ஞாயிறு, 16 நவம்பர், 2014

நீதியின் நாயகன் வி.ஆர்.கிருஷ்ணய்யர் - 100


கட்டுரையாளர் : நீதியரசர் கே. சந்துரு,           
                                     உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு), சென்னை        

               தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்து ஓய்வு பெற்ற ராஜாஜியை, மரியாதை நிமித்தம் சந்திக்க, கேரள சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் தனது மனைவி, இரு மகன்களுடன் செல்கிறார். அவர்களை வரவேற்றுப் பேசிய ராஜாஜி, அவ்விரு சிறுவர்களிடம் சொல்கிறார்: “உங்கள் அப்பனைப் பின்பற்றாதீர்கள், அவர் விஷமத்தனமானவர், ஆனால் அவரது விஷமத்தனமெல்லாம் நல்லவற்றுக்காகவே.” வைத்தியநாதபுரம் ராமய்யர் கிருஷ்ணய்யர் தான் அந்த சட்டப்பேரவை உறுப்பினர்.                                             
            1952-ல் கேரளாவின் குத்துப்பரம்பு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிருஷ்ணய்யர், சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தில் இரண்டு வருட காலம் முதலமைச்சர் ராஜாஜிக்கு குடைச்சல் கொடுத்த உறுப்பினர். அதன் வெளிப்பாடு தான் அவரைச் சந்தித்த கிருஷ்ணய்யரின் மகன்களுக்கு கிடைத்த ஆலோசனையை மேலே பார்த்தோம். மாவட்ட மருத்துவ அதிகாரி ஒருவர் மீதுள்ள ஊழல் புகார்பற்றி பொது விசாரணை கோரி சட்டமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. முதலமைச்சர் ராஜாஜி தானும் ஒரு வழக்கறிஞர், அந்தப் புகாரைப் பரிசீலித்ததில் முதல் நோக்கில் குற்றமேதும் தென்படவில்லை என்று கூறவும் உடனடியாக கிருஷ்ணய்யர், தானும் மாவட்ட நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குகள் நடத்தியதில் திறமை பெற்றவர் என்றும், மருத்துவ அதிகாரியின் மீதுள்ள குற்றம் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்திப் பேசவே, முதலமைச்சர் தனது கருத்தை மாற்றிக்கொண்டு விசாரணைக்கு உத்தரவிட நேர்ந்தது.
               மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பின்னர் நடந்த கேரளத் தேர்தலில், சுயேச்சையாக வெற்றிபெற்ற கிருஷ்ணய்யர், ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடின் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையில் உள்துறை அமைச்சரானார். 1958-ம் வருடம் ஒரு நாள் அவர் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருக்கும் போது தொலைபேசிச் செய்தி வருகிறது. அருகிலிருந்த காவல் நிலையத்தில் இளைஞன் ஒருவன் சித்திரவதைக்கு உள் ளாக்கப்படுவதாகத் தகவல். உடனடியாக காரைத் தானே ஓட்டிக்கொண்டு காவல்நிலையத்துக்குச் செல்கிறார். கேள்விப்பட்டபடியே இளைஞன் ஒருவன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதைப் பார்த்து, அவனை விடுவிக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தினமும் இரவில் திருவனந்தபுரம் மாவட்டக் கண்காணிப்பாளருடன் வீதிகளில் பயணம் செய்து காவலர்கள் தங்கள் பணிகளை ஒழுங்காகச் செய்கிறார்களா என்பதைச் சோதித்த உள்துறை அமைச்சரை இந்நாடு இதுவரை கண்டதில்லை.          

சிறைக் கைதிக்கு மனிதாபிமானம்                  
 
              தேர்தல் வெற்றிக்கு முன்னரே தடுப்புக் காவல்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட கிருஷ்ணய்யர், தனது 30 நாட்கள் சிறைவாசத்தில் சிறைக் கைதிகளின் நிலைமையை உணர்ந்ததுடன், இந்தியச் சிறைகள் கற் காலத்தில் இருப்பதைத் தெரிந்துகொண்டார். பின்னர், உச்ச நீதிமன்ற நீதிபதியானபோது, சிறைக் கைதி ஒருவர் அஞ்சல் அட்டையில் அனுப்பிய புகாரை வழக்காக எடுத்துக்கொண்டு, சிறைக் கைதிகளை மனிதாபிமானத் துடன் நடத்துவதற்கு உத்தரவிட்டதுடன், சுனில் பாத்ரா-2 என்ற வழக்கில் பரவலான சிறை சீர்திருத்தங்களுக்கு உத்தர விட்டதோடு மட்டுமின்றி, எதிர்காலத்தில் புகார்களை நீதிமன்றங்கள் தாமாகவே எடுத்துக்கொண்ட வழக்காகக் கருதி, அவ்வழக்குகளில் நிவாரணம் வழங்க உத்தர விட்டார். மேலும், மாவட்ட நீதிபதிகள் தொடர்ந்து சிறைச் சாலைகளுக்குச் சென்று, கைதிகளிடமிருந்து புகார்களைப் பெற்று நிவாரணம் வழங்கவும் அத்தீர்ப்பு உறுதிசெய்தது.
            சென்னையைச் சிங்காரச் சென்னையாக மாற்றுவதற்குப் பலரும் திட்டங்கள் வைத்திருந்தனர். எம்.ஜி.ஆர். ஆண்ட காலம். மெரினா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் கட்டுமரங்கள் அதன் அழகைக் குறைக்கின்றன என்று யாரோ ஒருவருக்குத் தோன்றியது. திடீரென்று கட்டுமரங்கள் ஒரு நாள் காணாமல் போயின. எதிர்த்து நின்ற மீனவர்கள் மீது காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சிலர் இறந்தனர். அதற்குப் பின்னும் காவல் துறையினரின் அத்துமீறிய தாக்குதலுக்குப் பயந்து பல மீனவர்கள் குப்பங்களை விட்டு இடம்பெயர்ந்தனர். ராணிமேரி கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள நடுக்குப்பம் 4.12.1985-ல் காவலர்களால் சூறையாடப்பட்டது. தனிமையில் விடப்பட்ட பெண்கள், குழந்தைகள், வயசாளிகள் யாரும் தாக்குதலுக்குத் தப்பவில்லை. உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், ஓய்வறியா அந்த உத்தமர் கிருஷ்ணய்யருக்கு இருப்புக்கொள்ளவில்லை. செய்தி கேட்டு நடுக்குப்பத்தின் சேறு சகதிகள் பாராமல் நேரில் சென்று அம்மக்களின் குறை கேட்டு, அறிக்கை ஒன்றைத் தயார் செய்தார். முதலமைச்சர் எம்.ஜி்.ஆருக்கு அந்த அறிக்கையுடன் அவர் எழுதிய கடிதத்தில், “மீனவர்கள் இம்மண்ணின் மூத்த குடிகள், அவர்களது வாழ்வாதாரத்தைப் பறிப்பதற்கு எவருக்கும் அதிகாரமில்லை” என்று குறிப்பிட்டதுடன், அம்மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்தார்.
            மனித உரிமைக்கான வழக்கறிஞர், சட்டமன்ற உறுப்பினர், உள்துறை அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதி, மத்திய சட்ட கமிஷன் உறுப்பினர், உச்ச நீதிமன்ற நீதிபதி என்று பன்முக ஆளுமை கொண்ட கிருஷ்ணய்யருக்கு அடிநாதமாக விளங்கியது விளிம்பு நிலை மனிதர்களின் விடுதலை தான். எண்ணம், எழுத்து, செயல் இவை அனைத்திலும் இருந்த சிந்தனைப்போக்குகளை அவர் கட்டுரைகள் வாயிலாக வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், தனது சிறப்பான தீர்ப்புகளிலும் அதைப் பதிவுசெய்ய மறந்ததில்லை. அதிகாரம் கிடைக்கும்போதெல்லாம் அதை நலிவுற்ற மக்களுக்குப் பயன்படுத்தத் தயங்கியதும் இல்லை. அதே நேரத்தில், அதிகார மமதையில் சர்வாதிகாரப் பாதையில் சென்ற அரசியல்வாதிகளுக்குப் பாடம்புகட்டவும் மறந்ததில்லை. 

இலவச சட்ட உதவி                    
 
            மத்திய சட்டக் கமிஷன் உறுப்பினராக இருந்தபோது, அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிக்கும் வண்ணம் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு, பிரிவு 39-A அறிமுகப்படுத்தப்பட்டது. நீதிமன்றங்கள் அனைவருக்கும் பொது என்றாலும், வசதியும் வாய்ப்பும்மிக்க வக்கீல்களின் உதவியைப் பெற முடியாத நலிவுற்ற மக்களும் நீதிமன்றத்தை நாடும் வகையில் இப்பிரிவு கொண்டுவரப்பட்டதற்கான முழுப் பெருமையும் அவரையே சாரும்.
               1975-ம் வருடம் அலகாபாத் உயர் நீதிமன்றம், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டு வென்ற ரேபரேலி தொகுதியில் தேர்தல் முறைகேடாக நடத்தப்பட்டது என்று கூறி அவரது தேர்தல் வெற்றி ரத்து செய்யப்பட்டது. அதை எதிர்த்துப் போடப்பட்ட மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வருகிறது. அப்போது விடுமுறைக் கால நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் கிருஷ்ணய்யர். வழக்கு விசாரணைக்கு வருமுன்னே அவரைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள அன்றைய சட்ட அமைச்சர் கோகலே முயற்சிக்கிறார். அவரைச் சந்திக்க மறுத்த கிருஷ்ணய்யர், வழக்கை விசாரித்த பின், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு முழுத் தடை வழங்க மறுக்கிறார். ஆட்டம் கண்ட பிரதமர், நாடு முழுதும் நெருக்கடி நிலைமையைப் பிரகடனப்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்துகிறார். கிருஷ்ணய்யர் முழுத் தடை அளிக்க மறுத்ததன் காரணந்தான் நெருக்கடி நிலைமை ஏற்பட்டதென்று பலரும் கூறுவர். அவர் அளித்த உத்தரவை அவரது கருத்துக்களுடன் முழுதும் ஒத்துப்போகாத பிரபல சட்ட நிபுணர் எச்.எம். சீர்வை, கிருஷ்ணய்யர் முழுத் தடை விதிக்க மறுத்த தேதியன்றுதான் உச்ச நீதிமன்றம் அதனுடைய சிறப்பான நேரத்தைப் பெற்றது என்று தனது புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார். 

கிருஷ்ணய்யரின் தீரம்                   
 
         நெருக்கடி நிலையின்போது, இந்திரா காந்தியிடம் அவரது அதிகார மமதையைச் சுட்டிக்காட்டப் பயந்த நேரத்தில், கிருஷ்ணய்யர் பிரதமரிடம் அவரது அரசு நீதிமன்றத்தில் மக்களது அடிப்படை உரிமையைப் பறித்தது நியாயம் என்று வாதாடியது தவறென்று சுட்டிக்காட்டினார். அந்நேரத்தில், எவருமே இந்திரா காந்தியிடம் விமர்சனங்களை முன்வைக்க வராதபோது, கிருஷ்ணய்யர் நேரடியாகப் பிரதமரிடம் அவர் இழைத்த தவறை சுட்டிக்காட்டிய செயல் அவரது தீரத்தை வெளிப்படுத்தும்.
               இன்றைக்குப் பலரும் தமிழரின் உடைக் கலாச்சாரம் வேட்டிதான் என்று பேசுவார்கள். சமீபத்தில், நீதிபதி ஒருவரை அனுமதிக்க மறுத்த சென்னை கிரிக்கெட் கிளப் விவகாரத்தை ஒட்டி எழுந்த ஆவேசத்துக்குப் பிறகு, தமிழக சட்டமன்றமும் வேட்டி கட்டி வருபவருக்கு அனுமதி மறுக்கப்பட்டால் சிறைத் தண்டனை என்ற சட்டம்கூட இயற்றியுள்ளது. நீதிபதி கிருஷ்ணய்யரைப் பொறுத்தவரை அவர் ஓய்வுபெற்ற பிறகு, என்றுமே அவர் பாரம்பரிய உடையையே அணிந்துவந்தார். கிரிக்கெட் கிளப்பில் உறுப்பினராயிருந்த கிருஷ்ணய்யரின் நண்பர் ஒருவர், அவரை அங்கு இரவு உணவுக்கு அழைத்துச் சென்றார். கதர் சட்டையும் கதர் வேட்டியும் கட்டி ரப்பர் செருப்பு அணிந்து வந்த அவரை அங்கிருந்த வாயிற்காவலர் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். கிளப் விதிகளின்படி மேல்நாட்டு உடைகளையே அணிந்து வர வேண்டும் என்பதால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிரச்சினையைப் பெரிதுபண்ண விரும்பாத கிருஷ்ணய்யர், அங்கிருந்த விருந்தினர் பதிவேட்டில் இவ்வாறு எழுதிக் கையெழுத்திட்ட பின் வெளியேறினார்:-
            “எனக்கு இரவு உணவு இங்கு மறுக்கப்பட்டது. ஆனாலும், கௌரவமான இந்தியனாக இங்கிருந்து நான் வெளியேறுகிறேன்.”
             1957-ம் வருடம் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, முதல்முறையாக இந்தியாவில் (ஏன் உலகத்திலேயே) தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று கம்யூனிஸ்ட் ஆட்சி அமைத்தது. பள்ளிக் கல்வியைச் சீரமைக்கவும், ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சட்டம் இயற்றப்பட்டது. அது பொறுக்காத சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களும், சாதி அமைப்புகளும் கம்யூனிஸ்டுகள் கையிலிருந்து கேரளாவை விடுவிக்க விடுதலைப் போராட்டம் (விமோசன சமரம்) ஆரம்பித்தனர். சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டதென்று அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி 1959-ல் அமலுக்கு வந்தது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதலில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி முதல் ஜனநாயகப் படுகொலைக்குப் பலியானது. அந்த முடிவைத் தவிர்ப்பதற்கு நல்லெண்ண முறையில் அன்றைய பிரதமர் பண்டித நேருவை கிருஷ்ணய்யர் சந்தித்து முயற்சி செய்தார். ஆனால், தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்றால் காங்கிரஸைக் கரைத்துவிடும் என்ற எண்ணத்தில் ஆட்சிக் கலைப்பு முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டதால் கிருஷ்ணய்யரின் முயற்சி தோல்வியுற்றது.
            உச்ச நீதிமன்றத்தில் கிருஷ்ணய்யர் ஆற்றிய பணியைப் பற்றி பலரும் எழுதியுள்ளனர். சட்ட நிபுணர்கள் ஒருமித்த குரலில் அவரது பணியைப் பாராட்டியுள்ளனர். இவை எல்லாவற்றையும்விட, கிருஷ்ணய்யரைப் பற்றியும் அவரது தீர்ப்புகளைப் பற்றியும் பல நாடுகளில் உள்ள சட்ட நிபுணர்களும் நீதிபதிகளும் பாராட்டியுள்ளனர். ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்ற நீதிபதி மைக்கேல் கிர்பி, கிருஷ்ணய்யரின் 80-வது பிறந்ததினத்துக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டிருந்து இன்றைக்கு அவர் நூற்றாண்டு காணும் சூழலிலும், என்றைக்கும் பொருத்தமானது.
       “கிருஷ்ணய்யர் பொதுச்சட்டத்தில் பேராற்றல் பெற்றவர். அவர் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானவரல்ல. உலகம் முழுதும் உள்ள வக்கீல்கள் மற்றும் சட்ட நிபுணர்களுக்குச் சொந்தமானவர். அவருடைய தீர்ப்புகள் ஆஸ்திரேலிய நீதிமன்றங்களில் மேற்கோள் காட்டப்படுவதுடன் நீதிபதிகள் அவற்றைப் பின்பற்றவும் முற்படுவர்!” 

நன்றி : தி இந்து (தமிழ்)  

கருத்துகள் இல்லை: