பாலியல் பலாத்காரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலியல் பலாத்காரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 அக்டோபர், 2014

அம்மா, எனக்காக ஒரு வரம் கேள்....!

               மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பு ரெஹானா ஜப்பாரி தன் தாயிடம் வேண்டிக்கொண்டது.                                         
                அன்புத் தாய் ஷோலே, குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நான், சட்டப்படி அதற்குப் பதிலடியாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை நெருங்கிவிட்டேன் என்பதை ஏன் சொல்லாமல் மறைத்துவிட்டாய்? இதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது. இது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?
          இந்த உலகம் என்னை எந்தக் கவலையுமின்றி 19 ஆண்டுகள் வாழ அனுமதித்தது. கொடூரம் நிறைந்த அந்த இரவில் நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய உயிரற்ற உடல் நகரின் ஒரு மூலையில் தூக்கி வீசப்பட்டிருக்கும். சில நாட்களுக்குப் பிறகு, போலீஸார் வந்து என்னுடைய சடலத்தை அடையாளம் காட்டுவதற்காக உன்னை அழைத்துச் சென்றிருப்பார்கள். என்னைப் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துக் கொன்றார்கள் என்பதும் உனக்கு அப்போது தெரிந்திருக்கும். கொலைகாரன் யாரென்று யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். காரணம், நாம் அவர்களைப் போல பணமோ, செல்வாக்கோ படைத்தவர்கள் அல்லவே? அதன் பிறகு, உன்னுடைய வாழ்க்கை அவமானமும் துயரமும் நிறைந்ததாக மாறியிருக்கும். இந்த வேதனைகளைத் தாங்காமல் நீயும் சில ஆண்டுகளில் இறந்திருப்பாய், அதுதான் நம்முடைய தலையெழுத்தாக இருக்கும். 

சாவும் கடைசி அல்ல
 
            ஆனால், சபிக்கப்பட்ட அந்த அடி கதையையே மாற்றிவிட்டது. என்னுடைய உடல் வீதியில் தூக்கி வீசப்படவில்லை; எவின் சிறைச்சாலையின் தனிமைக் கொட்டடியில் அடைக்கப்பட்டது, இப்போது கல்லறை போன்ற ஷார்-இ-ராய் சிறையின் அறையில் புதைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் தலைவிதி என்பதால், நான் அதை ஆட்சேபிக்கவில்லை. சாவு ஒன்றே வாழ்க்கை யின் கடைசி அல்ல என்பதை நீயும் அறிவாய்.
           நாம் எல்லோருமே ஒரு அனுபவத்தைப் பெறவும், பாடங்களைப் படிக்கவும் இந்த உலகத்தில் பிறக்கிறோம் என்று ஒருமுறை சொன்னாய்; ஒவ்வொரு பிறவியிலும் நம்மீது புதிய பொறுப்பு சுமத்தப்படுகிறது. சில வேளைகளில் தீமைகளை எதிர்த்துப் போராடியே தீர வேண்டும் என்று நான் கற்றிருக்கிறேன். என்னைச் சவுக்கால் அடித்தவன் தன்னுடைய தலையிலும் முகத்திலும்தான் கடைசியாக அறைந்துகொண்டான். நல்லதொரு நெறிக்காக ஒருவர் தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது பாடுபட வேண்டும் என்று சொல்லி யிருக்கிறாய். அதைத்தானே செய்தேன்.
          பள்ளிக்குச் செல்லும்போது அடுத்தவர்களுடைய புகார்களுக்குக் காரணமாக இருந்துவிடக்கூடாது என்று அறிவுரை சொன்னாய். ஒரு காமுகன் என்னைப் பலாத்காரப்படுத்த முற்பட்டபோது, இந்த அறிவுரையெல்லாம் பயன்படவேயில்லை அம்மா. நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் என்னை நிறுத்தி, காலமெல்லாம் கொலை செய்வதற்காகவே சதி செய்தவளைப் போலவும், இரக்கமில்லா கொலைகாரி என்றும் என் மீது குற்றம் சுமத்தினார்கள். நான் கண்ணீர் விடவில்லை, எனக்கு இரக்கம் காட்டுங்கள் என்று கெஞ்சவில்லை. சட்டம் பாரபட்சமில்லாமல் செயல்படும் என்ற நம்பிக்கையில் நான் அழவேயில்லை அம்மா. 

வசை கிடைத்தது
 
         கடுமையாகக் குற்றம்சாட்டியும் துளியும் வருத்தம் இல்லாமல் இருக்கிறாள் பார் என்ற வசைதான் எனக்குக் கிடைத்தது. வீட்டில் நான் கொசுவைக்கூட அடித்துக் கொன்றதில்லை. எனக்குத்தான் இந்த சதிகாரி பட்டம், கொலைகாரி என்ற குற்றச்சாட்டு. பிராணிகளை நான் நடத்திய விதத்தைக் கொண்டு என்னை ஆண் சுபாவம் மிக்கவள் என்று முடிவுகட்டினார்கள். நீ என்னை மிகவும் நேசிக்கச் சொன்ன இந்த தேசம்கூட நான் உயிரோடு இருப்பதை விரும்பவில்லை அம்மா; போலீஸ் விசாரணை என்ற பெயரில் சொல்ல முடியாத - காது கூசும்படியான - கேள்விகளைக் கேட்டுக்கொண்டே அடுத்தடுத்து இடிபோல என்னை அடித்துத் துவைத்தபோது, எனக்கு ஆதரவாக அங்கே யாருமே இல்லை அம்மா. ஒரு பெண்ணின் அழகுக்கு அழகு சேர்க்கும் என் கரிய கூந்தலை நானே மழித்துக்கொண்டதற்குப் பரிசாக என்னை 11 நாட்கள் தனிமைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினார்கள்.
           போலீஸ் காவலில் முதல் நாள் இருந்தபோது அங்குவந்த வயதான போலீஸ் அதிகாரி ஒருவர், “உனக்கெல்லாம் என்னடி நீள நகம் வேண்டியிருக்கிறது?” என்று கேட்டு சரமாரியாக அடித்தார். இந்தக் கால கட்டத்தில் இங்கு எதுவுமே அழகாக இருந்துவிடக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டேன். தோற்றப் பொலிவு, சிந்தனையில் அழகு, ஆசையில் அழகு, கையெழுத்தில் அழகு, கண்ணில் அழகு, பார்வையில் அழகு, இனிமையான குரல் அழகு என்று எதுவுமே விரும்பப்படுவதில்லை. 

இறுதி விருப்பம்
 
          உனக்குத் தெரியாமலோ, நீ இல்லாமலோ என்னைத் தூக்கில் போட்டுவிடுவார்கள். அதனால், நான் சொல்ல விரும்புவதையெல்லாம் ஒலிவடிவில் பதிவுசெய்திருக்கிறேன், இது இன்னொருவர் மூலம் உன் கைக்குக் கிடைக்கும். என் நினைவாக, நான் கைப்பட எழுதிய பல பக்கங்களை வீட்டில் உனக்காக வைத்திருக்கிறேன்.
       இறப்பதற்கு முன்னால் உன்னிடம் ஒன்று யாசிக்கிறேன். உன்னுடைய சக்தியையெல்லாம் திரட்டி இதை நீ செய்தே தீர வேண்டும். இந்த உலகத்திடமிருந்தும் இந்த நாட்டிடமிருந்தும் - ஏன் உன்னிடமிருந்தும் நான் எதிர்பார்ப்பது இந்த ஒன்றைத்தான். அம்மா ப்ளீஸ், அழாதே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நீதிமன்றத்துக்குச் சென்று என்னுடைய இறுதி விருப்பம் இது என்று அவர்களிடம் தெரிவி. எனக்காக நீ யாரிடமும் சென்று பிச்சை கேட்காதே என்று கூறிய நானே சொல்கிறேன், நீ எனக்காக நீதிமான்களிடம் பிச்சை கேட்டாலும் தவறில்லை.
         அம்மா, நான் வெறும் கழிவாக இந்தப் பூமியிலே விழ விரும்பவில்லை. என்னுடைய அழகிய கண்களும் தூய இதயமும் இந்த மண்ணோடு மண்ணாக வீணாகப் போய்விடக் கூடாது. என்னைத் தூக்கில் போட்டதும் என்னுடைய கண்கள், இதயம், சிறு நீரகம், எலும்புகள் இன்னும் என்னவெல்லாம் என் உடலிலிருந்து எடுத்து மற்றவர்களுக்குப் பயன்படுத்த முடியுமோ அதையெல்லாம் தேவைப்படுபவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். நான்தான் கொடுத்தேன் என்று யாருக்கும் தெரிய வேண்டாம். அம்மா, எனக்காக ஒரு பூச்செண்டை வாங்கு, எனக்காக இறைவனிடம் வேண்டு. என் இதயத்தின் ஆழத்திலிருந்து சொல் கிறேன், என்னை அடக்கம் செய்து எனக்காக ஒரு சமாதியை ஏற்படுத்தாதே அம்மா; வாழும்போதுதான் நான் உனக்குத் துயரங்களையே கொடுத்தேன். நான் இறந்த பிறகும் என்னுடைய சமாதிக்கு வந்து நீ அழ வேண்டாம் அம்மா. எனக்காகக் கருப்புத் துணியை நீ போட வேண்டாம். என்னையும் துயரகரமான என்னுடைய நாட்களையும் மறக்க முயற்சி செய்; என்னுடைய எந்த எச்சமும் உன் எதிரிலோ நினைவிலோ இருக்கக் கூடாது. 

கடவுளிடம் பதில் 
 
           இந்த உலகம் நான் வாழ்வதை விரும்பவில்லை. நான் மரணத்தைத் தழுவுகிறேன். கடவுளின் ராஜ்ஜியத்தில் நான் அந்த இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குத் தொடுப்பேன். இன்ஸ்பெக்டர் ஷாம்லு, அந்த நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் பதில் சொல்லியாக வேண்டும். டாக்டர் ஃபர்வான்டி, காசிம் ஷபானி எல்லோர் மீதும் கடவுளின் நியாய ஸ்தலத்தில் நான் வழக்குத் தொடுப்பேன். குற்றம் இழைத்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், நியாயத்தின்பால் நிற்காமல் வேடிக்கை பார்த்தவர்கள் என்று எல்லோருமே கடவுளிடத்திலே பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
          இளகிய மனம் படைத்த என்னுடைய தாயே, கடவுளின் ராஜ்ஜியத்திலே நீயும் நானும் வாதிகளாக இருப்போம், நம்மீது குற்றம்சாட்டியவர்கள் எல்லாம் பதில் சொல்லக் கடமைப்பட்ட பிரதிவாதிகளாக இருப்பார்கள். கடவுள் எதை விரும்புகிறார் என்று பார்ப்போம். என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உன்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு உலகமே நீதான் அம்மா! – உன் பிரிய ரெஹானா. 

(தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்யவந்த முன்னாள் உளவுத் துறை அதிகாரியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈரானில் கடந்த சனிக்கிழமை தூக்கிலிடப்பட்ட ரெஹானா ஜப்பாரி (26), சிறையிலிருந்தபடியே தனது தாய் ஷோலேவுக்கு அனுப்பிய கடைசி வேண்டுகோள், ஒலிவடிவத்திலேயே கிடைத்திருக்கிறது. உள்ளத்தை உருக்கும் அந்தக் கடைசி வேண்டுகோள் இது.)   
- தமிழில்: சாரி
நன்றி : தி இந்து - தமிழ்  

சனி, 20 ஏப்ரல், 2013

வெறிபிடித்த மிருகங்களுக்கு மத்தியில் வாழும் பெண் குழந்தைகள் - ஒரு தேசிய அவமானம்...!


     பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையை ஒருவன் நாசப்படுத்துகிறான் என்றால் அவன் நிச்சயமாக மனிதனாக இருக்க முடியாது. வெறிபிடித்த மிருகமாகத்தான் இருப்பான்.  ஆண்கள் எல்லோரும் நல்லவர்களாகத் தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் மாமா என்றும், சித்தப்பா என்றும், அண்ணன் என்றும், ஆசிரியர் என்றும், நண்பன் என்றும், தோழன் என்றும் குழந்தைகள் அழைத்துப் பழகுகிறார்கள். ஆனால் இனி குழந்தைகள் அப்படி பழகுவதற்கு யோசிப்பார்கள். அந்த அளவிற்கு ஒரு சிலர் மனித மிருகங்களாக மாறி வருகின்றனர். இப்படித்தான் டெல்லியில்  இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மனித மிருகத்தால் ஐந்து வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தப்பட்டு இன்று மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறது. இந்த செய்தியை கேட்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.
         இது போன்ற நிகழ்வு என்பது சமீப காலமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்த தைரியம் எங்கிருந்து தான் வந்தது...? அரசும், சட்டமும், சமூகமும் ஒன்றும் செய்யாது என்ற தைரியமா....? நீதிமன்றம் காலம் கடத்தி தானே தண்டனை வழங்கப்போகிறது என்ற துணிச்சலா....? மனசாட்சியை கொன்றுவிட்டார்களா...? ''பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு'' என்று பாரதியால் பெருமையுடன் பாடப்பட்ட இந்த நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் ஒரு ''தேசிய அவமானம்'' என்பதை யாராலும் மறுக்கமுடியாது. 




ஞாயிறு, 6 ஜனவரி, 2013

புத்திசாலித்தனமாக யோசிக்கும் புதுச்சேரி கல்வித்துறை...!

        புதுச்சேரியில் புத்தாண்டுத்தினத்தன்று ஒரு பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து இங்கே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற பல்வேறு ஜனநாயக அமைப்புகளும், முற்போக்கு அமைப்புகளும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கேட்டும், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கடும் நடவடிக்கை கோரியும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், இன்று புதுச்சேரி கல்வித்துறை அலுவலகத்தில் பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டம் ஒன்று கல்வித்துறையை கவனிக்கும் சுற்றுலா துறை அமைச்சர் ( இங்கே சென்டிமென்டா கல்வி அமைச்சர்ன்னு சொல்லக்கூடாதாம் ) தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அதிபுத்திசாலித்தனமான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.  
            பள்ளி மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனி பேருந்துகளை இயக்குவது என்றும், பள்ளி மாணவிகள் மேலாடையாக சால்வை அணியக்கூடாது என்றும், இனி  மேல்-அங்கி (overcoat) தான் அணிய வேண்டும் என்றும், (நல்ல வேலை பள்ளி ஆசிரியைகளுக்கு சொல்லவில்லை)  மாணவர்களும், மாணவிகளும் ஒருவரோடு ஒரூவர் உரையாடிக்கொள்வது தடை செய்யப்படும் என்றும், பள்ளிகளில் செல்போன்கள் உபயோகிப்பதை தடை செய்யப்படும் என்றும் அக்கூட்டத்தில் முடிவெடுத்து  நாங்களும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கிறோம் என்று காட்டிக்கொண்டார்கள். இவைகள் அனைத்தும் வெறும் ஆண்கள் மட்டுமே எடுத்த முடிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது. 
            முதலில் இது போன்ற குற்றங்களுக்கு எதிரான முடிவுகளை  அமைச்சரும், தலைமையாசிரியர்களும் மட்டுமே மூடிய அறைக்குள் கூடி எடுப்பது என்பது சரியாக இருக்காது. இது சமூகம் சம்பந்தபட்ட பிரச்சனை. பள்ளிக்கூடப் பிரச்சனை அல்ல. அண்மையில் புதுவையில் நடந்த சம்பவம் என்பது பள்ளிக்கூடத்தில் நடந்த சம்பவம் அல்ல. பள்ளி விடுமுறை நாளில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பள்ளிக்கு வெளியில் தனி வகுப்புக்கு சென்ற போது நடந்த சம்பவம். அப்படியென்றால், அந்த பெண் பள்ளிக்கு வெளியில் தனி வகுப்பிற்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏன் வந்தது...? அதைப் பற்றியல்லவா அந்த அறிவு ஜீவிகளின் கூட்டத்தில் பேசியிருக்கவேண்டும். ''நீங்க பள்ளிக்கூடத்துல பாடத்தை ஒழுங்கா சொல்லிக்கொடுத்திருந்தா அந்தப் பொண்ணு ஏன் வெளியில தனி வகுப்பிற்கு செல்லவேண்டும்'' என்ற கேள்வியை அந்த கல்வி அமைச்சர் என்று சொல்லக்கூடியவர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தலைமையாசிரியர்களை நறுக்கென்று கேட்டிருக்க வேண்டாமா...? பள்ளிக்காவது பெண்கள் கூட்டமாக வருகிறார்கள், கூட்டமாக செல்கிறார்கள். ஆனால் தனி வகுப்பிற்கு அப்படி இல்லையே. அப்படியென்றால் உண்மையிலேயே பெண்கள் மீது அக்கறையுள்ள அரசாக இருந்தால் பள்ளிக்கு வெளியே நடத்தப்படும் தனி வகுப்புகளை தடை செய்திருக்க வேண்டாமா...? அப்படி நடத்தப்படும் தனி வகுப்பிகள் தடை செய்யப்படும் என்று சொல்லுகிற தைரியம் அரசிற்கு இருக்கிறதா...? பள்ளியில் பாடத்தை சரியாக நடத்தாமல், வெளியே தனி வகுப்புகளை நடத்தி கொள்ளையடிக்கும் ஆசிரியர்களை வீட்டிற்கு அனுப்பவேண்டாமா...? அப்படி அனுப்புகிற தைரியம் தான் அமைச்சருக்கு இருக்கிறதா...? இனியாவது ஆசிரியர்கள் எல்லோரும் உண்மையாகவும், நேர்மையாகவும், சீரியமுறையிலும் மாணவ - மாணவியர்களுக்கு சொல்லிகொடுங்கள் என்று ஆசிரியர்களிடம் கை நீட்டி கட்டளையிடும் தைரியம் புதுச்சேரி அரசிற்கு இருக்கிறதா...? என்று சிந்தித்துப் பாருங்கள்.
          பள்ளிக் குழந்தைகள் மட்டும் உடம்பை மூடிக்கொண்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமா...? இன்றைக்கு திரைப்படங்களிளும், தொலைக்காட்சிகளிலும், விளம்பரங்களிலும் கொள்ளை இலாபம் பெறுவதற்காக அதில் நடிக்கும் பெண்களின்  ஆடைகளை குறைத்துக் காட்டுகிறார்களே.  இது போன்ற காட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று ஏன் முடிவெடுக்கவில்லை. அதுமட்டுமல்ல மேல் அங்கி போட்டால் இது போன்ற குற்றங்கள் குறைந்து விடுமா...? பாலியல் வன்கொடுமை என்பது பள்ளி மாணவிகளுக்கு மட்டும் நடப்பதில்லை. வீட்டிலிருக்கும் சிறுகுழந்தைகளுக்கும், வயதான பெண்மணிகளுக்கும் நடைபெறுகிறதே அதற்கு என்ன செய்வது...? பிறந்த சிறு பெண் குழந்தை முதல் வயதான பெண்மணிகள் வரை  இனி தலை முதல் பாதம் வரை உடலை  மறைத்து ஆடை அணிய வேண்டும் என்று அரசு சொல்லுமா..?
          குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்காமல், பாதிக்கப்பட்டவர்களுக்கே மேலும் பாதிப்பை உண்டுபண்ணுகிற வேலையைத் தான் அரசு செய்கிறது. 
           புதுச்சேரி அரசு இத்தனை முடிவுகளை எடுத்ததற்கு பதிலாக சிம்பிளா ஒரே ஒரு முடிவை மட்டும் எடுத்திருக்கலாம். இனி மாணவர்கள் (ஆண்கள் மட்டும்) டிரஸ் பண்ணிக்கிட்டு, ஸ்கூல் பேக்கை தோளில் மாட்டிகிட்டு, செருப்பை காலில் போட்டுக்கிட்டு வீட்டிலிருந்து கிளம்பும் போதே கருப்புத் துணியால கண்ணைக் கட்டிவிட்டு, ரெண்டு கையையும் பின்னால கட்டிவிட்டுட்டு  தினமும் பள்ளிக்கு வந்துட்டுப் போக வேண்டியது என்று சொல்லியிருக்கலாம். 
            நல்லாத் தான் சிந்திக்கிறாங்கைய்யா நம்ப ஆளுங்க....!
           
      புதுச்சேரி கல்வி அமைச்சருக்கும், கல்வியாளர்களுக்கும் சில ஆலோசனைகளை முன் வைக்கிறேன்.

1. பள்ளி அல்லது கல்லூரிப் பெண்களை ''மூடி'' வைக்கும் சிந்தனையை முதலில் ஒழித்துக்    
    காட்டுங்கள்.

2. திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் விளம்பரங்களில் பெண்களை போகப்பொருளாக  
    காட்டுவதற்கு  பெண்கள் மீது திணிக்கப்படும் ஆடை குறைப்பை தடை செய்யுங்கள்.  

3. பள்ளிப் பாடங்களில் பெண் விடுதலை மற்றும் பெண்ணுரிமை பற்றியும் அதற்காக 
   போராடியவர்கள் பற்றியும்  கட்டாயமாக  இணைத்திடுங்கள்.

4. இன்று வரையில் பாடப் புத்தகத்திலிருக்கும் பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தும் 
   ஐம்பெரும்  காப்பியங்களை நீக்கி விடுங்கள். அதன் பெருமைகளை பேசுவதை  
   நிறுத்திக்கொள்ளுங்கள்.

5. பாரதியார் மற்றும் பாரதிதாசன் போன்ற அண்மைக்கால கவிஞர்கள் பெண்களை போற்றி 
    எழுதிய     பாடல்களையும் கட்டுரைகளையும் பாடத்திட்டத்தில் சேருங்கள்.

6. கல்வி வணிகமயத்தால் பள்ளிக்கூடத்திலிருந்து ஒழித்துக்கட்டப்பட்ட ''நற்போதனை 
    வகுப்பு''     (moral class) மீண்டும் பள்ளிக்கூடத்தில் மாணவ - மாணவியர்களுக்கு  
    அளித்திடுங்கள்.     அந்த பள்ளிக்கூட நாட்களில் நடத்தப்படும் அந்த வகுப்புகள் 
    தான் மாணவர்களிடையே      தனிமனித ஒழுக்கத்தையும்,     நல்லப்     
    பண்புகளையும் வளர்க்கும். இந்த வகுப்பு தற்சமயம் பள்ளிக்கூடங்களில்
    பார்க்க முடியாததால் தான் இது போன்ற தனிமனித ஒழுக்கமில்லாத மனிதர்களை  
    பார்க்கவேண்டியிருக்கிறது.    பள்ளிக்கூடங்கள்  பாடங்களைத் தவிர நல்ல  
    போதனைகளை  தராததால் தான் பையன்கள் பெண்களை  பலாத்காரம்
    செய்கிறார்கள்   அல்லது ஆசிரியர்களுக்கு எதிராக கத்தியை தூக்குகிறார்கள்.

7. இது ஆடைகளை சீர்படுத்துவதற்கு பதிலாக பள்ளிகளையும், பாடங்களையும் 
    சீர்ப்படுத்துங்கள்.     மாணவர்கள் தானாக நல்லொழுக்கத்துடனும், நற்பண்புகளுடனும் 
    வளரூவார்கள். ஒரே பள்ளியில் படித்தாலும்,     ஒரே பேருந்தில் சென்றாலும்,  
    பக்கத்திலேயே உட்கார்ந்து சென்றாலும் வித்தியாசமின்றியும் விரசமின்றியும்
    பழகுவார்கள்.

8. கடைசியாக ஒரு ஆலோசனை அரசு எந்த முடிவை எடுத்தாலும், கல்வியாளர்களை மட்டும் 
    கலந்தாலோசிக்காமல்,     முற்போக்கு சிந்தனையாளர்களையும், உளவியல்  
    ஆலோசகர்களையும், சட்ட நிபுணர்களையும், பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்களையும் 
    இணைத்த ஒரு குழு  அமைத்து அவர்கள்     தரும் ஆலோசனைப்படி முடிவெடுப்பது என்பது
    நல்லது. இல்லையென்றால்    பாதிக்கப்பட்டவர்களே      மேலும் பாதிப்படைவார்கள்
    என்பதை அரசு முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.