முல்லை பெரியாறு அணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முல்லை பெரியாறு அணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 டிசம்பர், 2011

தமிழக - கேரள ''தலைவர்களே''.... அமைதிக்கு உருப்படியாய் வழிகாட்டுங்கள்...!


முல்லை பெரியாறு :                                                   ஒற்றுமையையும்,                                         ஒருமைப்பாட்டையும் 
காக்கட்டும்...!
                                                              
                       
             கடந்த சில நாட்களாகவே தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் இருந்து வருகின்ற செய்திகள்  என்பது மிகுந்த வருத்தத்தை தான் உருவாக்குகின்றன. இரு மாநில மக்களிடையே பகைமை வளர்ந்து பதட்டம் மேலோங்கி  உள்ளது. கேரளாவில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கடைகளை நொறுக்குவதும்,  சபரிமலைக்கு செல்லும் பக்தர்களை தடை செய்வதும்,  தமிழகத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்புவதுமான தமிழக மக்களுக்கு கோபத்தை உண்டுபண்ணக்கூடிய செயல்களில் கேரள மக்கள் ஈடுபடுவதும், பதிலுக்கு தமிழகத்தில் கேரளாவைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களை தாக்குவதும், கேரளாவுக்கு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்துவதும், கேரளாவுக்கு வழக்கமாய் செல்லும் பால், காய்கறிகள் போன்ற உணவுப்பொருட்களை தடை செய்வதுமான கேரள மக்களுக்கு கோபமூட்டக்கூடிய செயல்களில்  ஈடுபடுவதும் என்பது நாட்டின் அமைதியையும், ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் விரும்புகிற யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாகும்.
             அமைதிக்கு வழிகாட்டவேண்டிய இரு மாநிலத் தலைவர்களே அமைதிக்கு கேடுவிளையும்படி பேசுவது என்பது தேசத்துக்கு நல்லதல்ல என்பதை உணரவில்லை என்பதும் வருத்தமளிக்கும் விஷயமாகும். பாராளுமன்ற மாநிலங்களவையில் இந்த இரு மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் மோதிக்கொள்கிறார்கள். கேரளா மற்றும் தமிழகத்திலுள்ள  தலைவர்கள் தங்கள் இஷ்டப்படியெல்லாம் அறிக்கைகளை விட்டு இரு மாநில மக்களையும் கொந்தளிக்க செய்து அதில் அரசியல் வியாபாரம் செய்வதும், அதை இரு மாநில அரசுகளும் மற்றும் மத்திய அரசும் மெத்தனமாக வேடிக்கைப்பார்ப்பதுமாக  தான் இருக்கிறார்கள்.
               இவ்வளவு  பிரச்சனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவோ முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் போல் பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டு தன் கடமையை ஆற்றியிருக்கிறார். இங்கே தமிழக  மக்களின் உயர்வுக்காக அவதாரம் எடுத்த ''தமிழினத்தலைவர்கள்'' வைகோ, ராமதாசு, திருமாவளவன், சீமான், விஜயகாந்த் போன்றவர்கள் வழக்கம் போல் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுகிற வேலையை செய்துகொண்டிருக்கின்றனர். 
                தமிழக மக்களை உசுப்பேற்றி விடும் வேலைகளை தான் இவர்கள் செய்கிறார்கள். இவர்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பவர்கள். ''இந்தியா உடையும்... துண்டாகும்..'' போன்ற வைகோவின் பிரிவினைவாத பேச்சுக்களும், இரு மாநில பேச்சுவார்த்தைகளில் தமிழகம் கலந்துகொள்ளக்கூடாது என்று ராமதாசும், விஜயகாந்தும் சொல்லும் கருத்துக்களும் - அனைத்தும் கண்டிக்கத்தக்கவையாகும்.  தமிழக மக்கள் இவர்களின் வார்த்தைகளை நிராகரித்து தூக்கி எரியவேண்டும்.
                   மத்திய அரசு மேலும் கண்டுகொள்ளாமல் இருந்தால் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், அமைதிக்கும் குந்தகம் விளையும்படியான மோசமான நிலைமைக்கு நாடும், நாட்டு மக்களும் தள்ளப்படுவார்கள். எனவே மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, அணையின் பலம் பற்றிய கேரள மக்களின் பயத்தை போக்குவது பற்றியோ அல்லது அணையின் உறுதியை  நிரூபிப்பது பற்றியோ அல்லது புதிய அணை தேவைக்கான நியாயத்தை பற்றியோ... எதுவாக இருந்தாலும் நடுநிலையோடு மத்திய அரசு அறிவுப்பூர்வமாக - அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து  முடிவெடுக்கவேண்டும் என்பதே அமைதியை விரும்பும் இரு மாநில மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

புதன், 23 நவம்பர், 2011

DAM 999 - மீண்டும் மீண்டும் இன உணர்வுகளை தூண்டியே பிழைப்பை நடத்தாதீர்கள்...!

                    தமிழ்நாடு  மற்றும்  கேரளா மாநில எல்லைப்பகுதியில் உள்ள முல்லை பெரியாறு அணை என்பது இரு மாநிலங்களுக்கிடையே நீண்ட காலமாகவே ஒரு சட்ட போராட்டத்தை உண்டாக்கி ஒரு கவுரவப் பிரச்சனையாக மாறி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அணையின் உயரத்தை அதிகபடுத்தி  நீர் மட்டத்தை உயர்த்தவேண்டும் என தமிழ்நாடு முயற்சி செய்த போது கேரளா அதை எதிர்த்தது. அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால், அணை உடைந்துவிடும் என்று கூறி மேலும் நீர் மட்டத்தை உயர்த்த கேரளா இன்று வரை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
              116 ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லை பெரியாறு அணை இன்று பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளது.   அந்த அணையின் கீழ் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளாதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அடிக்கடி  ஏற்படும் பூமி அதிர்ச்சிகளால் அணை உடைந்துவிடுமோ என்கிற அச்சம் அந்த பகுதி மக்களிடையே அதிகரித்துள்ளது. எனவே தற்போதைய சூழ்நிலையில் - அடிக்கடி பூமி அதிர்ச்சி ஏற்பட்டு வருவதால், மேலும் கால தாமதம் செய்யாமல் இப்போது இருக்கின்ற பழைய அணையை உடைத்து விட்டு புதிய அணையை கட்டவேண்டும் என்று கேரள அரசு முயற்ச்சித்து வருகிறது. 
                 ஆனால் இந்த பிரச்சனையில் ஆரம்ப காலத்திலிருந்தே, தமிழகத்தில் ஓட்டுக்களை நம்பியே பிழைப்பை நடத்தக்கொண்டிருக்கக்கூடிய திராவிடக்கட்சிகள்  இதை ஒரு மக்கள் பிரச்சனையாகவோ அல்லது ஒருதேசியப் பிரச்சனையாகவோ பார்க்கத் தவறிவிட்டன. இதை ஒரு இனப்பிரச்சனையாக திசைத் திருப்பி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்  என்று தான் சொல்லவேண்டும். இது இரு மாநிலங்களுக்கிடையே ஒரு  கவுரவப் பிரச்சனையாகவும் மாற்றப்பட்டுள்ளது.

              இந்த சூழ்நிலையில் தான், இன்னும் சில தினங்களில் திரையிடப் போகும், டேம் 999 - என்கிற ஆங்கில திரைப்படம் இன்று தமிழகத்தில் ஒரு மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மிகப்பழமை வாய்ந்த இந்த அணையை உடைத்து புதிய அணை கட்டப்படாவிட்டால், என்ன ஆகும் என்பதை மக்கள்  புரிந்துகொள்ளும்   சினிமா மொழியில் எடுக்கப்பட்டு திரைக்கு வர காத்திருக்கிறது. ஆனால் அதற்குள் மிகப் பெரிய சர்ச்சை. இந்தப் படத்தை தமிழகத்தில்  திரையிடக்கூடாது என்று  தமிழக அரசியலில் காணாமல் போன வைகோ, ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்களெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு போராடுகிறார்கள்.
                தமிழகத்தில் இன உணர்வுகளை தூண்டி அரசியல் நடத்தும் இவர்களுக்கு இத்தனை நாட்களாக ஈழப்பிரச்சனை கை கொடுத்து வந்தது. ஆனால் இப்போது அந்தப் பிரச்சனையும் காலாவதியாகிவிட்டது. வேறு எந்தப் பிரச்சனைகளும் இப்போதைக்கு கைவசம் இல்லை.  பாத்தாங்க... DAM 999 என்கிற சினிமாப் படத்தை கையிலெடுத்துக் கொண்டு மக்களை திசைத் திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
                  1949 - இல் ஆரம்பிக்கப்பட்டு இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டிவிட்டு ஆட்சிக்கு வந்த   திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமல்லாமல், திமுக - வின் வாரிசுகளான அதிமுக, மதிமுக, போன்ற திராவிடக்கட்சிகளும் இன உணர்வுகளை தூண்டித்தான்  மக்களை குழப்பி தங்களின் அரசியல்  பிழைப்பை  நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
                  இப்படியாக இந்தி... இந்திக்கு பிறகு தமிழீழம்...இதன் பிறகு இன்றைக்கு கூடங்குளம், முல்லை பெரியாறு அணை போன்ற பிரச்சனைகளை கையிலெடுத்து தமிழக மக்களுக்காக போராடி வருவதாக காட்டிக்கொண்டு, அதன் மூலம் அரசியல் லாபம் பார்க்க துடிக்கிறார்கள்.
                 இந்த முல்லை பெரியாறு  விஷயத்தில் மத்திய அரசும் தலையிட்டு, நீதிமன்றத்தின் மூலமாகவும், அணை சம்பந்தப்பட்ட பொறியாளர்கள், நிபுணர்கள் கொண்ட குழுவின் மூலமாகவும்  அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து, இரு மாநிலங்களும் ஏற்று கொள்ளும் படியான  முடிவுகளை எடுக்கவேண்டும் என்பது தான் நம் அனைவரின் விருப்பமாக இருக்கிறது.
               இதை விடுத்து திரைப்படத்தை பார்த்து ஏன் பயப்படவேண்டும். அந்த திரைப்படத்தில் பயனுள்ளக் கருத்துக்கள் இருந்தால் அதை நாம் உதறி தள்ளிவிடக்கூடாது. எனவே திரைப்படத்தை அனுமதியுங்கள். கருத்து சொல்லும் உரிமையை தடுக்காதீர்கள். ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு தடைப்போடாதீர்கள்...