வெள்ளி, 31 ஜனவரி, 2014

தமிழக பல்கலைக்கழகங்களைக் காப்போம்...!

                
கட்டுரையாளர் : வே. வசந்தி தேவி, கல்வியாளர், 
                                முன்னாள்  துணைவேந்தர்,            
                                 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்  
   
                 சென்னைப் பல்கலைக்கழகத்தின் கம்பீரப் பொலிவு கொண்ட பேரவை (செனட் ஹவுஸ்) வாயிலின் எதிர்ப்புறச்சுவரில் கடந்த பல வாரங்களாக ஒரு விளம்பரப்பலகை தொங்கிக்கொண்டிருந்தது. “இறுதி ஆண்டு புராஜக்ட் எந்த துறைக்காயினும் அணுகலாம்; சிறந்த வல்லுநர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை குறைந்த விலையில் கிடைக்கும்.” தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை புராஜக்ட் முதல் பிஹெச்.டி. ஆய்வுகள் வரை மாணவர்களால் பெரும்பாலும் எழுதப்படுவதில்லை; மார்க்கெட்டில் வாங்கப்படுகின்றன என்பது ஊரறிந்த ரகசியம். பல்கலைக்கழக வாயிலிலேயே விளம்பரம் செய்வதில் என்ன தவறு என்று ஒரு ''கெட்டிக்கார வியாபாரி'' எண்ணியிருக்கலாம். இத்தகைய ஆய்வு அறிக்கை தயாரித்துக் கொடுக்கும் 'வல்லுநர்கள்', 'ஆய்வு ஆலோசகர்' என்ற பெயரில் விசிட்டிங் கார்டு வைத்துக்கொண்டு, தங்கள் தொழிலில் பெருமையும் லாபமும் அடைகின்றனர் என்று கேள்விப்படுகிறோம். கல்லூரி ஆசிரியருக்கான நேர்முகத் தேர்வுகளில், அவர்களது பிஹெச்.டி ஆய்வு தொடர்பான கேள்விகள் கேட்டால் சிலருக்குத் தங்கள் ஆய்வின் அடிப்படைகளே தெரிவதில்லையென்று சொல்லப்படுகிறது. “தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களை உலகத்தரம் வாய்ந்தவையாக ஆக்குவோம்” என்ற அரசின் சூளுரைகள் பட்டமளிப்பு விழாக்கள் தோறும் கேட்கின்றன. 

வேறெங்கும் இல்லாத விநோதம் 
 
       தமிழ்நாட்டில் மாநிலப் பல்கலைக்கழகங்கள் 21, மத்தியப் பல்கலைக்கழகங்கள் 2, பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற தனியார் பல்கலைக்கழகங்கள் 21. ஆக மொத்தம் 44 பல்கலைக்கழகங்கள் இருப்பது அல்ல பிரச்சினை. இதனினும் அதிகப் பல்கலைக்கழகங்கள் தேவை.  இவற்றில் பல ‘ஒருதுறை பல்கலைக்கழகங்கள்’. பொறியியல், மருத்துவம், விவசாயம், ஆசிரியர் கல்வியியல், சட்டம், உடற்கல்வி, கால்நடை அறிவியல், தோட்டக் கலை போன்ற ஒவ்வொரு துறைசார் அறிவுக்கும் தனிப் பல்கலைக்கழகம். இந்தத் துறைகள் குறித்த கல்வியை மற்ற பொதுப்பல்கலைக்கழகங்களில் பெற இயலாது; இந்தப் பல்கலை மாணவர்கள் அந்த, குறுகிய துறைப் பாடங்கள் தவிர வேறேதும் கற்க இயலாது. இது உலகில் வேறு எங்கும் இல்லாத விநோதம். பல்கலைக்கழகம் என்பதன் பொருளே பல கலைகள் உறவாடி, பரிமாறிக்கொள்ளும் களம், அறிவுத் துறைகளின் பிரிவுகள் கடந்த, பிரபஞ்சப் பொதுமையில் கலந்த ஒரு அங்கமாகத் தன் துறையை உணரும் வெளி. பொறியியல் கற்கும் மாணவர் சட்டம் கற்க வேண்டுமென்றாலோ, மருத்துவராகப் பயிற்சி பெறும் மாணவருக்கு வரலாற்றிலும் ஆர்வம் உண்டென்றாலோ தன் பல்கலைக்கழக வளாகத்திலேயே அடுத்த கட்டடத்துக்குச் சென்று பயிலலாம். இந்தியாவிலும் பல பல்கலைக்கழகங்களில் இத்தகைய வாய்ப்புகள் உண்டு.
            தமிழகப் பல்கலைக்கழகங்களில் புரையோடிக்கிடக்கும் அவலங்களைப் பட்டியலிடுவதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். அவற்றில் பல திரையின்றி நிற்கும் உண்மைகள்தான். தமிழக அரசு, பல்கலைக்கழகங்களின் மீது காட்டும் அக்கறையின்மை, அவற்றைப் பஞ்சத்தில் பரிதவிக்க விடும் மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு, அடிப்படை நிதித் தேவைக்கே அவை எந்தத் தரமோ நெறியோ இல்லாமல் நடத்தும் தொலைதூரக் கல்வி, பல்கலைகள் மேல் அரசு நடத்தும் அதிகாரத் தாண்டவம், சிண்டிகேட் போன்ற அனைத்துப் பல்கலைக்கழக அதிகார அமைப்புகளும் சுதந்திரமும் மாட்சிமையும் இழந்து, கல்வித் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இயங்குதல், தலைமைப் பதவியிலிருந்து கடைநிலை ஊழியர் வரை அனைத்து நியமனங்களிலும் தலைவிரித்தாடும் ஊழல், தரமற்ற ஆய்வுகள், தனியார் பல்கலைக்கழகங்களில் நடக்கும் கட்டணக் கொள்ளை போன்ற நெடிது நீளும் பட்டியல்.
மேலும் ஒரு சுமை 
 
         ஒட்டகத்தின் முதுகில் சமீபத்தில் ஏற்றப்பட்டிருக்கும் கடைசிச் சுமை: அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே பாடத்திட்டம் என்று தமிழக அரசு முடிவெடுத்து, உயர்கல்வி கவுன்சில் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி செய்தி. தனியார் பல்கலைக்கழகங்களை இது கட்டுப்படுத்தாது. பல்கலைக்கழகம் என்ற உயரிய அமைப்பின் ஆன்மாவைக் கொன்றுவிட்டு, செத்த உடலாக அதனை உலவ விட வேண்டுமென்பது தமிழக அரசின் திட்டமா என்பது புரியவில்லை. பல்கலைக்கழகங்களின் உயிர்மூச்சே அவற்றின் தன்னாட்சியும், தங்கள் தனித்துவத்துக்கு ஏற்ற வண்ணம் பாடத்திட்டங்களை உருவாக்கும் சுதந்திரமும்தான். இவற்றைப் பறிப்பது, மறுப்பது எத்தனை எளிதாக நிறைவேறியிருக்கிறது! உயர்கல்வி கவுன்சிலின் உறுப்பினர்களான துணை வேந்தர்கள் அதனை எதிர்த்தார்களா? தங்கள் புனிதப் பொறுப்பான பல்கலைக்கழகத்தின் சுதந்திரத்தையும் உரிமையையும் மாண்பையும் கெளரவத்தையும் காக்க அவர்கள் குரல்கொடுத்தார்களா? தெரியவில்லை.
            உலக அரங்கில் வேறு எங்கும் நடக்காத அதிசயம் இது. உலகின் பல்கலைகளில் ஒவ்வொரு துறைக்கும் முழுச் சுதந்திரம் உண்டு. தாங்கள் சிந்தித்து, திட்டமிட்டு, உருவாக்கிய பாடத்திட்டங்களை அந்தப் பல்கலைக் கழகத்தின் கல்விக் குழுக்கள், மற்ற அமைப்புகளில் வைத்து, புதிய பாடங்களின் செழுமையை, தேவையை விளக்கி, விவாதித்து, ஒப்புதல் பெற்று, பின் நிறைவேற்றுகின்றன. தங்கள் பல்கலைக்கழகங்களுக்கு அப்பாற்பட்ட எந்த அமைப்பின், அதிகாரத்தின் ஒப்புதலையும் அவர்கள் பெற வேண்டிய அவசியமே இல்லை. ஒரு துறையின் முதுகலைப் பாடம் என்றால், அவசியமான சில பாடங்கள் தவிர, விருப்பப் பாடங்கள் ஏராளமானவை ஒவ்வொரு துறையிலும் தேர்ந்தெடுப்பதற்கு உள்ளன. அத்தகைய அவசிய, விருப்பப் பாடங்கள் இரண்டிலுமே ஒரு பல்கலைக்கும் மற்றொன்றுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை முதுகலைக் கல்வியில் அளிக்கப்படும் பல பாடங்கள் அருகில் இருக்கும் டெல்லி பல்கலையில் இல்லை; ஆனால், வேறு பல அங்கு உண்டு. துறைகளுக்கு மட்டுமல்ல இந்தச் சுதந்திரமும் உரிமையும். ஒவ்வொரு தனிப்பட்ட ஆசிரியருக்கும் இந்த உரிமையும் சுதந்திரமும் உண்டு. ஆசிரியர்கள் திறமை, புலமை, வெளியீடுகள் என்ற பல தரங்களின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட பின், ஒவ்வொருவரது தனிப்பட்ட ஆய்வுகள் தொடர்பான பாடங்களைக் கற்றுத்தரும் உரிமை அவர்களுக்கு உண்டு. பலதரப்பட்ட புலமைகள் கொண்ட ஆசிரியரை நியமிப்பதும், அவர்கள் தத்தமது தனி ஆய்வுகளின் அடிப்படையில் புதிய புதிய பாடங்களைத் துறையில் அறிமுகம்செய்வதும் ஒரு பல்கலையின் பெருமையாகக் கருதப்படுகிறது. அத்தகைய பன்முக அறிவு, செழுமையும் பெருமையும் அளிக்கும் சாதனையாகக் கருதப்படுகிறது.

இயந்திரங்களாகும் ஆசிரியர்கள் 
 
         ஆய்வும் கற்பித்தலும் ஒன்றுடன் ஒன்று உயிர்ப் பிணைப்பு கொண்டவை. சிறந்த பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் தங்கள் ஆய்வுகளை வகுப்பறைக்குள் எடுத்துச் சென்று, பாடத்திட்டங்களாக மாற்றுகின்றனர். அந்த ஆய்வுப் பொருளில் ஆர்வம் ஏற்படும் மாணவர், ஆய்வை முன்னெடுத்துச் செல்கின்றனர். அறிவு, ஆழமும் விரிவும் அடைகிறது. பாடத்திட்டத்தை உருவாக்கும் சுதந்திரம் இழந்த ஆசிரியர் எங்கோ உருவாக்கப்படும் பாடங்களைப் புகட்டும் இயந்திரமாகத்தான் மாறுவார். நம் பல்கலைக்கழகங்களில் ஏற்கெனவே தாழ்ந்து கிடக்கும் ஆய்வுத்திறன் இன்னும் அதல பாதாளத்தை, துரித கதியில் சென்றடையும்.
           தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே பாடத்திட்டம் என்று முடிவெடுத்த பின் வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் எதற்கு? பல்கலைக்கழக அமைப்புகளில் முதன்மையான கல்விக் குழுக்களை கலைத்துவிடலாம். தேர்வுகளும் அனைத்துப் பல்கலைகளுக்கும் பொதுவாக, ஒரே வினாத்தாள்கள் தயாரித்து, பள்ளி இறுதித் தேர்வுகள் போன்று மாநிலம் முழுதும் ஒரே சமயத்தில் நடத்திவிடலாம். ஒரே பல்கலைக்கழகத்தின் பிராந்திய மையங்களாக அவற்றை மாற்றிவிடலாம்.
            தமிழ்நாட்டின் ஒரு பல்கலைக்கழகத்தில் ‘தங்களுடைய பல்கலைக்கழகத்தைக் காப்போம்’ என்ற ஒரு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ‘தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் காப்போம்’ என்ற இயக்கம் தொடங்க வேண்டியது இன்றைய வேதனை நிலை.
நன்றி :

வியாழன், 30 ஜனவரி, 2014

காந்தியின் ரத்தம் இன்னும் காயவில்லை...!

          

   கட்டுரையாளர் : மதுக்கூர் இராமலிங்கம், பத்திரிக்கையாளர்                   

       “இது காந்தி பிறந்த நாடு, இங்கு வன் முறைக்கு இடமில்லை” என்று முகத்தை, சாந்தமாகவும், பாந்தமாகவும் கஷ்டப்பட்டு வைத்துக்கொண்டு நரேந்திர மோடி பேசுகிறார். இவருடைய சித்தாந்த குருவான நாதுராம் கோட்சேயும், பிரார்த்தனைக்கு வந்துகொண்டிருந்த மகாத்மா காந்தியை வணங்குவதுபோல நடித்துத்தான் அவரை வதை செய்தான். காந்தியை கொன்று முடித்துவிட்ட இவர்கள் இப்போது அவர் விதைத்துச்சென்ற மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை போன்ற தத்துவக்கோட்பாடுகளை அறுத்து முடித்துவிட முயல்கிறார்கள்.
                குஜராத்தில் மோடியின் ஆட்சியில்தான் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் கொஞ்சம் கூட மனிதத்தன்மையின்றி நர வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் இவரோ காந்தியத்தின் கடைசி வாரிசு போல தன்னை வரித்துக்கொண்டு வார்த்தைப்பந்தல் போடுகிறார். 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள் மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக்கொலை செய்தான் என்பது ஒற்றைவரி வரலாறு. ஆனால் கோட்சேயின் பின்னால் ஒரு வெறிபிடித்த கும்பலே இருந்தது என்பது மறைக்கப்பட்ட, ஆனால் மறக்கக்கூடாத வரலாறு. ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகாசபை ஒருபோதும் காந்தியை ஏற்றுக் கொண்டதில்லை. அவர்கள் கடல் கடந்து பாசிச ஹிட்லரையும், முசோலினியையும் தங்கள் நெஞ்சப்பரப்பில் வைத்து நேசித் தார்கள். ஹிட்லர் அப்பாவி யூதர்களை வேட்டையாடியதுபோல இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களை ஒரேயடி யாக ஒழித் துக்கட்ட வேண்டும் என்றுவிரும்பினார்கள். அதற்கு காந்தி முன் வைத்த மதச்சார்பின்மை கோட்பாடு இவர்களுக்கு தடைக்கல்லாக இருந்தது. காந்தி கொலையின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பங்கு உண்டு என்று கூறும்போதெல்லாம் அவசரமாக மறுக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினால் இயக்கப்படுகிற பாஜகவினர்.
              என்னுடைய அண்ணன் நாதுராம் கோட்சேவுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தொடர்பில்லை என்று கூறுவது அயோக்கியத்தனம். நாங்கள் இருவரும் வீடுகளில் வளர்ந்ததைவிட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகாவில் வளர்ந் ததுதான் அதிகம் என்கிறான் நாதுராமின் தம்பி கோபால் கோட்சே. காந்தியே ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டினார் என்று உண்மை சற்றும் கலவாத அண்டப்புளுகை அவ்வப்போது அவிழ்த்து விடுகின்றனர் அவர்கள். ஆர்எஸ்எஸ் நடத்திய கூட்டம் ஒன்றில் காந்தி பங்கேற்றது உண்மை. ஆனால் அங்கு சென்றபோதும் (1925) காந்தி அவர்கள் தலையில் ஓங்கி குட்டிவிட்டுத்தான் வந்தார். “இந்தியாவில் இந்துக்களைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்று நினைத்தால், இந்துக்கள் அல்லாத பிறர் குறிப்பாக முஸ்லிம்கள் இங்குவசிக்க விரும்பினால் இந்துக்களுக்கு அடி மைகளாக மட்டுமே இருக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் இந்துமதத்தை கொன்றுவிடுவீர்கள்” என்றார் காந்தி. ஆர்எஸ்எஸ் முன்வைத்த இந்துத்துவா கோட்பாட்டின்படி சிறுபான்மை முஸ்லிம்-கிறிஸ்தவ மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே இருக்க வேண்டும் என்பதே விதி. அப்படி இருக்க முடியாது. அப்படி நினைத்தால் நீங்கள் இந்து மதத்தை கொன்றுவிடுவீர்கள் என்று காந்தி கூறியதால்தான், அவரையே இவர்கள் கொன்றுவிட்டார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அபாயகரமான முகம் குறித்து காந்தியின் சீடரான நேருவுக்கு ஒரு தெளிவான பார்வை இருந்தது. தேசப்பிரிவினையின்போது ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து பட்டேலிடம் நேரு இப்படி கூறினார்,
              “தில்லியில் மட்டுமின்றி மற்ற இடங்களிலும் நடைபெற்ற கலவரங்களில் ஆர்எஸ்எஸ்-க்கு பெரும் பங்கு உண்டு. அமிர்தசரஸில் அவருடைய செய்கைகள் தெளிவாக தெரிந்தன”. கோட்சே நீதிமன்றத்தில் அளித்த வாக்கு மூலத்தில் காந்தியை கொலை செய்ததை முற்றாக நியாயப்படுத்தினான். காந்தியின் தொடர்ந்த நிலையான முஸ்லிம்களுக்கு ஆதரவான இழிந்த போக்கே தன்னை கொலைசெய்ய தூண்டியதாக கூறிய அவன், கடைசிவரை முஸ்லிம்களுக்கு ஆதரவாக அவர் மேற்கொண்ட உண்ணாவிரதமே உடனடியாக அவரைக் கொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு தன்னைத் துரத்தியதாக கூறியிருக்கிறான்.இவ்வாறு கோட்சேயை கொலைக்களம் நோக்கி துரத்திய வார்த்தைகள் ஆர்எஸ் எஸ் தலைவர் கோல்வார்க்கருக்கு சொந்தமானவை. 1939ல் கோல்வார்க்கர் இப் படிக் கூறினார், “துரோகிகள் தேசியத் தலைவர்களாக முடிசூட்டப்படுவதும், தேச பக்தர்கள் இழிவுபடுத்தப்படுவதும் விசித்திரமானது, மிக மிக விசித்திரமானது”. கோட்சேயின் குலகுருவான கோல் வார்க்கர் 1947ல் இப்படிச் சொன்னார். “இந்து-முஸ்லிம் ஒற்றுமையில்லாமல் சுதந்திரமில்லை என்று அறிவித்திருப்பவர்கள் அதன் மூலம் நமது சமுதாயத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார்கள். மகத்தான, தொன்மைமிக்க மக்களின் ஜீவாத்மாவை கொலை செய்கிற கொடும்பாவத்தை செய்து விட்டார்கள்”. இந்து - முஸ்லிம் ஒற்றுமை மிகவும் இன்றியமையாதது என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்த காந்தியைத்தான் இவ்வாறு ஜாடை பேசினார் அவர். கோல்வார்க்கரின் வார்த்தைகளில் ஜீவாத்மாவை கொலைசெய்த, மக்களால் மகாத்மா என்று அழைக்கப்பட்ட காந்தியை கொலை செய்வது கோட்சேவுக்கு குற்றமாகப்படவில்லை.
            மாறாக இந்துத்துவாவிற்கு செய்யும் மிகப்பெரிய தொண்டாகவே பட்டது. கோட்சேவின் கைகளில் கொலைக் கருவியை தந்ததில் வி.டி.சாவர்க்கருக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. 1944ம் ஆண்டில் சாவர்க்கர் இப்படி எழுதினார், “காந்திஜிக்கு ஒரு பத்தானிய ஆட்சியோ அல்லது நிஜாம் முஸ்லிம் ஆட்சியோதான் நூறு சதவீத சுயராஜ்யமாக தெரிகிறது”. இவ்வாறு காந்திக்கு எதிராக கோல் வார்க்கர், சாவர்க்கர் போன்றவர்களால் ஊட்டிவளர்க்கப்பட்ட வெறுப்புத்தான் கோட்சேவின் கைகளில் துப்பாக்கியாக உருவெடுத்தது. காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சாவர்க்கரும் ஒருவர். ஆனால் சந்தர்ப்ப சாட்சியங்களால் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கோட்சே உள்ளிட்ட கைதிகள் சாவர்க்கரின் கால்களில் விழுந்து ஆசி பெற்று தாங்கள் செய்த கொலையை புனிதப்படுத்திக் கொண்டார்கள். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இந்துத்துவா கும்பலுக்கு போற்றத்தக்க பங்கு எதுவும் இல்லை என்பதும், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அந்நியரிடம் வாய்தா கேட்கவும், மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு மண்டியிடவும் அவர்கள் தயாராக இருந்தார்கள் என்பதே உண்மை. ஆனால், சுதந்திரப்போராட்டத்தின் விளைவாக மக்களிடம் உருவாகியிருந்த ஒற்றுமையை, சமயம் கடந்த தேசப்பக்தியை சிதைப்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள். அதற்கு தடையாக இருந்த காந்தியை கொலை செய்யவும் அவர்கள் தயங்கவில்லை. காந்திஜியைப் பொறுத்தவரை அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்தான். ஆனால் அவருடைய மதம் இந்துத்துவாவாதிகள் முன்னிறுத்திய மதம் அல்ல. “என்னைப் பொறுத்தவரை ராமனும், ரஹீமும் ஒன்று தான். ஒரே கடவுள் தான். வாய்மை மற்றும் நியாயம் என்ற கடவுளைத்தவிர வேறு எந்தக் கடவுளையும் நான் அங்கீகரிக்கவில்லை” என்றார் காந்தி.
          ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்போ மனுவின் நவீன பதிப்பு. மக்களிடம் மூடநம்பிக்கைகளை, பய உணர்ச்சியை பரப்புவதன் மூலம் மதத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றவன் மனு. அவனை மனதிற்குள் கோவில்கட்டி கொண்டாடிய இந்துத்துவா கும்பலுக்கு காந்தி சொன்ன சத்தியம் எட்டிக்காயாய் கசக்கத்தானே செய்யும். அரசியலில் மதத்தைக் கலப்பதை காந்தி அடியோடு நிராகரித்தார். மதம் கடவுளுக்கும் மனிதனுக்குமான தனிப்பட்ட விஷயம் என்றார் அவர். “நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால் மதமும் அரசியலும் தனித்தனியாகவே இருக்கும். என் மதத்தின் மேல் உறுதியாகக் கூறுகிறேன். அதற்காக என் உயிரையும் தருவேன்“ என்பது காந்தியின் கருத்தோட்டமாக இருந்தது. `உலகில் எந்த பகுதியிலும் தேசிய இனமும், மதமும் ஒரே வரையறைக்கு உட்பட்டதாக இல்லை. இந்தியாவிலும் அப்படி ஒருபோதும் இருந்ததில்லை’ என்பதுதான் காந்தியின் கருத்தாக இருந்தது. ஆனால் இவர்களோ இந்தியா முழுவதும் இந்து சாம்ராஜ்யம் விரிந்து பரந்து இருந்ததாகவும், முகலாயர்கள் வந்த பிறகுதான் அந்த சாம்ராஜ்யம் தகர்ந்து விட்டதாகவும் பொய்யான வரலாற்றை மெய் போல காட்டி வந்தவர்கள். எனவேதான் காந்தியின் மீது இவர்களுக்கு அளக்க முடியாத அளவுக்கு ஆத்திரம் இருந்தது.
               காந்தியை கொலை செய்த கைத்துப்பாக்கி தற்போது கார்ப்பரேட் கைக்கூலி விளம்பர மினுமினுப்பில் வளர்ச்சி வேடம் போடுகிறது. காந்தியின் உருவப்படத்தின் மீது மலர்தூவி மவுனம் சாதிப்பது மட்டுமல்ல அவருக்கு செலுத்தும் அஞ்சலி. அவர் காத்துநின்ற, அதற்காக உயிரையும் தந்த மதச்சார்பின்மையை பாதுகாக்க உரக்க முழங்குவதும், ஒன்றுபட்டு களமிறங்குவதும் தான் அவரை நினைக்கும் பொருத்தமான வழியாகும்...!
நன்றி :

காங்கிரஸ் கட்சியினரால் மீண்டும் கொல்லப்பட்ட காந்தி...!

இது தீக்கதிர் நாளிதழுக்காக நான் வரைந்த கார்ட்டூன். நன்றி - தீக்கதிர் / 30.01.2014
                          தேசத்தந்தை காந்தி மதவெறிக் கூட்டத்தினரால் கொல்லப்பட்ட தினம் இன்று. 1948 - ஆம் ஆண்டு இதே நாளில் ஆர்.எஸ்.எஸ். மதவெறி அமைப்பால் திட்டமிட்டு காந்தி கொல்லப்பட்டார். 
                 கொல்லப்பட்டு அறுபது ஆண்டுகள் கழித்து, அதே காந்தி இன்றைய காங்கிரஸ் கட்சியினரால் அணு அணுவாகக் கொல்லப்படுகிறார்.  இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தினம் தினம் இந்தியாவிற்குள் அன்னிய நிறுவனங்களை அனுமதியளித்து தேச துரோகச்செயல் செய்வதன் மூலம் காந்தியை மீண்டும் கொன்றுவிட்டார்கள். எதிர்காலத்தில் இப்படியெல்லாம்  காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தேச துரோகச்செயலில் ஈடுபடுவார்கள் என்பதற்காக தான் அன்றே காந்தி காங்கிரஸ் கட்சியை கலைத்து விடவேண்டும் என்று ஆசைப்பட்டார். 
             காங்கிரஸ் கட்சியும், அதற்கு துணை போகும் பாரதீய ஜனதா கட்சியும் தங்களது  கொள்கைப் பிடிப்பாய் செய்யும் ''தேச துரோகச்செயல்களை'' இனியும் அனுமதிக்கலாகாது. வரும் நாடாளுமன்றத்தேர்தலில் இவர்களை ஓட ஓட விரட்டிடவேண்டும். ஊழல் சக்திகளையும், மதவாத சக்திகளையும் தோல்வியடையச் செய்திட வேண்டும். காந்தி ஆசைப்பட்டது போல் காங்கிரஸ் கட்சியை  கலைத்திட வேண்டும். கடலில் அஸ்தியாய் கரைத்திட வேண்டும். அங்கு தானே காந்தியின் அசதியையும் கரைத்தார்கள். 
                 காந்தியை நினைவுகொள்ளும் இந்நாளில் சபதமேற்போம். காந்தியை கொலை செய்து கொன்ற மதவாத சக்தியான பாரதீய ஜனதா கட்சியினையும், அந்நியர்களுக்கு இந்தியாவில் மீண்டும் இடம் கொடுத்து, அந்நியர்களை விரட்டியடிக்கப் போராடிய காந்தியை மீண்டும் கொன்றுவிட்ட காங்கிரஸ் கட்சியினையும் வரும் தேர்தலில் விரட்டியடிப்போம். தோற்கடிப்போம். சபதமேற்போம். 

புதன், 29 ஜனவரி, 2014

தந்தை பெரியார் மீது எச். இராஜாவுக்கு ஏனிந்த எரிச்சல்...?

             
          கடந்த காலங்களில் பல்வேறு சமயங்களில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அநேகமாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும்,  குறிப்பாக வட மாநிலங்கள் பலவற்றிலும், மக்கள் ஒற்றுமை, தேச ஒருமைப்பாடு குலைக்கப்பட்டு,  மனித உயிர்களை பலிகொடுத்து மதவெறிக் கூட்டத்தினரால் நடத்தப்பட்ட மதக்கலவரங்களை இந்த நாட்டு மக்கள் நன்கறிவார்கள். மறந்திருக்கவும் மாட்டார்கள். மக்களிடையே மதவெறியை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் பெறுவதற்கு மதக்கலவரங்களை கொழுந்துவிட்டு எரியச் செய்பவர்கள் பாரதீய ஜனதாக் கட்சியும், அதன் அங்கங்களாக துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் மதவெறி அமைப்புகளும் தான் அந்த மதவெறிக் கூட்டத்தினர் என்பதையும் இந்திய மக்கள் நன்றாக அறிவார்கள்.
            நாடே மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு இரையாகி ஒற்றுமைக் குலைந்து எரிந்துகொண்டிருந்தாலும், மதவெறி சக்திகளுக்கு செவி சாய்க்காமலும், மதக்கலவரங்களுக்கு இடமளிக்காமலும் இன்றுவரை அமைதியான மாநிலமாக பெருமைப்பெற்று திகழ்ந்து வருவது நிச்சயமாக தமிழகமாகத் தான் இருக்கமுடியும்.
               அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த, ஒழுக்கம் மிகுந்த, அமைதி தழைத்த மாநிலமாக தமிழகம் இன்று வரை திகழ்கிறது என்றால் அதற்கு முழு முதற்காரணமாக திகழ்பவர் தந்தை பெரியாரே என்பதை யாராலும் மறுக்க முடியாது. பெரியார் பகுத்தறிவையும், ஒழுக்கத்தையும், மானத்தையும் ஊட்டி, கைப்பிடித்து, வழிகாட்டி  வளர்த்த குழந்தை தான் நமது தமிழகம். அதனால் தான் பெரியார் தமிழகத்தின் தந்தையாக இன்றுவரை போற்றப்படுகிறார். அப்படி வளர்ந்ததால் மதவெறி சக்திகளால் தூண்டப்படும் மதக்கலவரங்களை தமிழகம் இன்றுவரை கண்டதில்லை.
               மதவெறியை தூண்டி மதக்கலவரங்களை அரங்கேற்றி, அரசியல் ஆதாயம் தேடும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு தமிழகம் ஒரு ஏமாற்றமே. மதக்கலவரங்களை தூண்டி மதவெறி அரசியல் மூலம் தமிழகத்தில் காலூன்ற பாரதீய ஜனதா கட்சிக்கு முடியாமல் போனதால் தான் தந்தை பெரியாரின் மீது எச். இராஜாக்கு   இவ்வளவு எரிச்சல் என்பதனையும், பெரியார் காட்டிய வழியில் தமிழகம் பயணம் செய்வதால் ஏற்பட்ட ஏமாற்றத்தால் தான் எச்.இராஜா பெரியாரின் மீது விஷத்தை கக்கியிருக்கிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
தந்தை பெரியார் கைப்பிடித்து வளர்ந்த உயர் தமிழ்நாடு...!

வியாழன், 23 ஜனவரி, 2014

நீதி தேவதையின் கண்களைத் திறந்துவிட்ட நீதியரசர் சதாசிவம்...!

           
            ''இந்தியாவில் மரணதண்டனைக்கு ஒரு மரணம் வாராதா...?'' என்று பல ஆண்டுகளாக மனிதநேயமிக்கவர்களும், சமூக சிந்தனையாளர்களும் வருந்தி ஏங்கி கொண்டிருக்கும் நேரத்தில், இரண்டு நாட்களுக்கு முன்னர், சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளாகக் கருதப்படும் நான்கு பேர் உள்ளிட்ட 15 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் அளித்துள்ள தீர்ப்பு என்பது சற்று ஆறுதலைத் தருகிறது. அதுவும் இன்றைய சூழ்நிலையில் இந்த தீர்ப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும்,  வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் கருதப்படுகிறது.  இந்த தீர்ப்பின் மூலம் குடியரசுத்தலைவர் தவறவிட்ட ''மனிதத்தை'' நீதியரசர் சில சட்ட நுணுக்கங்கள் மூலம் காப்பாற்றிவிட்டார். அவரை நெஞ்சார பாராட்டவேண்டும்.  
                நீதிமன்றத்தில் இருக்கும் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டு. கையில் தராசுக் கொடுக்கப்பட்டு நிற்க வைக்கப்பட்டிருக்கும். நீதியின் முன்  நிற்பவர் தன்  குடும்பத்தை சார்ந்தவரா, உறவினரா, வேண்டியவரா, வேண்டாதவரா, பணக்காரரா, ஏழையா, கருப்பா, சிவப்பா, பெரிய மனிதரா, பதவியில் உள்ளவரா, சாதாரண மனிதரா என்றெல்லாம் பாராமலும், பாரபட்சமில்லாமலும் தராசு முள்போல் நடுநிலையோடு நீதி வழங்கவேண்டும் என்ற பொருளில் தான் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட நீதி தேவதைக்கு இதுவரையில் நீதியின் முன் நிற்பவர் ஒரு உயிருள்ள மனிதன் என்பதும் கூட தனது கட்டப்பட்ட கண்களுக்கு புலப்படாமல் போய்விட்டதே  என்பது தான் வேதனையளிக்கக்கூடிய விஷயமாக இருந்தது. 
               ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாது. கொலையாளியாக இருந்தாலும் ஒருவரின் போக்குவது என்பது நீதிமன்றத்திற்கோ  அல்லது அரசுக்கோ எந்தவிதமான உரிமையும் கிடையாது. மரணதண்டனை என்பது மனித குலத்திற்கு எதிரானது என்றெல்லாம் நீதியரசர் வி. ஆர். கிருஷ்ணய்யர் உட்பட பல்வேறு சமூக சிந்தனையாளர்கள் இன்று வரையில் போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் நீதியரசர் சதாசிவம் அவர்கள் வழங்கிய இந்த தீர்ப்பு என்பது மரணதண்டனைக்கு மரணதண்டனை அளிக்கும் தீர்ப்பை நோக்கி இந்திய நீதிமன்றம் செல்கிறது என்ற எதிர்ப்பார்ப்பை  ஏற்படுத்துகின்றது. அந்த இனிய நாளுக்காக மனிதநேயமிக்க இந்த சமூகம் ஆவலாய் காத்துக்கொண்டிருக்கிறது.

புதன், 22 ஜனவரி, 2014

மாமேதை லெனின் ஒரு கலங்கரை விளக்கம்...!

 கட்டுரையாளர்  : பி.ஏ. கிருஷ்ணன்,          
                                 ஆங்கிலம் -தமிழ் நாவலாசிரியர்,            

                      லெனின் உலகை வலம் வருகிறார். கருப்பு, வெள்ளை, பழுப்பு எல்லா நிறத்தவரும் அவரை வரவேற்கின்றனர். மொழி தடையே அல்ல.  அவரை அரிதினும் அரிதான மொழியைப் பேசுபவர்களும் நம்புகின்றனர்.
               ஆப்பிரிக்க அமெரிக்கக் கவிஞரான லாங்ஸ்டன் ஹ்யூஸ் எழுதிய இந்த வரிகள், சென்ற நூற்றாண்டின் 70-கள் வரை உண்மையாக இருந்தன. இன்றைய உண்மை வேறு. லெனினைப் பற்றி அறிந்தவர்களின் எண்ணிக்கை அருகிக்கொண்டே வருகிறது. இதற்குக் காரணங்கள் பல. லெனினின் வழி வந்தவர்கள் செய்த தவறுகளும் இவற்றில் ஒன்று. ஆனால், முக்கியமான காரணம், தொழில்நுட்பத்தின் துணைகொண்டு முதலாளித்துவம் இன்று அடைந்திருக்கும் முன்னேற்றம். இந்த முன்னேற்றம் ஏற்றத்தாழ்வை ஒழிக்குமென்றோ அல்லது போரற்ற சமுதாயத்தை உருவாக்குமென்றோ நம்பிக்கை கொள்வதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. மாறாக, முதலாளித்துவத்துக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனாலும், இந்த நெருக்கடிகளைப் பயன்படுத்தி உழைக்கும் மக்களின் கரங்களை ஓங்க வைக்கும் வழிமுறைகளை நமக்குக் காட்டும் தலைவர்கள் இன்று இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. 

விடுதலை இயக்கமும் லெனினும் 

         உலகத் தலைவர்களில் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர் லெனின். இதை நமது விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட எல்லாத் தலைவர்களும் நன்றியோடு நினைத்தனர். காந்தி சொன்னது இது: “லெனின் போன்ற மனவலிமை மிக்க பெருந்தலைவர்கள் லட்சியத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாடு நிச்சயம் பலனை அளிக்கும். அவரது தன்னலமற்ற தன்மை பல நூற்றாண்டுகளுக்கு ஓர் உதாரணமாக விளங்கும். அவரது லட்சியமும் முழுமை அடையும்.”
                நேருவைப் படித்த எவரும் அவருக்கு லெனின் மீதிருந்த பெருமதிப்பை உணரத் தவறமாட்டார்கள். பகத்சிங் தூக்குமேடை ஏறுவதற்கு முன்பு படித்த கடைசிப் புத்தகம் லெனின் எழுதிய ''அரசும் புரட்சியும்'' என்ற புத்தகம் தான் என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும்.
லெனினின் தேவை 
 
                              சரி, விடுதலை இயக்கத்தின்போது அவர் தேவையாக இருந்திருக்கலாம். இன்று அவரது தேவை என்ன?
               லெனின் 1918-ல் எழுதிய ‘ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்’ புத்தகத்தைப் படித்தால் பதில் கிடைக்கும். ஏகாதிபத்தியத்தின் ஐந்து முக்கியக் கூறுகளை இந்நூலில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
1. ஏகபோக முதலாளித்துவம் உலகப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் பெறுவது.
2. நிதி நிறுவனங்களின் கை ஓங்குவது.
3. நிதி ஏற்றுமதியின் முக்கியத்துவம் அதிகரிப்பது.
4. ஏகபோக முதலாளிகள் உலகப் பொருளாதாரத்தைப் பங்கிட்டுக்கொள்ள அவர்களுக்குள் ஒப்பந்தங்கள் செய்துகொள்வது.
5. உலக நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வது.
இவற்றில், கடைசியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பங்கீடு முதல் உலகப் போருக்குப் பின் நடந்தது என்பது உண்மை. ஆனால், முதலாளித்துவ நாடுகளுக்கிடையே ஏற்பட்ட முரண்களால் நடந்த இரண்டாவது உலகப் போரின் விளைவாலும், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் நடந்த தேசிய விடுதலைப் போராட்டங்களின் விளைவாலும் நேரடியாகப் பங்கிட்டுக்கொள்ளப்பட்ட நாடுகளுக்குப் பெயரளவில் விடுதலை கிடைத்தது. ஏகாதிபத்தியம் லெனின் கூறிய மற்றைய அனைத்துக் கூறுகளையும் கொண்டிருக்கிறது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் மக்களுக்கு என்ன கேடு என்று சிலர் கேட்கலாம். ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயம் நேற்று கனவாக இருந்திருக்கலாம். ஆனால், இன்று அது முற்றிலும் சாத்தியமானது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி அதைச் சாத்தியமாக்குகிறது. இவை வளர்ந்ததற்கு முதலாளித்துவம் முக்கியமான காரணம் என்பது முற்றிலும் உண்மை. ஆனால், வளர்ச்சியின் பயனை உலக மக்கள் அனைவரையும் அடையச் செய்ய வேண்டும் என்ற கொள்கைப்பிடிப்பு அதனிடம் இல்லை. இருந்தால் அது முதலாளித்துவமாக இருக்காது. இதனாலேயே இன்று உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருக்கின்றன. போர்கள் தூண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மதவாதிகளும் பழமைவாதிகளும் தூக்கி நிறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் மாறவேண்டும் என்று நினைப்பவர்கள் எவரும் ஏகாதிபத்தியம் இருந்துவிட்டுப் போகட்டும் என்று சொல்ல மாட்டார்கள்.
                லெனின் முக்கியமான மற்றொன்றையும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஏகாதிபத்தியம் ‘லேபர் அரிஸ்டோக்ரசி’ என்று அழைக்கப்படும் உயர் குலம் ஒன்றை, உழைக்கும் மக்களிடையே உருவாக்குவதைப் பற்றி. இன்று இந்த உயர்குலம் முன்னேறிய நாடுகளில் மட்டுமன்று, முன்னேறும் நாடுகளிலும் உருவாகியிருக்கிறது. உழைக்கும் மக்களுக்காகப் பாடுபடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகள், இந்த உயர்குலத்துக்காகப் பேசும் அவலத்தையும் நாம் காண்கிறோம். 

காலத்துக்கேற்ற மறுவாசிப்பு 
 
                   1902-ம் ஆண்டு லெனின், ‘என்ன செய்ய வேண்டும்?’ என்ற புத்தகத்தை எழுதினார். இது உழைக்கும் மக்களுக்கான கட்சி எவ்வாறு இயங்க வேண்டும் என்பதைப் பற்றிச் சொல்கிறது. என்ன சொல்கிறது என்பதுபற்றி மார்க்ஸிய அறிஞர்கள் மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், உழைக்கும் மக்களுக்காக நடத்தப்படும் கட்சிக்கு உழைக்கும் மக்களின் தேவைகள் என்ன என்பதுபற்றிய புரிதலும் அவர்களுடன் எவ்வாறு சேர்ந்து இயங்க வேண்டும் என்பதுபற்றிய தெளிவும் இருக்க வேண்டும் என்ற லெனினின் அடிப்படைக் கருத்துகுறித்து எந்த வேறுபாடுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தப் புரிதலும் தெளிவும் உழைக்கும் மக்களுக்காக நடத்தப்படும் கட்சிகளுக்கு இருந்திருந்தால், இன்று கேஜ்ரிவால்களின் தேவை இருந்திருக்காது. தேசியப் பேரினவாதக் கட்சிகளும் சாதிக் கட்சிகளும் பிராந்தியக் கட்சிகளும் தலைதூக்கியிருக்க முடியாது. எனவே, இந்தியாவைப் பொறுத்தமட்டும் மக்களுக்கு அடிப்படை விடுதலை இன்றுவரை கிட்டவில்லை என்று கருதுபவர்கள் காந்தியையும் அம்பேத்கரையும் மார்க்ஸை யும் ஏங்கல்ஸையும் குறிப்பாக லெனினையும் மறுவாசிப்பு செய்ய வேண்டும். கூடவே, முதலாளித்துவத் தரப்பிலிருந்து என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றிய அறிதலும் இருந்தாக வேண்டும். அது லெனினுக்கு நிச்சயம் இருந்தது.
என்றும் தேவையானவர்

                                   லெனினுடைய பெயர் வரலாற்றின் அடிக்குறிப்பு களுக்குள் தள்ளப்படும் நாட்கள் தொலைவில் இல்லை என்று சில மேற்கத்திய வல்லுநர்கள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். லெனின் அவ்வளவு எளிதாக மறையக் கூடியவர் அல்ல. ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்கப்படுதல், ஏகாதிபத்தியத்தின் நேரடி மற்றும் மறைமுகத் தாக்குதல்கள், முற்றுகைகள், ஏகபோக முதலாளிகளுக்குத் தரப்படும் தங்குதடையற்ற சுதந்திரம் போன்றவை உலகில் இருக்கும்வரை, லெனின் சொன்னவை எல்லாம் நினைவில் இருக்கும். ‘எல்லோரும் ஓர் நிலை, எல்லோரும் ஓர் நிறை’ ஆகும் நாள் வரும்போது அவரது பெயர் நன்றியோடு சொல்லப்படும்.
நன்றி :
Return to frontpage

திங்கள், 20 ஜனவரி, 2014

தேசவுடைமைக்கு போராடிய AIIEA - வின் அகில இந்திய மாநாடு வெல்லட்டும்...!

      
           சுதந்திர இந்தியாவில் தொடங்கப்பட்ட 245 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளும் இன்சூரன்ஸ் என்ற பேரில் பொதுமக்களின் சேமிப்பு நிதியை கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்டு கம்பனிகளை நடத்திவந்த காலகட்டத்தில், 1951 - ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் கோ-ஆபரேடிவ் லைப் அஷூரன்ஸ் சொசைடி என்ற இன்சூரன்ஸ் கம்பெனி உட்பட 245 தனியார் கம்பெனிகளில் பணிபுரிந்த ஊழியர்களை ஒன்றிணைத்து அன்றைய கல்கத்தாவில் தோழர்கள் சுனில் மைத்ரா, சரோஜ் சௌத்ரி மற்றும் சந்திரசேகர் போஸ் போன்ற மாபெரும் தலைவர்களின் முயற்சியால் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தொடங்கப்பட்டது. ஊழியர்களின் நலன் சார்ந்த சொந்தக் கோரிக்கைகளுக்காக அல்லாமல், மக்களின் உழைப்பு நிதியை கொள்ளையடிக்கும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை தேசவுடைமை செய்யவேண்டும் என்ற உன்னதமான கோரிக்கையோடு தொடங்கப்பட்டு, இன்று வரையில் ஊழியர்  நலன்களுக்கு மட்டுமின்றி, தேச பாதுகாப்பு, மக்கள் நலன், பாலிசிதாரர் சேவை போன்றவைகளுக்காகவும் அர்ப்பணிப்புணர்வுடன் அளப்பரிய போராட்டங்களை நடத்தி, இந்திய தொழிற்சங்கங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக இருக்கக்கூட்டிய அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 23 - ஆவது அகில இந்திய மாநாடு நாக்பூரில்  இன்று மாலை தொடங்கப்பட்டது.
              பிரம்மாண்டமான பேரணிக்குப் பின்,  அகில இந்திய தலைவர் தோழர் அமானுல்லா கான் சங்கத்தின் செங்கொடியை விண்ணதிரும் முழக்கங்களுடன் ஏற்றிவைக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சீதாராம் யெச்சூரி மாநாட்டை தொடங்கிவைத்து பேருரையாற்றினார். சங்கத்தின்  நிறுவனத்தலைவர்களில்  ஒருவரான மூத்த தோழர் சந்திரசேகரபோஸ் அவர்கள் ஆரம்பக்காலத்திலிருந்து எல்லா அகில இந்திய மாநாடுகளிலும் கலந்துகொள்வது போல் இந்த மாநாட்டிலும் கலந்துகொள்வது மாநாட்டின் சிறப்பம்சமாகும்.
               மாநாட்டில் பங்குபெறும் என் அன்பிற்கினிய தோழர்கள் அனுப்பிய மாநாட்டு தொடக்க நிகழ்ச்சியின் படங்கள் இதோ...!         

 

 


 

 

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

பேருந்து வழித்தடங்களில் தேவை ''அம்மா உணவகம்''

          
            
              தமிழகத்தில் நெடுந்தூரம் - நெடுந்நேரம் பயணம் செய்யும் பேருந்துகள் காலை, மதியம், மாலை மற்றும் இரவு என்று பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளும், பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களும் பசியாற்றிக்கொள்ள வழியில் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியில் தந்தனியாக இருக்கும் ''குறிப்பிட்ட'' உணவகத்தில் மட்டுமே நிறுத்தப்படுகிறது. வேறு வழியே  இல்லை அந்த உணவகத்தில் தான் கண்டிப்பாக சாப்பிடவேண்டிய கட்டாயம். அங்கு அப்போதைக்கு என்ன கிடைக்கிறதோ அதைத்தான் சாப்பிடவேண்டிய கட்டாயம். இதிலே என்னென்னா நல்ல உணவகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையும், எதை சாப்பிட வேண்டும் என்ற உரிமையும் நமக்கு கிடையாது. ஏனென்றால் அந்த குறிப்பிட்ட உணவகத்தில் மட்டும் தான் பேருந்துகளை கட்டாயம் நிறுத்தவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.  ''வேறு நல்ல ஓட்டலில் நிறுத்தப்படாதா...?'' என்று பயணிகள் ஓட்டுனரையோ அல்லது நடத்துனரையொ கேட்டுவிட்டால், பாவம் அவர்களோ ஒப்பாரி வைக்காத குறையா புலம்பித் தள்ளிடுவாங்க. ஏன்னா... தாங்கள் கொண்டுவரும் பேருந்தை அந்த குறிப்பிட்ட உணவகத்தில் தான் கண்டிப்பாக நிறுத்தவெண்டுமாம். சாப்பிட்டு முடித்து வண்டியில் ஏறுமுன், அவர்களது ''ட்ரிப் ஷீட்டில்'' அந்த உணவகத்தின் முத்திரையை பதித்து, அதில் அந்த உணவகத்தின் உரிமையாளர் கையொப்பமிட்டு தரவேண்டுமாம். அப்படி முத்திரையையும், கையெழுத்தையும் வாங்க மறந்துவிட்டாளோ அல்லது அந்த பேருந்து உணவகத்தில்  நில்லாமல் சென்று விட்டாலோ அந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு அவர்கள் சம்பளத்தில் ஒரு இன்க்ரிமெண்ட் கட் செய்யப்படுமாம். இப்படிப்பட்ட கெடுபிடி ஏன் என்றால் அந்த அளவிற்கு அந்த உணவக உரிமையாளர்களுக்கும், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கும் ''புரிந்துணர்வு ஒப்பந்தம்'' ஏற்பட்டு, உரிமையாளர்களும் ''மாவு அரைத்தாயா...? தோசை சுட்டாயா...? பாத்திரம் கழுவினாயா...?'' என்றெல்லாம் அதிகாரிகளை கேள்விக்கேட்காமல், காலம் தவறாமல் அவர்களுக்கு ''கப்பம்'' கட்டுகிறார்கள் என்பது தான் வெட்கக்கேடான விஷயமாகும். 
             அந்த உணவகத்தின் உள்ளேயும், வெளியேயும் பார்த்தால் நம்மால் சகித்துக்கொள்ளவே முடியாது. உணவகத்தை சுற்றி சிறுநீர் கழித்து சுகாதார சீர்கேடுகளாக இருக்கும். ஈ மற்றும் கொசுக்களுக்கு பஞ்சமிருக்காது. அங்கு விற்கப்படும் உணவு பண்டங்கள் அனைத்தும், டீ மற்றும் காபியும் தரமானதாக இருக்காது. அங்கு கொடுக்கப்படும் குடிநீர் சுத்தமாக இருக்காது. அங்கு சாப்பிடுவதால் வயிறு கெட்டுவிடும்.உடல்நலத்திற்கு கேடு தான். இது ஒரு பக்கமிருந்தாலும், இன்னொரு பக்கம் அந்த உணவகங்களில் விற்கப்படும் பண்டங்களின் விலையோ இன்னும் பயங்கரம். சுகாதாரமற்ற பண்டங்கள் என்பதாலும், கூடுதல் விலை கொடுக்கவேண்டியிருக்கிறது என்பதாலும் பேருந்துகளில் வருகின்ற பெரும்பாலான பயணிகள் இந்த உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள் என்பது தான் உண்மை. ''ஒப்பந்தப்படி'' அந்த உணவகங்களில் பேருந்தை நிறுத்தியாக வேண்டும், அங்கே தான் சாப்பிட்டாகவேண்டும் என்ற கட்டாயத்தினால், பாவம் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் இதிலிருந்து தப்பிக்கமுடிவதில்லை. இதிலிருந்து பயணிகளுக்கும், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கும் விமோசனம் கிடைக்குமா என்று ஏங்கித் தவிக்கிறார்கள். 
               தமிழக முதலமைச்சர் தான் இந்த விஷயத்திலும் கவனம் செலுத்தவேண்டும். சென்னை உட்பட பெரும்பாலான மாநகராட்சிகளிலும், அரசு மருத்துவமனைகளிலும், புதுடெல்லியில் இருக்கக்கூடிய தமிழ்நாடு இல்லத்திலும் முதலமைச்சரின் தனிப்பட்ட சிறப்புத் திட்டமாக, சுகாதார முறையிலும், மிகக் குறைந்த விலையிலும் கிடைக்கக்கூடிய வகையில் ''அம்மா உணவகம்'' அனைவராலும் பாராட்டும் விதமாக இயங்குவது போல், அனைத்துப் பேருந்து வழித்தடங்களிலும் கழிப்பறை வசதியுடன் கூடிய ''அம்மா உணவகத்தை'' அமைத்து இயங்கச்செய்தால் நன்றாக இருக்கும்.  ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைக்காமல், ஆங்காங்கே இருக்கும் ''டோல் கேட்'' அருகில் அமைத்தால் பாதுகாப்பாக இருக்கும்.
               நெடுந்தூரம் பயணம் செய்யும் பயணிகள், ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் நலன் கருதி, தமிழக முதலமைச்சரும், தமிழக அரசும் இந்த வேண்டுகோளை ஏற்று நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்.

வெள்ளி, 17 ஜனவரி, 2014

தவறான பொருளாதாரக் கொள்கைகளை மாற்றும் ஆட்சி ஏற்பட வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா

.
                                                                                                                                                       
           மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் 97-ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தனது கட்சியினருக்கு தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கீழ்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார். 

             ''மாநிலங்கள் வலுப்பெற்றிருந்தால் மட்டுமே இந்தியக் குடியரசு வலுப்பெற்றிருக்க முடியும். இதற்குத் தேவை மத்தியில் ஆட்சி மாற்றம். தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் நன்மைபயக்கக்கூடிய ஆட்சி மாற்றம் மத்தியில் ஏற்படவேண்டும். 20 ஆண்டுகளாக நிலவிவரும் தவறான பொருளாதாரக் கொள்கைகள் மாற்றப்பட்டு புது சிந்தனையுடன் மக்களின் தேவைகளைப் பரிவுடன் அணுகும் புதிய ஆட்சி ஏற்பட வேண்டும்.                                                                                      
                தவறான பொருளாதாரக் கொள்கைகள் மாற்றப்பட்டு புது சிந்தனையுடன் மக்களின் தேவைகளைப் பரிவுடன் அணுகும் புதிய ஆட்சி ஏற்பட வேண்டும்.                    
               தமிழகத்தை வளப்படுத்த, பாரதத்தை வலிமைப்படுத்த, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிக்கனியைப் பெறும் வகையில் களப்பணி ஆற்றிடவேண்டும்.''                                  

''குட்டித்தலைவர்'' ராகுல் காந்திக்கு ஒரு கடிதம்...!


                                                                                                                                                                        
''குட்டித்தலைவர்'' ராகுல்ஜி அவர்களே...!
          
                 அண்மையில் நீங்கள் கேரளாவிற்கு சென்றிருந்த போது வீரசாகசங்களை செய்து காட்டினீர்கள். என்னத்தான் உங்க கட்சி ஆட்சி செய்யற மாநிலமா இருந்தாலும், அதுக்காக ஓடும் போலீஸ் வண்டியிலேயா உட்கார்ந்து கொண்டு பயணம் செய்வது...? இந்திய மக்கள் இந்த வீரசாகசத்தைப் பார்த்து பரவசப்படுவார்கள் என்று எதிர்ப்பார்த்தீர்கள். ஆனால் மக்கள் முகம் சுளித்தார்கள். நீங்கள் செய்த அந்த செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று விமர்சனம் செய்தார்கள்.
                இது ஒரு புறமிருக்க, அங்கே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, ''காங்கிரஸ் கட்சி விரும்பினால், எத்தகைய பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்'' என்று பேசியிருக்கிறீர்கள். இத்தனைக் காலமாக உங்களை சுற்றியிருப்பவர்கள் தான் உங்களை உசுப்பேற்றித் திரிந்துகொண்டிருந்தார்கள். இப்போது தான் நீங்கள் முதல் முறையாக ''பிரதமர் பதவிக்கு நான் தயார்'' என்று உங்களது இந்த சின்ன(த்தனமான) ஆசையை திருவாய் மலர்ந்திருக்கிறீர்கள். ஏதோ இந்த நாட்டு மக்களெல்லாம் தங்களுக்கு வழிநடத்துவதற்கு ஏற்ற சரியான தலைவர்கள் இல்லாதது போல, ஆளாளுக்கு ''நான் தான்  பிரதமர்... நான் தான் பிரதமர்'' - ன்னு சொல்லிக்கிட்டு திரியிறீங்களே, உங்களுக்கு கூச்சமாக இல்லை. நீங்களெல்லாம் கொஞ்சம் கூட வெட்கப்படவே மாட்டீங்களா மிஸ்டர் ராகுல்...?
                எந்த முகத்தோடு நீங்கள் ஒட்டுக்கேட்க வருவீர்கள்...? கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் செய்த சாதனைகள் தான் என்ன...?
              சிறப்பாக செயல்படுகின்ற அரசுடைமை செய்யப்பட்ட வங்கிகளை நாசப்படுத்தி, வங்கித்துறையை தனியாருக்கு திறந்துவிட்டீர்கள். இது 42 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வசமிருந்த வங்கிகளை தேசவுடைமை செய்த உங்கள் பாட்டி இந்திரா காந்திக்கு நீங்கள் செய்த துரோகமில்லையா மிஸ்டர் ராகுல்...?
               தேசவுடைமை செய்யப்பட்ட எல்.ஐ.சி - யை ஒழித்துக்கட்டி தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை வாழவைப்பதும், இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை மேலும் மேலும் உயர்த்தி அந்நிய கம்பெனிகள் கொள்ளையடிக்க துணை போவதுமான உங்கள் செயல், 57 ஆண்டுகளுக்கு முன் தனியார் வசமிருந்த 245 இன்சூரன்ஸ் கம்பெனிகளை தேசவுடைமை செய்து, எல்.ஐ.சி - யை தோற்றுவித்தாரே உங்கள் கொள்ளு தாத்தா நேருவுக்கு நீங்கள் செய்த துரோகமில்லையா மிஸ்டர் ராகுல்...?
            உங்களை நம்பி நாட்டை ஒப்படைத்தால், இந்தியாவில் எல்லாத் துறைகளிலும் அந்நிய நேரடி முதலீடு நுழைவதற்கு அனுமதி அளித்து, அந்நிய முதலாளிகள் இந்த தேசத்தின் வளங்களையும், பொருளாதாரத்தையும் சுரண்டுவதற்கும், கொள்ளையடிப்பதற்கும் தாராளமாக அனுமதி அளித்தீர்களே....? ''பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ.  நாங்கள் சாகவோ'' என்று இடதுசாரிக்கட்சிகள் எல்லாம் பாராளுமன்றத்திலும், வெளியிலும் போராடினாலும், அதையும் மீறி பாரதீய ஜனதாக் கட்சியோடு கூட்டு சேர்ந்து அந்நிய நேரடி முதலீட்டிற்கு இரத்தின கம்பளம் விரித்தீர்களே...? இது ஒட்டு மொத்த தேசத்திற்கே நீங்கள் செய்த துரோகமில்லையா மிஸ்டர் ராகுல்....?
            1991 - ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இந்திய அரசியலில் உள்ளே நுழைந்த மன்மோகன் சிங்கை, 2004 - ஆம் ஆண்டு பிரதமராக பதவியுயர்வு கொடுத்து, அவரால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட LPG - தாராளமயம், தனியார்மயம், உலகமயம் போன்ற மயங்களை படிப்படியாக கூர் சீவிவிட்டு, சாதாரண மக்களின் கண்களில் மண்ணைத்தூவி அவர்களின் வாழ்வாதாரத்தையே மாயமாக்கி ஒழித்து கட்டிவிட்டீர்களே. இது உங்களை நம்பி வாக்களித்த ''ஆம் ஆத்மி'' என்ற சாதாரண மக்களுக்கு நீங்கள் செய்த துரோகமில்லையா மிஸ்டர் ராகுல்...?
                      கடந்த  ஐந்து ஆண்டுகளில் தேசத்திற்கெதிராக - மக்களுக்கெதிராக நீங்கள் செய்த ''அமெரிக்க சார்பு திருவிளையாடல்களை'' இன்னும் சொல்லிகிட்டே போகலாம். இவ்வளவும் செய்துவிட்டு, இதே மக்களைப் பார்த்து ''நான் பிரதமர் பதவிக்கு தயார்'' என்று எப்படி கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், வெட்கமில்லாமல் அறிவிக்கிறீர்கள்.  அரசியல் காரணத்திற்காக கொலைசெய்யப்பட்டு கொல்லப்பட்ட உங்கள் பாட்டி இந்திரா காந்தி மற்றும் உங்கள் அப்பா ராஜீவ் காந்தி ஆகியோர்களை நினைவுப்படுத்தி மக்களின் அனுதாபத்தை பெற்று எப்படியாவது வெற்றிபெற்றுவிடலாமென்று பகற்கனவு காணாதீர்கள் மிஸ்டர் ராகுல். நீங்களும், உங்கள் அம்மாவும் மன்மோகன் சிங்குடன் சேர்ந்து நேருவுக்கும், இந்திராவுக்கும் நீங்கள் செய்த துரோகங்களையும், மக்களுக்கும், நாட்டிற்கும் எதிராக நீங்கள் செய்த துரோகங்களையும் மக்கள் மறக்கமாட்டார்கள். உங்களை மன்னிக்கமாட்டார்கள். இனியும் மக்கள் ஏமாறமாட்டார்கள் மிஸ்டர் ராகுல்.
                                                                  இப்படிக்கு உங்கள் ஆட்சியினால் மோசம் போன
                                                                                          சாதாரண குடிமகன்   

தேசத்தின் நம்பிக்கையாய் எல். ஐ. சி....!

       
           இந்திய இன்சூரன்ஸ் வானின் வெளிச்சக்கீற்று எல்ஐசி என்ற மாபெரும் பொதுத்துறை உதயமாவதற்கு வித்திட்டநாள் - 19-1-1959 இரவு 8.30மணிக்கு அன்றைய நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக் இன்சூரன்ஸ் துறை தேசியமயமாக்கப்பட்ட அவசரச் சட்டம் வெளியிடப்பட்டதாக வானொலி மூலம் அறிவித்தார். அன்று இரவே 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சொத்துக்களையும், வரவு-செலவு கையிருப்புகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது மைய அரசு.

தேசியமாக்கலின் பின்னணி

          நீண்டகால சேமிப்புகளாக பெருமளவிலான நிதியைத் திரட்டும் திறன்மிகுந்த இன்சூரன்ஸ் துறை அன்று தனியார்களின் வேட்டைக்காடாகவே மாறியிருந்தது. அன்றைய பெரும் முதலாளிகளான டாடா, பிர்லா, சிங்கானியா போன்றவர்கள் தங்களின் தொழிலுக்கு நிதி திரட்டும் தேவைகளுக்காகவே இன்சூரன்ஸ் நிறுவனங்களை நடத்தினார்கள். இவர்களின் பல நிறுவனங்களில் முறையான வரவு-செலவு கணக்குகள் இல்லை. முதிர்வு உரிமம்,  இறப்பு உரிமம் போன்றவற்றில் பெரும் மோசடிகளை செய்து மக்களின் சேமிப்புகளை விழுங்கி ஏப்பமிட்டனர். 
             அர்த்தசாஸ்திரத்தில் 42 வகையான மோசடிகளை வகைப்படுத்தியுள்ளார் சாணக்கியர். அவற்றை அப்படியே அமல்படுத்தி தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மக்களின் சேமிப்பை கொள்ளையடித்ததாக வர்ணித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் பெரோஸ்காந்தி. இடையே குறுக்கிட்ட நிதியமைச்சர் தேஷ்முக் “சாணக்கியரே சொல்லாத கண்டுபிடிக்காத மோசடிகளையும் செயல்படுத்தி சாணக்கியரையும் விஞ்சியவர்கள் இவர்கள்” என்றார். அன்று நாடாளுமன்றத்தில் நடந்த இந்த விவாதங்களிலிருந்தே அன்றைய இந்திய இன்சூரன்ஸ் சந்தை எவ்வளவு ஊழல் மிகுந்திருந்தது என்பதை நம்மால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். இவர்களிடம் பணிபுரிந்த ஊழியர்களின் பணிநிலைமையும் மிகவும் மோசமாகவே இருந்தது. சரியான சம்பளமின்றி. நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டிய சூழல் என எல்லாமுமாக சேர்ந்து அன்றைய தனியார் இன்சூரன்ஸ் துறை அவலங்களின் தொகுப்பாகவே மாறியிருந்தது. இந்தக் கொடுமைகள் யாவையும் வெளியுலகின் பார்வைக்கு கொண்டுவந்தது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்தான். 1951ல் உருவாக்கப்பட்ட இந்த சங்கம் தனதுமுதல் அமைப்பு மாநாட்டின் மிக முக்கிய கோரிக்கையாக முன்வைத்தது இன்சூரன்ஸ் துறை தேசியமயமாக்கப்பட வேண்டுமென்பது தான். நாட்டின் வளர்ச்சிக்கான நிதி திரட்டவும், மக்களின் சேமிப்பு கொள்ளை போகாமல் தடுத்திடவும், இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களின் உரிமைகளுக்காகவும் இன்சூரன்ஸ் துறை தேசியமயமாவது தான் ஒரே தீர்வாக இருக்க முடியும் என தீர்க்க முடிவெடுத்து அதற்கான கருத்து திரட்டல்களையும் செய்தது இந்த சங்கம்.
            ஒருபுறம் தனியார்களின் மோசடி, மறுபுறம் நாட்டின் வளர்ச்சிக்கான நிதி திரட்ட வேண்டிய தேவை, நாட்டு மக்களி டையே இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஏற்படுத்தியிருந்த கருத்து திரட்டல்கள் என எல்லாமுமாக சேர்ந்து இத்துறையை தேசியமயமாக்கும் திருப்பணியை நோக்கி மைய அரசை நகர்த்தியது. 1956 ஜனவரி 19ம்நாள் தேசியமய அறிவிப்பு வெளியானது. மத்திய அரசால் உடனடியாக இன்சூரன்ஸ் சேவையை இங்கு துவக்க முடியவில்லை. தனியார்களின் நீதிமன்ற வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொண்டு உரிய சட்ட பாதுகாப்பு அம்சங்களோடு 1.9.1956ல் தான் எல்ஐசி முறையான அரசு நிறுவனமாக சேவையை துவக்கியது. அன்று ஏற்படுத்திய சட்டரீதியான பாதுகாப்பு அம்சங்கள் இன்றும் பாதுகாப்பு கவசங்களாக ஓரளவு இத்துறையை பாதுகாக்கிறது. அன்று துவங்கிய எல்ஐசியின் வெற்றிப்பயணம் இன்றும் பல புதிய இலக்குகளை நோக்கி வெற்றிநடை போடுகிறது.

எல்ஐசியின் கட்டமைப்பு

                 கடந்த காலங்களில் நகர்ப்புற பணக் காரர்களுக்கானதாக இருந்த இன்சூரன்ஸ் சேவையை ஏழை, எளியவர்களுக்குமானதாக மாற்றியது இன்சூரன்ஸ் தேசியமயம். இந்திய கிராமங்களை நோக்கி எல்ஐசி தனது கிளைகளைப் பரப்பியது. 8 மண்டலங்களில் 113 கோட்டங்களை உள்ளடக்கி 4,201 கிளைகளாக பரந்து விரிந்த மாபெரும் விருட்சமாக வியாபித்து நிற்கும் எல்ஐசியின் மொத்த சொத்தின் மதிப்பு ரூ.16லட்சம் கோடிகளுக்கும் மேல். இது நாட்டின் ஆகப்பெரிய நிறுவனமான ஸ்டேட் வங்கியைக் காட்டிலும் மிகவும் கூடுதல். எல்ஐசியின் மொத்த பாலிசிதாரர்களின் எண்ணிக்கை 40 கோடிகளுக்கும் மேல். இவ்வளவு பாலிசிதாரர்களையும் எல்ஐசி நோக்கி கொண்டுவந்து சேர்த்த ஆணி வேர்களான முகவர்களின் எண்ணிக்கை 12லட்சம். வளர்ச்சி அதிகாரிகள், முதல் நிலை அதிகாரிகள், ஊழியர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் என பெரிய மனிதவளத்தையும், செல்வவளத்தையும், கட்டமைப்பையும் கொண்ட உலகின் ஒரே இன்சூரன்ஸ் நிறுவனம் எல்ஐசி தான். மட்டுமல்லாமல் நவீன தொழில்நுட்பமான கணினி தொழில்நுட்பத்தையும் திறமையாக பயன்படுத்தி சிறந்த சேவையாற்றும் நிறுவனங்களில் எல்ஐசி இரண்டாம் இடம் வகிக்கிறது. (முதலாவது இந்திய ரயில்வே).

வளர்ச்சியும் உரிம பட்டுவாடாவும்

           நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த எல்ஐசியின் புதுவணிக வேகத்திற்கு வேறு எந்த நிறுவனமும் ஈடு கொடுக்க முடியவில்லை. கடும் பொருளாதார நெருக்கடிகளை இந்திய மக்கள் சந்தித்து வரும் வேளையிலும் மக்களின் சேமிப்பு மக்களின் நல்வாழ்விற்கே என செயல்படும் எல்ஐசி இந்த நிதியாண்டில் டிசம்பர் 15 வரையில் மட்டும் 2 கோடியே 30லட்சம் புதிய பாலிசிகளில் ரூபாய் 19ஆயிரத்து 772 கோடிகளை முதல் பிரீமிய வருவாயாக ஈட்டியுள்ளது. இது ஒட்டுமொத்த ஆயுள் காப்பீட்டு வருவாயில் 78.89 சதவீதமாகும் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் உண்மை மதிப்பும், வளர்ச்சியும் அதன் உரிமப் பட்டுவாடாவில் தான் அடங்கியுள்ளது. பாலிசிதாரர்களின் முதிர்வு உரிமத்தையும், இறப்பு உரிமத்தையும் முறையாக பட்டுவாடா செய்வதில் 98 சதவீதத்தை எட்டிப்பிடித்து எல்ஐசி என்றுமே முதல் நிலையை வகிக்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் ஒருகோடியே 83லட்சத்து 63 ஆயிரம் உரிமங்களின் பேரில் ரூ.74ஆயிரத்து 770 கோடிகளை பாலிசிதாரர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைத்து தேசத்தின் நம்பிக்கையாய் உரிமம் வழங்குவதில் உலகின் முதல் இன்சூரன்ஸ் நிறுவனமாக ஜொலிக்கிறது எல்ஐசி. சமீபத்தில் வேர்ல்ட் பிராண்ட் காங்கிரஸ் என்ற நிறுவனம் வழங்கிய சிறந்த பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கான விருது உட்பட 28க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது எல்ஐசி.

தேசத்தின் வளர்ச்சியில்

            பெரும் நிதியை நீண்டகால சேமிப்பாக வெற்றிகரமாக திரட்டும் எல்ஐசி அதை தேசத்தின் வளர்ச்சியில் முதலீடு செய்வதிலும் கருத்துடன் செயல்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் மத்திய-மாநில அரசுகளின் நலத் திட்டங்களுக்கு உதவிடும் வகையில் ரூபாய்7லட்சத்து 32 ஆயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளது. மேலும் ரயில்வே, சாலைப்போக்குவரத்து, குடிநீர், நீர்ப்பாசனம், மின்சாரம், தகவல் தொடர்புத்துறை, சுகாதாரம் போன்ற துறைகளில் நேரடியாக ரூபாய் 3 லட்சத்து 60ஆயிரம் கோடிகளை முதலீடு செய்து மக்கள் சேவையாற்றுகிறது எல்ஐசி, மட்டுமல்லாமல் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் முதல் நடப்பில் உள்ள 12வது ஐந்தாண்டுத் திட்டம் வரை ரூபாய் 15 லட்சத்து 34ஆயிரம் கோடிகளை வாரி வழங்கியுள்ளது எல்ஐசி. 2012-17க்கான ஐந்தாண்டு திட்டத்திற்கு இதுவரை வழங்கியது ஒருலட்சத்து 84 ஆயிரம் கோடிகள். மக்களின் சேமிப்பு மக்கள் நலத் திட்டங்களுக்காகவே என செயல்படும் எல்ஐசி தேசத்தின் வளர்ச்சிப்பாதையில் முக்கியப் பங்காற்றுகிறது. எல்ஐசி இல்லாத வளரும் இந்தியாவை கற்பனை செய்வது கூட சிரமமானதாகும். எல்ஐசியின் இத்தகைய மாபெரும் வளர்ச்சியின் ரகசியம்தான் என்ன?

வெற்றியின் ரகசியம்

         இந்த வியத்தகு வெற்றிகள் சுலபமாக ஏற்படவில்லை. கடும் பொருளாதார தாக்குதல்களையும், சதிகளையும் முறியடித்து பெரும் தியாகங்களினூடே பெறப்பட்டவையாகும். நீண்டகால முதலீடுகளாக இந்தளவுக்கு கணிசமான நிதியைத் திரட்டும் அரசுத்துறை நிறுவனத்தை உலக நிதி மூலதனமும் ஏகாதிபத்தியமும் பார்த்துக் கொண்டிருக்குமா? இந்த நிதியை கபளீகரம் செய்ய துடியாய் துடித்து அவ்வப்போது தனியார்மயம், தாராளமயம், அந்நிய முதலீடு என அஸ்திரங்களைத் தொடுக்கிறது. வலிமையான அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இத்தாக்குதல்களையெல்லாம் எதிர்கொண்டு வலிமையான போராட்ட இயக்கங்களை நடத்தி வருகிறது. 1967ல் நடத்திய இயந்திரமாக்கலுக்கு எதிரான போராட்டம், 1981ல் எல்ஐசியை ஐந்து கூறுகளாக பிரிக்கப்படும் முடிவை எதிர்த்தப் போராட்டம், 1991ல் நிர்வாக சீரமைப்பு என்ற பெயரில் எல்ஐசியை சீரழிக்க முயன்ற மல்கோத்ரா குழு பரிந்துரைகளை எதிர்த்தப் போராட்டம், 1994ல் எல்ஐசியை தனியாருக்கு தாரைவார்க்க முயன்ற மைய அரசைக் கண்டித்து ஒன்றரை கோடி கையெழுத்துக்களை பெற்ற மாபெரும் கையெழுத்து இயக்கம், பேரணிகள், கருத்தரங்குகள், ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள், மக்கள் சந்திப்பு இயக்கங்கள் என பல வேள்விகளை செய்தே இந்நிறுவனம் கட்டிக்காக்கப்பட்டுள்ளது. இவ்வேள்விகளுக்காக நிறுவனத்திற்குள் முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள், முதல்நிலை அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து வலிமையான எல்ஐசி பாதுகாப்பு அணி உருவாக்கப்பட்டுள்ளது.
          ஒவ்வொரு போராட்டங்களின் வெற்றியும் ஊழியர் சங்கத்தின் வெற்றியாக மட்டுமல்லாமல் நிறுவனத்தின் வெற்றியாகவே பரிமளிக்கிறது. தேசநலன், நிறுவனப் பாதுகாப்பு இவைகளின் மீது கட்டப்படும் ஊழியர் நலன் என்ற தாரக மந்திரத்தை தனது ஊழியர்களுக்கு பறை சாற்றியுள்ளது. ஒவ்வொரு முறை இச்சங்கம் போராட்டக்களங்களில் இறங்கி மக்களைச் சந்திக்கும்போதெல்லாம் எல்ஐசியின் புதுவணிகம் பூத்துக்குலுங்கி புதுப்புது எல்லைகளைத் தொடுகிறது. நமது சேமிப்புகள் முறையாக பாதுகாக்கப்படுமென தேசமே எல்ஐசியை நம்புகிறது. உலகமய, தனியார்மய எதிர்ப்பியக்க வெற்றியின் அடையாளமாய் எல்ஐசி விண்ணைத் தொட்டு நிற்கிறது. சரியான போராட்டங்களே இதை சாத்தியமாக்கியது.

நன்றி :

வியாழன், 16 ஜனவரி, 2014

நான் ரசித்துக் காதலித்த ராஜகுமாரா...!

                       ஒரு நாளும் உங்களை நான் தேடி வந்து சந்தித்ததில்லை. ஆனால், அந்த ஒரு கறுப்புப் பகலில் மட்டும் உங்களை ஓடிவந்து பார்க்காமல் என்னால் உட்கார முடியவில்லை. ராஜாஜி மண்டபத்தில் உங்கள் இறுதிப் படுக்கையில் ரோஜா மாலைகளுக்கு மத்தியில் ஒரு ரோஜா மலையாய்க் கிடத்தப்பட்டிருந்தீர்கள். உங்களைத் தொட்டுப் பார்க்க நினைத்து, தொட முடிந்த தூரம் வந்தும் தொட முடியாமல் நின்றேன். எம்.ஜி.ஆருக்கே மரணமா...? எனக்கு முதலில் மரணப்பயம் வந்தது. காற்று - சமுத்திரம் - வானம் - எம்.ஜி.ஆர் இவைகளெல்லாம் மரணிக்க முடியாத சமாசாரங்கள் என்று எங்கள் கிராமத்து மக்களைப் போலவே நானும் நம்பிக்கிடந்த நாட்களுண்டு. அன்று அந்த நான்காவது நம்பிக்கை நசிந்து விட்டது. 
             47 முதல் 87 வரை நாற்பதாண்டு காலம் தமிழர்கள் உச்சரிக்கும் ஐம்பது வார்த்தைகளில் ஒரு வார்த்தையாய் இருந்த பெயரை மரணத்தின் மாயக்கரம் அழித்துவிட்டதா...? இமைக்காமல் கிடந்த உங்களை இமைக்காமல் பார்த்தேன். "நான் ரசித்துக் காதலித்த ராஜகுமாரா...! உனக்கா மரணம்?" என்று உதட்டுக்குத் தெரியாமல் நாக்கு உச்சரித்துக் கொண்டது. முப்பது வயதுக்கு மேல் வாழ்க்கையில் சந்திரோதயம், நாற்பதுக்கு மேல் சூரியோதயம் - படபடவென்று வளர்ச்சி - மனிதநேயம் என்னும் மாட்சி காட்சியிலிருந்து கட்சி - கட்சியிலிருந்து ஆட்சி - அப்பப்பா என்ன வளர்ச்சி உங்கள் வளர்ச்சி ! அன்று கடைசிப் படுக்கையில் உங்களைக் கண்டபோது - ஒரு சரித்திரம் சரிந்து கிடக்கிறது என்று நினைத்தேன். ஓர் அபூர்வம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன். 
                ஒன்றன் பின் ஒன்றாய் ஞாபக மேகங்கள் ....... இருபது வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தது காதல் ; எட்டு வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தவர் நீங்கள். கதைகளிலும் கனவுகளிலும் நான் கற்பனை செய்து வைத்திருந்த ராஜகுமாரன் நீங்கள் தான் என்று நினைத்தேன். உங்களின் இரட்டை நாடியின் பள்ளத் தாக்கில் குடியிருந்தேன். உங்கள் முகத்தின் மீது மீசைவைத்த நிலா என்று ஆசை வைத்தேன். நீங்கள் புன்னகை சிந்தும் போது நான் வழிந்தேன். வாள் வீச்சில் உங்கள் வசமிழந்தேன். உங்கள் பாடல்களில் நானும் ஒரு வார்த்தையுமாய் ; நானும் ஒரு வாத்தியமாய் ஆனேன். ஒரு தாளம் கட்டுமானத்தில் சிரிக்கும் உங்கள் சங்கீதச் சிரிப்பில் வார்த்தைகளில் பிசிறடிக்காத உங்கள் வசன உச்சரிப்பில் நான் கரைந்து போனேன். 
           பெரியகுளம் ரஹீம் டாக்கீஸில் "நாடோடி மன்னன்" பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுவரில் நசுக்கப்பட்ட மூட்டைப் பூச்சிகளின் ரத்தக் கோடுகளை அந்தப் படத்தில் வரும் கயிற்றுப் பாலமாய்க் கற்பனை செய்து கொண்டு விடிய விடிய விழித்திருக்கிறேன். "மன்னனல்ல மார்த்தாண்டன்" என்று உங்களைப் போல் மூக்கில் சைகை செய்யப் போய் சுட்டுவிரல் நகம்பட்டு சில்லி மூக்கு உடைந்திருக்கிறேன். பிரமிக்க மட்டுமே தெரிந்த அந்தப் பிஞ்சு வயதில் எனக்குள் கனவுகளைப் பெருகவிட்டதிலும் கற்பனைகளைத் திருகிவிட்டதிலும் உங்கள் ராஜாராணிக் கதைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நான் ரகசியமாய் வைக்க விரும்பவில்லை. நூறு சரித்திரப் புத்தகங்கள் ஏற்படுத்த முடிந்த கிளர்ச்சியை உங்கள் ஒரே ஒரு படம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதிப்பு எனக்கு மட்டும் இல்லை. குடை பிடித்துக் கொண்டவர்களையும் எங்கோ ஓர் ஓரத்தில் நனைத்துவிடுகிற அடைமழை மாதிரி உங்களை விமர்சித்தவர்களைக் கூட ஏதேனும் ஒரு பொழுதில் நாசூக்காக நனைத்தே இருக்கிறீர்கள். என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் மந்திரத்தால் மாங்காயோ தந்திரத்தால் தேங்காயோ தருவித்தவரில்லை. வரலாற்று ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அகழ்ந்து பார்த்தால் மட்டுமே உங்கள் வெற்றியின் வேர்களை விளங்கிக் கொள்ள முடியும். 
            இந்த மண்ணில் எங்கள் மனிதர்கள் சில நூற்றாண்டுகளாக எதை இழந்துவிட்டு நின்றார்களோ அதையே நீங்கள் தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுத்தீர்கள்; விறுவிறுப்பாய் விலைபோயிற்று. உடலும் உயிரும் மாதிரி காதலும் வீரமும் கலந்தே விளைந்த களம் இந்தத் தமிழ் நிலம். காதலை ஒரு கண்ணாகவும் வீரத்தை ஒரு கண்ணாகவும் போற்றிய தமிழன், பொருளாதாரத்தை நெற்றிக் கண்ணாய் நினைக்காமல் போனான் என்பதே அவன் முறிந்து போனதற்கு மூல காரணம். பொருளாதாரச் சிந்தனைக்கே வராத தமிழன், காதலையும் வீரத்தையும் மட்டும் கோவணத்தில் முடிந்து வைத்த தங்கக் காசுகளைப் போல ரகசியமாய்க் காப்பாற்றியே வந்திருக்கிறான். இடைக்காலத்தில் தமிழன் அடிமைச் சக்தியில் சிக்கவைக்கப்பட்டான். அடிக்கடி எஜமானர்கள் மாறினார்கள் என்பதைத் தவிர அவன் வாழ்க்கையில் மாற்றமே இல்லை. அவனது வீரம் காயடிக்கப்பட்டது; காதல் கருவறுக்கப்பட்டது. இழந்து போன ஆனால் இழக்க விரும்பாத அந்தப் பண்புகளை வெள்ளித் திரையில் நீங்கள் வெளிச்சம் போட்ட போது இந்த நாட்டு மக்களின் தேவைகள் கனவுகளில் தீர்த்துவைக்கப்பட்டன. நீங்கள் கனவுகளைத்தான் வளர்த்தீர்கள்; ஆனால் கனவுகள் தேவைப்பட்டன. வீராங்கன், உதயசூரியன், கரிகாலன், மணிவண்ணன், மாமல்லன் என்றெல்லாம் நீங்கள் பெயர்சூட்டிக் கொண்டபோது தமிழன் தன் இறந்தகால பிம்பங்களைத் தரிசித்தான். 
கவிஞர் வைரமுத்து , எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்த போது...!

பொதுவுடைமை கருத்துகளை பேசி ''புரட்சி நடிகராக'' உயர்ந்த எம்.ஜி.ஆர்....!

                ஒரு சாதாரண நாடக நடிகனாக தனது ஏழாவது வயதில் கலைப்பயணத்தை தொடங்கி, பின்னர் திரைப்படத்தில் நுழைந்து புரட்சி நடிகர், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் எனப் படிப்படியாக முன்னேறி தமிழக முதல்வராக உயர்ந்தவர் தான் இன்றும் தமிழ் மக்களின் நீக்கமற நிறைந்திருக்கும் எம்.ஜி.ஆர். என்ற மனிதர்.
                  ஏழு வயதிலேயே தன்  குடும்ப வறுமையின் காரணமாக நாடகக் கம்பெனியில் சேர்ந்த எம்.ஜி.ஆர். நடிப்புக் கலையின் நெளிவு சுளிவுகளை கற்று தேர்ச்சிபெற்று சினிமா உலகத்தில் நுழைந்து நாடறிந்த பெரிய நடிகராகப் பரிணாம வளர்ச்சி பெற்றது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. அந்த வகையில் அவர் மக்களின் பேராதரவைப் பெற்று, மக்களின் மனதில் நீங்காத கதாநாயகனாய் இடம் பிடிப்பதற்கு ''பொதுவுடைமைக் கருத்துகளையும்''  ''பொதுவுடைமைவாதிகளையும்''  பயன்படுத்திகொண்டது அவரது புத்திசாலிதனத்தை தா காட்டுகிறது. பொதுவுடைமைக் கருத்துகளை கொண்ட வசனங்களும், பாடல்களும், கதைகளும், திரைப்படத்தின் தலைப்புகளும், பொதுவுடைமைவாதி போன்ற கதாபாத்திரங்களும் தான் எம்.ஜி.ஆர் பால் மக்களை வெகுவாக ஈர்த்தன. திரைப்படங்களில் அவர் பெற்ற வெற்றிகளின் வேர்களை தோண்டிப்பார்த்தால், அங்கே பொதுவுடைமை நீர் பாய்ந்த சுவடுகள் தெரியும்.
             குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்,  எம்.ஜி.ஆர் முதன்முதலாக தானே தயாரித்து இயக்கிய ''நாடோடி மன்னன்'' திரைப்படத்தில், மன்னன் மார்த்தாண்டனாகவும், மன்னராட்சியை எதிர்த்துப் போராடும் புரட்சிக்காரன் வீராங்கனாகவும் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் புரட்சிக்காரன் வீராங்கன் பேசும் வசனங்கள் யாவும் சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் உள்ள ஷரத்துகள் தான் என்பது எம்.ஜி.ஆருக்கும், அன்றைய  கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே தெரிந்த தகவல். அந்தக் காலத்திலேயே வீராங்கன் பேசும் வசனத்தைக் கேட்டு இரசிகர்களின் கைத்தட்டலில் திரையரங்கமே அதிர்ந்தன. அந்த வசனங்கள் யாவும் கண்ணதாசன் எழுதியது தான் என்றாலும், சாதாரண மக்களை கவரும் வண்ணம் வசனங்களை எழுதுவதற்கு  கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை தான் பயன்பட்டது.   பிற்காலத்தில் அந்த கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை வசனமாக பேசிய எம்.ஜி.ஆர் புரட்சித்தலைவராக அழைக்கப்பட்டு ஆட்சிக்கு வந்துவிட்டார். அறிக்கையை கொடுத்த  கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் மக்கள் ஜனநாயக புரட்சிக்காக இன்னும் போராடிக்கொண்டே இருக்கிறது.
                 ஆரம்பக் காலத்திலிருந்தே எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் என்றால், அநியாயங்களை எதிர்க்கும பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், அறியுரை வழங்கும் பாடல்கள், உழைப்பாளி மக்களை உயர்த்தும் பாடல்கள், வீரம் செறிந்த பாடல்கள் என அவரது எதிர்ப்பார்ப்புக்கு தகுந்தாற்போல் பாடலாசிரியர்களும் மக்களை கவரும்படியாக பாடல்களை எழுதி கொடுத்தார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் ''மக்கள் கவிஞர்'' பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அவர் எழுதிய அத்தனை பாடல்களும் எம்.ஜி.ஆரின் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன.
              இப்படியாக தான் புரட்சிகரமான பொதுவுடைமைக் கருத்துகளை பேசியும், பாடியும் தான் ஒரு சாதாரண எம்.ஜி.ராமச்சந்திரன் பிற்காலத்தில் ''புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்'' - ஆக உயர்ந்தார்.

நான் சயின்டிஸ்ட் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட்டும் கூட - சிவா அய்யாதுரை

           
        மனிதகுலத்தின் ஒரே தொடர்பு ஊடகமாக பரிணமித்துள்ள இ-மெயிலை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா ? அவர் ஒரு தமிழன். பெயர் சிவா அய்யாதுரை. ராஜபாளையத்துக்காரர். வசிப்பது அமெரிக்காவில்.
                 டைம் பத்திரிகை இவரை ''டாக்டர் இ-மெயில்'' என்று அழைக்கிறது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல், வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் என அமெரிக்காவின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் ''இ-மெயிலை கண்டுபித்தவர்'' என இவரை கொண்டாடுகின்றன. உலகின் மிகச் சிறந்த அறிவுஜீவி என போற்றப்படும் பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, ''டாக்டர் சிவாதான் இமெயிலை கண்டுபிடித்தவர்'' என்று செல்லும் இடம் எல்லாம் பேசுகிறார். உலகின் மிக முக்கியமானதும், மிகப் பெரியதுமான அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆவணக் காப்பகம் (smithsonian museum), ''மின்சார விளக்கு, செயற்கை இதயம் போன்ற மிக முக்கியமான கண்டுபிடிப்புகளின் வரிசையில் இ-மெயிலையும் மதிப்பிட வேண்டும்'' என்று வர்ணிக்கிறது.
             அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி. (Massachusetts Institute of Technology) பல்கலைக்கழகத்தில் Systems Visualization மற்றும் Comparative Media Studies ஆகிய இரு துறைகளில் பேராசியராக இருக்கும் சிவா அய்யாதுரை, அதே பல்கலைக்கழகத்தில் நான்கு பட்டங்களும் ஒரு பி.ஹெச்.டி. பட்டமும் பெற்றவர். நோம் சாம்ஸ்கி தலைமையில், இந்தியாவின் சாதிய அடுக்குநிலை தொடர்பாக ஆய்வு செய்தவர். நஷ்டத்தில் இயங்கி மூடவேண்டிய நிலையில் இருந்த அமெரிக்க தபால் துறையை லாபகரமாக மாற்றிக்காட்டியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் ஏழு நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருபவர். அதில் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் ‘வெள்ளை மாளிகை’யும் ஒன்று.

           ஓர் அதிகாலை நேரத்தில் சிவா அய்யாதுரையுடன் நடத்திய நீண்ட ‘ஸ்கைப்’ உரையாடலில் இருந்து…

சொல்லுங்கள், நீங்கள் யார்? இத்தனை நாளும் எங்கிருந்தீர்கள்?               

       “இங்குதான் இருந்தேன். எப்போதும் போல என் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறேன். என் அப்பா அய்யாதுரைக்கு சொந்த ஊர் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் என்ற கிராமம். அம்மா மீனாட்சிக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி. அப்பா, அம்மா இருவரும் அந்தக் காலத்திலேயே நன்றாக படித்தவர்கள். அம்மா, அப்போதே எம்.எஸ்.சி. கணிதம் படித்து மாநில அளவில் பதக்கம் வென்றவர். எனக்கு விவரம் தெரிவதற்கு முன்பே குடும்பம் மும்பைக்கு இடம்பெயர்ந்து விட்டது. அங்கு செம்பூர் என்ற இடத்தில் குடியிருந்தோம். அப்பா, யூனிலீவர் நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருந்தார். அம்மா, டான்பாஸ்கோ பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றினார். 5, 6 வயதிலேயே எனக்கு படிப்பின் மீது மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. என்னை மேற்கொண்டும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக எங்கள் குடும்பம் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தது. சரியாக நீங்கள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் இதே டிசம்பர் 2-ம் தேதி, எனது ஏழாவது பிறந்தநாள் அன்று நாங்கள் மும்பையில் இருந்து அமெரிக்காவுக்கு பறந்தோம்.
                  நியூஜெர்ஸியில் வீடு. நூவர்க் (Newark) என்ற சிறிய பகுதியில் இருந்த லிவிங்ஸ்டன் பள்ளியில் படித்தேன். 1978-ம் ஆண்டு, எனக்கு 14 வயது இருக்கும்போது நியூயார்க் பல்கலைக்கழகம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து 40 மாணவர்களை தேர்ந்தெடுத்து கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளை கற்றுக்கொடுத்தது. இந்தியாவில் கோடை காலத்தில் பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதை போல… அது ஒரு சம்மர் கிளாஸ். அதில் ­FORTRAN IV என்ற புரோகிராமிங் மொழியை கற்றுக்கொண்டேன். அந்த பயிற்சியில் பங்கெடுத்த ஒரே இந்திய மாணவன் நான்தான். ஆனாலும் எனக்கு பள்ளிப்படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துகொண்டே வந்தது.
               நான் பள்ளியை விட்டு நிற்கப் போவதாக அம்மாவிடம் சொன்னேன். அப்போது அம்மா, ‘யுனிவர்சிட்டி ஆஃப் மெடிசின் அண்ட் டென்டிஸ்ரி’யில் (University of Medicine and Dentistry of New Jersey) டேட்டா சிஸ்டம் அனலிஸ்ட்-ஆக பணிபுரிந்துகொண்டிருந்தார். அவர் தன்னுடன் பணிபுரிந்த, லெஸ் மைக்கேல்சன் (Les Michelson) என்ற பேராசிரியரிடம் என்னை அழைத்துச் சென்றார். மைக்கேல்சன், அப்போது அந்த மருத்துவமனையின் அன்றாட நடவடிக்கைகளை, கம்ப்யூட்டர் வழியாக ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் என்னை தன் ஆராய்ச்சி உதவியாளர்களில் ஒருவராக சேர்த்துக்கொண்டார். நான் பள்ளிக்கூடம் சென்றது போக மீதமிருந்த நேரத்தை எல்லாம் மைக்கேல்சனின் ஆராய்ச்சிக் கூடத்திலேயே செலவழித்தேன். இரவு, பகலாக அங்கேயே கிடந்தேன். சவால் நிறைந்த அந்த பணி என் மனதுக்குப் பிடித்திருந்தது.
           அப்போது அந்த மருத்துவமனையில் மூன்று கட்டடத் தொகுதிகள் இருந்தன. ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக ‘மெமோரண்டம்’ எழுதுவார்கள். நோயாளி பற்றிய விவரம், மருத்துவர் பற்றிய விவரம், to, from, subject எல்லாம் எழுதப்பட்ட அந்த மெமோரண்டத்தை அங்கிருக்கும் தபால்பெட்டி மூலம் பரிமாறிக்கொள்வார்கள். இதை அப்படியே எலெக்ட்ரானிக் மயப்படுத்த வேண்டும். அந்த மெமோரண்டத்தை மருத்துவமனையில் உள்ள எந்த ஒரு கம்ப்யூட்டரில் இருந்தும், மற்றொரு கம்ப்யூட்டருக்கு எலெக்ட்ரானிக் வடிவத்தில் அனுப்ப முடிய வேண்டும். இதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது. இந்த ஆராய்ச்சியில் நான் உருவாக்கியதுதான் இ-மெயில் சிஸ்டம். ­
             FORTRAN IV மொழியில் 50 ஆயிரம் வரிகள் கொண்ட அந்த புரோகிராமை எழுதியபோது எனக்கு வயது 14. அது 1978-ம் ஆண்டு. அதற்கு email என்று பெயரிட்டேன். electro mail என்பதன் சுருக்கம் அது. FORTRAN மொழியில் ஒரு புரோகிராமில் அதிகப்பட்சம் 5 எழுத்துருக்கள் தான் பயன்படுத்த முடியும் என்பதாலும், email என்ற சொல் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்ததாலும் அந்த பெயரை வைத்தேன். அகராதியில் அதற்கு முன்பு email என்ற வார்த்தையே கிடையாது.
                 1981-ம் ஆண்டு எனது கண்டுபிடிப்புக்காக, ‘வெஸ்டிங்ஹவுஸ் சயின்ஸ் டேலன்ட்’ (Westinghouse Science Talent) விருதுக்காக விண்ணப்பித்தபோது, ‘தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கை கண்டுபிடித்த சமயத்தில் அது உலகத்தை ஆளப்போகிறது என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் இந்தக் கண்டுபிடிப்பும் அப்படி ஆகலாம்’ என்று குறிப்பு எழுதினேன். இன்று அதுதான் நடந்திருக்கிறது!”

அதன்பிறகு நீங்கள்தான் இ-மெயிலை கண்டுபிடித்தீர்கள் 
என்று ஏன் உரிமை கோரவில்லை?

           ''அப்படி யார் சொன்னது? இ-மெயிலுக்கான ‘காப்பி ரைட்ஸ'' இன்றும் என்னிடம் தான் இருக்கிறது. நான் 1981, செப்டம்பர் மாதம் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்துக்கு வந்தேன். 1982 ஆகஸ்ட் 30-ம் தேதி இ-மெயிலுக்கான முதல் காப்புரிமையை அமெரிக்க அரசிடம் இருந்து பெற்றேன். அப்போது இண்டர்நெட் என்பது வரவில்லை. ஆகவே இ-மெயில் என்பது நிறுவனங்கள் நிர்வாக ரீதியாக பயன்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாக இருந்தது. 1989-ல்தான் இண்டர்நெட் வழியே இ-மெயில் அனுப்பும் சோதனை முயற்சிகள் தொடங்கின. 96-ம் ஆண்டு ஹாட்மெயில் மிகப் பிரபலமாக காரணம், அப்போது உலகம் முழுவதும் இண்டர்நெட் அதிவேகமாக பரவிக்கொண்டிருந்தது. அதன்பிறகு 97-ல் யாஹூ வந்தது. 99-ல் செல்போன் வழியே இ-மெயில் அனுப்பும் வசதியை பிளாக்பெர்ரி துவங்கியது. நான்கு வருட ‘பீட்டா’ பரிசோதனைக்குப் பிறகு 2007-ல் ஜி-மெயில் வந்தது”
                 ஆனால், டேவிட் கிராக்கர் (David Crocker), ராய் டாமில்சன் (Ray Tomlinson) ஆகியோரின் பெயர்களும் இ-மெயில் கண்டுபிடித்தவர்கள் பற்றிய ஆய்வுகளில் பேசப்படுகின்றன…
                 “அது பழையகாலம். நான்தான் இ-மெயிலை கண்டுபித்தேன் என்பதை ஸ்மித்சோனியம் ஆவணக்காப்பகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தபிறகு இந்த சர்ச்சை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. 1978-ம் ஆண்டு உலகின் முதல் இ-மெயிலை எனது வழிகாட்டியான பேராசிரியர் லெஸ் மைக்கேல்சனுக்கு அனுப்பினேன். அது ஒரு டெஸ்ட் மெயில். அதன் ஒரிஜினல் புரோகிராமிங் கோடு, இப்போது ஸ்மித்சோனியம் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. பேராசிரியர் நோம் சாம்ஸ்கி என் ஆய்வுகளின் நேரடி சாட்சியாக இருக்கிறார். அவர் எனது கண்டுபிடிப்பை பற்றி பல இடங்களில், பேசியும் எழுதியும் வருகிறார். புகழ்பெற்ற ‘டைம்’ பத்திரிகை, தனது தொழில்நுட்பப் பிரிவின் பதிப்பில் எனது கண்டுபிடிப்பை அங்கீகரித்து என்னுடைய நீண்ட பேட்டி ஒன்றையும் வெளியிட்டது.
                   டேவிட் கிராக்கர் கண்டுபிடித்தது ‘டெக்ஸ்ட் மெசேஜ்’ (text message) அனுப்பும் தொழில்நுட்பத்தைதான். புரியும்படி சொல்வதானால், இப்போது ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறோம் இல்லையா… அதைபோல அவர் வெறுமனே டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாறிக்கொள்வதை கண்டறிந்தார். அதை இ-மெயில் என்று சொல்ல முடியாது. அப்படியானால் நாம் தந்தி அனுப்புவதைதான் இ-மெயில் என்று அழைக்க வேண்டியிருக்கும். கார் ஓடுவதற்கான நான்கு சக்கரங்களை கண்டுபிடித்துவிட்டு ‘நான் கார் கண்டுபிடித்துவிட்டேன்’ என்று சொல்வதை போலதான் இதுவும். மாறாக, இ-மெயில் என்பது ஒரு முழுமையான சிஸ்டம். இன்று நாம் பயன்படுத்தும் Inbox, Outbox, Drafts, To, From, Date, Subject:, Body, Cc, Bcc, Attachments, Folders, Compose, Forward, Reply, Address Book, Groups, Return Receipt, Sorting உள்ளிட்ட 86 வகையான இ-மெயில் புரோகிராமிங்கை எழுதி, வடிவமைத்தது நான்தான். இதுதான் முழுமையான இ-மெயில் சிஸ்டம். ராய் டாமில்சனை பொருத்தவரை அவர் இ-மெயிலில் இன்று பயன்படுத்தும் @ குறியீட்டை கண்டுபிடித்தார். அதற்கு மேல் அவரது பங்களிப்பு இதில் எதுவும் இல்லை!”

இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தீர்கள்?

                   ''1993-ம் ஆண்டு நான் பி.ஹெச்.டி. ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்தார். அப்போது வெள்ளை மாளிகைக்கு நாள் ஒன்றுக்கு 5,000 இ-மெயில்கள் வந்துகொண்டிருந்தன. அவற்றை நிர்வகிக்க நூற்றுக்கணக்கானவர்கள் வேலைக்கு இருந்தாலும், அது நாளுக்கு நாள் சிக்கலானதாக மாறிக்கொண்டிருந்தது. ஆகவே, அந்த மெயில்களை வகை வாரியாக பகுத்து பிரிக்கும் தானியங்கி தொழில்நுட்பத்தை கண்டறிவதற்கான போட்டி ஒன்றை அறிவித்தது வெள்ளை மாளிகை. பல்வேறு நிறுவனங்களும், தனிநபர்களுமாக 147 பேர் அதில் கலந்துகொண்டனர். இறுதியில் நான் கண்டறிந்த தொழில்நுட்பம் வெற்றிபெற்றது. அதற்கு நான் ‘எக்கோமெயில்’ (EchoMail) என்று பெயரிட்டேன். இப்போதும் வெள்ளை மாளிகையில் இந்த தொழில்நுட்பம்தான் நடைமுறையில் இருக்கிறது.
             பிறகு இந்த ‘எக்கோமெயிலை’ ஒரு நிறுவனமாக தொடங்கினேன். இன்று உலகின் மிக முக்கியமான நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்கள். இந்த நிறுவனத்தின் மதிப்பு 200 மில்லியன் டாலர். இதுபோக, வேறு மூன்று நிறுவனங்களையும் நடத்துகிறேன். கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட மூடப்படும் நிலையில் நஷ்டத்தில் இயங்கிய அமெரிக்க தபால் துறையை எனது புதிய இ-மெயிலிங் சிஸ்டம் மூலம் லாபகரமாக மாற்றியபோது, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பில் இருந்து தப்பினார்கள். அமெரிக்க ஊடகங்கள் என்னைப்பற்றி பெரிதாக எழுதினார்கள். ஆனால் எனக்கு இந்தியாவில் பணிபுரியவே விருப்பம். ஆனால் அங்கு எனக்கு ஒரு கசப்பான அனுபவம் இருக்கிறது.”
              
என்ன நடந்தது இந்தியாவில்? நீங்கள் நாட்டைவிட்டு 
வெளியேற்றப்பட்டதாக இணையப் பக்கங்களில் எழுதப்பட்டிருக்கிறது…  

                 “ஆம், உண்மைதான். 2007-ம் ஆண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான CSIR-Council of Scientific and Industrial Research துறையில் என்னை கூடுதல் செயலாளராக நியமித்தார் மன்மோகன்சிங். மூன்று ஆண்டுகள் அங்கு இருந்தேன். அந்த சி.எஸ்.ஐ.ஆர். நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு. கடந்த 60 ஆண்டுகளில் அதில் உள்ளவர்கள் எதுவுமே செய்யவில்லை. எங்கும் லஞ்சம், ஊழல். அறிவியல் கண்டுபிடிப்புக்கான சூழல் கொஞ்சமும் இல்லை. இதைப்பற்றி ‘கண்டுபிடிப்புகளுக்கு சுதந்திரம் வேண்டும்’ (Innovation demands freedom) என்ற தலைப்பில் 47 பக்கத்துக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதை உலகின் முக்கியமான 4 ஆயிரம் விஞ்ஞானிகளுக்கு மெயில் அனுப்பினேன். உலக அளவில் அது விவாதம் ஆனது.
                   உடனே இந்தியாவின் சட்டத்தை நான் மீறிவிட்டதாகச் சொல்லி திடீரென ஒருநாள் என் வீடு முடக்கப்பட்டது. என்னை வெளியேற்றினார்கள். நான் நேபாளம், கத்தார் வழியே அமெரிக்கா வந்தேன். ‘சிவா அய்யாதுரையை வெளியேற்றியது இந்தியா செய்த பெரிய தவறு’ என்று பல விஞ்ஞானிகள் எழுதினார்கள். அதைப்பற்றி இந்தியா கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இப்போதும் அங்கு சூழல் மாறிவிடவில்லை. அங்கிருக்கும் நேர்மையற்ற அரசியல் சூழலில் அறிவியல் ஒருபோதும் வளராது”

இ-மெயிலை கண்டுபிடித்தது நீங்கள்தான் என்பதை அவ்வளவு சுலபத்தில் யாரும் ஏற்றுக்கொள்ளாதது ஏன்?

          “ஏனெனில் நான் கறுப்பு நிறத் தோல் உடையவன். புலம்பெயர்ந்து வந்த இந்தியன். சிறுபான்மை தமிழன். ‘நூவர்க்’ என்னும் சிறிய ஊரில் வசித்தவன். முக்கியமாக 14 வயது சிறுவன். இவற்றை தவிர வேறு என்ன காரணத்தை சொல்ல முடியும்? 50 ஆயிரம் வரிகளை கொண்ட ஒரிஜினல் புரோகிராமிங் கோட், ஒரு வெள்ளைத்தோல் உடையவரிடம் இருந்தால் இந்த சர்ச்சைகளுக்கு வாய்ப்பே இல்லை.
                 அறிவியல் கண்டுபிடிப்புகளை ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், எம்.ஐ.டி. போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களிலும்தான் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் நான் எம்.ஐ.டி-யில் இருந்தபோது கண்டுபித்த ‘எக்கோமெயிலை’ கொண்டாடும் இவர்கள், நியூஜெர்ஸி மருத்துவமனையில் ஆராய்ச்சி உதவியாளராக இருந்தபோது கண்டுபிடித்த இ-மெயிலை புறக்கணிக்கிறார்கள். இந்தியாவில் பிராமணர், பிராமணர் அல்லாதோர் பாகுபாடு இருப்பதை போல, அமெரிக்காவில் தோலின் நிறத்திலும், சிறுபான்மை-பெரும்பான்மை என்ற அளவிலும் பாகுபாடு இருக்கிறது. தெளிவாக எழுதிக்கொள்ளுங்கள், தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வந்த கறுப்பு நிறத் தோல் உடைய 14 வயது தமிழ் சிறுவன் இ-மெயிலை கண்டுபிடித்தான்.
               இன்னொரு முக்கியமான கோணத்திலும் இதை நீங்கள் பார்க்க வேண்டும். நான் அடிக்கடி பயன்படுத்தும் ‘மோட்டோ’ வாக்கியம், ‘கண்டுபிடிப்பு என்பதை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், யாராலும் செய்ய முடியும்’ (Innovation Any Time, Any Place by Anybody). அறிவும், அறிவியலும் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
          அறிவியல் கண்டுபிடிப்புகளை வெறுமனே பணம் ஈட்டும் சந்தையாக பார்க்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்னை தனிமைப்படுத்த விரும்புகின்றன. ஆனால் நான் இப்போதும் சொல்கிறேன், என்னிடம் பேட்டி எடுக்கும் நீங்களும், இதை படிக்கப்போகும் தமிழ் வாசகர்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும். அதற்கான சூழலை உருவாக்கித் தர வேண்டும். வரப்போகும் காலம் மிக அபாயகரமானது. வேலை இல்லாத் திண்டாட்டம் மிக மோசமாக இருக்கும். மில்லியன் கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அது அறிவியலால் மட்டும்தான் சாத்தியமாகும்!”

உங்கள் பேச்சை வைத்து கேட்கிறேன்… நீங்கள் சயிண்டிஸ்டா, கம்யூனிஸ்டா?

         “நான் சயின்டிஸ்ட் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட்டும் கூட. எம்.ஐ.டி.யில் படிக்கும்போது மாணவர் சங்கத்தில் இணைந்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். தென் ஆப்பிரிக்காவில் நடந்த‌ நிறவெறி நடவடிக்கைகளைக் கண்டித்து அந்த நாட்டு கொடியை எரித்தேன். பல்கலைக்கழகத்தின் உணவு உபசரிப்புப் பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதை கண்டித்து போராடி வெற்றி பெற்றோம். இலங்கையில் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அப்போது அதிபராக இருந்த பிரேமதாசா அமெரிக்கா வந்தார். அவரை வெளியேறச் சொல்லி போராடினோம். ‘த ஸ்டூடண்ட்’ என்ற பெயரில் நான்கு ஆண்டுகள் பத்திரிகை நடத்தினேன். கல்லூரி வளாகத்தில் நானும், என் சகாக்களும் வலிமை வாய்ந்த சிறுபான்மை சக்திகளாக இருந்தோம். பி.ஹெச்.டி. செய்துகொண்டிருந்தபோது, ஈராக் நாட்டுக்குள் படைகளை அனுப்பிய அமெரிக்க அரசுக்கு எதிராக தன்னந்தனியாக போராடினேன். அதனால் நான் அடிப்படையில் கம்யூனிஸ்ட். பிறகுதான் சயின்டிஸ்ட்.
                இன்று தொழில்நுட்பத்தையும், அறிவியல் வளர்ச்சியையும் பெரும் நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் போன்ற இணைய நிறுவனங்களும், செல்போன் கம்பெனிகளும் மக்களை அன்றாடம் கண்காணிக்கின்றன. சந்தர்ப்பம் வரும்போது மக்களுக்கு எதிராக கை கோத்துக்கொள்கின்றனர். சமீபத்தில் எகிப்தில் நடந்த மக்கள் புரட்சியை, எஸ்.எம்.எஸ் அனுப்புவதை தடைசெய்து ஒடுக்கியதே இதற்கு உதாரணம்”

இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்ற வகையில் உங்களுக்கு வருவாய் வருகிறதா?

              “நான் இ-மெயிலுக்கு ‘காப்பி ரைட்ஸ்’தான் வாங்கினேன். ‘பேடன்ட் ரைட்ஸ்’ அல்ல. காப்பிரைட்ஸ் படி, ராயல்டி தொகை வராது. 1995-ம் ஆண்டுதான் சாஃப்ட்வேருக்கு பேடன்ட் ரைட்ஸ் வாங்கும் சட்டம் வந்தது. அதன்பிறகு நான் முயற்சிக்கவில்லை. ஏனெனில் நான் பணத்தை எதிர்பார்க்கவில்லை. என் நிறுவனங்கள் வழியே ஏராளமான பணம் எனக்குக் கிடைக்கிறது”

உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

              “எனது முழு வாழ்க்கையும் அறிவியலில்தான் செலவாகும், அதில் சந்தேகம் இல்லை. அமெரிக்காவிலும், இந்தியாவிலுமாக மாறி, மாறி இயங்கவே விரும்புகிறேன். இந்திய சித்த மருத்துவத்தின் மேன்மைகளை ஆராய்ச்சி செய்து, அதை கிழக்குலகின் பாரம்பரிய மருத்துவத்துடன் இணைத்து, மருத்துவ துறையில் புதிய புரட்சியை உருவாக்குவதுதான் என் அடுத்த இலக்கு.
        இன்றைய கார்பொரேட் உலகம், தொழில்நுட்பங்களையும், அறிவியலையும், அறிவையும் மேலும் மேலும் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகிறது. அது எல்லோருக்கும் கைவராத கலை என்பதை போல சித்தரிக்கிறது. ஆனால் உலகத்தில் ஒரே ஒரு சிவா மட்டுமில்லை.. ஒரே ஒரு சாம்ஸ்கி மட்டுமில்லை… உலகம் முழுக்க ஆயிரமாயிரம் சிவாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வெளியே கொண்டு வர வேண்டும்!’’

  நன்றி : ஆனந்த விகடன்