இலங்கைப் பிரச்சனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கைப் பிரச்சனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 மே, 2013

60 ஆண்டுகளாக நீடிக்கும் இலங்கைப் பிரச்சனை - அரசியல் தீர்வே நிரந்தரத் தீர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் 
தோழர். ஜி.ராமகிருஷ்ணன் மதுரையில் ஆற்றிய உரை :-       

        தமிழ் வளர்ச்சிக்கான குரல்தமிழ் மக்களுக்கும், தமிழர் நலனுக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் கம்யூனிஸ்ட்டுகள் ஆற்றிய பணி மகத்தானது. மொழிவழி மாநிலக் கோரிக்கை எழுப்பிய இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். தமிழகத்தை மொழிவழி மாநிலமாக அறிவிக்கக்கோரி தோழர்கள் பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், என்.சங்கரய்யா ஆகியோர் பல ஆண்டுகள் போராடியுள்ளனர். அன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இருந்தன. ஆனால், தமிழகத்தில் மொழிவழி மாநிலமாக உருவாக்கியப் பெருமை கம்யூனிஸ்டுகளைத் தான் சேரும். ஒன்றுபட்ட சென்னை ராஜதானிக்கு சென்னை எனப்பெயர் சூட்ட வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் கோரிக்கை வைத்தன. அப்போது சென்னையோடு ஆந்திராவின் பல பகுதிகள் இருந்தன. ஆனாலும், அவை சென்னைக்குச் சொந்தம் என தைரியமாக குரல் கொடுத்தவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் பி.சுந்தரய்யா. மொழிவழி மாநிலம் அமைந்த போது ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக தோழர் பி.ராமமூர்த்தி இருந்தார். 1952 - ஆம் ஆண்டு முதல் சட்டமன்றத் தேர்தலில் மதுரைச்சிறைச்சாலையில் இருந்தே தோழர் பி.ராமமூர்த்தி வெற்றி பெற்றார். அவர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். வண்ணாரப்பேட்டை தொகுதியில் இருந்து தோழர் ப.ஜீவானந்தம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது தமிழக சட்டமன்றத்தில் ஆங்கிலத்தில் தான் பேச முடியும். ஆனால், ஆங்கிலத்தில் பேச மாட்டோம்: தமிழில் தான் பேசுவோம் என பேசிய பெருமை பி. ராமமூர்த்தியையும், ப.ஜீவானந்தத்தையும் சாரும். சென்னை ராஜதானி என்ற பெயரை தமிழ்நாடு என அறிவிக்க வேண்டும் என்று 75 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த விருதுநகர் தியாகி சங்கரலிங்கனார், தனது உடலை கம்யூனிஸ்ட்டுகளிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்தார். அவரது உடலை கே.டி.கே.தங்கமணி, கே.பி.ஜானகியம்மாள் ஆகியோர் பெற்று இறுதி நிகழ்ச்சியை நடத்தினர். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பி.ராமமூர்த்தி சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் முதல் முதலாக குரல் கொடுத்தார்.
        மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா, நாங்கள் முன்மொழிய வேண்டிய தீர்மானத்தை பி.ராமமூர்த்தி முன்மொழிந்தார். அதை ஆதரிக்கிறேன் என்று பேசிய பேச்சுகள் நாடாளுமன்ற குறிப்புகளில் உள்ளது. தமிழ்மொழிக்கு மட்டுமின்றி தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டவர்கள் கம்யூனிஸ்டுகள். 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தைத் தரக்கூடிய நெய்வேலி அனல் மின்நிலைய துவக்கப்பணிகள் துவங்கிய போது, பீறிட்ட நீருற்றை நிறுத்த முடியாமல் பணிகளைக் கைவிட்டனர். ஜெர்மனியில் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டிருந்த பி.ராமமூர்த்தி அந்த நாட்டின் உதவியோடு நெய்வேலி அனல் மின் நிலைய பணிகளை முடிக்க அயராது பாடுபட்டார். மேட்டூர் அணைக்கட்டு, சேலம் உருக்காலை, திருச்சி பெல் தொழிற்சாலை உருவாகியதில் கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்களிப்பு உள்ளது . 1967 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த என்.சங்கரய்யா, ஏ.பாலசுப்பிரமணியம், என்.வரதராஜன் ஆகியோர் ஆற்றிய பணி மகத்தானது.  
          கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கைத்தமிழர் நலனுக்காக கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 60 ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறது. இலங்கைத் தமிழர்களின் துயரங்களுக்கு நிரந்தத் தீர்வு காணவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி, இலங்கை தமிழர்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்க மறுத்துவிட்டனர். மேலும், இலங்கை அரசுடன் இணைந்து, இந்திய ராணுவத்தை வெளியேற வைத்தனர். அதன்பிறகு, நார்வே நாட்டினர் முன்னிலையில் சமரசப் பேச்சுக்கான முயற்சியும் தோல்வியில் முடிந்ததால், போர்மூளும் ஆபத்து ஏற்பட்டது.
             2008,2009 - ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழர்களின் வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டன. மருத்துவமனைகள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசித்தாக்கியது. ஐ.நா.மன்றத்தின் அலுவலகத்தின் மீதும் குண்டு வீசப்பட்டது. யுத்தம் முடிந்து 4 ஆண்டுகளாகியும் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட செய்தி அனைவரின் நெஞ்சையும் பதறவைத்தது. இலங்கையில் 50 ஆயிரம் தமிழர்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். காணாமல் போன இளைஞர்கள் பற்றிய தகவல் இல்லை. ஐ.நா. பொதுச்செயலாளர், கொழும்பு சென்ற போது ராஜ பக்சே அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதிகாரபரவல் அளிக்கப்படாது. வடக்கு , கிழக்கு மாகாணங்களை இணைத்து சுயாட்சி தமிழர்களுக்கு வழங்க முடியாது என கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராஜபக்சே திமிராக அறிவித்தார்.
          அண்மையில் தமிழகத்தில் மாணவர்கள், வாலிபர்கள் மத்தியில் போராட்ட அலை எழுந்தது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பல இயக்கங்களை தொடர்ந்து நடத்தியுள்ளது. சாத்தியமுள்ள கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இலங்கையில் தனி ஈழம் அமைவது தான் தீர்வு என சில அமைப்புகள் சொல்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. பூர்வீக தமிழர்கள், மலையக தமிழர்கள், தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் என இலங்கையில் மூன்று பகுதிகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் யாரும் தனி ஈழத்தை ஆதரிக்கவில்லை. இந்த நிலையில் ஈழம் என்ற கோரிக்கை சாத்தியமா? இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு சொல்வது அந்த நாட்டு மக்களின் முடிவாகும். பிரச்சனைகளைத் தீர்க்க நடை முறை சாத்தியமுள்ள கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார முற்றுகை நடத்த வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைக்கிறார்கள்.
          இலங்கையின் தலைநகர் கொழும்புவில் நடைபெறும் ஜவுளி வர்த்தகத்தை நடத்துபவர்கள் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் தான். இந்த பொருளாதார முற்றுகையால் அவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். இந்தியா, இலங்கைக்கு நட்பு நாடு என கருதக்கூடாது என்ற கோரிக்கையையும் சிலர் முன்வைக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடைபெறும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவி செய்து வருகிறது. இலங்கை நட்பு நாடு இல்லையென்று கருதினால், தமிழர்கள் பகுதியில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை எப்படி அமல்படுத்துவது? இலங்கையில் உள்ள சிங்களர்கள் அனைவரும் தமிழர்களுக்கு எதிரிகள் அல்ல.
         இலங்கையில் உயர்கல்வி தனியார் மயமாக்க நடைபெற்ற முயற்சியை எதிர்த்து சிங்களர், தமிழர் மாணவர்கள் ஒன்றிணைந்து சர்வாதிகார ராஜபக்சேயின் முடிவை மாற்றியமைத்தனர். இப்படிப்பட்ட ஒற்றுமை உணர்வு வளர்க்கப்பட வேண்டும். இலங்கையில் போர்க்குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அதற்கு சுயேட்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு இந்தியா ராஜ்ய ரீதியான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதியில் அதிகார பரவல் ஏற்பட இந்தியா அரசு உதவ முன்வர வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு தான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். தமிழர்களுக்கு சமஅந்தஸ்து, அதி காரப்பரவல், அடிப்படை உரிமைகள் கிடைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும்.

சனி, 6 ஏப்ரல், 2013

மாணவர் போராட்டமும் போதைகளும்...! - எழுத்தாளர் ஞாநி

          
தமிழ்நாட்டில் நடந்து முடிந்திருக்கும் மாணவர் போராட்டம் பற்றிப் பல்வேறு விவாதங்கள், சர்ச்சைகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. 
          போராட்டம் ஒரு பெரும் எழுச்சியின் அடையாளம்; இல்லையில்லை - சின்ன அளவில் நடந்ததை தமிழ் தேசிய அமைப்புகள், புலிகள் ஆதரவு அமைப்புகளின் தீவிர இளைஞர்கள் பின்னின்று நடத்தி சேனல்களின் உதவியுடன் ஊதிப் பெரிதாக்கிக் காட்டிய போராட்டம்தான் இது; சிறுவன் பாலச்சந்திரனின் படுகொலை பற்றிய படங்கள் கிளறிவிட்ட அடிப்படை மனிதநேய உணர்ச்சிகளுக்கு அப்பால் மாணவர்களுக்கு உலக அரசியல் தெரியவில்லை, உள்ளூர் அரசியலும் தெரியவில்லை, உணர்ச்சி மட்டுமே இருக்கிறது; ஈழத்தமிழர்களின் முதல் தேவை அங்கே ராணுவ நீக்கமும், வாழ்வாதார வாய்ப்புகளும், படிப்படியான அரசியல் உரிமைகளுமே தவிர, ராஜபட்சே கும்பலைத் தண்டிக்கக் கூக்குரலிடுவதால் ஒரு பயனுமில்லை; புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நலன் வேறு, ஈழத்திலேயே வாழும் தமிழர்களின் நலன் வேறு; இன்னொரு ஆயுதப் போராட்டம்தான் ஈழத்தைப் பெற்றுத் தரும்; இல்லையில்லை பொது வாக்கெடுப்பின் மூலமே அறவழியில் ஈழம் பெற முடியும்; இரண்டும் சாத்தியமில்லை - தனி ஈழம் அமைய ஒருபோதும் அமெரிக்கா, சீனம், இந்தியா மூன்று நாடுகளும் அனுமதிக்கப்போவதே இல்லை; ராஜபட்சே அரசின் மூலம் தங்கள் புவி அரசியல் லாபங்களுக்காக மூன்று நாடுகளும் காய் நகர்த்துவதைத் தவிர வேறேதும் நடக்கப்போவதில்லை; இல்லையில்லை - மாணவர்கள் எழுச்சி அடுத்தகட்டத்தில் இந்திய ஒருமைப் பாட்டையே கேள்விக்குள்ளாக்கும் வலிமை உடையது - என்று பற்பல பார்வைகள் இந்த விவாதங்களில் வெளிப்படுகின்றன.
              இவை எதையும் என்னால் முழுமையாக ஏற்கவும் முடியாது; முழுமையாக நிராகரிக்கவும் முடியாது. எல்லாப் பார்வைகளும் கொஞ்சம் கொஞ்சம் உண்மைகளை, யதார்த்தத்தைத் தம்முள் வைத்திருக்கின்றன.
             கலைஞர் கருணாநிதியே புலம்பியது போல தி.மு.கவை மத்திய ஆட்சியிலிருந்து விலகச் செய்ததைத் தவிர வேறு எந்த நன்மையும் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டுவிடவில்லை. போர் சமயத்தில் இப்படிப்பட்ட நெருக்கடியைக் கொடுத்து போர்நிறுத்தம் செய்ய வைத்து, கொஞ்சம் உயிர்களையேனும் காப்பாற்றி இருக்கக் கூடிய கடமையைச் செய்யத் தவறியதற்காக இப்போது தி.மு.க.வுக்குத் தரப்பட்ட தண்டனையாக இந்த ஆட்சி விலகல் நிர்ப்பந்தத்தைக் கணித்து ஆறுதலடையலாம். ஆனால், ராஜபட்சே கும்பலுக்கோ, விடுதலைப் புலிகளுக்கோ அவரவர் போர்க் குற்றங்களுக்காக, அரசியல் பிழைகளுக்காக இப்படி தண்டனை அளிப்பது அவ்வளவு எளிதல்ல. தமிழக மாணவர்களின் போராட்டத்தின் சக்தி என்பது தி.மு.க.வை மத்திய அரசிலிருந்து பதவி விலக வைக்கும் அளவுக்குத்தான் உள்ளது. 
         அதே சமயம் இந்தப் போராட்டம் எத்தனை குறைபாடுகள் நிரம்பியதாக இருந்தாலும், ஈழத் தமிழர் பிரச்னையில் இந்திய அரசின் மெத்தனத்தை, தவறுகளை, இந்திய அரசியல் கட்சிகளின் அரைகுறை புரிதலை, அலட்சியத்தை, கடுமையாக வெளிப்படுத்த உதவியது. மாணவர்கள் ஏன் இதே உந்துதலுடன் அண்மைக் காலத்தில் வேறு பிரச்னைகளில் போராடவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. காவிரி, முல்லைப் பெரியாறு, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு, தர்மபுரி சாதிவெறித் தாக்குதல் போன்றவற்றில் இதே வீரியத்துடன் ஏன் போராட வரவில்லை என்று கேட்கப்படுகிறது. ஒரே காரணம்தான். அவை எதுவும் பாலச்சந்திரன் முகம் எழுப்பும் உணர்ச்சிகளை எளிதில் எழுப்பவல்லவை அல்ல. அவை எதுவும் உணர்ச்சி அடிப்படையில் போராடக்கூடிய பிரச்னைகளும் அல்ல. அறிவார்ந்த தெளிவின் அடிப்படையில் மட்டுமே போராடப்படக் கூடியவை. 
      இப்போது நடந்த மாணவர் போராட்டம் போல 1965 மொழித் திணிப்பு எதிர்ப்புக்குப் பின்னர் இதுவரை நடந்ததில்லை என்றும் ஒரு கருத்து பேசப்படுகிறது. இவையெல்லாம் மிகைக் கருத்துகளே ஆகும். இடதுசாரி இயக்கங்களில், கட்சிகளில் தம்மை இணைத்துக் கொண்ட மாணவர்கள் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தொண்ணூறு களிலும் இரண்டாயிரங்களிலும் பல்வேறு பிரச்னைகளில் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கடைசியாகக் கூடச் சமச்சீர் கல்வியில் சுணக்கம் ஏற்பட்டதை எதிர்த்தும், பள்ளிக்கட்டண விஷயத்திலும் போராடிக் கொண்டுதான் இருந்தார்கள். கட்சிகளைச் சாராமல் மாணவர்கள் போராடுவதாகக் காட்ட விரும்பும் மீடியா, அரசியல் இயக்கங்கள் சார்ந்த மாணவர்கள் இளைஞர்கள் போராட்டங்களை எப்போதுமே பெரிதாக சித்திரிப்பதில்லை. எல்லா அரசியல் கட்சியும் மோசம் என்ற பார்வையை விரும்பும் மீடியா அதை ஊக்குவிக்க வசதியாக அண்மை மாணவர் போராட்டத்தை வடிவமைத்துக் காட்டியது என்பதும், இதைத் தங்களுக்கு வசதியான தந்திரோபாயமாகக் கருதிய அரசியல் சக்திகள் முகம் காட்டாமல் மாணவர்களுக்குப் பின் நின்றன என்பதும் மீடியா- அரசியல் ஆய்வுக்கான விஷயங்கள்.
          மாணவர்கள் இன்னின்ன விஷயங்களுக்காகப் போராடவில்லை என்று பட்டியல் போடுவதில் ஓரளவுக்கு மேல் அர்த்தமில்லை. போராடியதை மீடியா எப்படிக் காட்டுகிறது என்பது முக்கியம். எதற்குப் போராடுகிறார்களோ அதை எப்படி என்ன புரிதலோடு போராடுகிறார்கள் என்பது முக்கியம். அவ்வளவுதான்.முதலில் மாணவர்கள் எதற்கும் ஏன் போராட வேண்டும் என்று கேட்பவர்களும் உண்டு. படிக்கும் வயதில் படித்து அறிவையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர வேறு எதிலும் கவனத்தைச் சிதறவிடக் கூடாது. அப்போது தான் பின்னாளில் எந்தத் துறையிலும் எந்தப் பிரச்னையையும் எதிர் கொண்டு தீர்க்க அவர்களால் இயலும் என்று கருதுவோர் உண்டு. அண்மையில் சென்னைப் பல்கலைக்கழக மீடியா துறைக் கருத்தரங்கில் பேசிய ஒரு பேராசிரியர், தங்கள் ஆசிரியர்களான மு.வ, பாலசுப்ரமணியம் ஆகியோர் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் மொழிப் போராட்டத்திலேயே மாணவர்கள் பங்கேற்பதை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்தார். தேர்வுக் காலங்களில் செய்தித்தாள்களைக் கூட தினசரி படிக்காமல் சேர்த்து வைத்து ஒரு மாதம் கழித்து மொத்தத்தையும் படித்தால் போதும் என்று அறிவுரைகள் சொல்லப்பட்டதாம். மாணவ பருவத்தில் உலக அரசியலில், சமூகத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும் ; ஆனால் ஈடுபடக் கூடாது என்பதே அந்தப் பார்வை.அறிந்து வைத்துக் கொள்வது என்பதே இன்று பெரும் சிக்கலாக இருக்கிறது. மாணவர்களை, இளைஞர்களை அறியாமையில் வைத்திருப்பதையே அதிகாரத்தில் இருக்கும் எல்லாரும், குடும்பம் முதல் அரசு வரை விரும்புகிறார்கள். பிழைக்கும் வழி மட்டும் தெரிந்தால் போதுமென்கிறது குடும்பம். உழைக்கும் வழி மட்டும் தெரிந்துகொள் என்கின்றன அரசு, தனியார் நிர்வாகங்கள்.ஈழத் தமிழர்களின் இன்னலை தமிழக மாணவர்களால் துடைக்க முடியுமா என்பதை விடப் பெருங் கவலையாக எனக்கு இருப்பது, தமிழக இளைஞர்களை, மாணவர்களை மதுவிலிருந்து காப்பாற்ற முடியுமா என்பதுதான்.சினிமா, டி.வி. போதைகள் தவிர மது போதையும் மாணவர்கள் மத்தியில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. மது குடிக்க ஆரம்பிக்கும் வயது 12,13 ஆகிக் கொண்டிருக்கிறது. பியர், ஒயின் மட்டும்தான் என்று தொடங்கி எது கிடைத்தாலும் சரி என்ற சரிவு நிலையை நோக்கிப் போகிறது மதுப்பழக்கம். சாலை விபத்துகள், குடும்பச் சீரழிவு, உழைக்கும் திறன் நலிவு என்று பல கோணங்களில் மது இன்று தமிழகத்தைப் பாதித்துக் கொண்டிருக்கிறது.
             இந்த வாரம் மூன்று பெண்களைச் சந்தித்தேன். மூவருக்கும் வயது சுமார் 30லிருந்து 40க்குள்தான். இரண்டு பேர் இருபது வருடங்களுக்கு முன்னர் எங்கள் வட்டாரத்தில் வீட்டுப் பணியாளர்களாக இருந்தவர்கள். இன்னொருத்தி எங்கள் குடியிருப்பின் நடைபாதையில் குடியிருந்த ஒரு தொழிலாளியின் மகள். மூவரையும் சிறுமிகளாக அறிவேன். மூவருமே உற்சாகமும் துடிப்பும் உழைப்பும் நிரம்பியவர்களாக அப்போது இருந்தவர்கள். இப்போது உழைப்பு மட்டும்தான் எஞ்சியிருக்கிறது.இப்போது மூவரும் விதவைகள். மூவரின் கணவர்கள் மரணத்துக்கும் காரணமாக அமைந்தது மதுதான். ஒவ்வொரு வாரமும் இப்படி ஏதோ ஓர் ஏழைக் குடும்பத்தை மது வெட்டி சாக்கும் கதை காதில் விழுந்து கொண்டே இருக்கிறது. முப்பது வருடங்களில் கடும் ஏழைமையிலிருந்து மேலே எழுந்து வந்த குடும்பங்களையும் எனக்குத் தெரியும். அடுத்த தலைமுறையில் படிப்பை ஆயுதமாகக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்ந்தவர்கள் அவர்கள்.அந்த வாய்ப்பை ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் தன் அடுத்த தலைமுறையில் பெற்றுவிட முடியும் என்ற கனவில் இருக்கிறது. அப்படித்தான் இந்த மூவரும் தங்கள் குழந்தைகளை இப்போது படிக்க வைக்கச் சிரமங்களை மீறி முயற்சிக்கிறார்கள். இந்தக் குழந்தைகள் மதுவில் சிக்கினாலோ அல்லது கணவர்கள் மதுஅடிமைகளாக அமைந்தாலோ இன்னொரு தலைமுறையும் படுகுழியில். முன் தலைமுறையின் ஏழைமையிலிருந்து அடுத்த தலைமுறை விடுபடும் வாய்ப்பை இன்று மிகப்பெரும் அளவில் குலைத்துக் கொண்டிருக்கும் காரணங்களில் தலையாயது மதுதான்.மதுவைப் பக்குவமாகக் குடிக்கப் பழகவேண்டும் என்று சொல்லும் அறிவு ஜீவிகள் தயவுசெய்து அப்படிப்பட்ட பக்குவமான சமூகங்களுக்குப் புலம் பெயர்ந்து போய்விடும்படி கேட்டுக் கொள்கிறேன். இங்கே இப்போது அது சாத்தியமே இல்லை. மது விலக்கைக் கொண்டு வந்தால் கள்ளச் சாராயத்தில் பலரும் சாவார்கள் என்று வாதாடும் அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சொல்வேன்: இப்போது இரண்டு கோடி பேர் தினமும் குடிக்கிறார்கள். இதில் கள்ளச் சாராயத்தைக் குடித்து இருபது லட்சம் பேர் சாகும் வாய்ப்பு உண்டா? இல்லை. அப்படியே இருபது லட்சம் செத்தாலும், மீதி ஒரு கோடி எண்பது லட்சம் பேர் குடியிலிருந்து மீளமாட்டார்களா? மதுவிலக்கு இருந்த முப்பது ஆண்டுகளில் கூட இங்கே முப்பதாயிரம் பேர் செத்த வரலாறு இல்லை. ஆனால் ஆண்டுதோறும் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவோரால் குடிக்காதவர்கள் உட்பட பத்தாயிரம் பேர் சாகிறார்கள். மாணவர்கள் படிக்கிற காலத்தில் போராடுவது, படித்து முடித்தபின் போராடுவது எதுவானாலும் சரி, சுய சிந்தனையும் தெளிவும் இருந்தால்தான் இரண்டும் சாத்தியம். இரண்டையும் அழிக்கும் மது, மாணவர்கள் மத்தியில் பெருகிக் கொண்டிருக்கிறது. போராட்டங்களில் பங்கு பெறும் மாணவர் எண்ணிக்கையை விட, மது குடிக்கும் மாணவர் எண்ணிக்கைதான் அதிகம் என்பது கசப்பான உண்மை.
              அரசியல் கட்சிகளும் அதற்கு அப்பாற் பட்டவர்களும் சேர்ந்து மதுவை ஒழிக்காவிட்டால், தமிழகத்து தமிழன் வருங்காலத்தில் தனக்காகவும் போராட மாட்டான்; மற்றவருக்காகவும் போராட மாட்டான். போரில் அநீதியாக தமிழர்களைக் கொன்ற ராஜபட்சேவை விட, கத்தியின்றி ரத்தமின்றித் தமிழர்களைக் கொன்ற பெரிய கொலைகாரர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான் என்று நாளைய வரலாறு குறிக்கப் போவதைத் தடுக்க விரும்பினால், இருவரையும் கேட்டுக் கொள்வேன். தயவு செய்து நீங்கள் ஏற்படுத்திய இழிவை உங்கள் காலத்திலேயே நீக்குங்கள். 

நன்றி : ''மழைக்காகிதம்'' - வலைப்பூ

 

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

இலங்கைத் தமிழர்களின் சொந்தங்களே.... இதை கொஞ்சம் படியுங்கள்....!

 கேலிச்சித்திரம் அல்ல... கேலிக்கூத்து... 

   கட்டுரையாளர் : தோழர். டி.கே.ரங்கராஜன், எம்.பி.,          

              குமுதம் ரிப்போர்ட்டர் ஏட்டில்(7-4-2013) ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டுள்ளது. ஈழத்திற்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தமிழக சட்டமன்ற தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்காததால் ராஜபக்சேவுடன் தோழர்கள் பிரகாஷ் காரத்தும், ஜி.ராமகிருஷ்ணனும் சேர்ந்து நிற்பது போல இந்தக் கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தனி ஈழம் தீர்வல்ல, அந்த மக்களின் இப்போதைய உடனடித் தேவை மறுவாழ்வு, மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை என்று வலியுறுத்துபவர்கள் அனைவருமே ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் என்று கூறுவது கேலிச்சித்திரம் அல்ல, கேலிக்கூத்து என்றே கூறவேண்டும். 
        இலங்கைப் பிரச்சனையைப் பொறுத் தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்பின் முரணின்றி தனது கருத்தை முன்வைத்து வருகிறது. 1983ம் ஆண்டில் இருந்தே இலங்கை இனப்பிரச்சனைக்கு ஆயுதமோதல் தீர்வாகாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிகபட்ச சுயாட்சி வழங்க வேண்டும். தமிழும் தமிழரும் அனைத்து நிலைகளிலும் சமமாக நடத்தப்பட வேண்டும். இதற்கு ராஜீய ரீதியில் இந்திய அரசாங்கம் தலையிட்டு உதவ வேண்டும்.
            இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் தர வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இலங்கை சுதந்திரம் அடைந்த கடந்த 60 ஆண்டுகளில் பண்டார நாயகா, சிரிமாவோ பண்டாரநாயகா, ஜெயவர்த்தனே, சந்திரிகா குமாரதுங்கா, பிரேமதாசா, ரணில் விக்ரமசிங்கே, தற்போது ராஜபக்சே என இலங்கையின் ஆட்சியாளர்கள் மாறி வந்த போதும் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண்பதில் போதுமான அக்கறை செலுத்தப்படவில்லை. இதை அவ்வப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி சுட்டிக்காட்டி வந்துள்ளது. இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு என்ற கருத்தை முன்வைத்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அவதூறு செய்தவர்கள் அப்போதும் உண்டு, இப்போதும் உண்டு. தீவிரமான இனவெறி கிளப்பிவிடப்பட்ட தருணத்திலும் கூட கட்சி தனது கருத்தை தைரியமாக முன்வைத்து வந்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கருத்துக்கூற யாருக்கும் உரிமை உண்டு. இந்திய அரசு பின் பற்றும் அயல்துறை கொள்கையில் தனக்குள்ள மாறுபட்ட கருத்தை மார்க்சிஸ்ட் கட்சி அவ்வப்போது தெரிவித்துள்ளது. உதாரணமாக, பண்டிதநேரு பிரதமராக இருந்த நேரத்தில் கூட்டுச்சேரா அயல்துறை கொள்கையில் அவரது அரசுக்கு இருந்த ஊசலாட்டத்தை சுட்டிக்காட்டியுள்ளோம்.அமெரிக்காவின் உதவியுடன் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்து புரிந்து வரும் அட்டூழியத்தை கட்சி கண்டித்து வந்துள்ளதோடு, இஸ்ரேலுடன் பாதுகாப்புத்துறை தொடர்புடைய ஒப்பந்தங்களை இந்திய அரசு செய்து கொள்ளக்கூடாது என்றும், அந்நாட்டின் இனவெறி கொள்கைகளை நிராகரிக்க வேண்டும் என்றும் கட்சி கூறிவந்துள்ளது. இப்போதும் போராடும் பாலஸ்தீன மக்களுக்கு தனது ஒருமைப்பாட்டை கட்சி தெரிவிக்கிறது. இந்திய அரசு எடுத்த அமெரிக்கா சார்பு அயல்துறை கொள்கையை கட்சி தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளது.
          குறிப்பாக அமெரிக்க அரசுடன் மன்மோகன் சிங் அரசு செய்துகொண்ட 123 ஒப்பந்தம் இந்தியாவில் தொடர் விபரீதங்களை உருவாக்கும் என்று கட்சி எச்சரித்தது. அந்த உடன்பாட்டின் தொடர்ச்சியாகவே தற்போது சில்லரை வர்த்தகம், காப்பீடு, வங்கி என அனைத்து துறைகளிலும் தங்குதடையற்ற அந்நிய முதலீட்டுக்கு கதவு திறந்துவிடப்படுகிறது. ஒரு அரசு எடுக்கும் அயல்துறை கொள்கை உள்நாட்டு கொள்கையையும் பாதிக்கும். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமெரிக்காவுடன் அணுசக்தி உடன்பாடு செய்துகொள்ள முயன்றபோது, மார்க்சிஸ்ட் கட்சி அதை எதிர்த்தது. ஆனால் இந்தியாவுக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காகவே இந்த உடன்பாட்டில் கையெழுத்திட முயல்வதாக மன்மோகன் சிங் அரசு மாய்மாலத்தில் ஈடுபட்டது. இதை நம்பிய சிலர் மார்க்சிஸ்ட் கட்சியை விமர்சித்தனர். ஆனால் இன்றைக்கு உண்மை நிலை என்னவென்று தெளிவாகியுள்ளது. இடதுசாரிகளின் ஆதரவுடன் செயல்பட்டு வந்த முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமெரிக்காவுடன் அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட முடிவு செய்ததைத் தொடர்ந்து, இடதுசாரிக் கட்சிகள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டன. அந்த உடன்பாட்டின் தொடர்ச்சியாக இந்தியப் பொருளாதாரத்தின் சுயசார்பையும் சுயாதிபத்தியத்தையும் தகர்க்கக் கூடிய பல்வேறு நடவடிக்கைகளில் மன்மோகன் சிங் அரசு ஈடுபட்டு வருகிறது. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டால்தான் இந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும் என்ற கருத்தை கம்யூனிஸ்ட்டுகள் முன்வைத்தனர். ஆனால் மொழிவாரி மாநிலங்கள் சிதைக்கப்பட்டு பலவீனமான மாநிலங்கள், அனைத்து அதிகாரங்களையும் குவித்து வைத்துள்ள மத்திய அரசு என்பதே இந்துத்வா சக்திகளின் நோக்கமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இதில் ஒரு ஊசலாட்டமான அவ்வப் போது கிடைக்கும் குறுகிய அரசியல் லாபங்களை மட்டுமே கருத்தில் கொள்ளும் கட்சியாக அக்கட்சி உள்ளது. ஆந்திர மாநிலத்தை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி போன்ற கட்சிகள் வலியுறுத்துகின்றன. பாஜக இதை ஆதரிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட இந்த கோஷத்தை ஆதரிக்கிறது. மிகவும் பின்தங்கியுள்ள தெலுங்கானா பகுதியின் முன்னேற்றத்திற்கு விசேஷ பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றி முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்று கட்சி கோருகிறது. அதே நேரத்தில் தனித்தெலுங்கானா என்ற அரசியல் கோஷம் அப்பகுதியின் வளர்ச்சிக்கு பயன்படாது என்றும் கட்சி கருதுகிறது. மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷனும் இதே கருத்தைத்தான் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடை யில் எல்லை தாவா ஏற்பட்ட போது அண்டை நாடுகளான இரு நாடுகளும் இந்தப் பிரச்சனையை பேசித்தீர்க்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கூறியது. இந்த நியாயமான கருத்தை கூறியதற்காக சீன ஏஜெண் டுகள், தேசவிரோதிகள் என்றெல்லாம் முத்திரை குத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்களும், தொண்டர் களும் அவதூறு செய்யப்பட்டார்கள். தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட் டார்கள். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கூறியதுதான் உண்மை என்பதை காலம் நிரூபித்துள்ளது. ஜனதா கட்சி ஆட்சிக்காலத்தில் அயல்துறை அமைச்சராக இருந்த வாஜ்பாய், சீனா வுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. இருநாடுகளும் ஒற்றுமையாக இருந்தால்தான் ஏகாதிபத்திய அச்சுறுத் தலை இந்த பிராந்தியத்தில் சமாளிக்க முடியும் என்பது காலம் உணர்த்தும் பாட மாக உள்ளது.காங்கிரஸ், பாஜக உட்பட பல கட்சி கள் மத்தியில் ஒன்று பேசுவது, மாநி லத்தில் ஒன்று பேசுவது, மாநிலத்திற்கு மாநிலம் தனது கருத்தை மாற்றிக் கொள்வது என்ற நிலைபாட்டையே கொண்டுள்ளன. உதாரணமாக, காவிரிப் பிரச்சனையில் இங்குள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்று கூறும். ஆனால் கர் நாடகத்தில் இதே கட்சிகள், தமிழகத் திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக் கூடாது என்று வரிந்துகட்டிக்கொண்டு நிற்கும். ஆனால் காவிரியில் தமிழகத் திற்கு உரிய பங்கை மறுக்கக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கர்நாடகக் குழுவும் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.இலங்கை இனப்பிரச்சனைக்கு தனி ஈழம்தான் ஒரே தீர்வு என்பது ஒரு சில ரின் கருத்து. அந்தக் கருத்தை முன் வைக்க அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அதே நேரத்தில் இந்த கோஷம் கடந்த காலத்தில் இலங்கை தமிழ் மக் களுக்கு உதவி செய்யவில்லை, தற்போது போரினால் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ள இலங்கை தமிழ் மக்களுக்கு இந்த கோஷம் பயனளிக்காது என்று கூற மார்க்சிஸ்ட் கட்சிக்கு உரிமை உண்டு. தனி ஈழமே தீர்வு என்று கூறும் கட்சி களும் ஒரே நிலைபாட்டில் இல்லை. அதிமுக, திமுக, மதிமுக மற்றும் பழ.நெடுமாறன், சீமான் போன்றவர்கள் ஒரே குரலில் பேசுவதில்லை. ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தது யார் என்று திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுகின்றன. போரினால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள தமிழர்களுக்கு உடனடியாக தேவைப்படுவது அவர்கள் முழுமையாக மீள்குடி அமர்த்தப்படுவது, நிலம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச நம்பகத்தன்மையுள்ள சுயேச் சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கட்சி வலியுறுத்து கிறது. இக்கருத்தை முன்வைப்பதால் ராஜபக்சேவை ஆதரிப்பதாக கூறுவது அடிப்படை நாகரிகமற்றது. அவதூறை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்த மாணவர்களின் போராட்ட உணர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புரிந்துகொள்கிறது. ஆனால் இதே மாணவர்கள் நாளை தனியார் பொறியி யல் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அநியாய கட்டணத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினால் இன்றைக்கு மாணவர் போராட்டத்தை ஆதரிக்கும் கட்சிகளில் எத்தனைக் கட்சிகள், ஊட கங்கள் அதை ஆதரிக்கும் என்பது கேள் விக்குறியே.
தமிழுக்காக, தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யாருக்கும் பின்தங்கியதில்லை. தமிழக மக்கள் உள்ளிட்ட இந்திய மக் களின் பிரச்சனைகளுக்காக தொடர்ச்சி யாக போராடிவரும் கட்சி மார்க்சிஸ்ட் கட்சி, விலைவாசி உயர்வு, வேலை யின்மை, வறுமை, ஊழல் போன்ற பிரச்சனைகளுக்காக இடையறாது போராடி வருகிறது. ஆனால் இந்திய மக்கள் சந்திக்கும் துன்பதுயரங்களுக்கு காரணமான கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டிய மக்களை குறுகிய இனத்திருகல் அடிப்படையில் திசை திருப்பும் சக்திகளை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி புரிந்து வைத்திருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 69சதவீத இடஒதுக்கீடு, ஐஐடி போன்ற உயர்கல்வி நிலையங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு உரிய இடஒதுக்கீடு போன்றவற்றுக்காக கட்சி போராடும்போது பல கட்சிகள் களத்திலேயே இல்லை. குறிப்பாக உத் தப்புரம், தருமபுரி கொடுமை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதி ராக கட்சி போராடும்போது பல கட்சிகள் யார் பக்கம் நின்றன என்பதை ஒடுக் கப்பட்ட மக்கள் நன்கறிவார்கள்.“செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றிஎச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து”என்பது வள்ளுவர் வாய்மொழி.

நன்றி


திங்கள், 11 மார்ச், 2013

இலங்கைப் பிரச்சனையில் தேவை தீர்வு மட்டுமே... தண்டனையல்ல...!


















     
       ''நான் தமிழன்'' என்னை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. நான் இந்தியன் என்றாலும், அப்படி சொல்வதும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் என்னை நானே சுருக்கிக்கொள்வதாகத் தான் பொருளாகும். நான் உலக மனிதகுலத்தில் ஒருவனாகத்தான்  என்னை பொருத்திப் பார்க்கிறேன். அந்த கண்ணோட்டத்தில் தான் நான் என் நாட்டையும், பக்கத்து நாட்டையும், இந்த உலகத்தையும் பார்க்கிறேன். அதே பார்வையோடு தான் நான் இந்த கட்டுரையை எழுதுகிறேன். 

வியாழன், 9 ஜூன், 2011

இலங்கை அரசின் கொடுமைகளுக்கு எதிராக நியாயம் கேட்போம் - பொருளாதாரத் தடை வேண்டுமா?

சட்டப் பேரவையில் அ.சவுந்தரராசன் பேச்சு :
    இலங்கை அரசும், ராணுவமும் மனித உரிமைகளை மீறி நடத்திய கொடுமைக்கு எதிராக நியாயம் கேட்க வேண்டியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் கட்சித்தலைவர் அ.சவுந்தரராசன் கூறியுள்ளார்.

         இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக்கோரி சட்டப்பேரவையில் புதனன்று (ஜூன் 8) கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது அவர் பேசியது வருமாறு:

      சொல்லத்துடிக்குதடா நெஞ்சம் என்ற அளவிற்கு மிகப்பெரும் கொடுமையை கடந்த 25ஆண்டு காலமாக இலங்கை தமிழர்களுக்கு எதிராக அங்குள்ள அரசு செய்துள்ளது. போர்க்குற்ற நடவடிக்கைகளிலும், மனித உரிமை மீறல்களை யும், மிகப்பெரிய அளவுக்கு நிகழ்த்தியுள்ளது.

         தமிழர்களுக்கு இருந்த சமஉரிமையும், வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டு, வாழ வழியில்லை என்ற நிலையில்தான் அவர்கள் போராடத் தொடங்கினார்கள். இந்த காலம் முழுவதும் தமிழர்கள் கண்ணீரிலும், செந்நீரிலும் குளித்தனர்.

         இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு நமது ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையிலும் தமிழக முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வரவேற்கிறோம்.

       இன்னொரு நாடு என்ற வகையில், அந்த நாட்டிலும் மனித உரிமை ஆணையம், உச்ச நீதிமன்றம் உள்ளது. இவ்விரு அமைப்புகளும் அந்நாட்டில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த நிர்ப்பந்திக்க வேண்டும். இதை செய்ய மறுத்தால், இதைக்கூட செய்ய மறுக்கிறார்களே என்று நிர்ப்பந்தித்து நெருக்கடி கொடுக்க வாய்ப்பு உள்ளதால் அதையும் செய்ய வேண்டும்.

          ஐ.நா. பொதுச்செயலாளர் கூறும் போது, போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐ.நா-வால் அமைக்கப்பட்ட குழுவை இலங்கைக்குள் அந்நாட்டு அரசு அனுமதிக்கவில்லை என்றார். ஐ.நா-வால் அமைக்கப்பட்ட குழு இலங்கைக்குள் செல்லாமல் தனக்கு கிடைத்த தகவல்களையும், ஆதாரங்களை யும் கொண்டு ஒரு அறிக்கையை தயாரித்து கொடுத்துள்ளது.

      பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ய முடியாது, செஞ்சிலுவை சங்கம் செயல்பட முடியாது, மருந்துகள் கொண்டு செல்வது தடுக்கப்பட்டது, செஞ்சிலுவை சங்கத்தால் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்கள் மீது ராணுவமே குண்டுகளை வீசி தாக்கியது. அதுமட்டுமின்றி மக்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து, விடுதலைப்புலிகளும் தங்களை தற்காத்துக் கொள்ளச் செய்ததாக கருத வேண்டியுள்ளது.

        இத்தகைய கொடுமையை அரசே நிகழ்த்துகிறது. அரசும், ராணுவமும் எந்தச் சூழ்நிலையிலும் மனித உரிமையை மீறக் கூடாது. இந்த கொடுமைக்கு எதிராக நியாயம் கேட்க வேண் டியுள்ளது.

      இலங்கை பிரச்சனையில் தலையிடக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதையே கடந்த கால ஆட்சியினர் வழக்கமாக கொண்டிருந்தனர். 
அஞ்சல் வழியே அவர்களின் அரசியல் வழியாக இருந்தது.

     தற்போது அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே உலகின் பல பகுதிகளில் பொருளாதாரத் தடை விதிக்கும்போது குற்றம் செய்த ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்டதில்லை. இராக் மீது அமெ ரிக்கா கடந்த 20 ஆண்டுகளாக கண்மூடித்தனமாக பொருளாதாரத் தடை விதித்த போது, 10 லட்சம் குழந்தைகள் இறந்தார்கள். தற்போது 20வயதுடைய இளைஞர்களே அங்கு இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.

      இதுபோன்ற தடையால் குழந்தைகளும் பெண்களுமே அதிகமாக பாதிக்கப்படுகின் றனர். இலங்கை ஆட்சியாளர் களும், ராணுவமும் 
போர்க்குற்றம் புரிந்திருந்தாலும், பொருளாதாரத் தடைவிதிக்கும் போது நாம் யாருக்காக இந்த தீர்மானத்தை கொண்டு வருகிறோமோ அந்த தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, பொருளாதாரத் தடை வேண்டுமா? என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும்.
     தற்போது பட்டியலிடப்படுகிற குற்றங்கள் அன்றைக்கு நடந்து கொண்டிருந்த போது, மத்திய ஆட்சியாளர்கள் ராஜிய ரீதியில் தலையிட்டிருந்தால் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும். இன்றைக்கு இத்தகைய விவாதமே எழுந்திருக்காது. மேற்சொன்ன திருத்தத்தோடு தீர்மானத்தை ஆதரிக்கிறோம்.
இவ்வாறுஅவர்கூறினார்.

 நன்றி : தீக்கதிர்