புதன், 26 நவம்பர், 2014

வாரணாசியில் மோடியின் வெற்றிக்கு உதவிய போலி வாக்காளர்கள்...!

               
         
               ''போலிகள்'' தான் நரேந்திரமோடியின் வெற்றிக்கு துணை புரிந்தது என்றால் அதை யாராலும் மறுக்கமுடியாது. அவரைப் பொருத்தவரை அவரது நடை, உடை, பாவனை, பேச்சு, விளம்பரம், சொந்த வாழ்க்கை எல்லாமே பெரும்பாலும் போலிகள் தான். அதேப்போல் சென்ற பாராளுமன்றத்தேர்தலில் வாரணாசி தொகுதியில் நரேந்திரமோடி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலை விட சரியாக 3,71,784 வாக்குகளை அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் மோடி அமோக வெற்றி பெற்றார் என்று  பாரதீய ஜனதாக்கட்சிக்காரர்களும், பத்திரிக்கைகாரர்களும், தொலைக்காட்சிகாரர்களும்  புலங்காகிதம் அடைந்துபோயினர்.
               ஆனால் தற்போது புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் வாரணாசி தொகுதி முழுதும் ஆய்வு செய்ததில் இதுவரையில் சுமார் 3,11,057 பேர் ''போலி வாக்காளர்கள்'' என்றும், இன்னும் ஆய்வு முழுதும் முடிவடையும் நிலையில் ஆறு இலட்சத்தை தாண்டும் என்றும் தேர்தல் ஆணைய உயரதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த போலி வாக்காளர்களை தொகுதி வாக்காளர் பட்டியலில் சேர்த்தது வாரணாசியை உள்ளடக்கிய உத்திரபிரதேச மாநிலத்தை ஆளும் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் ஆய்வு செய்தால், அந்த தேர்தலில் மாநிலத்தை ஆளும் சமாஜ்வாடி கட்சி 48,291 வாக்குகளே பெற்று நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டதினால் அந்த கட்சியின் மீது சந்தேகப்படுவதில் நியாயமில்லை. அப்படியென்றால் அத்தொகுதியில் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற கட்சியை சேர்ந்தவர்கள் தான் போலி வாக்காளர்களை திட்டமிட்டு சேர்த்திருக்கவேண்டும். ஏனென்றால் நரேந்திரமோடி பெற்ற மொத்த வாக்குகள் 5,81,022 ஆகும். இவ்வளவு வாக்குகள் எப்படி வந்தது...? பாரதீய ஜனதாகட்சியின் ஜனநாயகத்தையே  கேலிக்கூத்தாக மாற்றி இருக்கிறது. போலி வாக்களார்கள் பட்டியலை தயாரித்து வெற்றிபெற்ற பா.ஜ.க தமிழகத்தில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தையே விஞ்சிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.              
                 மிகப்பெரிய எண்ணிக்கையிலான போலி வாக்காளர் பட்டியல் உறுதியானால் நரேந்திரமோடியின் வெற்றியை தேர்தல் ஆணையம் ரத்து செய்யுமா...? மறு தேர்தலுக்கு உத்திரவிடுமா...? என்பதை நியாயத்தின் பக்கம் நிற்கும் மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.
3,11,057
3,71,784
3,71,784
3,71,784

செவ்வாய், 25 நவம்பர், 2014

மனைவிக்கு பாதுகாப்பு அளித்த பாசக்கார கணவர் மோடி...!


                        சென்ற பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்தபோது பிரதமர் நரேந்திரமோடி முதல்முறையாக தான் ''திருமணமானவர்'' என்றும், மனைவியின் பெயர் ''யசோதா பென்'' என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன்பு குஜராத் சட்டமன்றதேர்தல்களில் போட்டியிட்டபோது அப்போதைய வேட்மனுக்களில் தான் ''திருமணமாகாதவர்'' என்றே குறிப்பிட்டிருக்கிறார் என்பது தான் உண்மை.. கடந்த  பாராளுமன்றத்தேர்தலுக்கு முன்பு தான் மோடியின் குட்டு வெளியானது. மோடி ஏற்கனவே திருமணமானவர் என்றும், மனைவியின் பெயர் யசோதா பென் என்றும், 64 வயதான ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் என்றும், 1968-ஆம் ஆண்டில் மோடியுடன் திருமணம் முடிந்து பின்னர், கணவரால் கைவிடப்பட்டு குஜராத்தில் உன்ஜ மேஹ்சனா மாவட்டத்தில் பிரம்மன்வாடா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார் என்றும் புகைப்படத்துடன் இந்திய பத்திரிக்கைகளில் பல மொழிகளில் வெளியானவுடன்  மோடி வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல்,   ஏற்கனவே தனக்கு மனைவி இருக்கிறார் என்ற தகவலை மறைத்துவிட்டோமே என்ற குற்றவுணர்வும் இல்லாமல்  தன்னுடைய மனைவி பற்றிய தகவல்களை பாராளுமன்றத்தேர்தல் வேட்புமனுவில் மட்டும் வேறு வழியில்லாமல் குறிப்பிடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
                 அவர் அத்தோடு நிற்கவில்லை. பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் தன்னுடைய மனைவி நெருங்கி அவரது மனதில் மறைந்திருக்கும் உண்மைகளை கிளறி வெளியுலகிற்கு காட்டிவிடுவார்கள் என்ற பயத்தில் தன்னுடைய ஆட்களை யசோதா பென்னை சுற்றி யாரும் அவரை நெருங்கமுடியாத வண்ணம் அவருக்கே தெரியாமல் பாதுகாப்பு வளையம் அமைத்தார். பிரதமாராக பதவியேற்ற பிறகு  இந்த ''பாசக்கார கணவர்'' அரசின் செலவிலேயே தன்னுடைய மனைவிக்கு அவருக்கே தெரியாமல் 10 கமேண்டோக்கள் அடங்கிய பூனைப்படை பாதுகாப்பை கடந்த மே 30 முதல் அளித்திருக்கிறார். இப்படிப்பட்ட பாதுகாப்பை அவருக்கு அளித்திருப்பது பற்றிய தகவலும் யசோதா பென்னுக்கு சொல்லப்படவில்லை. அதற்கான ஒப்புதலும் அவரிடம் பெறப்படவில்லை.
               இந்த பூனைப்படையோ யசோதா பென்னின்  வீட்டிற்கு வெளியே 24 மணிநேரமும் காவலில் இருப்பதும், அவரது வீட்டிற்கு வருவோரை விசாரணை செய்து அனுப்புவதுமான வேலைகளை செய்வது என்பதும், தான் வெளியே எங்கு சென்றாலும் தான் அழைக்காமலேயே என்னை பின்தொடர்வதுமான வேலைகளை செய்வது என்பதும் தன்னுடைய தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுவதாக கருதுகிறார்.  அதுமட்டுமல்லாமல் தன்னை பின் தொடர்பவர்கள் உண்மையிலேயே காவல் துறையை சேர்ந்தவர்கள் தானா என்ற அச்சப்படுகிறார்.
                 இந்த சூழ்நிலையில் தான் யசோதா பென்  தனது பாதுகாப்பு சம்பந்தமான முழுவிபரம் தனக்கு அளிக்கப்படவேண்டும் என்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் மூன்று பக்க கடிதம் ஒன்றை மாவட்ட காவல் துறை உயரதிகாரியிடம் நேரில் சென்று அளித்திருக்கிறார்.
            முன்பு ஒரு முறை பிரதமர் நரேந்திரமோடி தன்னை அழைத்து சேர்த்துக்கொண்டால், அவருடன் சேர்ந்துவாழ ஆசைப்படுகிறேன் என்று பத்திரிக்கையாளர்களிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் நரேந்திரமோடி இதுவரை தனது மனைவியின் ஆசையை கண்டுகொள்ளவேயில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 23 நவம்பர், 2014

கியூபா சர்வாதிகார நாடு - பொய் பிரச்சாரம்


  சர்வாதிகாரத்திற்கு அர்த்தம் தெரியாத மேற்குலகம்....!           
கியூபாவில் வாழும் புரட்சியாளன் சே குவேராவின் 
புதல்வியுடனான பேட்டி ...!               

கேள்வி : 
                 மேற்குலகம் கியூபாவை ஒரு சர்வாதிகார நாடாகப் பார்க்கின்றது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : 
    மேற்குலகில் இருப்பவர்களுக்கு ''சர்வாதிகாரம்'' என்றால் என்னவென்றே தெரியாது. எந்த சர்வாதிகாரியும் தனது மக்களை படிக்க வைக்கமாட்டான். ஏனென்றால், எந்தளவுக்கு மக்கள்  அதிகமாக படிக்கிறார்களோ, அந்தளவுக்கு சுதந்திரமாக சிந்திப்பார்கள்.
                எந்தவொரு சர்வாதிகாரியும் அனைவருக்கும் இலவசக்கல்வியை அறிமுகப்படுத்தமாட்டான்.... எப்படிப்பட்ட சர்வாதிகாரி தனது மக்கள் ஆரோக்கியமாக வாழவும், இலவசமாக கல்வி கற்கவும் விடுவான்....? எப்படிப்பட்ட சர்வாதிகாரி பிற உலக மக்களுடன் ஒற்றுமையாக வாழுமாறு தனது மக்களுக்கு போதிப்பான்....? கியூபாவில் அதுதான் நடக்கிறது.
        ஒற்றுமை, மரியாதை, பிற மக்களின் மேல் அன்பு செலுத்துதல், மற்றவர்களின் நன்மைக்கான சுய அர்ப்பணிப்பு - இந்தக் கொள்கைகள் தான் கியூப மக்களுக்கு போதிக்கப்படுகின்றன. அதை எப்படி நீங்கள் சர்வாதிகாரத்துடன் முடிச்சுப் போடலாம்...?

முழுமையான பேட்டியை வாசிப்பதற்கு:

‘West has no idea what a dictatorship is’ – Che Guevara’s daughter to RT
http://rt.com/news/207111-west-dictatorship-cuba-guevara/

சனி, 22 நவம்பர், 2014

வெளியே தலைக்காட்டும் மோடியின் அமெரிக்க விசுவாசம்...!

         
         இதுவரையில் புற்றில் மறைந்திருந்த பாம்பு அச்சமில்லாமல் வெளியே தலைக்காட்டிவிட்டது. இன்று வரையில் நரேந்திரமோடியின் மனதுக்குள்ளேயும் மூளைக்குள்ளேயும் உள்ளுக்குள்ளேயே மறைமுகமாக புகைந்துகொண்டிருந்த அமெரிக்க விசுவாசமும், பாசமும் இப்போது முழுதும் வெளியே வந்துவிட்டது. வருகிற 2015 - ஆம் ஆண்டில் ஜனவரி 26 அன்று நம் நாட்டின் தலைநகரில் இந்திய குடியரசு தலைவர் நம் தேசக்கொடியை ஏற்றி, இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் ''சிறப்பு விருந்தினராக'' கலந்துகொள்ளவேண்டும் என்று பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஒபாமாவை விசுவாசத்துடனும், பாசத்துடனும் அழைத்திருக்கிறார். அதற்கு ஒபாமாவும் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒரு அமெரிக்க அதிபர் இந்திய குடியரசு தினவிழாக் கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதும், கலந்துகொள்வதும் இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாகும். 
                அதுமட்டுமல்ல நம் நாடு இதுவரையில் அணிசேரா கொள்கையை பின்பற்றிவரும் வெளியுறவு கொள்கையை கொண்ட நாடு. அதனால் தான் இதுநாள் வரையில் நம் நாட்டின் குடியரசு தினவிழாவின் சிறப்பு விருந்தினாராக அணிசேரா நாடுகளை சேர்ந்த அதிபர்  அல்லது பிரதமரை மத்திய அரசு அழைத்து விழாவினை சிறப்பு செய்வார்கள். ஆனால் இம்முறை மோடி தான் பிரதமாராக பதவியேற்று நடைபெறும் முதல் குடியரசு தினவிழாவை நம்முடைய வழக்கத்திற்கு மாறாக அமெரிக்க அதிபரோடு கொண்டாட முடிவெடுத்திருக்கிறார். மோடி தன்னுடைய ''முதல் மரியாதையை'' ஒபாமாவுக்கு காட்டி தனது அமெரிக்க விசுவாசத்தையும், பாசத்தையும் வெளிகாட்டியிருக்கிறார். ஐ.எம்.எப். என்று சொல்லக்கூடிய அமெரிக்க சர்வதேச நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து விட்டு, கடந்த பத்து ஆண்டு காலமாக  இந்தியாவின் பிரதமராக ''குப்பைக்கொட்டிய'' மன்மோகன் சிங் கூட இந்த அளவிற்கு தன்னுடைய ''எஜமான விசுவாசத்தை'' காட்டவில்லை. ஆனால் மோடி அவரையும் மிஞ்சிவிட்டார். அதனால் தானே  மன்மோகன் சிங் ''செயல்படாத பிரதமர்'' என்று அமெரிக்க பத்திரிக்கையால் வசைபாடப்பட்டார்.
            மோடி ஒபாமாவை விழாவுக்கு அழைத்துவிட்டு சும்மா அனுப்புவாரா...? நிச்சயமாக புது மாப்பிள்ளை அளவுக்கு கவனிக்காமல் அனுப்பமாட்டார். நல்லா சாப்பாடு போட்டு நிறைய பரிசுப்பொருட்களை அள்ளிக்கொடுத்து அனுப்புவார் என்பது நமக்கு தெரிந்தது தானே. இந்தியாவில் பொதுத்துறையில் இயங்கிக்கொண்டிருக்கும் இன்சூரன்ஸ், வங்கி, இரயில்வே, இராணுவம் உள்ளிட்ட அரசுத்துறைகள் அனைத்தையும் மூட்டைக்கட்டி ஒபாமா கையில் ஒப்படைக்காமல் விடமாட்டார். அதற்கு தான் ஒபாமாவிற்கு இந்த குடியரசு தின முதல் மரியாதை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 
                அதுமட்டுமல்ல இந்த முதல் மரியாதையில் இன்னொரு உண்மையும் புதைந்து கிடக்கிறது.   2015 -ஆம் ஆண்டு என்பது அமெரிக்காவின் செல்லக்குழந்தைகளான    ''எல்.பி.ஜி'' என்று சொல்லக்கூடிய தாராளமயம் - தனியார்மயம் - உலகமயம் இந்தியாவிற்குள் நுழைந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகப்போகிறது. எனவே 2015 என்பது இந்தியாவின் குடியரசு தினவிழா மட்டுமல்ல. இந்த ''மயங்களின் ''வெள்ளி விழா'' என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அதனால் தான் இந்த மயங்களிலிருந்து இடதுசாரிகளின் போராட்டங்களினால் தப்பித்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இன்சூரன்ஸ், வங்கி, இரயில்வே போன்ற மிச்ச சொச்சத்தையெல்லாம் ஒன்றாக மூட்டைக்கட்டிக் கொடுப்பதற்கு மோடி ஏற்பாடு செய்கிறார் என்பது தான் யாராலும் மறுக்கமுடியாத உண்மை.

வெள்ளி, 21 நவம்பர், 2014

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்தியா வருகை...!


                     பாரதீய ஜனதாக்கட்சி பதவியேற்ற நாளிலிருந்து பிரதமர் நரேந்திரமோடிக்கு  ''மாதந்தோறும் ஒரு வெளிநாட்டுப்பயணம்'' என்றால், வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் சுஷ்மா சுவராஜ்க்கோ ''வாரந்தோறும் ஒரு வெளிநாட்டுப்பயணம்'' என்று இந்த இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டு வெளிநாட்டுப் பயணமாக பறந்து கொண்டிருக்கிறார்கள்.
                   வெளிநாடுகளுக்கு எல்லாம் பறந்து பறந்து சென்று அந்நாட்டு மக்களை எல்லாம் ஏதாவது ''சாகசங்களை'' செய்து கவர்ந்து தன்னை உலக மக்களை கவர்ந்த ''உலக நாயகனாக'' காட்டிக்கொள்ளவேண்டும் என்ற பேராசையில் மாதம் ஒரு வெளிநாட்டுப் பயணம் செல்கிறார். மோடி பிரதமராக பதவியேற்று ஆறு மாதங்களே ஆகின்றன. இந்த காலத்தில் அவர்  பூடான், நேபாளம், பிரேசில், ஜப்பான், அமெரிக்கா, மியான்மர், ஆஸ்திரேலியா மற்றும் பிஜி என எட்டு நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். பயணம் செய்த நாட்கள் இந்த ஆறு மாதத்தில் 30 நாட்கள். அதுவும் இவர் மட்டும் தனியாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்வாரா...? ஒரு பட்டாளத்தையே அல்லவா அழைத்துச்செல்கிறார். உள்நாட்டில் உழைப்பாளி மக்களை சுரண்டி வருமானத்தையும், செல்வாக்கையும், சொத்துக்களையும் பெருக்கி கொழுத்துப்போன பெருமுதலாளிகள் கூட்டத்தையும், தனக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடும் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தையும், அதிகாரிகள் கூட்டத்தையும் அல்லவா தன்னோடு அழைத்துச்செல்கிறார். இவர்கள் அனைவரும் இந்திய மக்களின் வரிப்பணத்தில் தான் வெளிநாட்டை சுற்றி வருகிறார்கள். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மக்களுக்கு அளிக்கப்பட்டுவந்த மானியத்தை வெட்டுவது, தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வை ஒத்திப்போடுவது, படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை தடை செய்வது போன்ற சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபடும் நரேந்திரமோடி இந்த விஷயத்தில் எந்தவிதமான சிக்கன நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது தான் வெளிப்படையான உண்மை.
              இன்னொரு பக்கம் வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் சுஷ்மா சுவராஜோ கடந்த ஐந்து மாதங்களில் இன்றுவரை பங்களாதேஷ், பூடான், நேபாளம், மியான்மர், சிங்கப்பூர், வியட்நாம், பஹரைன், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, மொரிஷியஸ், மாலத்தீவுகள் மற்றும் அரபு நாடுகள் என   பதினான்கு நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். வாரந்தோறும் ஒரு வெளிநாட்டுக்கு பயணம் செய்கிறார். இவர் எப்போதாவது இந்தியாவிற்கு வருகை தருவார். அதிலும் குறிப்பாக வெளிநாட்டிற்கு சென்று திரும்பும் மோடி இந்தியா வந்து இறங்கும்போது அவரை விமானநிலையத்தில் வரவேற்பதற்கு இவர் கண்டிப்பாக இந்தியாவில் இருப்பார். சுஷ்மா வெளிநாடுகளுக்கு செல்கிறார் என்றால் இவரும் ஒரு கூட்டத்தையே அழைத்துச்செல்வார். இந்த பயணங்களுக்கும் மக்களின் வரிப்பணம் பலகோடி செலவாகிறது. இந்த வெளிநாட்டுப்பயனத்திற்கும் கட்டுப்பாடுகளோ, சிக்கன நடவடிக்கைகளோ கிடையாது என்பதும் வெளிப்படையான உண்மை.
             இவர்கள் மக்களின் வரிப்பணத்தில் ''உலகம் சுற்றும் வாலிபர்கள்''

திருமலை - திருப்பதி கோவிலின் மறுபக்கம்...!


 கட்டுரையாளர் : தோழர். பிருந்தா காரத்             
                                      தலைமைக்குழு உறுப்பினர்,                  
                                      மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                        
             
              திருப்பதிக்கு நீங்கள் சென்றிருந்தால், முடிவில்லாத நீண்ட வரிசையில் வந்து செல்லும் யாத்திரிகர்களை அக்கோவிலின் தேவஸ்தான நிர்வாகம் சிறப்பான முறையில் நிர்வகிப்பதனைப் பார்த்துவியப்படைந்திருப்பீர்கள். இக்கோவிலுக்கு நாள்தோறும் 40,000 பக்தர்கள் வந்து செல்கின்றனர். விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை 1 லட்சம் அல்லது அதற்கும் கூடுதலாக இருக்கிறது. இங்கு வரும் பக்த கோடிகளுக்கு அளிக்கப்படும் சேவைகள் மிகவும் பிரத்யேகமானவை ஆகும். அங்குள்ள எட்டு பெரிய உணவு அருந்தும் அறைகளில் ஒவ்வொரு நாளும் 40,000 பேருக்கு இலவசமாக உணவு பரிமாறப்படுகிறது. திருப்பதி வெங்கடாசலபதிக்கு தங்களது முடியை காணிக்கையாக அளிப்பதாக செய்து கொண்ட வேண்டுதலை பக்த கோடிகள் நிறைவேற்றிட உதவிடும் வகையில், கிட்டத்தட்ட 600 முடிதிருத்துபவர்கள் தங்களது சேவையை அளித்து வருகின்றனர்.
          அதுமட்டுமின்றி, ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு முடி வெட்டும் பிளேடையும் முடிவெட்டுவதையும் நிர்வாகம் இலவசமாக அளிக்கிறது. இக்கோவிலில் அளிக்கப்படும் இத்தகைய சேவைகளை நாள்தோறும் கிட்டத் தட்ட 20,000 பேர் பயன்படுத்துகின்றனர். கட்டணம் செலுத்தி பயன்படுத்திட 7000 தங்கும் அறைகள் இங்கு உள்ளன. உலகிலேயே இக்கோவிலின் பிரசாதம் இந்த ஊரின் பெயரை அடைமொழியாகக் கொண்டு, ''திருப்பதி லட்டு'' எனப் பிரபலமாக உள்ளது. இவ்வளவு பெரிய மக்கள் திரள் நாள்தோறும் வந்து சென்றாலும், இக்கோவிலின் ஒட்டுமொத்த பரப்பளவும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் உள்ளது பெருமை கொள்ளத்தக்க ஒன்றாகும்.
         ஆனால், இதன் பின் அப்பட்டமான ஒழுங்கின்மை உள்ளது என்பதையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.. நாட்டிலேயே மிகப் பணக்கார கோவில் என்றால் அது திருமலை - திருப்பதி தான். இக்கோவிலின் ஆண்டு வருமானத்தை மிதமாக மதிப்பீடு செய்தால் கூட அது ரூ.2,500 கோடியாகும். இதுதவிர, இக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களிலிருந்தும் இதற்கு வருமானம் கிடைக்கிறது. இருப்பினும், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் தொழிலாளர் நடைமுறைகள் முற்றிலும் நியாயமற்றவையாகவே  உள்ளன என்பதையும் தரிந்துகொள்ளவேண்டும். இங்கு பணியாற்றிடும் 20,000 தொழிலாளர்களில், 12,000 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்கள் ஆவர். நிரந்தரத் தொழிலாளர்கள் செய்திடும் அதே வேலைகளையே தான் இவர்களும் செய்துவருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கோவிலில் குறைந்தது 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர். இக்கோவிலின் பிரபலமான லட்டுக்களை தயாரிக்கும் தொழிலாளர்களின் நிலைமையைப் பாருங்கள். இந்த லட்டுக்களைத் தயாரிக்கும் பணியில் ''வைஷ்ணவ பிராமணர்கள்'' மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு உதவி செய்திட ஒரு குழு உள்ளது. இக்குழுவில் இருப்பவர்கள் வைஷ்ணவ பிராமணர்களாக இல்லாவிடினும் பிராமணர்களாக இருக்கவேண்டும். லட்டுப் பிரசாதத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 50 அல்லது அதற்கும் மேற்பட்ட வைஷ்ணவ பிராமணர்கள் அல்லாதோர், பணி நீக்கம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்...? சாதி ரீதியிலான நடவடிக்கைகள் சட்டத்தினால் தடுக்கப்பட்டவை அல்லவா...? எது எவ்வாறு இருப்பினும், 420 லட்டு தயாரிப்பாளர்களும், அவர்களது உதவியாளர்களும் சேர்ந்து நாளொன்றுக்கு 1.25 லட்சம் லட்டுக்களைத் தயாரிக்கின்றனர். பெரிய லட்டு 750 கிராம் எடையளவு கொண்டதாகவும், சிறிய லட்டு 75 கிராம் எடையளவு கொண்டதாகவும் இருக்க வேண்டும். லட்டின் எடையை எந்த எடை பார்க்கும் கருவியை பயன்படுத்தாமலேயே மிகத் துல்லியமாக ஒவ்வொரு முறையும் தயாரிக்கும் திறன் கொண்டவர்கள் இவர்கள். 1987-ஆம் ஆண்டில், புதிய நடைமுறை ஒன்று ஏற்படுத்தப்பட்டபோது, லட்டுதயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தாங்கள் நிரந்தரப் பணியாளர்கள் ஆக்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். பத்தாண்டுகள் கழித்து, இவர்கள் நிரந்தரமாக்கப்பட நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு அமலாக்கப்படவில்லை. இப்பணியாளர்கள் நிரந்தரமாக்கப்பட மேலும் பத்தாண்டு காலம் ஆனது. ஆனால், யாரெல்லாம் ஆரம்பத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்தார்களோ, அவர்களுக்கு மட்டுமே பலன் கிடைத்தது. இதன் காரணமாக, லட்டு தயாரிக்கும் பணியில் ரூ.35,000 மாதாந்திர ஊதியத்துடன் வெறும் 100 நிரந்தர பணியாளர் கள் மட்டுமே தற்போது உள்ளனர்.
            அதே நேரத்தில், இதே வேலையை செய்கின்ற பெரும்பாலானோருக்கு ரூ.15,000 மட்டுமே ஊதியமாக அளிக்கப்படுகிறது. ஊதியம் தவிர ஒரு சில சிறிய பயன்கள் இவர்களுக்கு அளிக்கப்பட்டாலும், இவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்பது கிடையாது. ஏதேனும் ஒரு அவசர காரணத்திற்காக இவர்கள் விடுப்பெடுத்தாலும், இவர்களது ஊதியத்தில் அதற்கு பிடித்தம் செய்யப்பட்டுவிடும். இதர துறைகளின் நிலைமை இதைவிட இன்னமும் மோசமானதாகும். 4000 துப்புறவு மற்றும் சுகாதார பணியாளர்களின் நிலைமை மிகவும் அவலமானது. இப்பணியில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள் ஆவர். இரவோ அல்லது பகலோ, எந்த நேரமும் சீருடை அணிந்த ஆண்களும், பெண்களும் கைகளில் துடைப்பக்கட்டைகளோடு சுத்தம் செய்து கொண்டிருப்பதனையும், கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதை உத்தரவாதம் செய்வதனையும் பார்த்திட முடியும். இவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் எவ்வளவு தெரியுமா...? ஒரு மாதத்திற்கு ரூ.6,500க்கும் குறைவான தொகையே இவர்களுக்கு அளிக்கப்படுகிறது என்பது வேதனையானது.  இவர்களுக்கு வேறு எந்த பயனும் கிடையாது,  ஈஎஸ்ஐ, வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) மட்டுமல்லாது, வாராந்திர விடுமுறையும்  கூட கிடையாது.
              இத்திருக்கோவிலை சுத்தம் செய்திடும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள ''சுலப் இண்டர்நேஷனல்'' என்ற நிறுவனத்தால் அடிமைகளாக இத்தொழிலாளர்கள் பணியிலமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பணிக்கான ஒப்பந்தத்தின் மதிப்பு இதுவரையில்  மிகவும் ரகசியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தும் இது குறித்த தகவல் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. எனினும், சட்டத்தின்படி, இத்தொழிலாளர்களின் இத்தகைய நிலைமைக்கு பிரதான பணியமர்த்துபவராக இக்கோவில் நிர்வாகமும் பொறுப்பாகும். பிரதான பணியமர்த்துபவர்களின் இத்தகைய பொறுப்பை வலியுறுத்தும் பிரிவை ராஜஸ்தான் மாநில வசுந்தர ராஜே அரசு நீக்கியதைப் போலவே தானும் நீக்கிட வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இலவசமாக உணவளித்திடும் இக்கோவிலின் உணவகங்களில் உணவு பரிமாறுபவர்களாகவும், சுத்தம் செய்பவர்களாகவும் பணி புரிபவர்களுக்கு ஒரு சில பயன்கள் கிடைக்கின்றன என்றாலும், இவர்களும் இது போன்ற பாரபட்சங்களை எதிர்கொள்கின்றனர். இங்கு பணியாற்றிடும் நிரந்தரத் தொழிலாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.25,000 ஈட்டிடும்போது, அதே வேலையை செய்கின்ற ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள இதர 600 தொழிலாளர்களுக்கு இதில் மூன்றில் ஒரு பகுதி தொகையே கிடைக்கிறது. இவை எல்லாவற்றையும் விட கொடுமையானது என்னவென்றால், இங்கு பணியாற்றுகிற நிரந்தரப் பணியாளர்கள் திருப்பதி வெங்கடாசலபதியை எந்த கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக தரிசித்திடலாம், ஆனால், ஒப்பந்தத் தொழிலாளர்கள் இதற்குக் கூட கட்டணம் செலுத்திட வேண்டும் என்பது தான் அந்த கொடுமை. ஆந்திரப் பிரதேச அரசால் நியமிக்கப்பட்ட ''திருப்பதி திருமலை தேவஸ்தான டிரஸ்ட்'' என்பது, ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களோடு, ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் தலைமையிலான செயலகத்தைக் கொண்டது. இவர்களே இக்கோவிலின் நிர்வாகத்திற்கு பொறுப்பானவர்கள் ஆவர். பக்தர்கள் தாராளமாக அளிக்கும் நன்கொடை வாயிலாக இக்கோவிலின் சொத்துக்கள் தொடர்ச்சியாக திரட்டப்பட்டு வருகிறது. பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் முடி கூட ‘விக்‘ தயாரிப்பாளர்களுக்கு மற்றும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்பனை செய்யப்படுவதன் வாயிலாக ஆண்டுதோறும் குறைந்தது ரூ.200 கோடிக்கும் மேல் வருமானமாக இக்கோவிலுக்கு கிடைக்கிறது.
         திருப்பதிக்கு வந்து செல்லும் பக்தர்கள் மனதில் அப்பயணத்தை நீங்கா இடம்பிடிக்கச் செய்திடும் தொழிலாளர்கள் மரியாதையோடும், கண்ணியத் தோடும் நடத்தப்படுவதனை கோவில் நிர்வாகமும், மாநில அரசும் உறுதி செய்திட வேண்டாமா....?

நன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா
தமிழில் - எம்.கிரிஜா
நன்றி : தீக்கதிர்

வியாழன், 20 நவம்பர், 2014

தமிழகத்தில் காலூன்ற மோடி நடத்தும் அரசியல் நாடகம்...!

                
                 தான் ஆசைப்பட்டது போல் ஆட்சியை பிடித்து பிரதமர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார்  நரேந்திரமோடி என்றாலும், நாடு முழுதுமான மக்கள் பேராதரவோடு வெற்றிபெற்று பிரதமரானவரில்லையே. வெறும் 32 சதவீத மக்களே தேர்ந்தெடுத்த பிரதமர் இவர். அதிலும் குறிப்பாக ஒரு சில மாநில மக்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், திரிபுரா போன்ற இந்தி மொழி பேசாத மாநில மக்கள் இவரை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமல்ல தேர்தல் நேரத்தில் இவரது கவர்ச்சிகரமான தேர்தல் பிரச்சாரமும், மதவாத பிரச்சாரமும் இம்மாநில மக்களிடம் எடுபடவில்லை என்பதும் உண்மை. 
           இந்த சூழ்நிலையில் தான் எப்படியாவது இந்த மாநிலங்களில் தான் காலூன்றவேண்டும் என்பதும், இந்த மாநிலங்களில் பாரதீய ஜனதாக்கட்சி ஒரு வலிமை வாய்ந்த கட்சியாக வளரவேண்டும் என்பதும், அதன் மூலம் அனைத்து மக்களும் நேசிக்கும் ''தேசத்தலைவராக'' வரலாறு பேசவேண்டும் என்பது மோடியின் சிந்தனையில் உதித்து சுடர்விடத்தொடங்கியது  என்பது மட்டுமல்ல, அவர் சார்ந்த பாஜக - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நீண்ட அட்டவணையில் முதன்மையாகவும் உள்ளது.
                  ஆனால் மோடி எதிர்ப்பார்ப்பது போல் மதத்தை வைத்து வித்தை காட்டுவதற்கும், கலவரம் நடத்துவதற்கும், அதன் மூலம் மக்களை ஈர்ப்பதற்குமான ஏற்ற மாநிலங்களாக அந்த மூன்று மாநிலங்களும் இல்லை. இவைகளை கண்டு ஏமாறுகின்ற அளவிற்கு  அம்மாநில மக்களும்  இல்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் மேற்குவங்கமும், கேரளாவும் வலிமையான இடதுசாரி சிந்தனைகளை கொண்ட மக்கள் வாழும் மாநிலங்கள் என்பதும், தமிழகம் இன்றும் தந்தை பெரியாரின் சிந்தனைகள் செழிப்பாய் வளர்ந்த மாநிலம் என்பதும் தான்,  பிற்போக்குத்தனமான மதவாத   சக்திகளான பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்.-ம் இந்த மூன்று மாநிலங்களிலும் நுழையமுடியாமைக்கு முக்கிய காரணம். 
             எனவே தான் தமிழகத்தில் எப்படியாவது காலூன்றவேண்டும் என்பதற்காக பல்வேறு அஸ்திரங்களை எடுத்தார்  நரேந்திரமோடி. ஊழல் குற்றங்களை புரிந்த இரு திராவிடக்கட்சிகளின் தலைவர்கள் மீதான ''ஆமை வேக'' நீதிமன்ற வழக்குகளை விரைவுப்படுத்தியும், அதன் மூலம் அவ்விரு திராவிடக்கட்சிகளின் தலைவர்களுக்கு ''வாய்ப்பூட்டு'' போட்டு அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் செய்து இரு திராவிடக்கட்சிகளையும் காணாமல் போகும்படி செய்வதன் மூலம் நாடு முழுதும் உள்ள மாநிலக்கட்சிகளை ஒழித்துக்கட்டிவிட்டு ஆர்.எஸ்.எஸ்-ன் நெடுநாளைய விருப்பப்படி அமெரிக்காவில் உள்ளது போன்ற இரு கட்சி ஆட்சி முறையை கொண்டுவருவதற்கான வேலையில் மோடி திட்டமிட்டு செயல்படுகிறார். 
                 இரு திராவிடக்கட்சிகளால் தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக, திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ.க-வை பலம் பொருந்திய கட்சியாக மாற்றுவதற்காக புத்திசாலித்தனமான குறுக்குவழிகளை மோடி கையாள்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. மற்ற மாநிலங்களைப் போல் மதவாதம் இங்கே எடுபடவில்லை.   வழக்கமாக சினிமா நடிகர்களை தான் தமிழக மக்கள் தங்கள் தலைவர்களாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதால், திரைப்பட நடிகர்களான ரஜினிகாந்த்க்கும், கமல்ஹாசனுக்கும் வலைவிரித்துப் பார்த்தார். ஆனால் அவர்கள் அவர் விரித்த வலையில் சிக்கவில்லை. எனவே வழக்கமாக எல்லா தமிழக கட்சிகளும் தமிழர்களின் ஓட்டுக்காக கையில் எடுக்கும் ''தமிழின உணர்வு'' அஸ்திரத்தை மோடியும் கடைசியாக எடுத்திருக்கிறார். 
             தமிழக - இலங்கை மீனவர்கள் பிரச்சனை என்ற எளிதில் தீப்பற்றிக்கொள்ளும், இன உணர்வுகளைத் தூண்டும் ''பிரம்மாஸ்திரத்தை'' எடுத்தார். அதற்காக இலங்கை அதிபரும், மோடியின் நண்பருமான ராஜபட்சேவுடன் கூட்டணி அமைத்தார். சுப்பிரமணியசாமி இவ்விருவருக்கும் (ராமர்) பாலமாய் இருந்து உதவினார். மூவரும் சேர்ந்து ''மோடியும் ஐந்து மீனவர்களும்'' என்ற நாடகத்தை அரங்கேற்ற தொடங்கினார்கள். 2011-ஆம் ஆண்டு போதை பொருள் கடத்தியதாக பிடிக்கப்பட்டு இன்றுவரையில் சிறையிலிருந்த ஐந்து இந்திய மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் திடீரென்று சென்ற அக்டோபர் 30-ஆம் தேதியன்று அந்த ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட, தமிழக மீனவ சமுதாயமும், ''தமிழின  உணர்வு'' கொண்ட தமிழக கட்சிகளும் ராஜபட்சேவை நோக்கி கொந்தளிக்க, உடனே தண்டனையை நிறைவேற்றிவிடுவார்களோ என்ற பயத்தை திட்டமிட்டு மக்கள் மத்தியில் பரப்பிவிடப்பட, வெளிநாட்டில் உள்ள  இந்திய குடிமக்களின் உயிரை காப்பாற்றவேண்டியது ஒரு பிரதமரின் கடமை என்பதைக்கூட தமிழக மக்கள் மறந்துவிட, தமிழக மீனவர்களின் உயிரை காப்பாற்றுங்கள் என்று ஆபத்தாண்டவன் - அநாதை இரட்சகனான நரேந்திரமோடியை கும்பிட்டு வேண்டிக்கொள்ள, உடனே அதற்காகவே காத்திருந்த மோடி ''பெரிய மனசு பண்ணி'' தன்னுடைய ''சமாதானத்தூதர்'' சுப்பிரமணிசாமியை இலங்கைக்கு அனுப்பிவைக்க, கட்டளையை ஏற்று உடனே இலங்கைக்குள் குதித்த சு.சாமி ''நிறுத்துங்க... நிறுத்துங்க... போடாதீங்க...'' என்று கத்திக்கொண்டு ராஜபட்சேவை நோக்கி ஓடிவர, தண்டனையை நிறைவேற்றுவதற்காக கிளம்பிக்கொண்டிருந்த இராஜபட்சே அவரை பார்க்க, சு.சாமி மோடி கொடுத்தனுப்பிய அரசு முத்திரையிட்ட கணையாழியை ராஜபட்சேவிடம் காட்ட, அவரும் என்ன விஷயம் என்று கேட்க, சு.சாமியோ அந்த ஐந்து மீனவர்களுக்கும் தண்டனை நிறைவேற்றாமல் விடுதலை அளித்து உயிருடன் இந்தியாவிற்கு அனுப்பும்படி மோடி அன்புடன் கேட்கச் சொன்னதாக சொல்ல, இந்த செய்திகளை உடனுக்குடன் ட்வீட்டரிலும், பேஸ் புக்கிலும், ஊடகங்களிலும் சுட சுட வெளியிட, அதற்காகே காத்திருந்த ராஜபட்சே தூக்குமேடையில் நின்றுக்கொண்டிருந்த அந்த ஐந்து மீனவர்களையும் கீழே இறக்குவிட்டு விடுதலை அளித்து இந்தியாவை நோக்கி பறக்கச்செய்ய, இன்று வரையில் சோகத்தில் ஆழ்ந்திருந்த தமிழக மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சி கொப்பளிக்க, இந்த இனிய சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த தமிழக பாரதீய ஜனதாக்கட்சியோ ஆனந்த பெருக்கெடுத்து தூக்குமேடைக்கே சென்றுவிட்ட அந்த ஐந்து மீனவர்களின் உயிர்களை பிரதமர் மோடி தான் காப்பாற்றினார் என்று அரசியல் மசாலா தடவி பிரச்சாரம் செய்துவருகின்றது என்பது தான் இதுவரையில் தமிழகத்தில் நடந்துவரும் அரசியல் நாடகமாகும். இந்த நாடகத்திற்கு நமோவும், சு.சாமியும், ராஜபட்சியும் சேர்ந்து கதை. வசனம், இயக்கம் செய்திருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது. 
              நம்ப ''செல்பி புள்ள''  நரேந்திரமோடி, இலங்கையிலிருந்து அரை மணி நேரத்தில் வீடு போய்  சேரவேண்டிய அந்த ஐந்து மீனவர்களை, நேராக புதுடெல்லி இழுத்துக்கிட்டு வந்து தன்னுடன் செல்பி போட்டோ எடுத்து ட்வீட்டரில் போட்ட பிறகு  தான்,   மோடி   அவர்களை அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைத்தார். இனி தமிழ்நாட்டில் பாரதீய ஜனதாக்கட்சி மிக நன்றாக வளரும். தமிழகம் வெளங்கிடும்.

கலைஞானி கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம்...!


 கடிதம் எழுதியது : ப.கவிதா குமார்                    

அன்பான கமல்ஹாசன் அவர்களுக்கு,                        

வணக்கம்....!
          
          தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு அடுத்ததாக நடிப்பிற்கு இலக்கணம் என்றால் நீங்கள்தான் என தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகமே பேசி வருவதன் பின்னணியில் உங்கள் உழைப்பு இருக்கிறது. ஆறு வயதில் களத்தூர் கண்ணம்மாவில் துருதுருவெனத் துவங்கிய உங்கள் கலைப்பயணம், 60 வயது நிரம்பிய போதும் அப்படியே இருப்பதுதான் ஆச்சரியம். 1960-ஆம் ஆண்டு முதல் படத்திலேயே சிறந்த நட்சத்திரத்திற்கான தேசிய விருதை களத்தூர் கண்ணம்மா படத்தில் பெற்ற காரணத்தினாலோ என்னவோ, நான்கு முறை தேசிய விருதும், பதினெட்டு முறை ஃபிலிம்ஃபேர் விருதும் இன்று வரை ப்ரியமிக்க ஒரு குட்டி நாயைப் போலஉங்கள் பின்னாலேயே வந்து கொண்டிருக்கிறது.
           நடிகர், நடன அமைப்பாளர், கதாசிரியர், கவிஞர், பாடலாசிரியர், இயக்குநர் என அத்தனை அவதாரங்களையும் எடுத்துள்ள தாங்கள் பரமக்குடியைச் சேர்ந்த ஒரு சுதந்திரப்போராட்டவீரரின் மகன் என்ற பெருமிதத்துடனே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 
         1996ம் ஆண்டு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்ததனம் என்ற சிறுமியை ஆசிரியர் அடித்ததில் ஒரு கண்ணை இழந்தார். அப்போது அச்சிறுமியின் கண் சிகிச்சைக்காக நிதியளித்ததுடன், உங்கள் உள்ளக் கிடக்கையை ஒரு கவிதையாக்கித் தந்தீர்கள்.
“தேடித் தேடி மருத்துவம் செய்தும்
மாறாது இந்த சாதி சுரம்கேடிகள்
ஆயிரம் கூட்டணி சேர்ந்துகேட்டில் வந்து முடிந்தது காண் !
காவியும் நாமமும் குடுமியும் கோசமும்கண்டு
மயங்கும் மந்தைகளாய்ஆகிப் போனதில் வந்த விளைவுகள்
சொல்லிப் புரியும் வேளையிலே
ஆரிய வேடத்தை திராவிடன் பூண்டதில்
காரியம் கெட்டுப் போனது காண் !
ஓசையும் பூசையும் பார்பனன் சொல்படி
ஆயிரம் ஆண்டுகள் செய்ததனால்ஆகமம் பழகிப் போனது காண் !
அன்றொரு பெரியவர் சாடிய சாடலில்
காவியின் வண்ணம் சற்றே மாறிகருப்பாய் சிவப்பாய் திரியுது காண் !
சாதியும் சாமியும் சாராயம் போல்சந்தைக் கடையில் விற்குது காண் !
சர்கார் எத்தனை மாறி வந்தாலும்
மாறா வர்ணம் நாலும் காண் !
புத்தன் சொன்ன தம்மிம பதத்தில்பாதி மட்டுமே பிரபலம் காண் ! ’’
            சாதிவெறி குறித்து மிகச்சரியாகவே இந்தக்கவிதையில் பதிவு செய்தீர்கள். முற்போக்கு முகாமில் எப்போதும் இருப்பவர் எனக் கருதப்படும் நீங்கள், மதம்குறித்தும், சாதி குறித்தும் எந்த சமரசமின்றி கருத்தைப் பதிவுசெய்து வந்துள்ளீர்கள். சமீபத்தில் 60-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகள். நான் பேச வேண்டிய விஷயம் என்பது உங்களின் திரைவெளி குறித்ததல்ல. பொது வெளி குறித்து. அண்ணல் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ம் தேதி ‘தூய்மையான இந்தியா-2014’ என்ற திட்டத்தை தலைநகர் தில்லியில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.
        அவர் அந்த நாளைத் தேர்ந்தெடுத்ததிலேயே ஒரு அரசியல் இருக்கிறது. ஒருவரின் பிறப்பு குறித்துப் பேசப்படும் போது, இறப்பு குறித்தும் பேசப்படவேண்டும். காந்தியின் பிறந்த நாள் அன்று இந்தியா முழுவதும் நாதுராம் விநாயக் கோட்சே என்ற மதவெறியனின் துப்பாக்கித் தோட்டாவால் காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி மக்களிடையே எடுத்துச் செல்வதை மடைமாற்றம் செய்ய பிரதமர் நரேந்திரமோடி மிகச் சாதுர்யமாக அதேதேதியில், “ஸ்வச் பாரத்” என்று `ஹிந்தியில் அழைக்கப்படும், “தூய்மையான இந்தியா” என்பதைத் துவக்கி வைத்தார். அந்த உண்மையை அறிவீர்களா கலைஞானி? இந்தத் திட்டம் குறித்து உங்களிடம் நான் கேள்வி எழுப்புவதற்குக் காரணமிருக்கிறது. இந்தத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களான 9 பேருக்கு அழைப்பு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்தார்.
         அந்த 9 பேரில் நீங்களும் ஒருவர்! அவரின் அழைப்பை ஏற்று தங்கள் பிறந்த நாளையொட்டி தாம்பரம்- வேளச்சேரி முதன்மை சாலையில் உள்ள ராஜ கீழ்ப்பாக்கம் சந்திப்பு மாடம்பாக்கம் ஏரி அருகில் தூய்மைப்பணி திட்டத்தைத் துவக்கி வைத்து நீங்கள் பேசிய பேச்சைக் குறிப்பிட வேண்டும் என விரும்புகிறேன். “வழக்கமாக எல்லாரும் பிறந்தநாள் விழாக்களை ‘கேக்’ வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். கேக் வெட்டி மகிழ்ச்சி அடைவதைவிட, குப்பையை வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதை பெருமையாக கருதுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது ’’ என்று பேசினீர்கள். ஒரு நாள் குப்பை வெட்டியதை பெருமை பொங்க பேசுகிறீர்கள்.
        அவ்வளவு பெருமை வாய்ந்த பேச்சுகளை அனைத்து ஊடகங்களும் வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டன. இந்தியாவில் மட்டும் பாதாளச் சாக்கடைகளில் இறங்கி விஷவாயுக்கள் தாக்கி இறப்பவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 22 ஆயிரம் பேர் என்று புள்ளி விபரத்தை இந்த ஊடகங்கள் ஏன் வெளியிடுவதில்லை...? என்று என்றாவது நீங்கள் நினைத்ததுண்டா கமல்...? ‘மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளக்கூடாது’ என்று உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தும், தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் இதனால் உயிரிழந்தோர் 800 பேர் என்றால், குப்பையை வெட்டி எப்படி பெருமையாகக் கொண்டாட முடியும்...? நாம் பெற்ற குழந்தையே மலங்கழித்தால் இரத்த சம்பந்தப்பட்ட உறவினர் ஒருவரே கூட அவற்றை அகற்ற முன் வரமாட் டார்கள்.
         ஆனால், செத்துப்போன எலிகள், பூனைகள், பிராணிகளின் தசைகள் மக்கிச் சிதைந்து அரைகுறையாக மிதந்து கொண்டிருக்கும் பாதாளச் சாக்கடையில், நகர மக்களின் மலமும் சிறுநீரும் அசுத்தங்களும் கரைந்து கூடியிருக்கும் பாதாளச் சாக்கடையில், அசுத்த நீரில் தலை நனைய உடல் நனைய, காது மூக்கு துவாரங்களிலும், வாயிலும் அசுத்த நீர் நுழைய, மூழ்கிச் சாகும் துப்புரவுத் தொழிலாளர்கள் அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்கிறார்களே, இதுவரை அவர்கள் குறித்து நீங்கள் கொண்ட கருத்துதான் என்ன...? இந்தியாவில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் 26 லட்சம் குடும்பங்கள் ஈடுபட்டிருப்பதாக மத்திய அரசின் புள்ளி விபரம் கூறுகிறது. இவர்களை மீட்பதற்கான வழிவகைகளை பற்றி “ஸ்வச் பாரத்” பேர்வழி நரேந்திரமோடி இதுவரை வாய்திறக்கவில்லையே.... ஏன்...?
        தூய்மை என்பது புறம் சார்ந்தது மட்டுமல்ல அகம் சார்ந்ததும்தான். இந்தியாவில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளுக்கு நடுவில் 32 குழந்தைகள் மட்டும் இறந்தே பிறக்கும் நிலை என்றால் எங்கே இருக்கிறது தூய்மை...? இந்தியாவில் ஆண்டுதோறும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரண்டு லட்சம் பேர் மடிகின்றனர். அசுத்தமான தண்ணீர், முறையான துப்புரவு வசதிகள் இல்லாமை ஆகிய காரணங்களால் உருவாகும் வயிற்றுப்போக்கு வியாதியால் தான் இந்த குழந்தைகள் மடிகின்றனர்.
            இவற்றில் பெரும்பாலும் தலித் மற்றும் பழங்குடி மக்களின் குழந்தைகளே அதிகம். அப்படியென்றால் மோடியின் தூய்மைத் திட்டம் யாருக்கானது...? கையால் மலம் அள்ளுதல் ஒரு தேசிய அவமானம் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறோம். கையால் மலம் அள்ளுவதையே ஆதரித்துப் பேசிய மோடியின் அழைப்பை ஏற்றுள்ள உங்களிடம் நான் கேட்பது, காந்தி வலியுறுத்தியது தூய்மையை மட்டும்தானா...? “மதம் அரசியலில் ஊடுருவக்கூடாது. அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூகவாழ்வின் விரிவான பகுதிகள், பண்பாடு ஆகியவற்றில் இருந்து மதம் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். இவை தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இந்திய மதச்சார்பின்மை என்ற பெயரில் இதை மறுப்பதானது. மதச்சார்பின்மையையே மறுப்பதாகும். மதச்சார்பற்ற அரசு என்றால், மதத்தை ஊக்குவிப்பதல்ல’’  என்று மகாத்மா காந்தி சொன்ன கருத்துக்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தானே அவரை ஆர்எஸ்எஸ் கூட்டம் பழிவாங்கியது. அப்படிப்பட்டவர்களின் தூய்மை செயல் திட்டத்தில் எப்படி சேர்ந்தீர்கள் கமல்....? “காவியும் நாமமும், குடுமியும் கோசமும் கண்டு மயங்கும் மந்தைகளாய்” நீங்கள் மாறமாட்டீர்கள் என்ற நட்புடனே இந்தக் கடிதம்.  நலமே விளையட்டும். 

என்றும் தங்களன்பான,

லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவன்.

நன்றி : தீக்கதிர்

செவ்வாய், 18 நவம்பர், 2014

மோடி தன் நண்பனுக்கு வாங்கிக்கொடுத்த நிலக்கரி சுரங்கமும், வராக்கடனும்...!வெளிநாட்டில் இந்தியாவை கூவி விற்கும் நரேந்திரமோடி...!
''வாரம் ஒரு திட்டம் - மாதம் ஒரு வெளிநாட்டுப் பயணம்'' - கலக்கறீங்க மோடி!


                         நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற நாளிலிருந்து  கடந்த ஆறு மாதங்களாகவே இந்திய மக்களுக்கு ஏதாவது படம் காட்டிகிட்டே இருக்கிறாரு. எப்போ பார்த்தாலும் தொலைக்காட்சி, வானொலி, ட்வீட்டர், பேஸ்புக், செய்தித் தாள்கள்ஞாயிறு, 16 நவம்பர், 2014

நீதியின் நாயகன் வி.ஆர்.கிருஷ்ணய்யர் - 100


கட்டுரையாளர் : நீதியரசர் கே. சந்துரு,           
                                     உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு), சென்னை        

               தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்து ஓய்வு பெற்ற ராஜாஜியை, மரியாதை நிமித்தம் சந்திக்க, கேரள சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் தனது மனைவி, இரு மகன்களுடன் செல்கிறார். அவர்களை வரவேற்றுப் பேசிய ராஜாஜி, அவ்விரு சிறுவர்களிடம் சொல்கிறார்: “உங்கள் அப்பனைப் பின்பற்றாதீர்கள், அவர் விஷமத்தனமானவர், ஆனால் அவரது விஷமத்தனமெல்லாம் நல்லவற்றுக்காகவே.” வைத்தியநாதபுரம் ராமய்யர் கிருஷ்ணய்யர் தான் அந்த சட்டப்பேரவை உறுப்பினர்.                                             
            1952-ல் கேரளாவின் குத்துப்பரம்பு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிருஷ்ணய்யர், சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தில் இரண்டு வருட காலம் முதலமைச்சர் ராஜாஜிக்கு குடைச்சல் கொடுத்த உறுப்பினர். அதன் வெளிப்பாடு தான் அவரைச் சந்தித்த கிருஷ்ணய்யரின் மகன்களுக்கு கிடைத்த ஆலோசனையை மேலே பார்த்தோம். மாவட்ட மருத்துவ அதிகாரி ஒருவர் மீதுள்ள ஊழல் புகார்பற்றி பொது விசாரணை கோரி சட்டமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. முதலமைச்சர் ராஜாஜி தானும் ஒரு வழக்கறிஞர், அந்தப் புகாரைப் பரிசீலித்ததில் முதல் நோக்கில் குற்றமேதும் தென்படவில்லை என்று கூறவும் உடனடியாக கிருஷ்ணய்யர், தானும் மாவட்ட நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குகள் நடத்தியதில் திறமை பெற்றவர் என்றும், மருத்துவ அதிகாரியின் மீதுள்ள குற்றம் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்திப் பேசவே, முதலமைச்சர் தனது கருத்தை மாற்றிக்கொண்டு விசாரணைக்கு உத்தரவிட நேர்ந்தது.
               மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பின்னர் நடந்த கேரளத் தேர்தலில், சுயேச்சையாக வெற்றிபெற்ற கிருஷ்ணய்யர், ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடின் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையில் உள்துறை அமைச்சரானார். 1958-ம் வருடம் ஒரு நாள் அவர் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருக்கும் போது தொலைபேசிச் செய்தி வருகிறது. அருகிலிருந்த காவல் நிலையத்தில் இளைஞன் ஒருவன் சித்திரவதைக்கு உள் ளாக்கப்படுவதாகத் தகவல். உடனடியாக காரைத் தானே ஓட்டிக்கொண்டு காவல்நிலையத்துக்குச் செல்கிறார். கேள்விப்பட்டபடியே இளைஞன் ஒருவன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதைப் பார்த்து, அவனை விடுவிக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தினமும் இரவில் திருவனந்தபுரம் மாவட்டக் கண்காணிப்பாளருடன் வீதிகளில் பயணம் செய்து காவலர்கள் தங்கள் பணிகளை ஒழுங்காகச் செய்கிறார்களா என்பதைச் சோதித்த உள்துறை அமைச்சரை இந்நாடு இதுவரை கண்டதில்லை.          

சிறைக் கைதிக்கு மனிதாபிமானம்                  
 
              தேர்தல் வெற்றிக்கு முன்னரே தடுப்புக் காவல்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட கிருஷ்ணய்யர், தனது 30 நாட்கள் சிறைவாசத்தில் சிறைக் கைதிகளின் நிலைமையை உணர்ந்ததுடன், இந்தியச் சிறைகள் கற் காலத்தில் இருப்பதைத் தெரிந்துகொண்டார். பின்னர், உச்ச நீதிமன்ற நீதிபதியானபோது, சிறைக் கைதி ஒருவர் அஞ்சல் அட்டையில் அனுப்பிய புகாரை வழக்காக எடுத்துக்கொண்டு, சிறைக் கைதிகளை மனிதாபிமானத் துடன் நடத்துவதற்கு உத்தரவிட்டதுடன், சுனில் பாத்ரா-2 என்ற வழக்கில் பரவலான சிறை சீர்திருத்தங்களுக்கு உத்தர விட்டதோடு மட்டுமின்றி, எதிர்காலத்தில் புகார்களை நீதிமன்றங்கள் தாமாகவே எடுத்துக்கொண்ட வழக்காகக் கருதி, அவ்வழக்குகளில் நிவாரணம் வழங்க உத்தர விட்டார். மேலும், மாவட்ட நீதிபதிகள் தொடர்ந்து சிறைச் சாலைகளுக்குச் சென்று, கைதிகளிடமிருந்து புகார்களைப் பெற்று நிவாரணம் வழங்கவும் அத்தீர்ப்பு உறுதிசெய்தது.
            சென்னையைச் சிங்காரச் சென்னையாக மாற்றுவதற்குப் பலரும் திட்டங்கள் வைத்திருந்தனர். எம்.ஜி.ஆர். ஆண்ட காலம். மெரினா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் கட்டுமரங்கள் அதன் அழகைக் குறைக்கின்றன என்று யாரோ ஒருவருக்குத் தோன்றியது. திடீரென்று கட்டுமரங்கள் ஒரு நாள் காணாமல் போயின. எதிர்த்து நின்ற மீனவர்கள் மீது காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சிலர் இறந்தனர். அதற்குப் பின்னும் காவல் துறையினரின் அத்துமீறிய தாக்குதலுக்குப் பயந்து பல மீனவர்கள் குப்பங்களை விட்டு இடம்பெயர்ந்தனர். ராணிமேரி கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள நடுக்குப்பம் 4.12.1985-ல் காவலர்களால் சூறையாடப்பட்டது. தனிமையில் விடப்பட்ட பெண்கள், குழந்தைகள், வயசாளிகள் யாரும் தாக்குதலுக்குத் தப்பவில்லை. உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், ஓய்வறியா அந்த உத்தமர் கிருஷ்ணய்யருக்கு இருப்புக்கொள்ளவில்லை. செய்தி கேட்டு நடுக்குப்பத்தின் சேறு சகதிகள் பாராமல் நேரில் சென்று அம்மக்களின் குறை கேட்டு, அறிக்கை ஒன்றைத் தயார் செய்தார். முதலமைச்சர் எம்.ஜி்.ஆருக்கு அந்த அறிக்கையுடன் அவர் எழுதிய கடிதத்தில், “மீனவர்கள் இம்மண்ணின் மூத்த குடிகள், அவர்களது வாழ்வாதாரத்தைப் பறிப்பதற்கு எவருக்கும் அதிகாரமில்லை” என்று குறிப்பிட்டதுடன், அம்மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்தார்.
            மனித உரிமைக்கான வழக்கறிஞர், சட்டமன்ற உறுப்பினர், உள்துறை அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதி, மத்திய சட்ட கமிஷன் உறுப்பினர், உச்ச நீதிமன்ற நீதிபதி என்று பன்முக ஆளுமை கொண்ட கிருஷ்ணய்யருக்கு அடிநாதமாக விளங்கியது விளிம்பு நிலை மனிதர்களின் விடுதலை தான். எண்ணம், எழுத்து, செயல் இவை அனைத்திலும் இருந்த சிந்தனைப்போக்குகளை அவர் கட்டுரைகள் வாயிலாக வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், தனது சிறப்பான தீர்ப்புகளிலும் அதைப் பதிவுசெய்ய மறந்ததில்லை. அதிகாரம் கிடைக்கும்போதெல்லாம் அதை நலிவுற்ற மக்களுக்குப் பயன்படுத்தத் தயங்கியதும் இல்லை. அதே நேரத்தில், அதிகார மமதையில் சர்வாதிகாரப் பாதையில் சென்ற அரசியல்வாதிகளுக்குப் பாடம்புகட்டவும் மறந்ததில்லை. 

இலவச சட்ட உதவி                    
 
            மத்திய சட்டக் கமிஷன் உறுப்பினராக இருந்தபோது, அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிக்கும் வண்ணம் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு, பிரிவு 39-A அறிமுகப்படுத்தப்பட்டது. நீதிமன்றங்கள் அனைவருக்கும் பொது என்றாலும், வசதியும் வாய்ப்பும்மிக்க வக்கீல்களின் உதவியைப் பெற முடியாத நலிவுற்ற மக்களும் நீதிமன்றத்தை நாடும் வகையில் இப்பிரிவு கொண்டுவரப்பட்டதற்கான முழுப் பெருமையும் அவரையே சாரும்.
               1975-ம் வருடம் அலகாபாத் உயர் நீதிமன்றம், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டு வென்ற ரேபரேலி தொகுதியில் தேர்தல் முறைகேடாக நடத்தப்பட்டது என்று கூறி அவரது தேர்தல் வெற்றி ரத்து செய்யப்பட்டது. அதை எதிர்த்துப் போடப்பட்ட மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வருகிறது. அப்போது விடுமுறைக் கால நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் கிருஷ்ணய்யர். வழக்கு விசாரணைக்கு வருமுன்னே அவரைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள அன்றைய சட்ட அமைச்சர் கோகலே முயற்சிக்கிறார். அவரைச் சந்திக்க மறுத்த கிருஷ்ணய்யர், வழக்கை விசாரித்த பின், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு முழுத் தடை வழங்க மறுக்கிறார். ஆட்டம் கண்ட பிரதமர், நாடு முழுதும் நெருக்கடி நிலைமையைப் பிரகடனப்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்துகிறார். கிருஷ்ணய்யர் முழுத் தடை அளிக்க மறுத்ததன் காரணந்தான் நெருக்கடி நிலைமை ஏற்பட்டதென்று பலரும் கூறுவர். அவர் அளித்த உத்தரவை அவரது கருத்துக்களுடன் முழுதும் ஒத்துப்போகாத பிரபல சட்ட நிபுணர் எச்.எம். சீர்வை, கிருஷ்ணய்யர் முழுத் தடை விதிக்க மறுத்த தேதியன்றுதான் உச்ச நீதிமன்றம் அதனுடைய சிறப்பான நேரத்தைப் பெற்றது என்று தனது புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார். 

கிருஷ்ணய்யரின் தீரம்                   
 
         நெருக்கடி நிலையின்போது, இந்திரா காந்தியிடம் அவரது அதிகார மமதையைச் சுட்டிக்காட்டப் பயந்த நேரத்தில், கிருஷ்ணய்யர் பிரதமரிடம் அவரது அரசு நீதிமன்றத்தில் மக்களது அடிப்படை உரிமையைப் பறித்தது நியாயம் என்று வாதாடியது தவறென்று சுட்டிக்காட்டினார். அந்நேரத்தில், எவருமே இந்திரா காந்தியிடம் விமர்சனங்களை முன்வைக்க வராதபோது, கிருஷ்ணய்யர் நேரடியாகப் பிரதமரிடம் அவர் இழைத்த தவறை சுட்டிக்காட்டிய செயல் அவரது தீரத்தை வெளிப்படுத்தும்.
               இன்றைக்குப் பலரும் தமிழரின் உடைக் கலாச்சாரம் வேட்டிதான் என்று பேசுவார்கள். சமீபத்தில், நீதிபதி ஒருவரை அனுமதிக்க மறுத்த சென்னை கிரிக்கெட் கிளப் விவகாரத்தை ஒட்டி எழுந்த ஆவேசத்துக்குப் பிறகு, தமிழக சட்டமன்றமும் வேட்டி கட்டி வருபவருக்கு அனுமதி மறுக்கப்பட்டால் சிறைத் தண்டனை என்ற சட்டம்கூட இயற்றியுள்ளது. நீதிபதி கிருஷ்ணய்யரைப் பொறுத்தவரை அவர் ஓய்வுபெற்ற பிறகு, என்றுமே அவர் பாரம்பரிய உடையையே அணிந்துவந்தார். கிரிக்கெட் கிளப்பில் உறுப்பினராயிருந்த கிருஷ்ணய்யரின் நண்பர் ஒருவர், அவரை அங்கு இரவு உணவுக்கு அழைத்துச் சென்றார். கதர் சட்டையும் கதர் வேட்டியும் கட்டி ரப்பர் செருப்பு அணிந்து வந்த அவரை அங்கிருந்த வாயிற்காவலர் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். கிளப் விதிகளின்படி மேல்நாட்டு உடைகளையே அணிந்து வர வேண்டும் என்பதால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிரச்சினையைப் பெரிதுபண்ண விரும்பாத கிருஷ்ணய்யர், அங்கிருந்த விருந்தினர் பதிவேட்டில் இவ்வாறு எழுதிக் கையெழுத்திட்ட பின் வெளியேறினார்:-
            “எனக்கு இரவு உணவு இங்கு மறுக்கப்பட்டது. ஆனாலும், கௌரவமான இந்தியனாக இங்கிருந்து நான் வெளியேறுகிறேன்.”
             1957-ம் வருடம் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, முதல்முறையாக இந்தியாவில் (ஏன் உலகத்திலேயே) தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று கம்யூனிஸ்ட் ஆட்சி அமைத்தது. பள்ளிக் கல்வியைச் சீரமைக்கவும், ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சட்டம் இயற்றப்பட்டது. அது பொறுக்காத சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களும், சாதி அமைப்புகளும் கம்யூனிஸ்டுகள் கையிலிருந்து கேரளாவை விடுவிக்க விடுதலைப் போராட்டம் (விமோசன சமரம்) ஆரம்பித்தனர். சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டதென்று அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி 1959-ல் அமலுக்கு வந்தது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதலில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி முதல் ஜனநாயகப் படுகொலைக்குப் பலியானது. அந்த முடிவைத் தவிர்ப்பதற்கு நல்லெண்ண முறையில் அன்றைய பிரதமர் பண்டித நேருவை கிருஷ்ணய்யர் சந்தித்து முயற்சி செய்தார். ஆனால், தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்றால் காங்கிரஸைக் கரைத்துவிடும் என்ற எண்ணத்தில் ஆட்சிக் கலைப்பு முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டதால் கிருஷ்ணய்யரின் முயற்சி தோல்வியுற்றது.
            உச்ச நீதிமன்றத்தில் கிருஷ்ணய்யர் ஆற்றிய பணியைப் பற்றி பலரும் எழுதியுள்ளனர். சட்ட நிபுணர்கள் ஒருமித்த குரலில் அவரது பணியைப் பாராட்டியுள்ளனர். இவை எல்லாவற்றையும்விட, கிருஷ்ணய்யரைப் பற்றியும் அவரது தீர்ப்புகளைப் பற்றியும் பல நாடுகளில் உள்ள சட்ட நிபுணர்களும் நீதிபதிகளும் பாராட்டியுள்ளனர். ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்ற நீதிபதி மைக்கேல் கிர்பி, கிருஷ்ணய்யரின் 80-வது பிறந்ததினத்துக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டிருந்து இன்றைக்கு அவர் நூற்றாண்டு காணும் சூழலிலும், என்றைக்கும் பொருத்தமானது.
       “கிருஷ்ணய்யர் பொதுச்சட்டத்தில் பேராற்றல் பெற்றவர். அவர் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானவரல்ல. உலகம் முழுதும் உள்ள வக்கீல்கள் மற்றும் சட்ட நிபுணர்களுக்குச் சொந்தமானவர். அவருடைய தீர்ப்புகள் ஆஸ்திரேலிய நீதிமன்றங்களில் மேற்கோள் காட்டப்படுவதுடன் நீதிபதிகள் அவற்றைப் பின்பற்றவும் முற்படுவர்!” 

நன்றி : தி இந்து (தமிழ்)  

புதன், 12 நவம்பர், 2014

மோடி ஆட்சியில் வளர்ச்சி யாருக்கு...?

 கட்டுரையாளர் :  தோழர்.ஜி.ராமகிருஷ்ணன்             
                                      மாநிலச்செயலாளர்,            
                                      மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி            
    பங்குச்சந்தையின் ஏற்றத்தை ஒட்டுமொத்த இந்தியர்களின் ஏற்றமாகக் கற்பனை செய்துகொள்ள முடியுமா?             
             சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது. ‘மத்திய அரசுத் துறைகளில் புதிய பணி நியமனங்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது. மேலும். கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள காலி இடத்தை நிரப்பவும் தடைவிதிக்கப்படுகிறது’ என்பதுதான் அந்தச் செய்தி.
          இது ஒருபுறம் என்றால் மறுபுறத்தில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் முதன்முறையாக 28,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. மேற்கண்ட இரண்டு செய்திகளும் வெளிப்படுத்தும் உண்மை என்ன?
               2014, நவம்பர் 5 அன்று டெல்லியில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் மாநாட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை அளிப்பதாகவும், பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றில் அந்நிய முதலீடுகளை அனுமதிக்கவிருப்பதாகவும், தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தப்போவதாகவும், அடுத்தடுத்து மேலும் பல பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டுவர தனது அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் பேசியிருக்கிறார். பங்குச்சந்தைக் குறியீட்டு எண் ஏன் அதிகரிக்கிறது என்பதற்கும், உள்நாட்டு - பன்னாட்டு நிறுவனங்கள் மோடி அரசை ஏன் பாராட்டுகின்றன என்பதற்கும் வேறு என்ன காரணம் வேண்டும்? பங்குகளின் விலை புதிய எல்லையைத் தொட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, பொருளாதாரம் வளர்ந்துகொண்டிருக்கிறது என்று வாதிடுவோரும் உண்டு. பங்குச் சந்தையில் பங்குகளை வாங்குவதிலும் விற்பதிலும் ஈடுபடுவோர், மக்கள்தொகையில் 2% மட்டுமே. இதை மட்டும் வைத்து ‘தொழில் வளர்கிறது, பொருளாதாரம் வளர்கிறது’ என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் ஏழை-எளிய-நடுத்தர மக்களின் வாழ்க்கையில் குறைந்தபட்ச மாற்றத்தைக்கூட உருவாக்கவில்லை என்பதுதான் உண்மை. 

படித்தோர் வேலையின்மை            
 
                15 வயதிலிருந்து 29 வயது வரையிலான படித்த இளைஞர்கள் மத்தியில் 32% பேர் வேலையில்லாமல் இருப்பதாக வேலையின்மை பற்றிய மத்திய அரசின் ஆய்வறிக்கை கூறுகிறது. உயர்கல்வி பெறும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், அவர்கள் மத்தியில் வேலையின்மையையும் அதிகரித்திருக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. அதேபோல்தான் கிராமப்புற வேலையின்மையும்.
          முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-1 ஆட்சிக் காலத்தில், இடதுசாரிக் கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இது கிராமப்புற வறுமையை முற்றாக முடிவுக்கு கொண்டுவராது என்றபோதும், குறைந்தபட்ச நிவாரணம் அளிப்பதாக அமைந்துள்ளது. கிராமங்களிலிருந்து விவசாயத் தொழிலாளர்கள் வெளியேறுவதை ஓரளவு தவிர்க்க இந்தத் திட்டம் உதவியது. ஆனால், வேலை கிடைக்காத, வருவாய் இல்லாத கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு வேலையளிக்கக் கூடிய இந்தத் திட்டத்தை மோடி தலைமையிலான அரசு சீர்குலைத்துவருகிறது.
          மனித உழைப்பைப் பயன்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தில் இயந்திரங்களைப் புகுத்தவும், ஒப்பந்ததாரர்களை அறிமுகப்படுத்தவும் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. 2010-லிருந்து 2012 வரை ஒவ்வொரு ஆண்டுக்கும் இந்தத் திட்டத்துக்காக
         ரூ. 40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுவந்தது. 2013-14 க்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு ரூ. 33,000 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்தது. மோடி தலைமையிலான பாஜக அரசு அடுத்த ஆண்டிலிருந்து (2015-16) 200 மாவட்டங்களுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தை அமலாக்குவது என்று முடிவெடுத்திருக்கிறது. நாட்டிலுள்ள மொத்த கிராமப்புற மாவட்டங்கள் 645-ல் 445 மாவட்டங்களில் இந்தத் திட்டத்தை அமலாக்க முடியாது என்று மோடி அரசு முடிவெடுத்திருக்கிறது.
       திட்டம்சாரா செலவுகளில் 10% அளவுக்கு மானியங்கள் வெட்டப்பட வேண்டும் என்றும் மோடி அரசு முடிவுசெய்திருக்கிறது. கணவரை இழந்தோர், முதியோர் உள்ளிட்டோருக்கு அளிக்கப்படும் ஓய்வூதியத் திட்டங்களுக்கும், பொதுவிநியோகத் திட்டங்களுக்குமான மானியம் குறைக்கப்பட வேண்டும் என்பதே இதன் பொருள். முந்தைய ஐ.மு.கூ. ஆட்சியில் அரைகுறையாக உணவுப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதையும் சீர்குலைக்கும் வகையில் உணவு மானியம் தற்போது குறைக்கப்படுகிறது. உரமானியமும் ஏற்கெனவே குறைக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், மேலும் மானியவெட்டு என்பது, ஏழை-எளிய மக்களுக்கு எதிரான, நேரடியான தாக்குதலாகவே முடியும். 

தொழிலாளர் உரிமை பறிப்பு               
 
       கடந்த 60 ஆண்டு காலமாக அமலில் உள்ள தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்த வேண்டும் என உள்நாட்டு-பன்னாட்டு நிறுவனங்கள் நிர்ப்பந்தித்துவருகின்றன.
             முதலாளிகளின் கோரிக்கையை ஏற்று 14 சட்டங்களைத் திருத்துவதென மோடி அரசு முடிவெடுத்திருக்கிறது. உழைப்பாளிகளை எந்தவிதமான சட்டப் பாதுகாப்பும் இல்லாமல், முதலாளிகளின் பகடைக்காயாக மாற்றும் இந்தத் திட்டத்தை ஆரவாரமாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் திட்டத்தின் முழக்கத்துக்கு ‘உழைப்பே வெல்லும்’ என்று பெயர்சூட்டியுள்ளார். உழைப்பைக் கொல்லும் இந்தத் திட்டத்துக்கு, இத்தகைய பெயர்சூட்டியிருப்பதுதான் கேலிக்கூத்து.
           உதாரணமாக, 100 தொழிலாளர்களுக்கு மேல் எண்ணிக்கை உள்ள ஒரு தொழிற்சாலையை அரசின் அனுமதி பெறாமல் மூட முடியாது. இந்த எண்ணிக்கையை 300-ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்தகைய திருத்தம் கொண்டுவரப்பட்டால், மொத்தமுள்ள தொழிற்சாலைகளில் சுமார் 70% ஆலைகளை அரசின் அனுமதி பெறாமலேயே மூட முடியும். வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இதற்கான சட்டத்தைக் கொண்டுவர பாஜக அரசு முயல்கிறது. 

பொதுத்துறை பங்குகள் விற்பனை                 
 
           பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று சமர்ப்பித்த முதல் நிதிநிலை அறிக்கையில் ரூ. 43,425 கோடி அளவுக்குப்பொதுத் துறைப் பங்குகளை விற்பதென்று முடிவெடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு (2013-14) காங்கிரஸ் தலைமையிலான அரசு ரூ. 40,000 கோடி அளவுக்குப் பொதுத் துறைப் பங்குகளை விற்பதென்று முடிவெடுத்திருந்தது. இதுவரையில் ரூ. 1,53,000 கோடி மதிப்புள்ள பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இத்தொகை மக்கள்நலத் திட்டங்களுக்கோ பொதுத்துறையைப் பலப்படுத்துவதற்கோ பயன்படுத்தப்படவில்லை. மாறாக, பெருநிறுவனங்களுக்குச் சலுகை அளிப்பதால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையைச் சரிகட்டுவதற்கே பொதுத்துறை பங்கு விற்பனையின் நிதி பயன்படுத்தப்பட்டுவருகிறது.
சலுகை யாருக்கு?                 
 
          மக்கள் நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீட்டைக் குறைத்துக்கொண்டே வரும் மோடி அரசு, பெருநிறுவனங்களுக்கு அளித்துவரும் சலுகையை மேலும் மேலும் அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு, ரூ. 5.73 லட்சம் கோடி அளவுக்குப் பெருநிறுவனங்களுக்குச் சலுகை (நாட்டுக்கு வருவாய் இழப்பு) அளித்தது. மோடி தலைமையிலான அரசும் இதே அளவுக்குப் பெருநிறுவனங்களுக்கு சலுகை அளித்துவருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் மத்திய அரசு பெருநிறுவனங்களுக்கு அளித்திருக்கும் சலுகை ரூ. 36.5 லட்சம் கோடி.
               1990-களில் ஆரம்பித்த நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டில் மக்கள் மத்தியில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வை உருவாக்கிவருகின்றன. நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளின், உழைக்கும் மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் சரிந்துவருகிறது. தேர்தல் நேரத்தில் வளர்ச்சி, மாற்றம் என்றெல்லாம் முழங்கினார் மோடி. ஆனால், அவரது ஆட்சி செல்லும் திசைவழி பன்னாட்டு- உள்நாட்டு முதலாளிகளுக்கு வளர்ச்சியாகவும், எளிய மக்களின் வாழ்க்கையில் ஏமாற்றமாகவுமே உள்ளது.
நன்றி : தி இந்து (தமிழ்)

திங்கள், 10 நவம்பர், 2014

ஆன்-லைனில் மத்திய இரயில்வே மந்திரியானவர்...!

                   இதுவரையில் ஆன்-லைனில் இரயில்வே டிக்கெட்டை தான் ரிசெர்வ் செய்து வருகிறோம். நேற்று 9-ஆம் தேதி அன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் எதிர்க்கட்சியான சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி சுரேஷ் பிரபு என்பவர் ஆன்-லைனிலேயே  மத்திய இரயில்வே மந்திரிப் பதவியை  ரிசெர்வ் செய்து பின் டெல்லிக்கு வந்து  பதவியையும் ஏற்றுக்கொண்டு உலக சாதனை படைத்திருக்கிறார். மயிலில் பறந்துவந்த முருகனுக்கு கிடைக்காமல், விநாயகர்  குறுக்குவழியில் சிவனிடமிருந்த மாம்பழத்தை பெற்றதாக புராணக்கதைகள் சொல்வதைப்போல, மத்திய அமைச்சர் பதவிஏற்புக்காக சிவசேனா கட்சியை சேர்ந்த ஒருவர் மும்பையிலிருந்து புறப்பட்டு விமானத்தில் டெல்லி நோக்கி பறந்துவந்து கொண்டிருக்கும் போதே, அதே சிவசேனாக் கட்சியிலிருந்து கட்சி மாறி, அவசர அவசரமாக ஆன்-லைனிலேயே  பாரதீய ஜனதாக்கட்சியின் உறுப்பினர் ஆன சிவசேனாவின் இன்னொரு எம்.பியான சுரேஷ் பிரபு என்பவருக்கு  கட்சி மாறி வந்ததை பாராட்டி மோடி தனது  அன்புப்பரிசாக  மத்திய அமைச்சர் பொறுப்பை அளித்து பெருமைபடுத்தியிருக்கிறார். அதுவும் அவருக்கு சாதாரண இலாக்கா கொடுக்கப்படவில்லை. கட்சி மாறி வந்த அவருக்கு இரயிலை பரிசாக கொடுத்திருக்கிறார் என்பது அதைவிட பெருமைப்படவேண்டிய விஷயம். இவர் இரயில் ஏறியதை கேள்விப்பட்ட பதவியேற்புக்காக மும்பையிலிருந்து வந்த சிவசேனா எம்.பி மீண்டும் விமானம் ஏறி மும்பைக்கே திரும்பிவிட்டார்.
                இப்படியும் கேலி கூத்துகளை நடத்திக்காட்டுகிறார் நரேந்திரமோடி. உங்களுக்கும் மந்திரிப்பதவி வேண்டுமா...? உடனே ஆன்-லைனில் பா.ஜ.க. உறுப்பினர் ஆகுங்கள். உடனேயாக  மோடி உங்களை அழைத்து மந்திரிப்பதவி கொடுப்பார்.

மோடி தத்தெடுத்த இஸ்லாமியர்கள் அல்லாத கிராமம்...!

                இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இந்த நாட்டில் பல்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இங்கு வாழ்பவர்கள் அனைவரும் சமம். இந்திய நாட்டின் பிரதமர் என்பவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர் அனைத்து மதத்திற்கும் பொதுவானவர். பொதுவானவராகத் தான் நடந்துக்கொள்ளவேண்டும். அனைவருடனும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடந்துகொள்ளவேண்டும். அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியாக பணியாற்றவேண்டும். இதை  தான் நம்முடைய அரசியலமைப்புச்சட்டம் சொல்கிறது. இதை உறுதிமொழியாக சொல்லித்தான் பிரதமர் முதல் அனைத்து அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்கள். 
                 ஆனால் நரேந்திரமோடி இதே உறுதிமொழியை ஏற்று பிரதமாராக பதவி எற்றுக்கொண்டாலும், உறுதிமொழியை விட்டு கொஞ்சமும் தயக்கமில்லாமல் விலகிச்செல்கிறார்  என்பதும்,  மதச்சார்பின்மையை விட்டு எப்போதும் போல் விலகி நிற்கிறார் என்பதும்  அவரது அன்றாட நடவடிக்கைகளே நாட்டு மக்களுக்கு காட்டிக்கொடுக்கும். அந்த அளவிற்கு ஒளிவு மறைவில்லாத  ஆர்.எஸ்.எஸ். - இந்துத்துவா கொள்கைப்பிடிப்புடன் தான் அவரது ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்கிறார் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
                ''வாரத்திற்கொரு திட்டம் - அதற்கொரு விழா'' - இது தான் மோடி மக்களை கவர்ந்திழுக்கும் பாணி. மோடி 2019 - ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இப்போதே ஆரம்பித்துவிட்டார்.
சென்ற வாரத்திட்டம் என்னன்னா...? ''கிராமப்புற வளர்ச்சித் திட்டம்'' - இந்த திட்டத்தின்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கிராமத்தை தத்தெடுத்துக் கொள்ளவேண்டுமாம். இல்லை... இல்லை... மோடி ஸ்டைலில் சொல்லவேண்டுமென்றால் கிராமங்கள் எம்பிக்களை தத்தெடுத்துக் கொள்ளவேண்டுமாம். அதன் மூலம் கிராமங்களை வளர்ச்சியடைய செய்யவேண்டுமாம். கிராமப்புற  மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பொருளாதாரத்திற்கும் வழிகாட்டிய ''மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்திற்கு'' மூடுவிழா நடத்திவிட்டு, ''கிராமப்புற  வளர்ச்சித் திட்டத்தின்'' மூலம் கிராமத்தை எப்படி வளர்ச்சியடைய செய்யப்போகிறார் என்பது தான் நமக்கு விளங்கவில்லை. 
               மோடி இவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய வாரணாசி நாடாளுமன்றத்தொகுதியில் வாரணாசிக்கு 25 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் ஜெயாப்பூர் என்ற கிராமத்தை தத்தெடுப்பதாக ஒரு பெரிய விழா நடத்தி அறிவித்தார். அது  இரண்டு வகையான பிரிவினரைக்கொண்ட  சுமார் 4000 பேர்கள்  மட்டுமே வாழும் ஒரு சிறு கிராமம் ஆகும். அதுல இருக்கிற விசேஷம் என்னவென்றால்,  ஏற்கனவே கடந்த   2002-ஆம் ஆண்டிலிருந்தே  அந்த கிராமம் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிற கிராமமாம். அதுமட்டுமல்ல 4000 மக்கள் தொகை கொண்ட அந்த கிராமம்  ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லாத கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது. கூர்ந்து கவனிக்கத்தக்கது. இது தான் ஒரு மதச்சார்பற்ற நாட்டின் பிரதமரின் இலட்சணம்.

ஞாயிறு, 9 நவம்பர், 2014

தூய்மை இந்தியா : மோடிக்கு கற்றுத்தந்த கமல்ஹாசன்...!

 


                நரேந்திரமோடி கடந்த காந்தி ஜெயந்தியின் போது ''தூய்மை இந்தியா'' என்ற இயக்கத்தை தொடங்கிவைத்தார். வீடு,  அலுவலகம், பள்ளி, கோயில் இப்படி நம்மைச்சுற்றி இருக்கும் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று சொல்லி அந்த இயக்கத்தை தொடங்கிவைத்தார். பரவாயில்லையே நம்ப பிரதமர் சாதாரண மக்கள் வாழுகிற  பகுதியில் இருக்கிற குப்பை மேட்டில் வெகுநாட்களாக அள்ளப்படாமல் நாற்றமடித்துக்கொண்டிருக்கும் குப்பைகளை வரிந்துகட்டிக்கொண்டு சுத்தம் செய்யப்போகிறார் என்றெல்லாம் மக்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு வந்த  நரேந்திரமோடி வழக்கம் போல் மடிப்புக்கலையாத புத்தாடை, பளப்பளன்னு மேக்கப் என ஒரு ஹீரோ கணக்கா  வந்திறங்கினார். ஏற்கனவே சுத்தமாக இருந்த சாலையில் கொஞ்சம் இலைகள் பறித்துவந்து போடப்பட்டிருந்தன. புது துடைப்பம் கம்பில்  கட்டப்பட்டு அவருக்காக காத்துக்கிடந்தது. வந்திறங்கியவர் கையில் துடைப்பம் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே எடுத்துக்கொண்ட பயிற்சியின்படி, ஏற்கனவே கொட்டப்பட்ட 10 - 15 இலைகளை மண்ணோ அல்லது தூசுகளோ பறக்காமல் இலாவகமாக பெருக்கி சுத்தம் செய்தார். இந்த ''அரிய'' காட்சியை நூற்றுக்கணக்கான பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளின் கேமராக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு படம் பிடித்தன. இந்த மெய்சிலிர்க்கும் காட்சிகளை நேரடியாக ஒளிப்பரப்பி, மோடியின்  கொள்கைகளை  பரப்பிய அடிமை தொலைக்காட்சிகளும் உண்டு.
            இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நாட்டுல துடைப்பத்தை பிடிக்காதவனெல்லாம் துடைப்பத்தை தூக்கிக்கிட்டு பெருக்க ஆரம்பிச்சிட்டானுங்க. கேட்டா தூய்மை இந்தியாவாம்.
                 அதேப்போல் ஒரு நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளன்று ''தூய்மை இந்தியா'' இயக்கம் தொடங்கப்பட்டது.  தன்னுடைய பிறந்தநாளன்று தானும் ஏதாவது மக்கள் நல உதவிகளை  செய்வதும்,   தன்  இரசிகர்களையும்     அவ்வாறே செய்யவைப்பதையும் வழக்கமாக கொண்டுள்ள கமல்ஹாசன், இந்த ஆண்டு நேற்று முன் தினம் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கனவே மோடி கேட்டுக்கொண்டதற்கிணங்க ''தூய்மை இந்தியாவை'' கையில் எடுத்துக்கொண்டார். ஆனால் இவர் துடைப்பத்தை தூக்கிக்கிட்டு பெருக்குவது போல் படப்பிடிப்பு நடத்தவில்லை. மாறாக தன்னுடைய இரசிகர்களை சென்னைக்கு அருகில் உள்ள மாதம்பாக்கம் ஏரிக்கு அழைத்தார். ஏரியை சுற்றியும் மக்காத மற்றும் அழுகிய குப்பைகள் நிரப்பப்பட்டு, ஆங்காங்கே தேவையில்லாத செடிகள் வளர்ந்து நீர்நிலையே அசுத்தமாய் கிடந்தது. இந்த ஏரி மட்டுமல்ல. இது போல் தமிழகம் முழுதும் உள்ள 25 ஏரிகளை என் இரசிகர்கள் இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து அறிவியல்பூர்வமாக சுத்தம் செய்வார்கள். இது தான் என்னுடைய ''தூய்மையான இந்தியா'' என்று அறிவித்தார்.
                  இந்த ஏரி சுத்தம் செய்யும் நிகழ்ச்சிக்கு பாரதீய ஜனதாக்கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை அழைத்திருந்தார்.  நடிகர் ரஜினிகாந்தை தன்  கட்சிக்கு வரவழைத்து தமிழ்நாட்டில் வளரமுடியாமல் கிடக்கும் தனது கட்சியை வளர்த்து மோடிக்கு காட்டவேண்டும் என்று கடந்த சில மாதங்களாக ரஜினியை விடாமல் துரத்திக்கொண்டிருந்த தமிழிசைக்கு எதிர்ப்பாராமல் வந்த கமலின் அழைப்பு ஒரு பூபாள ராகமாய் ஒலிக்க நிகழ்ச்சி நடக்கும் ஏரிக்கரைக்கே ஓடிவந்துவிட்டார். வழக்கமாக கமல்ஹாசன் தான் நடிக்கும் படங்களில் இடதுசாரி சிந்தனையாளனாகவும், கடவுள் மறுப்பாளனாகவும் காட்டிக்கொள்வாரே தவிர வேறு அரசியலையும், அரசியல் கட்சியையும் சார்ந்தவராக காட்டிக்கொள்ளமாட்டார். அப்படியிருக்கையில் தன்னுடைய பிறந்தநாள் விழாவிற்கு பாரதீய ஜனதாக்கட்சித் தலைவரை எப்படி அழைத்தார் என்ற கேள்வி அவரது இரசிகர்களுக்கே எழுந்தது.
              பிறகு தான் புரிந்தது.... தூய்மையான இந்தியாவென்றால் துடைப்பத்தை எடுத்து ரோட்டைப் பெருக்குவதல்ல.  சுற்றுச்சூழலை பாதுகாக்க - குடிநீரை பாதுகாக்க அசுத்தம் செய்யப்பட்டு காணாமல் போய்கொண்டிருக்கும் ஏரிகளை சுத்தம் செய்வது தான் ''சுத்தமான இந்தியா'' என்று உங்கள் தலைவருக்கு சொல்லுங்கள் என்று தமிழிசையை வரவழைத்து பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறார் என்பது தான் இந்த நிகழ்ச்சியில் மறைந்திருக்கும் உண்மை. 

நிலக்கடலை செய்யும் அற்புதம்...!

              நிலக்கடலை குறித்த மூடநம்பிக்கைகள் அவநம்பிக்கைகள் உலகம் முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
           நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
         நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நீரழிவு நோயை தடுக்கும்:           

         நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப்பை கல்லைக் கரைக்கும்:            

        நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:          

          நிலக்கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச்சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்:                 

           இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:                  

         நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:               

       நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:                

               தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.
          இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:                   

           உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில் தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள் பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப்பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
              கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடி இருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:        

           பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்:           

100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:          

                 நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும்  நிலக்கடலைக்கு தான் உண்டு. 
நன்றி  www.puradsifm.com

புதன், 5 நவம்பர், 2014

அவதூறுகளால் அசைக்க முடியாத பேரியக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...! கட்டுரையாளர் : தோழர். டி. கே. ரங்கராஜன், எம்.பி.,                   
                                      மத்தியக்குழு உறுப்பினர்,                 
                                      மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.                            
           மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டுக்கான தயாரிப்புப் பணிகள் முழு வீச்சுடன் துவங்கி நடந்துவருகின்றன. நாடு முழுவதும் கிளை மாநாடுகள் முடிந்து வட்ட, ஒன்றிய மாநாடுகள் நடந்து வருகின்றன. மாவட்ட, மாநில மாநாடுகள் 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும். இந்த மாநாடுகளில் கடந்த மூன்றாண்டுகளில் நடந்துள்ள பணிகள் குறித்தும், இன்றைய அரசியல் நிலவரம் குறித்தும், கட்சிஅமைப்புகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகின்றன. இந்த மாநாடுகளில் எடுக்கப்படும் முடிவுகள், பெற்ற அனுபவங்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு வழிகாட்டுவதாக அமையும்.கட்சியின் அகில இந்திய மாநாடு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
        அதற்கான தயாரிப்புப் பணிகளும் நடந்து வருகின்றன. மற்ற கட்சி மாநாடுகளில் தலைவரின் அனுமதியுடன் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், தலைவரின் ‘எழுச்சியுரை’ என்ற அளவோடு முடிந்துவிடும். குறிப்பிட்ட காலவரையறையில் மாநாடுகளை நடத்த வேண்டும் என்ற அவசியமும் அந்தக்கட்சிகளுக்கு இல்லை. எப்போதாவது நடத்தப்படும் மாநாடுகளும் தலைவரையே சுற்றிவரும். அந்தக்கட்சிகளைப் பொறுத்தவரை தலைவர்தான் கடவுள். அவரது வார்த்தைகள்தான் வேதம்.கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தக்கட்சிகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. கட்சியின் கொள்கைகள் மற்றும் திசைவழியை தீர்மானிப்பது கட்சியின் தலைவரோ பொதுச் செயலாளரோ அல்ல.
             கிளை துவங்கி அகில இந்திய அமைப்புவரை முழுக்க முழுக்க உட்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும். கட்சியின் அகிலஇந்திய மாநாடுதான் கொள்கை முடிவுகளைஎடுக்கக்கூடிய அதிகபட்ச அதிகாரம் கொண்டது. அந்த மாநாட்டில் தேர்வு செய்யப்படும் மத்தியக்குழுதான் அந்தக்கொள்கைகளை அரசியல் சூழலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்டது. மாநிலங்களிலும் அப்படியே. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது மாநாட்டிற்கான அறிக்கைகளை ஆவணங்களை உருவாக்கிட அக்டோபர் மாதம் 26-29 தேதிகளில் தில்லியில் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்படவேண்டிய அரசியல் அறிக்கை மற்றும் அரசியல் ஸ்தாபன அறிக்கை குறித்து இந்தக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட் டது. மேலும் கடந்த ஆண்டுகளில் கட்சி எடுத்த அரசியல், ஸ்தாபன நடைமுறை உத்திகள்குறித்து விவாதித்து அகில இந்திய மாநாட்டில் ஒரு அறிக்கையை முன் வைத்து இறுதி செய்வது என்று ஏற்கெனவே எடுக்கப்பட்டமுடிவின் அடிப்படையில் அதற்கான விவாதமும் நடைபெற்றது.
           இந்த மத்தியக்குழு கூட்டம் குறித்து சில ஆங்கில பத்திரிகைகள் அவதூறான செய்திகளை அள்ளித்தெளித்து வருகின்றன. தங்களது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு மனம்போன போக்கில் எழுதி வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதிதல்ல. மக்கள் நலன் ஒன்றையே உயிர் மூச்சாகக் கொண்டு, பாட்டாளி வர்க்க புரட்சிக்காக படை நடத்தி வரும் இந்த இயக்கத்தை அழித்துவிட கடந்த காலங்களிலும் பல முயற்சிகள் நடந்துள்ளன. அதையெல்லாம் முறியடித்துத்தான் இந்த இயக்கம் வீறு நடை போட்டு வந்துள்ளது.ஊடகங்களால் பெரிதாக ஊதப்படும் அந்த மத்தியக்குழு கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழுவின் சார்பில் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத், ஒரு அறிக்கையை முன்வைத்தார்.
                சில விஷயங்களில் தங்களுக்கு மாறுபட்ட கருத்து இருப்பதை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர் சீத்தாராம் யெச்சூரியும், தோழர் பி.வி.ராகவலுவும் மத்தியக்குழு முன்பு வைத்தனர். இது குறித்துத்தான் சில ஊடகங்கள் தங்களது நோக்கத்திற்கு கும்மியடிக்கின்றன. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இது ஒன்றும் புதிய நடைமுறையல்ல. காலம் காலமாக நடைபெற்று வரும் ஒன்றுதான். உட்கட்சி ஜனநாயகத்தை முழுமையாக பின்பற்றும் கட்சி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கட்சிக்கூட்டங்க ளில் தங்களது கருத்தை முன்வைக்க யாருக்கும் உரிமை உண்டு. அதுகுறித்து விரிவான விவாதம் நடத்தி எடுக்கப்படும் முடிவுகள் அனைவரையும் கட்டுப்படுத்தும். உட்கட்சி ஜனநாயகத்தில் இது ஒரு அம்சம். ஆனால் பல ஆங்கில பத்திரிகைகள்இந்தக்கூட்டம் குறித்து கொச்சையாக வும், விபரம் புரியாமலும், அரைவேக்காட்டுத் தனமாகவும் விமர்சனம் செய்து வருகின்றன. ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்க முயற்சிக்கின்றன.
          கட்சியின் முடிவுகள் குறித்து யாருமே விமர்சிக்கக்கூடாது என்று கருதுகிற கட்சியல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி. விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமானதாகவும், அறிவுப்பூர்வமானதாகவும் இருந்தால் எங்கிருந்து வந்தாலும் அந்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் கட்சிக்கு உண்டு. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஜனநாயகமேஇல்லை என்று சில ஊடகங்கள் கூப்பாடு போடும். விவாதம் நடந்தது குறித்த செய்திகள் வெளிவந்தால் கோஷ்டிப்பூசல் என்றுஎழுதுவார்கள். கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றும்ஜனநாயகம் என்பது முதிர்ச்சியானஒன்று.
         இந்த நடைமுறையைத்தான் ஸ்டாலின்காலத்து அணுகுமுறை என்று சில ஆங்கிலப் பத்திரிகைகள் கூசாமல் எழுதுகின்றன. தில்லியில் நடந்த மத்தியக்குழு கூட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். விருப்புவெறுப்பு இல்லாமல் கடந்த கால அனுபவத் தின் அடிப்படையில் கட்சியின் எதிர்கால திசைவழி எவ்வாறு அமைய வேண்டும் என்பதைமட்டுமே கருத்தில் கொண்டு முன்வைக்கப் பட்ட விவாதங்கள் அவை. இந்த விவாதங்களை தொகுத்து வேண்டிய மாற்றங்களைச் செய்து கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கான ஆவணம் இறுதி செய்யப்படும். அதே நேரத்தில் அதுவே முடிவானது அல்ல.
       இந்த அறிக்கைகள் கட்சியின் கிளை துவங்கி அனைத்து நிலைகளிலும் விவாதிக்கப் படும். கட்சி உறுப்பினர்கள் அனைவரும் திருத்தங்களை முன்மொழியலாம். அகில இந்திய மாநாட்டிலும் அறிக்கை மீது விவாதம் நடைபெற்று, தேவையானால் வாக்கெடுப்பும் நடத்தி அதன் பிறகுதான் ஆவணம் முழுமை பெறும். அதன் பிறகு அந்த வழிகாட்டு ஆவணம் கட்சியின் சொத்தாகக் கருதப்படும். அடுத்துவரும் காலங்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக அது தொடரும். இந்த அறிக்கைகள் கட்சி மட்டத்தில் மட்டுமின்றி இணையதளத்திலும் வெளியிடப்படும். இதன் மீது யார் வேண்டுமானாலும் திருத்தங்களை முன்மொழியலாம். இத்தகைய விரிவடைந்த, வலுவான ஜனநாயகம் வேறு எந்த முதலாளித்துவக் கட்சியிலாவது பின்பற்றப்படு கிறதா என்பதற்கு இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிக்கும் ஊடகங்கள் தங்களது மனச்சாட்சியைத் தொட்டு பதில் சொல்லட்டும். இவர்கள் ஆதாரமின்றி அவதூறுகளை மட்டுமே எழுதும்போது மகாகவி பாரதி சொன்ன, ‘நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி!’ என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
          இந்தியாவில் இயங்கும் பல்வேறு கட்சிகள் தங்களிடம் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் இருப்பதாக அவ்வப்போது கூறுவ துண்டு. ஒவ்வொரு கட்சியும் கூறும் எண்ணிக் கையை எண்ணிப்பார்த்தால் அது உலக மக்கள்தொகையைவிட கூடுதலாக இருக்கும். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறித்து சுய தணிக்கை செய்யும் கட்சி. அதில் பலவீனம்தென்பட்டால் அதைக் களைய ஆக்கப்பூர்வ மான முயற்சிகள் செய்யப்படும். கட்சியின் மத்தியக்குழுவில் முன்வைக்கப் பட்ட சில விவரங்களை தப்பும் தவறுமாக புரிந்துகொண்டு கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை சரிந்துவிட்டது. விழுந்துவிட்டது என்றெல்லாம் சில ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதுகின்றன.
        பாட்டாளி வர்க்கப்புரட்சியை மையமாகக் கொண்ட கட்சி என்ற முறையில் தொழிலாளி வர்க்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. எனவேதான் இந்தக்கட்சி வளரக்கூடாது என்று கார்ப்பரேட் ஊடகங்கள் நினைக்கின்றன. அர்த்தமற்ற முறையில் அவதூறு களை எழுதி இந்த இயக்கத்தை முடக்கிவிட முயல்கின்றன. ஆனால் அது வெற்றி பெறாது. 1990-களில் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்டு அதன் பின் தொடர்ச்சியாக வந்த காங்கிரஸ் மற்றும் பாஜககூட்டணி ஆட்சிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட நவீன தாராளமய பொருளாதாரக்கொள் கையால் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நலிவுற்ற பிரிவினர், சிறு, நடுத்தர தொழில் முனைவோர் என அனைத்துப்பகுதி மக்களும் புதிய சவால்களை சந்தித்து வருகின்றனர்.
          முதலாளித்துவ வளர்ச்சிப்போக்கில் இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். ஒருபுறத்தில் ஒரு சிலரின் கையில் சொத்துகள் குவிக்கின்றன. கோடீஸ்வரர்கள் மேலும் கொழுக்கின்றனர். மறுபுறத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் அவலம் நிறைந்ததாக மாற்றப்படுகிறது. இவ்வாறு இருவேறு இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் அரசு நவீன தாராளமயமாக்கல் கொள்கையை தீவிரமாக பின்பற்றியதால் மக்களிடம் செல்வாக்கு இழந்து காங்கிரஸ் கட்சி காலாவதி ஆகிவிட்டது. எதிர்க்கட்சியாகக்கூட அந்தக்கட்சியால் வர முடியவில்லை. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, திமுக போன்ற காங்கிரஸ் ஆதரவுக் கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. இந்த நிலையில் தாராளமயமாக்கல் கொள்கையை வேகமாக செயல்படுத்த முதலாளிகளுக்கு புதிய ஏஜெண்டு தேவைப்பட்டார்.
          அவ்வாறு அவர்களால் ஆதரிக்கப்பட்டவர் தான் நரேந்திரமோடி. பெருமுதலாளிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவோடு அவர் ஆட்சியமைத்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கார்ப்பரேட் ஊடகங்கள் மோடியை ஆதரித்து கடுமையாக பிரச்சாரம் செய்தனர். ‘வளர்ச்சி’ என்ற முழக்கத்தை நரேந்திர மோடிமுன்வைத்தாலும் அவர் பின்பற்றுவது கடைந்தெடுத்த வலதுசாரி பொருளாதாரமே ஆகும். அந்தக்கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்போது மக்களின் துன்ப துயரங்கள் அதிகரிக்கின்றன. இதை மடைமாற்றம் செய்ய- மக்களின் அதிருப்தியை திசை திருப்ப வகுப்பு வாத பழமைவாத தீயை விசிறிவிடுகின்றனர். உ.பி. மாநிலம் முசாபர் நகர் உட்பட நேரடியான மதக்கலவரங்களைத் தூண்டிவிடுவது மறுபுறத்தில் அரசின் அனைத்துத் துறைகளிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கடைந்தெடுத்த பழமைவாத சித்தாந்தத்தை புகுத்துவது என மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
        இரட்டை அபாயத்தை நாடு சந்திக்க வேண்டியுள்ளது. நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்தவுடன் பொதுத்துறை பங்குகளை விற்பது, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளி லும் அந்நிய முதலீட்டை அதிகரிப்பது, நிலங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்றிவிட்டு பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரை வார்ப்பது, தொழிலாளர் நல சட்டங்களைத் திருத்தி தொழிலாளர் உரிமைகளை பறிப்பது, கிராமப்புற வேலைவாய்ப்புத்திட்டத்தை சீர்குலைப்பது, மானியங்களை வெட்டுவது பொது விநியோக முறையை சீரழிப்பது என முற்றிலும் மக்கள்விரோதப் பாதையில் மோடி அரசு நடைபோடு கிறது. பொருளாதாரக் கொள்கையை பொறுத்தவரை முந்தைய காங்கிரஸ் அரசுக்கும் இப்போதைய பாஜக கூட்டணி அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
             நவீன தாராளமயமாக்கல் கொள்கையின் தவிர்க்க முடியாத விளைவாக ஊழலும், லஞ்சமும் அதிகரித்துள்ளது. கருப்புப்பணத்தைவெளிக்கொணர்வது குறித்து ஏற்கெனவேஆட்சியிலிருந்த காங்கிரசும், இப்போது ஆட்சியிலிருக்கும் பாஜகவும் நடத்தும் விவாதங்களைப் பார்த்தால் இரு கட்சிகளுமே இந்த விஷயத்தில் ஒரே மாதிரி செயல்பட்டுவருவதை புரிந்துகொள்ள முடியும். ஊழல் புரிவதில் இரு கட்சிகளுக்கும், ஆட்சிகளுக்கும் வித்தியாசமில்லை. சாமர்த்தியமாக மறைத்தது யார் என்பது தான் அவர்களுக்குள் நடக்கும் விவாதம்.
        நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கிறது. ஒரு கிலோ தக்காளி விவசாயிகளிடம் 2 ரூபாய்க்கு வாங்கப் பட்டு சந்தையில் 25 ரூபாய்க்கு விற்கும் நிலைகூட உள்ளது. இதனால் இரு தரப்பும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்தெல்லாம் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிக்கும் ஊடகங்கள் எழுதுவதே இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்வி மற்றும் மாநில நிலைமைகள், கடந்த காலத்தில் கட்சி பின்பற்றிய உத்திகள், அதில் ஏற்பட்ட அனுபவங்கள் என கட்சியின் மத்தியக்குழு அனைத்து அம்சங்களையும் விரிவாக விவாதித்தது. சில ஊடகங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறிவைத்து அவதூறு செய்வதற்கு ஒரு நோக்கம் உள்ளது. நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிராக ஒரு உண்மையான மாற்றை முன்வைப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே. எனவே கார்ப்பரேட் ஊடகங்கள் அந்த இயக்கத்தை இழிவு படுத்த முயல்கின்றன.கம்யூனிஸ்ட் இயக்கம் இத்தகைய அவதூறுகளை சந்திப்பது வரலாற்றில் ஒன்றும் புதிதல்ல.
            மாமேதை கார்ல் மார்க்ஸ் மீது அவதூறுகளை அள்ளித்தெளித்து அவர் ஒரு நாட்டில் நிரந்தரமாக இருக்க முடியாமல் விரட்டினார்கள். ஆனால் அவர் ஓய்ந்துவிடவில்லை, சோர்ந்துவிடவில்லை.மாமேதை லெனின் ரஷ்யாவில் நடந்த புரட்சிக்கு தலைமை தாங்கியதற்குக் காரணம்அவர் ஜெர்மனியின் தூண்டுதலின்பேரில் செயல்பட்டதுதான் என்று அன்றைக்குசிலர் எழுதினார்கள். ஐரோப்பாவில் சிலநாடுகளில் இப்போதும் அதை பாடமாக சொல்லித்தருகின்றன. பாசிசமும், மார்க்சியமும் ஒன்றுதான். இரண்டுமே சர்வாதிகாரம்தான் என்று கூட இவர்கள் வரலாற்று அறிவு கொஞ்சமும் இல்லாமல் எழுதுவார்கள். கம்யூனிஸ்ட் தலைவர்களையும் சர்வாதிகாரிகள் பட்டியலில் சேர்ப்பார்கள். ஹிட்லரையும், பாசிசத்தை முறியடித்து உலகை பாதுகாத்த மாவீரர் ஜோசப் ஸ்டாலினையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்துவார்கள். கார்ப்பரேட் ஊடகங்களுக்கு இத்தகைய அரைகுறை அறிவு ஜீவிகள் தற்போது மலிவான விலைக்குக் கிடைக்கிறார்கள். வாங்கிய கூலிக்கு விசுவாசமாக சிலர் கூவுகிறார்கள். சிலர் பெற்ற கூலிக்கு அதிகமாகவே கூவு கிறார்கள். கட்சியின் அகில இந்திய மாநாடு முடியும்வரை இவர்களுடைய கூச்சல் உச்ச ஸ்தாயில் இருக்கக்கூடும். ஆனால் ஒன்றை மட்டும்சொல்லிக்கொள்வோம்.
         உங்கள் பேனா, உங்கள் காகிதம். எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு எடுக்கப்போகும் முடிவுகள், வகுக்கப்போகும் வியூகங்கள் உங்களுக்கு பொருத்தமான பதிலைச் சொல்லும். மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாட்டு இது. “உண்மை ஒருநாள் வெளியாகும்- அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும், பொறுமை ஒருநாள் புலியாகும்- அதற்கு பொய்யும், புரட்டும் பலியாகும்”          
நன்றி : தீக்கதிர்