த ஒரு திட்டங்களையும் கொண்டுவரமுடியாமல் திண்டாடிப் போய்விட்டார். கடந்த  33 ஆண்டுகளாக மேற்குவங்கத்தை ஆட்சி செய்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி அரசு மக்கள் நலன் சார்ந்த பல  திட்டங்களையும் செய்து முடித்து விட்ட சூழ்நிலையில், மம்தா தான் ஆட்சிக்கு வந்து மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு என்ன செய்வது என்று புரியாமல் திணறிப் போய்விட்டார். இந்த   சூழ்நிலையில் தான் , தமிழ்நாட்டைப் போல் பல இலவசங்களை கொடுத்து மக்களை கவரலாம் என்ற முயற்சியில் இறங்கிய  மம்தா அதற்கான நிதியை பிரதமரிடம் கேட்டார்... சோனியாவிடம் கேட்டார்.... திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவிடம் கேட்டார்.... யாரிடமும் மம்தாவின் கோரிக்கை நிறைவேறவில்லை. இறுதியில் குடியரசுத்தலைவர் தேர்தலை நிதியைப் பெறுவதற்கான ஒரு ஆயுதமாக மம்தா தன்  கையில் எடுத்துக் கொண்டார் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.
           சோனியா அறிவிக்கும் வேட்பாளருக்கு தன் கட்சியின் ஓட்டு வேண்டுமென்றால், தான் கேட்கும் அதற்கான நிதியை தந்தாக வேண்டும் என்பது தான் மம்தாவின் இந்த பேரமாகும். அதுமட்டுமல்ல, இது போன்ற குழப்பத்தை உண்டுபண்ணி, அதன் மூலம் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும் நெருங்கி வருவதற்கான வாய்ப்பையும் மம்தா உருவாக்கி, அதன் மூலம், ஜனாதிபதி பதவியை காங்கிரசும், துணை ஜனாதிபதி பதவியை பாரதீய ஜனதாக் கட்சியும் பங்குப்போட்டுகொள்ளவும் மம்தா பிஜேபி- க்கு ஆதரவாக  மறைமுகமான  வேலைகளில் இறங்கியிருக்கிறார் என்பதையும் யாராலும் மறுக்க முடியாதது.

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

மம்தாவின் அராஜகம் ஓயவில்லை....!



                 மேற்குவங்கத்தில் மம்தாவின் அராஜக போக்கும், ஜனநாயகத்திற்கு எதிரான போக்கும் கட்டுக்கடங்காமல் போய்கொண்டிருக்கிறது.   மேற்குவங்க மாநிலத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை சட்டம் நடைமுறையில் உள்ளதோ என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. பதினைந்து நாட்களுக்கு முன்பு தான் மேற்குவங்க அரசு நூலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் பத்திரிக்கைகளுக்கும், ஆங்கில பத்திரிக்கைகளுக்கும் தடைவிதித்திருந்தார். அது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என்று பத்திரிகை உலகமும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
            அந்த எதிர்ப்பு அலை ஓய்வதற்குள், அடுத்து பள்ளிப் பாடப்புத்தகத்தில் உள்ள காரல் மார்க்ஸ் மற்றும் ரஷ்யப் புரட்சி பற்றியப் பாடங்களை நீக்கி மம்தா உத்தரவிட்டது என்பது மேற்குவங்கம் மட்டுமல்லாது நாடு முழுவதுமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. 
           இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், மதம் பிடித்த யானை மண்ணை அள்ளி தன் தலையிலேயே போட்டுக்கொள்வது போல் அடுத்து,  நேற்று வியாழக்கிழமை இரவு, அம்பிகேஷ் மகாபத்ரா என்ற மேற்குவங்க  ஜாதவ்புர் பல்கலைக்கழக  வேதியியல் துறைப் பேராசிரியர் மம்தாவின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் மம்தாவை விமர்சனம் செய்து கார்ட்டூன் தயார் செய்து வெளியிட்டார் என்பது தான் அவர் மீதான குற்றச்சாட்டு. இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. அது மட்டுமல்ல இந்திய மக்களுக்கு கருத்து தெரிவிக்கும் உரிமை என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டமே கொடுத்திருக்கிறது. கார்ட்டூன் வெளியிட்டதற்காக அந்த பேராசிரியரை கைது செய்ததன் மூலம் மம்தா இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையே மீறியிருக்கிறார் என்று தான் பொருள். 
                  தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் மம்தாவின்   அராஜகப் போக்கு என்பது நாம் மறந்துவிட்ட சர்வாதிகாரி ஹிட்லரை தான்  நமக்கெல்லாம் நினைவுப்படுத்துகிறது....
Courtesy : The Hindu / 14.04.2012
           போகிற போக்கைப் பார்த்தால், அந்த கார்ட்டூனைப் பார்த்து வாய்விட்டு சிரித்ததற்காக பொதுமக்களும் தண்டிக்கப்படுவார்களோ என்கிற அச்சம் எழுகிறது.   இன்றைக்கு 14. 04. 2012 தேதியிட்ட இந்து பத்திரிகையில் வந்திருக்கும் கார்ட்டூனைப் பார்க்கும் போது நமக்கெல்லாம் அப்படித் தான் தோன்றுகிறது.

சனி, 7 ஏப்ரல், 2012

கார்ல் மார்க்ஸ் உலகத்திற்கே வெளிச்சம் தரும் சூரியன் - ஆயிரம் மம்தா வந்தாலும் மறைத்துவிடமுடியாது...

கார்ல் மார்க்சை 
மறைத்து விட்டு                                               
உலக வரலாற்றை 
படிக்கமுடியாது...!
       
        எப்போதோ ஒரு முறை கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு அற்புதமான கவிதை வரிகள் என் நினைவிற்கு வருகிறது.
           
                                                          
            '' மின்சாரமும்   
                மார்க்சியமும்
                இல்லாமல் 
                இனி
                உலகம் இயங்காது'' 
என்பது தான் அந்த கவிதை வரிகள். அதில் சொல்லப்பட்ட கருத்து என்பது உண்மையிலும் உண்மையானது.
                  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தனது அடுத்தக்கட்ட அடாவடித்தனத்தை நிகழ்த்தி இருக்கிறார். மேற்கு வங்க பள்ளிப் பாடத்திட்டத்தில் வரலாற்றுப்பாடத்தில் ரஷ்யப்புரட்சி, மாமேதை கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் பற்றிய பாடங்களை மம்தா தடை செய்து நீக்கியிருக்கிறார்.  ரஷ்யப்புரட்சி மற்றும் கார்ல் மார்க்ஸ் போன்ற வரலாறுகளை தவிர்த்து உலக வரலாற்றைப் படிக்க முடியாது என்ற குறைந்த பட்ச அறிவுக்கூட மம்தாவிற்கு இல்லை. 
             மூன்று ஆண்டுகளுக்கு முன் உலகளவில் நிகழ்ந்த ''பொருளாதார வீழ்ச்சிக்கான'' தீர்வை, அமெரிக்கா மற்றும்  ஐரோப்பா போன்ற முதலாளித்துவ நாடுகளெல்லாம் ''யாரை''  வேண்டாமென்று தூக்கி எரிந்தார்களோ அவரைத் தான் தேடினார்கள். அவர் எழுதிய புத்தகத்தை தான் தேடினார்கள். ஆம்... அவர்கள் தேடியது கார்ல் மார்க்சை தான். அவர் எழுதிய ''தாஸ்  கேபிடல்'' என்ற ''மூலதனம்'' புத்தகத்தைத் தான் தேடினார்கள். ஏனென்றால் பொருளாதார வீழ்ச்சிக்கு அதில் தான் தீர்வு கிடைத்தது. அதனால் தா அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் தாஸ் கேப்பிட்டல் மிக அதிகமான பிரதிகள் அச்சிடப்பட்டு விற்கப்பட்டன.
            பிரான்ஸ் நாட்டு அதிபர் கூட ''எல்லோரும் கார்ல் மார்க்ஸ் எழுதிய தாஸ் கேபிட்டலை படியுங்கள். அதில் தான் பொருளாதார வீழ்ச்சிக்கு தீர்வு இருக்கிறது'' என்று சொன்னதாக பத்திரிகைகளில் வந்த செய்தியை மம்தா படித்திருக்கமாட்டார். 
                 எல்லோரும் பைபிள் படியுங்கள் என்று சொள்ளக்கூடிய போப்பாண்டவர் கூட ''எல்லோரும் தாஸ் கேபிட்டல் படியுங்கள். அதில் தான் பொருளாதார வீழ்ச்சிக்கு தீர்வு இருக்கிறது'' என்று சொன்னதாக வந்த செய்தியை மம்தா கேள்விப்பட்டிருக்கமாட்டார். 
          சென்ற ''ஆயிரமாண்டின்'' மாமனிதனாக கருதப்பட்ட மாமேதை கார்ல் மார்க்சையும், அவர் கருவாக்கி உருவாக்கிய கம்யூனிசத்தத்துவங்களையும் யாராலும் அழித்துவிட முடியாது. நேற்று - இன்று - நாளை என முக்காலத்திற்கும் பொருத்தமானவர் தான் கார்ல் மார்க்ஸ். உலகம் பொருளாதார வீழ்ச்சியில் தத்தளிக்கும் போது கார்ல் மார்க்ஸ் தான் கைகொடுத்து உதவுவார். இதெல்லாம் மம்தா அறிவதற்கு வாய்ப்பில்லை தான். மம்தாவிற்கு கற்பூர வாசனை தெரிவதற்கு நியாயமில்லை தான்.   

வியாழன், 15 மார்ச், 2012

அரசியல் பிழைப்புகளுக்காக மம்தா பானர்ஜி போடும் மார்க்சிஸ்ட் வேஷம்...!

            நேற்று முன் தினம் மத்திய இரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி ஒரு ''அற்புதமான'' இரயில்வே  பட்ஜெட்டை வழங்கினார். கடந்த எட்டு  ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த பயணிகள் கட்டணத்தை இந்த பட்ஜெட்டில் தாறுமாறாக உயர்த்தி சாதனைப்படுத்தி இருக்கிறார்.  அதுமட்டுமில்லாது நடைமேடை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சரக்கு இரயில் கட்டணம் பட்ஜெட்டுக்கு முன்பே காதும் காதும் வைத்தார் போல் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இரயில் நிலையங்கள் விமான நிலையங்கள் அளவுக்கு தரம் உயர்த்துவதற்கு இரயில் நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்கப் போவதாகவும் முன்மொழிந்திருக்கிறார். 
                 இவைகள் அத்தனையும் தினேஷ் திரிவேதியின் சொந்தக் கருத்தில் உதித்தவையல்ல. அல்லது இது தினேஷ் திரிவேதி தன் விருப்பப்படி தனிப்பட்ட முறையில் தாயாரித்த இரயில்வே பட்ஜெட்டும் அல்ல. மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவில் உருவான பட்ஜெட் இது. ஏற்கனவே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவாகி ஏற்றுக்கொள்ளப்பட்டு உருவான பட்ஜெட் தான் இது. அமைச்சரவையில் பங்கு பெற்றும் , அரசுக்கு உள்ளேயே  இருந்து கொண்டும் , ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அனைத்து முடிவுகளையும் அமைச்சரவைக் கூட்டங்களில் ஏற்றுக் கொண்டும், மம்தாவின் வழி காட்டலோடும் செயல்படுகிற ஒரு அமைச்சர் தான் இந்த இரயிவே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி என்பதை மக்கள் மறந்திருப்பார்கள் என்று மம்தா பானர்ஜி நினைத்துவிட்டார் போலும்.  
              இரயில்வே பட்ஜெட்டை  தினேஷ் திரிவேதி படித்து முடித்தவுடன், மம்தா அம்மையாருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டிருக்கிறது. கொதித்துப் போய்விட்டாராமாம். அதே கோபத்தில் பிரதமருக்கு,  பயணிகள் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு சுமையை ஏற்படுத்திய இரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியை பதவி நீக்கம் செய்யுங்கள் என்று வேகமாக ஆணையிட்டார். நல்ல வேலை தூக்கில் போடுங்கள் என்று சொல்லவில்லை.
               அவர் தான் மம்தாவின் கட்சியை சேர்ந்தவராயிற்றே, பிரதமருக்கு ஆணையிட்டதற்கு பதிலாக தன கட்சியை சேர்ந்த தினேஷ் திரிவேதிக்கே பதவி விலகச் சொல்லி ஆணையிட்டிருந்தால், மாட்டேன் என்றா சொல்லிவிடுவார். அல்லது கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் மக்களின் தலையில் அதிக சுமையை ஏற்றிவிட்டீர்களே... அதனால் நாங்கள் அரசுக்குக் கொடுத்துவந்த ஆதரவை திரும்பப்பெருகிறோம் என்று சொல்லி கட்டண உயர்வை திரும்பப்பெற முயற்சி செய்திருக்கலாம். ஆக கட்டண உயர்வு என்ற முக்கியமான பிரச்னையை திசைத்திருப்புவதற்காக தன்னை ஒரு கம்யூனிஸ்டை போல காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்.  மம்தா இது மாதிரியான செயல்பாட்டின் மூலம் மேற்குவங்க மாநில மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்.  
                மக்களுக்கெதிரான மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், அநீதிகளை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குரல் கொடுப்பது போல் தாமும் கொடுத்தால் தான் மேற்குவங்கத்தில்  அரசியல் பிழைப்பு நடத்த முடியும் என்ற கட்டாயம் மம்தா பானர்ஜிக்கு இருக்கிறது.

புதன், 7 மார்ச், 2012

தனக்கெதிராகவே போராடும் மம்தா பானர்ஜி...!


                    தனது சொந்த அரசுக்கு எதிராகவே முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராடிக் கொண்டிருக்கிறாரா? இதுதான் கடந்த சில நாட்களாக மேற்குவங்க மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வரும் கேள்வியாகும். பிப்ரவரி 28 ஆம் தேதியன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அனைத்துத் தொழிற்சங்கத்தினரும் இணைந்து நடத்தினார்கள். காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளின் தொழிற்சங்கங்கள் கூட இதில் பங்கேற்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்த நிலையில், இதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. நாடு முழுவதும் பெரும் வெற்றி பெற்ற இந்த வேலைநிறுத்தம், மேற்குவங்க மாநிலத்தைப் பொறுத்தவரை முழு அடைப்புப் போராட்டமாகவே இருந்தது. இந்த மாபெரும் வெற்றியைப் பொறுக்க முடியாத திரிணாமுல் காங்கிரசார், வன்முறை வெறியாட்டத்தில் இறங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜாதவ்பூர் பகுதிக்குழு அலுவலகம் மீது தாக்குதல் நடந்தது. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் சட்ட ஒழுங்கு நிலை எவ்வளவு மோசமாகப் போய்விட்டது என்பதற்கு இதைவிடப் பெரிய எடுத்துக்காட்டு இருக்க முடியாது. காவல்துறையில் இருக்கும் கான்ஸ்டபிள் தாரக் தாஸ் என்பவர்தான் இந்தத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். அவர் அதில் ஈடுபட்டிருந்தார் என்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டபோது அதைப் படமெடுக்க பத்திரிகையாளர்கள் முனைந்தனர். அப்போது பத்திரிகையாளர்களையும் தாக்கினர். தாரக் தாசும் அந்த வன்முறையில் நேரடியாக இறங்கியிருந்தார். இது குறித்து துறைவாரியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. வன்முறை வெறியாட்டத்தில் கான்ஸ்டபிள் தாரக் தாஸ் ஈடுபட்டது உண்மைதான் என்பது நிரூபணமானது. அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்து காவல்துறை உத்தரவிட்டது. இந்நிலையில்தான் இந்த சம்பவம் ஜோடிக்கப்பட்டது என்றும், பொய்யான செய்திகளைப் பத்திரிகையாளர்கள் பரப்புகிறார்கள் என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார். இத்தனைக்கும் எந்தக் காவல்துறை விசாரணை நடத்தி தாரக் தாஸ் மீதான குற்றச்சாட்டு உண்மைதான் என்று சொல்லி அவரைத் தற்காலிக நீக்கம் செய்துள்ளதோ, அந்தத் துறைக்கு மம்தா பானர்ஜிதான் அமைச்சராவார். அவர் இதோடு நிற்கவில்லை. இந்த சம்பவத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்த சதிக்கு எதிராக பேரணியும் நடத்தியிருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களோடு சேர்ந்து கான்ஸ்டபிள் தாரக் தாஸ் நடத்திய வன்முறை வெறியாட்டம், பத்திரிகையாளர் பாதிப்பு, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடல், துறை விசாரணை, குற்றம் நிரூபணம் என்று அனைத்துமே மார்க்சிஸ்ட் கட்சியின் சதி என்று மம்தா பானர்ஜி சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் மட்டுமல்ல, பார்க் தெரு, கட்வா மற்றும் ஃபல்டா ஆகிய மூன்று இடங்களில் பாலியல் பலாத்காரக் கொடூரங்கள் நிகழ்ந்தன. இந்த மூன்றிலும் பலாத்காரமே நடக்கவில்லை என்று தடாலடியாக மம்தா பானர்ஜி அறிவித்தார். மூன்று சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் துவங்குவதற்கு முன்பாகவே “சிபிஎம் சதி” என்ற பல்லவியை அவர் பாடினார். விசாரணைகளுக்குப்பிறகு மூன்று சம்பவங்களிலும் பாலியல் பலாத்காரம் நடந்தது உண்மைதான் என்பது தெரிய வந்திருக்கிறது. இவற்றிலும் மம்தா பானர்ஜி தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் காவல்துறைதான் விசாரணை செய்து முடித்திருக்கிறது. ஆனாலும் தனது பொய்ப்பிரச்சாரத்தை அவர் நிறுத்தவில்லை. அவசரப்பட்டுக் கருத்து தெரிவிக்காமல் தனக்குக் கீழே இயங்கும் காவல்துறை விசாரித்த பிறகு பேசியிருக்கலாமே என்று சொந்தக் கட்சிக்காரர்களே முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.அவருக்கு ஆதரவாக இருந்தவர்களே விலகி நிற்கத் துவங்கியுள்ளனர். பிரபல வழக்கறிஞரான அருனவ கோஷ் என்பவர் கூறுகையில், காவல்துறை விசாரித்து வரும் விவகாரங்கள் மற்றும் நீதிமன்றங்களில் விசாரணையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக தெருக்களில் முதலமைச்சரே பேரணி நடத்துவதால் என்ன பலன்? அவருடைய பதவிக்கு அது அழகு சேர்க்கவில்லை. அவருக்கென்று பல வேலைகள் உள்ளன. அவற்றை அவர் பார்ப்பது நல்லது என்கிறார். இத்தகைய கருத்துக்கள்தான் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே உலாவிக்கொண்டிருக்கின்றன. மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராகச் செய்தி வெளியிட்டு வந்த பல பத்திரிகைகள் கூட “தனக்கெதிராகவே போராட்டம் நடத்துகிறார் மம்தா” (டைம்ஸ் ஆப் இந்தியா) என்று வர்ணித்துள்ளன.

புதன், 9 நவம்பர், 2011

மம்தாவின் ரவுடித்தனமும், ஏமாற்று வேலையும்....!

மம்தா பானர்ஜியின் 
ரவுடித்தனம்...!                

                
          மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்ன செய்தார் தெரியுமா...? கொல்கத்தாவில் உள்ள ஒரு காவல்  நிலையத்துக்குள் அடாவடியாக - அதிரடியாக நுழைந்தார். காவல் நிலையத்தின் செயல்பாடுகளை சோதனை செய்ய அல்ல.  குற்றம் புரிந்து, அங்கு பிடித்து வைக்கப்பட்டிருந்த திரிணமூல் கட்சித் தொண்டர்கள் இரண்டு பேரை விடுவித்திருக்கிறார் என்பது தான் அதிர்ச்சி தரும் விஷயம் ஆகும். குற்றம் செய்து பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்கள் அவரது கட்சியினை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல அவரது உறவினரும் ஆவார்கள்.
                    சென்ற இடதுசாரிகள் ஆட்சியின் போது தான், குற்றம் செய்து கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட தங்கள் கட்சியின் குண்டர்களை விடுவிக்க காவல் நிலையத்திற்குள் புகுந்து அடாவடித்தனம் செய்தார் என்பதை அந்த மாநிலமே பார்த்திருக்கிறது. ஆனால் இன்றோ தான்   சட்டத்தை காப்பாற்றவேண்டிய ஒரு முதல்வர் என்பதையே அவர் மறந்து செயல்பட்டிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். முதல்வராக பதவியேற்கும் போது ''விருப்பு வெறுப்புகளுக்கு  இடம் தராமல் சட்டங்களை காப்பாற்றுவேன்'' என்று   எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு  எதிராகவும் செயல்பட்டிருக்கிறார் என்பதை தான் இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. 
                 இது பொறுப்பு வாய்ந்த ஒரு முதலமைச்சர் செய்கின்ற வேலை அல்ல. மம்தா பானர்ஜி ஒரு ரவுடியைப் போல் நடந்துகொண்டிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
  மம்தாவின் ஏமாற்று வேலை...!          
                 
அண்மையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலின் விலையை உயர்த்தியது. அப்போது தான் மம்தாவின் ஏமாற்று நாடகம் ஆரம்பமானது. மம்தாவின் கட்சியும் இடம்பெறும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் இப்போது தான் முதல் முறையாக பெட்ரோல் விலையை ஏற்றுவது போல் வானத்துக்கும் பூமிக்கும் ருத்ரத்தாண்டவமே ஆடினார்.
                 அமைச்சரவையிலிருந்து விலகப்போகிறோம் என்றார். ஆட்சிக்குக் கொடுத்துவந்த ஆதரவை திரும்பப் பெறப்போகிறோம் என்றார். என் கட்சியை சேர்ந்த எம்.பி-க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கப்போவதாகவும், அவரிடம்   எங்கள் அதிருப்தியை தெரிவிக்கப்போகிறோம் என்றும் கூறினார். .
மன்மோகன் சிங்கை விட்டேனா பார் என்று கொக்கரித்தார். ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவது பற்றி மம்தா யோசிப்பதாகவும் மம்தா கட்சியிலிருந்து செய்திகளை கசியவிட்டனர்.
                 ''கைப்புள்ள வந்துட்டான்.. அவன் ரத்தத்த பாக்காம விடமாட்டான்..'' என்ற ''வின்னர்'' படத்துல வர்ற வடிவேலு டயலாக்கு கணக்கா...  மக்கள் எல்லோரும் ''மம்தா எழுந்துட்டாங்கடா.. அவங்க ரெண்டுல ஒன்னு பாக்காம விடமாட்டங்கடா...'' என்று, ஆட்சிக்கு என்ன நடக்க போவுதோ என்று மக்கள் எல்லோரும் அவரது அசைவுகளையே பார்த்துக்கொண்டிருந்தனர்.   
                கடைசியில அந்த பெரியண்ணன் ''மண்'' மோகனனை அவங்களால பாக்கவே முடியல... அப்புறம் லோக்கலிலேயே இருக்கிற சின்ன  அண்ணன் பிரணாப்பை பாத்தாங்க... அவர் என்ன அடி கொடுத்தார்னு தெரியல... புலி போல பிரணாப் வீட்டுக்குள்ள போன மம்தா, வெளியே வரும் போது எலி மாதிரி ஆயிட்டாங்க...! என்ன நடந்துன்னே தெரியல... மம்தாவின் சுருதி அப்படியே மாறிப்போச்சி...
                ஆரம்பத்தில் பெட்ரோல் விலைஉயர்வை திரும்பப் பெறாவிட்டால் மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவோம் என எச்சரித்த மம்தா பானர்ஜி,  பிரணாப் முகர்ஜி சந்திப்புக்குப் பின் ''மத்திய அரசு மீண்டும்   பெட்ரோல் விலையை உயர்த்தினால் இரண்டாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக்கொள்வோம்'' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
               இது தான் மம்தாவின் மக்களை ஏமாற்றும் நாடகத்தின் உச்சக்கட்டமாகும். இது யாரை ஏமாற்றும் வேலை...? எப்போதுமே மக்கள் ஏமாந்து கொண்டிருக்க மாட்டார்கள்..!

புதன், 19 அக்டோபர், 2011

மம்தா பானர்ஜி - மாவோயிஸ்டுகள் தேன் நிலவு கசந்துவிட்டது - இப்போது என்ன செய்யப்போகிறார் மம்தா ?

            மம்தா பானர்ஜியின் பொய்களும் புனை சுருட்டுகளும் ஒவ்வொன்றாக உதிர்ந்து விழுகின்றன. அவரது நிஜமுகத்தை மேற்குவங்க மக்கள் பார்க்கத் துவங்கியிருக்கிறார்கள்.  மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி ஆட்சி நடந்தபோது, மாவோயிஸ்டுகள் என்று தங்களை கூறிக்கொள்ளும் கொலைகாரக் கூட்டத்துக்கு இவர் அரசியல் புகலிடம் அளித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் என்று யாருமே இல்லை. மார்க்சிஸ்டுகள்தான் அட்டூழியம் செய்கிறார்கள் என்று கொஞ்சம் கூட நா நடுங்காமல் பேசினார்.
          ஆனால் இன்றைக்கு இவர் முதலமைச்சரான பின்பு மாவோயிஸ்டுகளை கொலைகாரர்கள் என்றும், வன மாபியாக்கள் என்றும் வசைபாடத் துவங்கியிருக்கிறார். ஒருவார காலத்திற்குள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் விளைவு விபரீதமாகயிருக்கும் என்று கர்ஜிக்கிறார்.
         மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகளே இல்லை என்று பேசிய வாய்தான், இன்று கெடு விதிக்கிறது. ஆட்சியைப் பிடிப்பதற்காக மாவோயிஸ்டுகளை இவர் பயன்படுத்திக் கொண்டார். சிங்கூர், நந்திகிராமம் ஆகிய இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ்காரர்களும் மாவோயிஸ்டுகளும் சேர்ந்து கூட்டாகக் கலகம் செய்தனர். இடது முன்னணி அரசு, மாவோயிஸ்டுகளை சமாளிக்க கூடுதலாக மத்திய அரசிடமிருந்து படைஅனுப்பக் கேட்டபோது, அதை ஆட்சேபித்தவர் மம்தா. ரயிலை கவிழ்த்து மாவோயிஸ்டுகள் அட்டூழியம் செய்தபோது கூட, இதற்குக் காரணம் மாவோயிஸ்டுகள் அல்ல என்று நற்சான்றிதழ் வழங்கியவர் இவர்.
         மம்தாவின் நோக்கம் நிறைவேறிவிட்டது. மம்தா கட்சியினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டது. மம்தா கட்சியினரையும் மாவோயிஸ்டுகள் கொலை செய்கின்றனர். இதனால் வேறு வழியின்றி கெடுவிதிக்கும் நிலைக்கு மம்தா தள்ளப்பட்டுள்ளார்.
      மாவோயிஸ்டுகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை தேசத்தின் பிரச்சனையாகக் கருதாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானதாக கருதி, அவர்களுக்கு ஆயுத உதவி, பண உதவி உட்பட ஆதரவுக்கரம் நீட்டிய மம்தா, இன்றைக்கு அவர்களை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்.
         இப்போது என்ன செய்யப்போகிறார் மம்தா பானர்ஜி? ஏற்கனவே நான் கூறியது பொய். மாவோயிஸ்டுகள் மேற்குவங்கத்தில் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கும் அரசியல் நேர்மை இவரிடம் உண்டா? மாற்றம் என்ற வார்த்தையை இவர் உச்சரித்தபோது, பின்பாட்டு பாடிய கார்ப்பரேட் ஊடகங்கள் இப்போது என்ன செய்யப் போகின்றன?
      மம்தா கூறியுள்ளபடி ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, மாவோயிஸ்டுகள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லையென்றால், இவர் எடுக்கப் போகிற நடவடிக்கை என்ன? விடை தெரிய வேண்டிய கேள்விகள் இவை.     குறுகிய அரசியல் நலனுக்காக பயங்கரவாதத்தை வளர்த்துவிடுவது பெரும் ஆபத்தில் முடியும் என்பதற்கு இந்திய வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு. இப்போது அந்தப் பட்டியலில் மேற்குவங்க அனுபவமும் சேர்ந்துள்ளது.

நன்றி  :  தீக்கதிர்