ஊழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

தமிழக மக்களின் கோபத்தை நீர்க்கச் செய்துவிடாதீர்கள்...!


           கடந்த ஐம்பது ஆண்டு காலமாக  திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சிசெய்து தமிழ்நாட்டையே சீரழித்துவிட்டதை உணர்ந்துகொண்ட தமிழக மக்களின் கோபத்தை, தாங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த இரு கழகங்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொண்ட தமிழக மக்களின் அதிருப்தியை வழக்கம்போல் திசைத்திருப்பும் வேலைகளில் ஊடகக்காரர்களோடு சேர்ந்து ஒரு கூட்டம் இறங்கியுள்ளது.  தமிழகத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.சகாயம் அவர்கள் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வரவேண்டும் என்று கடந்த சில தினங்களாக முகநூலிலும், வாட்ஸ்ஆப்பிலும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இன்று மதுரையில் அவரை முன்னிறுத்தி ஒரு பேரணிக்கும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.  ஜெயலலிதாவிற்கு எதிராக திரும்பிவிட்ட ஆனந்தவிகடன் போன்ற ஊடகங்கள் இதை ஊதி பெரிதாக்குகின்றன. 
             ஆனால் எல்லாவற்றையும் இழந்து தள்ளாடிக்கொண்டிருக்கும் தமிழகத்தை மறுமலர்ச்சி அடையச்செய்ய வேண்டிய இந்த சூழ்நிலையில் இதுபோன்ற திசைத்திருப்பலும், குழப்பமும் தேவை தானா என்பதை சிந்தித்துப்பார்க்கவேண்டும். 
          சகாயம் என்பவர் ஒரு நேர்மையான அரசு அதிகாரி என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ''இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் உயர்த்து'' என்ற முழக்கத்துடன், ஊழலாலும், இலஞ்சத்தாலும்  புரையோடிப்போன தமிழக அரசில் பணிபுரியும் ஓர் அரசு உயர்அதிகாரி என்பதிலும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. தமிழகத்தில் இலஞ்சமே இல்லாமல் அரசுப்பணியாற்றும் ஊழியரைப் பார்க்கும்போது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் தான் இருக்கும். அப்படி அதிசயக்கத்தக்கவராக திரு.சகாயம் தெரிவதில் ஆச்சரியமும் இல்லை. ஆனால்  அவரைப்போன்றே  நேர்மையாக பணிசெய்யும்  அரசு அதிகாரிகள்  தமிழகத்தில் நிறைய இருக்கிறார்கள். இதுபோன்று நேர்மையாக பணிசெய்யும் அரசு அதிகாரிகளை தொடர்ந்து  பணிசெய்ய அனுமதியுங்கள். 
                   நாட்டுக்கு நேர்மையான ஆட்சியாளர்கள் தேவை என்று நீங்கள் எப்படி கவலைப்படுகிறீர்களோ...அதேப்போல் அந்த ஆட்சியாளர்களை வழிநடத்த நேர்மையான அதிகாரிகளும் தேவை என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.  ஆட்சி என்பது இரட்டை மாட்டு வண்டி போலவாகும். வண்டி தடம் மாறாமல் நேர்வழியில் செல்லவேண்டுமென்றால் இரண்டு மாடுகளும் சரியாக செல்லவேண்டும். ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அந்த இரண்டு மாடுகள் போன்றவர்கள். 
               தவிர தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அப்படியிருக்க நீங்கள் சொல்வது திரு.சகாயம் எதாவது  ஒரு தொகுதியில் மட்டும் தான் நிற்க முடியும்.  இவரோடு சேர்ந்து வெற்றிபெறும் மற்ற மந்திரிகளோ அல்லது எம்எல்ஏக்களோ இவரைப்போன்று நேர்மையாளர்களாக தான் இருப்பார்கள் என்பது கேள்விக்குறியே.
         அதுமட்டுமல்லாது, கடந்த ஐம்பது ஆண்டுகளாக திமுக - அதிமுகவின் தனிமனித துதியால் தான் தமிழ்நாடு சீரழிந்து நாறிப்போனது. மீண்டும் கண்மூடித்தனமான அதே துதியை சகாயம் விஷயத்திலும் பாடாதீர்கள். 
            மேற்குவங்கம், கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களைப் போல் கூட்டணி ஆட்சியால் தான் ஊழலை முற்றிலுமாக ஒழிக்கமுடியும். நேர்மையான, எளிமையான, மக்களுக்கான நிர்வாகத்தை அளிக்கமுடியும். அந்த மாநிலங்களை ஆட்சி செய்த இடதுசாரி கட்சிகள் மீது சொத்து குவிப்பு வழக்கோ, ஊழல் குற்றச்சாட்டுகளோ இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
           இப்படித்தான் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன்பு, ஊழல் பெருச்சாளிகளான காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதீய ஜனதக்கட்சிகளுக்கு எதிராக மக்கள் திரும்பிய போது, ஊடகங்களும், கார்ப்போரேட் கம்பெனிகளும் அன்னா ஹசாரே என்ற ''யோக்கியவானை'' காட்டி மக்களை குழப்பி - திசைத்திருப்பி கடைசியில் ஊழல் மற்றும் மதவாதக் கட்சியான பிஜேபிக்கு வாக்களிக்கச்செய்தனர். அதே செயலைத்தான் இப்போதும் ஊடகங்களும், ஒரு சில என்.ஜி.ஓ-க்களும் சேர்ந்து தற்போது தெளிவான  சிந்தனையில் இருக்கக்கூடிய தமிழக மக்களை திரு.சகாயம் அவர்களைக் காட்டி குழப்புகிறார்கள். தெளிந்த குட்டையை குழப்பி மீன்பிடிக்கப் பார்க்கிறார்கள். 
        அவர்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம், திமுக., அதிமுக கட்சிகள் மீதான மக்களின் கோபத்தை - அதிருப்தியை தவறாக திசைத்திருப்பி நீர்க்கச்செய்துவிடாதீர்கள். அப்படி செய்தால் அந்த இரு கட்சிகளுக்கே மீண்டும் சாதகமாக முடிந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள் என்பது தான்.  

திங்கள், 31 மார்ச், 2014

ஊழலின் ஊற்றுக்கண் யார்...? - காங்கிரஸ் கட்சியா...பாஜக-வா...?


கட்டுரையாளர் : தோழர்.பிரகாஷ் காரத்             
                                 பொதுச்செயலாளர்,          
                                 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                                    

          மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் ‘தி இந்து‘ ஆங்கில நாளேட்டின் அனிதா ஜோசுவாவிற்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு அரசு அமைவதற்கான வாய்ப்புகள் குறித்தும், ஊழல் உள்பட இடதுசாரிகளால் எழுப்பப்பட்டு வரும் அதே பிரச்சனைகளை எழுப்பிடும் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகமான அரசியல் ஆதாயம் கிடைப்பதற்கான காரணங்கள் குறித்தும் பேசினார். 
அவரது பேட்டியிலிருந்து ....!

          உறுதியான தலைமைக்காக கூக்குரல் எழுந்து வருகிற நேரத்தில் மூன்றாவது மாற்றுக்கு - குறிப்பாக மூன்றாவது அணி ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து குழப்பம் நிலவி வருகிற போது - இடமிருக்கிறதா?

           (பாஜகவின் பிரதமர் வேட்பாளராகிய நரேந்திர) மோடியின் அரசியல் கோட்பாடுகளிலிருந்து முரண்படுபவர்கள் நாங்கள். வலுவான தலைவருக்கான குரல் என்பது கார்ப்பரேட் ஊடகத்தின் கூக்குரலும் கூட. இன்றைய நிலைமையில் தங்களுக்கான விஷயங்களை செய்து கொடுப்பதில் மோடி தாராளமாக இருப்பார் எனக் கருதுவதால் (பிரதம மந்திரி) மன்மோகன் சிங்கிடமிருந்து இவர்களது பார்வை மோடியின் பால் திரும்பியிருக்கிறது. அது மட்டுமின்றி, வலுவான சர்வாதிகார ஆட்சி என்பதனையே பெருவணிக நிறுவனங்களும், கார்ப்பரேட்டுகளும் விரும்புகின்றன. நிலையான ஆட்சி, சட்டம், ஒழுங்கு என்ற பெயரில் எல்லா அதிருப்திகளும் கைவிடப்படுகின்றன. இத்துடன் இந்துத்துவா கொள்கையும் இணைக்கப்படும்போது அது மிக அபாயகரமான கலவையாக ஆகிறது. எனவேதான், இதற்கு எதிரானதொரு நிலையை நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் கூடுதலான கூட்டாட்சி முறையை, மத்திய அரசிடம் குவிந்துள்ள அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். தனிநபரைப் பற்றி மறந்துவிடுங்கள், இத்தகையதொரு சர்வாதிகார ஆட்சி முறை மத்திய அரசின் கைகளில் குவிந்திடுவதனை நாங்கள் விரும்பவில்லை. பாஜகவால் எப்போதும் முன்வைக்கப்படுகின்ற, நிர்வாக அதிகாரம் அனைத்தையும் ஒரு நபருக்கு அளித்திடுகிற ஜனாதிபதி ஆட்சி முறையை நாங்கள் ஏற்கவில்லை. இந்தியா போன்றதொரு தேசத்தில், இத்தகைய ஆட்சி முறை மிக மோசமான விளைவுகளையும், பிரிவினைவாத தாக்கத்தையும் ஏற்படுத்தும். இந்தியா மிக அதிகமான வேறுபாடுகளை தன்னுள்ளடக்கியுள்ள, பூகோள ரீதியாக விரிந்து பரந்திருக்கிற நாடாகும். சர்வாதிகாரம் இங்கு செல்லாது.

          தற்போது நடந்த முடிந்துள்ளவற்றைப் பார்க்கும்போது, காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு அணியை உருவாக்கிட தேர்தல்களுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அவசரகதியிலானவை எனத் தோன்றுகிறதா?

               காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு எதிராக ஒன்றாக இணைந்திடுவதற்கான விழைவையும், தேர்தல்களுக்குப் பிறகு இத்தகைய மாற்றுக்கு ஒரு வடிவம் கொடுக்கப்படும் என்பதனையுமே பிப்ரவரி 25 அன்று நாங்கள் அறிவித்தோம்.

             ஆனால், அந்த அறிவிப்பின்போது உங்களுடன் இருந்தவர்களில் சிலர் இப்போது வெளியேறியிருப்பது என்பது ஒரு பின்னடைவுதானே?
              பின்னடைவுதானே? கூட்டு மேடையில் இருந்த கட்சிகள் தங்களுக்குள்ளே தேர்தல் கூட்டணியை ஏற்படுத்திக்கொள்ள முடியாது என்பதனை துவக்கத்திலேயே நாங்கள் அறிவோம். இந்த கட்சிகள் - பெரும்பாலும் மாநில கட்சிகள் - எல்லாம் தேர்தல்களிலே அவர்களது சொந்த பலத்தை அதிகரித்துக் கொள்ளவே செயல்படுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, அகில இந்திய அளவில் நாங்கள் ஒன்றிணைந்தது என்பது, இக்கட்சிகளிடையே ஏதாவது ஒரு வடிவத்தில் தேர்தல் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அவரவர் மாநிலத்தில் காங்கிரஸ் அல்லது பாஜகவிற்கு எதிராக களம் இறங்குவது என்பதில் அவர்கள் அனைவருக்கும் பங்கிருந்தது. அந்தஅடிப்படையில் தேர்தலுக்குப் பின் நாங்கள் இதனை ஒருமுகப்படுத்திடுவோம்.

            பிப்ரவரி 25 அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் பெரும்பாலானோர் இதனை “மூன்றாவது அணி” என்று அழைப்பதனை தவிர்த்தனரே, அப்படியானால் அது கைவிடப்பட்டுவிட்டதா?

            ஒரு திட்டத்தின் அடிப்படையில் உருவாகும் ஒரு பொதுவான மேடைதான் ஒரு அணி என்பதாகும். ஆனால் அப்படி எதுவும் இல்லாதபோது நாங்கள் ஏன் அவ்வாறு சொல்லிக் கொள்ள வேண்டும்? தேர்தலுக்கு பின்னர் ஒரு அணியாக அமைவதற்கு இது ஒரு வாய்ப்பு என்றே நாங்கள் கூறினோம். தேர்தலுக்குப் பின்னர் நாங்கள்ஒரு பொதுவான செயல்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து, அதன் பின்னர் ஓர் அணியை ஏற்படுத்திடலாம்.

                  இடதுசாரிகள் பல ஆண்டுகளாக கையிலெடுத்தபோதும் சிறிய விளைவுகளே ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் சிலவற்றையே இன்றைக்கு ஆம் ஆத்மி கட்சி கையிலெடுக்கிறது; ஆனாலும் அதன் எதிரொலி பெரிதாக இருப்பது ஏன்?

            கார்ப்பரேட் ஊடகங்கள் அவர்களை விளம்பரம் செய்கிறது. 2005ம் ஆண்டு, எரிவாயுவின் விலையை உயர்த்துவதற்காக என முதலமைச்சர்கள் குழு அமைக்கப்பட்ட போதே அப்பிரச்சனையை நாங்கள் கையிலெடுத்தோம். இப்பிரச்சனை ஆம் ஆத்மி கட்சி கையிலெடுத்தால் அதனால் பாதிப்பில்லை. இடதுசாரியினர் இதனை கையிலெடுக்கிறபோது, அவர்கள் இதனை விடுவதில்லை, தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். ஒரு சில தனிநபர்களை குறி வைப்பது என்பதல்ல இது. இது கொள்கைப்பூர்வமான பிரச்சனையாகும். இக்கொள்கைகள் திரும்பப் பெறப்படுவதற்கான முயற்சிகளையே நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். எங்களது கொள்கைப்பூர்வமான அடிப்படை நிலைபாட்டில் செல்வாக்கு மிகுந்த வட்டத்திற்கு ஏற்புடைமை இல்லை. எனவே, அதனை புறக்கணித்திட விரும்புகிறார்கள். எனவே, இத்தகைய கொள்கைகளை நாங்கள் விமர்சிப்பது என்பது, இக்கொள்கைகளின் ஆணிவேரை கேள்விக்குள்ளாக்குவது என்பதாகும். ஆம் ஆத்மி கட்சியோ, இந்த அடிப்படைக் கொள்கைகள் எதனையும் கேள்விக்கு உள்ளாக்காமல், வெறும் பிரச்சனைகளை மட்டுமே கையிலெடுக்கின்றனர்.மத்தியதர வர்க்கத்தினரில் ஒரு பகுதியினர் தனியார்மயக் கொள்கையினை ஏற்றுக் கொள்கின்றனர். எனவே,ஊழல் என்பதனை நன்னெறிசார்ந்த விஷயமாக மட்டும் பார்த்து கேள்விக்கு உள்ளாக்கிடுவது என்ற நிலைபாடு அவர்களுக்கு சௌகரியமாக உள்ளது. தனியார்மயக் கொள்கைகளே இத்தகைய ஊழல்களைஎல்லாம் உருவாக்குகின்றன என்று நாங்கள் சொல்கிறோம். மேலும், தற்போதைய நவீன-தாராளமய முதலாளித்துவ அமைப்புமுறையில் ஊழல் என்பது மூலதனத்தை குவிப்பதற்கான ஒரு கருவியே ஆகும்.
தமிழில்: எம். கிரிஜா 

ஞாயிறு, 3 ஜூன், 2012

பாரதீய ஜனதா கட்சியின் இலட்சணம் கொடிகட்டிப் பறக்கிறது பாரீர்...!

              
        2009 பாராளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன், முதல் பாதி ஆட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாய் ஊழல் பேய்களெல்லாம் காங்கிரஸ் மற்றும் அதன் நேசக் கட்சிகளின் ஊழல் பெரிச்சாளிகளோடு கைகோர்த்து ஆட்டம் போட்டதையும் அதன் காரணமாக அந்த பெரிச்சாளிகள் எல்லாம் பொறி வைத்து பிடிக்கப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டதையும் இந்த நாடே பார்த்து வெட்கி தலை குனிந்தது. எதோ ஊழலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போலவும், தாங்கள் ஊழல் கரையற்ற புனிதமான கட்சியைப் போலவும், ஊழலை ஒழிப்பதற்காகவே தாங்கள் அவதாரம் எடுத்தது போலவும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் துள்ளிக்குதித்து வந்ததையும் இந்த நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்கள்.   
       இப்போது இரண்டாம் பாதி ஆட்டம் துவங்கி இருக்கிறது. இம்முறை காங்கிரஸ் - திமுகவைப் போல் ஊழலோடு ஓட்டிப் பிறந்த பாரதீய ஜனதா கட்சியின் ஊழல் பெரிச்சாளிகளும், ஊழல் பேய்களும் சேர்ந்தாடிய ஆட்டம். இவர்களை பொறி வைத்தெல்லாம் பிடிக்கவில்லை. ஊழல் குற்றம் புரிந்த பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் முறையான விசாரணை நடத்தப்பட்டு ஒவ்வொருவராக சிறைக்குள் தள்ளப்படுகிறார்கள்.
             ஒரு மாதத்திற்கு முன்பு தான், பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சியின் போது இந்திய இராணுவத்திற்கு ஆயுதம் வாங்கியதில் ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதற்காக, அன்றைய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பங்காரு இலட்சுமணன் மீதான வழக்கு விசாரணை முடிந்து நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பரிசாக அளிக்கப்பட்டு இப்போது தண்டனையை அனுபவித்து  வருகின்றார். 
         சென்ற ஆண்டு தான் சட்டவிரோத சுரங்க ஊழல் விவகாரத்தில் சிக்கி மத்திய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு, 25 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின் வெளியே வந்து இன்று தலைமையை மிரட்டிக்கொண்டிருக்கும், காங்கிரஸ் கட்சிக்கு        தாவுவதற்கு நாள் பார்த்துக் கொண்டிருக்கும்,  பாரதீய ஜனதா கட்சி ஆளும் கர்நாடக  மாநிலத்தின் பதவியிழந்த முதல்வர் எடியூரப்பா மீது இன்றும் சி. பி. ஐ. நீதிமன்றத்தில் விசாரணை  நடைபெற்றுக்கொண்டு வருகிறது.
           அதுமட்டுமல்ல   கர்நாடக மாநிலத்தில் சட்ட விரோத சுரங்க தொழிலில் ஜாம்பவான்களாக விளங்கிய ரெட்டி சகோதரர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி ஆகிய இருவரும் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக பாரதீய ஜனதா மந்திரிசபையில் மந்திரிகளாக பதவி வகித்தவர்கள். இவர்களும் சட்டவிரோத சுரங்க ஊழல் புகாரில் பதவி இழந்து கைது செய்யப்பட்டனர். இவர்களின்  மற்றொரு சகோதரரான சோமசேகர ரெட்டி தற்போது பாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
           ரெட்டி சகோதரர்களுக்கு சொந்தமான, ஓபுலாபுரம் சுரங்க நிறுவனத்துக்கு கர்நாடக மாநிலத்திலும் ஆந்திர மாநிலத்திலும் பல ஏக்கர் பரப்பளவுக்கு  நிலங்கள் உள்ளன. அங்கு நடைபெற்ற கனிம சுரங்க முறைகேடு தொடர்பாக, பா. ஜ. க. - வின் முன்னாள் மந்திரி  ஜனார்த்தன ரெட்டி கடந்த செப்டம்பர் மாதம் சி.பி.ஐ. - யினால் செய்யப்பட்டார்.
            அவர் மீதான வழக்கு விசாரணை ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் உள்ள சி.பி.ஐ. தனி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கடந்த மே மாதம் 11-ந்தேதி அன்று, சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி பொறுப்பு வகித்த முதல் கூடுதல் செசன்சு நீதிபதி டி.பட்டாபி ராமராவ் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கி, ரூ.5 லட்சம் சொந்த ஜாமீனிலும் அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனிலும் ஜனார்த்தன ரெட்டியை விடுவித்தார்.
             ஜனார்த்தன ரெட்டியை ஜாமீனில் விடுதலை செய்வதற்கு  சி.பி.ஐ நீதிபதி பட்டாபி ராமராவிடம்  ரூ.15 கோடி தரவேண்டும் என்று பேரம் பேசப்பட்டு, அதன்படி முதல் கட்டமாக ரூ.5  கோடி நீதிபதிக்கு வழங்கப்பட்டு, பின்  ஜாமீனில் விடுவிக்கப்பட்டதும் மீதி தொகையை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விஷயங்கள் அனைத்தும் சி. பி. ஐ - யின் காதுகளுக்கு எட்ட, அதிரடியாக இறங்கிய சி. பி. ஐ., இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை  நீதிபதியின் மகன் பெயரில் ஐதராபாத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து கைப்பற்றி நீதிபதியை கைது செய்தது. 
              இதேப் போல் 2009 - இல் இதே கர்நாடக மாநிலம், கோலார் தங்கவயல் நகரப் பகுதியைச் சேர்ந்த ஒரு  தொழிலதிபர் ஹுசேன் மொஹீன் பாரூக் என்பவர்  தனக்கு ஏற்பட்டிருந்த சொத்துப் பிரச்னையைத் தீர்த்து வைக்குமாறு, அந்தத் தொகுதி பா. ஜ. க  சட்டமன்ற உறுப்பினரான  ஒய்.சம்பங்கியை அணுகி இருக்கிறார். அதற்கு ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று எம்எல்ஏ ஒய்.சம்பங்கி கூசாமல் கேட்டாராம். இதுதொடர்பாக நடைபெற்ற தொலைபேசி உரையாடலை லோக் ஆயுக்த போலீஸாரிடம் பாரூக் அளித்திருக்கிறார். சட்டப்பேரவை விடுதியில் 2009-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதியில் சம்பங்கியிடம் தொகையை பாரூக் வழங்கியபோது போலீஸார் சம்பங்கியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு லோக் ஆயுக்த சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பாஜக எம்எல்ஏ - வான  ஒய். சம்பங்கி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, சம்பங்கிக்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டார். 
             அப்பப்பா.... தலை சுத்துதடா சாமீமீமீ... காங்கிரஸ் கட்சிக்காரனுங்க செய்த ஊழல்கள் எல்லாம் இராமாயணம் போல் நீண்டுகொண்டே போகிறது என்றால், இந்த பாரதீய ஜனதா கட்சிக்காரனுங்க செய்த ஊழல்கள் எல்லாம் மகாபாரதம் போல் நீண்டுகொண்டே போகிறதே...! 

புதன், 28 மார்ச், 2012

போப்போர்ஸ் பீரங்கி ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல், ஆயுத பேர ஊழல் - இன்றும் பணம் ராணுவம் வரை பாய்கிறது...!











                  அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் 1980 - களில்  நடைபெற்ற போப்போர்ஸ் பீரங்கி ஊழல்...  ராஜீவ் காந்தியும் அவரது குடும்பம் மற்றும் இத்தாலிய நாட்டு தொழிலதிபர் கோட்ரோச்சி சம்பந்தப்பட்ட ஊழல்... இன்றைக்கு அந்த ஊழலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டனையில்லாமல் தப்பித்து விட்டார்கள். இன்று போப்போர்ஸ் பீரங்கி ஊழல் விசாரணை என்பது புதைக்குழிக்குள்  போய்விட்டது. மக்களும் அதை மறந்துவிட்டார்கள். 
                    அடுத்து  1991  - ஆம் ஆண்டில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியாட்சியின் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தான் நாட்டிற்கும் இடையே நடைபெற்ற 
கார்கில் போரில் மரணமடைந்த நமது நாட்டுப் படைவீரர்களை அடக்கம் செய்வதற்கு அன்றைய பாஜக அரசு சவப்பெட்டிகளை அமெரிக்காவிலிருந்து வரவழைத்தது. ( நம் நாட்டில் சவப்பெட்டி செய்வதற்கு ஆளில்லையாம் ) சாதாரணமாக ஒரு பெட்டிக்கு ஆகிற விலையை விட பலமடங்கு தொகையை கொடுத்து இறக்குமதி செய்தது. சவப்பெட்டியிலேயும் பல கோடி ஊழல். சவப்பெட்டியிலேயும், சுடுகாட்டுக்கூரையிலேயும் ஊழல் செய்கிற ஆட்சியாளர்களைத் தான் நமக்கு கிடைத்த ஆட்சியாளர்கள். அவங்க வெட்கப்படுகிறார்களோ இல்லையோ நாம் வெட்கப்படவேண்டும். இப்போது அந்த சவப்பெட்டி ஊழல் விசாரணை அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. மக்களும் அதை மறந்துவிட்டார்கள்.
                 அதே பாஜக கூட்டணியில் ஆட்சிக் காலத்தில் இன்னொரு மெகா ஊழல்.... அது ஆயுத பேர ஊழல்...  அந்த ஆட்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த சமதா கட்சியின் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டசின் ''கேர்ள் பிரெண்ட்'' ( GIRL FRIEND ) ஜெயா ஜெட்லி என்ற அம்மையார் பெர்னாண்டசின் படுக்கையறையில் ஆயுத வியாபாரியிடம் கட்டுக்கட்டாக பணம் பெற்றதை நாமெல்லோரும் தொலைக்காட்சியில் பார்த்தோம்.  அந்த ஊழல் விசாரணையும் காற்றோட போயாச்சி... மக்களும் அதையும் மறந்துவிட்டார்கள்...
                  இப்போது மன்மோகன் சிங் அலங்கோல ஆட்சியில் நடைபெறும் ஊழல் அலங்கார அணிவகுப்பில் இன்னொன்றும் புறப்பட்டு கிளம்பியுள்ளது.  இது இந்திய இராணுவத்தில் இன்னொரு புதுவகையான ஊழல். இது இராணுவ  அணிவகுப்பில்  வைக்கப்பட்ட கண்ணிவெடி போன்றது. இதற்காக தேசமே தலை குனிகிறது.
                  இராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனப் பிரதிநிதி தனக்கு ரூ. 14 கோடி இலஞ்சம் தர முன் வந்ததாக இந்திய இராணுவத் தலைமைத் தளபதியே வெளிப்படையாக பத்திரிகை ஒன்றிற்கு  அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளதைக் கண்டு நாடே அதிர்ந்துள்ளது. 
                இராணுவம் நிர்ணயித்துள்ள தரத்தை விட குறைவான தரத்தில் உள்ள 600 வாகனங்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்தால் ரூ. 14 கோடியைத் தருவதாக அந்த குறிப்பிட்ட நபர் தன்னிடம் தெரிவித்ததாகவும்,   இராணுவத் தலைமைத் தளபதியிடமே ஒரு நபர் வந்து இலஞ்சம் அளிப்பது தொடர்பாக பேச்சு நடத்துகிறார் என்றால்  அவருக்கு எந்த அளவுக்கு துணிச்சல் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் தனது  பேட்டியில் இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் வி. கே. சிங் தெரிவித்திருக்கிறார்.  இதற்கு முன்பிருந்தவர்கள் இப்படித்தான் அவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டார்கள் என்றும், தனக்குப் பிறகு வருபவர்களும்  பணம் பெற்றுக் கொள்வார்கள் என்றும் அந்த நபர் தன்னிடம் தெரிவித்ததாகவும்  ஜெனரல் வி. கே. சிங் குறிப்பிட்டிருக்கிறார்.
                இது மட்டுமல்ல இன்னொரு அதிர்ச்சியான தகவலையும் கூறியிருந்தார். இலஞ்சம் கொடுக்க முன்வந்த இந்த விஷயத்தை 2010 - ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே மத்திய பாதுகாப்பு அமைச்சருக்கு சொல்லிவிட்டேன் என்ற தகவலையும் வெளியிட்டிருந்தார். 
              நமக்கு என்ன கேள்வி எழுகிறது என்றால்...? 
           1 . இத்தனை மாதங்களாக பாதுகாப்பு அமைச்சரோ அல்லது மத்திய அரசோ இலஞ்சம் கொடுக்க வந்த நபர் மீது ஏன் விசாரணை நடத்த உத்திரவிடவில்லை...? 
      2 . தளபதி  இந்த தகவலை என்னிடம் சொல்லும் போது அதைக்கேட்டு அதிர்ந்து போனேன்... உறைந்து போனேன்... என்றெல்லாம் சொல்லும் பாதுகாப்பு அமைச்சர் நியாயமாக - உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கியிருக்க வேண்டாமா...?   
          3   . இத்தனை மாதங்கள் கழித்து இப்போது இந்த விஷயத்தை வெளியிட்ட தலைமைத் தளபதி ஏன் முன்பே வெளியிடவில்லை...?  தனது வயது பிரச்சனையில் அரசு தனக்கு சாதகமாக நடந்துகொள்ளவில்லை என்பதால் இப்போது இந்த விஷயத்தை வெளியாக்கிவிட்டாரோ..?
            4 .  பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட ராணுவ அதிகாரி லெப். ஜெனரல் தேஜீந்தர் சிங் தான் தனக்கு 14 கோடி ரூபாய் இலஞ்சம் கொடுக்க வந்தவர் என்று அப்போதே தெரிந்திருந்தும் மத்திய அரசும், பாதுக்காப்புத்துறை அமைச்சரும், தலைமைத் தளபதியும் இன்று வரை அவர் மீது விசாரணையோ அல்லது நடவடிக்கையோ எடுக்காததேன்...? 
            இப்படியெல்லாம் கேள்விகள் மக்களுக்கு எழுகின்றன. மத்திய அரசு தான் பதில் சொல்லவேண்டும்.

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

ஊழல் இல்லா இந்தியாவை உருவாக்குவோம்..!

                                                                  
ஊழல் புற்றுநோயை                      
வேரறுக்க போராடுவோம்!         
தோழர் என்.சங்கரய்யா அழைப்பு
                                                                 
                                                                    
                                                                  

              அனைத்துப் பகுதி மக்களும் ஒன்று திரண்டு போராடி ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா அழைப்பு விடுத்தார்.

            நாட்டின் 65வது சுதந்திரதினமான ஆகஸ்ட் 15 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் “ஊழல் எதிர்ப்பு, பொதுவாழ்வில் தூய்மை, மக்கள் நலனுக்கே முன்னுரிமை” என்ற முழக்கத்தை முன்வைத்து சுதந்திரதின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய, கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக்குழு தலைவர் என். சங்கரய்யா இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். அவரது உரையின் முக்கிய பகுதிகள் வருமாறு:

               ''இன்று ஊழல் என்ற புற்றுநோய் நாட்டை அழித்துக் கொண்டிருக்கிறது. இடதுசாரிகள் ஊழலுக்கு எதிராக இயக்கம் நடத்தி வருகிறார்கள். அரசியல் வேறுபாட்டைக் கடந்து உழைப்பாளிகள், விவசாயிகள், வியாபாரிகள், நடுத்தர வர்க்கத்தினர் என மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும். அப்போதுதான் ஊழலை ஒழிக்க முடியும்.
              ஊழலுக்கு எதிரான மக்களின் உணர்வுகளை சில சக்திகள் திசைதிருப்ப முயற்சி செய்கின்றன. அவர்களுடைய அரசியலுக்கு நாட்டுமக்கள் பலியாகக்கூடாது. ஊழலை ஒழிக்கும் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டா, இல்லையா என்ற சர்ச்சை எழுப்பப்படுகிறது. 120 கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற நாடாளுமன்றம்தான் சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் கொண்டது. நாடாளுமன்றம் சரியான - ஊழலை ஒழிக்கக்கூடிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
            பிரதமர் உள்ளிட்ட அனைவரையும் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண் டும். அவ்வாறு செய்தால் உறுதியற்ற நிலை உருவாகும் என்பது தவறு. சட்டத்தில் யாரும் விதிவிலக்கானவர்கள் அல்ல. தலைவர்களையும், அதிகாரிகளையும் இச்சட்டத்திற்குள் கொண்டு வந்தால் தான் ஒரு அச்ச உணர்வு இருக்கும்.
           நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளுக்காகப் பணம் கொடுக்கப்பட்டது குறித்து தில்லி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அவர்கள் அரைமனதோடு இந்த வழக்கை விசாரித்தனர் என்று உச்சநீதிமன்றம் விமர்சித் திருப்பதை நினைவுப்படுத்துகிறேன்''


 தோழர். என்.சங்கரய்யா  அவர்களை பற்றி...                             

                        தோழர். சங்கரய்யா அவர்கள் ஊழலை ஒழிப்பதற்காக திடீரென்று  அவதாரம் எடுத்த பரமாத்தமா கிடையாது. இவர்  ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். இந்த தேசத்தின் விடுதலைக்காக கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து போராடிய வீரம் செறிந்த போராளி. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாமலேயே, போராடியதாக பொய்சொல்லி ''தியாகி பென்ஷன்'' வாங்கும் காங்கிரஸ்காரர்கள் மத்தியில் , ''தேசத்தின் விடுதலைக்காக போராடியது என்பது எங்களது கடமை.  எங்கள் கடமைக்கு - வீரம் செறிந்த போராட்டத்திற்கு விலை பேசவேண்டாம் என்று  கூறி அரசு தரும் தியாகி பென்ஷன்- ஐ  இன்று வரை  அரசிடமிருந்து வாங்காத  வாங்க மறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களில் இவரும் ஒருவர் என்பது  நமக்கெல்லாம் பெருமையளிக்கக் கூடிய விஷயம் ஆகும்.
               இவரும்  இவரது கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியும் இந்தியாவில் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ஊழலுக்கு எதிரான இயக்கங்களை நடத்தி வருகின்றனர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகவே பிரதமரையும், நீதித் துறையும் இணைந்த ''லோக்பால்'' மசோதா தேவை என்று தொடர்ந்து போராடிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவராக தோழர். என். சங்கரய்யா பணி  புரிந்து  வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

ஊழலை ஒழிப்பதற்கு அரசிடம் மந்திரக்கோல் இல்லை - பிரதமர் பதவிக்கே லாயக்கில்லாதவரின் பொறுப்பற்ற பேச்சு...!

               சுதந்திரம் பெற்று நேரு காலத்திலிருந்து இன்றைக்கு மன்மோகன் சிங் காலம் வரை காங்கிரஸ்காரன்களாக இருந்தாலும் சரி - பி.ஜே.பி- காரன்களாக இருந்தாலும் சரி ஒருவரையொருவர் ஊழலில் சளைத்தவர்கள் இல்லை என்பதை நாடே அறியும்.  நாடு சுதந்திரம் பெற்ற பிறகு,  1948 - லிருந்து  பல்வேறு ஊழல்களை இந்த நாடு  சந்தித்து வருகிறது என்பது தான் மறைக்க முடியாத உண்மை. 2009 - ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, உலக அரங்கில் இந்தியா தலை குனிந்து நிற்கும்படி, வகை வகையான ஊழல்களை அரங்கேற்றி வருவதை இந்த நாடே அறியும். 2 G ஸ்பெக்ட்ரம்  ஊழல்,  ஆதர்ஷ் வீடு கட்டுவதில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டில் ஊழல், பிரச்சார் பாரதியில் ஊழல் என புற்றிலிருந்து பாம்புகள் வெளியே வருவது போல் வந்துகொண்டிருக்கின்றன. பிரதமரும், அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் அந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். பல்வேறு  காங்கிரஸ் - பா. ஜ. க. கட்சியினர் ஆட்சி செய்யும் மாநிலங்களில் முதலமைச்சர்களும் மாநில அமைச்சர்களும் ஊழல்  செய்து சிக்கி இருக்கிறார்கள். இவைகளை எல்லாம் பார்த்து   நாடே கொந்தளிப்பில் இருக்கிறது. 
                    ஆனால் பிரதமரோ எது நடந்தாலும் வாயையே திறக்கமாட்டேன் என்கிறார். அப்படியே திறந்தாலும் '' எனக்கு எதுவும் தெரியாது'' என்று சொல்வதற்கு மட்டும் வாயை திறக்கிறார். எதுவும் தெரியாமல் நமக்கு ஒரு பிரதமர் எதற்கு..? என்பது தான் நம்முடையக் கேள்வியாகும். ஊழல் செய்து கைதானவர்களேல்லாம், இந்த  ஊழல் பற்றி பிரதமருக்கும் தெரியும் என்று ஒரே மாதிரி பதிலைத் தான் சொல்கிறார்கள்.
                  அப்படியென்றால் பிரதமர் ஊழல் செய்யட்டும் என்று வேடிக்கைப் பார்த்திருந்தாரா..? என்பதும் நமது கேள்வியாகும். அதுமட்டுமல்ல ஒரு அமைச்சர் தவறு செய்கிறார் என்றால் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை தானே அந்த பொறுப்பை ஏற்கவேண்டும். பிரதமருக்கும் ''இணைந்த பொறுப்பு'' தானே( Joint responsibility ) உண்டு என்று தானே இந்திய அரசியல் சாசனமும் சொல்கிறது. எதுவும் தெரியாத பிரதமருக்கு இதுவும் தெரியாதா..? என்பது தான்
நமக்குத் தெரியவில்லை. 
                  இதற்கெல்லாம் பொறுப்பேற்று  பதவி விலகி வேண்டிய பிரதமர்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என ஊழலுக்கெதிரான    பல்வேறு இயக்கங்கள் நாடு  முழுதும் நடைபெற்றுவரும் சூழ்நிலையில், நேற்று சுதந்திரதின விழாவில் மன்மோகன் சிங் பேசும் போது,   ''ஊழலை ஒழிப்பதற்கு  அரசிடம்       மந்திரக்கோல் இல்லை''    என்று திருவாய்  மலர்ந்திருக்கிறார். ஒரு பொறுப்பான பதவியிலிருப்பவரின் பொறுப்பான பேச்சா இது என்று சந்தேகமாய் இருக்கிறது.
                நாடு முழுதும் இவ்வளவு ஊழல்கள் நடந்த வண்ணம் இருக்கிறது.  அதை தடுப்பதற்கு எந்த முயற்சியும்  - நடவடிக்கையும் எடுக்காமல், ஊழலை ஒழிப்பதற்கு அரசிடம் மந்திரக்கோல் இல்லை என்று சொல்வது மன்மோகன் சிங்  பிரதமர் பதவிக்கே லாயக்கில்லாதவர் என்று  தான் பொருள்.    
               வெளிப்படையான அரசு நிர்வாகமும் - நிர்வாக நடவடிக்கைகளும் இருந்தால் போதும்  ஊழலை ஒழித்துவிட முடியும்... இதைச் செய்வாரா மன்மோகன் சிங்..? 

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

வேகவேகமான தனியார்மயமே ஊழலை ஊதிப் பெருக்குகிறது..

           நவீன தாராளமயக் கொள்கை கோலோச்சும் சூழலில், ஊழல்கள் மேலும் மேலும் பெருகுவதைத் தடுக்க, ஒரு தீர்மானகரமான மக்கள் இயக்கத்தின் பின்னணி கொண்ட ஊழல் தடுப்புச் சட்டம் அவசியம் என்று பிரபல பொருளாதார அறிஞர் பேராசிரியர் பிரபாத்    
                                                      
பட்நாயக் கூறினார்.                       
             சென்னையில் வெள்ளியன்று நடைபெற்ற தோழர் உ.ரா.வரதராசன் நினைவு சொற்பொழிவில் பங்கேற்று “நவீன தாராளமயமும், ஊழலும்” என்ற பொருளில் அவர் உரையாற்றினார். இந்திய சமூக விஞ்ஞானக் கழகம், இந்த சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
            நவீன தாராளமயக் கொள்கைகள் அமலானால், ஊழல்களில் இருந்து விடுதலை கிடைத்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால், ஊழலுக்கான களம் விரிவடைந்துள்ளது என்பதே உண்மை. பொதுச்சொத்துக்கள் எல்லாம் தீவிரமாக தனியார்மயமாக்கப்பட்டு வரும் நிலையில், லஞ்சம் - ஊழலுக்கான வாய்ப் புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வெறுமனே சட்டம் இயற்றுவது மட்டும் போதுமானதல்ல என்று பிர பாத் பட்நாயக் தனது உரையின்போது குறிப்பிட்டார்.
            பொதுச் சொத்துக்களை வேகவேகமாக தனியார்மயமாக்கும் தன்மை கொண்ட நவீன தாராளமயம், சொத்துடைமை உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பெருமளவிற்கு மூலதனக் குவிப்பை தூண்டி விடுகிறது, இதன் மூலம் மிக மோசமான ஊழல்களுக்கு காரணியாகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
              2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், சுரங்க ஊழல் போன்ற பெரும் கொள்ளை நடந்த ஊழல்களில், லஞ்சம் என்பது நேரடியாக பணம் கொடுத்தது அல்ல; மாறாக திட்டமிட்ட முறையில் நிதியாதாரங்களை மடைமாற்றி, தனியார் மூலதனக் குவிப்பை அதிகப்படுத்தி, மக்களுக்கு இழப்பு ஏற்படச் செய்ததாகும். அரசின் கருவூலத்திற்கு பதிலாக குறிப்பிட்ட தனிநபர்கள் பலன் அடைந்ததாகும் என்று பிர பாத் பட்நாயக் விளக்கினார்.
             “பெருங்கொள்ளை நடந்த இந்த ஊழல்களில் சிக்கியுள்ள அரசியல் வர்க்கமானது, ஜனநாயகத்திற்கு முற்றிலும் ஆபத் தானது” என்றும் அவர் எச்சரித்தார்.
            எனவே, ஊழலுக்கு எதிரான சட்டமானது, மாறு பட்ட தன்மை கொண்டது மட்டுமின்றி, கோபாவேச மிக்க மக்கள் இயக்கத்தின் ஆதரவினையும் பெற்றதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
          மேற்கூறியதைப் போலவே பொதுச் சொத்துக்களை தனியார்மயம் ஆக்கக் கூடாது என் பது மற்றொரு முக்கிய அம்சம் ஆகும் என்று குறிப்பிட்ட அவர், விரைவில் தீர்ந்து போகக் கூடிய வளங்கள் அனைத்தும் அரசுக்கே சொந்தமானதாகவும், அரசாலேயே இயக்கப் படக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றும், நிலம் போன்ற பற்றாக்குறை வளங் களைக் கையாள்வதில் அரசுக்கே முதன்மை உரிமை இருக்க வேண்டும் என்றும் கூறினார். அப்போதுதான், இந்த வளங்களை, ஊக வணிகத்தில் ஈடுபடுத்துவதைத் தடுக்க முடியும் என்றும் கூறினார்.
              ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் மக்களுக்கு மையமான பங்கு இருப்பதை இடதுசாரிகளாலேயே உறுதிப்படுத்த முடியும் என்று கூறிய அவர், நடுத்தர வர்க்க மக்கள் ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் மனப்போக்கு உருவாக்கப்படுகிறது என சுட்டிக் காட்டினார். நடுத்தர வர்க்க மக்களை தனிமைப்படுத்துவதன் மூலம், ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ஜனநாயகத்திற்கு எதிரான போராட டமாக சித்தரிக்க முயற்சி நடக் கிறது என்றும் அவர் எச்சரித்தார்.

சனி, 6 ஆகஸ்ட், 2011

அடுக்கடுக்கான ஊழல்கள் - காங்கிரஸ் கட்சியும், பா ஜ க-வும் தேசத்தின் அவமானச் சின்னங்கள்.

  நாடே வெட்கித்  தலைகுனிகிறது..   
                  சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா  கட்சியும் தயங்காமல் ஊழல் செய்யும் கட்சிகள் என்பது தான் இந்த தேசத்தின் கடந்த கால வரலாறு. ஊழல் செய்வதில் இந்த இரு கட்சிகளும் சளைத்தவர்கள் அல்ல.
                  சமீபத்தில் தான் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தில் அந்தக் கட்சியுடைய முதலமைச்சர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வெளியேற்றப்பட்டார். அந்த சாக்கடை ஈரமே காயவில்லை, அதற்குள் இன்னொரு ஊழல் சாக்கடை நாற்றமெடுக்க ஆரப்பித்துள்ளது.  காங்கிரஸ் ஆட்சி செய்யும் டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் இப்போது மிகப்பெரிய ஊழல் வலையில் சிக்கியுள்ளார். வழக்கம் போல், நம் ''ஒரு மண்ணாங்கட்டியும்  தெரியாத'' பிரதமருக்கும் இந்த ஊழலில் பங்கிருப்பதாக ஊடகங்கள் ஏற்கனவே சொல்லி வருகின்றன.  
              2010 ஆம் ஆண்டு புதுதில்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப் பட்டன. போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே,  மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடத்தப்பட்டிருப்பதாக    புகார்கள்  எழுந்தன. இதையடுத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடி பல நூறு கோடிகளை விழுங்கியிருக்கிறார் என்ற குற்றத்திற்காக  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
              இந்த  சூழ்நிலையில், இந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு நடத்திய மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  போட்டி ஏற்பாடுகளில் மிகப் பெரிய அளவில் முறை கேடுகளும், வீண் செலவுகளும் செய்யப்பட்டுள்ளதுடன், ஒப்பந்தங்கள் வழங்குவதில் வேண்டப்பட்டவர்களுக்கு சலுகைகளும் காட்டப்பட்டுள்ளதாகவும்  சுமார் 743 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது என்பது ஒரு அதிர்ச்சி தரும் தகவலாகும். 
அதே போல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கிய விவரங்கள் : 

பிரதமருக்கும் மிகப்பெரிய பங்கு : அப்போதைய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில்  தத்தின் கடும் எதிர்ப்புகளையும், ஆட்சேபணைகளையும் மீறி காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக சுரேஷ் கல்மாடி நியமிக்கப்பட்டார். பல நூறு கோடி மக்கள் பணத்தை விழுங்கிவிட்டு, தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக தனக்கு மறதி நோய்  இருப்பதாக கூசாமல் பொய் சொல்லும் இந்த கயவனை,  பிரதமர் அலுவலகப் பரிந்துரையின் பேரிலேயே 2004 ஆம் ஆண்டு  இப்பதவிக்கு நியமித்திருக்கிறார்கள். அவர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கு பிரதமர் அலுவலகம்தான் பொறுப்பு என்பது இப்போது வெட்ட வெளிச்சம் ஆகிறது.    
ஷீலா தீட்சித்தின் தேவையற்ற செலவுகள் : காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக, தெரு விளக்குகள் அமைக்கப்பட்டதில் சுமார் ரூ.101 கோடி அளவுக்கு வீண் செலவுகள் செய்யப்பட்டுள்ளது.  ஒப்பந்தங்கள் தவறானவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.  ரூ.5000க்கு தரமற்ற விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஒரு விளக்கிற்கு ரூ.25,000 வீதம் அரசுப் பணம் முறைகேடாக செலவிடப்பட்டுள்ளது. விளையாட்டு அரங்கு பகுதிகளில் உள்ள சாலைகளை அழகுபடுத்துவது, உள்கட்டமைப்பு வசதிகள், போன்றவற்றிற்கான ஒப்பந்தங்கள் தவறானவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தாழ்தள பேருந்துகள் வாங்கியது, காமன்வெல்த் நகரம், உணவு, நாற்காலி பெறப்பட்டது வரை அனைத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளன. இவற்றுக்கு எல்லாம் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தே பொறுப்பு என்கிறது அறிக்கை.
இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்கிற முகமூடியுடன் உலாவரும் ஷீலா தீட்சித் நியாயமான முறையில் பதவி விலகவேண்டும் என்பதையே நாடு எதிர்பார்க்கிறது.   

சனி, 16 ஜூலை, 2011

இதைப் படித்தும் உங்களுக்கு கோபம் வரவில்லை என்றால் ..?

                தொட்டுத் தொடரும் பாரம்பரியமாக காங்கிரசும் ஊழலும் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. குறுகிய காலமாக இருந்தாலும் ஐ.பி.எல்.,ஏலம் முறைகேடு, ஸ்பெக்ட்ரம் ஊழல், எஸ்-பாண்ட் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், கே.ஜி ஆற்றுப்படுகை ஊழல் என மெகா சாதனையை நிகழ்த்தியுள்ளது.
               கிராமப்புற தொலைபேசி சேவைக்காக மத்திய அரசு, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி ரிலையன்ஸ் நிறுவனம் கிராமப்புற சேவையை செய்யாமல் ஒப்பந்த விதிமுறைகளை மீறி பாதியில் நிறுத்திக் கொண்டது. இதையடுத்து மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.650 கோடி அபராதம் விதித்தது. இந்த அபராதத் தொகையை சட்டத்துறையின் உதவியுடன் தொலைத்தொடர்புத்துறை வசூலிக்க வேண்டும். ஆனால் மத்திய தகவல்தொடர்புத்துறை அமைச் சர் கபில்சிபல் 650 கோடி ரூபாய் அபராதத்தை ரூ.5 கோடியாக குறைத்து தனது விசுவாசத்தை காட்டியுள்ளார். அதன் மூலம் அரசுக்கு ரூ.645 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு சேர வேண்டிய பணத்தை ரிலையன்ஸூக்கு தூக்கிக் கொடுத்ததன் உள் நோக்கம் என்ன? அதில் கபில்சிபலுக்கு ஏன் அவ்வளவு அக்கறை? அரசு கஜானாவில் சேரவேண்டிய பணம் ரிலையன்ஸூக்கு மட்டும் திருப்பிவிடப்பட்டதா? அல்லது கபில்சிபல் கணக்கிற்கும் திருப்பி விடப்பட்டிருக்கிறதா? என்பதுள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
                 ஆனால் இவ்வளவு அப்பட்டமாக நடந்துள்ள மோசடியில் நீதிமன்றம் “இவ்வழக்கில் தலையிட விரும்பவில்லை எனவும், உத்தரவு ஏதும் பிறப்பிக்க விரும்பவில்லை” எனவும் கூறியிருக் கிறது. இப்படி நீதிமன்றமே ரிலையன்ஸ் விஷ யத்தில் ஒதுங்கிக் கொள்வது சரியா? சாமானி யனுக்கு ஒரு நீதி, பெரும் முதலாளிக்கு ஒரு நீதியா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் ஏட்டில் மட்டும்தானா? என்ற கேள்வி எழுகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் இவ்வளவு தூரம் அம்பலப்படுத்தியதில் உச்ச நீதிமன்றத்திற்கும் முக்கிய பங்குண்டு. ஸ்பெக்ட் ரம் வழக்கில் உச்சநீதிமன்றம் எடுத்த நிலையை ரிலையன்ஸ் நடத்தி வரும் மோசடி விஷயங்களி லும் எடுத்தால் மத்திய அரசின் முக்கிய அமைச் சர்கள் மட்டுமல்ல; பிரதமர் கூட தப்புவது கடினமே!
              ஏற்கனவே வெளிநாட்டு அழைப்புகளை லோக்கல் அழைப்புகளாக மாற்றி ரிலையன்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது. அப்போதும் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
             அதே போல் கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு அரங்கேற்றப்பட்டது. ரிலையன்ஸூக்காக அரசின் விதிமுறைகளை ஏன் இவ்வளவு மோசமாக வளைக்கிறீர்கள் என்று தணிக்கைத் துறை கூட கேள்வி எழுப்பியிருந்தது.
           தொழிலதிபர்களும் அரசும் சேர்ந்து தேசத்தின் சொத்தை கொள்ளையடிப்பதை வலுவான மக்கள் இயக்கத்தின் மூலமே தடுக்க முடியும்.

புதன், 15 ஜூன், 2011

மற்றுமொரு ஊழல் பூதம் வெளியே கிளம்பியிருக்கிறது - மன்மோகன் சிங் ஆட்சியின் லட்சணம் பாரீர்...!

     மன்மோகன் சிங் அரசின் செயல் பாட்டால் இந்தியாவின் பெருமுதலாளியான முகேஷ் அம்பானியின்  நிறுவனம் ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் கிடைத்ததாகவும், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறை கூறியுள்ளது.

           கிருஷ்ணா - கோதாவரி நதிப்படுகையில் சமையல் எரிவாயு எடுக்கும் பணியை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்படைத்தது. இந்தப் பணியை பொதுத்துறை நிறுவனங்களே திறம்படச் செய்ய முடியும் என்றபோதும் அம்பானிக்கு நாட்டின் இயற்கை வளத்தை கொள்ளையடிக்க அனுமதி கொடுத்தது மன் மோகன் சிங் அரசு.

          இந்த தேசத்தின் சொத்தை பங்குபோட்டுக் கொள்வதில்  முகேஷ் அம்பானிக்கும், அனில் அம்பானிக்கும் தகராறு ஏற்பட்டபோது, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப. சிதம்பரம் இருவருமே  நேரடியாக கட்டப் பஞ்சாயத்து செய்தார்கள் என்பது நாம் மறந்திருக்க முடியாது.  அதன்  பிறகு தான் அவர்களுக்குள்  சமரசம் ஏற்பட்டது.

             கிருஷ்ணா - கோதாவரி நதிப்படுகையில் உற்பத்திப் பொருளை பகிர்ந்து கொள்வது தொடர்பான உடன்பாடு முழுக்க முழுக்க ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்தது என்றும், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் மற்றும் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பு குறித்து கொஞ்சம் கூட கவலைப்படவில்லை என்றும் மத்திய தணிக்கை மற்றும் கணக்கு அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

      அரசுக்கு ஏற்படும் இழப்பு குறித்து பிரதமர் அமைச்சகத்திற்கு தொடர்ச்சியாக பலமுறை எச்சரிக்கை செய்து கடிதம் எழுதினேன். ஆனால் பிரதமர் அமைச்சகம் இது குறித்து கொஞ்சம் கூட கவலைப்படவில்லை என்று மத்திய அரசின் முன்னாள் வருவாய்த்துறை செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா குறிப்பிட்டுள்ளார்.

    முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஆர்ஐஎல் மற்றும் கெய்ரின் நிறுவனத்திற்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் உடன்பாடு அமைந்தது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

         ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமருக்கு தெரிந்து தான் எல்லாம் நடந்தது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா திரும்பத்திரும்ப கூறி வருகிறார். இப்போது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அநியாயமாக ஆதாயம் கிடைக்கும் வகையில் அமைந்த உடன்பாடு குறித்து பிரதமர் அமைச்சகம் கண்டுகொள்ளாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

      தேசத்தை உலுக்கி வரும் தொடர் ஊழல்களுக்கு மத்தியில் இந்த முறைகேடும் வெளியாகியுள்ளது. முழுமையாக விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

நன்றி : தீக்கதிர்  ( அரசியல் விழிப்புணர்வு பெற ''தீக்கதிர்'' நாளேட்டினை படியுங்கள் )

சனி, 19 மார்ச், 2011

எதுவுமே தெரியாமல் வீணாக ஒரு பிரதமர் எதற்கு ?

மன்மோகன் சிங் தலைமையிலான இரண்டாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2009 - இல் பதவியேற்ற நாளிலிருந்து அடுக்கடுக்காய் ஊழல் குற்றங்கள் பயமில்லாமலும் கூச்சமில்லாமலும் நடந்த வண்ணம் இருக்கிறது.
1. காமன் வெல்த் விளையாட்டு ஊழல்
2. இரண்டாம் அலைக்கற்றை ஊழல்
3. மும்பை ஆதர்ஷ் வீட்டு ஊழல்
4. பிரச்சார் பாரதி ஊழல்
5. எஸ்-பேண்ட் அலைக்கற்றை ஊழல்
6. ஐ. பி. எல். கிரிக்கெட் ஊழல்
7. மருத்துவ கவுன்சில் தலைவர் ஊழல்
8. பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில்
எம்.பி -க்களுக்கு லஞ்சம் - ஊழல்
என ஊழலின் அணிவகுப்புகள் தான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் - தி . மு.
கூட்டணி அரசின் சாதனைகளாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்தேறிவருகின்றன.
இந்த ஊழல்களைப் பற்றி பாராளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரி கட்சிகளும் மற்ற எதிர் கட்சிகளும் பிரதமரிடம் கேள்வியெழுப்பினால், அதற்கு பிரதமரிடமிருந்து வரும் ஒரே பதில் " எனக்கு எதுவும் தெரியாது " என்பதுதான். எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்வதற்கு வீணாக ஒரு பிரதமர் எதற்கு ?
ஒரு பிரதமருக்கு என்னதான் வேலை ? அப்படி இந்த விஷயங்களை
எல்லாம் தெரிந்துகொள்ளாமல் என்ன வேலை செய்துகொன்டிருக்கிறார் ? அல்லது இந்தியப் பிரதமர் இந்தியாவிற்கு வேலை செய்யாமல் வேறு யாருக்கு வேலை செய்கிறார் ? யாரிடம் எஜமான விசுவாசத்துடன் வேலை செய்கிறார் ? என்பது தான் நமது கேள்விகள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் யாருக்கு வேலை செய்கிறார் என்றால்.. அமெரிக்காவிற்கு எஜமான விசுவாசத்தோடு வேலை செய்கிறார் என்பது தான் துரதுஷ்ட்டமான உண்மை. இந்த நாட்டை விற்பது.. பொதுத்துறைகளை விற்பது.. பங்குகளை விற்பது.. போன்ற புரோக்கர் வேலையைத்தான் செய்கிறாரெத் தவிர, மக்களுக்களை பற்றி துளிகூட சிந்திப்பது இல்லை. நம் தேசத்தின் மீது அக்கறை இல்லாத பிரதமர்.

சனி, 5 மார்ச், 2011

ஊழலின் மொத்த உருவம் மன்மோகன் சிங்



மத்திய ஊழல் தடுப்பு ஆணையராக (cvc) பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டது முறைகேடானது என்று உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்ததுமட்டுமல்லாது, பிப்ரவரி 3 ஆம் தேதியன்று தாமஸ் நியமனத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் ஊழல் பேர்வழிகளை மட்டுமே தனது கூட்டாளிகளாக வைத்துக்கொள்ளும் மன்மோகன் சிங்கின் தலையில் மேலும் ஒரு குட்டு வைத்துள்ளது. இரண்டாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் லட்சணம் இது தான்.
கடந்த மே 2009-ல் தில்லுமுல்லுகள் செய்து ஆட்சிப்பொறுப்பேற்ற நாளிலிருந்து தறுதலைத்தனமான, தான்தோன்றித்தனமான ஒழுக்கக்கேடான மன்மோகன்சிங்கின் ஆட்சியில் ஊழலின் அணிவகுப்பு தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவரும் வெட்கமில்லாமல் நடமாடிக்கொண்டிருக்கிறார். ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஊழல் தடுப்பு ஆணையராக நியமிக்கக்கூடாது என்பது சிறு குழந்தைக்குக்கூடத் தெரியும். ஆனால் மன்மோகன்சிங் - . சிதம்பரம் கூட்டாளிகளுக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது என்பது தெரியவில்லை.
கேரள உணவுத்துறை செயலராக இருந்தபோது பாமாயில் இறக்குமதியில் ஊழல் செய்து ஊழல் வழக்கில் முக்கிய நபராக குற்றம் சாட்டப்பட்ட பி. ஜே. தாமஸ் மத்திய ஊழல் தடுப்பு ஆணையராக மன்மோகன்சிங் தலைமையிலான உயர்மட்டக்குழு பரிந்துரை செய்த போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால்
அதையும் மீறி நியமித்தது என்பது இந்த தேசத்திற்கு செய்த அவமானம். அதுமட்டுமல்லாமல், ஒரு ஊழல் குற்றவாளிக்கு பதவிப்பிரமாணம் செய்யவைத்ததன் மூலம் குடியரசுத்தலைவரையும் அவமரியாதை செய்திருக்கிறார்கள். பிரதமர் இது ஏதோ தெரியாமல் செய்துவிட்ட தவறுபோல் இந்த நிகழ்வுகளுக்கு தான் பொறுப்பேற்பதாக வெறும் வார்த்தையில் சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றுவிட முடியாது. தவறான ஒருவரை நேர்மையாக நடக்கவேண்டிய ஒரு பதவியில் நியமித்து இந்த தேசத்திற்கும் குடியரசுத்தலைவருக்கும் அவமரியாதை செய்த பிரதமர் மன்மோகன் சிங்கும் உள்துறை அமைச்சர் . சிதம்பரமும் பதவி விலகவேண்டும் என்பதே இந்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.