மேற்கு வங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேற்கு வங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

சட்டம் ஒழுங்கை காக்கத் தவறிய மேற்குவங்க ஆளுநர்....!


                                                                              

         மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சி ரவுடிகள் இந்திய மாணவர் சங்கத் தோழர்களை குறிவைத்து தாக்குவதும், கொலை செய்வதுமான நாசகார வேலைகளில் 
ஈடுபடுவதும், அதற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஊக்கமளிப்பதும் அன்றாட நடவடிக்கைகளாக ஆகிவிட்டன. நேற்று முன் தினமும் கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகமான பிரசிடென்சி பல்கலைக்கழகத்தை திரிணாமுல் கட்சி ரவுடிகள் வெறி கொண்டுத் தாக்கி இருக்கிறார்கள். பயங்கர ஆயுதங்களுடன் பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த 
திரிணாமுல் கட்சி ரவுடிகள் கண்ணில்  பட்ட மாணவர்களையும் மாணவிகளையும் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். பின்னர் வகுப்பறைகள்  மற்றும் ஆய்வுக்கூடங்களின் உள்ளே நுழைந்து அடித்து நொறுக்கியிருக்கின்றனர். 1913 - ஆண்டு விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட நூற்றாண்டுப் பழமைவாய்ந்த ''பாகர் லேபரட்டரி'' மற்றும் அனைத்துத் துறைக்குள்ளும் நுழைந்து அடித்து நொறுக்கியிருக்கின்றார்கள்.  பல்கலைக்கழகமே பதற்றத்திற்குள்ளாகி இருக்கிறது. மாணவ - மாணவியர்களும், பேராசிரியர்களும் மிரண்டு போயிருக்கிறார்கள். பல்கலைக்கழகமே போர்க்களமாய் மாறிப்போயிருக்கிறது.
        ஆனால் மேற்குவங்க ஆளுநரும், திரிணாமுல் கட்சி ரவுடிகள் தாக்கப்பட்ட பிரசிடென்சி பல்கலைக்கழக வேந்தருமான எம். கே. நாராயணன் வெறுமனே வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கிறார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. கட்சித் தோழர்களையும், மாணவர் சங்கத் தோழர்களை குறிவைத்துத் தாக்குகிறார்கள். இவை எல்லாவற்றையும் ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்துகொண்டு வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு பொறுப்பான பதவியில் உட்கார்ந்து கொண்டு பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்.
            அதுமட்டுமல்ல பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்து திரிணாமுல் ரவுடிகள் மாணவ - மாணவியர்களை தாக்குகிறார்கள். பல்கலைக்கழகத்தையே அடித்து நொறுக்குகிறார்கள். கோபமுற்ற பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் பாலாபிகா சர்க்கார் கூட திரிணாமுல் கட்சிக் குண்டர்களை கண்டித்து பேட்டியளித்தார்கள். ஆனால் பல்கலைகழக வேந்தருக்கு மட்டும் கோபமே வரவில்லை. ஆளுநர் இதைக்கண்டிக்காமல் வாய்மூடி மௌனமாய் இருந்தது என்பது கண்டிக்கத்தக்கது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு காரணமான மாநில அரசை கண்டிக்காமல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருப்பதும் அதை விட கண்டிக்கத்தக்கது.
        மாறாக நேற்று ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான எம். கே. நாராயணன் பிரசிடென்சி பல்கலைக்கழகம் சென்று மாணவ - மாணவியர்களை சந்தித்து உரையாடியிருக்கிறார். நடந்த நிகழ்ச்சிக்கு கொஞ்சம் கூட வருத்தம் தெரிவிக்கவில்லை. சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. மாறாக ''நான் ஆளுநர் மற்றும் வேந்தர் என்ற முறையில் நான் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதற்கு பல்கலைக்கழக மாணவர்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்'' திரும்பத்திரும்ப பேசியிருக்கிறார். அதுமட்டுமல்ல மம்தா அனுப்பிய ரவுடிகளால் இவ்வளவு நடந்திருக்கிறது. ஆனால் கூடவே மாணவ - மாணவியர்களிடையே மம்தாவிற்காக  தேர்தல் பிரச்சாரமும் செய்திருக்கிறார். ''பிரசிடென்சி பல்கலைக்கழகத்தை சிறந்த முன்மாதிரியான பல்கலைக்கழகமாய் மாற்றுவது தான் மம்தாவின் கனவு திட்டாமாகும்'' என்று ஒரு போடு போட்டிருக்கிறார்.

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

மம்தாவின் அராஜகம் ஓயவில்லை....!



                 மேற்குவங்கத்தில் மம்தாவின் அராஜக போக்கும், ஜனநாயகத்திற்கு எதிரான போக்கும் கட்டுக்கடங்காமல் போய்கொண்டிருக்கிறது.   மேற்குவங்க மாநிலத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை சட்டம் நடைமுறையில் உள்ளதோ என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. பதினைந்து நாட்களுக்கு முன்பு தான் மேற்குவங்க அரசு நூலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் பத்திரிக்கைகளுக்கும், ஆங்கில பத்திரிக்கைகளுக்கும் தடைவிதித்திருந்தார். அது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என்று பத்திரிகை உலகமும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
            அந்த எதிர்ப்பு அலை ஓய்வதற்குள், அடுத்து பள்ளிப் பாடப்புத்தகத்தில் உள்ள காரல் மார்க்ஸ் மற்றும் ரஷ்யப் புரட்சி பற்றியப் பாடங்களை நீக்கி மம்தா உத்தரவிட்டது என்பது மேற்குவங்கம் மட்டுமல்லாது நாடு முழுவதுமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. 
           இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், மதம் பிடித்த யானை மண்ணை அள்ளி தன் தலையிலேயே போட்டுக்கொள்வது போல் அடுத்து,  நேற்று வியாழக்கிழமை இரவு, அம்பிகேஷ் மகாபத்ரா என்ற மேற்குவங்க  ஜாதவ்புர் பல்கலைக்கழக  வேதியியல் துறைப் பேராசிரியர் மம்தாவின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் மம்தாவை விமர்சனம் செய்து கார்ட்டூன் தயார் செய்து வெளியிட்டார் என்பது தான் அவர் மீதான குற்றச்சாட்டு. இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. அது மட்டுமல்ல இந்திய மக்களுக்கு கருத்து தெரிவிக்கும் உரிமை என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டமே கொடுத்திருக்கிறது. கார்ட்டூன் வெளியிட்டதற்காக அந்த பேராசிரியரை கைது செய்ததன் மூலம் மம்தா இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையே மீறியிருக்கிறார் என்று தான் பொருள். 
                  தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் மம்தாவின்   அராஜகப் போக்கு என்பது நாம் மறந்துவிட்ட சர்வாதிகாரி ஹிட்லரை தான்  நமக்கெல்லாம் நினைவுப்படுத்துகிறது....
Courtesy : The Hindu / 14.04.2012
           போகிற போக்கைப் பார்த்தால், அந்த கார்ட்டூனைப் பார்த்து வாய்விட்டு சிரித்ததற்காக பொதுமக்களும் தண்டிக்கப்படுவார்களோ என்கிற அச்சம் எழுகிறது.   இன்றைக்கு 14. 04. 2012 தேதியிட்ட இந்து பத்திரிகையில் வந்திருக்கும் கார்ட்டூனைப் பார்க்கும் போது நமக்கெல்லாம் அப்படித் தான் தோன்றுகிறது.

சனி, 7 ஏப்ரல், 2012

கார்ல் மார்க்ஸ் உலகத்திற்கே வெளிச்சம் தரும் சூரியன் - ஆயிரம் மம்தா வந்தாலும் மறைத்துவிடமுடியாது...

கார்ல் மார்க்சை 
மறைத்து விட்டு                                               
உலக வரலாற்றை 
படிக்கமுடியாது...!
       
        எப்போதோ ஒரு முறை கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு அற்புதமான கவிதை வரிகள் என் நினைவிற்கு வருகிறது.
           
                                                          
            '' மின்சாரமும்   
                மார்க்சியமும்
                இல்லாமல் 
                இனி
                உலகம் இயங்காது'' 
என்பது தான் அந்த கவிதை வரிகள். அதில் சொல்லப்பட்ட கருத்து என்பது உண்மையிலும் உண்மையானது.
                  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தனது அடுத்தக்கட்ட அடாவடித்தனத்தை நிகழ்த்தி இருக்கிறார். மேற்கு வங்க பள்ளிப் பாடத்திட்டத்தில் வரலாற்றுப்பாடத்தில் ரஷ்யப்புரட்சி, மாமேதை கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் பற்றிய பாடங்களை மம்தா தடை செய்து நீக்கியிருக்கிறார்.  ரஷ்யப்புரட்சி மற்றும் கார்ல் மார்க்ஸ் போன்ற வரலாறுகளை தவிர்த்து உலக வரலாற்றைப் படிக்க முடியாது என்ற குறைந்த பட்ச அறிவுக்கூட மம்தாவிற்கு இல்லை. 
             மூன்று ஆண்டுகளுக்கு முன் உலகளவில் நிகழ்ந்த ''பொருளாதார வீழ்ச்சிக்கான'' தீர்வை, அமெரிக்கா மற்றும்  ஐரோப்பா போன்ற முதலாளித்துவ நாடுகளெல்லாம் ''யாரை''  வேண்டாமென்று தூக்கி எரிந்தார்களோ அவரைத் தான் தேடினார்கள். அவர் எழுதிய புத்தகத்தை தான் தேடினார்கள். ஆம்... அவர்கள் தேடியது கார்ல் மார்க்சை தான். அவர் எழுதிய ''தாஸ்  கேபிடல்'' என்ற ''மூலதனம்'' புத்தகத்தைத் தான் தேடினார்கள். ஏனென்றால் பொருளாதார வீழ்ச்சிக்கு அதில் தான் தீர்வு கிடைத்தது. அதனால் தா அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் தாஸ் கேப்பிட்டல் மிக அதிகமான பிரதிகள் அச்சிடப்பட்டு விற்கப்பட்டன.
            பிரான்ஸ் நாட்டு அதிபர் கூட ''எல்லோரும் கார்ல் மார்க்ஸ் எழுதிய தாஸ் கேபிட்டலை படியுங்கள். அதில் தான் பொருளாதார வீழ்ச்சிக்கு தீர்வு இருக்கிறது'' என்று சொன்னதாக பத்திரிகைகளில் வந்த செய்தியை மம்தா படித்திருக்கமாட்டார். 
                 எல்லோரும் பைபிள் படியுங்கள் என்று சொள்ளக்கூடிய போப்பாண்டவர் கூட ''எல்லோரும் தாஸ் கேபிட்டல் படியுங்கள். அதில் தான் பொருளாதார வீழ்ச்சிக்கு தீர்வு இருக்கிறது'' என்று சொன்னதாக வந்த செய்தியை மம்தா கேள்விப்பட்டிருக்கமாட்டார். 
          சென்ற ''ஆயிரமாண்டின்'' மாமனிதனாக கருதப்பட்ட மாமேதை கார்ல் மார்க்சையும், அவர் கருவாக்கி உருவாக்கிய கம்யூனிசத்தத்துவங்களையும் யாராலும் அழித்துவிட முடியாது. நேற்று - இன்று - நாளை என முக்காலத்திற்கும் பொருத்தமானவர் தான் கார்ல் மார்க்ஸ். உலகம் பொருளாதார வீழ்ச்சியில் தத்தளிக்கும் போது கார்ல் மார்க்ஸ் தான் கைகொடுத்து உதவுவார். இதெல்லாம் மம்தா அறிவதற்கு வாய்ப்பில்லை தான். மம்தாவிற்கு கற்பூர வாசனை தெரிவதற்கு நியாயமில்லை தான்.   

புதன், 28 மார்ச், 2012

ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் மம்தாவின் அராஜகச்செயல்...!

பேயாட்சி நடந்தால்...?          

     மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அரசு நூலகங்களில் அரசியல் கட்சி சார்பு பெற்ற மற்றும் அனைத்து ஆங்கில ‌பத்திரிகைகள் வைக்க தடை விதித்து ''பேயாட்சி'' நடத்தும்   முதல்வர் மம்தா உத்தரவிட்டுள்ளார். அதே சமயத்தில், அரசு ஆதரவு பெற்ற தனது கட்சி மற்றும் சில வங்க‌மொழி பத்திரிகைகளுக்கு மட்டும் தாராளமாக  அனுமதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நூலகங்களில் பத்திரிக்கைகளை தடை செய்வது என்பது பொதுமக்களின் பத்திரிக்கைகளை படிக்கும் உரிமையை பறிப்பதாகும். இது ஜனநாயகத்தின் குரல்வளையையே நெரிக்கும் செயலாகும். தனது ஆட்சியின் இலட்சணங்களை - விமர்சனங்களை மக்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்காகவே மம்தா  அரசியல்  முதிர்ச்சி இல்லாமல் செய்த செயல்.   
            என்ன தான் பத்திரிக்கைகளை மேற்கு வங்க மக்களிடமிருந்து விலக்கி வைத்தாலும், மம்தாவின் ''அவல'' ஆட்சியின் ''பெருமைகள்'' மக்களுக்கு தெரியாமலா போய்விடும்...
              மம்தாவின் இந்த அராஜகச் செயலை மேற்கு வங்க மாநில மக்கள் மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவரும் கண்டிக்கவேண்டும்.
                 மேற்கு வங்கத்தில் தற்போது அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் நூலகங்கள் என மொத்தம் 2842 நூலகங்கள் மாநிலம் முழுவதும் உள்ளன. இந்த நூலகங்கள் எல்லாம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான  இடதுசாரிகள் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. அத்தனை நூலகங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ''கண சக்தி'' பத்திரிகை உட்பட அனைத்து எதிர்க்கட்சியினரின் பத்திரிக்கைகளும் இந்த நூலகங்களில் நுழைவதை  மம்தா தடை செய்திருக்கிறார்.  நல்ல வேலை சி. பி. எம் - னால்  ஆரம்பிக்கப்பட்ட  நூலகங்கள் என்பதால் அத்தனையையும்   மூடிவிடாமல் விட்டு விட்டார்களே...! மமதையில் எதையும் செய்வார் மம்தா..!
நன்றி : The Hindu / 31.03.2012

வியாழன், 23 பிப்ரவரி, 2012

மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரினாமூல் காங்கிரஸ் கொலை வெறியாட்டம்


உன் உதிரம் தந்து 
செங்கொடி  காத்து 
நீ... 
மண்ணில் வீழ்ந்தாயே ...
தோழா... 




                 நேற்று மேற்குவங்க மாநில பர்துவான் நகரின் தேவான்டிகி பகுதியில் பட்டப் பகலில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் பிரதீப் தா மற்றும்  கமல் கயேம் ஆகிய இருவரையும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் படுகொலை செய்தனர் என்கிற  செய்தி மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. மிகுந்த கண்டனத்திற்குரியது. தோழர் பிரதீப் தா, சட்டமன்றத்தில் பர்துவான் (வடக்கு) தொகுதியைப் பிரதிநிதிதத்துவப்  படுத்திய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
              மத்திய தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ள பிப்ரவரி 28 வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நேற்றைய தினம்  நடந்த ஊர்வலத்திற்கு இந்த இரண்டு தலைவர்களும் தலைமை தாங்கிச் சென்றபோது இந்த கொடூரமான கொலைகள் நடத்தப்பட்டிருப்பது என்பது கொடூரமானது மட்டுமல்ல, காட்டுமிராண்டித்தனமானது.
                மேற்கு வாங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு பதவிக்கு வந்ததிலிருந்து  இடதுசாரி தலைவர்கள், ஊழியர்கள் என திட்டமிட்ட முறையில் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள் அல்லது  கொலை செய்யப்படுகிறார்கள் என்பது மம்தா பானர்ஜியின் இரக்கமற்ற ஈனச்செயலைத் தான் காட்டுகிறது. அந்த மாநிலத்தில்  ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நடந்துள்ள கொலைகளின் எண்ணிக்கை என்பது, இந்த இரு தலைவர்களையும் சேர்த்து  58 ஆக உயர்ந்திருப்பது என்பது மம்தாவின் ஆட்சியின் இலட்சணத்தைத் தான் காட்டுகிறது.
                மத்திய தொழிற்சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று வெற்றிகரமாக நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
                இத்தகைய வன்முறை அரசியலையும் பயங்கரவாத அரசியலையும் எதிர்த்து நாடுமுழுவதும் உள்ள நல்லவர்கள் - நல்லிதயம் படைத்தவர்கள் ஓர் அணியில் அணி திரளவேண்டும்.

சனி, 2 ஜூலை, 2011

மேற்கு வங்கத்தில் மம்தா கட்சியினர் வன்முறை - அராஜகம் - ப. சிதம்பரம் மௌனம்...!

                 மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பின் மே - 13 அன்று தேர்தல் முடிவுகளை அறிவித்த நாளிலிருந்து மம்தா கட்சியின் காலிகள் மாவோயிஸ்ட்டுகளின் துணையோடு வன்முறையையும், அராஜகத்தையும் கட்டுக்கடங்காமல் அரங்கேற்றி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு என்பதே பாதுகாப்பின்றி சீர்கெட்டு போய்கொண்டிருக்கிறது. சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பாய் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி,  மாவோயிஸ்ட்களின் ஆதரவோடு திரிணாமுல் - காங்கிரஸ் கட்சிகளின் கூட்டு வன்முறைகளை தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இடது முன்னணி   ஆட்சியிலிருந்த போது அடிக்கடி மூக்கை நுழைத்த ப. சிதம்பரம் இந்த நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டு வாயைப் பொத்திக்கொண்டிருக்கிறார். 
                      

அதிர்ச்சி தரும் தகவல்கள்...

               # கடந்த மே 13 முதல் ஜூன் 26 வரையிலான காலக்கட்டத்தில் இடது முன்னணியின் ஊழியர்கள் 19 பேர், ஆளும் மம்தா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் வன்முறைத் தாக்குதலால்  படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 18 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்பது குறிப்பிடத்தக்கது.  
           #  காயமடைந்த 620 தோழர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரின் நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளது.
                 # கட்சி ஊழியர்களாகிய 189 பெண்கள் மற்றும் கட்சி பெண் அனுதாபிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
                 # திரிணாமுல் மற்றும் காங்கிரஸ் கட்சியினர்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான 193 கட்சி அலுவலகங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள். 628 கட்சி அலுவலகங்களை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.
                # மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மற்றும்  அனுதாபிகளின் வீடுகளை அடித்து தகர்த்ததன் விளைவாக 12,500 தோழர்கள் வீடற்றவர்களாக ஆகியுள்ளனர்.
                # தொடர் வன்முறைக்கு அஞ்சி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் உயிரையும், வாழ்வையும் காப்பாற்றிக்கொள்ள, வீட்டையும் ஊரையும் விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

               மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும் மற்ற இடது சாரிகள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்களை  அந்த மாநிலம் சார்ந்த தனிப்பட்டப் பிரச்சனையாக பார்த்து ஒதுங்கிவிடமுடியாது. நாட்டிலுள்ள அனைவரும் எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும்.
               பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அடக்கு முறைகளை எதிர்த்துப் போராடிய கம்யூனிஸ்ட் இயக்கம், 1971 - 1976 ஆண்டுகளில் அரைப்பாசிச அடக்குமுறைகளை எதிர்த்து போராடிய கம்யூனிஸ்ட் இயக்கம் மம்தா பானர்ஜி - காங்கிரஸ் கட்சி - மாவோயிஸ்ட் கூட்டணியின் இன்றைய வன்முறை வெறியாட்டத்தை  எதிர்த்து உறுதியாகப்  போராடி, முன்பைவிட வலுவான சக்தியாக தலை நிமிர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.