தியாகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தியாகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 நவம்பர், 2015

மோடி அவர்களே... நீங்கள் விட்டுக்கொடுத்தால் நாங்கள் விட்டுக்கொடுப்போம்...!


LPG - சமையல் எரிவாயு மான்யம் வேண்டாமென்று              
பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா...?                   

                 கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் எரிவாயு சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன் செய்தால், எடுத்தவுடன் -   “நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்ற  குரல் கேட்கும்  ( இந்தியில் தான்…!)


        ''நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் எரிவாயுக்கான மான்யத்தை விட்டுக்கொடுத்து ஏழைகள் வீட்டில் அடுப்பெரிய உதவுங்கள்'' என்றும்,  ''இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நீங்களும்  உதவலாமே''  என்றும்  நமக்கு அறிவுரை வேறு சொல்லுவார். எரிவாயு சிலிண்டரை பதிவு செய்ய நாம் அழைத்தால், மோடி நாம் அழைக்காமலேயே நமக்கு இந்த போதனைகளை சொல்லுவார். ஆனால் போன் செலவு நம்முடையது.


         சில மாதங்களுக்கு முன்பு  தான் பிரதமர் நரேந்திரமோடி இந்திய பெருமுதலாளிகள்   சம்மேளன கூட்டத்தில் பேசும்போது ''இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால்
நூறு கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகி உள்ளது.  இது இந்த நாட்டின் ஏழைகளுக்கான  வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும். அதேப்போல் இன்னும் அதிகம் பேர் ''மான்யத்தை தியாகம் செய்ய'' முன் வரவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். 


                 இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக விவரித்து நரேந்திரமோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். 

          “நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம் அமைந்திருக்கிறது. அந்த கடிதத்தின் தமிழ் வாசகம் கீழே...!

எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு, 

சமையல் எரிவாயு மான்யத்தை நான் விட்டுக்கொடுக்க
முன்வர வேண்டுமென்று, வேலை மெனக்கெட்டு,
என் போனிலேயே,என் செலவிலேயே – 
வேண்டி, விரும்பிகேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்….!
மகிழ்ச்சியோடு நானும் இதற்கு ஒப்புக்கொள்வேன்…
ஆனால் அதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்கள்
நடைபெற்றால் தேவலை….!!!


– நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் –
இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும்,
அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற
உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக்
கொடுப்பதாக அறிவிக்கச் செய்யமுடியுமா…?


– உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில்
போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை
அறிவித்திருக்கிறீர்கள்.
அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் – தங்களுக்கு
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில்
கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக
அறிவிக்கச் செய்ய முடியுமா…?


– சட்டமன்ற, பாராளுமன்ற – கூட்டங்களில் அநேக
பிரச்சினைகளில் – எதிரும் புதிருமாக நின்று
அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே,
அதெப்படி உங்களது சம்பளம், படி, பென்ஷன் போன்ற 
சலுகைகளை உயர்த்தி மசோதாக்கள் கொண்டு 
வரும்போது மட்டும் - அதெப்படி ஒருமித்த குரலில் 
ஒன்றுபட்டு – உடனடியாக விவாதமே இன்றி 
நிறைவேற்றிக்கொள்கிறீர்கள்…?


– கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை
விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை -
எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள்
விவாதிப்பதை நாங்கள் எப்போது காண்பது…?


– வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் 
திருமதி.ஏஞ்சலா மெர்கெல் - தன் அலுவலகப்பணிக்குச்
செல்லும்போது பொதுமக்கள் பயன்படுத்தும்
சாதாரண ரயிலில் செல்லும்போது –
கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே
வாழும் இந்தியத்திருநாட்டில், அரசியல்வாதிகளான,
அமைச்சர்களான, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களான
நீங்கள் மட்டும், அரசாங்க செலவில் தனித்தனியே 
ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்துக்கொண்டு 
பயணிப்பது எப்படி…?


– உங்கள் சொந்த வசதி, சௌகரியங்களுக்காக செலவழிக்கப்படும்
ஒவ்வொரு பைசாவும், இந்த நாட்டின் குடிமக்கள் செலுத்தும்
வரியிலிருந்து தான் எடுக்கப்படுகிறது என்பதை நீங்கள்
நினைத்துப் பார்ப்பதே இல்லையா…?


– நீங்கள் ஒவ்வொருவரும் 
பயன்படுத்தும் தொலைபேசிகளுக்காக –
உபயோகப்படுத்தும் மின் வசதிகளுக்காக –
குடும்பத்தோடு தங்கும் சொகுசு பங்களாக்களுக்காக –
இந்தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும்
பயணிப்பதற்காக – 
உருப்படியான வேலை எதுவும் இல்லாமல்,
சும்மாவே ஊர் சுற்றிப்பார்க்க நீங்கள் மேற்கொள்ளும்
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக –
எத்தனை கோடி ரூபாய்களை நாங்கள் வரிப்பணமாக 
கொடுக்கிறோம் என்பதை என்றாவது நீங்கள் 
நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா...?


– உங்கள் சொந்த சௌகரியங்களுக்காக ஆகும் இந்த
செலவுகளை எல்லாம் நீங்களே ஏற்றுக் கொள்ளும்
சுபதினம் என்றாவது வருமா என்று குடிமக்களாகிய 
நாங்கள் எதிர்பார்க்கலாமா...?

– மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட,
நட்சத்திர வசதிகள் நிரம்பப்பெற்ற உயர் மருத்துவமனைகளில்
தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே…. 
உங்கள் சகஇந்தியர்கள் எத்தனையோ பேர் சரியான 
மருத்துவ உதவி கிடைக்காமல் தினமும் செத்துக் 
கொண்டிருக்கிறார்கள் என்பதை என்றாவது
நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தது உண்டா…?
– இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் உங்கள் சொந்த செலவில் 
செய்துக்கொள்ளும் நாள் என்றாவது வருமா…?


– அப்படி என்ன உங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமென்று
இத்தனை பூனைப்படைகளையும், துப்பாக்கி ஏந்திய
சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு ''Z'' என்றும்,
''Z+'' என்றும் சொல்லிக் கொண்டு நீங்களும், 
உங்கள்  மந்திரிகளும்  திரிகிறீர்கள்...?
தினமும் உங்கள் கூட படாடோபத்திற்காக துணைக்கு வரும்
பூனைப்படை, யானைப்படை – எல்லாவற்றிற்கும் கொடுக்கும்
சம்பளப்பணம் – எங்கள் வரிப் பணத்திலிருந்து வருவது தானே...?
இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பில்
இருக்கும் – உங்களை பாதுகாக்க நாங்கள் செலவழிக்க
வேண்டியிருக்கும் இந்த பரிதாப நிலை என்றைக்குத்தான் மாறும்…?


–  ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டு 
எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின்
நடைபாதைகளில் பட்டினியோடு படுத்துத் தூங்கும்போது –
உங்களுக்கு மட்டும்  ஏன் பாராளுமன்ற கேண்டீன்களில்
மலிவு விலையில் உணவுப் பொருட்கள்…? 
அது நியாயம் தானா....?
ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும்,
ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும்
எந்த குடிமகனுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே…!
கோடீஸ்வரர்களான உங்களிடம் கொடுக்க காசில்லை
என்றா இந்த மலிவு விலை…? இது தகுமா...?


– உங்களின் இந்த மலிவு விலை சோற்றுக்கு கூட –
அன்றாடங்காய்ச்சியான இந்த நாட்டின் ஏழைக்குடிமகன் 
தான் காசு கொடுக்கிறான் என்பது உங்கள் மனசாட்சியை
என்றுமே உறுத்தவில்லையா...?


– நாங்கள் செலுத்தும் வரிகள் தான் எத்தனையெத்தனை …
Income tax,
Service Tax,
Professional Tax,
Toll Gate, 
Value Added Tax,
Wealth Tax,
Corporation Tax,
Road Tax, 
Automobile Registration Tax 
and 
Property Tax –

– மக்கள் சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் 
பிடித்துக்கொள்ளும் இந்த அரசு நிர்வாகம் 
உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும்
விலக்கு கொடுத்திருப்பது உங்களுக்கு 
உறுத்தவில்லையா …?
உங்களுக்கும் சேர்த்து தானே, எங்களிடம் வரி வசூல்
செய்யப்படுகிறது…?


– உங்களுக்காகவே  நீங்களே இயற்றிக்கொண்ட 
சட்டங்கள் மூலம் கிடைத்துள்ள அத்தனை 
சலுகைகளையும் விட்டுக்கொடுத்து
இந்த நாட்டின் கௌரவமுள்ள குடிமகனாக நீங்கள்
எல்லாம் மாறும் நாள் என்றாவது வருமா…?


– இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும்
நிர்வாகம் செய்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
நீங்கள் அனைவரும் – 
உங்களுக்கு நீங்களே எடுத்துக்கொண்ட இந்த சலுகைகள் 
அத்தனையையும் என்றைக்கு விட்டுக் கொடுக்கிறீர்களோ –
அன்றைக்கு குடிமக்களாகிய நாங்கள் அனைவரும்
எங்கள் சமையல் எரிவாயு மான்யத்தை –
நீங்கள் கோராமலேயே நிச்சயம் நாங்கள் 
அனைவரும் விட்டுக்கொடுப்போம்…!!! 

                                                                         இப்படிக்கு,

                                                                 சாமான்ய இந்தியன் 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இது வாட்ஸ் ஆப்பில் தோழர் ஒருவர் அனுப்பிய தகவல் 

புதன், 15 ஆகஸ்ட், 2012

தானாக கிடைத்ததல்ல சுதந்திரம்...!


          பள்ளி  வரலாற்றுப் பாடத்தில்  இந்திய சுதந்திர போராட்டத்தை பற்றிப் படிக்கும் போது ''கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமின்றி, யுத்தமின்றி காந்தி நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்'' என்கிற வரியை எல்லா வகுப்பிலும் நாம் படித்திருப்போம். அதை படிக்கும் போது, ஏதோ காந்தி மட்டுமே  வெள்ளைக்காரனிடம் கெஞ்சிக்கேட்டு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது போன்ற  ஒரு கருத்தை தான் படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்தும். இந்த நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள் - குறிப்பாக காங்கிரஸ்காரர்கள் பள்ளிப் பாடப்புத்தகத்தை தங்கள் கட்சிப் பிரச்சாரத்திற்காகவே பயன்படுத்திக்கொண்டார்கள். அதனால் தான், இந்த தேசத்திற்கு கிடைத்த சுதந்திரத்திற்கும், அதற்காக நடத்தப்பட்ட போராட்டத்திற்கும் சொந்தக்காரர்களாக காங்கிரஸ்கட்சியையும், காந்தியையும் மட்டுமே காட்டுகின்றனர். அதுவும் வடநாட்டு காங்கிரஸ் தலைவர்களைத் தான் குறிப்பிட்டிருப்பார்கள். தென்னிந்தியத் தலைவர்களை - குறிப்பாக காமராஜர், திருப்பூர் குமரன், பாரதியார், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் போன்ற  தமிழகத்தலைவர்களை பற்றி ஒரு சிறு குறிப்புக்கூட காட்டியிருக்கமாட்டார்கள். 
                  நாம் வரலாற்றுப் பாடத்தில் படிப்பது போல் '' ஏதோ  கேட்டுப்பெற்றதல்ல சுதந்திரம்... தானாக வந்ததுமல்ல சுதந்திரம்...''
           ஜாலியன் வாலாபாக்கில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் உயிர்த்தியாகம் செய்து, ரத்தம் சிந்தி பெற்றச் சுதந்திரம் இது...
           பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், உத்தம்சிங் போன்ற இளைஞர்கள்  தூக்குமேடை   ஏறிப் பெற்றச் சுதந்திரம் இது...
           திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் போன்ற  இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்துப் பெற்றச் சுதந்திரம் இது. 
            பாரதி தன்  பாட்டுத்திறத்தாலே விடுதலைத்தீயை மூட்டி இந்திய மக்களிடையே எழுச்சியை உண்டாக்கி பெற்றச் சுதந்திரம் இது. வ. உ. சி மற்றும் சுப்பிரமணிய சிவா போன்றவர்கள் சிறைகொடுமைகளை அனுபவித்து, செக்கிழுத்துப் பெற்றச் சுதந்திரம் இது. 
           நேதாஜி மற்றும் கேப்டன் லட்சுமி போன்றவர்கள் இந்திய தேசியப் படை அமைத்து வெள்ளையனுக்கு எதிராகப்போராடிப் பெற்றச் சுதந்திரம் இது. 
            தோழர். ஜீவானந்தம், தோழர். ஹர்கிஷன்சிங் சுர்ஜித் போன்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போராடி, சிறைக்கொடுமைகளை அனுபவித்து, தலைமறைவு வாழ்க்கையை நடத்தி பெற்றுத் தந்த சுதந்திரம் இது. 
         1806 - ஆம் ஆண்டு தொடக்கி 1947 - ஆம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கான  ஆண்களும், பெண்களும், முஸ்லிம்களும், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களும் போராடி - ரத்தம் சிந்தி - உயிர்த்தியாகம் செய்து நமக்கு பெற்றுத் தந்த சுதந்திரம் இது. 
          அனால் கடைசி இந்தியன் வரை அந்த சுதந்திரம் பொய் சேர்ந்ததா என்று கேட்டால்... அது கேள்விக்குறிதான். 
          உண்மையான சுதந்திரம் என்பது, இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே சொன்னானே மாவீரன் பகத்சிங் அது தான்.                   
         ''பாலுக்கு அழும் குழந்தை, கல்விக்கு எங்கும் மாணவன், வேலை தேடும் இளைஞன், வறுமையில் வாடும் தாய் - இவர்கள் இல்லாத இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா'' 
இது தான் மாவீரன் பகத்சிங் கனவுகண்ட இந்தியா.
         அன்று வெள்ளையர் கையில் இருந்த இந்தியா... இன்று கொள்ளையர் கையில் சிக்கி மேலே சொன்ன அத்தனை பேரையும் கொண்ட ''வாடும் இந்தியா''வில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
           இது மாறவேண்டுமென்றால், ''முப்பது கோடி ஜெனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை'' வேண்டினானே பாரதி, அந்த பொதுவுடைமை இந்த தேசத்தில் மலரவேண்டும். அதுதான் இந்தியாவில் உண்மையான சுதந்திரத்தை மணக்கச் செய்யும். 
அதற்காக போராடுவோம்.... 
பெற்ற சுதந்திரம் பேணிக்காப்போம்... 
தேசத்தை காத்தல் செய்வோம்.