பா.ஜ.க. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பா.ஜ.க. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

இரு மாநிலத்தேர்தல்களில் பா.ஜ.க-வின் வெற்றி இரகசியம்...!

             அண்மையில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாக்கட்சி எதிர்பாராதவிதமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாகவும், ஹரியானா மாநிலத்தில் பெரும்பான்மை பெற்றக் கட்சியாகவும் வெற்றிபெற்றிருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்குப்பின் நடைபெற்ற இந்தியாவில் நடைபெற்ற மூன்று  இடைத்தேர்தல்களிலும் பலத்த தோல்விகளையே சந்தித்து வந்த பாரதீய ஜனதாக்கட்சி இப்போது மட்டும் வெற்றிபெற்றது எப்படி...? மக்களுக்கு எப்படி திடீரென்று பா.ஜ.க மீது நல்லெண்ணம் வந்தது....? நரேந்திரமோடி - அமித்ஷா இரட்டையர்கள் திட்டமிட்டு செய்த தந்திரம் தான் இந்த வெற்றிகளுக்கு கை கொடுத்தது.
            தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நூறே நாட்களில் நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும் என்று மக்களை நம்பவைத்து ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதாக்கட்சியானது  அமெரிக்க ஆதரவு மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் ஆதரவு கொள்கைகளையும், நடவடிக்கைகளையும்   முந்தைய காங்கிரஸ் கட்சியை விட அதிவேகமாக முன்னெடுத்து செல்வதும், அத்தியாவசிய பொருட்களின்  தொடர்ச்சியான விலை உயர்வு, உயிர்காக்கும் மருந்துகள் விலையேற்றம், பெட்ரோல் - டீசல் விலையேற்றம், இரயில் கட்டண உயர்வு, இன்சூரன்ஸ் மற்றும் இரயில்வே ஆகிய துறைகளில் அந்நியநேரடி முதலீடு உயர்வு, பாதுகாப்புத்துறையில் அந்நியநேரடி முதலீடு அனுமதி போன்ற மக்கள் விரோத - தேச விரோத செயல்களை முன்னெடுத்து செல்வதுமான வேலைகளை   மட்டுமே செய்துகொண்டிருப்பதால் பாரதீய ஜனதாகட்சியின் மீதும், பிரதமர் நரேந்திரமோடியின் மீதும் இந்திய மக்கள் அதிருப்தியிலும், ஏமாற்றத்திலும் இருப்பதால் தான் பாரதீய ஜனதாக்கட்சி  கடந்த இடைத்தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்தது என்பதை நாடு  நன்கு அறியும்.
   அப்படியிருக்க இந்த இரு வடமாநிலங்களின் சட்டமன்றத்தேர்தல்கள் நடைபெற்ற  தற்சமயமும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் போக்கில் மாற்றமும் வந்துவிடவில்லை என்பது மட்டுமல்ல. முன்னை விட வேகம் அதிகமாக உள்ள சூழ்நிலையில் தான் இந்த சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலின் போதும் அந்த இரு மாநில மக்களிடையே பா.ஜ.க-வின் மீது   அதே அதிருப்தியும், ஏமாற்றமும் இருந்தன  என்பதை யாராலும் மறுக்கமுடியாது. என்றாலும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாரதீய ஜனதாக்கட்சி எப்படி வெற்றிப்பெற்றது...? இந்த வெற்றியையும் ''மோடி அலை'' என்றும் ''மோடி சுனாமி''  என்றும் அமித்ஷாவும்  பா.ஜ.க-வினரும்  கொண்டாடி வருவது வேடிக்கையாய் இருக்கிறது.
                   ஆனால் மோடியின் ''தந்திரம்'' மோடிக்கு எதிரான அலையை வீழ்த்தி பா.ஜ.க-வுக்கு வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறது என்பது தான் உண்மை.  பாகிஸ்தானாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும் இவர்களின் தேர்தல் நேரங்களில்  இருநாடுகளுக்கும்  இடையே ''வேண்டுமென்றே'' உருவாக்கப்படும்  இராணுவ  மோதல்களையும்  எல்லைப் பிரச்சனைகளையும்   இந்த இரு  நாட்டு ஆளுங்கட்சியினரும்  தங்கள் வெற்றிக்கு  சாதகமாகவே மாற்றிக்கொள்வார்கள்  என்பது தான்  கடந்தகால வரலாறு. இது போன்ற இராணுவ மோதல்கள் அல்லது  தீவிரவாதசெயல்கள் போன்ற அச்சுறுத்தல்களை அதிருப்தியில் இருக்கும் மக்களை திசைத்திருப்பி    ஆட்சியாளர்கள் அல்லது ஆளுங்கட்சியினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்கள்.  அதிருப்தியிலிருக்கும்   மக்களின் கவனத்தை  திசைத்திருப்பி தங்களுக்கு சாதகமான ஓட்டுகளாக மாற்றி வெற்றிபெற்று விடுவர் என்பதும் உண்மையிலும் உண்மை. இந்த தந்திரத்தை தான் அந்தக்கால நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய் முதல் இந்தக்கால மோடி வரை செய்திருக்கிறார்கள். இந்த இரு மாநில தேர்தல்களிலும் படுதோல்வியை தவிர்ப்பதற்காக ''அதே  தந்திரத்தை'' பயன்படுத்தி தான் இன்றைய அரசியல் புத்திசாலியான  நரேந்திரமோடியும் வழக்கம்போல் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளை  உதவிக்கு வைத்துக்கொண்டு  மிக திறமையாக தேர்தலில்  வெற்றிபெற்றார் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. 
                  நீங்கள் இந்த இரு மாநிலத் தேர்தலுக்கு முந்தைய நிகழ்வுகளை பின்னோக்கிப் பார்த்தால் புரியும். இந்த தேர்தலுக்கு முந்தைய பதினைந்து நாட்களாக இந்திய - பாகிஸ்தான் எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இந்திய எல்லையில் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்துவதாகவும், பதட்டமாக இருப்பதாகவும் இந்திய  தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் அலறி துடித்தன. இந்த நிகழ்வுகளை பிரதமர் மோடியும், பா.ஜ.க தலைவர் அமித்ஷாவும் தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்திக்கொண்டு மக்களுக்கு தங்கள் மீதிருந்த அதிருப்தியை மறக்கச்செய்து திசைத்திருப்பினர். இது தான் இவர்களுக்கு இந்த வெற்றியை தேடித்தந்த இரகசியம். 
               ஆனால் இவர்களின் நல்லாட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்றெல்லாம் வார்த்தை ஜாலத்தை உதிர்க்கிறார்கள். அனால் உண்மை அதுவன்று என்பதும், எதுவென்று என்பதும் மக்கள் நன்கு  அறிவார்கள். இப்போது தேர்தலும், இந்திய-பாகிஸ்தான் பிரச்சனையும் ஓய்ந்துவிட்டது. ஊடகங்களும் தங்கள் திருப்பணி முடிந்து வேறு வேலையை பார்க்க சென்றுவிட்டன. 

சனி, 13 ஆகஸ்ட், 2011

மக்கள் பிரச்சனைகளை பேசாமல் நாடாளுமன்றத்தை முடக்கும் செயல் தேசவிரோதமானது.

                       சென்ற பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, வங்கி சம்பந்தப் பட்ட மசோதாவை அரசு அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அப்போது ஆளும் காங்கிரஸ்  கட்சி மற்று அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.-க்கள் அவையில் போதுமான பேர்கள் இல்லை. அதனால் அந்த மசோதாவைத் தாக்கல் செய்யமுடியாமல் போய்விடக் கூடும் என்கிற அச்சத்தில் மசோதா தாக்கல் செய்வதற்கான ஆதரவை முக்கிய எதிர்கட்சியான  பாரதீய ஜனதா கட்சியிடம் கோரிய போது  பா.ஜ.க. -வினர் மறுக்காமல் ஆதரவு தெரிவித்ததால் அந்த வங்கி மசோதாவை காங்கிரஸ் கட்சியினால் தடையில்லாமல் வெற்றிகரமாக தாக்கல்  செய்ய முடிந்தது  என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
               தேசத்தை சீரழிக்கும் வேலைகளை ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் கூட்டணி அமைத்துக் கொள்கிறார்கள். அதேப்போல் கடந்த ஒன்றாம் தேதி ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கும் பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் என்பது  துவங்கி இரண்டு வார காலம் ஆனபோதிலும், இரு அவைகளிலும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனும் வருத்தப்பட வேண்டிய ஒன்று ஆகும்.
                   நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அவைதுவங்கியது முதலே பிரதான பிரச்சனைகளிலிருந்து இரு அவைகளின் கவனத்தையும் திசைதிருப்பி பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களும் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதோடு .
நாட்டு மக்களை வதைக்கும் விலைவாசி உயர்வு, வரலாறு காணாத மெகா ஊழல்கள் உட்பட முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க விடாமல் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்திருப்பதில் ஆளும் காங்கிரசும் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் கூட்டுச்சேர்ந்து நாடகமாடுகின்றன என்று இடதுசாரி கட்சித்தலைவர்களும்  குற்றம்சாட்டுகின்றனர். 
               விலைவாசி உயர்வு உள்பட நாட்டு மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவிடாமல் பிரதான எதிர்க்கட்சியான பாஜக நாடாளுமன்றத்தை முடக்குவது என்பதும் , இந்தப்பிரச்சனைகளில் விவாதம் நடக்காமல் இருந்தால் சரி.. நாம் மாட்டிக்கொள்ளாமல்  இருந்தால் சரி என்று ஆளும் காங்கிரஸ் நடந்து கொள்வதும் அப்பட்டமான ஒரு நாடகமாகவே தெரிகிறது.
                    தினந்தோறும் நாடாளுமன்றத்தில் ஏதேனும் ஒரு பிரச்சனையை கிளப்பி அவை நடவடிக்கைகளை முடக்குவோம் என்று பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்றக் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்  கூறியிருப்பது என்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. பாஜக மட்டுமே இந்த நாட்டின் ஒட்டுமொத்த எதிர்க்கட்சி அல்ல என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் இடத்தையும் மதிப்புமிக்க நேரத்தையும் தங்களது அர்த்தமற்ற கூச்சல் குழப்பத்தின் மூலம் பா.ஜ.க ஆக்கிரமித்துக்கொள்வது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.