நாடாளுமன்றத்தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாடாளுமன்றத்தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஏப்ரல், 2014

மனைவியைக் கைவிட்டு மறைத்த மோடி...!

          
                 பிரதமர் கனவில் மிதக்கும் நரேந்திர மோடி தன் மனைவியைக் கைவிட்டு மறைத்தது மட்டுமல்லாது,   45 ஆண்டுகளாக வாழ்வாதார உதவி கூட செய்யாமல் தவிக்கவிட்ட கொடுமை - இதை தேர்தல் ஆணையம் செவ்வனே வேடிக்கைப் பார்க்குமா...? அல்லது மோடி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமா...? என்பது தான் இன்று நாட்டிலுள்ள நடுநிலையாளர்களின் - பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது.
               பிரதமர் கனவோடு வலம் வரும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நரேந்திர மோடி, தனக்கு திருமணமான தகவலை கடந்த தேர்தல்களில் மறைத்தது மட்டுமின்றி, மனைவியின் பெயரை குறிப்பிடாமல் இருந்தது பற்றி அரசியல் அரங்கில் கடும் கண்டனக்குரல் எழுந்துள்ளது.
           அதுமட்டுமின்றி தற்போது வரை மனைவியோடு சேர்ந்து வாழாமல் அவரை கைவிட்டது மட்டுமின்றி, அவருக்கு வாழ்வாதார உதவி கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தியிருப்பதும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. மோடிக்கு தற்போது 62 வயதாகிறது. 45 ஆண்டுகளுக்கு முன்பே, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரச்சாரகர் ஆகும் பொருட்டு மோடி தனது மனைவியை கைவிட்டுச் சென்றுவிட்டார். 1968-ஆம் ஆண்டிலேயே  மோடியின் சொந்த ஊரான வத்நகருக்கு அருகில் உள்ள பிரம்மன்வாடா என்ற கிராமத்தைச் சேர்ந்த யசோதாபென் என்ற பெண்ணுக்கும் மோடிக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
         திருமணம் நடந்த போது யசோதா பென்  13 வயது மட்டுமே நிரம்பிய சிறுமி ஆவார். மோடிக்கு வயது 17. இதன் பின்னர் யசோதாபென்னை நிராதரவாக விட்டுவிட்டு மோடி சென்று விட்டார். இதுவரையிலும் அப்பெண்ணுக்கு எந்தவிதமான வாழ்வாதார உதவியும் மோடி செய்யவில்லை.
           இத்தனைஆண்டுகளாக யசோதா பென், தனது சொந்த கிராமத்தில் தனது மூத்த சகோதரரால் நடத்தப்படும் ஒரு சிறிய மளிகைக்கடையில் வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

   வெளிச்சத்திற்கு வந்த திருமணம் : 

              இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு குஜராத்தின் வதோதரா தொகுதியில் போட்டியிடுவதற்காக நரேந்திர மோடி வேட்புமனுத்தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் மனைவி என்ற இடத்தில் யசோதா பென்னின் பெயரை நிரப்பி அளித்துள்ளார். இதைத்தொடர்ந்தே மோடியின் திருமணமும், அவர் தனது மனைவியை கைவிட்டு வந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால் இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் நரேந்திர மோடி திருமணமானவர் என்றோ, மனைவியின் பெயரையோ குறிப்பிடவில்லை. எனவே இது தற்போது சட்டரீதியான பிரச்சனையாக மாறியுள்ளது. தேர்தல் ஆணையம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஒருபுறம் புகார் பதிவு செய்துள்ளது.
           தேர்தல் ஆவணங்களில் தனது கடந்த கால வாழ்க்கை குறித்த உண்மைகளை நரேந்திர மோடி திட்டமிட்டு மறைத்துள்ளார் என தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள புகாரில் கேள்வி எழுப்பியிருப்பதாக காங்கிரசின் மூத்த தலைவர் கபில்சிபல் தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளியன்று தெரிவித்தார்.

  தேசிய மகளிர் ஆணையம் கேள்வி : 

           மோடியின் திருமணம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அதன் உறுப்பினர் நிர்மலா சமந்த் கூறும்போது, ‘‘இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நரேந்திரமோடியின் மனைவி தனது சொத்துரிமை பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் இழந்துள்ளார். ஆனால் மோடி பெண்கள் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். தனது வேட்பு மனுவில் அவர் தனது சொத்து விவரங்கள், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
              ஆனால் முதல் முறையாக தனதுமனைவியின் பெயரை குறிப்பிட வேண்டிய தேவை என்ன? இதற்கு முந்தைய தேர்தல்களில் மனைவியின் பெயரை குறிப்பிடும்படி அவரிடம் தேர்தல் ஆணையம் கட்டாயப்படுத்த வில்லையா? இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்“ என்றார்.

 பிருந்தா காரத் : 

                       இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், கடும் விமர்சனம் செய்துள்ளார்.
        யசோதா பென்னுடனான தனது திருமணத்தையே மறைத்து பொய் கூறிய மோடியை இந்த நாடு நம்புகிறதா....? என்று ‘சிபிஐ(எம்) ஸ்பீக்’ என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பிருந்தா காரத், தன்னை நம்பி திருமணம் செய்து கொண்டபெண்ணை ஏமாற்றி கைவிட்டது மட்டுமல்ல, இத்தனை ஆண்டுகாலமாக அப்பெண்ணுக்கு வாழ்வாதார உதவியைக்கூட மோடி அளிக்கவில்லை என்பது இந்த நாட்டின் பெண்களுக்கு ஏற்பட்ட அவமானம் என்றும் எழுதியுள்ளார்.
           ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்று மோடி கூறியதன் உண்மை அர்த்தம் என்ன என்றும் பிருந்தா காரத் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜி.ராமகிருஷ்ணன் :

                இந்நிலையில், மனைவியின் பெயரையே மறைத்த மோடி போன்ற பொய்யரிடமா இந்த நாட்டை ஒப்படைக்கப்போகிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
        தானிக்கோட்டகம் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “3 முறை குஜராத் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றிபெற்ற மோடி தேர்தல் விண்ணப்பத்தில் எல்லாம் திருமணம் ஆகாதவர் என்றே பொய் சொல்லியிருக்கிறார். தற்போது ஏதோ பயம் வந்து, திருமணம் ஆகிவிட்டது மனைவி இருக்கிறார் என்று உண்மையைச் சொல்லியிருக்கிறார். 13 வயதுடைய பெண்ணைத் தனது 17 வயதில் மணந்ததாகச் சொல்கிறார். இந்தத் திருமணமே சட்டப்படி செல்லாதே. இவர் மோடியா? மோசடிப் பேர்வழியா? இப்படிப்பட்ட பொய்யரிடம்- மதவெறி பிடித்த மோசடிக்காரரிடம் இந்த தேசத்தை ஒப்படைக்கலாமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இப்படிப்பட்ட மோடியை முன்னிறுத்தும் பாஜகவிற்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள கட்சிகள் பல்லக்குத் தூக்குவதையும் அவர் கடுமையாக சாடினார்.

சனி, 15 பிப்ரவரி, 2014

தேசத்தை மாற்றப்போகும் மாற்றுக்கொள்கை - எழுச்சியுடன் உருவாகிவரும் மாற்று அணி...!

         
கட்டுரையாளர் : தோழர்.பிரகாஷ் காரத்      
                                பொதுச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,
           நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல்கள் நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், தேர்தல் களம் என்பது இரு அணிகளுக்கு இடையேயானதல்ல, மாறாக மூன்றுவிதமான அணிகளுக்கு இடையேயானது. அதாவது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  மற்றும் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி என உருவாகி இருக்கிறது.

போட்டி இரு வழியில் இல்லை                                                            

               ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் நினைத்திருந்ததுபோல் இன்றுள்ள நிலைமை இல்லை. நரேந்திர மோடி, சென்ற ஆண்டு செப்டம்பரில் ஆர்எஸ் எஸ்-இன் தலையீட்டின் பேரில் பாஜக-வின் பிரதமர் வேட்பாளராக முடி சூட்டப்பட்ட பிறகு, பிரதமருக்கான பிரச்சாரத்தில் மோடியைத் தூக்கி நிறுத்திட ஊடகங்கள் கடுமையாக முயன்று வருகின்றன. காங்கிரஸ் கட்சி, தங்களுடைய கட்சியின் சார்பான பிரச்சாரத்திற்கான பொறுப்பினை ராகுல் காந்தியிடம் தரத் தீர்மானித்த பிறகு, போட்டி என்பது எதையும் செய்துமுடிக்கும் துணிவுள்ள மோடிக்கும் செயல் நயமற்ற ராகுல்காந்திக்கும் இடையிலான ஒன்று என்பது போலச் சித்தரித்து வந்தன. இவ்வாறு மோடிக்கு ஆதரவாக தன்னுடைய அனைத்து விதமான சாமர்த்தியத்துடனும் பாஜக தன்னுடைய பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருந்தது. ஆயினும், மக்களை ஏமாற்றக்கூடிய விதத்தில் இவர்கள் நடத்திவந்த நாடகம் எந்த அளவிற்குப் போலியானது என்பதை கடந்த சில வாரங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் வெளிக்கொண்டு வந்துவிட்டன.
            இது ஒன்றும் இரு தலைவர்களுக்கு இடையிலான அல்லது இரு கட்சிகளுக்கு இடையிலான அல்லது ஏன் இரு கூட்டணிகளுக்கு இடையிலான போட்டி இல்லை என்பது மெய்ப்பிக்கப்பட்டு விட்டது. நாட்டின் பொருளாதாரம் மிகவும் சீர்கேடு அடைந்து கொண்டிருக்கக் கூடிய பின்னணியில் தான் மக்களவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. மட்டுமீறிய விலைவாசி உயர்வு, ஏழைவிவசாயிகளின், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் முற்றிலுமாக இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளமை, வேலையில்லா இளைஞர் பட்டாளம் மிகவும் அதிகரித்துள்ளமை ஆகியவற்றுடன் சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாகக்கூடிய விதத்தில் சுகாதாரம், கல்வி மற்றும் வீட்டு வசதிகள் பரிதாபகரமான முறையில் மாறியுள்ளன. இவையனைத்துக்கும், மன்மோகன் சிங் அரசாங்கம் விடாப்பிடியாகக் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயக் கொள்கைகள் தான் காரணங்களாகும். நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளை போவதும், அபரிமிதமான லஞ்ச ஊழலும் இதன் வெளிப்பாடுகளேயாகும். பேராசை பிடித்த நவீன தாராளமயக் கொள்கையின் சமூகத் தாக்கத்தை நாடு முழுவதும் பெண்கள் மீது நடந்துவரும் அதிபயங்கரமான தாக்குதல்கள் மற்றும் உரிமைகளுக்காகப் போராடும் மக்களின் மீதான காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைகளிலிருந்து நன்கு பார்க்க முடியும்.
            இவை அனைத்திற்கும் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டியது காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் தான். காங்கிரஸ் கட்சி இவ்வாறு மக்கள் மத்தியில் தனக்கிருந்த பிடிப்பை முழுமையாக இழந்து, நடைபெறவிருக்கும் தேர்தலில் படுவீழ்ச்சியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் மீது மக்களுக்கு இருந்துவரும் கோபத்தை, பாஜக தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், நரேந்திர மோடியால் முன்வைக்கப்படும் சிகிச்சை, நோயைவிட மோசமானதாகும். அவர் அரக்கத்தனமான முதலாளித்துவப் பாதையே இப்போதுள்ள துன்பங்களுக்கெல்லாம் மாமருந்து என்று கூறுகிறார். ஆனால் அது மக்களின் இன்றைய அவலநிலையை மேலும் மோசமான அளவிற்கு மாற்றுவதற்கே இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை. ஊழல் காங்கிரஸ் ஆட்சியால் விளைந்துள்ள அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு, அதன்மீது தன்னுடைய கெடு நோக்குடைய பெரும்பான்மை வகுப்பு வாதத்தை முன்னெடுத்துச் செல்வதே அவருடைய “வளர்ச்சி’’ நிகழ்ச்சிநிரலின் கட்டமைப்பாகும்.
             ஆனாலும், மோடி மற்றும் பாஜகவின் செல்வாக்கு என்பது வரையறைக்கு உட்பட்ட ஒன்றே. இதற்கு அதனுடைய ஸ்தாபன செல்வாக்கின்மை மட்டுமல்ல, பல மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக வேறு பல கட்சிகளும் சக்திகளும்கோலோச்சுகின்றன என்பதும், காங்கிரசுக்கு மாற்றாக, பாஜகவைவிட தங்களால் சிறந்ததோர் ஆட்சியை மக்களுக்கு அளிக்க முடியும் என்று அவை மக்கள் மனதை வென்றிருப்பதும்தான் காரணங்களாகும். 

மாற்று துருவம்                                                                 

           காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளை ஒரேகுடையின்கீழ் கொண்டுவருவதற்கான சமீபத்திய முயற்சிகள் இந்திய அரசியலில் இத்தகைய மாற்றுத் துருவத்தை நோக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இவ்வாறு எழுச்சியுடன் உருவாகியுள்ள மாற்றிற்கு அடித்தளமாக மாநிலக் கட்சிகள் அமைந்துள்ளன. இடதுசாரிக்கட்சிகளுடன் இவை இணையும் போது அது ஓர் அகில இந்திய மாற்றுக்கான வடிவத்தைப் பெறுகிறது. 2004லும் 2009லும் நடைபெற்ற கடந்த இரு மக்களவைத் தேர்தல்களிலும், காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக ஆகிய இருகட்சிகளும் பெற்ற ஒட்டுமொத்த வாக்குசதவீதம் என்பது 50 சதவீதத்திற்கும் குறைவேயாகும். உண்மையில், இது 2004ல் 46.7 சதவீதம், 2009ல் 47.4 சதவீதமேயாகும். அதன்பின்னர், பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்ற மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாநிலக் கட்சிகளின் வலு மெய்ப்பிக்கப் பட்டிருக்கின்றன.
         அவை மக்களிடம் கணிசமான ஆதரவினைப்பெற்று மாநிலங்களில் ஆட்சிகளை அமைத்திருக்கின்றன. அதிமுக, சமாஜ்வாதிக் கட்சி, பிஜு ஜனதாதளம் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியாக செயல்பட முன்வந்திருக்கின்றன. இக்கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம், அசாம் கண பரிசத், ஜார்கண்ட் விகாஸ்மோர்ச்சா போன்ற மாநிலக் கட்சிகளும் இணைந்து கொண்டுள்ளன. சென்ற ஆண்டு அக்டோபர் 30 அன்று நடை பெற்ற வகுப்புவாதத்திற்கு எதிராகவும், மக்கள் ஒற்றுமைக்காகவும் நடைபெற்ற சிறப்பு மாநாடு ஒன்று நடைபெற்றதை நினைவுகூர்வோம்.
                  அந்த சிறப்பு மாநாட்டில் பதினான்கு கட்சிகள் கலந்து கொண்டன. இவற்றில் தற்போதும் ஐக்கிய முர்பொக்குக் .கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்றஅனைத்துக் கட்சிகளும் பாஜகவை யும், காங்கிரசையும் எதிர்த்து முறியடிப்பதற்கான பொதுவான குறிக்கோளினைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இக்கட்சிகளில் 11 கட்சிகள் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ளவை களாகும். இந்த 11 கட்சிகளும் காங் கிரசுக்கும் பாஜகவுக்கும் மாற்றாக, வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் களின்போது ஒன்றிணைந்து செயல்படத் தீர்மானித்திருக்கின்றன. இவற்றுடன் தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத மேலும் சில கட்சிகளும் சேரலாம்.

விஷத்தைக் கக்கும் பாஜக                                            

           இக்கட்சிகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் வந்திருப்பதை அறிவித்த போது, (இதனை ஊடகங்கள் “மூன்றாவது அணி’’ என்று அழைக்கின்றன) பாஜகவிற்கு கிலி பிடித்துவிட்டது. மூன்றாவது அணி என்பது “ஒரு மாயை’’ என்றும், “தோல்வியடைந்த ஒரு பரிசோதனை’’ என்றும், “மக்களுக்கு ஏற்படையது அல்ல’’ என்றும் மூன்றாவது அணியைத் தாக்கி பாஜக தலைவர்கள் அறிக்கைகளையும், பேச்சுக்களையும் உதிர்த்தவண்ணம் இருக்கிறார்கள். நரேந்திரமோடி மூன்றாவது அணியை “மூன்றாந்தரம்’’  என்று தாக்கி இருக்கிறார். பாஜக இவ்வாறு விஷத்தைக் கக்குவதற்கான காரணம் மிகவும் தெளிவானது. இதுநாள்வரை தேர்தல் களம் என்றால் அது “காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் இடையேயானது’’ என்றும், “மோடிக்கும் ராகுலுக்கும் இடையேயானது’’ என்றும் தான் வர்ணிக்கப்பட்டு வந்தது.
இதன்மூலம் காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு இருந்து வரும் அபரிமிதமான அதிருப்தியை நன்கு அறுவடை செய்து கொள்ளலாம் என்று பாஜக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கனவு கண்டு வந்தது. ஆனால், காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ''தேர்தல் மாற்று'' ஒன்று எழுச்சியுடன் உருவாகியிருப்பதானது அக்கட்சியை முழுமையாக நிலைகுலையச் செய்துவிட்டது. பாஜகவின் வெற்று ஆரவாரங்கள் எல்லாம் வெட்டவெளிச்சமாகிக் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மை வகுப்புவாதத்தின் அடிப்படையிலான எதேச்சதிகாரத் தலைவராக ஒருவரை பாஜக முன்னிறுத்தியிருப்பதற்கு முற்றிலும் மாறாக, காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் அணி என்பது முற்றிலும் வித்தியாசமான உருமாதிரியை அடிப்படையாகக் கொண்டதாகும். இடது சாரிக்கட்சிகளும், மாநிலக்கட்சிகளும் கூட்டாட்சித் தத்துவத்தின் மீது வலுவான பிடிப்பு உள்ளவைகளாகும். அவை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட முன்வந்துள்ளதிலிருந்தே இது நன்கு வெளிப்பட்டது. அக்கட்சிகளுக்கு இடையேயான அடையாளங்களும் சுயாட்சி உரிமைகளும் பரஸ்பரம் மதிக்கப்பட்டன. இது மேலும், நவீன தாராளமயக்கொள்கைகளுக்கு மாற்றாக ''மாற்றுக்கொள்கைகளைப்'' பரப்பிட தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்திக்கொள்ள இடதுசாரிக் கட்சிகளுக்கும் வாய்ப்பளித்துள்ளது.

கூட்டுப் பிரகடனம்                                        

              தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் 11 கட்சிகளும் சேர்ந்து ஒரு கூட்டத்தை நடத்தி, இம்மாற்று உருவானதை அறிவித்திடத் தீர்மானித்துள்ளன. அந்த சமயத்தில் இம்மாற்றின் அடிப்படை வடிவம், கொள்கைகள் மற்றும் திசைவழி ஆகியவை குறித்து ஒரு பிரகடனமும் வெளியிடப்பட இருக்கிறது. இதில் ஒருங்கிணைந்துள்ள கட்சிகளின் தனித்தன்மையைக் கணக்கில் கொண்டு, இக்கட்சிகளுக்கு இடையே ஒரு தேர்தல் கூட்டணியோ அல்லது இக்கட்சிகளுக்கிடையே இடஒதுக்கீடுகளோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
               இக்கட்சிகளில் பெரும்பாலானவை மாநில அடிப்படையில் செயல்படுவதால், அவை இதர மாநிலங்களில் உள்ள கட்சிகளுடன் இடஒதுக்கீடுகள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வது சாத்தியமில்லை. ஆனால், இக்கட்சிகள் அனைத்துமே, அகில இந்திய அளவில் கூட்டிணைப்புக்கு வாய்ப்பு அளிக்கக்கூடிய விதத்தில், தங்கள் மாநிலங்களில் வலுவைத் திரட்டிட முடியும். அத்தகைய முறையில் அவை தங்கள் மாநிலங்களில் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்பாடுகளின் மூலம் காங்கிரசுக்கும், பாஜகவிற்கும் எதிராக தங்கள் அரசியல் நிலைப்பாட்டையும், கொள்கைகளையும் வடிவமைத்து, வலுப்படுத்திக்கொள்ள முடியும்.
         இத்தகைய காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மேடையால் காங்கிரஸ்கட்சியின் ஆட்சியால் கடும்வெறுப்புக்கும் சலிப்புக்கும் ஆளாகியுள்ள மக்களுக்கு ஒரு மாற்றை அளித்திடவும், காங்கிரசுக்கு மாற்று பாஜக தான் என்கிற பாஜகவின் வெற்று ஆரவார முழக்கங்களை வலுவாக முறியடித்திடவும் முடியும். எழுச்சியுடன் உருவாகியுள்ள இத்தகையதொரு மாற்று, காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திட, மத்தியில் வகுப்புவாத சிந்தனைகொண்ட கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுத்திட விரும்பும், நாட்டிலுள்ள அனைத்து மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகளும் அணிதிரளும் ஒரு மையமாக அமைந்திடும்.
- தமிழில்: ச.வீரமணி 
நன்றி :
 

புதன், 5 பிப்ரவரி, 2014

மன்மோகன் சிங் - ராகுல் காந்தி - கருணாநிதி - இவர்களின் தேர்தல் பயம்...!

 தீக்கதிர் நாளிதழுக்காக நான் வரைந்த கார்ட்டூன்...! எப்படி இருக்கு...? உங்கள் கருத்தோ அல்லது கவிதையோ எழுதுங்கள்...!

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

புதுச்சேரியில் உலாவரும் ''சிதம்பர ரகசியம்''...!



          கடந்த ஒரு மாதமாக புதுச்சேரியில் மாநிலம் முழுதுமே எல்லா வங்கிகளிலும், ரேஷன் கடைகளிலும், ஆதார் கார்டு மையங்களிலும், ஜெராக்ஸ் கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.
        மக்கள் தங்களுடைய அனைத்து வேலைகளையும் விட்டுட்டு தினமும் இந்த நான்கு இடங்களிலும் கூடிவிடுகின்றனர். இந்த இடங்களில் தங்கள் வேலை முடிந்தவுடன் எதோ சாதனை புரிந்தது போன்று ''அப்பாடி.... வந்த வேலை முடிந்தது...." என்று பெருமூச்சி விட்டு செல்கின்றனர். புதுச்சேரியில் தான் இதை பார்க்கமுடிகிறது. எதற்காக இப்படி அலைமோதுகிறார்கள் இந்த மக்கள்...?
           மத்திய அரசு வருகிற ஜனவரி 1 - ஆம் தேதி - புத்தாண்டு தினத்தன்று ''உங்கள் பணம் உங்கள் கையில்'' என்ற கவர்ச்சிகரமான திட்டத்தை தொடங்கவிருக்கிறது. இந்த என்பது மன்மோகன் சிங் - ப.சிதம்பரம் ஆகிய புத்திசாலிகளின் மூளைகளில் உதித்த உன்னத திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம், இதுவரையில் மத்திய அரசு ரேஷன் பொருட்களுக்கும், சமையல் எரிவாயுக்கும் கொடுத்துவந்த மானியத்தை இனிமேல் நம் கைகளிலேயே தந்துவிடுவார்களாம். அரசு தருகிற அந்த ''கொஞ்சப்'' பணத்தோடு, நாம் ''நிறைய'' நம் பணத்தையும் சேர்த்து இதுவரையில் ரேஷன் கடையில் வாங்கி வந்த பொருட்களை வெளியில் வாங்கிக்கொள்ள வேண்டுமாம். இந்த திட்டம் என்பது நம் பாக்கெட்டை காலிப் பண்ணுவதற்கான வேலை தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவில்லை. நாம் வாங்கப்போகும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர உயர அரசு கொடுக்கும் மானியம் உயராது. அது அப்படியே தான் இருக்கும். அதேப்போல் நாம் வாங்கப்போகும் எரிவாயுவின் விலை உயர உயர அரசு கொடுக்கும் மானியம் உயராது. அது அப்படியே தான் இருக்கும். விலைவாசிக்கு தகுந்தாற்போல் நம் பாக்கெட்டும் காலியாகும். ''கையில வாங்கினேன் பையிலப் போடல... காசுப் போன இடம் தெரியல...'' என்ற மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் தான் ஞாபகம் வருகிறது.
         பலகீனமாக இருந்த நாய்க்கு அது வாலை வெட்டி அதுக்கே சூப் வெச்சி கொடுக்கிற கதை தான் இது. நாய் வாலை  வெட்டி நாயிற்கே சூப் வெச்சிக் கொடுத்தா அந்த திட்டத்திற்கு என்ன பெயர் வைப்பார்கள் தெரியுமா...''உங்கள் வால் உங்கள் வாயில்...'' அது போல் தான் இந்த ''உங்கள் பணம் உங்கள் கையில்...'' என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
           ''உங்கள் பணம் உங்கள் கையில்'' திட்டப்படி மக்களுக்கு தங்கள் கையில் பணம் கிடைக்க வேண்டுமென்றால், இப்போது தங்கள் கையில் இருக்கும் பணத்தை செலவு செய்தாக வேண்டும். அது தான் அந்த நான்கு இடங்களிலும் தினமும் அவ்வளவுக் கூட்டம் கூடுகிறது.
          பேருல தான் உங்கள் பணம் உங்கள் கையில் - னு  இருக்கே தவிர, அரசு பணத்தை மக்கள் கையில்  தரமாட்டார்கள். குடும்பத்தலைவரின் வங்கிக்கணக்கில் தான் போடுவார்களாம். மாதம் தோறும் அந்த குடும்பத்தலைவர் வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு கடைக்குப் போயி சரக்கு வாங்கிகிட்டு வருவாராம். ஆனால் அந்த குடும்பத்தலைவர் எந்தக் ''கடைக்கு'' போயி என்ன ''சரக்கை'' வாங்கிகிட்டு வாருவார் என்பது அந்த குடும்பத்தலைவிக்குத் தான் தெரியும்.
          அந்தப் பணத்தைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கு இல்லாதார்கள் வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்கிறார்கள். அதனால் அனைத்து வங்கிகளிலும் மக்கள் கூட்டம். ரேஷன் கடையில் வங்கிக் கணக்கு புத்தகத்தின் ஜெராக்ஸ் காப்பியும், ஆதார் கார்டின் ஜெராக்ஸ் காப்பியும் தரவேண்டும். அதனால் ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம். ஆதார் கார்டு இல்லாதவர்கள் ஆதார் மையங்களில் கூடுகிறார்கள். அதனால் அங்கே மக்கள் கூட்டம். இவை எல்லாவற்றுக்கும் வங்கிப் புத்தகம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை - இவைகளின் ஜெராக்ஸ் காப்பி தேவை. அதனால் ஜெராக்ஸ் கடைகளில் கூட்டம்.
          இத்தனை இடங்களிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடுவதால் தான் புதுச்சேரியே ஒரே பரபரப்பாக இருக்கிறது.
           இந்த திட்டத்தை ஆரம்பத்தில் மத்திய அரசு 50 மாவட்டங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்துகிறது. அந்த ஐம்பதில் ஒன்று புதுச்சேரி என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் புதுச்சேரியையும் ஐம்பதில் ஒன்றாக சேர்த்தார்கள் என்பதில் தான் ''சிதம்பர ரகசியமே'' இருக்கிறது. அது என்ன ''சிதம்பர ரகசியம்''...? இரகசியம் எல்லாம் ஒன்னும் இல்லை. புதுச்சேரியில் இன்று வெளிப்படையாக பேசப்படுகின்ற இரகசியம் தான்.
          சென்ற 2009 - ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் சிவமான கங்கையில் ருத்திரத்தாண்டவம் ஆடியவரால் வெற்றிபெற முடியாமல் போனது என்பதும், மறு எண்ணிக்கை என்ற பெயரில் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டது என்பதும், அது சம்பந்தமான வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதும் மக்கள் மறந்திருக்க முடியாது. வருகின்ற 2014 - ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத்தேர்தலில் அந்த சிவமான கங்கைக்காரரான ருத்திரத்தாண்டவத்தாரால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் டெபாசிட்டுக் கூட வாங்கமுடியாது என்ற செய்தி அம்பலத்திற்கு வந்ததையடுத்து, ''பிரதமர் வேட்பாளர்'' என்று கூட அறிவிக்கப்படலாம் சொல்லப்படுகின்ற அவர் நிச்சயம் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற சூழ்நிலையில் அவரது பார்வை புதுச்சேரியில் விழ, பின் அவரது பாதத்தை புதுச்சேரியில் பதிக்க தொடங்கினார். கடந்த காலங்களில் மோகன் குமாரமங்கலம், பாலாபழனூர் போன்ற வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை புதுவை மக்கள் வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள் என்பதால், புதுச்சேரி தான் ருத்திரத்தாண்டவத்தாருக்கு பாதுகாப்பான தொகுதி என்ற அடிப்படையில்  காங்கிரஸ் கட்சியும் அதற்கான வேலைகளை தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
          அவரின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகத் தான் ''உங்கள் பணம் உங்கள் கையில்'' திட்டத்தை முதல் கட்டமாக புத்தாண்டு தினத்தன்றே தொடங்குவதற்கு, தாண்டவத்தாரே புதுச்சேரிக்கு நேரில் வங்கி அதிகாரிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
          இந்தத் திட்டத்தின் மூலம் அவர்  ''உங்கள் பணம் உங்கள் கையில்'' என்பதைப் போல் ''உங்கள் ஓட்டு எங்கள் பையில்'' என்று தேர்தல் நேரத்தில் ''காசு போட்டா ஓட்டுப்போடும் எந்திரமான மக்களிடம்'' போய்  நிற்பார் என்று தான் மக்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.