போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

தேசபக்த உணர்வு கொள் - தேசத்தை காத்தல் செய்...!



ஓ... இளைஞனே...
பெண்ணே...
உனக்குள்
ஒரு சக்தி இருக்கிறது...
தேசத்தை மாற்று...
தேசபக்த உணர்வு கொள்
தேசத்தை காத்தல் செய்...
புறப்பட்டு
தேசம் உனக்காக
காத்திருக்கிறது...
பாரத நாட்டின்
விடுதலைக்காக மீண்டும்
போராட வா..!
மற்றுமொரு
சுதந்திர போராட்டம்...
நாமே பாரதியாய்
பகத்சிங்காய் நேதாஜியாய்
மாறுவோம்...

நமக்குள்
வல்லமை இருக்கிறது
இந்த ''மா நிலத்தை''
மாற்றுவோம்...
அரசியல் விடுதலை
பொருளாதார விடுதலை
சமூக விடுதலை -
இவைகளை கொண்ட
மாற்றுப் பாதையில்
நல்லரசை ஏற்றுவோம்
இந்திய ''மா மன்றத்தில்''... 

சனி, 9 பிப்ரவரி, 2013

இன்னும் எத்தனைக் காலம் தான் தமிழர்களை ஏமாற்றுவார் கருணாநிதி...?

திமுக தலைவர் கருணாநிதி இன்னும் எத்தனைக் காலங்களுக்கு தான் தமிழர்களை ஏமாளிகளாகவே நினைத்துக்கொண்டிருப்பார் என்று தெரியவில்லை. மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டே, இலங்கை அதிபர் இராஜ பட்செவின் வருகையை எதிர்த்து தனது கூட்டாளிகளுடன் கருணாநிதி கறுப்புடை அணிந்து போராட்டம் நடத்துவதை பார்க்கும் போது தமிழர்களை ஏமாளிகளாக நினைத்துக்கொண்டிருக்கும் கருணாநிதி கோமாளியாய் தெரிகிறார்.

வெள்ளி, 9 மார்ச், 2012

தனியார் மருத்துவமனைகளின் செவிலியர்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டம் - வேடிக்கைப் பார்த்த தமிழக அரசு...!

               தமிழ்நாடு குறிப்பாக சென்னை, மருத்துவ உலகின் மாநகராய்  திகழ்கிறது என்று பலரும்   பெருமையாக கூறுவதுண்டு.  அந்த அளவிற்கு சென்னை மாநகர் மற்றும் சென்னையை  சுற்றிலும்  மருத்துவமனைகளும், மருத்துவக்கல்லூரிகளும், மருத்துவ ஆராய்ச்சி அமைப்புகளும் ஏராளம்...ஏராளம்.... சிகிச்சைக்கான கட்டணமோ தாராளம்... தாராளம்...
            காரணம் இந்த மருத்துவமனைகள் அனைத்தும் தனியார் மருத்துவமனைகளே. சென்னையில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் அப்பல்லோ, விஜயா, இசபெல் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய தனியார் மருத்துவமனைகளே இருந்து வந்தன. ஆனால் தற்போது நூற்றுக்கணக்கான தனியார் மருத்துவமனைகள் உருவாகியுள்ளன. இந்தியாவில் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக அமலுக்கு வந்தபின்னர் மருத்துவத்துறையிலும் தனியார் முதலீடுகள் பெருமளவு நுழைந்து விட்டன. அந்த அளவிற்கு மருத்துவத்துறை என்பது இலாபம் சம்பாதிக்கும் வர்த்தகத் துறையாக மாறிவிட்டது. 
        சென்னையில் அப்பல்லோ மருத்துவமனை மட்டுமே  பல இடங்களில் கிளைகளை திறந்திருக்கின்றன.  சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுதுமே பல இடங்களில் இதன் கிளைகள் மற்றும் தகவல் மையங்கள் இயங்குகின்றன. இது மட்டுமல்லாமல், மியாட், டிரிப்பிள் எம், வாசன், குளோபல், ஸ்ரீராமச்சந்திரா போன்ற  பெரிய மருத்துவமனைகளும்  பெருமளவு தோன்றி இருக்கின்றன. இந்த அனைத்து மருத்துவமனைகளிலும் இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு கொடுக்கப்படும் நவீனமயமான மருத்துவசேவை என்பதால்    அவை அனைத்தும் காசு உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதாகும். என்றாலும்  இலவச படுக்கைகள் பெயரளவுக்கே  அந்த மருத்துவமனைகள் வைத்துள்ளன. எனவே இந்த மருத்துவமனைகளில்  வசதி படைத்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் மருத்துவத்திற்காக  வருகிறார்கள் அல்லது மருத்துவக் காப்பீடு செய்துள்ளவர்கள் வருகிறார்கள்.
                  இப்படிப்பட்ட இந்த மருத்துவமனைகளுக்குத் தான் மத்திய - மாநில அரசுகள் போட்டிப்போட்டுக்கொண்டு சலுகைகளை வருகின்றன. மத்திய அரசு TAX - HOLIDAY என்ற பெயரில் வருமான வரி விலக்கு அளிக்கிறது. நோயாளிகளின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மருந்து மற்றும் அந்நிய செலாவணி சட்டங்களை இந்த மருத்துவமனைகள் காற்றில் பறக்கவிடுவதை மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை. மாநில அரசோ மின்சாரம் மற்றும் குடிநீர் போன்றவற்றை தாராளமாக விநியோகம் செய்கிறது. பல சமயங்களில் இவைகளுக்கான கட்டணத்திற்கு விலக்கு அளிப்பதும் அல்லது கட்டவேண்டிய கட்டண பாக்கிகளை வசூல் செய்யாமல் கண்டுகொள்ளாமல் இருப்பதும் அல்லது தள்ளுபடி செய்வதுமான வேலைகளை மாநில அரசாங்கமோ மனதார செய்கின்றது. நகராட்சி அல்லது மாநகராட்சிகளுக்கு கட்டவேண்டிய வரிகளுக்குக்கூட விலக்கு அளிக்கப்படுகிறது.
             இப்படியாக பல்வேறு வழிகளில்  பல்கிப் பெருகி நாள்தோறும் பல ஆயிரம் கோடிகளை  வருவாயாக  ஈட்டும் இந்த தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு இல்லை. கேள்வி கேட்டால் பணிநீக்கம். விலைவாசிக்கேற்ப ஊதிய உயரவு என்ற பழக்கமே இல்லை.  அதனால் அரசின் குறைந்தபட்ச சம்பளமும் அமல்படுத்தப்படமாட்டாது. தொழில் மற்றும் தொழிலாளர் சம்பந்தப்பட்ட எந்த சட்டப் பாதுகாப்பும் இந்த மருத்துவமனைகளில் கிடையாது.   இப்படியான  நவீன சுரண்டல்களில்  சிக்கித்தவிக்கும் இந்த மருத்துவமனை ஊழியர்கள், குறிப்பாக செவிலியர்கள் கடந்த சில நாட்களாக பொறுத்தது போதும் என பொங்கி எழுந்துவிட்டனர். சென்னையில் கடந்த சில நாட்களாக நடை பெற்ற போராட்டங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது  அப்பல்லோ, போர்டீஸ் மலர் மற்றும் டிரிப்பிள் எம் எனப்படும் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் ஆகிய மருத்துவமனைகளில்  பணிபுரியும் செவிலியர்கள் நடத்திய வீரமிக்க போராட்டம்தான்.
           இவர்களின் போராட்டத்தால் நிலைகுலைந்து போன  டிரிப்பிள் எம் மருத்துவமனை தனது மருத்துவமனை செவிலியர்களை அழைத்துப்பேசி சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. அதனால் அந்த மருத்துவமனை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் மிகப்பெரிய மருத்துவமனையான அப்பல்லோ தொடர்ந்து செவிலியர்களை பழிவாங்கி வருகியது. பணிக்கு உடனடியாக திரும்பாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மிரட்டியும் பார்த்தது.  புதிய செவிலியர்களை தேர்வு செய்ய முன்னணி ஆங்கில நாளிதழ்களில் விளம்பரங்களை வெளியிட்டு மிரட்டியது. இவை எதற்கும் அஞ்சாமல் செவிலியர்கள் நேற்றுவரை போராடினர். ஆனால்   இதுபோன்ற பிரச்சனைகளில் உடனடியாகத் தலையிடாமல் தமிழக அரசு மவுனம் சாதிப்பது என்பதும், வேடிக்கைப் பார்ப்பது என்பதும்  எந்த வகையிலும் சரியானதுமல்ல....முறையானதுமல்ல... இது வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல.
         பல்வேறு சூழ்நிலைகளில்  கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்று, கவுரவமான வேலையும், நியாயமான வருமானமும்  கிடைக்கும் என்று நம்பி தனியார் துறையில் நுழைந்துள்ள லட்சக்கணக்கான ஊழியர்களின் - இளைஞர்களின் எதிர்காலம் குறித்த பிரச்சனை என்பதை தமிழக அரசு மறந்துவிட்டது.  போராடும் செவிலியர்களை அழைத்துப் பேச மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டிய தமிழக அரசு பாராமுகமாய் இருந்தது என்பது கண்டிக்கத்தக்கது.  
          இனியாவது பணி நிரந்தரம், நியாயமான சம்பளம், தொழிலாளர் நலச்சட்டங்கள் ஆகியவற்றை அமல்படுத்த கறாராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசு தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால்   மனிதவள மேம்பாட்டில் தமிழகம் நாட்டில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்று பெருமை பேசி பயனில்லாமல் போய்விடும்.

புதன், 21 செப்டம்பர், 2011

கூடங்குளம் அணுமின் நிலையம் - மக்களின் அச்சமும் போராட்டமும் நியாயமானதே..!

             அண்மையில் நிகழ்ந்த சுனாமியினால் ஏற்பட்ட ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குள்ளான  பிறகு, உலக அளவில் அணு மின் நிலையங்கள் குறித்து மக்களுக்கு  பயமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளன என்பது அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மையாகும்.  இந்தப் பின்னணியில் தான்  இந்தியாவின் தென்கோடியில் உள்ள  கூடங்குளத்தில் மிக விரைவில் மின் உற்பத்தியை தொடங்கவிருக்கும் அணுமின் நிலையத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகளும், அங்குள்ள பொது மக்களும் கடந்த பதினொரு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
                ஜப்பானில் நேரிட்ட ஆழிப்பேரலைத் தாக்குதல் மற்றும் நிலஅதிர்வின் காரணமாக புகுஷிமா அணுஉலை விபத்துக்குள்ளாகி, கதிர்வீச்சு கசியத் தொடங்கிய நிகழ்வு மட்டுமே அந்த மக்களை பாதிக்கவில்லை. பிரான்ஸ், ஜெர்மன் போன்ற மேலை நாடுகளெல்லாம்  அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மின் உற்பத்திச் செய்யும் அணுஉலைகள் படிப்படியாக மூடப்படும் என அறிவித்திருப்பது என்பதும் கூட , கூடங்குளம் பகுதி மக்களுக்கு அச்சத்தை மேலும் அதிக படுத்தியுள்ளது என்பதும் உண்மை. அதனால் தான் இத்தனை காலமாக இல்லாத அளவுக்குப் போராட்டம் தீவிரமடைந்தது .
                 அணுமின் நிலையம் அமையுமானால், அணுஉலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் என்பது கதிரியக்கம் உள்ள கனநீர் ஆகும். எதிர் காலத்தில் இந்த கன நீரென்பது கடலில்தான் கலக்க விடப்படும். அதனால் அப்பகுதியில் மீன்வளம் குறைந்துவிடும். மீன்வளத்தை நம்பிவாழும் கடலோர மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதுபோன்ற அச்சமும்  இப்பகுதி மக்களிடையே எழுந்து அது எதிர்ப்பாக மாறியுள்ளது. மேலும், எதிர்காலத்தில்  அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்படுமானால் அதன் பின்விளைவுகள் பற்றிய அச்சமும் அதனோடு  சேர்ந்துகொண்டுவிட்டது என்பதும் தான் உண்மை.
                கூடங்குளம் அணுமின் நிலையம் கூடாது. அது மூடப்படவேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராடுவதில் நியாயம் இருக்கிறது. அதே சமயத்தில்  அந்த மக்களின் நியாயமான அச்சத்தை போக்குவதிலும் மத்திய - மாநில அரசுகளுக்கு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது.            
              அணு ஆற்றல் ஆணைய முன்னாள் தலைவர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் அவர்கள் இந்த போராட்டம் குறித்து பேசுகையில்,
             கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான பிரசாரத்தை முறியடிக்க, தீவிர மக்கள் தொடர்பு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஜப்பானில் ஃபுகுஷிமாவில் நடந்த விபத்தால், கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் பற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் மனதில் தவறானக் கருத்து குடிகொண்டுள்ளது.  அணு ஆற்றல் துறை, அணுமின் கழகம், அணு ஆற்றல் ஒழுங்குமுறை வாரியம் ஆகியவை மேற்கொண்ட விரிவான சோதனையில், ஃபுகுஷிமா விபத்து போன்ற சூழல் கூடங்குளத்தில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  
                 அணு மின்னாற்றலைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர்கள்தான், அணு உலைகளால் மனித உயிர்களுக்கு ஆபத்து என்று கூறி வருகிறார்கள். கூடங்குளத்தில் கூடுதல் நிலங்களைக் கையகப்படுத்துவதாகவும், அதனால் மீனவர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்றும் வதந்திகள் உலா வருகின்றன.  பல அணு உலைகளை நிறுவ நேர்ந்தாலும், கூடுதல் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. தாராப்பூர் மற்றும் கல்பாக்கத்தில் எவ்வித இடைஞ்சலும் இன்றி மீன்பிடி பணிகள் நடந்து வருகின்றன.  புதிய அணுமின் நிலையங்களைக் கட்டமைப்பதில் சீனா வேகமாகச் செயலாற்றுகிறது. மகாராஷ்டிர மாநிலம், ஜெய்தாபூரில் அணு உலை அமைக்க வேண்டும்.  கூடங்குளத்தில் ஒரு அணு உலை செயல்படும் நிலைக்கு வந்துள்ளது. மற்றொன்று அடுத்தாண்டு முதல் இயக்கப்படும். கூடங்குளத்தில் அதிகளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதை முடக்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அணு மின்னாற்றல் இந்தியாவுக்கு தவிர்க்க முடியாதது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் மின் தட்டுப்பாடு இருக்கிறது. இதைப்போக்க அணு மின்னாற்றல்தான் சிறந்த வழி என்றார் அவர்.
                 அவர் கூறிய தகவல்களையும் அச்சத்தில் உள்ள மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். முதலில் மக்களின் அச்சத்தை போக்கவேண்டும். அது தான் அரசின் முதல் கடமை ஆகும்.
 
 

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

தலைநகரில் தொழிலாளர்களின் எழுச்சிமிக்க பேரணி..



                    கடந்த பிப்ரவரி 23 அன்று நமது தலைநகர் புதுடெல்லியில் நாடுமுழுதுமிருந்து வந்திருந்த பல்வேறு தொழில்களை செய்யக்கூடிய லட்சகணக்கான  தொழிலாளர்கள் எழுச்சிமிக்க  போராட்டத்தை நடத்திக்  காட்டினர். ஒன்பது மத்திய தொழிற்சங்கங்கள் சேர்ந்து நடத்திய பாராளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணிதான் அது. அதில் தொழிலாளர்கள் மட்டுமல்ல மாதர் அமைப்பைச்சார்ந்த பெண்கள், இளைஞ்ர்கள், மாணவர்கள் என ஆட்சியாளர்களின் தவறான போக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்துத்தரப்பட்ட மக்களும் தலைநகரில்  லட்சக்கணக்கில் ஒன்றாக கூடி போராடியது என்பது சமீபகாலங்களில் இது தான் மிகப்பெரிய போராட்டமென்று டெல்லி மக்களே சொல்லக்கேட்டு புல்லரித்துப்போனோம்.
                  கட்டுப்பாடில்லாமல் உயர்ந்துவரும் விலைவாசி, தொழிலாளர் சட்டமீறல்கள், பெருகிவரும் வேலையின்மை, புதிய பென்ஷன் திட்டம் போன்ற சமூக பாதுகாப்பின்மை போன்ற கோரிக்கைகளை முழங்கிக்
கொண்டு பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள், இன்சூரன்ஸ் - வங்கி -பி எஸ் என் எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் வேலைசெய்யும் ஊழியர்கள், பாதுகாப்புத்துறை - இரயில்வேத்துறை போன்ற அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள், எல் ஐ சி முகவர்கள்  என பல்வேறு தொழிலாளர்கள் ஒன்றாக அணிவகுத்தது போராடியது  மெய்சிலிர்க்க வைத்தது.
                அந்த லட்சக்கணக்கான தோழர்களின் விண்ணதிரும்  முழக்கங்கள் பாராளுமன்றத்தையும்  அதிரசெய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இத்தனையும் பார்த்துக்கொண்டு எந்தவிதமான சலனமும் உணர்வும் அசைவுமில்லாமல் ஒரு பாறைபோல் பிரதமர் இருக்கிறாரென்பது  இந்த தேசத்தின் சாபக்கேடு. வாஜ்பாய்க்கு அடுத்து   ஒரு மிக  மோசமான பிரதமரை இந்த நாடு தேர்ந்தெடுத்திருக்கிறது என்பது துரதஷ்டவசமானது. 
               தனது தவறான கொள்கையினால் - தனது அமெரிக்க எஜமான விசுவாசத்தால் தருதளைத்தனமாக தான்தோன்றித்தனமாக செய்யும் ஆட்சியினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்திக்க தைரியமில்லாத , வக்கில்லாத பிரதமர் மன்மோகன்சிங் ஊடகங்களின் பத்திரிக்கைகளின் கைகளை கட்டிப்போட்டார் என்பது வெட்கக்கேடானது. டெல்லி மக்களே பிரமித்துப்போன மிகப்பெரிய பேரணி அங்கே பாராளுமன்றத்தை நோக்கி நடக்கிறது. அனால் அந்த இடத்தில் தொலைகாட்சி காமிராக்களும் பத்திரிக்கையாளர்களும் மிக சிலரே பார்க்கமுடிந்தது.  இந்த பேரணி
பற்றிய செய்தியோ படமோ தொலைகாட்சிகளிலும்   பத்திரிக்கைகளிலும் வராமல் தடுக்கப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை. 
               பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஒரு விஷயம் புரியவேண்டும். எகிப்து, லிபியா போன்ற அரபு நாடுகளில் எழுந்த மக்கள் எழுச்சி இங்கேயும் எழுவதற்கு ரொம்ப காலம் ஆகாது. மன்மோகன்சிங் தான்  கண்ணைமூடிக்கொண்டால் இந்தியாவே இருண்டுவிடும் என்று நினைத்தால்... அது முட்டாள்தனம்.