சனி, 1 நவம்பர், 2014

வீரம் விளைந்த பூமியின் விடுதலை திருநாள்...!


                இன்றைய புதுச்சேரி மாநிலம் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய தேசம்  முழுதும் சுதந்திரம் பெற்று ஏழு ஆண்டுகளுக்கு  பிறகு தான் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் பிடியிலிருந்து 1954 - ஆம் ஆண்டு நவம்பர் 1 - ஆம் தேதியன்று விடுபட்டு விடுதலைப்பெற்றது. புதுச்சேரி அடிமைப்பட்டிருந்த காலத்திலேயே புதுவை மக்கள் தங்கள் அரசியல் விடுதலைக்கு மட்டும் போராடாமல், ஒரு பக்கம் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் போராடினார்கள். இன்னொரு பக்கம் ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்த இந்திய விடுதலைக்காக தமிழகத்திலிருந்து போராடிய போராளிகளுக்கு புதுச்சேரியில் அடைக்கலம் கொடுத்து அவர்களின் போராட்டங்களுக்கும் ஆதரவும் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
               விடுதலை இயக்கத்தையும், தொழிற்சங்க இயக்கத்தையும்  ஒன்றிணைத்து புதுச்சேரியில்  தோழர்.வ.சுப்பையா அவர்கள் தலைமையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தோழர்களும், தொழிற்சங்கத்தோழர்களும், பஞ்சாலைத் தொழிலாளர்களும் ஒன்றாய் இணைந்து போராடியதால் பெற்ற விடுதலை இது என்பதை இன்றைய தலைமுறையினருக்கு சொல்லியாகவேண்டும்.. ஒட்டு மொத்த இந்திய விடுதலை போராட்டத்திலும், கிடைத்த விடுதலையிலும்   எப்படி காங்கிரஸ் இயக்கத்தை விட கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு மிகப்பெரிய பங்கிருக்கிறதோ,  அதேப்போல் தான் புதுச்சேரியின் விடுதலைப்  போராட்டத்திலும் காங்கிரஸ் இயக்கத்தை  விட கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு மாபெரும் பங்கிருக்கிறது என்பதையும் இன்றைய தலைமுறையினருக்கு சொல்லியாகவேண்டும்.
                தோழர் வ. சுப்பையா அவர்கள் தலைமையிலான தொழிலாளர் இயக்கம் ஆசியா கண்டத்திற்கே வழிகாட்டியது.    8 மணிநேர உழைப்பு - 8 மணிநேர ஓய்வு - 8 மணிநேர உறக்கம் போன்ற  நியாயமும், அறிவியலும் கலந்த உயரிய உரிமைகளை அன்றைய பஞ்சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்கள் நியாயமாக பெறவேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டம் ஆசிய நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்தது. இதே போன்று  அமெரிக்க மண்ணில் சிக்காகோவில் 1886-ஆம் ஆண்டு மே மாதம் 4-ஆம் தேதி அன்று தொழிலாளர்களின் அதே உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்களில் 8 பேர் எப்படி முதலாளிகள் - ஆட்சியாளர்களின் கூட்டுச்சதியில் சிக்கி பீரங்கி குண்டுகளுக்கும், துப்பாக்கி குண்டுகளுக்கும் இரையானார்களோ அதேப்போல் புதுச்சேரியிலும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்காக தோழர்.வ.சுப்பையா தலைமையிலான தொழிலாளர் இயக்கம் மாபெரும் போராட்டத்தில் இறங்கியதன் காரணமாக 1936-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி அன்றைய ஜவானா ஆலையருகில் பிரெஞ்சு போலீசால் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்ட பீரங்கி தாக்குதல்களில் 12 தொழிலாளர்கள் உயிர்த்தியாகம் செய்தார்கள் என்பதும் உலக வரலாற்றில் இடம்பெற்ற வீரமும், துயரமும் கலந்த சம்பவமாகும். ஆனால் அவர்களின் அந்த வீரம்செரிந்த போராட்டமும், சிந்திய இரத்தமும், உயிர்த்தியாகமும் வீண்போகவில்லை.  ஒரு நாளுக்கு 8 மணிநேர வேலை, ஓய்வூதியம், தொழிலாளி இறந்துவிட்டால் அவரது வாரிசுதாரருக்கு வேலை உரிமை, கர்ப்பிணி பெண் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய ஐந்து வார விடுப்பு மற்றும் நோய்வாய்பட்ட தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவம் மற்றும் சம்பளத்துடன் விடுப்பு போன்ற அடிப்படை உரிமைகளை தோழர்.வ.சுப்பையா தலைமையிலான கம்யூனிஸ்ட் இயக்கம் ஆசிய கண்டத்திலேயே முதன்முறையாக புதுச்சேரி தொழிலாளர்களுக்கு பெற்றுத்தந்தது.
              இதே புதுச்சேரி கம்யூனிஸ்ட் இயக்கத்தலைவர்கள் தோழர்.வ.சுப்பையா மற்றும் தோழர்.D.K.ராமானுஜம் போன்ற தோழர்கள்,  தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தோழர்களும், விடுதலைப்போராட்ட வீரர்களுமான பி.ராமமூர்த்தி, வி.பி.சிந்தன் போன்றவர்களின் வழிகாட்டுதலின் பேரில் பிரெஞ்சு-இந்திய விடுதலைக்கு போராடினார்கள். இவர்கள் நடத்திவந்த ''மக்கள் முன்னணி'' என்ற இயக்கம் மட்டுமே புதுச்சேரியின் விடுதலைக்கு மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறது. அதனால் தான் புதுச்சேரி மக்கள் மத்தியிலும் இவர்களே நம்பிக்கைக்குரியவர்களாகவும், பிரபலமானவர்களாகவும் விளங்கினார்கள். ஆனால் பிரெஞ்சு அரசாங்கம் 1954-ஆம் ஆண்டு புதுச்சேரியை விட்டுச் செல்லும்போது, அன்றைய இந்திய பிரதமர் நேருவின் சூழ்ச்சியால், புதுச்சேரியின் விடுதலைக்கு முழுமுதற் காரணமாக திகழ்ந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தையும், அதன் தலைவர்களையும் ஓரங்கட்டிவிட்டு, புதுச்சேரியில் பிரெஞ்சு ஆதிக்கத்தை ஆதரித்தவரும், பிரெஞ்சு அரசாங்கத்திடம் நெருங்கிப் பழகியவ்ருமான குபேரிடம் சுதந்திர புதுச்சேரியின் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத நியாயமற்ற சம்பவம் ஆகும். நியாயப்படி தோழர்.சுப்பையா அவர்களிடம் தான் ஒப்படைத்திருக்கவேண்டும். அப்படி நடந்திருந்தால் 1954-லில் கேரள மாநிலத்துடன் சேர்ந்து புதுச்சேரி மாநிலமும் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்யும் மாநிலமாக பெருமைபெற்றிருக்கும். நேரு நேர்மையாக நடந்துகொள்ளவில்லை என்பது தான் உண்மை.
              இன்னொரு பக்கம் பிரிட்டிஷ் இந்தியாவில் தேச விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து தீவிரமாக போரார்டிய தேசபக்தர்களான பாரதியார், வா.வே.சு.அய்யர், வாஞ்சிநாதன், மாடசாமி போன்றவர்களுக்கு ஆதரவாய் அடைக்கலம் கொடுத்து,  அவர்களின் போராட்டங்களுக்கும் இயக்கங்களுக்கும் தடையின்றி ஆதரவளித்ததும் புதுச்சேரி மண் தான் என்பதையும் இங்கே பெருமையாக சொல்லவேண்டும். இவர்கள் எல்லோரும் பிரிடிஷ்காரர்களுக்கு எதிராக மக்களை கிளர்ந்தெழச்செய்ய, அரசியல் கலந்து பேச ஒரு களமாக - இவர்களின் எண்ணங்களை கூர்மை செய்யும் பட்டறையாக திகழ்ந்த இடம் ''குயில் தோப்பு'' என்பதை அனைவரும் அறிந்ததே. இந்த இடம் தான் நம் பாரதிக்கு தேச விடுதலைக்காக மக்களை எழுச்சிகொள்ளும் பாடலை தந்தது. பாரதி தேசவிடுதலைக்கு மட்டுமல்ல, ஒரே காலகட்டத்தில் தேசவிடுதலையோடு சேர்த்து, சமூக விடுதலைக்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடிய மண் புதுச்சேரி மண். பாரதியை மூன்று பெரும் விடுதலைக்காக போராடிய மகா போராளியாக உயர்த்திக்காட்டியது புதுச்சேரி மண் தான் என்பதை பெருமையாக சொல்லலாம். அந்த குயில் தோப்பு பிரிட்டிஷ் உளவாளிகளுக்கும்,  பிரெஞ்சு போலீசுக்கும் எட்டமுடியாத இரகசிய இடமாக இருந்ததால் தான் பாரதிக்கு எழுச்சிமிக்க பாடல்களை எழுதுவதற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருந்து வரும் போராளிகளை இரகசியமாக சந்தித்து உரையாடுவதற்கும், வியூகம் அமைப்பதற்கும் வசதியாகயிருந்தது.
                 அதே குயில் தோப்பில் தான், வா.வே.சு.அய்யரும் தேசத்தின் மீது பற்றுகொண்டு, விடுதலையின் மீது வேட்கைகொண்ட இளைஞர்களுக்கு மல்யுத்தம், கழி சண்டை, வாள் சுழற்றுதல், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் பயிற்சி கொடுத்து வெள்ளையனுக்கு எதிராக இளைஞர்களை தயார்படுத்தினார். வெள்ளை கலெக்டரான ஆஷ் -ஐ மணியாச்சி இரயில் நிலையத்தில் சுட்டுக்கொல்வதற்கு முன்பு தேசபக்த இளைஞனான வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி புதுச்சேரியில் தான் அளிக்கப்பட்டது. அதே குயில் தோப்பிலும், வில்லியனூர் ஆற்றங்கரையிலும் வா.வே.சு.அய்யர் தான் வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்தார் என்பது இன்றைய இளைஞர்களுக்கு புதிய செய்தியாக இருக்கும்.
            அதேப்போல் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட பாரதி நடத்திய இந்தியா பத்திரிக்கை புதுச்சேரியில் தான் இரகசியமாக அச்சிடப்பட்டு, சைக்கிள் மூலமாக வில்லியனூர் வழியாக இரகசியமாக எடுத்துச் செல்லப்பட்டது.
            இப்படியாக தேசவிடுதலைக்கான போராட்டமும், தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டமும் ஒரு சேர நடத்திய வீரம் விளைந்த பூமியான புதுச்சேரி பூமி தான்  ''போதையில்'' இன்று தள்ளாடுகிறது என்பது வேதனையான உண்மையாகும். 

கருத்துகள் இல்லை: