இளைஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளைஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஜூலை, 2015

கலாம் மீது இவ்வளவு கண்மூடித்தனமான பற்றுதலா...!



 

             பொதுவாக நம் தமிழ்நாட்டில் அரசியல் கட்சித்தலைவர்கள் மீதும், சினிமா நடிகர்கள் மீதும் தான் நம் இளைஞர்கள் கண்மூடித்தனமாக பற்றுதல் வைப்பார்கள். அவர்களின் தலைவர்கள்  அல்லது நாயகர்கள் இறந்துவிட்டால் கண்மூடித்தனமாக சாலைகளில் போகும் பேருந்து, கார் போன்ற வாகனங்களை அடித்து நொறுக்குவதும், சாலைகளில் போக்குவரத்துகளை நிறுத்துவது, கடை அடைப்புக்கு மிரட்டுவது, அடைக்காத கடைகளையும் அடித்து நொறுக்குவது போன்ற மக்கள் நலன் சார்ந்த - தேசபக்திமிக்க ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடுவார்கள். இதைத்தான் அவர்களுக்கு அவர்களின் தலைவர்களும், கதாநாயகர்களும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிந்ததே. தங்களின் ஆதர்ஷ புருஷர்கள் இறந்துவிட்டால் அவர்கள் கற்றுக்கொடுத்ததுபோல் சரியாக கச்சிதமாக செய்துமுடிப்பார்கள். இப்படிப்பட்ட இளைஞர்களைத் தான் நாம் இதுவரை நேரில் பார்த்திருக்கிறோம். 
             ஆனால் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நேற்று முன் தினம்   இரவு மறைந்த செய்தியை கேட்டதிலிருந்து அதே தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களது சோகத்தை - துக்கத்தை சற்று வித்தியாசமாக அமைதியான முறையில் வெளிகாட்டுகிறார்கள். ஆனால் இவர்கள் எப்போதும் போல் வாகனங்களை நொறுக்கவில்லை. கடைகளை அடித்து உடைக்கவில்லை. கடைகள் அடைப்பைக் கூட சொல்லவில்லை. மாநிலம் முழுதும், ஊர் முழுதும், வீதிகளெங்கும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என பல இடங்களிலும்  நம் இளைஞர்கள் ஏராளமான - உயரமான கலாமின் படங்களை வைத்து,  மாலைகள் போட்டு, மெழுகுவத்திகள் ஏற்றி அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தியது என்பது நமக்கெல்லாம் சற்று வித்தியாசமாக தெரிந்தது. அந்த அளவிற்கு நம் இளைஞர்களை ஒழுக்கமிக்கவர்களாக அப்துல் கலாம் செதுக்கியிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. 
             இதெல்லாம் ஒருபுறமிருக்க, முகநூல், ட்விட்டர் மற்றும் வாட்சாப் போன்றவற்றை பயன்படுத்தும் இளைஞர்கள் தங்களின் சிந்தனைக்கு தகுந்தாற்போல் கலாமுக்கு அஞ்சலி செய்கிறார்கள். முகநூலையும், ட்விட்டரையும், வாட்சாப்பையும் திறந்தால் போதும், கலாமின் படங்களும், வீடியோக்களும் அருவி போல வந்து கொட்டுகின்றன. விதவிதமாய் யோசிக்கிறார்கள். எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்பதே வியப்பாக இருக்கிறது. கலாமின் படங்களையும், நிகழ்வுகளையும் அலசி ஆராய்ந்து, உருவாக்கி பதிவிடுகிறார்கள். அதில் சிலவற்றை இங்கே நான் பதிவிட்டிருக்கிறேன் பாருங்கள். 
              அதுமட்டுமல்ல, கலாமின் மீதுள்ள பற்றுதல் காரணமாக இவர்கள் மனதில் தோன்றுகிறவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த சொல்லி வாட்சாப்பிலும், முகநூலிலும் பதிவிட்டு, அதை உடனடியாக மற்றவர்களுக்கும் பகிர சொல்கிறார்கள். இதை பார்த்து படித்துவிட்டு ஆர்வக்கோளாறு காரணமாக அடுத்தவர்களுக்கு பகிர்ந்து அந்த செய்தியை நாடு முழுதும் பரப்பச் செய்கிறார்கள். அதில் வெறித்தனமான பற்றுதல் தான் இருக்கிறதே தவிர, அறிவுப்பூர்வமான சிந்தனை என்பது கிடையாது. அதையெல்லாம் படிக்கும் போது நம்மாலேயே தாங்கமுடியலடா சாமீ... என்று அவர்கள் மீது கோபம் தான் வருகிறது. அதில் சிலவற்றை  பாருங்கள்...!

தகவல் - 1 : அப்துல் கலாமின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய அரசை வலியுறுத்தவேண்டும். உடனடியாக இதை அனைவருக்கும் பகிருங்கள்.

தகவல் - 2 :  கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவிக்கவேண்டும். அனைவருக்கும் இதை பகிருங்கள். 

தகவல் - 3 : லெனின் உடலைப்போல கலாமின் உடலையும் பதப்படுத்தி பாதுகாக்கவேண்டும். இதை வலியுறுத்தி அனைவருக்கும் பகிருங்கள்.

தகவல் - 4 : பாம்பன் பாலத்திற்கு அருகில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை போல கலாமுக்கு உயரமான சிலை வைக்கவேண்டும் என்பதை அனைவருக்கும் பகிருங்கள்.

தகவல்கள் - 5 : என்றைக்கும் இல்லாத வகையில் கலாமின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது. நாமெல்லாம் இந்தியன் என்று சொல்வதற்கு பெருமைப்படவேண்டும். 
             இப்படியொரு வாசகத்தை படம் போட்டு பெருமைப்பட்டுக் கொண்டார்கள். ஆனால்  குடியரசுத்தலைவராக கலாம் பொறுப்பிலிருந்த போது  இதே அமெரிக்கா தான், கலாம் அமெரிக்காவிற்கு சென்றபோது அவரை ஒரு நாட்டின் குடியரசுத்தலைவர் என்று கூட பார்க்காமல், அவரது ஆடைகள் அனைத்தையும் அவிழ்த்து அரை நிர்வாணமாக்கி சோதனை செய்து அவமானப்படுத்தினார்கள் என்பதை இந்த இளைஞர்கள் மறந்துவிட்டார்கள் என்பது தான் வேதனையான நிகழ்வாகும்.
               இவைகளையெல்லாம் படிக்கும் போது  எப்படி இப்படிஎல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறார்கள் என்று ஒரு பக்கம் வியப்பாக இருந்தாலும், இன்னொரு பக்கம் இவர்கள் அறிவோடு சிந்திக்கமாட்டார்களா என்று எரிச்சலாகவும் கோபமாகவும் இருக்கிறது. இன்றைய இந்த இளைஞர்களுக்கு கலாமின் மீது இந்த அளவிற்கு பற்றுதலா கண்மூடித்தனமாக...? ஆச்சரியம் தான்.  

திங்கள், 11 பிப்ரவரி, 2013

விஜய் டி வி - யின் '‘நீயா நானா’' நிகழ்ச்சி தந்த அதிர்ச்சி..!

கட்டுரையாளர் : ஆளூர் ஷாநவாஸ்                  
                                சமூக வலைதள எழுத்தாளர் 
       விஜய் டிவியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் ஒரு பக்கம் எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் களப்பணியாளர்களும், மறுபக்கம் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தொடர்பற்றவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். எழுத்தாளர் என்ற முறையில் நானும் பங்கேற்றேன்.
                இன்றைய நிலையில் தமிழகத்தின் தலையாய பிரச்சனைகள் எவை? என்ற கேள்வியை, இளைஞர்களை நோக்கி முன்வைத்தார் கோபிநாத். ஏராளமான இளைஞர்களின் கருத்துக்கள் மேலோட்டமாகவே இருந்தன. லஞ்சம், ஊழல், மின்சாரம் என்பதைத் தாண்டி அவர்களுக்கு இந்த சமூகத்தில் நடக்கும் எந்த அவலங்களைப் பற்றியும் தெரியவில்லை. பல இளம்பெண்கள் டெல்லியில் நடைபெற்ற பாலியல் வன்முறையைப் பற்றி அதிகம் பேசினர். அவர்களுக்கும் கிராமப்புறங்களில் நாள்தோறும் நடக்கும் பாலியல் வன்முறைகளைப் பற்றியோ, வாச்சாத்தி பற்றியோ, கயர்லாஞ்சி பற்றியோ எதுவும் தெரியவில்லை.
             இஸ்லாமியர்கள் குறித்த உங்கள் பார்வை என்ன? என்று அடுத்த கேள்வியை கேட்டார் கோபி. அதற்கு பதில் சொன்ன ஒரு மாணவர் ‘எனக்கு நிறைய முஸ்லிம் பிரண்ட்ஸ் இருக்காங்க; ஆனால், எங்க அம்மா முஸ்லிம் பசங்க கூட பாத்து பழகுப்பா! என எச்சரிக்கிறார்’ என்றார். இன்னொரு இளைஞர் ‘முஸ்லிம்கள் என்றாலே டெரரிஸ்ட் தான்’ என்ற தோற்றமே எங்களுக்கு விதைக்கப்பட்டிருக்கிறது என்றார்.
                     குஜராத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு அனைத்து இளைஞர்களுமே ‘நல்ல நிர்வாகம்; சிறந்த முதல்வர்’ என்று பாராட்டுக்களையே தெரிவித்தனர். ஒருவருக்குகூட குஜராத்தின் மறுபக்கம் தெரியவில்லை.
                கூடங்குளம் குறித்த கேள்விக்கு ‘மின்சாரம் அவசியம்; அதனால் அணு உலை நிச்சயம் வேண்டும்’ என்றே இளைஞர்கள் கூறினர். உதயகுமார் அம்மக்களை தவறாக வழி நடத்துகிறார் என்று சொன்னார் ஒரு மாணவி. இடஒதுக்கீடு பற்றி கேட்கப்பட்ட போது மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது. பெரும்பாலான இளைஞர்கள் ‘இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்’ என்று ஒரே குரலில் முழங்கினர். ஒரு தலித் இளைஞரே ‘இடஒதுக்கீடு எனக்கு தேவையில்லை; அதனால் பிற சமூகங்களைச் சார்ந்த என் நண்பர்கள் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று ஒரே போடாகப் போட்டார்.
       எதிர்பக்கம் இருந்த சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒரு கணம் ஆடிப்போய் விட்டோம். என்ன நடக்குது இங்கே? எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? என்ற கேள்விகள் எங்கள் மனங்களில் ஓங்கி நின்றன. முடிந்தவரை அனைத்துக்கும் விளக்கம் கொடுத்து அவர்களுக்கு புரிய வைத்தோம்.
          
நான் பேசும்போது ஒன்றைச் சொன்னேன். ‘இங்கே எதிர்புறம் இருக்கும் இளைஞர்களின் வயதொத்த நான், கடந்த 15 ஆண்டுகளாக சமூக வெளியில் எழுதி, பேசி, இயங்கிக் கொண்டிருக்கிறேன். சமூக செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவருமே அவ்வாறு இயங்கி வருகின்றனர். ஆனால், எங்கள் கருத்துக்கள் இந்த இளைய சமூகத்திடம் சென்று சேர்வதில்லை. இவர்களுக்கு எதைக் கொடுக்க வேண்டும்; எதைக் கொடுக்கக் கூடாது என்பதில் ஊடகங்கள் முன்முடிவோடு செயல்படுகின்றன. ஊடகங்கள் சொல்வதையே இவர்களும் உலகம் என்று நம்புகின்றனர். அதுதான் பிரச்சனை’ என்றேன்.
            பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம், சிறுபான்மை அரசியல், இந்துத்துவ எதிர்ப்பு என்று என்னென்னவோ நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவை எதிலுமே தொடர்பற்ற ஒரு தலைமுறை நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை கவனிக்காமலேயே இருக்கிறோம்.
             ‘நாம் சுமக்க வேண்டிய சுமைகளும், கடக்க வேண்டிய தூரங்களும் மிக மிக அதிகம்’ என்ற சிந்தனையே, ‘நீயா நானா’ அரங்கை விட்டு வெளியேறும்போது எனக்கு ஏற்பட்டது.