அம்மா உணவகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்மா உணவகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 ஜூன், 2014

இதோ இன்னொரு அம்மா உணவகம்...!


 நல்லவர்களை உலகறிய செய்வோம்.....                                  
       
             அம்மா உணவகத்தில் மட்டுமல்ல, செல்வியம்மா உணவகத்திலும் ஒரு இட்லியின் விலை ஒரு ரூபாய் மட்டுமே! தொட்டுக்கொள்ள இரண்டு வகை சட்னியும் சாம்பாரும் தந்து அம்மா உணவகத்தையும் விஞ்சிவிட்டார் செல்வி. திருச்சி, கமாராஜர் நகர், ஜீவானந்தம் தெருவில் இருக்கும் செல்வியின் வீட்டு வாயிலில் தினமும் காலை சுடச்சுட தயாராகிறது இட்லி. ஆண்களும் பெண்களுமாகக் கையில் கிண்ணங்களுடன் இட்லி வாங்கக் காத்திருக்கிறார்கள்.
                  வாழ்க்கையையும் வறுமையையும் சமாளித்து மீள வேண்டும் என்பதற்காகவே ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார் செல்வி.
          “எல்லாப் பொண்ணுங்க மாதிரிதான் நானும் நிறைய கனவுகளோட என் வாழ்க்கையைத் தொடங்கினேன். அடுத்தடுத்து ரெண்டு பொண்ணுங்க பொறந்தாங்க. ஆனா எங்களைத் தனியா தவிக்க விட்டுட்டு என் கணவர் 16 வருஷத்துக்கு முன்னால வேறொரு பெண்ணோட போயிட்டார். வீடு தவிர எனக்கு வேற எதுவுமே தெரியாது. அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம மலைச்சு போய் நின்னேன்” என்று சொல்லும் செல்வி, வருமானத்துக்காகத் தயிர் விற்றிருக்கிறார்.

பசி போக்கிய இட்லி வியாபாரம்....                         

          “தயிர் பானையைத் தூக்கிட்டு தெருத்தெருவாக அலைந்தேன். தயிர் வித்த காசு கைக்கும் வாய்க்குமே சரியா இருந்தது. அதனால இட்லி சுட்டு விற்கலாம்னு முடிவு செய்தேன். அப்படி எட்டு வருஷத்துக்கு முன்னால ஆரம்பிச்சதுதான் இந்த இட்லி கடை. எங்க ஏரியா குழந்தைகளுக்கு நான் சுடுற இட்லினா அவ்வளவு இஷ்டம். அதனால லாபத்தை பெருசா எதிர்பார்க்க மாட்டேன். ஒரு நாளைக்கு காலையில் 200 இட்லி வியாபாரம் ஆகும்” என்று சொல்லும் செல்வி, மாலை வேளையில் தோசை விற்கிறார். ஒரு தோசை இரண்டு ரூபாய் ஐம்பது காசு. பத்து ரூபாய் இருந்தால் போதும், இரவு டிபனை முடித்துவிடலாம். கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தின் தேவை போக தினமும் ஐம்பது ரூபாய் கையில் நிற்கிறதாம்.
               “500 இட்லி சுட்டால் கூட வித்துடும். ஆனால் 5 கிலோ அரிசி மாவுதான் தினமும் அரைக்க முடியும். ரேஷன் அரிசியோட இட்லி குருணையை சரி பாதியா போட்டு அரைக்கிறேன். எங்க ஏரியாக்காரங்களே இட்லியோட விலையை உயர்த்த சொன்னாங்க. என் புருஷன் விட்டுட்டுப் போன பிறகு, அரவணைக்க சொந்தக்காரங்க இல்லாம நானும் என் குழந்தைகளும் பசிக் கொடுமையால வாடியிருக்கோம். பசிக்கொடுமை தெரிஞ்சதாலதான் இன்னைக்கும் ஒரு ரூபாய்க்கு மேல் இட்லி விலையை உயர்த்த மனசு வர மாட்டேங்குது” என்கிறார் செல்வி.

சோதனையில் மலர்ந்த சாதனை....                          

            சத்துக் குறைபாடு காரணமாக மூத்தமகள் லோகாம்பாளுக்குக் கண் பார்வை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இளைய மகள் கனகவல்லிக்கு ரத்தசோகை ஏற்பட்டு போதிய வளர்ச்சியின்றி இருக்கிறாள்.
          “சத்தான ஆகாரம் கொடும்மான்னு டாக்டருங்க சொல்றாங்க. ஒருநாள் சாப்பாடே கேள்விக்குறியா இருக்கறப்போ சத்தான சாப்பாட்டுக்கு எங்கே போறது?” என்கிற செல்வியின் கேள்வியில் வலியும், வேதனையும் நிறைந்திருக்கிறது.
         செல்விக்கு ஒவ்வொரு நாளும் போராட்டத்துடன் விடிந்து, போராட்டத்துடனேயே முடிகிறது. வாழ்க்கையின் இத்தனை நெருக்கடிகளுக்கு இடையேயும் செல்வியின் மூத்த மகள் லோகாம்பாள் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் அரசு பள்ளியில் படித்து 463 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.
               “சம்பாதிக்கறோம், சாப்பிடறோம். பிரச்சினை வந்தா எப்படியாவது அதை சமாளிச்சு நிமிர்ந்துடறோம். வேற என்ன இருக்கு இந்த வாழ்க் கையில? பணம் சேர சேரத்தான் தேவை அதிகமாகும். தேவையைச் சுருக்கிக்கிட்டா பேராசையும் சுருங்கிடும். நான் சம்பாதிக்கறது எங்களுக்கு நிறைவா இருக்கு. அது போதும் எங்களுக்கு” என்று எளிய வார்த்தையில் வாழ்க்கையைச் சொல்லிவிடுகிறார் செல்வி.
           நானும் என் குழந்தைகளும் பசிக்கொடுமையால வாடியிருக்கோம். பசிக்கொடுமை தெரிஞ்சதாலதான் இன்னைக்கும் ஒரு ரூபாய்க்கு மேல் இட்லி விலையை உயர்த்த மனசு வர மாட்டேங்குது. 

                   நன்றி :                 
Return to frontpage

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

பேருந்து வழித்தடங்களில் தேவை ''அம்மா உணவகம்''

          
            
              தமிழகத்தில் நெடுந்தூரம் - நெடுந்நேரம் பயணம் செய்யும் பேருந்துகள் காலை, மதியம், மாலை மற்றும் இரவு என்று பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளும், பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களும் பசியாற்றிக்கொள்ள வழியில் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியில் தந்தனியாக இருக்கும் ''குறிப்பிட்ட'' உணவகத்தில் மட்டுமே நிறுத்தப்படுகிறது. வேறு வழியே  இல்லை அந்த உணவகத்தில் தான் கண்டிப்பாக சாப்பிடவேண்டிய கட்டாயம். அங்கு அப்போதைக்கு என்ன கிடைக்கிறதோ அதைத்தான் சாப்பிடவேண்டிய கட்டாயம். இதிலே என்னென்னா நல்ல உணவகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையும், எதை சாப்பிட வேண்டும் என்ற உரிமையும் நமக்கு கிடையாது. ஏனென்றால் அந்த குறிப்பிட்ட உணவகத்தில் மட்டும் தான் பேருந்துகளை கட்டாயம் நிறுத்தவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.  ''வேறு நல்ல ஓட்டலில் நிறுத்தப்படாதா...?'' என்று பயணிகள் ஓட்டுனரையோ அல்லது நடத்துனரையொ கேட்டுவிட்டால், பாவம் அவர்களோ ஒப்பாரி வைக்காத குறையா புலம்பித் தள்ளிடுவாங்க. ஏன்னா... தாங்கள் கொண்டுவரும் பேருந்தை அந்த குறிப்பிட்ட உணவகத்தில் தான் கண்டிப்பாக நிறுத்தவெண்டுமாம். சாப்பிட்டு முடித்து வண்டியில் ஏறுமுன், அவர்களது ''ட்ரிப் ஷீட்டில்'' அந்த உணவகத்தின் முத்திரையை பதித்து, அதில் அந்த உணவகத்தின் உரிமையாளர் கையொப்பமிட்டு தரவேண்டுமாம். அப்படி முத்திரையையும், கையெழுத்தையும் வாங்க மறந்துவிட்டாளோ அல்லது அந்த பேருந்து உணவகத்தில்  நில்லாமல் சென்று விட்டாலோ அந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு அவர்கள் சம்பளத்தில் ஒரு இன்க்ரிமெண்ட் கட் செய்யப்படுமாம். இப்படிப்பட்ட கெடுபிடி ஏன் என்றால் அந்த அளவிற்கு அந்த உணவக உரிமையாளர்களுக்கும், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கும் ''புரிந்துணர்வு ஒப்பந்தம்'' ஏற்பட்டு, உரிமையாளர்களும் ''மாவு அரைத்தாயா...? தோசை சுட்டாயா...? பாத்திரம் கழுவினாயா...?'' என்றெல்லாம் அதிகாரிகளை கேள்விக்கேட்காமல், காலம் தவறாமல் அவர்களுக்கு ''கப்பம்'' கட்டுகிறார்கள் என்பது தான் வெட்கக்கேடான விஷயமாகும். 
             அந்த உணவகத்தின் உள்ளேயும், வெளியேயும் பார்த்தால் நம்மால் சகித்துக்கொள்ளவே முடியாது. உணவகத்தை சுற்றி சிறுநீர் கழித்து சுகாதார சீர்கேடுகளாக இருக்கும். ஈ மற்றும் கொசுக்களுக்கு பஞ்சமிருக்காது. அங்கு விற்கப்படும் உணவு பண்டங்கள் அனைத்தும், டீ மற்றும் காபியும் தரமானதாக இருக்காது. அங்கு கொடுக்கப்படும் குடிநீர் சுத்தமாக இருக்காது. அங்கு சாப்பிடுவதால் வயிறு கெட்டுவிடும்.உடல்நலத்திற்கு கேடு தான். இது ஒரு பக்கமிருந்தாலும், இன்னொரு பக்கம் அந்த உணவகங்களில் விற்கப்படும் பண்டங்களின் விலையோ இன்னும் பயங்கரம். சுகாதாரமற்ற பண்டங்கள் என்பதாலும், கூடுதல் விலை கொடுக்கவேண்டியிருக்கிறது என்பதாலும் பேருந்துகளில் வருகின்ற பெரும்பாலான பயணிகள் இந்த உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள் என்பது தான் உண்மை. ''ஒப்பந்தப்படி'' அந்த உணவகங்களில் பேருந்தை நிறுத்தியாக வேண்டும், அங்கே தான் சாப்பிட்டாகவேண்டும் என்ற கட்டாயத்தினால், பாவம் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் இதிலிருந்து தப்பிக்கமுடிவதில்லை. இதிலிருந்து பயணிகளுக்கும், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கும் விமோசனம் கிடைக்குமா என்று ஏங்கித் தவிக்கிறார்கள். 
               தமிழக முதலமைச்சர் தான் இந்த விஷயத்திலும் கவனம் செலுத்தவேண்டும். சென்னை உட்பட பெரும்பாலான மாநகராட்சிகளிலும், அரசு மருத்துவமனைகளிலும், புதுடெல்லியில் இருக்கக்கூடிய தமிழ்நாடு இல்லத்திலும் முதலமைச்சரின் தனிப்பட்ட சிறப்புத் திட்டமாக, சுகாதார முறையிலும், மிகக் குறைந்த விலையிலும் கிடைக்கக்கூடிய வகையில் ''அம்மா உணவகம்'' அனைவராலும் பாராட்டும் விதமாக இயங்குவது போல், அனைத்துப் பேருந்து வழித்தடங்களிலும் கழிப்பறை வசதியுடன் கூடிய ''அம்மா உணவகத்தை'' அமைத்து இயங்கச்செய்தால் நன்றாக இருக்கும்.  ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைக்காமல், ஆங்காங்கே இருக்கும் ''டோல் கேட்'' அருகில் அமைத்தால் பாதுகாப்பாக இருக்கும்.
               நெடுந்தூரம் பயணம் செய்யும் பயணிகள், ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் நலன் கருதி, தமிழக முதலமைச்சரும், தமிழக அரசும் இந்த வேண்டுகோளை ஏற்று நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்.