டி . கே. ரங்கராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டி . கே. ரங்கராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 டிசம்பர், 2012

அரசின் முறையற்ற செயல்கள் — நாடகம் முடிந்தது..! அரிதாரம் கலைந்தது...!!


 கட்டுரையாளர் : தோழர். டி . கே. ரங்கராஜன், எம்.பி.,         
      
    நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவாதம் என்பது சற்று மாறுபட்டதாக இருக்கும். ஆகவேதான், இதற்கு ''மூத்தோர் அவை'' என்று பெயர். மாநிலங்களின் சார்பாக பிரதிநிதித்துவப் படுத்தப்படக்கூடியவர்கள் மட்டுமல்லாமல், அறிவு ஜீவிகள், விஞ்ஞானிகள், முதலாளித்துவ அமைப்பைச் சார்ந்திருக்கக்கூடிய பிரதிநிதிகள் என்று பலரும் நியமன உறுப்பினர்களாகவும் அமரக்கூடிய இடம். அரசியலில் ஓய்வு பெற்றவர்களுக்கும் கூட இங்கே இடம் உண்டு. 
            இந்தப் பகுதியை வாசகர்கள் படிக்கும்போது மாநிலங்களவையிலும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு தொடர்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் முழுமையாக நுழைவதற்கான ஒப்புதலை ஐமுகூ அரசு பெற்று விடும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுத்தான், மாநிலங்களவையிலும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விவாதங்கள் நடக்கத் துவங்கி இருக்கிறது. பிரதமர் பத்திரிகையாளர்களைப் பார்த்துப் பேசுகிறபோது மாநிலங்களவையிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். அதற்குப் பிரதான காரணம், ஐமுகூ அரசை ஆதரிக்கக்கூடிய மாயாவதி, சமாஜ்வாதிக் கட்சியின் சார்பில் உள்ள 15 வாக்குகளையும் ஆளும் கட்சிக்கு அளிப்பதாக அவர் தெளிவாகக் கூறிவிட்டார். மாநிலங்களவையில் மாயாவதி பேசுகிறபோது, பிரதானத் தாக்குதல் மதவாதத்தை எதிர்த்து, பாஜகவை விமர்சித்து, மதச்சார்பற்ற தன்மையில் தனக்கு இருக்கக்கூடிய உறுதியைக் காட்டிக் கொண்டார். 
          மாநிலங்களவையில் இந்த விவாதத்தை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கி வைத்தது. அதனுடைய தலைவர் வி. மைத்ரேயன் தங்களுடைய அஇஅதிமுக, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை ஏற்றுக்கொள்ளாது என்றும், ஐமுகூ ஒரு சிறுபான்மை பிரதிநிதிகளைக் கொண்ட ஓர் அரசு என்றும், இதற்குப் பெரும் பான்மை இல்லாதபோது இது இப்படிப்பட்ட முக்கிய மான முடிவுகளை எடுக்க அருகதை இல்லை என்றும், தமிழகத்தில் அஇஅதிமுக சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்காது என்றும் குறிப்பிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விவாதத்தில் கலந்து கொண்டு பேசியபோது சீத்தாராம் யெச்சூரி, அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் குழு 2004 - இல் ஓர் அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது என்று கூறி அதில் கூறப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டினார்.
‘‘வால்மார்ட் வெற்றி என்பதன் பொருள், ஊழி யர்களுக்கு அளிக்கப்படும் ஊதியங்கள் மற்றும் பயன்களை வெட்டிக் குறைப்பது என்பதாகும், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவது என்பதும், நாடு முழுதும் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல் என்பதுமாகும். ஒரு வர்த்தக நிறுவனத்திற்கான வெற்றி என்பது தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் வயிற்றில் அடித்து வரக்கூடாது. லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட இத் தகைய குறுகியபார்வை கொண்ட உத்திகள், கடைசியில், நம் பொருளாதாரத்தின் அடித்தளத்தையே அழித்திடும்.’’ இவ்வாறு அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள அதே நிறுவனத்தைத் தான் நம் ஆட்சியாளர்கள் இந்தியாவிற்குள் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார். 
            சீத்தாராம் யெச்சூரி மேலும் கூறியதாவது:‘‘வால்மார்ட் நிறுவனம் என்பது இன்றைய தினம் உலகில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் கொள்ளை லாபம் ஈட்டுவதில் முதலாவதாகும். உலக வரலாற்றில் மிகவும் பிரம்மாண்டமான வர்த்தக நிறுவனமாகும். இன்றைய தினம் அதன் லாபம் ஓராண்டிற்கு 36 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். (இந்திய ரூபாயின் மதிப்பில் 154 கோடியே 51 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாகும்.) அதாவது ஒரு நிமிடத்திற்கு 21 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயின் மதிப்பில் 11 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய்களாகும்) இத்தகைய கம்பெனிகளைத்தான் இந்திய அரசு கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அடுத்து, வால்மார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நிலை என்ன? வால்மார்ட்டில் பணிபுரியும் 16 லட்சம் ஊழியர்களில் 1.2 விழுக் காடு ஊழியர்கள்தான் வறுமைக் கோட்டுக்கு மேல் வாழ்பவர்கள். மற்ற அனைவரும் அந்தந்த நாடு களில் உள்ள வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர் கள்தான். இத்தகையவர்கள் வருவதால் நாட்டில் வேலைவாய்ப்பு உயரும் என்று சொல்லிக் கொண் டிருக்கிறீர்கள். இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் தொடர்பாக சர்வதேச ஆய்வுகள் என்ன கூறுகின்றன? ஐ.நா. அமைப்பைச் சேர்ந்த நிறுவனமொன்று ஓர் ஆய்வினை மேற்கொண்டது. அது, ''ஒரு குறிப்பிட்ட அளவிலான பொருள்களை விற்பதற்கு கடை வீதியில் கூவி விற்போர் எனில் 18 பேர் தேவைப்படுகிறது, பாரம்பர்யமாக சிறிய அளவில் கடை வைத்து விற்பவர் எனில் 10 பேர் தேவைப்படுகிறது, சற்றே பெரிய கடை என்றால் 8 பேர் தேவைப்படுகறது, சூப்பர் மார்க்கெட் என்றால் 4 பேர் தேவைப்படுகிறது'' என்று அது குறிப்பிட்டுள்ளது.
             எனவே வேலைவாய்ப்பை அதிகரித்திட இது எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. தற்போதுள்ள கடைகளில் 3 நபர்கள் வேலை பார்க்கிறார்கள் எனில், அதே அளவுக்குப் பொருள்கள் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் 1.2 வேலையாட்களை வைத்துக்கொண்டு வேலையை முடித்து விடுவார்கள். இவ்வாறு இருக்கும் வேலையாட்களையும் சுருக்கத்தான் இது இட்டுச் செல்லும்.இரண்டாவதாக, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இது தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு கூறுவதென்ன? ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டில் கோக்கோ சாக்லேட் தயா ரிப்பதற்கான கோக்கோவை உற்பத்தி செய்திடும் விவசாயி சாக்லேட்டின் விலையில் 3.9 விழுக்காடு அளவிற்குத்தான் பெறுகிறார் என்றும் ஆனால் 34 விழுக்காடு அளவிற்கு லாபம் அதனை விற்பனை செய்யும் வணிகர்களுக்குச் செல்கிறது என்று கூறுகிறது. வால்மார்ட் நிறுவனம் வங்க தேசத்தில் உடை கள் தயாரித்திடும் ஆலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. 110க்கும் மேற்பட்டவர்கள் அதில் இறந்துபோனார்கள். இதுபோல் அதன் கீழ் உள்ள ஆலைகளில் எந்தப் பாதுகாப்பு முறைகளும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. எதைப்பற்றியும் அவர்கள் கவலைப்படுவதுமில்லை. ஒரே குறிக்கோள், கொள்ளை லாபம் ஈட்டுவது என்பது மட்டுமே. ஆயினும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இந்நிறுவனம் தொடர்பாக சர்வதேச அளவில் உள்ள அனுபவம் என்ன? சில்லரை வர்த்தகத்தில் பல்வேறு அங்காடிகள் இருக்கும்போது உள்ள விலையைவிட ஒரேயொரு வாங்குபவர், ஒரேயொரு விற்பவர் என்று வரும் பட்சத்தில், பொருள்களின் விலைகள் மிக மிக அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதுதான் சர்வதேச அனுபவமாகும். எனவே விவசாயிகளுக்கு நல்ல விலைகள் கிடைக்கும் என்று கூறுவதெல்லாம் கதையாகும்.’’ இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார். 
         இதற்குப் பிறகு, திமுக சார்பில் பேசிய திருச்சி சிவா, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்தும் அதன் பாதகமான விஷயங்களையும் சொல்லி முடித்தபின், ஆயினும் நண்பர்களை நாங்கள் கைவிட்டதில்லை என்றும், காங்கிரஸ் எப்போதுமே எங்களுடைய நண்பர்கள் என்றும் கூறி முடித்தார். பாஜக சார்பில் பேசிய அருண்ஜெட்லி, மாநிலங்கள் விரும்பினால் இந்தக் கடைகளைத் திறக்காமல் இருந்துவிடலாம் என்று சொல்வதெல்லாம் பொய் என்றார். இஷ்டம் இருந்தால் மட்டுமே மாநிலங்கள் இந்தக் கடைகளைத் திறந்துகொள்ளலாம் என்ப தெல்லாம் பொய் என்று கூறினார். உண்மை அல்லாத விஷயத்தை மத்திய அரசு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறது. இருநாடுகளுக்கு இடையே வரக்கூடிய ஒப்பந்தம்  என்பது இரு நாடுகளுக்கும் இடையே அமலாக்கப்பட வேண்டிய ஒன்று என்றும்,  இந்தியா போன்ற நாடுகளில் இந்த மாநிலம், அந்த மாநிலம் அமலாக்க மாட்டேன் என்று சொல்லவே முடியாது என்றும் கூறினார். நம்முடைய நாட்டில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரம் என்பது அவற்றால் நகராட்சி, பேரூராட்சி போன்றவற்றிற்கான சட்டங்களைக் கொண்டுவரலாமே ஒழிய, அதற்குமேல் அவற்றிற்கு அதிகாரங்கள் கிடையாது என்றார்.
                தற்போது நாட்டில் இயங்கும் சுபிக்சா, ரிலயன்ஸ், ஸ்பென்சர் போன் றவை எப்படி எல்லா மாநிலங்களுக்கும் செல்ல முடியுமோ அதேபோன்று வால்மார்ட்டும் இதர பன்னாட்டு நிறுவனங்களும் எல்லா மாநிலங்களுக்கும் செல்ல முடியும் அதை யாரும் தடுக்க முடியாது, அவ்வாறு தடுப்பதற்கான அதிகாரம் எந்த மாநில அரசுக்கும் கிடையாது என்றார். இவ்வாறு அருண்ஜெட்லி கூறும்போது பிரதமரும், ஆனந்த் சர்மாவும் புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அமெரிக்காவில் ஐரோப்பிய ஒன்றியத்திலும் விவசாயிகள் நஷ்டம் அடையாமல் இருப்பதற்கு அவர்களுக்கு மான்யங்கள் கொடுக்கப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் இருக்கும் மான்யங்களை ரத்து செய்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் கட்டுப்படியாகாமல் தவிக்கக்கூடிய நேரத்தில் இது நடக்கிறது.உண்மையிலேயே அரசு வரலாறு காணாத அளவிற்கு நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் பேசக்கூடிய வர்கள் சொல்கிறார்கள். நாட்டில் இறக்குமதியை விடவும் ஏற்றுமதி என்பது குறைவாக இருக்கிறது. அரசின் செலவுகள் மிகவும் ஊதாரித்தனமாகவும், அபரிமிதமாகவும் மாறி இருக்கிறது. இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டால் இந்த நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அந்த உண்மையை வெளிப்படையாகச் சொல்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடந்த எட்டரை ஆண்டுகளில் நாட்டினுடைய பொருளாதாரத்தை நவீன தாராளமயம் என்ற பெயரால் எந்த அளவிற்குப் பாழ்படுத்த முடியுமோ அந்த அளவிற்குப் பாழ்படுத்தி விட்டார்கள். இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியினரும் தனித்தனியே போராடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் ஒருமுகப்படுத்தப்படுவதன் மூலமாகத்தான் அர சுக்கு நிர்ப்பந்தத்தை மேலும் அதிகப்படுத்த முடியும்.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

இடிக்கப்பட்டது மசூதி மட்டுமல்ல...!

 கட்டுரையாளர் : தோழர். டி . கே. ரங்கராஜன், எம்.பி.,         

    1992- டிசம்பர் 6 சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு கறுப்பு நாள். 450 ஆண்டுகால பழமை வாய்ந்த வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதியை ஆர்எஸ்எஸ் பரிவாரம் இடித்துத் தள்ளி தரைமட்டமாக்கிய நாள். அன்று அந்த மதவெறிப்பிடித்த நாசகரக் கும்பல் இடித்துத்தள்ளியது மசூதி கட்டிடத்தை மட்டுமல்ல, இந்தியாவின் பாரம்பரியமான மதநல்லிணக்கத்தை, மக்கள் ஒற்றுமையை, மதச்சார்பின்மை கோட்பாட்டையே தகர்த்தனர். இதனால் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான தோழர் ஜோதிபாசு, இவர்களை காட்டுமிராண்டிக் கும்பல் என்று வர்ணித்தார். பாபர் மசூதி இடிப்பு என்பது ஒரே நாளில் நடந்தேறிய எதிர்பாராத நிகழ்வல்ல, ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் கொஞ்சம் கொஞ்சமாக வெறியேற்றி திட்டமிட்டே செய்த வேலை அது. அத்வானி நடத்திய ரதயாத்திரை, செங்கல் பூஜை, கரசேவை என தொடர்ச்சியாக கலவர விதைகளை தூவி நடத்தப்பட்ட அராஜக அறுவடை தான் பாபர் மசூதி இடிப்பு என்பது.
              பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் கலவரம் வெடித்தது. 1992 டிசம்பர் 6 - ஆம் தேதிக்கும் 13 - ஆம் தேதிக்கும் இடையில் நடந்த கலவரங்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 1200 பேர். மிகவும் பாதிக்கப்பட்ட மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிராவில் 259 பேர், குஜராத்தில் 246 பேர், உ.பி.யில் 201 பேர், ம.பி.யில் 161 பேர், ராஜஸ்தானில் 48 பேர், தில்லியில் 15 பேர், கர்நாடகத்தில் 73 பேர் என கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் பலி எண்ணிக்கை இதைவிட கூடுதலான எண்ணிக்கையிலேயே இருக்கும். குறிப்பாக இந்தியாவில் வர்த்தக தலைநகரம் என்று கருதப்படும் மும்பையில் நடந்த கலவரங்கள் பயங்கரமானவை. பாஜக மற்றும் சிவசேனை கட்சிகள் இதை முன்னின்று நடத்தின. சிவசேனை கட்சி என்பது தென்னிந்தியர்களுக்கு எதிராக குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக துவக்கப்பட்ட கட்சி. பிரதேச வெறியையும், மதவெறியையும் ஒருசேர நஞ்சு போல் கக்கி வளர்ந்தது இந்த கட்சி. பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து டிசம்பர் 8 - ஆம் தேதி சிவசேனை கட்சியின் தலைவர் பால்தாக்கரே தனது பத்திரிகையில் எழுதிய தலையங்கத்தில் “ராம ஜென்ம பூமிக்காக போராடி அதை கைப்பற்றிய இந்துக்களே வெற்றியாளர்கள். முஸ்லிம்கள் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். மீண்டும் அவர்கள் விஷமத்தனமான எழுச்சிக் கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை யென்றால் பாபரின் டூம்களுக்கு ஏற்பட்ட கதிதான் அவர்களுக்கும் ஏற்படும்” என்று எழுதியிருந்தார். 1992 டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மும்பையில் நடந்த வன்செயல்களில் 557 பேர் இறந்தனர். நாளொன்றுக்கு 125 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. சிவசேனை மற்றும் பாஜகவினர் முஸ்லிம்களை குறிவைத்து வேட்டையாடியதோடு அவர்களது கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களையும் சூறையாடினர். பெரும்பான்மை வகுப்புவாதம் சிறுபான்மை வகுப்புவாதத்தை ஊட்டி வளர்க்கிறது.
           இவை இரண்டுமே ஆபத்தானவை. நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தி ஒற்றுமையை சீர்குலைக்கக்கூடியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளது. 1993 - ஆம் ஆண்டு மார்ச் 12 அன்று மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. சிலமணி நேரங்களில் 10 இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் 257 பேர் மாண்டு போயினர். பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு சிவசேனை- பாஜக கூட்டணிக்கே பலனளித்தது. 1995 மார்ச் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத்தேர்தலில் இந்த கூட்டணி ஆட்சியை பிடித்தது. மும்பையில் நடந்த கலவரம் குறித்து விசாரிக்க நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் முந்தைய காங்கிரஸ் அரசு விசாரணை கமிஷனை அமைத்திருந்தது. 1995-ல் பாஜக - சிவசேனை கூட்டணி ஆட்சிக்கு வந்த நிலையில், அந்த கமிஷன் விசாரணையை சீர்குலைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர்.
         1998 பிப்ரவரி 16 - ஆம் தேதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. மும்பையில் நடந்த வன்செயல்களுக்கு சிவசேனை மற்றும் பாஜக தலைவர்களே பொறுப்பு என்று அந்தக் கமிஷன் குற்றம் சாட்டியது. காவல்துறை மற்றும் நிர்வாகமும் தமது பணியை பாரபட்சமின்றி நிறைவேற்றவில்லை என்றும் கமிஷன் கூறியது. மும்பையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தின் விளைவே தொடர் குண்டு வெடிப்பு என்றும் கமிஷன் கணித்தது. ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை அடிப்படையில் எந்தவித நடவடிக்கையும் மதவெறியர்களுக்கு எதிராக எடுக்கப்படவில்லை என்பது உறுத்தும் உண்மையாகும். அதுமட்டுமல்ல, பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கை அடிப்படையிலும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. நீதிபதி லிபரான் கமிஷன் 17 ஆண்டுகள் விசாரணை நடத்தி 2009ல் தான் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. பாபர் மசூதி இடிக்கப்படபோவது வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோருக்கு முன்பே தெரியும் என்று லிபரான் கமிஷன் கூறியிருந்தது. பாபர் மசூதி இடிப்பு என்பது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு சதி என்பதை லிபரான் கமிஷன் அம்பலப்படுத்தியிருந்தபோதும் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்த எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, சாத்வி ரிதம்பரா, பஜ்ரங்தள தலைவர் வினய் கத்யர், விஎச்பி தலைவர் அசோக் சிங்கால் ஆகியோர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யாரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவும் இல்லை. அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு கொண்டே கிடக்கிறது. இதனிடையே சர்ச்சைக்குரிய இடம் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் வழங்கிய தீர்ப்பு, நியாயத்தின் அடிப்படையிலானதாக இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகள் விமர்சித்தன. தற்போது சர்ச்சைக்குரிய இடம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது.
             அயோத்தியில் கோயில் கட்டுகிறோம் என்ற பெயரில் கலவரத்தைத் தூண்டி அதன்மூலம் அதிகாரத்தை பிடிப்பதே ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் நோக்கம். ராமர் பெயரைக்கூறி மசூதியை இடித்த அந்தக்கூட்டம் தற்போது அதே ராமர் பெயரைக்கூறி தமிழக மக்களின் 160 ஆண்டு கால கனவான சேதுக்கால் வாய்த்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வைத்துள்ளது. ராமாயணக் கதை நடந்ததாக கூறப்படும் பகுதி முழுவதும் இன்றைய மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இலங்கைக்கோ, இராமேஸ்வரத்திற்கோ ராமர் வந்ததாகவோ, இலங்கையில் சிறைப்பட்டிருந்த சீதையை மீட்க பாலம் கட்டியதாகவோ எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. இயற்கையாக உருவான மணல் திட்டை ராமர் கட்டிய பாலம் என்று கூறி, தமிழக மக்களுக்கு குறிப்பாக தென்மாவட்ட மக்களுக்கு நலம் தரும் திட்டத்தை முடக்கிப் போட்டுள்ளன மதவெறி சக்திகள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் மேடையாக துவக்கப்பட்டது தான் ஜன சங்கம் எனும் கட்சி. அதனுடைய இன்றைய அவதாரம்தான் பாரதிய ஜனதா. இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங்தளம் என்பதெல்லாம் அதனுடைய பல்வேறு பிரிவுகளேயன்றி வேறல்ல. இவர்களின் குருமாரான குருஜி கோல் வால்கர் கூறுகிறார் “பண்டைய இந்தியா என்பது இந்துஸ்தானம் தான். இந்தியா என்பது இந்துக்களின் நாடாகவே இருக்கமுடியும். இதை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே இந்தியாவில் இருக்க முடியும். இந்துக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றை ஏற்றுக் கொள்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு” இதன் பொருள் என்னவென்றால் சமஸ்கிருதம் மட்டுமே இந்துஸ்தானத்தின் மொழி. அவர்களது மொழியில் சொல்லப்போனால் அதுமட்டுமே தேவ பாஷை. தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளெல்லாம் நீஷ பாஷை. வருணாசிரம தர்மத்தின் அடிப்படையிலான சாதிய கட்டமைப்பையே அவர்கள் தர்மம் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தியா என்பது பன்முக பண்பாடு, மொழி, நாகரிகம் கொண்டது. கலாச்சார தேசியம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் பரிவாரம் மதவழி சிறு பான்மை மக்களின் பண்பாட்டு உரிமையை மட்டும் மறுக்கவில்லை. மொழி வழி பண்பாட்டையும் மறுக்கின்றனர். கோல்வால்கர் மேலும் கூறுகிறார்- ''இந்துஸ்தான பண்பாடு மற்றும் மொழியை ஏற்றுக் கொள்ளாதாவர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை. மற்றவர்கள் இந்து பண்பாட்டோடு தங்களை முற்றாக இணைத்துக்கொள்ள வேண்டும். தங்களது சொந்த இன, மொழி மற்றும் பண்பாட்டு அடையாளங்களை தக்கவைத்துக் கொள்ள அவர்கள் விரும்புவார்களேயானால் அவர்கள் அந்நியர்களாகவே கருதப்படுவர். அவர்கள் இந்து பண்பாடு, மொழி மற்றும் மதத்தை ஏற்க வேண்டும் அல்லது வெளியேற வேண்டும்'' இதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் சித்தாந்தம்.
வேறு வார்த்தைகளில் பாஜகவினர் இந்த கருத்தை கூறினாலும் அவர்களுடைய சித்தாந்த அடையாளமும் அதுதான். நம்முடைய இந்திய அரசியல் சாசனம் மதச்சார்பின்மையை அடிப்படையாக கொண்டது. ஆனால் இவர்கள் அதற்கு முற்றிலும் எதிரானவர்கள். எனவே தான் ஆட்சியிலிருந்தபோது அரசியல் சாசனத்தையே திருத்தி எழுதும் முயற்சியில் இறங்கினார்கள். பன்முக பண்பாடு, பல்வேறு மொழிகள் என்பதுதான் இந்திய ஒருமைப்பாட்டின் அடித்தளமாகும். பாபர் மசூதி இடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் உருண்டோடிட்டன. ஆனால் அவர்களது இடிப்பு வேலை இன்னமும் முடியவில்லை. காசி, மதுரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளை இடிக்க வேண்டுமென்று கொக்கரித்து வருகின்றனர். கலவரத்தை தூண்டிவிடுவதுதான், மக்கள் ஒற்றுமை யை சிதைப்பதுதான் அதிகாரத்திற்கு செல்லும் அதிகாரப்பூர்வ வழி என்பது தான் அவர்களது எண்ணம். மதவெறி, சாதி வெறி உள்ளிட்ட அடையாள அரசியல் உழைக்கும் மக்களை வர்க்கரீதியாக திரட்டும் முயற்சியை தடுத்துவிடும்.
       மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 - ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட “சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் குறித்த தீர்மானம்” மிகச் சரியாக இதைக் குறிப்பிடுகிறது. ''நமது மக்கள் மத்தியில் உள்ள மத உணர்வை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு வகுப்புவாத உணர்ச்சிகளை தூண்டிவிடுவதன் மூலம் தொழிலாளி வர்க்க மற்றும் சுரண்டப்படும் மக்களின் ஒற்றுமையை வகுப்பு வாதச்சக்திகள் நேரடியாக சீர்குலைக்கின்றன. எனவே வகுப்புவாதத்தை முறியடிப்பதற்கான ஒரு உறுதியான போராட்டம் இல்லாமல் நமது நாட்டில் புரட்சிகர முன்னேற்றம் என்பது சாத்தியமற்றது'' மதவெறி சக்திகளை பின்னுக்குத் தள்ளுவதன் மூலமே, அதன்மூலம் மக்கள் ஒற்றுமையை கட்டுவதன் மூலமே வர்க்க ரீதியான போராட்டத்தை முன்னெடுக்க முடியும். இத்தகைய தெளிவுடன் மதவெறி சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டியது அவசியமாகும்.    
நன்றி :