வெனிசுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெனிசுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 31 அக்டோபர், 2012

முதலாளித்துவத்திற்கு ஓர் எச்சரிக்கை..!

கட்டுரை : விக்னேஷ் சேரல்         
        
        “வெனிசுலா இனி ஒருபோதும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்குத் திரும்பிச் செல்லாது; மாற்றத்தை நோக்கிய நமது மகத்தான பயணம் தொடரும்; 21ம் நூற்றாண்டின் சோசலிசத்தை நோக்கிய வெனிசுலாவின் பயணம் உறுதியுடன் தொடரும்” என்று உணர்ச்சிமிகு முழக்கங்களோடு நான்காவது முறையாக ஜனாதிபதி பணியைத் தொடர்கிறார் ஹியூகோ சாவேஸ்.
          80 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் - 55.11 சதவீதம் - பெற்று, தலைநகர மாவட்டமான காரகாஸிலும், மொத்தமுள்ள 23 மாநிலங்களில் 21 மாநிலங்களிலும் மிகப்பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார் ஹியூகோ சாவேஸ்.

‘சோசலிசமே எதிர்காலம்’ என்ற முழக்கத்திற்கு கிடைத்த வெற்றி இது.

       இத்தேர்தலில் அமெரிக்க ஆதரவோடு, சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகங்களின் பலத்தோடு சாவேஸூக்கு எதிராக களமிறங்கிய ஹென்ரிக் கேப்ரிலஸ் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் (44.27 சதவீதம்) பெற்றிருக்கிறார் என்ற போதிலும், அவரும் ஊடகங்களும் இந்த தேர்தலை, ‘மோசடித் தேர்தல்’ என்று குற்றம் சாட்டக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாவேசுக்கு மக்கள் அளித்த பேராதரவையும், அவரது வெற்றி நாடு முழுவதும் திருவிழா போல கொண்டாடப்படுவதையும் பார்த்து, “சாவேஸின் வெற்றியை முழுமையாக ஏற்கிறேன்; அங்கீகரிக்கிறேன்” என்று சொல்ல வைத்திருக்கிறது.
         உலகத்திலேயே தாங்கள் தான் மிகச்சிறந்த ஜனநாயக நாடு என்றும், உலகம் முழுவதும் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்யவேண்டிய பணி தங்களுக்குக் காத்திருக்கிறது என்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மார்தட்டிக் கொண்டிருக்கிறது.
            ஆனால், வெனிசுலா என்கிற லத்தீன் அமெரிக்க நாடு அமைதியாக, ஆரவாரமின்றி, அற்புதமாக ஜனநாயகத்தை நிலைநாட்டியிருக்கிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு, மொத்த வாக்காளர்களில் 80.9 சதவீத மக்கள் அக்டோபர் 7 ஞாயிறன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தார்கள். தாங்களாகவே முன்வந்து மகிழ்ச்சியோடும், சீரிய உணர்வோடும், மிகுந்த எதிர்பார்ப்போடும் வாக்களித்தார்கள்.
           மக்களின் முழுமையான பங்கேற்புடன் கூடிய ஜனநாயகம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது வெனிசுலா. தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், பகிரங்க மாகவும் நடந்திருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது வெனிசுலா.
           சோசலிசத்தை நோக்கிய சமூகத்தை கட்டி அமைத்துக்கொண்டிருக்கிறோம் என சாவேஸ் கூறுகிறபோது, அவர் சர்வாதிகார ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார் என அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் பிரச்சாரம் செய்தவண்ணம் இருக்கின்றன. அத்தகைய ஊடகங்களுக்கு, தேர்தல் ஜனநாயகம் என்பதன் உயர்ந்த பொருளை உணர்த்தியிருக்கிறது வெனிசுலா.
             முதலாளித்துவம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறபோது, எப்படியேனும் தன்னைக் காத்துக்கொள்ள உலகெங்கிலும் உழைக்கும் மக்கள் மீது வரலாறு காணாத தாக்குதல்களை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிற போது, சோசலிசப் பதாகையை உயர்த்திப் பிடிக்கிற சாவேஸ் மீண்டும் வெற்றிபெற்றிருப்பது, முதலாளித்துவ உலகிற்கு ஓர் எச்சரிக்கையே!

செவ்வாய், 9 அக்டோபர், 2012

வெனிசுலா : உலக நாடுகளுக்கு வழிகாட்டுகிறது...!

            வெனிசுலாவின் சோஷலிச ஜனாதிபதியான சாவேஸ், மூன்றாவது தடவையாக பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவேசின் வெற்றியின் இரகசியம் என்ன? அவரது கடந்த கால சாதனைகள் என்ன?
                    1. எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடான வெனிசுலாவில், எண்ணை  விற்பனையில் கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதி மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிடப் பட்டுள்ளது. சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் செலவிட்ட அளவை விட, சாவேசின் பதவிக் காலத்தில் நானூறு மடங்கு அதிகமாக, அதாவது அரசாங்க பட்ஜெட்டில் 43 % சமூக நலத் திட்டங்களுக்காக செலவிடப் பட்டுள்ளது.
(ஆதாரம்: Financial Timeshttp://www.ft.com/)
                 2.  வெனிசுலாவின்  பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் தேசியமயமாக்கப் பட்டன. நானூறுக்கும் அதிகமான நிறுவனங்கள் அரசாங்கத்தினால் நடத்தப் படுகின்றன.
(Venezuela's economy Towards state socialism, http://www.economist.com/node/17527250)  
                        3. சாவேசின் சோஷலிச அரசியலுக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. அவரது பதவிக் காலமான 1996 க்கும் 2010 க்கும் இடைப்பட்ட காலத்தில், வறுமை பெருமளவு ஒழிக்கப் பட்டுள்ளது. 71 % இலிருந்து 27 % மாக குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சாவேசின் ஆட்சிக் காலத்தில், குழந்தைகளின் இறப்பு விகிதம் அரைவாசியாக குறைந்துள்ளது. எழுத்தறிவின்மை விகிதாசாரம் பெருமளவு குறைக்கப் பட்டுள்ளது.
(POBREZA Y DESARROLLO SOCIAL EN VENEZUELA: Balance 2011 y perspectivas para el 2012 por Jesse Chacón (GISXXI), http://www.gisxxi.org/noticias/pobreza-y-desarrollo-social-en-venezuela-balance-2011-y-perspectivas-para-el-2012-por-jesse-chacon-gisxxi/#.UHNeV5hg8fU)
( Pourquoi Chavez ?, http://www.legrandsoir.info/pourquoi-chavez.html)                      
             4. உங்களுக்குத் தெரியுமா? உலகிலேயே திருப்திகரமான வாழ்க்கை வாழும் மக்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக வெனிசுவேலா தெரிவு செய்யப் பட்டுள்ளது. பணக்கார நாடுகளான கனடா, மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கு அடுத்ததாக, வெனிசுலா ஆறாவது இடத்தில் இருக்கிறது. (High Wellbeing Eludes the Masses in Most Countries Worldwide, http://www.gallup.com/poll/147167/High-Wellbeing-Eludes-Masses-Countries-Worldwide.aspx#2)
                    5. மேற்கத்திய ஊடகங்கள் சாவேஸ் ஒரு சர்வாதிகாரி என்றும், அவரது ஆட்சியில் ஜனநாயகத் தன்மை கிடையாது என்றும் கூறி வருகின்றன. ஆனால், 13 வருட ஆட்சிக் காலத்தில், 14 தேர்தல்கள் அல்லது கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகள்  நடைபெற்றுள்ளன. அனைத்திலும் சாவேசும், அவரது கட்சியும் வெற்றி பெற்றுள்ளனர். அனைத்து தேர்தல்களையும் கண்காணித்து வந்த  Carter Centrum   ஐ  சேர்ந்த  Jennifer McCoy , தேர்தல்கள் யாவும் ஜனநாயக முறைப்படி நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
(Venezuelan Electoral System one of the Most Automated in the World, http://venezuelanalysis.com/analysis/7177)
                   6. வெனிசுலா நாட்டு ஊடகங்கள் எல்லாம் சாவேசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனால் அவருக்கு ஆதரவான பிரச்சாரம் மூலம் மக்களை மூளைச் சலவை செய்வதாக, மேற்கத்திய நாடுகள் குற்றஞ் சாட்டுகின்றன. உங்களுக்குத் தெரியுமா? வெனிசுவேலாவின் 116 தொலைக்காட்சி நிறுவனங்களில், 61 தனியார் நிறுவனங்கள். தனியார் தொலைக்காட்சிகள் தொடர்ந்தும் சாவேசுக்கு எதிராகத் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வெறும் 13 தொலைக்காட்சி நிறுவனங்களை மட்டுமே அரசு நடத்துகின்றது. மீதியுள்ள 37 ம், ஒன்றில் பிரதேச அரசாங்கத்தினால், அல்லது மக்களின் கூட்டுறவு நிறுவனமாக  நடத்தப் படுகின்றன. ஆனால்.... ஆனால்... தனியார் தொலைக்காட்சி சேவைகள், மொத்த சனத்தொகையில் 61 % மான பார்வையாளர்களை சென்றடைகின்றன. தினசரி பத்திரிகைகளில் 80 % தனியார் கைகளில் இருக்கின்றன. நாட்டில் அதிகமாக விற்பனையாகும், பிரபலமான முன்னணி பத்திரிகைகள் எப்போதும் சாவேசுக்கு எதிராகவே எழுதிக் கொண்டிருக்கின்றன.
(Television in Venezuela: Who Dominates the Media?, http://www.cepr.net/documents/publications/2010_12_venezuela_media.pdf)
                             7. உலக நாடுகளின் ஜனநாயக செயற்பாடுகளை கணிப்பிட்டு வரும் கனடிய நிறுவனமான   Foundation for Democratic Advancement (http://www.slideshare.net/FDAdvancement/2011-fda-electoral-fairness-report-on-venezuela)(FDA), நேர்மையான முறையில் ஜனநாயக தேர்வு நடக்கும் நாடுகளில் ஒன்றாக வெனிசுவேலாவை தெரிவு செய்துள்ளது.  அவர்களின் கணிப்பின் படி, வெனிசுலாவில்  83 % நேர்மையான ஜனநாயக தெரிவு இடம்பெறுகின்றது. மற்ற நாடுகளையும் ஒரு தடவை பார்ப்போமா? பின்லாந்து 30 %, அமெரிக்க 30 %, எகிப்து 0 %. 
                                          8. இந்த தடவை, சாவேசை எதிர்த்து தேர்தலில் குதித்த வேட்பாளர்  Henrique Capriles பற்றி மேற்கத்திய ஊடகங்கள் புகழ்ந்து பேசின. மாபெரும் ஜனநாயகவாதி என்றெல்லாம் பாராட்டின. அந்த வேட்பாளரின் கடந்த கால ஜனநாயக சாதனைகளை பார்ப்போமா? 2002 ம் ஆண்டு, வெனிசுலாவில் சதிப்புரட்சி நடந்தது. மியாமியில் (அமெரிக்கா) இருந்து வந்த ஆயுதக் குழுவொன்று கியூப தூதுவராலயத்தை முற்றுகையிட்டது. அப்பொழுது அந்தப் பிரதேச ஆளுநராக இருந்த  Henrique Capriles அந்த ஆயுதக் குழுவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது மட்டுமல்ல, சர்வதேச சட்டங்களுக்கு முரணாக, தூதுவராலயத்திற்கு சென்று கொண்டிருந்த மின்சார, நீர் விநியோகத்தையும் துண்டித்திருந்தார். 
(Ex embajador de Cuba en Venezuela: Capriles violó leyes internacionales, http://www.telesurtv.net/articulos/2012/04/12/ex-embajador-de-cuba-en-venezuela-capriles-violo-leyes-internacionales)  
                      இந்த தேர்தலில் ஹுகோ சாவேஸ் 54 % வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட  Henrique Capriles 45 % வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
நன்றி : கலையகம் - வலைப்பூ 

வெனிசுலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்...!


          "தாய்நாடு, சோஷலிசம் இல்லையேல் மரணம்", வெனிசுவேலா நாட்டு மாணவர்கள், பாடசாலைகளிலும், அதற்கு வெளியிலும் சொல்லும் கோஷம் இது. ஒரு காலத்தில் வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தால், "வணக்கம் சேர், மேடம்" சொன்ன காலம் மலையேறிவிட்டது. தற்போது ஆசிரியர்களின் பேர் சொல்லி அழைக்கின்றனர். ஆசிர்யர்களும் மாணவர்களை கண்டிப்புடன் எட்டத்தில் வைத்திருந்த காலம் போய், தற்போது நண்பர்களாக பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர். லத்தீன் அமெரிக்க புரட்சியாளர் சேகுவேராவின் படம் வகுப்பறைகளை அலங்கரிக்கின்றது. மாணவர்கள் சே போன்று வாழ வேண்டுமென சபதமேற்கின்றனர்.
                            பெரும்பான்மை வாக்கு பலத்தில் பத்து வருடங்களுக்கு முன்னர், ஆட்சிக்கு வந்த அதிபர் சாவேஸ், அண்மைக்காலமாகவே தன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் என்று பகிரங்கமாக அறிவித்த காலத்தில் இருந்து, அந் நாட்டில் கலாச்சார பொருளாதார மாற்றங்கள் மெதுவாக நடைமுறைக்கு வருகின்றன. ஜனநாயக பொதுத்தேர்தல், ஜனநாயக வழியில் நடந்தால், உலகம் முழுவதும் சாவேஸ் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் பெரும்பாலான வறிய(மூன்றாம் உலக நாடுகளில்) பெரும்பான்மை மக்கள் வறியவர்களாக இருப்பதால், அவர்கள் தமது நலன் குறித்து பேசும் ஒருவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியமென்ன? பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகள், குறிப்பாக வெனிசுவேலா, ஈகுவடோர், பிரேசில், பராகுவை, ஆர்ஜென்டீனா, பொலிவியா, நிகரகுவா.... இப்படி நீண்டு கொண்டே போகும் பட்டியலில் உள்ள நாடுகளில் எல்லாம், சோஷலிசம் பேசுபவர்களையே பெரும்பான்மை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இவைகளில் வெனிசுவேலா, பொலிவியா தவிர பிற நாடுகள் சோஷலிச சீர்திருத்தங்களை(கவனிக்கவும், ஜனநாயக வழியில்) நடைமுறைப்படுத்த தயக்கம் காட்டி வருகின்றன.
               வெனிசுலாவில் சாவேஸ் துணிவுடன் நடந்து கொள்வதற்கு, அந்நாட்டின் எண்ணை வளம் முக்கிய காரணம். எண்ணை ஏற்றுமதி செய்யும் ஒபெக் அங்கத்துவ நாடான வெனிசுவேலாவின் அதிகளவு எண்ணை அமெரிக்காவிற்கே இன்றுவரை ஏற்றுமதியாவது முரண்நகை. வெனிசுவேலா, அமெரிக்காவிற்கு இடையில் கசப்பான உறவே தொடர்கின்றது. 2002 ம் ஆண்டு சாவேசை ஓரிரு நாட்கள் பதவியகற்றிய சதிப்புரட்சியில் அமெரிக்காவின் பங்களிப்பு, மக்கள் ஆதரவுடன் மீண்ட சாவேசை நிரந்தர அமெரிக்க எதிரியாக மாற்றவே வழிவகுத்தது. அதன் பின்னர், ஐ.நா.சபையில் உரையாற்றிய சாவேஸ், அமெரிக்கா அதிபர் புஷ் ஒரு பிசாசாக சித்தரித்து கலகலப்பூட்டினார். அமெரிக்க அரசுக்கு எரிச்சலூட்டும் விதமாக, கியூபா, ஈரான், ஆகிய நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டார். ஒரு காலத்தில் "சர்வதேச பயங்கராவாதி" என்று பெயரெடுத்த, தற்போது பிரெஞ்சு சிறையில் தண்டனை அனுபவிக்கும், வெனிசுவேலாவை சேர்ந்த கம்யூனிச புரட்சிக்காரன் கார்லோஸ் தேசிய நாயகன் என்று கௌரவித்தார்.
                இன்று லத்தீன் அமெரிக்க நாடுகளில் இலட்சக்கணக்கான மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள சாவேஸ், தனது நாட்டில் சோஷலிச சீர்திருத்தங்களை மிக மிக மெதுவாகவே நடைமுறைக்கு கொண்டு வருவதாக விமர்சனங்கள் உள்ள அதே நேரம், அந் நாட்டின் பணக்கார மத்தியதர வர்க்கம் சாவேசை பதவியை விட்டகற்ற, பேயோடு கூட்டுச்சேரவும் தயாராக உள்ளது. இருப்பினும் அவர்கள் நலன் காக்கும் கட்சிகள், ஊடகங்கள், தனியார் கல்விநிறுவனங்கள் என்பன தொடர்ந்தியங்க சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் வர்த்தக நிலையங்கள், பெற்றோலிய நிறுவனங்கள் என்பன அரசியல்-பொருளாதாரத்தை தீய நோக்கத்துடன் பயன்படுத்த நினைத்த போது மட்டும் தான், அவை தேசியமயமாக்கப் பட்டன.
              தற்போது பணக்கார பிள்ளைகள் மட்டுமே படிக்கும், தனியார் கல்வி நிறுவனங்கள் அரசாங்கத்தினால் தடைசெய்யப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அதற்கு காரணம் இந்த வருடம் வந்துள்ள புதிய கல்வித்திட்டம். ஆர்ஜென்டீன புரட்சியாளர் சே குவேரா கூறியதை போல, "ஒரு புதிய மனிதனை உருவாக்கும்" சோஷலிச அடிப்படையில் அமைந்த கல்வி, தற்போது அனைத்து அரச பாடசாலைகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் படி பிள்ளைகள், "வெனிசுவேலா சரித்திரம் பற்றி, பூர்வீக செவ்விந்தியர் பற்றி, எண்ணை வளம் இருந்தும் அபிவிருத்தியடையாத காரணம் பற்றி, சர்வதேச விடுதலை இயக்கங்கள் பற்றி...", இன்ன பிறவெல்லாம் கவனம் செலுத்தி கற்க வேண்டும்.  நிச்சயமாக, மத்தியதர வர்க்கம் இதுகுறித்து மகிழ்ச்சியடைய போவதில்லை. "அவர்கள் தங்கள் அரசியல் சித்தாந்தங்களை எங்கள் பிள்ளைகள் மீது திணிக்கப் பார்க்கின்றனர்." என்று கூப்பாடு போடுகின்றனர். மொத்த சனத்தொகையில், மிகச் சிறுபான்மையான பணக்கார மத்தியதர வர்க்கம், மக்கள் ஆதரவின்றி நலிந்து போய்க்கொண்டிருக்கின்றது. "உலகில் அனைத்து நாடுகளிலும் போதிக்கப்படும் கல்வியில் அரசியல் கலந்துள்ளது. சுயநலம், தனியார்மயம், முதலாளித்துவம் சார்பான சிந்தனைகள் கல்வி என்ற பெயரில் மாணவர்கள் மீது திணிக்கப்பட்டு வருகின்றன. அது பற்றி கண்டுகொள்ளாதவர்கள், சோஷலிசம் கற்பது பிழை என்று சொல்ல என்ன அருகதை உள்ளது?" இவ்வாறு கேட்கின்றனர் பல அரச பாடசாலை அதிபர்கள்.
               புதிய கல்வித்திட்டம் மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. ஒரு காலத்தில் வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தால், "வணக்கம் சேர், மேடம்" சொன்ன காலம் மலையேறிவிட்டது. தற்போது ஆசிரியர்களின் பேர் சொல்லி அழைக்கின்றனர். ஆசிர்யர்களும் மாணவர்களை கண்டிப்புடன் எட்டத்தில் வைத்திருந்த காலம் போய், தற்போது நண்பர்களாக பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர். அதிபரிடம் சென்று முறையிடுவதானால், கதவை தட்டாமலே நேரே போகலாம். இதையெல்லாம் பல பெற்றார்கள் வரவேற்கும் அதே வேளை, ஒரு சில மத்தியதர வர்க்க பெற்றோர் மட்டும், "எங்கள் பிள்ளைகளை கெடுக்காதே!" என்று பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் கூச்சல் போடுகின்றனர்.
                 ஜனாதிபதி சாவேஸ், சோஷலிச புரட்சி பாடசாலைகளில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும், என்று கூறி வருகின்றார். "ஒரு சமூகத்தின் நெறிகளை தீர்மானிக்கும் நிறுவனங்களை பொறுப்பெடுத்து, அவற்றில் முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு மாற்றீடாக சோஷலிச ஆதிக்கத்தை கொண்டுவருவதன் மூலமே, சமூகத்தை மாற்ற முடியும்." என்று மார்க்சிய அறிஞர் அன்டோனியோ கிராம்சியின் கூற்றை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்.
நன்றி : கலையகம் - வலைப்பூ 

வியாழன், 26 ஜூலை, 2012

வெனிசுலாவில் ஒரு புரட்சிகர தொழிலாளர் சட்டம்...!

            லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி சிந்தனை கொண்ட அரசுகள் பின்பற்றிவரும் கொள்கைகள், நவீன தாராளமயமாக்கலுக்கும் ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கும் எதிரான மாற்றுக் கொள்கைகளை வழங்கி வருவதைப் பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் 20 வது அகில இந்திய மாநாட்டுத் தீர்மானங்கள் சுட்டிக்காட்டுகின்றன.      
            2012 மே தினத்தன்று வெனிசுலாவின் சாவேஸ் அரசால் வெளியிடப்பட்டுள்ள தொழிலாளர் சட்டம் இந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்துகின்றது. இந்தச் சட்டம் வேலை என்பதை ஒரு சமூக நிகழ்முறையாக வரையறை செய்கிறது. குறைந்தபட்ச ஊதியம், சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்த உரிமை, பணியிடத்தில் சமத்துவம் ஆகியவற்றை உறுதிசெய்கிறது. இந்தச் சட்டம் வெனிசுலா மக்களின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை உணர்ந்து, தாம் மிகவும் திருப்தி அடைவதாகக் கியூபாவின் மகத்தான தலைவராகிய பிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.  
        
அந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பின் வருமாறு வரிசைப்படுத்தலாம்.
         வீட்டு வேலை என்பது மதிப்பைக் கூட்டுவது மற்றும் செல்வத்தையும் நல்வாழ்வையும் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு பொருளாதார நடவடிக்கையே. எனவே குடும்பப் பெண்களுக்கும் சமூகப்பாதுகாப்பு உரிமை சட்டப்படி வழங்கப்படும்.
           வேலை என்ற சமூக நிகழ்முறையின் முக்கியக் குறிக்கோள்களாவன: முதலாளித்துவச் சுரண்டல் வடிவங்களைக் கட்டுப்படுத்துவது நம்முடைய பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த கூடிய விதத்தில் பண்டங்களையும் பணிகளையும் உற்பத்தி செய்வது, செல்வத்தை நியாயமானமுறையில் பகிர்வதன் மூலம் மனிதத்தேவைகளை நிறைவு செய்தல், மக்களின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கான அடிப்படைத்தளமாகக் குடும்பம் இருப்பதை உறுதிசெய்யும் விதத்தில், பொருளாதார, சமூக, ஆன்மிக நிலைகளை உருவாக்குவது, வேலை என்னும் சமூக நிகழ் முறை பின்வருபவற்றை உறுதி செய்ய வேண்டும். நாட்டின் சுதந்திரம் மற்றும் தேசிய இறையாண்மை, பொருளாதார இறையாண்மை, ஒரு கவுரவமான வாழ்க்கைக்கான மனிதவள மேம்பாடு, மக்களின் வாழ்க்கைத்தரம், உணவு இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உயர்த்தும் தன்மையில் அமைந்த பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களை அறிவுக்குப் பொருத்தமான வகையில் பயன்படுத்துவது ஆகியவை.
         நிறுவனங்கள் தங்கள் பணிகளை வேறு ஒருவரிடம் அளிப்பது தடைசெய்யப்படும். இதன் பொருள் யாதெனில், பொது வேலை அல்லது பணியானது நிரந்தரமானதாகவும் அந்த நிறுவனத்தின் உற்பத்தியோடு நேரடி யாகத் தொடர்பு உடையதாகவும் இருக்குமானால், அதனை ஒப்பந்த முறை மூலம் வேறு ஒருவரிடம் ஒப்படைக்கக்கூடாது, ஒப்பந்த தொழிலாளிகளுக்கு நிரந்தரத் தொழிலாளிகளுக்குரிய நியாயமான உரிமைகளை மறுபதற்கே இது செய்யப்படுவதாகக் கருதப்படுவதால், இது தடை செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட தேசிய குறைந்தபட்சக் கூலியைவிடக் குறைவாக வழங்குவது அனு மதிக்கப்படமாட்டாது. சமவேலைக்குச் சம ஊதியத்தை ஒவ்வொரு நிறுவனமும் வழங்க வேண்டும்.
             ஒரு தொழிலாளி நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டால் 10 நாட்களுக்குள் நீதிமன்றத்தை அணுகலாம். சமபளத்தை வழங்குமாறு நீதிபதி ஆணையிடுவதற்கு இது உதவிசெய்யும், மூன்று நாட்களுக்குள் சம்பளம் வழங்கப்படாவிட்டால் முதலாளியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு நீதிபதி ஆணையிடமுடியும், அந்த உத்தரவும் பலன் அளிக்கவில்லை என்றால் அந்த முதலாளிக்கு 6 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கலாம். ஒவ்வொரு நிறுவனமும் நிதி ஆண்டின் இறுதியில் வரி செலுத்தியபிறகு எஞ்சும் நிகர வருவாயின் 15 சதவீதத்தைத் தொழிலாளிக ளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். இது குறைந்தபட்சமாகத் தொழிலாளியின் ஒரு மாதசம்பளத்துக்கு ஈடாகவும், அதிகபட்சமாக நான்கு மாதச்சம்பளம் வரையிலும் இருக்கலாம். சரியான தொகை வழங்கப்படுவதை உறுதி செய்து கொள்வதற்காக நிறு வனத்தின் வரவு-செலவுக்கணக்குகளைப் பரிசீலிப்பதற்கான உரிமை தொழிலாளிகளுக்கு உண்டு.
                 சட்டவிரோதமான முறையில் ஒரு தொழில் நிறுவனம் மூடப்படுமானால், தொழிலாளிகளின் வேண்டுகோளுக்கிணங்க அந்த நிறுவனத்துக்குள் நுழைந்து பணிகளை மீண்டும் துவக்குமாறு உத்தரவிடுவதற்குத் தொழிலாளர் நல அமைச்சருக்கு உரிமை உண்டு. கடன் சுமைக்கு ஆளாகும் நிறுவனங்களில், தொழிலாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் பிற சமூகப் பாதுகாப்புப் பயன்கள் போன்றவற்றுக்கு அடமான கடன்கள் உள்ளிட்ட கடன்களை விட முன்னுரிமை அளிக்கப்படும். தொழிலாளிகளுக்குக் கிடைக்கவேண்டிய பயன்களை உத்தரவாதம் செய்வதற்காக முன்கூட்டியே முதலாளியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது அனுமதிக்கப்படும்.
            வார வேலை நாட்கள் ஐந்தாக நிர்ணயிக்கப்படும். தொழிலாளிகளுக்கு வாரம் இரண்டு நாட்கள் ஓய்வு பெறும் உரிமை உண்டு. ஒரு நாளுக்கு எட்டுமணி நேரமும் வாரத்துக்கு 40மணிநேரமும் வேலைநேரமாகக் கணக்கிடப்படும். இரவு வேலை நேரம் நாளொன்றுக்கு ஏழுமணி நேரமாகவும் வாரத்துக்கு 35 மணிநேரமாகவும் கருதப்படும்.
            வீடுகளில் வேலை பார்க்கும் தோட்டக்காரர்கள், சமையல்காரர்கள், ஆயாக்கள் ஆகியோரின் பணிநிலைகளும் இந்தச் சட்ட வரையறைக்குள் கொண்டுவரப்படும்.
            சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட் களை சட்டப்படி பெறுவதற்கான உரிமை விவசாயத்தொழிலாளருக்கும் உண்டு. வாரத்தில் 40மணி நேரத்துக்கும் மேலாகவோ அல்லது நாளொன்றுக்கு 8மணிநேரத்துக்கு மேலாகவோ அவர்கள் வேலை செய்யக்கூடாது. வாரத்துக்கு இரண்டு நாட்கள் ஓய்வு பெறும் உரிமை அவர்களுக்கு உண்டு. விவசாய உற்பத்திக்கிளை ஒன்றில் ஒரு விவசாயத் தொழிலாளி ஒரு குறிப்பிட்ட நிலத்தில் தனியாக விவசாயம் செய்து வந்தால் இந்த வேலைக்கான ஒப்பந்த காலம் முடிவடைந்தவுடன் அந்த நிலத்தில் தங்குவதற்கான உரிமை உண்டு. அந்த உரிமையை அவர் பயன்படுத்திக் கொள்ள வில்லை என்றால் அவரது உற்பத்திப் பொருளுக்கு ஈடான மதிப்பு அவருக்கு வழங்கப்படும்.
           நாட்டு வளர்ச்சிப் பணியில் பங்கேற்பதற்கான உரிமை உரிய வயதை எட்டிய இளைஞர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் சமூக உற்பத்தி நிகழ்முறையில் மாணவர்களாக, பயிற்சியாளர்களாக, கல்விச் சலுகைக் கட்டணம் பெறுவோராக, தொழிலாளர்களாக அரசு இணைக்க வேண்டும். நியமனத்துக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் எவரையும் கருவுறுதல் தொடர்பான மருத்துவச்சான்றை அளிக்குமாறோ அல்லது மருத்துவப்பரிசீலனைக்கு உட்படுமாறோ நிறுவனம் எதுவும் கேட்கக்கூடாது. பிரசவத்துக்கு முன்னர் 6வாரங்களுக்கும் பிரசவத்துக்குப் பின்னர் 20 வாரங்களுக்கும் பிரசவகால விடுப்பு வழங்கப்படும். இக்காலத்தில் நோய்வாய்ப்படும் தாய்மார்களின் விடுப்புக்காலம் அதிகரிக்கப்படும். இக்காலத்துக்கு முழுச் சம்பளமும் பிற பயன்களும் வழங்கப்படும்.
                தங்களின் விருப்பப்படி சங்கம் சேரும் உரிமை தொழிலாளர்களுக்கு உண்டு. தொழிற் சங்க நடவடிக்கையானது அரசால் அங்கீ கரிக்கப்பட்ட ஒரு உரிமையாகும். தொழிற்சங்கங்களைத் துவக்குவதற்கோ, அவற்றுக்கு நிதி அளிப்பதற்கோ, தொழிற்சங்க நடவடிக்கை களுக்கு ஊறு விளைவிக்கவோ, குறிப்பிட்ட சங்க உறுப்பினருக்கு எதிராகப் பாரபட்சம் காட் டவோ முதலாளிகளுக்கு அனுமதி கிடையாது. தொழிலாளி விரோத நடவடிக்கைகள் சுட்டிக் காட்டப்பட்டால் 72மணி நேரத்துக்குள் அவை நிறுத்தப்பட வேண்டும். தவறினால் தண்ட னைக்குள்ளாக நேரிடும்.
         தொழிலாளருக்கு வேலை நிறுத்த உரிமை உண்டு. வேலைநிறுத்த காலத்தில் பணியிடங் களிலேயே தங்க அனுமதி உண்டு. கோரிக்கைகளைச் சமர்ப்பித்த பிறகு 120 மணி நேரம் கழித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம். வேலை நிறுத்தத்தால் தொழிலாளியின் பணிக்காலம் பாதிக்கப்படமாட்டாது. வேலை நிறுத்தக்காலத்தில் வேலை நிறுத்தக்காரர்களின் இடங்களில் புதிய தொழிலாளர்களைப் பணியமர்த்தவோ, வேறு இடங்களிலிருந்து பணி மாற்றல் மூலம் கொண்டுவரவோ அனுமதி இல்லை.
             1999ன் பொலிவாரிய அரசியல் அமைப்புச் சட்டத்துக்குப்பின் சாவேஸ்அரசாங்கம் கொண்டுவந்துள்ள மிக முக்கிய ஆவணமாக இது கருதப்படுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பைப்போலவே இந்தச் சட்டத்துக்கும் எதிர்ப்பு தோன்றியுள்ளது. குறைந்தபட்ச மாத சம்பளத்தை 32.5 சத வீதம் அளவுக்கு உயர்த்தியுள்ள சாவேஸ் அரசின் நடவடிக்கையையே அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பிரிவுகள் ஒரு கருத்துப்போராட்டத்தை வெனிசுலாவில் துவக்கியுள்ளன என்பதுடன், அவை தொழிலாளி வர்க்கத்தை மேலும் முற்போக்கான திசையில் இட்டுச்செல்லும் தன்மை கொண்டவையாக உள்ளன. தொழிலாளிகளின் உரி மைக்காகப் போராடுவோருக்குக் கிடைத் துள்ள ஒரு பேராயுதமாக இது இருக்கும். இப் போராட்டம் எவ்வாறு நடத்தப்படும்; எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படும் என்பது தொழிலாளி வர்க்கத்தின் வலிமை மற்றும் அதன் அரசியல் முதிர்ச்சியைச் சார்ந்துள்ளது.
               சர்வதேச தொழிலாளர் இயக்கத்துக்கு இந்தப் புரட்சிகர சட்டத்தின் மூலம் மாற்றுக்கான ஒரு ஆயுதத்தை வெனிசுலா வழங்கியுள்ளது. இச்சட்டத்தைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்குகின்றன. அவர்கள் அஞ்சி நடுங்கட்டும். புரட்சிகர சிந்தனைக்கான காலம் வந்து விட்டது. அதனால் அதன் முன்னேற்றத்தை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாது.

ஆதாரம்: 

‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’
(21/27 மே 2012) 

தமிழாக்கம் :  கி.இலக்குவன்

ஞாயிறு, 17 ஜூலை, 2011

தோழர். சாவேஸ் நலம் பெற வாழ்த்துவோம்...

            அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் மாபெரும் உலகத்தலைவன் பிடல் காஸ்ட்ரோ-வின் வழித்தோன்றலாய், இன்று ஏகாதிபத்தியத்திற்கு மற்றுமொரு சிம்ம சொப்பனமாய் திகழும் வெனிசுலாவின் அதிபர் தோழர். ஹுகோ சாவேஸ்  புற்றுநோயோடு போராடிவருகிறார். அண்மையில் தான் கியூபா சென்று இந்த நோயிற்கான சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். நோயிலிருந்து குணமடைய சிகிச்சைப்பெற்றுக் கொண்டிருக்கும் போது கூட சாவேஸ்  கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவோடு ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சிந்தனையுடன் விவாதித்திருக்கிறார். தற்போது  மேல்சிகிச்சைக்காக மீண்டும் கியூபா நோக்கி சென்றிருக்கிறார். புரட்சியின் சின்னமாய் எப்போதும் செஞ்சட்டையுடன் காட்சிதரும் தோழர் சாவேஸ் இன்று கிளம்பும் போதும் அதே சிவப்பு சட்டையுடன் கம்பீரமாய் தான் நாட்டு மக்களிடம் விடைபெற்று சென்றார். "இது சாவதற்கான நேரமில்லை.. வாழ்வதற்கான நேரமிது.." என்று சாவேஸ் புறப்படும் முன்பு தன் மக்களிடம் முழங்கினார். அந்நாட்டு தேசியகீதம் முழங்க வெனிசுலா மக்கள் தங்கள் தலைவனை வழியனுப்பி வைத்தனர்.
           இந்த உலகம் வாழ தோழர். சாவேஸ் நீண்ட காலம் வாழவேண்டும்.. நாமும் அவர் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துவோம்...