அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஜூலை, 2015

கலாம் மீது இவ்வளவு கண்மூடித்தனமான பற்றுதலா...!



 

             பொதுவாக நம் தமிழ்நாட்டில் அரசியல் கட்சித்தலைவர்கள் மீதும், சினிமா நடிகர்கள் மீதும் தான் நம் இளைஞர்கள் கண்மூடித்தனமாக பற்றுதல் வைப்பார்கள். அவர்களின் தலைவர்கள்  அல்லது நாயகர்கள் இறந்துவிட்டால் கண்மூடித்தனமாக சாலைகளில் போகும் பேருந்து, கார் போன்ற வாகனங்களை அடித்து நொறுக்குவதும், சாலைகளில் போக்குவரத்துகளை நிறுத்துவது, கடை அடைப்புக்கு மிரட்டுவது, அடைக்காத கடைகளையும் அடித்து நொறுக்குவது போன்ற மக்கள் நலன் சார்ந்த - தேசபக்திமிக்க ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடுவார்கள். இதைத்தான் அவர்களுக்கு அவர்களின் தலைவர்களும், கதாநாயகர்களும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிந்ததே. தங்களின் ஆதர்ஷ புருஷர்கள் இறந்துவிட்டால் அவர்கள் கற்றுக்கொடுத்ததுபோல் சரியாக கச்சிதமாக செய்துமுடிப்பார்கள். இப்படிப்பட்ட இளைஞர்களைத் தான் நாம் இதுவரை நேரில் பார்த்திருக்கிறோம். 
             ஆனால் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நேற்று முன் தினம்   இரவு மறைந்த செய்தியை கேட்டதிலிருந்து அதே தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களது சோகத்தை - துக்கத்தை சற்று வித்தியாசமாக அமைதியான முறையில் வெளிகாட்டுகிறார்கள். ஆனால் இவர்கள் எப்போதும் போல் வாகனங்களை நொறுக்கவில்லை. கடைகளை அடித்து உடைக்கவில்லை. கடைகள் அடைப்பைக் கூட சொல்லவில்லை. மாநிலம் முழுதும், ஊர் முழுதும், வீதிகளெங்கும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என பல இடங்களிலும்  நம் இளைஞர்கள் ஏராளமான - உயரமான கலாமின் படங்களை வைத்து,  மாலைகள் போட்டு, மெழுகுவத்திகள் ஏற்றி அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தியது என்பது நமக்கெல்லாம் சற்று வித்தியாசமாக தெரிந்தது. அந்த அளவிற்கு நம் இளைஞர்களை ஒழுக்கமிக்கவர்களாக அப்துல் கலாம் செதுக்கியிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. 
             இதெல்லாம் ஒருபுறமிருக்க, முகநூல், ட்விட்டர் மற்றும் வாட்சாப் போன்றவற்றை பயன்படுத்தும் இளைஞர்கள் தங்களின் சிந்தனைக்கு தகுந்தாற்போல் கலாமுக்கு அஞ்சலி செய்கிறார்கள். முகநூலையும், ட்விட்டரையும், வாட்சாப்பையும் திறந்தால் போதும், கலாமின் படங்களும், வீடியோக்களும் அருவி போல வந்து கொட்டுகின்றன. விதவிதமாய் யோசிக்கிறார்கள். எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்பதே வியப்பாக இருக்கிறது. கலாமின் படங்களையும், நிகழ்வுகளையும் அலசி ஆராய்ந்து, உருவாக்கி பதிவிடுகிறார்கள். அதில் சிலவற்றை இங்கே நான் பதிவிட்டிருக்கிறேன் பாருங்கள். 
              அதுமட்டுமல்ல, கலாமின் மீதுள்ள பற்றுதல் காரணமாக இவர்கள் மனதில் தோன்றுகிறவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த சொல்லி வாட்சாப்பிலும், முகநூலிலும் பதிவிட்டு, அதை உடனடியாக மற்றவர்களுக்கும் பகிர சொல்கிறார்கள். இதை பார்த்து படித்துவிட்டு ஆர்வக்கோளாறு காரணமாக அடுத்தவர்களுக்கு பகிர்ந்து அந்த செய்தியை நாடு முழுதும் பரப்பச் செய்கிறார்கள். அதில் வெறித்தனமான பற்றுதல் தான் இருக்கிறதே தவிர, அறிவுப்பூர்வமான சிந்தனை என்பது கிடையாது. அதையெல்லாம் படிக்கும் போது நம்மாலேயே தாங்கமுடியலடா சாமீ... என்று அவர்கள் மீது கோபம் தான் வருகிறது. அதில் சிலவற்றை  பாருங்கள்...!

தகவல் - 1 : அப்துல் கலாமின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய அரசை வலியுறுத்தவேண்டும். உடனடியாக இதை அனைவருக்கும் பகிருங்கள்.

தகவல் - 2 :  கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவிக்கவேண்டும். அனைவருக்கும் இதை பகிருங்கள். 

தகவல் - 3 : லெனின் உடலைப்போல கலாமின் உடலையும் பதப்படுத்தி பாதுகாக்கவேண்டும். இதை வலியுறுத்தி அனைவருக்கும் பகிருங்கள்.

தகவல் - 4 : பாம்பன் பாலத்திற்கு அருகில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை போல கலாமுக்கு உயரமான சிலை வைக்கவேண்டும் என்பதை அனைவருக்கும் பகிருங்கள்.

தகவல்கள் - 5 : என்றைக்கும் இல்லாத வகையில் கலாமின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது. நாமெல்லாம் இந்தியன் என்று சொல்வதற்கு பெருமைப்படவேண்டும். 
             இப்படியொரு வாசகத்தை படம் போட்டு பெருமைப்பட்டுக் கொண்டார்கள். ஆனால்  குடியரசுத்தலைவராக கலாம் பொறுப்பிலிருந்த போது  இதே அமெரிக்கா தான், கலாம் அமெரிக்காவிற்கு சென்றபோது அவரை ஒரு நாட்டின் குடியரசுத்தலைவர் என்று கூட பார்க்காமல், அவரது ஆடைகள் அனைத்தையும் அவிழ்த்து அரை நிர்வாணமாக்கி சோதனை செய்து அவமானப்படுத்தினார்கள் என்பதை இந்த இளைஞர்கள் மறந்துவிட்டார்கள் என்பது தான் வேதனையான நிகழ்வாகும்.
               இவைகளையெல்லாம் படிக்கும் போது  எப்படி இப்படிஎல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறார்கள் என்று ஒரு பக்கம் வியப்பாக இருந்தாலும், இன்னொரு பக்கம் இவர்கள் அறிவோடு சிந்திக்கமாட்டார்களா என்று எரிச்சலாகவும் கோபமாகவும் இருக்கிறது. இன்றைய இந்த இளைஞர்களுக்கு கலாமின் மீது இந்த அளவிற்கு பற்றுதலா கண்மூடித்தனமாக...? ஆச்சரியம் தான்.  

திங்கள், 27 ஜூலை, 2015

கலாம் காலம் ஆகிவிட்டார்...!


 சரித்திரமாகி விட்ட மாணவர்களின் நாயகன் கலாம்...!                  

           இராமேஸ்வரத்தில் பிறந்த தமிழ் பேசும் இஸ்லாமியர்.  இவர் படித்தது சாதாரண அரசு பள்ளி. உயந்தது இஸ்ரோ விஞ்ஞானியாய். இந்திய  ஏவுகணைகளுக்கும்  ராக்கெட்டுகளுக்கும் அக்னி சிறகுகளை கொடுத்து   உலக  வல்லரசுகளே வியக்கும் வண்ணம்  இந்தியாவின் புகழை விண்ணில் பறக்கச்செய்தார். பதிலுக்கு இந்த நாடு இவரை குடியரசு மாளிகையில் அமரவைத்து அழகு பார்த்தது. குடியரசுத்தலைவர் பதவி ஓய்வுக்கு பின்னும் இவர் ஓய்ந்துவிடவில்லை. ஓய்வெடுக்கவில்லை. இவரது அறிவாயுதத்தை எடுத்துக்கொண்டு ஓய்வில்லாமல்   பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும்  படையெடுத்தார். வெற்றி கண்டார். மாணவ மாணவியர்களை தன்  அறிவாலும், கருத்தாலும் ஈர்த்தார். அவர்களை கனவு காண சொன்னார். விடிந்த பிறகும் தூங்கியல்ல... அவர்கள்  எதிர்காலம் விடியும்வரை தூங்காமல் கனவு காண சொன்னார். நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் என்று அவர்களுக்கு அன்புக் கட்டளையிட்டார். ஆம்... இன்று அவரே சரித்திரமாகி விட்டார். கலாம் காலம் ஆகிவிட்டார்...!   
                                                              நமது கண்ணீர் அஞ்சலி                                                   

செவ்வாய், 14 ஜூலை, 2015

இசை மேதை - மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.வி மறைந்தார்...!


  என் மனங்கவர்ந்த இசையமைப்பாளர் மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்துவிட்டார்... என்னை போன்ற அவரது இரசிகர்கள் மட்டுமன்றி இசை உலகமே  ஒரு மாபெரும் இசை மேதையை இழந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். சுமார் 1200 திரைப்படங்களுக்கு இசையமைத்து இமயமாய் உயர்ந்து நிற்கும் அந்த மேதைக்கு இன்று வரையில் மத்திய அரசு விருது எதுவும் வழங்கப்படாதது அந்த விருதுகளுக்கு வழங்கப்பட்ட அவமரியாதை என்பது தான் உண்மை. அதுவும் இப்போது போல் கேட்டதைக்கொடுக்கும் கணினி இல்லாத காலத்தில் பாட்டுக்கு மெட்டமைத்து கடினமாக உழைத்து உருவாக்கிய அத்துனை பாடல்களும் தேனில் தோய்த்தெடுத்த பலாச்சுளைப் போல இனிப்பானவை. அதுமட்டுமல்லாமல் புதிய இசையமைப்பாளர்களையும், இளைஞர்களையும் தான் என்ற அகம்பாவம் இல்லாமல் ஊக்கப்படுத்துபவர். ஈகோ பார்க்காமல் மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பிலும் பாடியவர்.   தன்னுடைய கடைசி காலம் வரையில் இசைக்காகவே வாழ்ந்து மறைந்துவிட்டார். 
             
             தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய பல்வேறு  கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு செய்த அந்த மெல்லிசை மாமன்னரை மறக்கவே முடியாது. 

               மறைந்த அந்த இசை மேதைக்கு என் கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிறேன்....!

              1992-ஆம் ஆண்டு ஒரு இசை நிகழ்ச்சிக்காக புதுச்சேரி கம்பன் கலையரங்கம் வந்தபோது அவரை சந்தித்து கதராடை அணிவித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவம்.

வியாழன், 9 ஏப்ரல், 2015

ஆளுமையும், தோழமையும் நிறைந்த ஜே.கே. என்ற ஜெயகாந்தன்

               
           படைப்பிலக்கியத்தில் இமயம் போல் உயர்ந்து நின்ற தோழர்.ஜே.கே என்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் நேற்றிரவு மறைந்தார். 
                தமிழிலக்கியத்தில் பாரதி, புதுமைப்பித்தன், பாரதிதாசன், ஜீவா போன்ற போற்றத்தக்க ஆளுமை வரிசையில் நம் காலத்தில் வாழ்ந்து மறைந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் நாம் அவரை பார்த்து - படித்து வாழ்ந்தோம் என்ற பெருமையை நமக்கு அளித்தவர். தோழர்.ஜீவா மற்றும் தோழர்.கே.முத்தையா போன்ற தலைவர்களிடம் பொதுவுடைமை சித்தாந்தங்களை பாடமாக  கற்றவர். அப்படியே வாழ்ந்தும் காட்டியவர். அதனால் தான் அவரது எழுத்துகளில் பொதுவுடைமை சிந்தனைகளும், முற்போக்கு கருத்துகளும் சேர்ந்தே காணப்பட்டன. பொதுவாக இவர்  மேட்டுக்குடி மக்களைப் பற்றியும்  எழுதமாட்டார். அவர்களுக்காகவும் எழுதமாட்டார். இவரது படைப்புகளில் தெருவோரவாசியான  சாதாரண தொழிலாளிகளையும், அவர்களது வாழ்க்கை கஷ்டங்களையும் பற்றி மட்டுமே படம்பிடித்து காட்டியிருக்கிறார். 
            பல ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி கம்பன் கழகம் ஏற்பாடு செய்திருந்த கம்பன் விழாவிற்கு இவரை அழைத்திருந்தார்கள். அந்த விழாவில் பேசும் போது, கம்பன் ''ஏர் எழுபது'' என்ற பாடலை எழுதியிருக்கிறான். விவசாயத்தைப் பற்றி பாடல்களாக வடித்தவன் கம்பன் ஒருவன் மட்டுமே. நான் அதை படித்த பிறகு தான் அவன் எழுதிய இராமாயணத்தை படித்தேன்'' என்று அவர் சொன்னதை கேட்டபிறகு தான் அங்கிருந்த பல பேருக்கு கம்பன் ''ஏர் எழுபது'' என்ற விவசாயப் பாடலை பாடியிருக்கிறான் என்ற செய்தியே தெரிந்தது.
           ஜெயகாந்தன் பாரதியை போன்றே எல்லா இடங்களிலும், எல்லா சமயங்களிலும் எதற்கும் தலைவணங்காமல் கம்பீரம், கர்வம், துணிச்சல், நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்நடை, வீரமிக்க பேச்சு என அனைத்தும் கலந்த ஆளுமையை காட்டியவர். அனால் அதே சமயத்தில் தொழிலாளர்கள் என்றால் அவர்கள் தோளில் கை போட்டு தோழமையை காட்டுவார். அந்த காலத்தில் ஒரு முறை புதுச்சேரி நேரு வீதியில் ரிக்சா தொழிலாளியை அவரது வண்டியிலேயே உட்கார வைத்துக்கொண்டு தோழர்.ஜெயகாந்தன் ரிக்சா வண்டியை தானே ஓட்டிச் சென்றிருக்கிறார் என்பதே அவரது தோழமைக்கு மிகச்சிறந்த உதாரணம்.
              இவர் பள்ளியில் படித்ததோ ஐந்தாம் வகுப்பு வரையில் தான். ஆனால் இவரது இலக்கிய படைப்புகளை ஆய்வு செய்து நிறைய மாணவர்கள் ''முனைவர் பட்டம்'' பெற்றிருக்கிறார்கள். அந்த அளவிற்கு பாரதி சொன்னது போல் சுடர்மிகு அறிவுடன் வாழ்ந்தவர் தான் நம் ஜே.கே. அந்த சுடர் இன்று அணைந்துவிட்டது. ஆனாலும் அந்த சுடர் இலக்கிய உலகிற்கு வெளிச்சம் காட்டும். ஏனென்றால் தோழர். ஜெயகாந்தனுக்கு என்றும் மரணமில்லை.              

வெள்ளி, 24 அக்டோபர், 2014

இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களுக்கு அஞ்சலி...!


                   சென்ற தலைமுறையின் பழம்பெரும் நடிகர்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் ஆகிய முப்பெரும் மூன்றெழுத்து நடிகர்களில் இலட்சியநடிகர் என்று தமிழக மக்களால் சிறப்புடன் அழைக்கப்படும் எஸ்.எஸ்.ஆர் இன்று காலமானார். அன்றைய தலைமுறையின் எல்லா முன்னணி கலைஞர்களும் மறைந்துவிட்ட சூழ்நிலையில், இன்றுவரை    இன்றைய தலைமுறை இளைய கலைஞர்களுக்கு வழிகாட்டியாய் வாழ்ந்து கொண்டிருந்த இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர். அவர்களின் தமிழ் திரையுலகத்திற்கு மாபெரும் இழப்பு.
               இவர் தன்னுடைய கடைசி திரைப்படம் வரை பிற மொழி கலப்பில்லாத தமிழில் மட்டுமே முழுமையாக வசனம் பேசியவர் என்பது மட்டுமல்லாமல், தன்  வாழ்நாளில் வரலாற்று மற்றும் சமூக திரைப்படங்களில் நடித்திருக்கிறாரே தவிர புராண - இதிகாச திரைப்படங்களில் இவர் இறுதிவரையில் நடிக்காமல் தான் ஒரு இலட்சியநடிகனாகவும், ஒரு பகுத்தறிவாளனாகவும் வாழ்ந்துகாட்டினார். 
              இந்தியாவிலேயே நடிப்புத்துறையிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நடிகர் இவர் தான். மேலும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார். இலட்சியநடிகராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும்   மக்களிடம் நன்கு அறிமுகமான இவரால் தமிழகத்தின் முதலமைச்சர் என்ற அளவிற்கு உயர்வதற்கு இவருக்கு அரசியல் சூச்சமம் தெரிவில்லை என்பது தான் உண்மை.
              மறைந்த இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி....!    

சனி, 23 ஆகஸ்ட், 2014

மக்கள் சிந்தனைகொண்ட எழுத்தாளனுக்கு என்றும் மரணமில்லை....!

                       கடந்த மக்களவைத்தேர்தலின் போது  ''பாரதீய ஜனதாக் கட்சி வெற்றியடைந்து  விடக்கூடாது'' என்பதையும், ''நரேந்திரமோடி இந்த நாட்டின் பிரதமராக தப்பித்தவறி கூட வந்துவிடக்கூடாது'' என்பதையும், நாட்டின் மீதும், மக்களின் மீதும் அக்கறை கொண்ட நல்லோர்கள் குறிப்பாக எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பேராசிரியர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களும், அறிஞர்களும் மக்களிடையே பிரச்சாரமே நடத்தினார்கள். அப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்டோரில் கன்னட முற்போக்கு எழுத்தாளர் பேராசிரியர் யு. ஆர். ஆனந்தமூர்த்தியும் ஒருவர். அவர் நிஜவாழ்க்கையில் எப்படி வாழ்ந்துகாட்டினாரோ அதைத்தான் தன் எழுத்துகளாக படைத்தார். தன்  படைப்புகளில் என்ன எழுதினாரோ அப்படித்தான் வாழ்ந்தும் காட்டினார். 
            அப்படித்தான் சென்ற பாராளுமன்றத்தேர்தலின் போது பேராசிரியர் ஆனந்தமூர்த்தி, ''நரேந்திரமோடி வெற்றிபெற்று பிரதமரானால் நான் இந்தியாவை விட்டே வெளியேறுவேன்'' என்று மதவெறிக்கூட்டம் இந்த தேசத்தை ஆட்சி செய்ய அனுமதிக்கக்கூடாது என்று மக்களை எச்சரிக்கை செய்தார். அனால் 32 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று எண்ணிக்கை அடிப்படையில் நரேந்திரமோடியே ஆட்சிக்கு வந்தார். ஆம்... பேராசிரியர் ஆனந்தமூர்த்தி தான் சொன்னதுபோலவே இந்தியாவை மட்டுமல்ல உலகத்தை விட்டே வெளியேறிவிட்டார். 82 வயதான ஆனந்தமூர்த்தி நேற்று காலமானார். அவர் மறைவிற்கு எழுத்தாளர் உலகமே  கண்ணீர் சிந்துகிறது. முற்போக்கு சிந்தனைகளை சிதறும் பேனா மை கூட அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றது. ஆனால் மூடநம்பிக்கையை, மதவெறியை எதிர்த்தார் என்பதற்காக பேராசிரியர் ஆனந்தமூர்த்தியின் மறைவை மதவெறிக்கூட்டத்தை சேர்ந்த பிணந்திண்ணிகள் காட்டுமிராண்டித்தனமாக இனிப்புகள்  வழங்கியும், பட்டாசுகள்  வெடித்தும் கொண்டாடினர் என்பதை பார்க்கும் போது அவரது மதவாத எதிர்ப்பின் சக்தியை  நம்மால் புரிந்துகொள்ளமுடியும்.
            அப்படிப்பட்ட அந்த மக்கள் சிந்தனைகொண்ட எழுத்தாளனுக்கு என்றும் மரணமில்லை.  எழுத்துலகம் இருக்கும் வரை வாழ்ந்துகொண்டே இருப்பான். என்றும் சாகா வரம் பெற்ற அவரது எழுத்துகளில் அவர் வாழ்ந்துகொண்டிருப்பார். 
மறைந்த பேராசிரியர். யு. ஆர். ஆனந்தமூர்த்திக்கு எங்கள் அஞ்சலி...!

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

என்னை கவர்ந்த பாடகர் P. B. ஸ்ரீநிவாஸ் - நெஞ்சம் மறப்பதில்லை....!

      
         காலங்களில் அவர் வசந்தம்... பாடகர்களில் அவர் பி. பி. ஸ்ரீநிவாஸ். அவருக்கு நிகர் அவரே. காற்றில் மிதந்து வரும் மென்மையான குரல். அவர் பாடிய அத்துனைப் பாடல்களும் திகட்டாமல் தேனாய் இனிக்கும் பாடல்கள். வயதான காலத்திலும் கடைசிவரையில் பாடிக்கொண்டே இருந்தவர்.
         தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த பாடகர். என் நெஞ்சம் மறக்கமுடியாத என் உள்ளம் கவர்ந்த பாடகர். என் சிறுவயதிலிருந்தே என்னுடைய குரலும் அவரது குரலை ஒத்திருப்பதால் நான் சாதாரணமாகவே அவரது பாடல்களை வீட்டில் பாடிக்கொண்டே இருப்பேன். ஒரு சில மேடைகளிலும் அவரது பாடல்களை பாடியிருக்கிறேன்.
         அந்த காணக்குயில் இன்று பாடுவதை நிறுத்திக்கொண்டது. ஆம்... அந்த கலைமாமணி - இசைமாமணி பி. பி. எஸ். இன்று மறைந்துவிட்டார். என்றாலும் அவரது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
        மறைந்த இசை மேதைக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி....!

புதன், 13 பிப்ரவரி, 2013

இறந்தவர் உடலை வைத்துக்கொண்டு மலிவு அரசியல் தேடும் சினிமா நடிகர் சீமான்...!
















 


           தமிழகத்தின் திடீரென முளைத்த அரசியல்வாதியான நடிகர் சீமான் தமிழ் இன உணர்வுகளை தூண்டிவிட்டு இளைஞர்களை தன்னோடு வைத்துக் கொண்டு அரசியல் பண்ணுபவர். இலங்கைத் தமிழர்களுக்காக அல்லது தூக்கு தண்டனைக் கைதிகளாக சிறையிலிருக்கும் ராஜீவ் கொலையாளிகளுக்காக தங்களையே தீயிட்டு மாய்த்துக் கொண்ட முத்துகுமரன் மற்றும் செங்கொடி போன்றவர்களின் உடலை வைத்து  அரசியல் வளர்ப்பவர்.  இறந்து போனவர்களின் உடலை வைத்து அரசியல் பண்ணும் ஒரு மலிவான அரசியல்வாதி தான் இந்த நடிகர் சீமான். எங்கே இழவு விழுந்தாலும் அங்கே ஆஜர் ஆகிவிடுவார்.
          இதே போன்று,  ஆசீட் வீச்சினால் சென்னையில் மூன்று மாத காலமாக சிகிச்சைப் பெற்று நேற்று மரணமடைந்த காரைக்கால் பெண் வினோதினி விஷயத்திலும் ஒரு மலிவான அரசியல் இலாபத்தை பார்த்திருக்கிறார். கடந்த மூன்று மாத காலமாக சென்னையில் தான் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வந்தது. மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் மிகுந்த கஷ்டத்தில் இருந்தார்கள். வந்து பார்த்திருப்பாரா...? விசாரித்திருப்பாரா...? அப்போதெல்லாம்  எங்கே போயிருந்தார் இந்த சீமான்...? வெளிநாட்டில் இருந்தாரா...?  இவர் நினைத்திருந்தால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிற்கு வெளிநாட்டிலேயே சிகிச்சை பெறுவதற்கு  உதவி செய்திருக்க முடியுமே. இந்த எழுச்சித் தமிழர் ஏன் செய்யவில்லை...?  இதையெல்லாம் செய்யாதவர் இறந்த பின் ஏன் இப்படி ''அலைந்து'' கொண்டு ஓடினார்...?  நேற்று  சீமானும், அவரது கூட்டாளிகளும் வினோதினியின் உடலை கைப்பற்றிக்கொண்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். மகளை இழந்த துயரத்தில் இருந்த வினோதினியின் பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் இருந்த உடலை இவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டனர் என்பதை ஊடங்களை பார்ப்பவர்களுக்கு புரிந்திருக்கும்.
         அதுமட்டுமல்லாது கோயம்பேட்டில் இவர்கள்  ''வழக்கமாக'' கூடும் பகுதியில் வினோதினியின் உடலை  அஞ்சலிக்கு  வைத்திருந்தார்கள். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால், எப்படியெல்லாம் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை இந்த சமூகம் பார்க்கவேண்டுமாம். வினோதினியின் உடல் என்ன காட்சிப் பொருளா...? உண்மையிலேயே ஒரு பெண்ணிற்கு இப்படிப்பட்ட கொடுமை நிகழ்ந்திருக்கிறது என்று கொதித்திருந்தால் மூன்று மாதங்களுக்கு முன் அந்த சம்பவம் நடந்த உடனேயே வீதியில் இறங்கி போராடி இருக்கவேண்டாமா..? அப்படி செய்திருந்தால் இந்த சமூகத்திற்கு மட்டுமல்ல, கண்ணை மூடிக்கொண்டிருந்த இந்த ஆட்சியாளர்களின் கண்ணையும் திறந்திருக்கலாம். டெல்லி பெண்ணின் கொடுமையை உலகமே அறிந்தது போல் செய்திருக்கலாமே. அந்த பெண்ணிற்கு மத்திய அரசாங்கம் வெளிநாட்டில் மருத்துவம் பார்த்தது போல் இந்த பெண்ணிற்கும் செய்ய வாய்ப்பை உண்டாக்கி இருக்கலாமே. ஆனால் அதையெல்லாம் செய்யாமல், வினோதினியின் இறப்பினால் ஏற்பட்ட மக்களின் அனுதாபத்தை தன்  பக்கம் திருப்பி அதை அரசியலாக்க சீமான் துடித்தது என்பது ஒரு மலிவான - தரமற்ற அரசியல் ஆதாயமாகும்.

வினோதினியின் உடல் புதுவை வந்தது - நெஞ்சை பிளந்தது...!

         இன்று மாலை நாங்கள் புதுச்சேரி ராஜீவ்காந்தி குழந்தைகள் மருத்துவமனை அருகில் மறைந்த வினோதினியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கனத்த இதயத்துடன் காத்திருந்தோம்.
        இரவு 7.15 மணிக்கு அவரது உடலை சுமந்துகொண்டு இங்கே வந்து சேர்ந்தது. கொடூரனால் சிதைக்கப்பட்ட வினோதினியின் உடலுக்கு அஞ்சலை செலுத்துவதற்கும், பார்ப்பதற்கும் கூட்டம் ஆண்களும், பெண்களும், இளைஞர்களுமாய் கூடிவிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள்  தோழர்கள் வெ. பெருமாள், தா. முருகன், ரங்கசாமியின் அமைச்சர்கள் மூன்று பேர், முன்னாள் முதலமைச்சர் வெ. வைத்திலிங்கம் உட்பட அரசியல் கட்சித்தலைவர்களும், தொழிற்சங்கத் தலைவர்களும், மாதர், வாலிபர் மற்றும் மாணவர்கள் சங்கத்தைச் சார்ந்தவர்களும் ஏராளமான பொதுமக்களும் கூடியிருந்து மறைந்த வினோதினிக்கு அஞ்சலி செலுத்தினர்.
        நானும் பார்த்தேன் கருகிய அந்த மலரை. நேற்று காலை வினோதினி இறந்துவிட்டார் என்ற செய்தியை கேள்விப்பட்ட பிறகு, சென்னையில் கடந்த மூன்று மாதமாகவே மருத்துவமனையில் வினோதினிக்கு துணையாக இருந்து வந்த அவரது தாய் மாமா ரமேஷ் அவர்களிடம் பேசியபோது, ''எல்லாம் முடிஞ்சி போச்சி சார்'' என்று அழுது கொண்டே சொன்ன அந்த வார்த்தையும், பக்கத்தில் வினோதினியின் அப்பா - அம்மா இருவரின் அழுகுரலும் இன்னும் என் நெஞ்சை விட்டு அகலவே இல்லை. இரண்டு நாட்களாக என் மனம் கனத்து கிடந்த இந்த சூழ்நிலையில், புதுவை வந்த அவரது உடலை பார்க்கும் போது  அதிர்ந்து போனேன். படத்தில் இருக்கும் அந்த முகமா இப்படி சிதைந்து கிடப்பது. நெஞ்சம் எரிமலையாய் வெடித்தது. துக்கம் அடைத்தது. கோபம் கொப்பளித்தது. யார் மீது இந்த சமூகத்தின் மீதா...? அல்லது பெண்களை போற்றாத இளைஞர்கள்   மீதா...? இனியாவது இந்த சமூகம் பாடம் கற்றுக்கொள்ளட்டும். ஆண்  பிள்ளைகளுக்கு பெண்களைப் போற்ற - உயர்வு செய்ய கற்றுத் தரட்டும். பெண்கள் மீதான வன்கொடுமைக்கு வினோதினியே கடைசி பலியாக இருக்கட்டும். 























              

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

ஓய்வறியா உன்னதத் தலைவர் மறைந்தார் - மக்கள் சேவையில் பூத்த செம்மலர் விடைபெற்றது.



ஓய்வறியா செஞ்சூரியனே விடைபெற்று  சென்றாயோ......!
                நேற்று தான் கட்சியின் மாநாடு முடிந்தது. இன்னும் தோழர்களுக்கு மாநாட்டு உற்சாகமும், கொண்டாட்டமும் குறையவே இல்லை. அதற்குள் நம் மரியாதைக்குரிய தோழர் என். வரதராஜன் அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி பேரிடியாய் இதயத்தைத் தாக்கியது. தள்ளாத வயதிலும் தளராமல் தலைமை தாங்கி அவர் நடத்தியப் போராட்டங்கள்  தான் எத்தனை... எத்தனை... அத்தனையும் நம்மைத் தளரச் செய்யாமல் இயங்கச் செய்த போராட்டங்கள் ஆயிற்றே. அவர் எழுச்சிமிக்க போராளி தான். என்றாலும் அவரது பேச்சிலே அமைதியும்,  இனிமையும், சாந்தமும் இருக்கும். 
                 அதே சமயத்தில் உழைப்பாளி மக்களின் பிரச்சனையாக இருந்தாலும், தலித் மக்களின் பிரச்சனையாக இருந்தாலும் அவர் குரலில் எரிமலையாய் நெருப்புத் தெறிக்கும். தீண்டாமைக்கு எதிராய் தீயாய் எழுந்தவர். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக இருந்த போது தான்,  தீண்டாமைக்கெதிரான போராட்டங்கள் புது வடிவம் பெற்றது. தலித் மக்களின் விடுதலைக்காகவும், தீண்டாமைக்கெதிராகவும் போராடுவதற்கும், அவர்களின் உரிமைகளை பெற்றுத் தருவதற்கும், அவர்களை பாதுகாப்பதற்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பை உருவாக்கியதில் மிகப்பெரிய பங்கு வகித்தவர். இந்த முன்னனி என்பது மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும், அவர்களெல்லாம் பின்பற்றக்கூடியதாகவும் விளங்கி வருகிறது. அந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கம் என்பது தோழரின் கருத்தில் உருவானதே என்று சொன்னால் அது மிகையாகாது.
                உத்தபுரம் தீண்டாமை சுவர் இடிப்புப் போராட்டம் என்பது தோழர் என். வி அவர்களின் நீண்ட நெடிய போராட்ட வாழ்க்கையில் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். அதுமட்டுமல்ல, சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட  மக்கள் போராடிப் பெற்ற இடஒதுக்கீடு என்கிற உரிமையின்  சிறு துளிக்கூட கடைசி மனிதன் வரை சென்றடையாதது கண்டு நொந்துப்போனார். குறிப்பாக தலித் மக்களிடையே கடைக்கோடியில் இருக்கும்  அருந்ததி இனமக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்ற வாழ்வாதாரங்கள் கிடைக்கப்பெறாமல் மிகவும் பின்தங்கிய நிலையில் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சூழ்நிலையில் அவர்களை தோள் கொடுத்துத் தூக்கிவிடும் தோழனாய்-  தலைவனாய்  இருந்து போராடினார். அவரது அந்தப் போராட்டத்தின் விளைவாகத்தான், கருணாநிதி தலைமையிலான முந்தைய தமிழக அரசு அருந்ததி இன மக்களுக்கு இரண்டு சதவீதமான உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. 
                 அருந்ததி இன மக்களுக்கான இரண்டு சதவீதமான உள் ஒதுக்கீடு பெற்றுத்தந்ததில் தோழர் என். வரதராஜன் அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இது மாதிரியான வீரம் செறிந்தப் போராட்டங்களும், நிகழ்வுகளும் தோழரின் வரலாற்றில் மட்டுமல்ல, எதிர்காலத்தில் பாட்டாளிவர்க்க வரலாற்றில் இடம் பெறக்கூடியது என்றால் அது  மிகையாகாது.
               இப்படிப்பட்ட ஒப்பற்றத் தலைவர் - ஒரு உன்னதமான தலைவர் தனது இறுதி மூச்சு வரை கட்சி - இயக்கம் - மக்கள் என்று தான் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருன்தவர். நேற்று வரை கோழிக்கூட்டில் கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு விட்டு, இன்று காலை தான் சென்னையில் வீடு திரும்பினார். நேற்று தான் இவரை கட்சியின் மத்தியக்குழுவிலிருந்து மாநாடு விடுவித்தது. அதற்காகவே காத்திருந்தார் போல் கட்சிப்பணி முடித்த களைப்பில் - ஓய்வரியாமல் உழைத்த களிப்பில் அவரது இதயம் ஓய்வு பெற்றது. ஆம்... தோழர். என். வி நம்மை விட்டு பிரிந்தார்.
                யார் ஆறுதல் கூறினாலும், அவரது பிரிவால் வாடும் நம்மை தேற்றுதல் கடினம். ஆனால் அவர் விட்டுச் சென்ற போராட்டங்களை மேலும் செழுமைப்படுத்தி முன்னெடுத்துச் செல்வோம். இது மறைந்த தோழருக்கு நாம் செய்யும் அஞ்சலி... மரியாதை....வீரவணக்கம்...

சனி, 11 பிப்ரவரி, 2012

என்னை கவர்ந்த தொழிற்சங்கத்தலைவர் - தோழர் உ.ரா.வரதராஜன்


           ஆயிற்று! இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆயிற்று. WR என்று நாங்கள் அன்போடு அழைக்கும் தோழர்.உ.ரா.வ்ரதராஜன் மறைந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.   
         தோழர் WR அவர்கள் 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது நான் பள்ளி மாணவி. அப்பா நாளிதழில் வெளியான அவருடைய பெயரைப்பார்த்து விட்டு ‘இவர் என்னுடைய நண்பர்’ என்று கூறி அப்பா இளவட்டமாய்த் திரிந்த காலத்தில் WR கையெழுத்திட்டு அளித்த புத்தகம் ஒன்றையும் காண்பித்தார். தேர்தல் முடிவுகள் வந்தபின் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் WR. அப்போது கல்கியில் அவருடைய புகைப்படம் அட்டையில் வெளியாகி இருந்தது. அப்பா மிகவும் சந்தோஷப்பட்டார். அதன்பின் சட்டமன்ற்த்தில் அவர் பேசியது குறித்தெல்லாம் நாளிதழ்களில் பார்க்கும்போது தூரத்தில் இருந்து சந்தோஷப்படும் நண்பராக அப்பா இருந்தார். 
            WR ஒரு கம்யூனிஸ்ட், தொழிற்சங்கவாதி, மொழிவளம் உள்ளவர் என்பதைத் தவிர்த்து அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்பது அப்பா சொல்லித்தான் எனக்குத் தெரியும். அவர் இலக்கிய ஆர்வம் மிக்கவர். ‘அருவி’, 'ஆதவன்’ ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராய் இருந்து அப்போது எழுத வந்த இளைஞர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். தேனருவி, மலர் வண்ணன், பூதலூர் முத்து என்று அப்பாவின் நண்பர்கள் பலருடன் எழுத்து மூலமே அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. ஒரத்தநாட்டில் மட்டும் 300 சந்தாக்களை அப்பாவும் அவருடைய நண்பர்களும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். ‘சர்வோதய இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட WR கதர் ஆடையையே அணிந்து வந்தார். அவர் மாநிலம் முழுவதும் சென்று காந்தீயக் கொள்கைகளை பிரசாரம் செய்து வந்தார். ம.பொ.சி.யின் இயக்கத்தில் சிறிது காலம் பணியாற்றினார். அவர் பி.காம்.பட்டதாரி. வேலை கிடைக்காமல் இருந்தார். சென்னையில் ரிசர்வ் வங்கியில் வேலை கிடைத்தது. அதன்பின் தொழிற்சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். தொழிற்சங்கத் தொடர்புகள் அவருடைய கொள்கைகளையும் வாழ்க்கைப் பாதையையும் மாற்றின. தொழிற்சங்கம் மூலம் மார்க்சிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்கப்பட்டு, கட்சியின் முழுநேர ஊழியரானார். அதன்பின் அவருடைய பணிப்பளு அதிகமானதால் பழைய நண்பர்களுடன் ஓர் இடைவெளி ஏற்பட்டு தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இப்போது மாதிரி கைபேசி, மின்னஞ்சல் எல்லாம் உண்டா என்ன? கடிதப் பரிமாற்றம் ஒரு கட்டத்தில் நின்றுபோக தொடர்பறுந்து போனது. இவையெல்லாம் அப்பா எனக்கு சொன்ன தகவல்கள்.      
          காலச்சுழற்சியில் WR டெல்லியிலிருந்து கட்சிப்பணி செய்துவிட்டு, மீண்டும் தமிழகம் வந்தார். அப்போது நான் கட்சியில் இருந்தேன். ’தீக்கதிர்’ நாளிதழின் அலுவலகத்துக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அவர் தீக்கதிரின் முதன்மை ஆசிரியர். மிகச் சாதாரணமாக ஒரு கட்சி உறுப்பினராக நான் அறிமுகம் ஆனேன் அவருக்கு. மிகுந்த தோழமையுடன் பேசுவார். அவர் டெல்லியில் இருந்த காலத்தில் தீக்கதிருக்கு முதன்முதலாக ஓர் இணையதளத்தை உருவாக்கினேன். ஒருநாள் தோழர் ஒருவர் அவரிடம் இந்தத் தகவலைச் சொல்ல ‘‘இதை ஏன் என்னிடம் முன்னமே தெரியப்படுத்தவில்லை?’’ என்று வருத்தப்பட்டாலும், வருத்தத்தைவிட அதில் மகிழ்ச்சி அதிகம் இருந்தது. அதன்பின் அவர் என்னிடம் பேசியவிதத்தில் ஒருவித கூடுதல் உரிமையும் அன்பும் வெளிப்பட்டன. நான் எப்போதாவது எழுதுவதை வாசித்து வந்தார் என்பது அவ்வபோது அவருடைய பேச்சில் வெளிப்படும். அதன்பின் ஒரு நாள் ‘காவியனின் மகள் நான்’ என்றேன். அவர் பார்த்த பார்வையை இன்றைக்கும் மறக்க் முடியாது. நாற்காலியில் அமர்ந்திருந்தவர் துள்ளி எழுந்து வந்து என் கரஙகளைப் பற்றிகொண்டார். ‘இதை ஏன் என்னிடம் முன்னமே தெரியப்படுத்தவில்லை?’ என்றார் இப்போதும். தன் நண்பரின் மகள் என்கிற பாசம் அவர் ஸ்பரிசத்தில் தெரிந்தது. அதன்பின் அவர் என்னிடம் பேசிய விதத்தில் தந்தைமையை உணர்ந்தேன்.
                அப்பா தமிழாசிரியராய் இருந்து ஓய்வு பெற்றார், WR முதன்மை ஆசியராய் இருக்கும் அதே தீக்கதிர் நாளிதழுக்கு, நாகப்பட்டினம் நிருபராய் ஆனார். பழைய காலம் போலவே இப்போதும் WR ஆசிரியர். அப்பா அதில் எழுதுபவர். அவர்கள் நிறைய கூட்டங்களில் சந்தித்துக்கொண்டார்கள். அப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் என்னையும், என்னைப் பார்க்கும்போதெல்லாம அப்பவையும் அன்போடு விசாரிப்பார். ஒரு கட்டத்தில் வேலைப்பளுவால் நான் ‘தீக்கதிர்-வண்ணக்கதிர்’ பகுதிக்கு எதுவும் எழுதாமல் இருந்தபோது அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. ‘உன் பங்களிப்பு எதையும் நான் கொஞ்ச நாட்களாக வண்ணக்கதிரில் பார்க்கவில்லை. ஏன் எழுதுவதில்லை?’ என்று உரிமையோடு கேட்டு எழுதச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். பேஸ்புக்கில் எனக்கு நண்பரானார்.                           
                எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். நான் ‘செங்கடல்’ படப்பிடிப்புக்காக ரயிலில் ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்தபோது வந்தது அந்த அழைப்பு. ஒரு பத்திரிகையாளர் அழைத்தார்.’WR எங்கே?’ என்றார். ‘ஏன்?’ என்றேன். நாளைக்கு வெளியாகவிருக்கும் நக்கீரனில் ‘அவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியாவதாக தகவல். உறுதிப்படுத்த முடியுமா?’ என்றார். நாடி நரம்பெல்லாம் அதிர்ந்து ரயிலை விட வேகமாக தடதடத்தன. பேச்சு வரவில்லை. என்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. ‘நிச்சய்ம்..இந்தச் செய்தி பொய்யாக இருக்கவேண்டும்’ என்கிற பதைபதைப்போடு கைபேசியில் இரவு முழுக்க ஒவ்வொருவராக அழைத்து அவர் குறித்து விசாரித்தபோது, யாருக்கும் தெரியவில்லை. அவர் ஒரு வாரமாகக் காணவில்லை என்பதைத் தவிர வேறு யாருக்கும் எதுவும் தெரியவில்லை. பேசிய நண்பர்கள் எல்லோரும் நான் சொல்வது தவறான தகவலாக இருக்கக்கூடும் என்றார்கள். அவர் அப்படி தற்கொலை செய்து கொள்ளக்கூடியவர் அல்ல என்றார்கள். நானும் அப்படியே நம்பினேன். மறுநாள் ராமேஸ்வரம் சென்றவுடன் நக்கீரன் வாங்கிப்பார்த்தேன்...அந்தக் கடிதம்...அந்த வரிகள்..மனம் கலங்கிப்போனது. எங்கிருந்தாவது திடீரென வந்து ‘இதோ! நான் இருக்கிறேன்’ என்று சொல்ல மாட்டாரா என்று மனம் ஏங்கத் தொடங்கியது. அதன்பின் நடந்ததெல்லாம் எல்லோருக்கும் தெரியும். 
                      அவருடைய உடல் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்துக்கு வந்தடைந்தபோது, கண்ணீரோடு அவரின் இறுதி நிகழ்வுகளை கேமிராவில் சேமித்தேன். ஊர்வலம் கிளம்பி, மின்மயானத்தை அடைந்து அவருடைய உடலை மின்சாரத்திற்குத் தின்னக் கொடுத்து அவர் புகையாய் மாறி புகைபோக்கியின் வழியாக மேலே காற்றோடு கலந்தது வரை ஒவ்வொரு கணத்தையும் படம்பிடித்தேன். வீட்டுக்கு வந்து கணினியில் இணைத்து அந்தப்படஙக்ளைப் பார்க்க முயன்றபோது முதல் இரண்டு படங்களுக்கு மேல் பார்க்க முடியாதபடி என்னை ஏதோ ஒரு உணர்வு ஆட்கொண்டது. கண்களை இருட்டிக்கொண்டு மயக்கம் வருவது போன்றிருந்தது. அதன்பின் பலமுறை அந்தப் படஙக்ளைப் பார்க்க நான் முயன்றபோது இதே போன்றதொரு உணர்வு மேலோங்கி இன்று வரை பார்க்கப்படாத படங்களாகவே அவை இருக்கின்றன. ஒருவேளை அழகும், கம்பீரமும் நிறைந்த தோழர் WR-ன் உருவத்தை அப்படி சிதைந்து, அடையாளம் தெரியாமல் கருத்துப் போய் இருப்பதை பார்க்க முடியவில்லையோ என்னால் என்று தோன்றுகிறது. ஆனால் உடலை அருகில் இருந்து பார்த்த எனக்கு படங்களைப் பார்க்க வலுவில்லாமல் போனது ஏன் என்று புரியவில்லை.                                         இன்றுவரை ஜீரணிக்க முடியாத மரணமாக அவருடைய மரணம் இருக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல. ஒரு துயரை இன்னொரு துயர் வந்து மறக்கச் செய்யும். அப்படித்தான் இவருடைய மரணம் வந்து, என்னால் மறக்க முடியாமல் அனுபவித்து வந்த ஒரு துயரைக் கடக்க வைத்தது. இவருடைய மரணத்தோடு ஒப்பிடுகையில் எவ்வித துயரமும் தூசியாய்த் தெரிந்தது எனக்கு. கனத்த மனத்துடன் இருந்த எங்கள் தோழர் WR-ன் உடலைச் சுமந்து மிதந்த போரூர் ஏரியை கடக்கும்போதெல்லாம் இன்றைக்கும் கண்ணீர் விடுவது வாடிக்கையாகி விட்டது. அவருடைய பேஸ்புக் பக்கத்துக்கு தினமும் சென்று பார்ப்பேன். அவர் உயிருடன் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் செய்திகளும் அலைக்கழித்தன. கொஞ்ச நாள் கழித்து அவருடைய பாஸ்வோர்ட் தெரிந்த யாரோ அவருடைய கணக்கை டீ-ஆக்டிவேட் செய்தனர். அன்றைக்குத் தான் அந்தப் பக்கத்துக்குச் செல்வதை நிறுத்தினேன். திடீரென்று ஒரு நாள் முன்னால் வந்து ’நான் உயிரோடுதான் இருக்கிறேன்’ என்று அவர் சொல்ல ‘இதை ஏன் என்னிடம் முன்னமே தெரியப்படுத்தவில்லை?’ என்று அவர் பாணியில் நான் கேட்கவேண்டும் என்று மனம் ஆசைப்படுகிறது. ஆசைப்படுவதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன?
நன்றி : கவின் மலர் 

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

காமிரா கண்ணை மூடியது - காமிராவைத் தூக்கிய முதல் இந்திய பெண் புகைப்பட பத்திரிகையாளர்...!

   அஞ்சலி                                
                     தன்னுடைய 98 - ஆவது வயதில், முதல் இந்திய பெண் புகைப்பட பத்திரிகையாளர் ஹோமாய் வ்யாரவாலா  இன்று காலை காலமானார். பத்திரிகைத் தொழிலுக்காக காமிராவை தூக்கிய முதல் இந்திய பெண்மணி ஆவார். 1938 - ஆம் ஆண்டில் காமிராவை எடுத்தவர் சுமார் 35 ஆண்டுகளாக 1973 - ஆம் ஆண்டுவரை தன் காமிரா மூலம் சுட்டுத் தள்ளியிருக்கிறார். இவர் எடுத்த அத்தனை  புகைப்படங்களும் அபூர்வமானவை. சுதந்திரப்போராட்டங்கள், 1947 ஆகஸ்ட் 15 - முதலாவது சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள், மவுண்ட் பேட்டன் விடைபெறும் நிகழ்வு, காந்தி - நேரு - லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரது இறுதி நிகழ்ச்சிகள் போன்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை இவரது காமிராவில் அடக்கியிருக்கிறார். இவருக்கு இந்திய அரசு பத்மா விபூஷன் விருதும் கொடுத்து கவுரவித்துயிருக்கிறது. மறைந்த அம்மையாருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம்.
              
                இவர் எடுத்த பிரபலமான புகைப்படத்தில் ஒன்று  இன்றும் எல்லோரையும் கவர்ந்திழுக்கிறது. மறைந்த பிரதமர் நேரு பிரிட்டிஷ் ஹை - கமிஷனரின் மனைவியுடன் விமானத்தில் புதுடெல்லியிலிருந்து லண்டன் சென்றபோது எடுத்தப்படம். நேரு உடன் நெருங்கிய நட்புகொண்டவர் என்பதால் நேருவின் ஒவ்வொரு அசைவுகளையும் படம் எடுத்திருக்கிறார்.  கீழே உள்ள படங்களும் இவர் எடுத்ததே.

அன்றும்....
இன்றும்....             











                                                                                                                 
தன் சகோதரி விஜயலட்சுமியுடன் நேரு
ஜாக்குலின் கென்னடியுடன் நேரு 
                        


சனி, 30 ஜூலை, 2011

புதுச்சேரி ஜூலை - 30 தியாகிகளுக்கு அஞ்சலி...

ரத்தம் சிந்தி பெற்ற உரிமைகள்
-எஸ்.சிவக்குமார்
             பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் புதுச்சேரி யூனியன் பிரதேசம் அடிமைப்பட்டுக் கிடந்த காலம் , வரலாற்றில் ஒரு இருண்ட காலமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அன்றைய காலக்கட்டத்தில்  தொழிற்சங்க உரிமைகள்  மறுக்கப்பட்டும் , உழைக்கும் மக்களை 
கொத்தடிமைகளாக வைத்துகொண்டு அவர்களை சுரண்டியும்  வெள்ளை முதலாளிகள்  கொழுத்து வந்தனர். தொழிற் சங்கம் அமைப்பது சட்டவிரோதம் என்று முதலாளிகள் கூறினர். தொழிலாளர்களை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை வாங்கி அடிமைப்படுத்தி வந்தனர். ஆண்-பெண், குழந்தை என்று அனைவரின் உழைப்பும் அட்டையை போல் உறிஞ்சப்பட்டது. தொழிலாளர்கள் எந்திரத்தில் அடிபட்டு உடல் உறுப்புகள் இழந்தாலும் அல்லது செத்தாலும் நஷ்ட ஈடு எதுவும் கிடையாது. இந்த கொடுமைகளையெல்லாம் எதிர்த்து 3 பஞ்சாலைகளிலும் பணியாற்றிய (சுதேசி, பாரதி, ரோடியர் மில்கள்) தொழிலாளர்கள் கட்டுப்பாடாக திரண்டெழுந்தனர்.
                1935ம் ஆண்டிலிருந்து ரகசியமாக சங்கம் அமைத்து செயல்பட்டார்கள்; போராடினார்கள். பிரெஞ்சு புரட்சியில் ஏற்பட்ட அனுபவத்தை பெற்ற பிரெஞ்சு ஏகாதிபத்திய ஆட்சி இந்த தொழிலாளி வர்க்க ஒற்றுமையின் பலத்தையும் அதன் போராட்டத்தையும் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டது.
              வேலை நேர உரிமைக்காக கோரிக்கை வைத்த தொழிலாளர்களை அழைத்து பேசுவதற்கு மாறாக,அவர்களை அடக்கி ஒடுக்கும் செயல்களில் வெள்ளைக்கார முதலாளிகள் ஈடுபட்டனர். நிர்வாகத்தின் இந்த அணுகு முறையை எதிர்த்து சவானா மில் (சுதேசி மில்) தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1936-ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி அமைதியாகப் போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்களை அடக்குவதற்காக,  பிரெஞ்சு அரசு ராணுவத்தையே ஆலைக்குள் திட்டமிட்டு அனுப்பியது. சுழல் பீரங்கி, துப்பாக்கி ஆயுதங்களோடு ராணுவப்படை ஆலைக்குள் நுழைந்தது. நிராயுதபாணியான தொழிலாளர்கள் ஒருபுறம் இருக்க, ஆயுத பாணி சகிதங்களோடு ராணுவம் மறுபுறம் நின்றது. கிட்டத்தட்ட போர்க்களமாகவே மாறியது சுதேசி பஞ்சாலை.
             சுழலும் பீரங்கிகளால் தொழிலாளர்களை சுட்டார்கள். அதில் பஞ்சாலை தொழிலாளர் தோழர்கள்-அமலோர்பநாதன், ராஜமாணிக்கம், கோவிந்தசாமி, ஜெயராமன், சுப்பராயன், சின்னையன், பெருமாள், வீராசாமி, மதுரை, ஏழுமலை, குப்புசாமி, ராஜகோபால் ஆகிய 12 தோழர்கள் உயிர்ப்பலி ஆனார்கள். ஆனால் நெஞ்சுரமிக்க தொழிலாளர்கள் அஞ்சி ஓட வில்லை. ஒரு பக்கத்தில் தங்கள் அருமை தோழர்கள் குண்டு பாய்ந்து - குடல் சரிந்து - குருதி வெள்ளத்தில் மிதந்தது கண்டு பொங்கிவரும் ஆத்திரத்தையெல்லாம் நெஞ்சிலே தேக்கிக் கொண்டு வீறுகொண்டு எழுந்தனர்; கூலிப்படையை விரட்டியடித்தனர்.
                    ஆசியாவிலேயே எட்டு மணிநேர வேலை - எட்டு மணிநேர ஓய்வு  - எட்டு மணிநேர உறக்கம் என்கிற உழைப்பாளி மக்களுக்கான உரிமைக்கான வீரம் செறிந்த  போராட்டமும், உயிர்த் தியாகமும் புதுவையில் தான் நடைபெற்றது என்பது நமக்கெல்லாம் பெருமை சேர்ப்பதும், நம் உரிமைக்கான போராட்டங்களுக்கு உரம் சேர்ப்பதும் ஆகும். நமக்கான உரிமைக்காக ஜூலை 30 அன்று உயிர்த் தியாகம் செய்த அத்துணைத் தோழர்களையும் சிரம் தாழ்த்தி வணங்கி அஞ்சலி செலுத்துகிறோம்.