மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி உதயமாகிய 50-ஆம் ஆண்டு தினத்தைக் கொண்டாடிக்கொண்
டிருக்கிறோம். கட்சி, (1964 அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை)
கொல்கத்தாவில் நடைபெற்ற ஏழாவது அகில இந்திய மாநாட்டில் பிறந்தது. அதன்
பின்னர் கட்சி பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் எதிர்கொண்டு அவற்றை
முறியடித்து முன்னேறி இருக்கிறது. இந்த சமயத்தில் கட்சி மற்றும்
இயக்கத்தின் லட்சியத்திற்காக உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தியாகிகளுக்கு
வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் உதயம் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மிகவும் முக்கியமான
மற்றும் கடும் சோதனைமிக்க கட்டத்தைக் குறிக்கிறது. 1920 அக்டோபரில் தாஷ்கண்டில் இந்தியாவிலிருந்து சென்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் குழுவால்தான்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. அது கம்யூனிஸ்ட் அகிலத்தாலும்
அங்கீகரிக்கப்பட்டது. பிந்தைய காலங்களில் 1920களில் நாட்டின் பல
பாகங்களில் சிறிய அளவில் பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்கள் உருவாயின.
இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சி ஓர் அகில இந்திய கட்சியாக 1934-இல் மீரட் சதி
வழக்கில் தண்டனை பெற்றிருந்தவர்கள் சிறையிலிருந்துவிடுவிக்கப்பட்ட பின்னர்,
செயல்படத்தொடங்கியது. சுதந்திரத்திற்குப் பின் இந்தியப் புரட்சியை
நடத்துவதற்காகப் பின்பற்ற வேண்டிய தொலைநோக்கு உத்தி பற்றி நீண்ட
நெடுங்காலமாக நடந்து வந்த உள்கட்சிப் போராட்டத்தின் விளைவாகவே மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. இவ்வாறு உள்கட்சிப் போராட்டம் ஒன்றுபட்ட
கட்சிக்குள் முழுமையாக பத்தாண்டுகள் நடைபெற்றது. அதனால்தான் கட்சிக்காகத்
திட்டம் எதுவும் அந்த சமயத்தில் நிறைவேற்றப்படவில்லை.1964ல் கட்சியின்
தேசியக் கவுன்சில் கூட்டத்திலிருந்து 32 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த
பின்னர், கட்சி பிளவுபட்டபோது, சோவியத் - சீனக் கட்சிகளின்
வித்தியாசங்களின் அடிப்படையிலேயே இங்கேயும் கட்சி பிளவுபட்டதாக கருதப்பட்டது. அன்றைய காங்கிரஸ் அரசாங்கமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை
“பீகிங் ஆதரவு’’ கலகக்காரர்கள் என முத்திரை குத்தியது. 1960 களின்
மத்தியிலும், அதன் பின்னரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின்
அறைகூவலுக்கிணங்க பல நாடுகளில் எண்ணற்ற கம்யூனிஸ்ட் குழுக்கள், அந்தந்த
நாடுகளிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து பிரிந்து சென்றதும் இத்தகைய
குழப்பத்திற்கு ஒருவிதத்தில் காரணமாகும்.
இத்தகைய கட்சிகளில் பல
தாய்க் கட்சியின் உதிரிகளேயொழிய, அவை குறிப்பிடத்தக்க அளவிற்கு அரசியல்
செல்வாக்கோ அல்லது வெகுஜனத்தளமோ பெற்றவை அல்ல. ஆனால் இந்தியாவில்
நிலைமைகள் வேறு. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவும், சோவியத் யூனியன்
கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் வளர்ந்து
வந்த பிரிவினையும் ஒரேசமயத்தில் தற்செயலாக நிகழ்ந்ததேயாகும். ஆனால்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டதற்கு இது காரணம் அல்ல.
இந்திய அரசின் குணாம்சம், ஆளும் வர்க்கங்களின் தன்மை மற்றும் அதுபோன்ற பல
அம்சங்கள் குறித்த அடிப்படைக் கேள்விகள் தொடர்பாக கட்சி பின்பற்றவேண்டிய
திட்டம் மற்றும் தொலைநோக்கு உத்தி குறித்து கட்சிக்குள் நீண்ட நெடுங்காலமாக
நடந்து வந்த உள்கட்சிப் போராட்டத்தின் இறுதி விளைவாகத்தான் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது.
1964 அக்டோபர் - நவம்பரில் நடைபெற்ற
கட்சியின் 7-ஆவது அகில இந்திய மாநாட்டில் கட்சித் திட்டம்
நிறைவேற்றப்பட்டதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
உதயமாகியது. கட்சியின் 7-ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கட்சித்
திட்டம் இந்திய சமூகம் மற்றும் வர்க்கங்கள் குறித்து மார்க்சிய - லெனினிய
ஆய்வின் அடிப்படையில் இந்தியப் புரட்சியை மேற்கொள்வதற்கான தொலைநோக்கு உத்தி
குறித்து முதன் முதலாக விளக்கிக் கூறியது. கட்சித் திட்டத்தில் இந்திய
அரசின் குணம் குறித்து - இது முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவக்
கூட்டணியுடன் பெருமுதலாளிகளால் நடத்தப்படும் அரசு - என மிகவும்
தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறியது. அதன் மூலம் அதுநாள்வரை இது தொடர்பாக
இருந்து வந்த குழப்பங்களுக்கு முடிவு கட்டியது. புரட்சியின் கட்டம், அரசின்
குணம், மக்கள் ஜனநாயகப் புரட்சிக்குத் தேவையான வர்க்கக் கூட்டணி ஆகியவை
குறித்து கட்சித் திட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டது. அது எவ்வளவு
சரியானது என்பதை அதன்பின்னர் காலமும் நடை முறைகளும் மெய்ப்பித்தது.
இத்திட்டம் 2001ல் மேம்படுத்தப்பட்டது.
ஆயினும் தொலைநோக்கு
உத்திதொடர்பான அடிப்படை அம்சங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படாது தொடர்ந்து
நிலைநிறுத்தப்பட்டன. இத்திட்டம் தான், கடந்த ஐம்பதாண்டு காலமாக
கட்சியின் அரசியல், ஸ்தாபன மற்றும் தத்துவார்த்த நடவடிக்கைகளுக்கு
வழிகாட்டி வந்திருக்கிறது. இத்திட்டத்தின் அடிப்படையில்தான் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி நாட்டில் இடதுசாரிக் கட்சிகளுக்குத் தலைமை தாங்கக் கூடிய
அளவிற்கு வளர்ந்திருக்கிறது. கட்சி பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட
உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது. இவர்கள் வெகுஜன ஸ்தாபனங்களில்
பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெகுஜன ஸ்தாபனங்களில்
உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் ஏழு கோடியாகும். கட்சி
உதயமானவுடனேயே, தன்னுடைய தத்துவார்த்த நிலைப்பாடுகளையும் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கியது. 1960களின் முற்பகுதியில் சர்வதேச
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மிகவும் ஆழமான முறையில் தத்துவார்த்த விவாதமும்
மோதல்களும் இருந்தன.
புதிய சகாப்தத்தின் உள்ளடக்கம், பெரிய அளவிலான
சமூக முரண்பாடுகள், இரு சோசலிச அமைப்புகளுக்கும் இடையே சமாதான முறையில்
சகவாழ்வு மற்றும் சோசலிசத்திற்கு சமாதானமுறையில் மாறிச்செல்லுதல்
ஆகிய அனைத்து அம்சங்கள் குறித்தும் கூர்மையான அளவில் வித்தியாசங்களும்,
வாதப் பிரதிவாதங்களும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் முகாம்களுக்கும்,
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முகாம்களுக்கும் இடையே நடைபெற்று வந்தன. நடைமுறையில் நம் நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் ஒட்டுமொத்த
தலைமையும், 7-ஆவது அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகு, சிறையில்
அடைக்கப்பட்டிருந்தது. எனவே, மேற்கண்ட பல தத்து வார்த்த பிரச்சனைகள்
தொடர்பாகவும் கட்சியின் நிலைப்பாட்டை 1968 வரையில் உருவாக்க முடியவில்லை.
இது, `மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடுகளையே
பின்பற்றிக்கொண்டிருந்தது’ என்கிற தவறான கருத்தினை ஒருசிலர் மத்தியில்
உருவாக்குவதற்கு இட்டுச்சென்றது. கட்சியின் தத்துவார்த்த நிலைப்பாட்டை
விளக்குவதில் ஏற்பட்ட தாமதம், நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் இடது
குறுங்குழுவாதப்போக்குகள் வெளிப்பட்ட சமயத்தில், கட்சிக்கு சற்று
சேதாரத்தை ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக
உள்கட்சி விவாதத்தை நடத்திய பின்னர் தன்னுடைய தத்துவார்த்த நிலைப்பாட்டை
1968ல் நடைபெற்ற பர்துவான் பிளீனத்தில் நிறைவேற்றியது.
இந்தப்
பிளீனம்தான், இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள்ளும் மற்றும் சர்வதேச
கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் இருந்து வந்த வலது திருத்தல்வாதம், இடது
குறுங்குழு வாதம் ஆகியவற்றிற் கிடையில் மிகவும் சரியானதொரு வரலாற்று முறிவினை ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த சமயத்தில்
சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும்
மேற்கொண்ட பல தத்துவார்த்த நிலைப்பாடுகளை மிகவும் வலுவாகவும் தெளிவாகவும்
விமர்சனத்திற்குள்ளாக்கியது. உண்மையில் இது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் தனித்தன்மை வாய்ந்த குணத்தை வெளிக்கொணர்ந்தது. ஒன்றுபட்ட
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அனுபவமற்றதொருக் கட்சியாக இருந்த போது, அது
தன்னுடைய சித்தாந்தம் மற்றும் நடைமுறைக்குப் பெரிதும் சோவியத் யூனியன்
கம்யூனிஸ்ட் கட்சியையே சார்ந்திருந்தது. (சுதந்திரத்திற்கு முந்தைய
காலங்களில், கம்யூனிஸ்ட் அகிலமானது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை, கிரேட்
பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியஸ்தத்துடன் செயல்படுமாறு
பணித்திருந்தது.) இந்த மரபு சுதந்திரத்திற்குப் பின்பும் தொடர்ந்து
இருந்து வந்தது.
பின்னர், அறுபதுகளின் கடைசியில் சீனக் கம்யூனிஸ்ட்
கட்சி, இடது குறுங்குழுவாதப் போக்கினை பின் பற்றியது. மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி இவ்வாறு “சார்ந்திருக்கும்போக்கை’’ உடைத்தெறிந்தது.
கட்சித் திட்டம் உருவாக்கமும், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நடைமுறை
உத்திகளும் மற்றும் தத்துவார்த்த நிலைப்பாடுகளும் கடந்த கால
நடைமுறைகளிலிருந்து இயங்கியல் அடிப்படையிலான முறிவினை ஏற்படுத்தின. இத்தகைய
புரட்சிகரமான தொடக்கத்திற்கு அடிப்படை, துல்லியமான இந்திய நிலைமைகளுக்கு
மார்க்சிய லெனினியத்தைப் பிரயோகித்த தீர்மானகரமான முயற்சியேயாகும். இதன்
பொருள், இதர நாடுகளில், குறிப்பாக புரட்சி வெற்றி பெற்ற நாடுகளிலிருந்து,
அனுபவங்களை கடன்வாங்கி அவற்றை எந்திரகதியாக நம் நாட்டிற்கு நகலெடுக்கக்
கூடாது என்பதேயாகும். சோவியத் யூனியன் தகர்வு உலகம் முழுதும் உள்ள
கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் சோசலிஸ்ட் லட்சியத்திற்கு கடும் பாதிப்புகளை
ஏற்படுத்தியது.
அதன் தாக்கம் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட்
இயக்கத்தில் பிரதிபலித்தது. ஆயினும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை
பொறுத்த வரையில் அதன் அரசியல் மற்றும் தத்துவார்த்த நிலைப்பாடுகளில்
பெரிய அளவிற்கு எவ்விதப் பாதிப்புகளையும் ஏற்படுத்திடவில்லை. அதேபோன்று
உலகில் பல நாடுகளில் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் உருக்குலைந்ததுபோல,
ஸ்தாபனரீதியாகவும் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்திடவில்லை. இதற்குக்
காரணம், கட்சி மார்க்சியத்தை சுயேட்சையாகப் புரிந்து கொண்டிருந்ததுதான்.
கட்சி, சோவியத் எதிர்ப்பு நிலையை எடுக்காமலேயே, சோவியத் யூனியன்
கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த நிலை மற்றும் நடைமுறையை விமர்சிக்கும்
அணுகுமுறையைப் பின்பற்றியது. சோவியத் யூனியன் மீதோ, சோவியத் யூனியன்
கம்யூனிஸ்ட் கட்சி மீதோ குருட்டுத்தனமான முறையில் நம்பிக்கை எதுவும்
வைத்திருக்கவில்லை. அதனால் தான் நம் கட்சியால் சோவியத் யூனியன் வீழ்ச்சியை
மிகவும் சரியாக எடைபோட முடிந்தது.
அதன் வீழ்ச்சியின் விளைவாக
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சேதாரம் அதிகம் இல்லை. இந்திய
உழைக்கும் மக்கள் மத்தியிலும், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் தத்துவார்த்த
நிலைப்பாட்டிலும் மிகவும் ஆழமாக வேரூன்றியிருந்ததன் காரணமாக, கட்சியால்
நிலைத்து நிற்க முடிந்தது. தன்னுடைய சொந்த சித்தாந்தம் மற்றும் நடைமுறை
மூலம் 20-ஆம் நூற்றாண்டில் சோசலிசத்தைக் கட்டி எழுப்புவதற்கான அனுபவத்தைப்
புத்தாய்வு செய்யவும், 21-ஆம் நூற்றாண்டிலும் புத்துணர்ச்சியுடன்
சோசலிசத்திற்கான பணியை நம்பிக்கையுடன் புதுப்பிக்கவும் முடிந்தது.
உண்மையில், 1991க்குப் பிந்தைய பத்தாண்டுகள் கட்சி உறுப்பினர்
எண்ணிக்கையில் சீரான வளர்ச்சியைக் கண்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் திட்டம், `மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மைய அச்சு விவசாயப்
புரட்சிதான்’ என்று கூறுகிறது.
எனவே,விவசாயப் பிரச்சனையும் நிலப்
பிரச்சனையும் கட்சியின் நடைமுறைக்கு மையமானவைகளாகும். மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி உருவான காலத்திலிருந்தே, நிலத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மிகவும் முனைப்புடன் செயல்பட்டிருக்கிறது.
நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டங்கள், பினாமி நிலங்களைக்
கையகப்படுத்துதல், உபரி நிலங்களை விவசாயிகளுக்கு விநியோகம் செய்தல்,
விவசாயத் தொழிலாளர்களுக்கான வீட்டுமனை பட்டா வழங்குதல் ஆகியவற்றுக்கான
போராட்டங்கள் காரணமாகத்தான் இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்கள்
மேற்குவங்கம், கேரளம் மற்றும் திரிபுராவில் அமைந்ததும், அவற்றின் மூலம்
நிலச்சீர்திருத்தம் அர்த்தமுள்ள வகையில் அமல்படுத்த முடிந்ததுமாகும்.
நிலச்சீர்திருத்தம் மூலம் உபரி நிலங்களை விநியோகம் செய்தல், மிதமிஞ்சிய
நிலவாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல், குத்தகை தாரர்களுக்குப்
பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்டுவந்து அவர்களைப் பாதுகாத்தல் முதலானவற்றை
செய்ய முடிந்தது.
1960-களும், குறிப்பாக 1970-களும் இப்பிரச்சனைகள்
மீது அலை அலையாகப் போராட்டங்களைக் கண்டது. மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் 1967-லிருந்து 1970 வரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
தலைமையில் அமைந்த இரு ஐக்கிய முன்னணி அரசாங்கங்களும், சக்தி மிக்க
போராட்டங்களின் பின்னணியில் நிலப்பிரச்சனையை தீர்மானகரமான முறையில்
முன்னெடுத்துச் சென்றன. உழைக்கும் வர்க்கத்தின் கட்சி என்ற முறையில்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாளர் வர்க்க இயக்கத்தை வலுப்படுத்த
வேண்டும் என்றும், மக்கள் ஜனநாயக இயக்கத்திற்குத் தலைமை தாங்கக்கூடிய
அளவிற்கு வல்லமை பொருந்திய அரசியல் சக்தியாக மிளிரக்கூடிய வகையில்
தொழிலாளர்கள் அணிதிரள வேண்டும் என்றும் தொடர்ந்து கோரி வருகிறது.
தனியார்மயத்திற்கு எதிராகவும், தொழிலாளர்களை ஒப்பந்தமுறையில் அமர்த்துவதற்கு எதிராகவும், தொழிற்சங்க உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் கட்சி
தொடர்ந்து தீவிரமாகப் போராடி வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,
வர்க்க சுரண்டலும், சமூக ஒடுக்குமுறையும் தற்போதைய முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் இரட்டை தூண்கள் என்று
கருதுகிறது.
எனவே,பெண்கள், தலித்துகள், பழங்குடியினர்
மற்றும் சிறுபான்மையினர் போன்ற சமூக ஒடுக்கு முறையின் அனைத்து வடிவங்களுக்கு
எதிராகவும் தொடர்ந்து கட்சி போராடிக்கொண்டிருக்கிறது. நாட்டின் ஆளும்
வர்க்கங்கள் தன்னுடைய நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படும் சமயங்களில் எல்லாம்,
அவை ஜனநாயகத்தின் மீது தாக்குதலைத் தொடுக்கும் என்பதால், ஜனநாயகமும்,
ஜனநாயக உரிமைகளும் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் தற்போது வழங்கப்பட்டிருக்கிற
சிறிதளவான உரிமைகளும் கூட பாதுகாப்பானவை அல்ல என்ற அடிப்படைப்
புரிந்துணர்வை கட்சி பெற்றிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான்
நாட்டில் முதன் முறையாக, 1972-இல் கட்சியின் 9-ஆவது அகில இந்திய மாநாட்டில்
மிகவும் வேகமாக நெருங்கி வந்துகொண்டிருக்கும் `ஒரு கட்சி எதேச்சதிகார’
ஆபத்து குறித்து எச்சரித்தது. 1971-க்குப் பிறகு மேற்கு வங்கத்தில் இந்திரா
காந்தி அரசாங்கம் மற்றும் மாநில நிர்வாக எந்திரத்தின் ஆதரவுடன் ஏவப்பட்ட
அரைப் பாசிச அடக்குமுறை அனுபவத் தின் அடிப்படையில், கட்சி இவ்வாறு கூறியது.
1975 ஜூன் மாதத்தில் உள்நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் அறிவிப்பதற்கான
காலம் வரையில் ஜனநாயகத்தையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்காக
நடைபெற்ற போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக
முன்னெடுத்துச் சென்றது.
அவசரநிலை ஆட்சிக்கு எதிராகக் கட்சி
போராடியது. இக்காலத்தில் கட்சியின் நூற்றுக்கணக்கான தலைவர்களும், முன்னணி
ஊழியர்களும் சிறைப்படுத்தப் பட்டார்கள். ஆயினும் கட்சி இதர ஜனநாயக
சக்திகளுடன் இணைந்து நின்று ஜனநாயகத்தின் மீதான மூர்க்கத்தனமான தாக்குதலை
எதிர்த்தது. அதனால்தான், அவசர நிலை விலக்கிக் கொள்ளப்பட்டவுடன், கட்சி
முன்னிலும் பன்மடங்கு கம்பீரத்துடன் எழுந்து நின்றது.அரைப் பாசிச
அடக்குமுறை மற்றும் அகில இந்தியஅளவில் அவசரநிலைக்கு எதிரான போராட்டங்களின்
பின்னணியில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணியும்
1977-ல் மேற்குவங்க சட்டமன்றத் தேர்தல்களில் முதன்முறையாக மூன்றில் இரு
பங்கு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகள்
மீதான தாக்குதல்கள் என்பவை அடிக்கடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்
இடதுசாரிகளுக்கு எதிராகத்தான் ஒருமுகப்படுத்தப்பட்டன. மேற்குவங்கத்தில்
அரைப் பாசிச அடக்குமுறைக்குப் பின், 1988-க்கும் 1993-க்கும் இடையே திரிபுரா
வில் அடக்குமுறை ஏவப்பட்ட காலமாகும். மேற்குவங்கத்தில் 2011-க்குப்பிறகு
மீண்டும் விரிவான அளவில் அடக்குமுறை ஏவப்பட்டு வருகிறது, ஜனநாயக உரிமைகள்
நசுக்கப்பட்டு வருகின்றன
நூற்றுக்கணக்கான தோழர்கள் ஜனநாயக உரிமைகள்
மற்றும் செங்கொடியைப் பாதுகாப்பதற்காகத் தங்கள் இன்னுயிரைப் பலி
கொடுத்துள்ளனர். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம், நாடாளுமன்ற ஜனநாயக
அமைப்பில் பணியாற்றுவதில் வளமான அனுபவத்தைப் பெற்றிருக்கிறது. இதில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினைச்
செய்திருக்கிறது. கட்சி உருவான பின்னர், கட்சி நாடாளுமன்ற அமைப்புகளில் ஓர்
ஆக்கப்பூர்வமான அணுகுமுறையுடன் எப்படிச் செயல்படுவது என்பது குறித்தும்,
மாநில அரசாங்கங்களில் எப்படி பங்காற்றுவது என்பது குறித்தும் தெளிவான
முறையில் வரையறைகளை உருவாக்கியது. இதற்கான நடைமுறை உத்தி மிகவும் தெளிவான
முறையில் கட்சித் திட்டத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. 1957-ல் கேரளாவில்
முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையின் அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எங்கே சட்டமன்றங்களில்
இடதுசாரிகளும் ஜனநாயக சக்திகளும் வலுவான சக்தியாக இருக்கிறதோ அங்கே
மட்டும்தான் மாநில அரசாங்கங்களில் இணைந்திடும்.
மாநில
அரசாங்கங்களில் பங்கேற்பது என்பதை, முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ
அமைப்புக்குள்ளேயே மக்களுக்கு சாத்தியமான அளவிற்கு உதவிகளை அளித்திடும் அதே
சமயத்தில், வெகுஜனப் போராட்டங்களையும், ஜனநாயக இயக்கத்தையும்
வளர்ப்பதற்கான ஓர் உபகரணமாகத்தான் கட்சி பார்த்தது. மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி, 1967-70-இல் மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் ஐக்கிய
முன்னணி அரசாங்கங்கள் அமைக்கப்பட்டபோது, இதனை நடைமுறைப்படுத்தியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் மேற்குவங்கம், கேரளம் மற்றும்
திரிபுராவில் 1977-க்குப் பின்னர் இடதுசாரி அரசாங்கங்கள் அமைந்ததும்,
செயல்பட்டதும், முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவக் கொள்கைகளுக்கு எதிராக,
( மாநில அரசாங்கத்திற்குரிய சிறிதளவிலான அதிகாரத்திற்குட்பட்டு ) மாற்றுக்
கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான போராட்டத்திலும் இடதுசாரி மற்றும்
ஜனநாயக இயக்கத்தை வளர்த்தெடுக்கும் பணியிலும் முக்கிய பாத்திரம்
வகித்தன. இந்த அரசாங்கங்கள் மூலம் நிலச்சீர்திருத்தங்களில் நாம்
மேற்கொண்டுள்ள சாதனைகள், அதிகாரங்களைப் பரவாக்கியமை, கூட்டு நடவடிக்கைகளுக்காக உழைக்கும் மக்களின் உரிமைகளை வலுப்படுத்தியமை, மதச்சார்பின்மையைப்
பாதுகாத்தமை ஆகியவை இடது மற்றும் ஜனநாயக நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச்செல்ல பெரும் பங்களிப்பினைச் செய்திருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி உயர்த்திப் பிடித்துள்ள அரசியல் மேடை என்பது கூட்டாட்சித்
தத்துவமாகும்.
தேசியப் பிரச்சனையைப் பொறுத்த வரை கட்சியின்
புரிந்துணர்வு என்னவெனில், இந்தியா என்பது ஒரு பல்வேறு தேசிய இனங்களைக்
கொண்ட நாடு. இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமையை, நாட்டிலுள்ள பல்வேறு
மொழிபேசும் தேசிய இனங்களுக்கும், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சித்
துறைகளில் அவர்களுக்குரிய பங்கினை அளித்து ஒரு கூட்டாட்சி கட்டமைப்பை
அனுமதிப்பதன் மூலம் மட்டுமே, வலுப்படுத்திடமுடியும். இவ்வாறு ஒரு
கூட்டாட்சி அரசியல் கட்டமைப்பு தேவையாக உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி, கூட்டாட்சித் தத்துவத்திற்காகவும், பிராந்தியவெறி, மொழிவெறி,
இனவெறி சக்திகளை முறியடித்து மக்களின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காகவும்
உறுதியான சக்தியாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது. நாட்டின் பல
பகுதிகளில் 1980-களில் பிரிவினை சக்திகள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்
கொண்டிருந்த சமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேச ஒற்றுமைக்காக
உறுதியுடன் நின்றது.
பஞ்சாப், அஸ்ஸாம், திரிபுரா, ஜம்மு - காஷ்மீர்
ஆகிய மாநிலங்களில் இத்தகைய சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில்
நூற்றுக்கணக்கான தோழர்களை நாம் பலிகொடுத்துள்ளோம். மத்திய - மாநில உறவுகளை
மாற்றியமைக்கும் பிரச்சனையிலும் கட்சி முக்கியமான பங்கினை ஆற்றி
இருக்கிறது. இது இடதுசாரிகள் தலைமையிலான மாநில அரசாங்கங்களால்
மேற்கொள்ளப்பட்டது. 1983-ல் ஸ்ரீநகரில் நடைபெற்ற 15 கட்சிகள் மாநாட்டில்
நடைபெற்ற விவாதங்களின் அடிப்படையில் மத்திய மாநில உறவுகள் மீது ஒரு பொது
நிலைப்பாட்டை உருவாக்குவதிலும் கட்சி முக்கியமான பங்கினை
ஆற்றியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வகுப்பு வாதத்திற்கு எதிராக
மிகவும் உறுதியான சக்தியாக இருந்து வருகிறது. வரலாற்று ரீதியாக,
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த நாட்களில்,
மக்களைப் பிரிப்பதற்காக மதம் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. நாடு
பிரிவினைக்கு உள்ளான சமயத்தில் கொழுந்துவிட்டெரிந்த மதவெறிக்கு
எதிராக கம்யூனிஸ்ட்டுகள் உறுதியுடன் நின்று வரலாறு படைத்திருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட்டுகள் மிகவும் சிறிய அளவில் இருந்தபோதிலும்கூட, வன்முறைக்கு
எதிராக நின்று, மதவெறியர்களின் வன்முறை வெறியாட்டங்களிலிருந்து மக்களைக்
காப்பாற்றி இருக்கின்றனர். பின்னர், சுதந்திர இந்தியாவிலும், எங்கெல்லாம்
மதவெறியர்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிடுகிறார்களோ அங்கெல்லாம் வன்முறைக்கு
ஆளானவர்களைப் பாதுகாத்திட கம்யூனிஸ்ட்டுகள் முன்வந்திருக்கிறார்கள்.
இத்தகைய
பாரம்பரியத்தின் அடிப்படையில்தான் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சித் தலைவரான உ.கே.குஞ்ஞிராமன், 1968ல் தலச்சேரியில் மதவெறியர்களால்
மசூதி தாக்குதலுக்கு உள்ளான போது அதனைப் பாதுகாத்திடும் போராட்டத்தில்
உயிர்நீத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதச்சார்பின்மைக் கொள்கையை
உறுதியுடன் பற்றிக்கொண்டிருக்கிறது. மதச்சார்பின்மை என்பதன் பொருள்
மதத்தை அரசிடமிருந்தும் அரசியலிலிருந்தும் தனியே பிரிப்பது என்பதாகும்.
முதலாளித்துவக் கட்சிகள் பல பெரும்பான்மை வகுப்புவாதத்தையும், சிறுபான்மை
வகுப்புவாதத்தையும் திருப்திப்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றன. அதுபோல
அல்லாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசியலில் வகுப்புவாத
சக்திகள் எவ்விதத்தில் தலையிடுவதையும் முற்றிலுமாக எதிர்த்து வருகிறது.
1980-களின் பிற்பகுதியில் பெரும்பான்மை வகுப்புவாதம் ஓர் ஆபத்தாக
தலைதூக்கியுள்ள சமயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் இத்தகைய
அச்சுறுத்தலை பாஜக/ஆர்எஸ்எஸ் பரிவாரம் இதனைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது
என்று சுட்டிக்காட்டியது. கட்சி, இந்துத்துவா சக்திகளை முறியடித்திடவும்,
அவற்றை அரசியலிலிருந்து தனிமைப்படுத்திடவும் தொடர்ந்து செயல்பட்டு
வருகிறது.
பெருமுதலாளிகள் மற்றும் கார்ப்பரேட்டுகள் பாஜக தங்களின்
நவீன தாராளமய நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச்செல்ல உறுதி
பூண்டிருப்பதாகவும் அதன் மூலம் தங்கள் நலன்களுக்கு உதவுவதாகவும் பார்ப்பதன்
காரணமாகத்தான் அதனை ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள் என்றும், அவ்வாறு
பாஜக ஏற்றம் பெற்றிருக்கிறது என்றும் கட்சி மதிப்பிடுகிறது. அதனால்தான்
நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டமும், பெரும்பான்மை
வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டமும் பின்னிப்பிணைந்தவை என்று
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த அரசியல்
அரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும்
மட்டுமே பாஜகவுடனும் வகுப்புவாத சக்திகளுட னும் எந்தக் காலத்திலும் தேர்தல்
அல்லது அரசியல் ஆதாயங்களுக்காக சமரசம் செய்து கொண்டதில்லை என்பது
குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த
ஐம்பதாண்டுகளில், இந்தியாவின் வளர்ச்சிக்கு மாற்றுப்பாதையை - சமூக
ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நியாயமான மற்றும் அரசியல் ரீதியாக
ஜனநாயகப் பூர்வமான ஒன்றை - முன்வைத்ததில் அரசியல் நிலைப்பாட்டில்
குறிப்பிடத்தக்க சக்தியாக இருந்து வந்திருக்கிறது. இந்திய அரசியலில்,
மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சித் தத்துவம், சமூக நீதி ஆகிய அனைத்து
முக்கிய பிரச்சனைகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனி முத்திரை
பதித்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக்
கட்சிகளும் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் மிகவும் மோசமான முறையில்
பின்னடைவை சந்தித்துள்ளன. வலதுசாரிகள் முன்னேறியதன் மூலம் பாஜக அரசாங்கம்
அமைந்திருக்கிறது.
இக்கட்சி கார்ப்பரேட் அதிகாரம் மற்றும்
இந்துத்துவா ஆகிய இரட்டை சக்திகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
மதச்சார்பற்ற ஜனநாயகம், உழைக்கும் மக்களின் உரிமைகள் மற்றும் மாற்றுக்
கொள்கைகளுக்கான போராட்டத்திற்கு வலுவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்
இடதுசாரிகளும் தேவை. கட்சி இந்த சவாலை முழுமையான அக்கறையுடன் எடுத்துக்
கொண்டிருக்கிறது. 2015 ஏப்ரலில் நடைபெறவிருக்கும் கட்சியின் 21ஆவது அகில
இந்திய மாநாட்டில் நிறைவேற்ற மத்தியக் குழு இன்றைய புதிய அரசியல்
சூழ்நிலைக்கு ஏற்ப புதியதொரு அரசியல் - நடைமுறை உத்தியை உருவாக்கிக்
கொண்டிருக்கிறது. நவீன தாராளமய முதலாளித்துவத்தின் கடந்த இருபதாண்டு
களுக்கும் மேலான செயல்பாடுகளின் மூலம் இந்திய சமூகத்திலும்,
வர்க்கங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துத் துல்லியமாக ஆய்வுகளை
மேற்கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் செயல்படுவதற்கும்,
ஸ்தாபனத்திற்கும் கட்சியின் அகில இந்திய மாநாடு புதிய திசைவழியை
அளிக்கும். இந்தியாவில் தற்போது ஆளும் வர்க்கங்களால் நிறைவேற்றப்பட்டு வரும்
நவீன தாராளமயக் கொள்கைகளின் மூலமாக நாட்டின் சொத்துக்கள் கொள்ளை
அடிக்கப்படுகின்றன. மக்கள் மத்தியில் பொருளாதார மற்றும் அரசியல்
சமத்துவமின்மை பெருமளவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
உலகின்
பெரும் பணக்காரர்களில் ஒருசிலரை உருவாக்கி இருப்பதோடு, பெரும்
எண்ணிக்கையில் ஏழைகள் உள்ள நாடாகவும் இந்தியா மாறி இருக்கிறது.
சோசலிசத்திற்கு செல்வதற்கான மாற்றுப்பாதைக்கான போராட்டம் தொடர்ந்து, கடினமான முறையில் மேற்கொள்ள வேண்டிய போராட்டமாகும். மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி பொன்விழாவை இத்தருணத்தில், நம்முடைய லட்சியத்தை
அடைவதற்கான பாதையில் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தொடர்ந்து போராட
மீண்டும் நம்மை நாம் அர்ப்பணித்துக்கொள்வோம்.
தமிழில் : ச. வீரமணி
நன்றி : தீக்கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக