செவ்வாய், 22 மார்ச், 2011

இன்குலாப் ஜிந்தாபாத்.. 80 ஆண்டுகள்














வீரவணக்கம்

'' ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே - ஆனந்த சுதந்திரம்
அடைந்துவிட்டோமென்று '' - இது நாம் எதிர்காலத்தில் ஆனந்த சுதந்திரம் அடைந்துவிடுவோம் என்ற அன்றைய இளைஞன் பாரதியின் கனவு..

"பாலுக்காக அழும் குழந்தை
கல்விக்காக ஏங்கும் சிறுவன்
வேலைக்காக அலையும் இளைஞன்
வறுமையில் வாடும் தாய் -
இவர்கள் இல்லாத இந்தியாவே
உண்மையான சுதந்திர இந்தியா" - அனைவருக்கும் உணவு.. அனைவருக்கும் கல்வி.. படித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு - இவைகளை பெற்ற இந்தியாவே உண்மையான சுதந்திர இந்தியா என்று அன்றைய இளைஞன் மாவீரன் பகத் சிங் கண்ட கனவு..

1931- ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் நாளன்று மாலை 7.04 மணிக்கு தூக்குமேடையில் " இன்குலாப் ஜிந்தாபாத் " என்கிற இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும் புரட்சி முழக்கம் கடைசியாக ஒலித்து இன்றைக்கு 80 ஆண்டுகள் ஆகின்றன.
நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக.. மாவீரர்கள் பகத் சிங் , ராஜகுரு, சுகதேவ் போன்ற இளைஞர்கள் தன் சுவாசக் காற்றை தியாகம் செய்த
நாள் மார்ச் 23.. இன்று அவர்களின் நினைவைப் போற்றி அவர்கள் விட்டுச் சென்ற உண்மையான சுதந்திர இந்தியாவிற்கான போராட்டத்தை நாமும் தொடர்வோம்.
"இன்குலாப் ஜிந்தாபாத்"

ஞாயிறு, 20 மார்ச், 2011

ஊழல் பேர்வழிகளே! இளம் தலைமுறையினரை வீணாக்கி விடாதீர்கள்..






எதிர்வரும் தமிழக - புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான தேர்தலில் பதினெட்டு வயது நிரம்பிய நம் வீட்டு இளம்தலைமுறையினர் முதல்முறையாக அல்லது இரண்டாவது முறையாக
வாக்களிக்க உள்ளனர். ஊழல் பேர்வழிகளே.. ஏற்கனவே மக்களுக்கு அவர்களின் ஓட்டுக்காக பணத்தையும் , புடவை-மூக்குத்தி என பல்வேறு இலவசங்களையும் அள்ளிவீசியும், மது பாட்டில்களையும் பிரியாணி பொட்டலங்களையும் அள்ளிக்கொடுத்தும் வாக்காளர்களின் மனதை மாசுபடுத்தி வீணாக்கி வைத்திருக்கிறீர்கள். ஓட்டுக்காக அதே அஸ்திரத்தை புதிய வாக்காளர்களான இன்றைய இளம் தலைமுறையினர் மீது ஏவி அவர்களையும் வீணாக்கி விடாதீர்கள். அவர்கள் நீங்கள் தரும் பணத்தையும், இலவசங்களையும், மது பாட்டில் மற்றும் பிரியாணி பொட்டலங்களையும் எதிர்பார்த்து வாக்களிக்கவில்லை. நீங்கள் ஆட்சிக்குவந்தால் திரும்பத்திரும்ப மாறிமாறி ஊழல் செய்யாமல் நல்லாட்சித் தருவீர்கள் என்ற எதிர்பார்ப்போடுதான் அவர்கள் வாக்களிக்கிறார்கள். நாம் தான் கல்விக் கட்டணக் கொள்ளையில் சிக்கி கடன் பட்டு நினைத்ததை படித்தோம் அல்லது வசதியின்மை காரணமாக நினைத்த படிப்பை படிக்கமுடியாமல் கிடைத்ததை படித்தோம். ஆனால் நம் தம்பி - தங்கைகளுக்கு கட்டணக் கொள்ளையில் சிக்காத கல்வி கிடைக்கச் செய்வீர்கள் என்கிற எதிர்பார்ப்போடு தான் வாக்களிகிறார்கள். நீங்கள் தரும் காசுக்காக அல்ல.
தற்போது படித்துக் கொண்டிருக்கும் அல்லது படித்து முடித்த இளம் தலைமுறையினர் தனக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் நல்ல அரசை எதிர்பார்த்து தான் அவர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்கிறார்கள். நீங்கள் தரும் காசுக்காக அல்ல.
காசையும், இலவசங்களையும், மது-பிரியாணிப் பொட்டலங்களையும் கொடுத்து ஓட்டுக்களை பொறுக்கி தொடர்ந்து ஊழல்கள் செய்து பணம் சம்பாதிப்பதற்காகவே ஓட்டுப் பொறுக்கிகளாகவே வாழ்ந்து ஆட்சி செய்யத் துடிக்கிறீர்கள். நீங்கள் கொள்ளையடிப்பதற்காக இன்றைய இளம் தலைமுறையினரை பலியாக்கிவிடாதீர்கள். நீங்கள் கொள்ளையடித்த ஊழல் பணத்தை தேர்தலின் போது ஓட்டுக்காக நீங்கள் தரும் காசையும் இலவசத்தையும் வெட்கப்படாமல் வாங்கிக்கொண்டு ஒருவித மயக்கத்தில் உங்களுக்கு வாக்களித்துக் கொண்டிருக்கும் பழைய தலைமுறையினரை (முயற்சி செய்தும்) இனி திருத்த முடியாது.
ஆனால் பல்வேறு கனவுகளோடு படித்துக் கொண்டிருக்கும் அல்லது படித்து முடித்து வேலைக்காக அலையும் இளம் தலைமுறையினரை உங்கள் வலையில் சிக்கவைத்து அவர்களது எதிர்காலக் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுவிடாதீர்கள்.

சனி, 19 மார்ச், 2011

எதுவுமே தெரியாமல் வீணாக ஒரு பிரதமர் எதற்கு ?

மன்மோகன் சிங் தலைமையிலான இரண்டாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2009 - இல் பதவியேற்ற நாளிலிருந்து அடுக்கடுக்காய் ஊழல் குற்றங்கள் பயமில்லாமலும் கூச்சமில்லாமலும் நடந்த வண்ணம் இருக்கிறது.
1. காமன் வெல்த் விளையாட்டு ஊழல்
2. இரண்டாம் அலைக்கற்றை ஊழல்
3. மும்பை ஆதர்ஷ் வீட்டு ஊழல்
4. பிரச்சார் பாரதி ஊழல்
5. எஸ்-பேண்ட் அலைக்கற்றை ஊழல்
6. ஐ. பி. எல். கிரிக்கெட் ஊழல்
7. மருத்துவ கவுன்சில் தலைவர் ஊழல்
8. பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில்
எம்.பி -க்களுக்கு லஞ்சம் - ஊழல்
என ஊழலின் அணிவகுப்புகள் தான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் - தி . மு.
கூட்டணி அரசின் சாதனைகளாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்தேறிவருகின்றன.
இந்த ஊழல்களைப் பற்றி பாராளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரி கட்சிகளும் மற்ற எதிர் கட்சிகளும் பிரதமரிடம் கேள்வியெழுப்பினால், அதற்கு பிரதமரிடமிருந்து வரும் ஒரே பதில் " எனக்கு எதுவும் தெரியாது " என்பதுதான். எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்வதற்கு வீணாக ஒரு பிரதமர் எதற்கு ?
ஒரு பிரதமருக்கு என்னதான் வேலை ? அப்படி இந்த விஷயங்களை
எல்லாம் தெரிந்துகொள்ளாமல் என்ன வேலை செய்துகொன்டிருக்கிறார் ? அல்லது இந்தியப் பிரதமர் இந்தியாவிற்கு வேலை செய்யாமல் வேறு யாருக்கு வேலை செய்கிறார் ? யாரிடம் எஜமான விசுவாசத்துடன் வேலை செய்கிறார் ? என்பது தான் நமது கேள்விகள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் யாருக்கு வேலை செய்கிறார் என்றால்.. அமெரிக்காவிற்கு எஜமான விசுவாசத்தோடு வேலை செய்கிறார் என்பது தான் துரதுஷ்ட்டமான உண்மை. இந்த நாட்டை விற்பது.. பொதுத்துறைகளை விற்பது.. பங்குகளை விற்பது.. போன்ற புரோக்கர் வேலையைத்தான் செய்கிறாரெத் தவிர, மக்களுக்களை பற்றி துளிகூட சிந்திப்பது இல்லை. நம் தேசத்தின் மீது அக்கறை இல்லாத பிரதமர்.

வியாழன், 17 மார்ச், 2011

எதையும் செய்யத் துணியும் ஏகாதிபத்தியம் ! ( பகுதி - 3 )

சந்தேகங்கள் - 3 :
ஒரேக் கல்லில் மூன்று மாங்காய்...

மாங்காய் -1 : அரபு நாடுகளில் அமெரிக்காவிற்கு எதிராகவும் அமெரிக்காவிற்கு எஜமான விசுவாசம் காட்டி மக்களுக்கெதிராக ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் மக்கள் புரட்சி உருவாகியிருக்கிறது. எகிப்த்து நாட்டில் உருவான மக்கள் புரட்சிதான் மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக முதலில் உருவானது. அங்கே அமெரிக்க விசுவாசியாக இருந்துகொண்டு மக்களுக்கெதிராக ஆட்சி செய்த முபாரக்கை எகிப்த்து மக்கள் விரட்டி அடித்தார்கள். அங்கு கொழுந்து விட்டு எரிந்த மக்களின் எழுச்சியை முறியடிக்க முயற்சி செய்த அமெரிக்கா இறுதியில் தோல்வியைத் தான் தழுவியது. அந்த சிறுத் தீ தான் இன்று மற்ற அரபு நாடுகளில் தீப் பிழம்பாக பரவி வருகிறது. இன்றைக்கு லிபியா, துனிஷியா, குவைத்து, சௌதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி அமெரிக்க அடிவருடிகளாக திகழும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களின் கோபம் முன்னெப்போதும் இல்லாத ஒரு எழுச்சியாக கிளம்பியிருக்கிறது என்கிற உண்மையை அமெரிக்காவால் ஜீரணிக்கமுடியவில்லை. அதை தனது ராணுவபலத்தால் ஒடுக்கச் செய்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இந்த மக்கள் எழுச்சி என்பது மேலும் உலகம் முழுதும் பரவாமலிருக்க, உலகமக்களை திசைத்திருப்பி விடுவதற்கு இந்த கடலுக்கடி அணுகுண்டு வெடிப்பு ( Underwater Nuclear Explosion ) நடந்திருக்குமோ..
என்பது தான் எனது சந்தேகம். இந்த சந்தேகம் காரணமாகத்தான் நாம் எளிதாக புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் பகுதி - 1 யும் பகுதி - 2 யும் எழுதினேன். அவை இரண்டையும் படித்தால் தான் இந்த பகுதி - 3 புரியும். இப்போது புரிகிறதா தனக்கு லாபம் கிடைக்குமென்றால் எதையும் செய்யத்துணியும் ஏகாதிபத்தியம்..

மாங்காய் - 2 : ஏன் கடலுக்கடி குண்டுவெடிப்பை ஜப்பான் பகுதியில் நடத்தவேண்டும். ஹீரோஷீமா - நாகசாகி ஆகியப்பகுதிகளில் குண்டுவீசப்பட்டு அமெரிக்கவால் நாசப்படுத்திய பின் ஜப்பான் சீர்குலைந்துவிடும் என்பது தான் அன்று அமெரிக்காவின் எதிர்பார்ப்பு. ஆனால் இன்று நிலைமை தலைகீழாய் போய்கொண்டிருக்கிறது. ஜப்பானோ அந்த நிகழ்வை அடுத்து நொடிந்து போகாமல் அதையே ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இன்றைக்கு அறிவியல் தொழில்நுட்பத்திலும் பொருளாதார வளர்ச்சியிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை நோக்கி போய்கொண்டிருக்கிறது. ஹீரோஷீமா - நாகசாகியிலும் குண்டுவீசப்பட்ட அடிசுவடே தெரியாமல் தலைகீழான வளர்ச்சி கண்டிருக்கிறது. இதையும் அமெரிக்காவால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. ஹீரோஷீமா - நாகசாகி நாசமாக்கியதற்கு பிறகும் இன்று ஜப்பான் அமெரிக்காவின் நேச நாடாகத்தான் விளங்கிவருகிறது. அதன் ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் நண்பர்களாகத்தான் இருந்துவருகிறார்கள்.
இருந்தாலும் உறவாடிக்கெடுக்கும் தன் இயற்கையான குணத்தை அமெரிக்கா இங்கே காட்டி இருக்கிறது என்பது நம் சந்தேகம். இப்போது புரிகிறதா.. தனக்கு லாபம் கிடைக்குமென்றால் மனிதக் குலமே அழிந்தாலும் அது பற்றி கவலை படாது எதையும் செய்யத் துணியும் ஏகாதிபத்தியம்.

மாங்காய் - 3 : சீனா.... ! ஆம் சீனாவின் வளர்ச்சியை அமெரிக்கவால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அதுவும் இயற்கை வளங்கள், பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், ஆயுதம், இராணுவம் போன்றவற்றில் உலகில் எந்த நாடாவது தனக்கு சமமாகவோ தன்னைவிட அதிகமாகவோ முன்னேற்றம் அடைந்தால் அமெரிக்காவிற்கு கோபம் வரும்.
அந்த வளரும் அல்லது வளர்ந்த நாடுகளை சின்னபின்னமாக்கத் துடிப்பது அமெரிக்காவின் இயற்கையான குணாம்சம். அந்த அடிப்படையில் தான் சீனாவின் மீது அவ்வளவு எரிச்சல். சீனாவின் பொருளாதார வளர்ச்சியை அதனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மற்ற சிறிய நாடுகளோடு வீரமாக ராணுவ தாக்குதல் செய்வதுபோல் சீனாவுடன் மோதுவதற்கு அமெரிக்காவிற்கு தைரியமில்லை. சீனாவோடு மோதுவதற்கு இந்தியாவை தூண்டுவது போன்ற சின்னத்தனமான வேலைகளையும் ஒருப்பக்கம் செய்துகொண்டிருக்கிறது.
அதே சமயம் சீன பொருளாதாரத்தை முடக்குவதற்கான வேலைகளை தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்கிறது. அனால் அதில் வெற்றிகாண முடியவில்லை. சீன பொருளாதாரத்தை முடக்குவதற்கான தற்போதைய முயற்சி. அதை பல ஆண்டுகளாக செய்துவருகிறது. அது என்னவென்றால்... இந்தியாவின் வலது பக்கத்திலிருக்கும் அரபு நாடுகளிலிருந்து தினமும் எண்ணைக்கப்பல் இந்திய - இலங்கை கடற்பகுதி வழியாக சீனா செல்கிறது. பெரும்பாலும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எண்ணைக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அதனால் அமெரிக்கா அந்த எண்ணைக்கப்பல் போக்குவரத்தை முடக்கினால் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கிவிடலாம் என்று கணக்கு போடுகிறது. எனவே இலங்கையில் தனக்கு ஒரு ராணுவத்தளம் இருந்தால் இலங்கை கடற்பகுதியாக செல்லும் எண்ணைக்கப்பலை அந்த வழியாக போகவிடாமல் தடுக்கலாமென்று ஏகாதிபத்தியம் திட்டம் போட்டது. ஏற்கனவே கன்னியாகுமரியிலிருந்து 1500 கிமீ தொலைவிலுள்ள டியாகோ கார்ஷியா என்ற இங்கிலாந்து நாட்டிற்கு சொந்தமான தீவில் அமெரிக்காவின் ராணுவத்தளமும் ஆயுதகிடங்கும் ஏவுகணைதலமும் நிறுவப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் இந்தியா - சீனாவிற்கு அருகில் வரவேண்டும் என்று அமெரிக்கா துடித்தது. அதற்காக இலங்கையில் ஓரிடம் தேவைப்பட்டது. வடக்குப்பகுதியில் இருக்கும் திரிகோணமலை ஏகாதிபத்தியத்தின் கண்ணில் படுகிறது. அனால் அது எல் டி டி ஈ வசம் இருந்தது.
எனவே திரிகோணமலையை தன் வசப்படுத்த பிரபாகரனோடு நட்புகொண்டது. பிரபாகரனுக்கோ தன் "லட்சியம்" நிறைவேறுவதற்கு ஆயுதங்கள் தேவைப்பட்டது. அப்போது தான் அமெரிக்கா பண்டமாற்று முறையை பயன்படுத்தி திரிகோணமலையை தன்வசப் படுத்தி இந்தியாவையும் சீனாவையும் ராணுவரீதியாக மிரட்டலாமென்றும் சீனாவிற்கு செல்லும் எண்ணைக்கப்பல் போக்குவரத்தை நிறுத்திவிடலாமென்றும் ஏகாதிபத்தியம் கனவு கண்டது. அதற்காகத் தான் பிரபாகரனுக்கு ஆயுதங்களை வழங்கியது. காரணமில்லாமல் ஏகாதிபத்தியம் ஆற்றில் இறங்காது.
இந்த சூழ்நிலையில் தான் எல் டி டி ஈ - இலங்கை இராணுவம் இவைகளுக்கு இடையே நடந்த சண்டையின் போது தான் நாட்டை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு தான் சீனா இலங்கை இராணுவத்திற்கு ஆயுத உதவி செய்தது. அந்த சண்டையில் விடுதலைப்புலியினர் முற்றிலும் ஒழிக்கப்பட்டு சண்டை முடிவுக்கு வந்தது.
ஏகாதிபத்தியத்தின் கனவு பலிக்காமல் போய்விட்டது.
எனவே அடுத்து எண்ணைக்கப்பல் போகும் பாதையை அடைப்பதற்கு ஏகாதிபத்தியம் ஜப்பான் கடற்கரை பகுதியில் நடத்தியிருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால்.. தனக்கு லாபம் கிடைக்கும் என்றால் மனிதகுலமே அழிந்துபோனாலும் அதைப்பற்றி கவலைபடாது எதையும் செய்யத்துணியும் ஏகாதிபத்தியம்..!

செவ்வாய், 15 மார்ச், 2011

எதையும் செய்யத் துணியும் ஏகாதிபத்தியம் ! ( பகுதி - 2 )


சில சந்தேகங்கள் : 2
பகுதி - 1 ஒரு மர்ம கதைபோல இருக்கிறதா நண்பர்களே.. சோவியத் யூனியன் சிதறுண்டு போன பிறகு உலகில் நடக்கிற நிகழ்வுகளெல்லாம் மர்மமாகவே இருக்கின்றன என்பது தான் உண்மை. இது போன்ற பல சந்தேகங்களை எழுப்பும் போது நம்மை ஒரு பைத்தியக்காரன் போல் தான் பார்க்கிறார்கள். அதைப்பற்றி கவலை இல்லை. நமக்குள் எழும் பல சந்தேகங்களை ஆதாரங்களோடு இங்கே எழுதுகிறேன்.
2004 - இல் ஏற்பட்ட சுனாமியைப் பற்றி ஆஸ்ட்ரேலியா மற்றும் ரஷ்யா நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் அது இயற்கையாய் ஏற்பட்டது அல்ல என்றும் சுமித்திரா தீவில் அமெரிக்காவால் கடலுக்கடியில் நடத்தப்பட்ட அணுகுண்டு வெடிப்பே ( Underwater Nuclear Blast ) என்றும் சொல்கிறார்கள். வெடிக்கப்பட்ட அந்த அணுகுண்டின் சக்தி என்பது அமெரிக்காவால் ஹீரோஷீமா - நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டுபோல் 32,000 மடங்கு சக்தி வாய்ந்தது என்கிற விவரத்தையும் சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இன்னொரு பயங்கரத்தையும் சொல்லியிருக்கிறார்கள். 2004 - லில் நடத்தப்பட்ட Underwater Nuclear Blast என்பது சென்னைக்கு அருகில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்டது என்கிற மிகப்பெரிய பயங்கரத்தையும் சொல்லி இருகிறார்கள். இப்போது ஜப்பானில் நிகழ்ந்திருக்கும் சுனாமியோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொது நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
சாதாரணமாக இந்தியாவில் ஒரிசா கடலோரங்களிலும், ஜப்பான் நாட்டு கடலோரங்களிலும் சுனாமி என்பது நம் பகுதிகளில் வரும் புயல் - வெள்ளம் போல் ஒரு இயற்கை சீற்றம் தான். மக்களை பொறுத்தவரையும் அது வழக்கமான ஒன்று தான். ஆனால் இந்த சுனாமி என்பது நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கும் போதே நமக்கு ஒரு மாதிரியான திகில் உண்டாகிறது. கோபத்தோடும், ஆக்ரோஷத்தொடும் கடல் நீர் பொங்கி எழுந்து ஊருக்குள் ஆர்பரித்து வருவதைப் பார்த்தால் அது இயற்கையாய் வருவது போல் தெரியவில்லை. அதில் தான் நமக்கு சந்தேகம் வருகிறது.
உறவாடி கெடுக்கும் குணம் என்பது அமெரிக்காவிற்கு இயற்கையாகவே கூடப்பிறந்தது. ஒரு 500 ஆண்டுகாலம் கூட வரலாறு இல்லாத அமெரிக்கா அண்டை நாடுகளை அழித்தே சுகம் கண்டது. தனக்கு அடங்கி நடக்காத நாடுகளின் மீது போர் செய்து அந்த நாட்டை சின்னாபின்னமாக்கி நாசப்படுத்துவது அதன் இயற்கையான செயல். அதேப்போன்று தன்னை விட
முன்னேறும் நாடுகளை பார்த்து அதனால் பொறுத்துக்கொள்ளவும் முடியாது.
அந்த நாட்டோடு நட்பாய் பழகி நெருங்கி உறவாடி அந்த நாட்டை சூழ்ச்சியாலேயே அழித்துவிடும் என்பது தான் நாம் இதுவரை பார்த்துவந்த உண்மை. ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று சொல்லுவார்கள். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அனால் அமெரிக்க புகுந்த நாடு உருப்படாது.
இந்தியாவில் அமெரிக்காவிற்கு விசுவாசம் காட்டக்கூடியவர்களே ஆட்சி செய்கிறார்கள். மக்கள் எதிர்த்தாலும் அமெரிக்காவோடு நெருக்கம் காட்டுகிறார்கள். அமெரிக்கா சொல்லும் மக்கள் விரோத தேசவிரோத செயல்களை செய்கின்ற அரசாங்கம் தான் இங்கே இருக்கின்றது. இருந்தாலும் இந்தியாவின் வளர்ச்சியை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை... ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், கட்டுமானங்களையும், அமைதியையும் குலைக்க வேண்டுமென்றால் அந்த நாட்டின் மீது போர் செய்யும்.. அல்லது புதியப் புதிய நோய்களை பரப்பிவிடும்.. அல்லது சுனாமி போன்று இயற்கையை நமக்கு எதிராக தூண்டிவிடும். இது தான் அமெரிக்காவின் இயற்கையான குணாம்சம்.
அதனால் தான் 2004 - அந்த சுனாமி நடத்தப்பட்டது. வெறும் சுனாமி மட்டும் உண்டாக்கி நாசப்படுத்தினால் போதுமா... அதில் போடப்பட்ட மூலதனத்திற்கு லாபம் வேண்டாமா.. அது தான் கிழக்கு கடற்கரைப் பகுதிகளை
அமெரிக்க முதலாளிகளுக்கு எழுதி கொடுக்கும் வேலையை மன்மோகன் அரசு எஜமான விசுவாசத்தோடு செய்து வருகிறது...! அங்கு அவர்கள் ஓட்டல்களை கட்டிக்கொள்வார்கள். சூப்பர் மார்கெட் வைத்துக்கொள்வார்கள். விமானதளத்தோடு டவுன்ஷிப்பை உருவாக்குவார்கள். இது எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு ஆபத்தும் காத்திருக்கிறது. அது என்னவென்றால் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட ரசாயனத் தொழிற்சாலைகளை இங்கே தொடங்குவார்கள். இப்போது புரிகிறதா.. தனக்கு லாபம் கிடைக்கும் என்றால் எதையும் செய்யத் துணியும் ஏகாதிபத்தியம்... ( இன்னும் வரும் )

வெள்ளி, 11 மார்ச், 2011

எதையும் செய்யத்துணியும் ஏகாதிபத்தியம் ! ( பகுதி - 1 )

சில சந்தேகங்கள் : 1
தனக்கு லாபம் கிடைக்கிறது என்றால் மனிதகுலமே அழிந்து போனாலும் கவலைபடாது எதையும் செய்யத் துணியும் ஏகாதிபத்தியம் என்பது சோவியத் யூனியன் சிதறுண்டு போன பிறகு இந்த உலகம் பார்க்கும் உண்மை..
கடந்த 2004 லிலும் கடந்த வாரமும் நிகழ்ந்த சுனாமி என்பது இயற்கையாக நடந்ததா என்கிற சந்தேகம் நமக்கெல்லாம் எழுகிறது...!
இதைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டுமென்றால் கடந்த கால நிகழ்வுகளை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
காற்று மண்டலத்திலும், பூமிக்கடியிலும் , கடலுக்கடியிலும் அணுகுண்டு சோதனை நடத்துவது என்பது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளுக்கு அந்த காலத்திலிருந்து புதிதல்ல. அமெரிக்கா கடைசியாக கடலுக்கடியில் நடத்திய அணுகுண்டு சோதனை என்பது 1958 - இல்
நடத்தப்பட்டது. மேலே உள்ளப்படத்தை பார்க்கவும். இது தான் 1958 - இல் அமெரிக்கா கடைசியாக கடைசியாக கடலுக்கடியில் நடத்திய அணுகுண்டு சோதனை (Underwater Nuclear Explosion). இதன் பிறகுதான் பூமிக்கு மேலேயும் கடலுக்கடியிலேயும் அணுகுண்டு சோதனை நடத்துவது என்பது பெரும் உயிர் சேதத்தை உண்டாக்குகிறது என்பதால் அண்டவெளியிலும், பூமிக்கு மேலும் மற்றும் கடலுக்கடியிலும் அணு ஆயுத சோதனை என்பதை தடை செய்யும் ஒப்பந்தம் ஒன்றில் 1963 ஆகஸ்ட் 5 -ஆம் தேதியன்று சோவியத் யூனியன் , அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சோவியத் யூனியனின் தலைநகரான மாஸ்கோவில் கையெழுத்திட்டார்கள். அதன் பிறகு 1963 அக்டோபர் 7 - ஆம் தேதியன்று அமெரிக்க வெள்ளைமாளிகையில் உள்ள ஒப்பந்த அறையில் அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ( மேலே உள்ள படத்தை பார்க்கவும் ). அதன் பிறகு 1963 அக்டோபர் 10 - ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் தான் ஜான் கென்னடிக்கு எமனாக அமைந்தது. மனித உயிர்கள் அழிவதைப் பற்றி கவலைப்படாத இரத்தவெறிபிடித்த போர் வெறிபிடித்த அமெரிக்க உளவுத் துறையான சி ஐ ஏ தன் சொந்த நாட்டின் ஜனாதிபதி ஜான் கென்னடியை தேசத்துரோகி என்று குற்றம்சாட்டி 1963 நவம்பர் மாதம் 22 - ஆம் தேதியன்று துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டார்கள். இதை இந்த உலகம் மறந்திருக்க முடியாது. ( மேலும் தொடரும் )

செவ்வாய், 8 மார்ச், 2011

இதற்கு பேர் தான் பத்திரிக்கைச் சுதந்திரமா ?


இன்றைக்கு இந்தியாவில் தொலைக்காட்சியானாலும் பத்திரிக்காயயானாலும் - அவர்களின் போக்கு என்பது நடுநிலை என்கிற பத்திரிகை தர்மத்த்கிற்கு விரோதமாக தான் இருக்கிறது. தொலைக்காட்சி முதலாளிகளும் பத்திரிக்கை முதலாளிகளும் ஒரே மாதிரியான போக்கைத்தான் கடைபிடிக்கிறார்கள். அவர்களுகைய ஆசையை, எதிர்பார்ப்பை - அவர்களின் தேவைக்குத் தகுந்தாற்போல் உண்மை செய்திகளை மறைப்பதும், சில செய்திகளை மிகைப்படுத்தி காட்டுவதுமான கருத்துத் திணிப்பை செய்கின்றனர்.
இந்த இரண்டாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் இடதுசாரிகள் பற்றிய செய்திகளை திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யும் வேலையை செய்து வருகிறார்கள். மக்கள் நலன் - தேச நலன் இவைகளுக்காக எப்போதும் பாராளுமன்றத்திலும் வீதிகளிலும் போராடிக்கொண்டே இருக்கும்
இடதுசாரிகள் பக்கம் மக்களின் கவனம் சற்றும் திரும்பிவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அதே சமயத்தில் இடதுசாரிகளுக்கு எதிரான செய்திகளை மிகைப்படுத்திக் காட்டுவதிலும் குறைவில்லை. இப்படிதான் பத்திரிகைச் சுதந்திரம் என்பதை தங்கள் வசதிக்கேற்ப முரண்பாடுகளோடு
பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஜனநாயகத்தையே கேளிக்கூத்தாக்கியிருக்கிறார்கள். பிரதமர் மன்மோகன்சிங் ஆணைப்படித்தான் செய்திகளை முடக்குவதும் வெளியிடுவதுமான வேலைகளை இன்றைக்கு ஊடகங்கள் செய்துகொண்டிருக்கின்றன.
சென்ற 2009 ஆம் ஆண்டு இறுதியில் ஆசியான் ஒப்பந்தத்திற்கு எதிராக கேரளா மாநிலத்தை ஆளும் இடது முன்னணி நடத்திய - கின்னஸ் சாதனை புரிந்த மிகப்பெரிய, நீண்ட, அடர்த்தியான மனிதச்சங்கிலிப் போராட்டத்தை தொலைக்காட்சி முதலாளிகளும் பத்திரிக்கை முதலாளிகளும் திட்டமிட்டே செய்தி வெளிவராமல் மறைத்துவிட்டனர். இதற்கு பேர் தான் பத்திரிக்கை சுதந்திரமா..?
அதேப்போல் தான் கடந்த பல மாதங்களாக ஒரு மெகா தொலைக்காட்சித்தொடர் போல் நீண்டுகொண்டேப்போகும் 2G-ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பான பிரச்சனைகளில் - கடந்த 2007 ஆம் ஆண்டிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைக்குழு உறுப்பினர் தோழர். சீத்தாராம் எச்யூரி அவர்கள் ஊழல் பற்றி விசாரணை நடத்தும்படி பிரதமருக்கு இரண்டுமுறை கடிதமெழுதியதிலிருந்து இன்றுவரை பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையை வலியுறுத்தி பாராளுமன்றத்திலும் வெளியிலும் இடதுசாரிகள் தொடர்ந்து போராடிவரும் செய்திகளை ஊடகங்கள் திட்டமிட்டே மறைத்ததை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதேசமயத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில்
ஊழலை ஒழிப்பதற்காகவே அவதாரம் எடுத்ததுபோல் மக்களிடம் காட்டிக்கொள்ளும் ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் பாரதிய ஜனதா கட்சி தனது அரசியல் ஆதாயத்திற்காக பாராளுமன்றத்தில் கூச்சல் - குழப்பத்தை ஏற்படுத்திய போது அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து செய்திகளாய் வெளியிடப்படுகிறது என்றால்
இதிலிருந்து பத்திரிகை- தொலைக்காட்சி முதலாளிகளின் எதிர்பார்ப்பு தான் என்ன..? காங்கிரஸ் கட்சிக்கு மாற்று பா. ஜ. க தான் என்கிற தவறானக் கருத்தை மக்களிடம் உருவாக்குவதும், தப்பித்தவறிகூட மக்களின் கவனம் இடதுசாரிகள் பக்கம் திரும்பிவிடாமல் பார்த்துக்கொள்வதும் தான் அவர்களின் ஜனநாயகக் கடமையாக செய்துவருகிறார்கள். இதற்கு பேர் தான் பத்திரிக்கை சுதந்திரமா..?
சமிபத்தில் பிப்ரவரி 23 ஆம் தேதியன்று புதுடெல்லியில் பாராளுமன்றம் நோக்கி நடத்தப்பட்ட பாராளுமன்றத்தையே அதிரச்செய்த தொழிலாளர்கள் பேரணியை புதுடெல்லி மக்களே வியந்து பார்த்தனர். ஆனால் நாட்டின் எந்த மூலைக்கும் அந்தச் செய்தி சென்றுவிடாமல் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் பார்த்துக்கொண்டன. ஒரு பெட்டிச்செய்தியாகக்கூட வெளியிடவில்லை என்பது தான் உண்மை. அதே சமயத்தில் பிரபுதேவா-நயன்தாரா, நித்தியானந்தா-ரஞ்சிதா என பல பேருடைய படுக்கையறைகளை எட்டிப்பார்க்கும் ஊடகங்கள் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு முக்கித்துவம் தருவதில்லை என்பது துரதுஷ்டமானது.
அதேசமயம் இடதுசாரிகள் மீது சேற்றைவாரி அடிப்பதிலும் தவறுவதில்லை. மேற்குவங்கம் சிங்கூர்-நந்திகிராமில் மாவோயிஸ்ட் - திரிணமுல் கூட்டத்தினர் இடதுசாரி அரசுக்கு எதிராக திட்டமிட்டு நடத்திய வன்முறைகளை வரிந்துகட்டிக் கொண்டு ஊடகங்கள் காட்டுகின்றன. இதற்கு பேர்தான் பத்திரிக்கைச் சுதந்திரமா..?
ஊடகங்களின் இந்தக்குணத்தை கண்டிப்பாக மாற்றிக்கொள்ளவேண்டும்.
நடுநிலைத் தவறிய ஊடகங்களின் பொருப்பற்றப்போக்கை சரிசெய்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் ஆட்சியாளர்கள் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பறிக்காது என்பதற்கும், ஊடகங்களின் குரல்வளையை நெறிக்காது என்பதற்கும் உத்திரவாதமில்லை. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி
ஆட்சியை ஊடகங்கள் மறந்திருக்க முடியாது. அன்றைக்கும் பத்திரிக்கைச் சுதந்திரத்தை காப்பதற்காக மார்க்சிஸ்ட் கட்சியினர் அடக்குமுறைக்கும் அஞ்சாமல் போராடினார்கள். இன்றைக்கும் இடதுசாரிகள் வீதியில் இறங்கி போராடுவார்கள். அது அவர்களின் குணம்.

திங்கள், 7 மார்ச், 2011

உலக மகளிரை வாழ்த்துவோம்...



















உலகளவில் மகளிர்க்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் கடந்த நூறாண்டுகளாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு, இன்றைக்கு 101-வது மகளிர் தினத்தை வழக்கமான சடங்குகளுடனும் சம்பிரதாயங்களுடனும் மிகுந்த உற்சாகங்களுடன் கொண்டாடப்படுகிறது..
இன்று பல இடங்களில், பணிபுரியும் பெண்களும் குழு நடத்தும் பெண்களும் வண்ணப்புத்தாடைகள் உடுத்திகொண்டு , கோலப்போட்டி, சமையல் போட்டி என கொண்டாட்டம் களைகட்டுகிறது. மகளிர் தினம் என்பது கொண்டாட்டமல்ல... அது ஒரு போராட்டம் என்பதை நம் மகளிர் இன்னும் உணரவில்லையே என்பது வேதனையாகத்தான் இருக்கிறது.
பெண்கள் தாங்கள் பிறந்த காலம்தொட்டே போலியான பண்பாடுகள் மற்றும் கலாச்சாரங்களாலும், மனிதனின் படைப்புகளான மதம், சாதி மற்றும் கடவுள் போன்றவைகளாலும், தேவையற்ற மூடபழக்கங்களாலும், வீணான சம்பிரதாயங்களாலும், அர்த்தமற்ற சடங்குகளாலும், இவைகளை போதிக்கும் கல்விகளாலும், சமூகத்தாலும், ஊடகங்களாலும் உரிமைகளை இழந்த அடிமைகளாய் பன்படுத்தப்பட்டுவிடுகிறார்கள். மேலே சொன்ன அத்தனையும்
பெண்களின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் தடுக்கின்ற பாறைகளாய் குறுக்கே நிற்கின்றன. அவைகள் ஒழிந்தால் தான் பெண்களுக்கான உண்மையான உரிமைகள் கிடைக்கும்.. அந்த அடிமை விலங்கொடித்து உரிமைகளை பெறுவதற்கான போராட்டமாகவே இந்த நாளை நாம் பார்க்கவேண்டும்..
# பெண்கள் பிறப்பதற்கான உரிமைப்போராட்டமாக இந்த நாள் அமையவேண்டும்..
# பெண்கள் படிப்பதற்கான உரிமைப்போராட்டமாக இந்த நாள் அமையவேண்டும்..
# பெண்கள் வேலைக்கு செல்வதற்கான உரிமைப்போராட்டமாக இந்த நாள் அமையவேண்டும்..
# பெண்கள் வயிறார உணவருந்துவதற்கான உரிமைப்போராட்டமாக இந்த நாள் மாறவேண்டும்..
# பெண்கள் சுதந்திரமாய் கருத்துக்களை சொல்வதற்கான உரிமைப்போராட்டமாக இந்த நாள் மாறவேண்டும்..
# நச்சரிக்கும் வீட்டு வேலைகளை ஆணும் பெண்ணும் சமமாய் பகிர்ந்து செய்யும் சம உரிமைக்கான போராட்டமாக இந்த நாள் மாறவேண்டும்..
# 33% அல்ல 50% பெண்கள் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் ஆகிய
சட்டமியற்றும் இடங்களில் அமர்வதற்கான உரிமைப்போராட்டமாக இந்த நாள் அமையவேண்டும்..
சம உரிமையும், சம வாய்ப்பும், பெண்கள் முன்னேற்றமுமே மகளிர் தினத்தன்று நாம் உரக்க எழுப்பவேண்டிய கோரிக்கைகளாகும்..
பெண்களை போற்றுவோம்.. பெண்களை வாழ்த்துவோம்..
வாழ்க மகளிர் தினம்..

சனி, 5 மார்ச், 2011

ஊழலின் மொத்த உருவம் மன்மோகன் சிங்



மத்திய ஊழல் தடுப்பு ஆணையராக (cvc) பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டது முறைகேடானது என்று உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்ததுமட்டுமல்லாது, பிப்ரவரி 3 ஆம் தேதியன்று தாமஸ் நியமனத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் ஊழல் பேர்வழிகளை மட்டுமே தனது கூட்டாளிகளாக வைத்துக்கொள்ளும் மன்மோகன் சிங்கின் தலையில் மேலும் ஒரு குட்டு வைத்துள்ளது. இரண்டாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் லட்சணம் இது தான்.
கடந்த மே 2009-ல் தில்லுமுல்லுகள் செய்து ஆட்சிப்பொறுப்பேற்ற நாளிலிருந்து தறுதலைத்தனமான, தான்தோன்றித்தனமான ஒழுக்கக்கேடான மன்மோகன்சிங்கின் ஆட்சியில் ஊழலின் அணிவகுப்பு தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவரும் வெட்கமில்லாமல் நடமாடிக்கொண்டிருக்கிறார். ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஊழல் தடுப்பு ஆணையராக நியமிக்கக்கூடாது என்பது சிறு குழந்தைக்குக்கூடத் தெரியும். ஆனால் மன்மோகன்சிங் - . சிதம்பரம் கூட்டாளிகளுக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது என்பது தெரியவில்லை.
கேரள உணவுத்துறை செயலராக இருந்தபோது பாமாயில் இறக்குமதியில் ஊழல் செய்து ஊழல் வழக்கில் முக்கிய நபராக குற்றம் சாட்டப்பட்ட பி. ஜே. தாமஸ் மத்திய ஊழல் தடுப்பு ஆணையராக மன்மோகன்சிங் தலைமையிலான உயர்மட்டக்குழு பரிந்துரை செய்த போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால்
அதையும் மீறி நியமித்தது என்பது இந்த தேசத்திற்கு செய்த அவமானம். அதுமட்டுமல்லாமல், ஒரு ஊழல் குற்றவாளிக்கு பதவிப்பிரமாணம் செய்யவைத்ததன் மூலம் குடியரசுத்தலைவரையும் அவமரியாதை செய்திருக்கிறார்கள். பிரதமர் இது ஏதோ தெரியாமல் செய்துவிட்ட தவறுபோல் இந்த நிகழ்வுகளுக்கு தான் பொறுப்பேற்பதாக வெறும் வார்த்தையில் சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றுவிட முடியாது. தவறான ஒருவரை நேர்மையாக நடக்கவேண்டிய ஒரு பதவியில் நியமித்து இந்த தேசத்திற்கும் குடியரசுத்தலைவருக்கும் அவமரியாதை செய்த பிரதமர் மன்மோகன் சிங்கும் உள்துறை அமைச்சர் . சிதம்பரமும் பதவி விலகவேண்டும் என்பதே இந்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.

செவ்வாய், 1 மார்ச், 2011

மக்களைப்பற்றி சிந்திக்காத பட்ஜெட்..



               ஏற்கனவே மக்கள் கடுமையான விலைவாசி உயர்வால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் விலைவாசியை கட்டுப்படுத்த
வக்கில்லாத மத்தியில் ஆளும் காங்கிரஸ் - தி மு க கூட்டணி  அரசு நேற்றைய தினம் 28.02.2011 அன்று பட்ஜெட் என்கிற பெயரில்  சாதாரண மக்கள் தலையில் மிகப்பெரிய பாறாங்கல்லை தூக்கிப் போட்டிருக்கிறது..உணவு , உரம் , எரிபொருள்  போன்றவற்றிற்கு இதுவரை அரசு அளித்துவந்த மானியத்தில் ரூ.20000 கோடி வரையில் வரும் நிதியாண்டில் வெட்டப்படுகிறது என்கிற அபாய அறிவிப்பை இந்த பட்ஜெட் கொடுத்திருக்கிறது.. 
             தற்போது உணவு, எரிபொருள் விலைகள் அதிகரித்ததன் மூலம் நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் , எரிபொருள், உணவு, உரம் ஆகியவற்றிற்கு அளித்துவந்த மானியத்தில் ரூ.2000 கோடியை குறைத்தது என்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கக்கூடியதாகும். உணவிற்கு அளித்துவந்த மானியத்தில் ரூ.27 கோடி குறைத்திருப்பது என்பது பொது விநியோகமுறையை சீர்குலைப்பதும், நாட்டின் உணவு பாதுகாப்பை கேள்விக்குரியாக்குவதும் தான் அரசின் நோக்கம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.   உணவுப்பாதுகாப்பு தொடர்பான ஒரு அர்த்தமுள்ள 
சட்டத்தை நிறைவேற்ற இந்த அரசிற்கு அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது.
               ஏற்கனவே மத்திய அரசு பெட்ரோல் - டீசல் விலைகளை தாறுமாறாக உயர்த்திக்கொண்டே போகும் சூழ்நிலையில் , எரிபொருளுக்கு அளித்து வரும் மானியத்தில் ரூ.15000 கோடி வரை வெட்டியிருப்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பிற்போக்குத்தனமான மக்கள் விரோத போக்கையே காட்டுகிறது. பெருமுதலாளிகள், பெரியப் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் வரிகளை ஏய்த்து அயல்நாட்டு வங்கிகளில் போட்டுள்ள கறுப்புப் பணத்தை 
நம் நாட்டிற்கு கொண்டுவருவதற்கான எந்தவொரு உருப்படியான திட்டமும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.
               காப்பீடு, வங்கி, ஓய்வூதியம் சம்பந்தமான சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்படும் என்கிற அபாய அறிவிப்பு அந்நிய மூலதனத்தை வரவேற்கவே தவிர நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ நல்லது செய்ய அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்..
                மொத்தத்தில் காங்கிரஸ் - தி மு க கூட்டணி அரசு அளித்துள்ள இந்த நிதி நிலை அறிக்கை என்பது தேசத்தின் சாதாரண மக்களுக்கு எதிரானது. 
அதே சமயத்தில் ரூ.88000 கோடி வரை பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகைகளை கொடுத்து சந்தோஷப்படுத்துகிற பட்ஜெட்.