தனியார் மருத்துவமனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தனியார் மருத்துவமனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

''மூளைச்சாவு'' என்ற பெயரில் உடல் உறுப்புகளுக்காக செய்யப்படும் உயிர் கொலை...!

        
            அண்மைக்காலமாக சாலைவிபத்துகளில் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு மயக்கமான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றால், அவருக்கு ''மூளைச்சாவு''  ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லி உயிரோடு இருக்கும் அவரை அறுத்து, அவரது உடலில் நல்லவிதமாக இயங்கிக்கொண்டிருக்கும் இதயம், கண்கள், சிறுநீரகம், கணையம், கல்லீரல் போன்றவற்றை அப்படியே வெளியே எடுத்து அதன் இயக்கம் அடங்குவதற்குள் குறிப்பிட்ட நேரத்திற்குள், வேகமாக  அந்த உறுப்புகள் பாதிக்கப்பட்டு மாற்று உறுப்புக்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்டு அவர்களை உயிர்பிழைக்கச் செய்கிறார்கள். மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவரை இப்படியாக சாகடித்து குறைந்தது ஐந்து பேரையாவது  உயிர்பிழைக்கச் செய்கிறார்கள். 
            இது ஓர் அங்கிகரிக்கப்பட்ட ''உயிர் கொலை'' என்று தான் சொல்லவேண்டும். இதை சட்டமும், அரசாங்கமும் எப்படி அனுமதிக்கிறது என்று தான் புரியவில்லை. உடல்நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டு உயிர்வாழ முடியாதவர்களுக்கு  கூட ''கருணை கொலைக்கே'' அனுமதியளிக்காத சட்டம் இந்த உயிர் கொலையை எப்படி வேடிக்கைப்பார்க்கிறது என்று தான் புரியவில்லை. மூளைச்சாவு ஏற்பட்டவர்களுக்கு இதயம் இயங்கும், மூச்சுக்காற்று உள்ளே போய் வெளியே வரும், இரத்த ஓட்டம் இருக்கும், நாடி துடிப்பு இருக்கும், சிறுநீரகங்களும் அதன் வேலையை செய்துகொண்டுதான் இருக்கும், வயிறு உணவு கேட்கும், அதுமட்டுமல்ல மருத்துவர்களால் மூளை இறந்து விட்டதாக சொல்லப்படும் மூளை கூட இயங்கிக்கொண்டுதான் இருக்கும். ஆனால் எந்தவித சலனமும் அசைவும் இல்லாமல் படுத்துக்கொண்டிருப்பார். உயிரோடு தான் இருப்பார். அப்படி உயிரோடு இருப்பவர்களை அறுத்து இயங்கிக்கொண்டிருக்கும் உடலுறுப்புகளை எடுத்து ஒருவரை சாகடிப்பது என்பது எந்தவகையில் நியாயமாகும். பல தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரகம் திருடுவதற்கும் இதற்கும் வித்தியாசமில்லை. இரண்டும் ஒன்று தான். மூளை இறந்துவிட்டால் மேலே சொன்ன அத்தனை இயக்கமும் நின்றுவிடும். அதனால் இது மூளைச்சாவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
                ஒன்றும் அறியாத அப்பாவிகள் தான் இதில் பெரும்பாலும் பலியாகிறார்கள். அறிவியல் மற்றும் மருத்துவம் அதீதமாக வளர்ந்துவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் தலையில் அடிப்பட்டு கோமா நிலைக்கு போனவர்களை இந்த மருத்துவத்தால் காப்பாற்றமுடியாதா...? நிச்சயம் முடியும். அதற்கு காலதாமதம் ஆகலாம். நேரமும் பணமும் செலவாகலாம். அதுவரையில் அவர் உயிரோடு தான் இருப்பார். நிச்சயமாக ஒரு நாள் எழுந்து நடமாடுவார். ஆனால் அதுவரையில் காத்திராமல், தனியார் மருத்துவமனையை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை ''மூளைச்சலவை'' செய்துவிடுகிறார்கள். கோமாவில் இருப்பவர் எழுந்து நடமாட வாய்ப்பில்லை என்று சொன்னால் கூட பரவாயில்லை. உயிர்பிழைக்க வாய்ப்பில்லை அல்லது எழுந்து நடமாட அதிக காலம் பிடிக்கும், அதற்கு அதிக செலவாகும், அதற்கு மாதங்களாகலாம், வருஷங்களாகலாம் அல்லது எழுந்திருக்காமல் கூட போய் இறந்து விடலாம் என்றெல்லாம் குழப்பி உடலுறுப்பு தானத்திற்கு சம்மதிக்க வைத்துவிடுகிறார்கள்.
                 சரி... இந்த உடலுறுப்புகளை அந்த அப்பாவிகளிடமிருந்து தானமாக பெறுகிறார்களே தவிர, உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக பொருத்தி அறுவை சிகிச்சை செய்வதில்லை. அந்த மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு பல இலட்சங்களை பெறுகிறார்கள். அப்படியென்றால் இதுபோன்ற மாற்று அறுவை சிகிச்சை என்பது வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவனையில் மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் போதே, நகரம் முழுதும் உள்ள மற்ற எல்லா மருத்துவமனைகளிலும், அது சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடமும் உடனடியாக பதியப்படுகிறது. சாலைவிபத்தில் மூளைச்சாவு அடைந்து வருபவர்களை அவர்களுக்கு மருத்துவம் செய்து நடமாட வைப்பதற்கு பதிலாக, ''உடலுறுப்புதானம்'' என்ற பெயரில் உயிர் கொலை செய்துவிடுகிறார்கள்.
              இனியாவது அரசாங்கமும், சட்டத்துறையும், பொதுமக்களும் விழித்துக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற உயிர்கொலையை விசாரிக்க வேண்டும். மேலும் நடக்காமல் தடுத்து நிறுத்தவேண்டும்.

வெள்ளி, 9 மார்ச், 2012

தனியார் மருத்துவமனைகளின் செவிலியர்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டம் - வேடிக்கைப் பார்த்த தமிழக அரசு...!

               தமிழ்நாடு குறிப்பாக சென்னை, மருத்துவ உலகின் மாநகராய்  திகழ்கிறது என்று பலரும்   பெருமையாக கூறுவதுண்டு.  அந்த அளவிற்கு சென்னை மாநகர் மற்றும் சென்னையை  சுற்றிலும்  மருத்துவமனைகளும், மருத்துவக்கல்லூரிகளும், மருத்துவ ஆராய்ச்சி அமைப்புகளும் ஏராளம்...ஏராளம்.... சிகிச்சைக்கான கட்டணமோ தாராளம்... தாராளம்...
            காரணம் இந்த மருத்துவமனைகள் அனைத்தும் தனியார் மருத்துவமனைகளே. சென்னையில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் அப்பல்லோ, விஜயா, இசபெல் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய தனியார் மருத்துவமனைகளே இருந்து வந்தன. ஆனால் தற்போது நூற்றுக்கணக்கான தனியார் மருத்துவமனைகள் உருவாகியுள்ளன. இந்தியாவில் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக அமலுக்கு வந்தபின்னர் மருத்துவத்துறையிலும் தனியார் முதலீடுகள் பெருமளவு நுழைந்து விட்டன. அந்த அளவிற்கு மருத்துவத்துறை என்பது இலாபம் சம்பாதிக்கும் வர்த்தகத் துறையாக மாறிவிட்டது. 
        சென்னையில் அப்பல்லோ மருத்துவமனை மட்டுமே  பல இடங்களில் கிளைகளை திறந்திருக்கின்றன.  சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுதுமே பல இடங்களில் இதன் கிளைகள் மற்றும் தகவல் மையங்கள் இயங்குகின்றன. இது மட்டுமல்லாமல், மியாட், டிரிப்பிள் எம், வாசன், குளோபல், ஸ்ரீராமச்சந்திரா போன்ற  பெரிய மருத்துவமனைகளும்  பெருமளவு தோன்றி இருக்கின்றன. இந்த அனைத்து மருத்துவமனைகளிலும் இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு கொடுக்கப்படும் நவீனமயமான மருத்துவசேவை என்பதால்    அவை அனைத்தும் காசு உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதாகும். என்றாலும்  இலவச படுக்கைகள் பெயரளவுக்கே  அந்த மருத்துவமனைகள் வைத்துள்ளன. எனவே இந்த மருத்துவமனைகளில்  வசதி படைத்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் மருத்துவத்திற்காக  வருகிறார்கள் அல்லது மருத்துவக் காப்பீடு செய்துள்ளவர்கள் வருகிறார்கள்.
                  இப்படிப்பட்ட இந்த மருத்துவமனைகளுக்குத் தான் மத்திய - மாநில அரசுகள் போட்டிப்போட்டுக்கொண்டு சலுகைகளை வருகின்றன. மத்திய அரசு TAX - HOLIDAY என்ற பெயரில் வருமான வரி விலக்கு அளிக்கிறது. நோயாளிகளின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மருந்து மற்றும் அந்நிய செலாவணி சட்டங்களை இந்த மருத்துவமனைகள் காற்றில் பறக்கவிடுவதை மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை. மாநில அரசோ மின்சாரம் மற்றும் குடிநீர் போன்றவற்றை தாராளமாக விநியோகம் செய்கிறது. பல சமயங்களில் இவைகளுக்கான கட்டணத்திற்கு விலக்கு அளிப்பதும் அல்லது கட்டவேண்டிய கட்டண பாக்கிகளை வசூல் செய்யாமல் கண்டுகொள்ளாமல் இருப்பதும் அல்லது தள்ளுபடி செய்வதுமான வேலைகளை மாநில அரசாங்கமோ மனதார செய்கின்றது. நகராட்சி அல்லது மாநகராட்சிகளுக்கு கட்டவேண்டிய வரிகளுக்குக்கூட விலக்கு அளிக்கப்படுகிறது.
             இப்படியாக பல்வேறு வழிகளில்  பல்கிப் பெருகி நாள்தோறும் பல ஆயிரம் கோடிகளை  வருவாயாக  ஈட்டும் இந்த தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு இல்லை. கேள்வி கேட்டால் பணிநீக்கம். விலைவாசிக்கேற்ப ஊதிய உயரவு என்ற பழக்கமே இல்லை.  அதனால் அரசின் குறைந்தபட்ச சம்பளமும் அமல்படுத்தப்படமாட்டாது. தொழில் மற்றும் தொழிலாளர் சம்பந்தப்பட்ட எந்த சட்டப் பாதுகாப்பும் இந்த மருத்துவமனைகளில் கிடையாது.   இப்படியான  நவீன சுரண்டல்களில்  சிக்கித்தவிக்கும் இந்த மருத்துவமனை ஊழியர்கள், குறிப்பாக செவிலியர்கள் கடந்த சில நாட்களாக பொறுத்தது போதும் என பொங்கி எழுந்துவிட்டனர். சென்னையில் கடந்த சில நாட்களாக நடை பெற்ற போராட்டங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது  அப்பல்லோ, போர்டீஸ் மலர் மற்றும் டிரிப்பிள் எம் எனப்படும் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் ஆகிய மருத்துவமனைகளில்  பணிபுரியும் செவிலியர்கள் நடத்திய வீரமிக்க போராட்டம்தான்.
           இவர்களின் போராட்டத்தால் நிலைகுலைந்து போன  டிரிப்பிள் எம் மருத்துவமனை தனது மருத்துவமனை செவிலியர்களை அழைத்துப்பேசி சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. அதனால் அந்த மருத்துவமனை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் மிகப்பெரிய மருத்துவமனையான அப்பல்லோ தொடர்ந்து செவிலியர்களை பழிவாங்கி வருகியது. பணிக்கு உடனடியாக திரும்பாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மிரட்டியும் பார்த்தது.  புதிய செவிலியர்களை தேர்வு செய்ய முன்னணி ஆங்கில நாளிதழ்களில் விளம்பரங்களை வெளியிட்டு மிரட்டியது. இவை எதற்கும் அஞ்சாமல் செவிலியர்கள் நேற்றுவரை போராடினர். ஆனால்   இதுபோன்ற பிரச்சனைகளில் உடனடியாகத் தலையிடாமல் தமிழக அரசு மவுனம் சாதிப்பது என்பதும், வேடிக்கைப் பார்ப்பது என்பதும்  எந்த வகையிலும் சரியானதுமல்ல....முறையானதுமல்ல... இது வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல.
         பல்வேறு சூழ்நிலைகளில்  கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்று, கவுரவமான வேலையும், நியாயமான வருமானமும்  கிடைக்கும் என்று நம்பி தனியார் துறையில் நுழைந்துள்ள லட்சக்கணக்கான ஊழியர்களின் - இளைஞர்களின் எதிர்காலம் குறித்த பிரச்சனை என்பதை தமிழக அரசு மறந்துவிட்டது.  போராடும் செவிலியர்களை அழைத்துப் பேச மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டிய தமிழக அரசு பாராமுகமாய் இருந்தது என்பது கண்டிக்கத்தக்கது.  
          இனியாவது பணி நிரந்தரம், நியாயமான சம்பளம், தொழிலாளர் நலச்சட்டங்கள் ஆகியவற்றை அமல்படுத்த கறாராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசு தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால்   மனிதவள மேம்பாட்டில் தமிழகம் நாட்டில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்று பெருமை பேசி பயனில்லாமல் போய்விடும்.