கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் இதே நரேந்திர மோடியின் அன்றைய ஆட்சிகாலத்தில், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை காரணம் காட்டி, நரோடா பாட்டியாவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான தீர்ப்பு நேற்று முன் தினம் ஆகஸ்ட் 30 - ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு என்பது, இத்தனை ஆண்டு காலமாக அந்த இனப் படுகொலையை நேரில் பார்த்து, தீர்ப்புக்காக காத்திருந்த அந்த பகுதி மக்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்திருக்கிறது.
நரோடாவில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக இந்து மதவெறியர்கள் நடத்திய கொடுஞ்செயல்களை இன்றைக்கும் எங்களால் மறக்க முடியவில்லை என்று அதை நேரில் பார்த்தவர்கள் அந்த சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சி அளித்திருக்கிறார்கள் . பதைபதைக்க இஸ்லாமியப் பெண்களின் மேலாடை உருவி, கூட்டாக கற்பழித்துக் கொல்லப்பட்டுக் கிடந்த பெண்களைப் பார்த்த அந்த மக்கள், அந்த பெண்களின் மானத்தை மறைக்க நாங்கள் எங்கள் துப்பட்டாவை பயன்படுத்தி மூடினோம். அங்கிருந்த ஆண்களும் கூட தங்கள் முகத்தை திருப்பிக்கொண்டு தாங்கள் அணிந்திருந்த சட்டையை கழற்றி அந்த பெண்களின் மானத்தை மறைத்தார்கள். துணியின்றி கிடந்த சடலத்தை செய்தித்தாள்களைக் கொண்டு மூடி மறைத்தோம் என்றெல்லாம் நரோடா மக்கள் சாட்சியளித்திருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல வயது வித்தியாசமில்லாமல் மொத்தம் 97 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் என கொல்லப்பட்டார்கள். எரியும் நெருப்பில் வீசி எறியப்பட்டார்கள். பன்னிரெண்டு நாள் சிசுக்கூட இந்த கொலை பாதகச்செயலிலிருந்து தப்பவில்லை. மதவெறிக் கூட்டத்தினர், அந்த சிசுவை கொன்று தீயில் எரிந்தது என்பது மிகக்கொடுமையானது. இத்தனை மாபாதகச் செயல்களுக்கும் கொல்வதற்கு நீண்ட வாளும், தீயிட்டுக் கொளுத்துவதற்கு மண்ணெண்ணையையும் அருகிலிருந்து கொடுத்து உதவிய ''மாபாதகி'' தான் இந்த மாயா பென் கோத்னானி என்பவள். இவள் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவள். அதுமட்டுமல்ல, அத்வானியின் சீடராக இருந்து வகுப்புவாத அரசியலுக்கு
வந்தவள் என்கிற பெருமையும் இவளுக்கு உண்டு. மேலும் அத்வானியைப் போலவே சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலிருந்து இந்தியாவிற்கு வந்த குடும்பங்களில் இவளது குடும்பமும் ஒன்று.
அந்த படுகொலைகள் நடந்த காலத்தில் இந்த கோத்னானி குஜராத்தில் மோடி அமைச்சரவையில் அமைச்சர் பதவியில் இல்லை. முதலமைச்சர் பொறுப்பிலிருந்து தான் விலக முடியாது என்பதற்கு மோடி இதையே ஒரு வாதமாக இப்போது வைக்கிறார். ஆனால் இந்த படுகொலை சம்பவத்திற்கு பிறகு குற்றஞ்சாட்டப்பட்டு, விசாரணையில் உள்ள ஒருவளை மோடி எப்படி அமைச்சராக்கினார் என்பது அன்றே மிகப்பெரிய கேள்விக்குறியாய் எழுந்தது. தான் நினைத்தது போல் படுகொலைகளை முன்னின்று நடத்தியதற்கு பரிசாகவும், தான் அந்த சம்பவம் நடந்த இடத்திலேயே இல்லை என்றும், காந்தி நகரில் இருந்தேன் என்றும் நீதிமன்றத்தில் அவள் சொன்ன பொய்க்கு நன்றிக்கடனாகவும் தான் இந்த மகா கொடுமைக்காரி கோத்னானிக்கு அமைச்சர் பதவியை கொடுத்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மோடி இவளை குஜராத் அரசின் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார்.
ஒருவழியாக நடைபெற்ற நரவேட்டையின் விசாரணையிலிருந்து நரேந்திர மோடி விலக்கப்பட்டது என்பது ஒரு சோகம் என்றாலும், விசாரணையின் முடிவில் வந்த தீர்ப்பு என்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களும், மனிதநேயமுள்ளவர்களும், மதநல்லிணக்கம் வேண்டுவோர்களும், மதசார்பற்ற கொள்கையாளர்களும் ஓரளவு எதிர்ப்பார்த்த தீர்ப்பாக அமைந்துள்ளது என்று சொல்லலாம். அவர்களது நம்பிக்கை வீண் போகவில்லை.
அதேப்போல், சம்பவத்தை நேரில் பார்த்த நரோடாவில் வசிக்கும் மக்கள் '' கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் நிம்மதியில்லாமல் இருந்தோம். இந்த தீர்ப்பின் மூலம் இப்போது தான் எங்களுக்கு நிம்மதி வந்தது'' என்று பெருமூச்சிவிட்டு பேசினார்கள்.
![]() |
| courtesy : The Hindu |
ஆனால், பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பின் தூக்குதண்டனையை கொண்டாடும் பாரதீய ஜனதா கட்சியும், சிவசேனாவும் குஜராத் சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைக்கேட்டு வாயடைத்துப் போய்விட்டனர் என்பது தான் உண்மை.
பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் போதே பிரதமர் பதவியை நோக்கிய அவரது கனவு என்பது இந்த தீர்ப்புக்குப் பிறகு தகர்க்கப்பட்டு விட்டது. இன்னும் சொல்லப்போனால், அருகில் வந்துகொண்டிருக்கக்கூடிய குஜராத் சட்டமன்றத் தேர்தலில் கூட, இந்த தீர்ப்பின் காரணமாக மோடியின் கதி மட்டுமல்ல, பாரதீய ஜனதா கட்சியின் கதி கூட அதோ கதியாகத் தான் இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.



