கேப்டன் லட்சுமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேப்டன் லட்சுமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 ஜூலை, 2012

நான் சந்தித்த இந்திய நாட்டின் மாமனிதர் - கேப்டன் லட்சுமி...!

நான் அண்ணாந்து பார்த்த தேசத்தின் உயர்ந்த மனிதர்...!

                    சென்ற 2007 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கான்பூரில் நான் சார்ந்திருக்கக்கூடிய அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 14 - வது மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பிரதிநிதியாக பங்குகொள்ளும் பெருமைமிகு வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. மாநாட்டிற்காக புறப்படும் போதே கான்பூரில் வசிக்கும் கேப்டன் லட்சுமி அவர்களை சந்திக்கவேண்டும் என்கிற திட்டத்தோடு தான் கிளம்பினேன். வாரணாசி எல். ஐ. சி. அலுவலகத்தில் பணிபுரியும் எனது நண்பர் தோழர். ராம்ஜி அவர்களிடம்  கேப்டன் லட்சுமி அவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யும்படி புதுவையில் இருக்கும் போதே  கேட்டிருந்தேன். மாநாட்டில் அவரைப் பார்த்ததிலிருந்தே அரிக்கத் தொடங்கிவிட்டேன். அவரும் முதல் நாளிலிருந்தே முயற்சி செய்து கொண்டிருந்தார். மாநாட்டிற்கு வந்த தோழர்கள் நிறைய பேர் அவரை தினமும் சந்திப்பதால், எனக்கு டிசம்பர் 10 - ஆம் தேதி தான்  கேப்டன் லட்சுமி அவர்களை பார்ப்பதற்கு அனுமதி கிடைத்தது. அந்த சமயம் கடுமையான  குளிர்காலம் என்பதாலும், வயது முதிர்ந்தவர் என்பதாலும் ( அன்று அவருக்கு வயது 92 ) நிறையத் தோழர்களை அனுமதிக்க முடியாது என்றும், எனவே என்னோடு சேர்த்து  வெறும் ஐந்து தோழர்கள் மட்டுமே வாருங்கள் என்றும் சொல்லி எங்களுக்காக தனி வாகனத்தையும் அமர்த்தியிருந்தார்கள். 
            அதன் படி அன்று மாலை 4 மணிக்கு, வேலூர் கோட்டத்திலிருந்து மாநாட்டிற்கு வந்தவர்களில் நானும், தோழர்கள் இராமர், பார்த்தீபன், வேலாயுதம், வேல்முருகன் ஆகியோரும் கேப்டன் லட்சுமி அவர்களின் வீட்டிற்கு சென்றோம். வீட்டிலிருந்தவர்கள் எங்களை வரவேற்று உட்காரச் சொன்னார்கள். கேப்டன் அவர்கள் அவரது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் நாங்கள் வந்திருக்கும் தகவலை சொன்னவுடன் எழுந்து வந்து விட்டார். எங்களை வணக்கம் சொல்லி வரவேற்றார். நான் அவரை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தேன். கடவுள் மீது நம்பிக்கையுள்ளவன் உண்மையிலேயே கடவுளைப் பார்த்தால் என்ன உணர்வு ஏற்படுமோ... அதே உணர்வு எனக்குள் ஏற்பட்டது. இந்த தேசத்தின் விடுதலைக்காக தியாகம் செய்த தலைவர்களான ஜான்சி ராணி, பாரதி, பகத்சிங், நேதாஜி, வ.உ.சி., போன்றவர்களையெல்லாம் நாம் பார்க்கவில்லையே. அவர்களெல்லோரும் வாழ்த்த காலத்தில் நாம் வாழவில்லையே என்று சிறு வயதிலிருந்தே பலமுறை நான் ஆதங்கப்பட்டிருக்கிறேன். ஆனால்  கேப்டன்  லட்சுமி அவர்களைப் பார்த்ததும் அந்த தலைவர்கள்  அத்துணை பேரையும் ஒருசேரப் பார்த்தது போல் ஒரு விதமான உணர்வு ஏற்பட்டது. 
              நாங்கள் மாநாட்டிற்காக தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறோம் என்று நாங்கள் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்த போது அவர் அழகிய தமிழில் ''தமிழ்நாட்டிலிருந்து வரீங்களா'' என்று பேசியதை கேட்டதும் எங்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது. வந்திருந்த எங்கள் ஐவரிடமும் தனித்தனியாக எந்தெந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டார். நான் பாண்டிச்சேரியிலிருந்து வருகிறேன் என்று சொன்னதும், ''புதுச்சேரி என்று சொல்லுங்கள்'' என்று திருத்தினார். வியந்து போய்விட்டேன். பிறகு அவரிடம் அவர் கலந்துகொண்ட விடுதலைப்போராட்டங்கள் பற்றியும், மாவீரன் நேதாஜி பற்றியும், காந்தி இவர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை பற்றியும் எங்களோடு நினைவு கூர்ந்தார். அந்த வயதிலும் பழைய நினைவுகளை மறக்காமல் அவர் சொன்னது என்பது எங்களை ஆச்சரியப்படச் செய்தது. 
             பேசிக்கொண்டு  இருக்கும் போது இடையில் தேநீர் வரவழைத்து எங்களை உபசரித்தார்.   எங்களுக்கு பெருமையாய் இருந்தது. இன்றைய ஆட்சியாளர்களைப் பற்றியும், இந்த நாடு போகும் போக்கைப்பற்றியும் கவலையோடு பேசினார். ஏறக்குறைய ஒருமணி நேரம் அவரோடுப் பேசிக்கொண்டிருந்தோம். விடைபெறுவதற்கே எங்களுக்கு மனமில்லை. அவரது ஓய்வு கருதி அவரிடம் மனமில்லாமல் பிரியாவிடைபெற்றோம். கிளம்புவதற்கு முன்பு நாங்கள் தனித்தனியாக அவரோடு சேர்ந்து - அவரது பக்கத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இறுதியாக புறப்படுவதற்கு முன்பு எங்களுக்கு உங்களது செய்தி என்ன என்று கேட்டபோது அவர் சொன்னது இப்போதும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. 

         ''இந்த நாட்டிற்கு அரசியல் விடுதலை கிடைத்துவிட்டது.... பொருளாதார விடுதலைக்கூட கிடைத்துவிட்டது..... ஆனால், சமூக விடுதலை என்பதும், பெண் விடுதலை என்பதும் இன்னும் இந்த நாட்டில் கிடைக்கவில்லை. தீண்டாமை என்பது இன்னும் ஒழியவில்லை. நீங்கள் அதற்காக போராடுங்கள்'' என்று செய்தியாகவும், அறிவுரையாகவும் அவர் கூறியதும் மெய்சிலிர்த்தது. புல்லரித்துப்போனது. 

              வணக்கம் சொல்லி அவரை விட்டு கிளம்பியப்பின்னரும், அந்த மாமனிதரை மீண்டும் நாம் எப்போது பார்க்கப்போகிறோம் என்கிற உணர்வோடு அவர் என் பார்வையிலிருந்து விலகும் வரையில் அவரைப் பார்த்துக்கொண்டே பின்னாலேயே நகர்ந்தே அவர் வீட்டின் படியிறங்கினேன். 
             அவரோடு இருந்த அந்த மணித்துளிகள் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத மணித்துளிகள். என் பிறப்பின் பலன் கிடைத்த மணித்துளிகள்.
              அவர் இறந்துவிட்ட இந்த நேரத்தில், கடந்த இரண்டு நாட்களாகவே என் மனசு சரியில்லை. என்றாலும், அவர் நமக்கு கொடுத்த வார்த்தைகளை - போராட்டக்குணங்களை மேலும் செம்மைப்படுத்தி, அவர் விட்டுச் சென்ற போராட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வோம் என்று என் மனம் என்னை ஆறுதல் படுத்தியது. ஆம்... அது தான் நாம் அவருக்கு செய்யும் இதே அஞ்சலியாகும்.

                                                

வாழ்க கேப்டன் லட்சுமி புகழ்...!

 

1)Captain Lakshmi 19431021 Singapore

1943 - இல் சிங்கப்பூரில் கேப்டன் லட்சுமி

  

 

 

 

 

 

 

 


19440107 Lakshmi in Burma 

1944 -இல் ரங்கூனில் மாவீரன் நேதாஜியுடன் கேப்டன்...

19440107_lakshmi_in_Burma with Bose 

  07.01.1944 அன்று ரங்கூனில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில்....

Captain Lakshmi  1943-1944 

நேதாஜிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை....

Captain Lakshmi インド国民軍(INA)]婦人部隊閲兵


Captain Lakshmi 行進Captain Lakshmi with Bose  1943


Lakshmi with S.C.Bose 1943

Dr. Lakshmi Swaminathan

 

 

 

 

செவ்வாய், 24 ஜூலை, 2012

தீரமும், கருணையும் நிரம்பிய கம்யூனிஸ்ட் தலைவர் கேப்டன் லட்சுமி - சிபிஎம் அரசியல் தலைமைக்குழு புகழஞ்சலி

         















 
       

        உத்வேகமூட்டக்கூடிய, தீரமிக்க விடுதலைப்போராட்ட வீரரும் அர்ப்பணிப்பு உணர்வோடும், கருணை உள்ளத்தோடும் எளிய மக்களுக்கு மருத்துவம் செய்து வந்த மருத்துவரும் பெண் உரிமைப்போராளியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உன்னதமான மதிப்புமிக்க உறுப்பினருமான கேப்டன் லட்சுமி செகால் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தனது இதயப்பூர்வமான ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை உருவாக்க உறுதுணையாக இருந்த தலைவர்களில் ஒருவரான அவர் மறையும்போது அந்த அமைப்பின் புரவலராக இருந்தார்.              கேப்டன் லட்சுமி கேரளத்தில் புகழ்மிக்க குடும்பம் ஒன்றில் பிறந்தார். சென்னையில் கல்வி பயின்ற அவர், மதி நுட்பம் மிகுந்த மாணவியாகத் திகழ்ந்தார். அவரது பெற்றோர் தங்களது வாழ்வை நாட்டிற்கு அர்ப்பணித்துக் கொண்ட விடுதலைப்போராட்ட வீரர்கள் ஆவர். அவரது தந்தையார் மிகச்சிறந்த வழக்கறிஞர், அவரது தாயார் சமூக ஊழியர் மற்றும் பெண்ணுரிமை பிரச்சாரகராகத் திகழ்ந்தவர் ஆவார்.
                கேப்டன் லட்சுமி தனது இளமைக்காலத்திலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவராக வளர்ந்தார். இந்த அர்ப்பணிப்பு உணர்வு அவரது வாழ்நாள் முழுவதும் அவரிடம் இருந்து வந்தது. அவரது பெற்றோர் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். இதனால் இளம்வயதிலிருந்தே லட்சுமி சாதிய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவராக வளர்ந்தார். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களிலேயே மாணவர்களிடையே சாதி, மத வித்தியாசம் கூடாது என்று போராடியவர் அவர்.
             1938ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்த அவர், 1940ல் சிங்கப்பூர் செல்ல முடிவு செய்தார். அங்கு மருத்துவராக பணியாற்றிய அவர் இந்திய விடுதலைக்கு பெருமளவு துணை நின்ற இந்திய சுதந்திர லீக் அமைப்பில் தம்மை இணைத்துக் கொண்டு தீவிரமாகப் பணியாற்றினார்.
                 1943ம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸின் நேரடி அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. இந்திய தேசிய ராணுவத்தில் பெண்கள் படைப்பிரிவை ஜான்சிராணி ரெஜிமெண்ட் என்ற பெயரில் அமைக்க சுபாஷ் சந்திர போஸ், லட்சுமிக்கு அழைப்பு விடுத்தார். கேப்டன் லட்சுமியின் முழு தலைமையின் கீழ் அந்த அமைப்பு அமைக்கப்பட்டது. அந்த அமைப்பின் கம்பீரமானத் தலைவராக விளங்கிய அவர் சிங்கப்பூரில் அமைக்கப்பட்ட ஆசாத் ஹிந்த் பிரதேச அமைச்சரவையில் ஒரே பெண் உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்பட்டார். இந்திய தேசிய ராணுவத்தின் தீரமிக்க தலைவராக விளங்கிய அவர், தனது வீரத்தினால் ஏராளமான உயிர்களை காப்பாற்றியுள்ளார். பிரிட்டிஷ் படையினரால் பிடிக்கப்பட்டு 1946ல் இந்தியா கொண்டுவரப்பட்ட போது அவருக்கு மிகச்சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
            சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து செயல்பட்ட பிரேம் செகாலை கேப்டன் லட்சுமி மணந்துகொண்டார்.
                 நாடு விடுதலைப் பெற்ற பிறகு கான்பூரில் தனது மருத்துவசேவையை கேப்டன் லட்சுமி துவக்கினார். கான்பூரில் லட்சக்கணக்கான ஏழை-எளிய பெண்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டார். அந்த மக்களின் நேசிப்புமிகுந்தவராக திகழ்ந்தார். எளிய மக்களுக்கு எந்தவிதமான கட்டணமும் பெறாமல் அவர் சேவை செய்தார். முன்னுதாரணமாகத் திகழ்ந்த தனது மருத்துவமனையில், எளிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அவர் நாள் முழுவதும் அயராமல் பாடுபட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முதல்நாள் கூட மருத்துவமனைக்கு சென்ற அவர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். இதுதான் அவரது அர்ப்பணிப்பு உணர்வு.
               1971ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான அகதிகள் இந்தியாவுக்கு வந்தனர். மேற்குவங்கத்தில் மக்கள் நிவாரணக்குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கு சேவையாற்ற மருத்துவர்கள் முன் வர வேண்டுமென்று தோழர் ஜோதிபாசு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பின்பேரில் மேற்குவங்கம் சென்ற கேப்டன் லட்சுமி, பல மாதங்கள் அங்கு தங்கியிருந்து நிர்க்கதியாக இருந்த அகதிகளுக்கு மருத்துவ சேவை அளித்தார்.
              இத்தகைய அனுபவத்திற்கு பிறகு கேப்டன் லட்சுமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய முடிவு செய்தார். கான்பூரில் கட்சி உறுப்பினராக இணைந்த அவர் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக உயர்ந்தார். பெண்ணுரிமை போராட்டத்தில் முன்னின்ற அவர், தாம் ஏற்றுக்கொண்ட கடமைகளோடு, பெண்களை அவர்களது உரிமைகளுக்காக அணிதிரட்டிய மிகச்சிறந்த கம்யூனிஸ்ட் பெண் தலைவராகவும் விளங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான அவர் அந்த அமைப்பை உருவாக்கி வளர்த்திட நாடு முழுவதும் அயர்வின்றி பயணம் செய்துள்ளார். அந்த அமைப்பின் துணைத் தலைவராகவும் செயல்பட்டார்.
               சோசலிசப் புரட்சித் தேவை என்ற கருத்தில் அவர் அழுத்தமான பிடிப்புக் கொண்டிருந்தார். அந்த லட்சியங்களுக்காகவே அவர் வாழ்ந்தார். பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான அவர், இளம்தலைமுறையினர் தலைமைப்பொறுப்புக்கு வரவேண்டும் என்று அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். நாடு முழுவதும் உள்ள ஏராளமான இளைஞர்களுக்கு நேசிப்புமிகுந்த தலைவராக அவர் விளங்கினார்.
                   விடுதலைப் போராட்ட வீரரும், தீரமும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட கம்யூனிஸ்ட் தலைவருமான கேப்டன் லட்சுமியின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்கொடி தாழ்த்தி தனது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறது. அவரது வாழ்வும் பணியும் இளம் தலைமுறையினருக்கு என்றென்றும் உத்வேகமூட்டக்கூடியதாக அமையும்.
            கேப்டன் லட்சுமியின் மகள்கள் சுபாஷினி அலி மற்றும் அனுசியா பூரி மற்றும் அவரது பேரக்குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கட்சி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

                                          கேப்டன் லட்சுமியின் புகழ் நீடுழி வாழ்க!