ரிலையன்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரிலையன்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 26 பிப்ரவரி, 2015
அரசின் இரகசியங்களை திருடிய கார்ப்பரேட் களவாணிகளை காப்பாற்றும் மோடி...!
லேபிள்கள்:
அரசின் இரகசியங்கள் திருட்டு,
கார்ப்பரேட் முதலாளிகள்,
கைது,
ரிலையன்ஸ்
வியாழன், 14 ஆகஸ்ட், 2014
கார்ப்பரேட் முதலாளிகள் பிடியில் இந்திய ஊடகங்கள்...!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பி. ராஜீவ் மாநிலங்களவையில் பேசியது :-.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வெள்ளியன்று மாலை ஊடகங்களின் சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு ஏற்படுத்திடும் முயற்சிகளால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து குறுகிய கால விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் கலந்து கொண்டு பி. ராஜீவ் பேசியதாவது: சமீபத்தில் 2014 ஜூலை 27 அன்று நியூயார்க் டைம்ஸ் இதழில் ஒரு தலையங்கம் வந்திருந்தது. இது குறித்து இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். நம் நாட்டின் பத்திரிகை சுதந்திரம் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்று தலையங்கம் தீட்டியிருப்பது இதுவே முதல்தடவை என்றே நான் கருதுகிறேன். தலையங்கத்தின் தலைப்பு, “முற்றுகைக்கு உள்ளாகியுள்ள இந்தியப் பத்திரிகைகள்’’ என்பதாகும்.
தலையங்கத்தின் முதல் பத்தியை மேற்கோள் காட்டுகிறேன். “இந்திராகாந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த சமயத்தில் 1975ம் ஆண்டு ஜூன் 25 அன்று நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக பத்திரிகைகள் மீது தணிக்கையைத் திணித்தார். ஒருசில ஏடுகள் எதிர்ப்பினைத் தெரிவித்தது தவிர, பெரும்பாலான பத்திரிகைகள் அரசாங்கத்தின் புதிய விதிகளுக்கு ஏற்றாற்போல சரணடைந்தன. அப்போது பாஜகவின் நிறுவனர்களில் ஒருவரான எல்.கே. அத்வானி சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் ஒரு தடவை பத்திரிகைகளின் சரணாகதி குறித்து அவர், “நீங்கள் கொஞ்சம் வளைந்து கொடுங்கள் என்றுதான் உங்களைக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் நீங்களோ மண்டியிடுவதே உசிதம் என்று தேர்ந்தெடுத்து விட்டீர்கள்,’’
யதார்த்தம் என்ன?
பாஜகவின் தலைவரான அத்வானிஜியின் விமர்சனங்கள் இவை. ஆனால் இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது? மும்பையிலிருந்து வெளியாகும் டிஎன்ஏ நாளேடு தன்னுடைய இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த ஒரு கட்டுரையை அகற்றிவிட்டது. ராணா அயூப் என்பவர் எழுதியிருந்த அக்கட்டுரையில், “நரேந்திர மோடியால் பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமித் ஷா மீது கொலை உட்பட பல்வேறு கிரிமினல் குற்றங்களுக்காக இப்போதும் விசாரணை நடைபெற்று வருகிறது,’’ என்று எழுதியிருந்தார். அந்தக் கட்டுரைதான் அகற்றப்பட்டு விட்டது. நம்நாட்டில் இப்போது இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது.
நியூயார்க் டைம்ஸ் ஏடு தலையங்கத்தில் எழுதியுள்ள மேலும் சில பகுதிகள்: “சமீபத்தில் ஊடக முதலாளிகள் செய்தியாளர்கள் எப்படி எப்படி செய்திகளைத் தர வேண்டும் என்றும், தலையங்கத்தின் திசைவழி எப்படி இருக்க வேண்டும் என்றும் நேரடியாகவே நிர்ப்பந்தம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். மிகவும் பிரபலமான பல செய்தியாளர்கள் தங்கள் வேலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார்கள் அல்லது தங்கள் மீதான நிர்ப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாங்களாகவே ராஜினாமா செய்திருக்கிறார்கள்.’’ உண்மையில் நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி எவ்விதமான ஊடக சுதந்திரமும் நமக்குக் கிடையாது.
அரசியமைப்புச்சட்டம் பேச்சுச் சுதந்திரம் மற்றும் அதனை வெளிப்படுத்தும் சுதந்திரம் தொடர்பாக 19(1)ஆவது பிரிவின் கீழ் கொடுத்திருக்கும் அதிகாரத்தின் ஒரு விரிவாக்கம்தான். ஆனால் நாம் இப்போது பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். பத்திரிகைகள் என்பவை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கருதப்படுகிறது. ஆனால் இது ஒரு “வணிகத்தூண்’’ மட்டுமேயாகும். ஊடகங்களும் இப்போதெல்லாம் கார்ப்பரேட்டுகளின் சொத்துக்கள்தான். இவ்வாறு கார்ப்பரேட்டுகளின் சொத்துக்களாக மாறிவிட்ட ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்படும் என்றெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது. இதுதான் இன்றைய எதார்த்தமாகும்.
திணிக்கப்படும் செய்திகள்
சமீபத்தில் என்ன நடந்திருக்கிறது? ரிலையன்ஸ் நிறுவனம் டிவி18 தொலைக்காட்சி நிறுவனத்தைத் தனதாக்கிக் கொண்டுவிட்டது. நாம் என்ன பார்க்க வேண்டும், நாம் என்ன கேட்க வேண்டும், அல்லது நாம் எந்தத் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று யார் தீர்மானிப்பது? டிவி18 தொலைக்காட்சி நிறுவனத்தின் கீழ் 18 அலைவரிசைகள் இருக்கின்றன. வானொலி அலைவரிசை, 92.7 எப்.எம். ரிலையன்சால் நடத்தப்படுகிறது. பிக் ஸ்கிரீன் மற்றும் பிக் சினிமா என்னும் நாட்டின் மிகப் பிரம்மாண்டமான திரைப்படத்தயாரிப்பாளர்கள் வேறு யாருமில்லை, ரிலையன்ஸ்தான். இவர்கள் பாலிவுட் படங்களை மட்டும் அல்ல பிராந்திய மொழிப் படங்களையும் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இவை அனைத்தும் ரிலையன்சால் கட்டுப்படுத்தப்படுகின்றன. டிட்டிஎச் சிஸ்டம் ரிலையன்சுக்கே சொந்தமானது. இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் ஜாம்பவானாகத் திகழும் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரும் ஊடக நிறுவனமாகவும் திகழ்கிறது. உண்மை நிலை இவ்வாறிருக்கையில் இவர்களின் ஊடகங்கள் வாயிலாக நம் கருத்துக்கள் மக்களைச் சென்றடையுமா அல்லது இவர்கள் திணிக்கும் செய்திகள் மக்களைச் சென்றடையுமா?நம் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்ன? வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பு. இதுவே இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமான பகுதி. ஆனால் ஊடகங்கள் கார்ப்பரேட்டுகளின் ஏகபோகமாக மாறியுள்ள நிலையில் அவைகளிடமிருந்து ஜனநாயகப்பூர்வமான செயல்பாடுகளை எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்?
2008இல், டிராய் எனப்படும் டெலிகாம் முறைப்படுத்தும் அதிகாரக்குழுமம் நமது நாட்டில் மூன்றுவிதமான உரிமதாரர்களுக்கு அனுமதி அளித்தது. பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகிய மூன்றும் ஒருவிதம். இதற்கு படுக்கைநிலையில் உள்ளவை என்று பெயர். செங்குத்தான உரிமதாரர்கள் என இன்னொரு வகை உண்டு. இவர்கள் தொலைக்காட்சி அலைவரிசையும் வைத்திருப்பார்கள் டிட்டிஎச்சையும் பெற்றிருப்பார்கள். இவர்கள் டெலிகம்யூனிகேசன் மற்றும் இதர துறைகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். இவ்வாறு பலவிதமான உரிமதாரர்கள் நமது நாட்டில் உண்டு. உலகில் வேறெந்த நாட்டிலும் இவ்வாறு பலவிதமான உரிமதாரர்கள் அனுமதிக்கப்படவில்லை.
நிலைக்குழு அறிக்கை
மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக நிலைக்குழு ஓர் அறிக்கை அளித்துள்ளது. அதன் தலைவராக தற்போது அமைச்சராகயிருக்கும் ஸ்ரீராவ் இந்தர்ஜித் சிங் இருந்தார். அக்குழுவில் நானும் ஓர் உறுப்பினர். அக்குழு மூன்று விதமான உரிமதாரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. அந்தப் பரிந்துரையை இந்த அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு மிகவும் முக்கியமான பிரச்சனையாகும்.நாட்டில் ஒரு பகுதியில் இரு தொலைக்காட்சி அலைவரிசைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றன. இதனை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்.
நாங்கள் பத்திரிகை சுதந்திரத்திற்காக நிற்கிறோம். நாட்டில் இன்னொருவிதமான ஏற்பாடும் இருந்து கொண்டிருக்கிறது. கேபிள் டிவி அமைப்புகள், வானொலி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏதேனும் ஒரு தொழிற்சங்கம் கிளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தால் அனைத்து ஊடகங்களும் அதற்கு எதிராக எழுதுகின்றன. இது இவ்வமைப்புகளின் மற்றொருவிதமான ஏகபோகமாகும் . அரசாங்கம் இதனையும் பரிசீலிக்க வேண்டும்.
ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்
மற்றொரு முக்கியமான பிரச்சனை. காசு கொடுத்து செய்தி போட வைப்பது. `பெயிட் நியூஸ்’. இது பத்திரிகை சுதந்திரத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் ஜனநாயகத்திற்கே ஆழமான அச்சுறுத்தல் என்று நமது குடியரசுத் துணைத் தலைவரே கூறினார். இதுதொடர்பாக நிலைக்குழு சில ஆழமான பரிந்துரைகளை அளித்திருக்கிறது. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உள்ளடக்கம் குறித்து அறிஞர்கள் குழு அடங்கிய ஊடகக் கவுன்சில் பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒரு பரிந்துரை. அடுத்து, இப்போது பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா என்பது பத்திரிகைகள் குறித்து மட்டுமே அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது. ஊடகங்கள் தொடர்பாகவும் இதுபோன்றதொரு அமைப்பு உருவாக்கப்படவேண்டும்.
நன்றி :
லேபிள்கள்:
இந்திய ஊடகங்கள்,
கார்ப்பரேட் முதலாளிகள்,
பெய்டு நியூஸ்,
ரிலையன்ஸ்
செவ்வாய், 30 அக்டோபர், 2012
ஜெய்பால் ரெட்டி மாற்றப்பட்டது ''ரிலையன்ஸ்'' முகேஷ் அம்பானியின் நிர்ப்பந்தமா?
மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி
அரசாங்கம் அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளது. இந்த மாற்றம் மூலம் மக்களிடம்
ஏற்பட்டுள்ள அவப்பெயரை அகற்ற முடியும் என கணக்குப் போடுகிறது காங்கிரஸ்
அரசு. தலையணையை மாற்றினால் தலைவலி தீராது என்பார்கள். என்னதான் அமைச்சரவை
மாற்றம் எனும் சாகச செயல்களை செய்தாலும் மக்களின் கோபத்தை திசை திருப்ப
முடியாது. எனினும் ஒரு அமைச்சரின் மாற்றம் சில விவாதங்களை கிளப்பியுள்ளது.
பெட்ரோலிய அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டியின் மாற்றம் தான் அது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்ப்பந்தம் காரணமாகவே ஜெய்பால் ரெட்டியிடமிருந்து பெட்ரோலிய அமைச்சகம் பறிக்கப்பட்டதாக செய்திகள்
கூறுகின்றன. இதற்கு முன்பு மணிசங்கர அய்யரிடமிருந்து பெட்ரோலிய அமைச்சகத்தை பறித்த பொழுதும் இத்தகைய விமர்சனங்கள் எழுந்தன. அவர் ஈரான் எண்ணெய்
குழாய்கள் மூலம் இந்தியாவிற்கு எண்ணெய் வாங்கிட முனைப்பாக இருந்ததாகவும்
அதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இறுதியில் அமெரிக்காவின் நிர்ப்பந்தம் வென்றது. மணிசங்கர அய்யர் பெட்ரோலிய
அமைச்சகத்தை இழந்தார். அன்று வெளிநாட்டு நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்த
மன்மோகன் அரசாங்கம் இன்று உள்நாட்டு பெரும் முதலாளிக்கு அடிபணிந்துள்ளதாக
செய்திகள் தெரிவிக்கின்றன.
தான் நினைத்தபடியெல்லம் பெட்ரோலிய அமைச்சகத்தை ஆட்டுவித்த ரிலையன்ஸ்
நிறுவனத்தின் செல்வாக்கை கட்டுப்படுத்தினார். அரசிடமிருந்து ரிலையன்ஸ்
நிறுவனம் பெற்ற எண்ணெய் வயல்களில் ஒப்பந்தப்படி இல்லாமல் எண்ணெய்
உற்பத்தி குறைந்தது. இதனால் 2011-12ம் நிதியாண்டில், திட்டமிட்டு ரூ.
20,000 கோடி நட்டம் அரசுக்கு ஏற்படுத்தப்பட்டது. 2012-13ம் ஆண்டில் இந்த
நட்டம் ரூ.45,000 கோடியாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இது பற்றி கேள்வி
எழுப்பினார் அமைச்சர் ஜெய்பால் ரெட்டி. தான் கொள்ளை லாபம் அடிக்க இயற்கை
எரிவாயுவின் விலையை உயர்த்திட ரிலையன்ஸ் நிறுவனம், பெட்ரோலிய அமைச்சகத்தின்
மீது நிர்ப்பந்தம் செலுத்தியது. ஒப்பந்தப்படி 2014 - ஆம் ஆண்டுதான் விலை
உயர்வு பற்றி பரிசீலனை செய்ய வேண்டும். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு
கொள்ளை லாபம் உடனே வேண்டும். அவ்வாறு விலை உயர்த்தினால் சுமார் ரூ. 35,000
கோடி அளவிற்கு மக்கள் மீது சுமை ஏற்றப்படும். அந்த அளவிற்கு
ரிலையன்சுக்கு லாபம் ஏற்படும். எல்லாவற்றுக்கும் மேலாக ரிலையன்ஸ்
நிறுவனத்தின் செயல்பாடுகளை தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளரின் ஆய்வுக்கு
உட்படுத்தினார் ஜெய்பால் ரெட்டி. தான் ஒரு தனியார் நிறுவனம், தனது
செயல்பாடுகளை ஆய்வு செய்திட தலைமை தணிக்கையாளருக்கு உரிமை இல்லை என
ரிலையன்ஸ் வாதிட்டது. ஆனால் எண்ணெய் உற்பத்தி அளவு குறித்து அரசுடன்
ஒப்பந்தம் இருப்பதால் ரிலையன்ஸ் செயல்பாடுகளை தலைமை தணிக்கையாளர் ஆய்வு
செய்வதில் தவறு இல்லை என ஜெய்பால்ரெட்டி கூறினார்.
ரிலையன்ஸ் செய்த
தகிடு தத்தங்களை தலைமைத் தணிக்கையாளர் அம்பலப்படுத்தினார். இவையெல்லாம்
ரிலையன்சுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தின. தான் ஒரு ஏகபோக நிறுவனம்;
அதுவும் மன்மோகன்சிங் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் ஒரு
நிறுவனத்தை கேள்வி கேட்பது எனில் எவ்வளவு தைரியம் ஜெய்பால் ரெட்டிக்கு?
இதனை எப்படி ஏற்றுக் கொள்வது? எனவே, ஜெய்பால் ரெட்டியை மாற்றியே
தீரவேண்டும் என ரிலை யன்ஸ் நிறுவனம் மன்மோகன் அர சாங்கத்திற்கு
நிர்ப்பந்தம் அளித்தது.இதன் விளைவாகவே ஜெய்பால் ரெட்டியிடமிருந்து
பெட்ரோலிய அமைச்சகம் பறிக்கப்பட்டது. தொலைத்தொடர்புத் துறைக்கு யார்
அமைச்சராக இருக்க வேண்டும் என மிட்டல் குழுமமும் டாடா குழுமமும்
கார்ப்பரேட் போரில் ஈடுபட்டன என்பது பழைய செய்தி. இப்பொழுது ஜெய்பால்
ரெட்டி மாற்றம் என்பது மன்மோகன்சிங் அரசாங்கம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளுக்கு அடிபணிந்து போகிறது என்பதை மீண்டும் ஒரு முறை
நிரூபித்துள்ளது. மன்மோகன்சிங் அரசாங்கம் செயல்படுவது மக்களுக்காக அல்ல!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே என்பதையே
இந்த மாற்றம் பறைசாற்றுகிறது.
நன்றி :
லேபிள்கள்:
அமைச்சரவை மாற்றம்,
ரிலையன்ஸ்,
ஜெய்பால் ரெட்டி
சனி, 18 ஆகஸ்ட், 2012
மன்மோகன் சிங்கின் புதிய ஊழல் சாதனை - 2ஜி - யை மிஞ்சியது...!
ஒரு கிலோ அரிசி ரூ. 2 /- வீதம் ஒரு குடும்ப அட்டைக்கு மாதம் 35 கிலோ அரசி கொடுக்க ஏற்பாடு செய்வதன் மூலம் நாட்டிளுள்ள அனைத்து மக்களுக்கும் உணவு பாதுகாப்பை ஏற்படுத்து என்று மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் போராடி வருவதுடன் அதற்கான கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து மனு ஒன்றையும் கொடுத்திருக்கிறார்கள். வெறும் 1.50 இலட்சம் கோடி ரூபாய்களே தேவைப்படும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மன்மோகன் சிங் யோசிக்கிறார். அதற்கு நிதி இல்லை என்று நழுவுகிறார். மக்களுக்கென்று ஒரு திட்டம் நிறைவேற்றவேண்டுமென்றால் மத்திய அரசு தயங்குகிறது. ஆனால் இதே மத்திய அரசு இந்திய பெருமுதலாளிகளுக்கு 5 இலட்சம் கோடி வரை மானியமும், வரிச்சலுகைகளையும் தாராளமாக வாரி வழங்குகிறது.
ஆனால் ''பொருளாதார வளர்ச்சி'' என்ற பேரில் சாதாரண மக்களுக்கு மட்டும் கூடுதல் வரி, புதிய வரி, மானியம் வெட்டு என பல்வேறு கோணங்களில் மக்களை நசுக்குகிற வேலைகளை மத்திய அரசு மனசார செய்கிறது.
அண்மையில் சுதந்திரதினத்தன்று கொடியினை ஏற்றிவைத்து விட்டு சந்தோஷமாக நாலு வார்த்தைகளை பேசாமல், மன்மோகன் சிங் ஒப்பாரிவைத்து அழுதே விட்டார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கிறதாம். அதற்கு காரணம் அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்தொற்றுமை இல்லையாம். மக்களை திசைத் திருப்புவதற்கு எதிர் கட்சியின் மீது இப்படியொரு குற்றச்சாட்டு.
மன்மோகன் சிங் செய்கிற ஏகாதிபத்திய ஆதரவு கொள்கைகளுக்கும், முதலாளித்துவ ஆதரவு கொள்கைகளுக்கும் இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால் அவருக்கு எரிச்சல் வருகிறது. அரசியல் கட்சிகள் அனைத்தும் அறிவுப்பூர்வமாக சிந்தனை செய்யாமல், மக்களைப் பற்றி யோசிக்காமல், கண்மூடித்தனமாக இவரையும், இவர் கொண்டுவரும் அறிவிலித்தனமான திட்டங்களையும் ஆதரிக்கவேண்டும் என்று கூசாமல் எதிர்ப்பார்க்கிறார்.
இப்படியாக மண்ணுமோகன் ஆட்சி என்பது திக்குத் தெரியாமல் திக்குமுக்காடி கொண்டிருக்கும் வேளையில் - ஏற்கனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலும், காமன்வெல்த் விளையாட்டு ஊழலும், ஆதர்ஷ் வீட்டு ஊழலும் கொடிகட்டிப் பறக்கும் இந்த சூழ்நிலையில் தான், இந்த ஊழல்கள் எல்லாம் தோற்கும் விதமாக 3.86 இலட்சம் கோடி அளவில் புதிய ஊழல்களை புரிந்து மண்ணு மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி புதிய சாதனையை புரிந்திருக்கிறது. மிகப்பெரிய சாதனை - பெருமையாக இருக்கிறது. இத்தனைக்கும் மன்மோகன் சிங்கிற்கு நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு தனியாருக்கு அனுமதியளித்ததில் 1.86 இலட்சம் கோடி ரூபாயை, மக்களுக்கு திட்டங்களை தருவதில் நிதியை காரணம் காட்டுகிற மத்திய அரசு இழந்திருக்கிறது என்பது காரித்துப்புகிற அளவிற்கு கேவலமானது.
அதில் மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் செலவை கவனிக்கின்ற - பாராளுமன்றத்தில் சோதனையான காலங்களில் மன்மோகனை காப்பாற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதிகளை கொட்டி இறைக்கின்ற ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகை அளித்ததில், 29 ஆயிரத்து 33 கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை சொன்னது வேறு யாரும் அல்ல. மத்திய கணக்கு தணிக்கை குழு நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த விவரங்களில் மிகவும் முக்கியமானது.
''பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ; நாங்கள் சாகவோ'' என்று பாரதியை போல் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒரு நாள் மக்கள் கொதித்தெழுவார்கள்.
லேபிள்கள்:
'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல்,
நிலக்கரி சுரங்க ஊழல்,
ரிலையன்ஸ்
வெள்ளி, 17 ஜூன், 2011
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தொடரும் ஊழல்களின் அணிவகுப்பு......
| கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய் தளத்தில் ரூ.45 ஆயிரம் கோடி சூறை ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் |
2 ஜி அலைக்கற்றை, விண்வெளி அலைக்கற்றை, காமன்வெல்த் விளையாட்டு, பிரச்சார் பாரதி, மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு போன்றவற்றில் அரசுக்கு வரவேண்டிய வருமானத்தில் நட்டத்தை உண்டாக்கி, பெருமுதலாளிகளும், மத்திய அமைச்சர்களும், காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டுவதற்கு மன்மோகன் சிங் கண்டுகொள்ளாமல் வாய்ப்பளித்த விவரங்கள் ஒவ்வொன்றாக பூதம் போல் கிளம்பி வெளியே வருவதைப் பார்த்து இந்திய மக்களே அதிர்ந்து போயிருக்கிறார்கள். சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக - வரலாறு காணாத ஊழல்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியே வர வர மன்மோகன் ஆட்சியின் லட்சணம் மக்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது. இன்றைக்கு ஊழல்களின் அணிவகுப்பில் சிக்கித்திணறிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மத்திய அரசின் கருவூலத்திற்கு ரூ.45 ஆயிரம் கோடி அளவிற்கு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தி அம்பானியின் ரிலையன்ஸ் கம்பெனி நடத்தியுள்ள மிகப்பெரும் எரிவாயு ஊழலிலும் சிக்கியுள்ளது. மன்மோகன் சிங் அரசின் பெட்ரோலியத்துறை அதிகாரிகளும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் சட்டத்தை ஏமாற்றி ரூ.45 ஆயிரம் கோடி அளவிற்கும் அதிகமாக மக்கள் பணத்தை சுருட்டியிருப்பதை மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கையகம் ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது. நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த அனைத்து ஊழல்கள் தொடர்பாகவும் தொடர்ந்து மவுனம் காக்கும் பிரதமர் மன்மோகன் சிங், ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தியுள்ள எரிவாயு ஊழல் தொடர்பாக நாட்டு மக்களுக்கு அவசியம் பதில் சொல்லியே தீரவேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஆந்திரா-ஒரிசா எல்லையை யொட்டி கிருஷ்ணா-கோதாவரி ஆறுகளின் கழிமுகப்பகுதியில் மிகப்பெரும் பெட்ரோலியம்- இயற்கை எரிவாயு வளம் குவிந்திருக்கிறது. இந்த பகுதியில் அரசு பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும், உள்நாட்டில் கிடைக்கும் இந்த மகத்தான வளத்தை கொள்ளையடித்து தனது லாபத்தை பெருக்க, பெரும் முதலாளியான முகேஷ் அம்பானி முடிவு செய்தார். இந்த பொதுச்சொத்தை பயன்படுத்துவதில் முகேஷ் அம்பானிக்கும், அனில் அம்பானிக்கும் இடையே மோதல் கூட ஏற்பட்டது. முதலாளிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலை பிரதமர் மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரம் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களும் ஓடோடிச்சென்று தீர்த்து வைக்க முற்பட்டார்கள் என்பது வெட்கக்கேடான தனிக்கதை. இந்நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கிருஷ்ணா - கோதாவரி இயற்கை எரிவாயு தளத்தில் (கேஜி கேஸ் பேசின்) மிகப்பெரிய 18 எரிவாயுக்கிணறுகளை, அரசிடம் ஒப்பந்தம் போட்டு பயன்படுத்தத் துவங்கியது. ஒரு குறிப்பிட்ட காலம் பயன்படுத்திவிட்டு-அதிலிருந்து பெட்ரோலியத்தையும் இயற்கை எரிவாயுவையும் எடுத்து கொள்ளை லாபம் பார்த்துவிட்டு- பின்னர் இந்தக்கிணறுகளில் பெட்ரோலியமோ அல்லது இயற்கை எரிவாயுவோ கண்டு பிடிக்கப்படவில்லை என்று கூறியது. அதைத்தொடர்ந்து இதில் பெருமளவில் மூலதனச் செலவு செய்துவிட்டதாகக் கூறி, பெட்ரோலியத்துறை யிடமிருந்து மிகப்பெருமளவிலான தொகையை கறந்து விட்டது. இந்தத்தொகையின் அளவு ரூ.45 ஆயிரம் கோடி என்று அதிர்ச்சிதரத்தக்க அறிக்கை ஒன்றை மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கையகம் தயாரித்துள்ளது. 193 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையின்படி, கிருஷ்ணா கோதாவரி எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளில் உற்பத்தியை பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தங்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கும், பெட்ரோலிய அமைச்சகத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர், சம்பந்தப்பட்ட எரிவாயு கிணறுகளை மீண்டும் அரசிடம் ஒப்படைக்காமல், ஒப்பந்தக்காலம் முடிந்த பின்னர் அதே கிணறுகளில் தனது தந்தை பெயரில் திருபாய் 1 மற்றும் திருபாய் 3 என சுத்திகரிப்பு ஆலைகளை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அமைத்தது. எண்ணெய் வளம் கொழிக்கும் கேஜி - டி6 பிளாக் எனப்படும் தளத்தை சட்டவிரோதமாகக் கைப்பற்றியே ரிலையன்ஸ் நிறுவனம் தனது சொந்த ஆலைகளை அமைத் தது. இப்படிச் செய்ததன் மூலம் அரசு நிறுவனங்களுக்கு 117 சதவீதம் அளவிற்கு வருமான இழப்பை ஏற்படுத்தியது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த சட்டவிரோத செயல்களை சட்டப்பூர்வமாக ‘மாற்றியதில்’ காங்கிரஸ் தலைமையிலான அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சகம் முனைப்புடன் செயல்பட்டது. பெட்ரோலியத்துறையில் இயற்கை எரிவாயு தளங்களுக்கு பொறுப்பான ‘ஹைட்ரோ கார்பன் பொது இயக்குநரக’த்தைச் சேர்ந்த மிக முக்கிய அதிகாரி கள் பெருமளவில் லஞ்சம் வாங்கிக்கொண்டு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக வேலை செய்திருக்கிறார்கள். ரிலையன்ஸ் நிறுவனம், பின்னர் மூலதனச்செலவினம் 8.8 பில்லியன் டாலர் என்று கணக்கை மாற்றி, அரசிடமிருந்து ரூ.45 ஆயிரம் கோடியை சுருட்டிவிட்டது. இதுதொடர்பான ஏராளமான விவரங்கள் மத்திய தலைமை கணக்கு மற் றும் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. நாட்டை உலுக்கியுள்ள இந்த ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் 2006க்கும் 2011க்கும் இடையில் நடந்துள்ளது. இந்த காலகட்டத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தவர் முரளி தியோரா ஆவார். இவர் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் முறைகேடுகளுக்கெல்லாம் ஏஜெண்டாக செயல்பட்ட ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிர்ச்சிதரத்தக்க இந்த விவரங்கள் கடந்த 2 நாட்களாக மன்மோகன் சிங் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சர்களுடன் அவசரமாக கலந்தாலோசனைகள் நடத்தி வருகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ஆ.ராசா, தயாநிதிமாறன் போன்ற மத்திய அமைச்சர்களின் வரிசையில் முரளி தியோராவும் சிக்குகிறார். இவர்கள் அனைவருக்கும் தலைமைப்பொறுப்பு வகிக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கும் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறார். |
லேபிள்கள்:
எரிவாயு ஊழல்,
ரிலையன்ஸ்
புதன், 15 ஜூன், 2011
மற்றுமொரு ஊழல் பூதம் வெளியே கிளம்பியிருக்கிறது - மன்மோகன் சிங் ஆட்சியின் லட்சணம் பாரீர்...!
மன்மோகன் சிங் அரசின் செயல் பாட்டால் இந்தியாவின் பெருமுதலாளியான முகேஷ் அம்பானியின் நிறுவனம் ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் கிடைத்ததாகவும், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறை கூறியுள்ளது. கிருஷ்ணா - கோதாவரி நதிப்படுகையில் சமையல் எரிவாயு எடுக்கும் பணியை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்படைத்தது. இந்தப் பணியை பொதுத்துறை நிறுவனங்களே திறம்படச் செய்ய முடியும் என்றபோதும் அம்பானிக்கு நாட்டின் இயற்கை வளத்தை கொள்ளையடிக்க அனுமதி கொடுத்தது மன் மோகன் சிங் அரசு. இந்த தேசத்தின் சொத்தை பங்குபோட்டுக் கொள்வதில் முகேஷ் அம்பானிக்கும், அனில் அம்பானிக்கும் தகராறு ஏற்பட்டபோது, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப. சிதம்பரம் இருவருமே நேரடியாக கட்டப் பஞ்சாயத்து செய்தார்கள் என்பது நாம் மறந்திருக்க முடியாது. அதன் பிறகு தான் அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டது. கிருஷ்ணா - கோதாவரி நதிப்படுகையில் உற்பத்திப் பொருளை பகிர்ந்து கொள்வது தொடர்பான உடன்பாடு முழுக்க முழுக்க ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்தது என்றும், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் மற்றும் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பு குறித்து கொஞ்சம் கூட கவலைப்படவில்லை என்றும் மத்திய தணிக்கை மற்றும் கணக்கு அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். அரசுக்கு ஏற்படும் இழப்பு குறித்து பிரதமர் அமைச்சகத்திற்கு தொடர்ச்சியாக பலமுறை எச்சரிக்கை செய்து கடிதம் எழுதினேன். ஆனால் பிரதமர் அமைச்சகம் இது குறித்து கொஞ்சம் கூட கவலைப்படவில்லை என்று மத்திய அரசின் முன்னாள் வருவாய்த்துறை செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா குறிப்பிட்டுள்ளார். முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஆர்ஐஎல் மற்றும் கெய்ரின் நிறுவனத்திற்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் உடன்பாடு அமைந்தது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமருக்கு தெரிந்து தான் எல்லாம் நடந்தது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா திரும்பத்திரும்ப கூறி வருகிறார். இப்போது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அநியாயமாக ஆதாயம் கிடைக்கும் வகையில் அமைந்த உடன்பாடு குறித்து பிரதமர் அமைச்சகம் கண்டுகொள்ளாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. தேசத்தை உலுக்கி வரும் தொடர் ஊழல்களுக்கு மத்தியில் இந்த முறைகேடும் வெளியாகியுள்ளது. முழுமையாக விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். நன்றி : தீக்கதிர் ( அரசியல் விழிப்புணர்வு பெற ''தீக்கதிர்'' நாளேட்டினை படியுங்கள் ) |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










