21வது அகில இந்திய மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
21வது அகில இந்திய மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஏப்ரல், 2015

விரிவான இடதுசாரி ஒற்றுமையை உருவாக்குவோம்...! - பிரகாஷ்காரத்


           விசாகப்பட்டினத்தில் துவங்கிய கட்சியின் 21-வது அகில இந்திய மாநாட்டை துவக்கிவைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர்.பிரகாஷ்காரத் ஆற்றிய உரை :- 
               ஆந்திர மாநில விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க தெலுங்கானா ஆயுதப்போராட்டம் நடைபெற்ற மண்ணில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அகில இந்திய மாநாட்டை நடத்துகிறது.
         இந்த நேரத்தில் அந்தவீரமிகு போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தலைவர்களுக்கும், ஒன்றுபட்ட ஆந்திரப்பிரதேசத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டுவதில் அரும்பாடுபட்ட தலைவர்கள் பி.சுந்தரய்யா, எம்.பசவபுன்னையா, சி.ராஜேஸ்வரராவ் ஆகிய தலைவர்களுக்கும் நம் மரியாதை செலுத்துகிறோம். தேசிய அரசியலில் நம்முன் பல்வேறு சவால்கள் எழுந்துள்ள நிலையில் 21வது அகில இந்திய மாநாட்டைநாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். கடந்த ஓராண்டாக நாட்டில் வலதுசாரி சக்திகளின் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதை நேரில் கண்டு வருகிறோம். அந்த சக்திகள் பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் கலாச்சாரம் என சகல துறைகளிலும் ஊடுருவி உள்ளது.

கார்ப்பரேட் - மதவெறி கூட்டு                  

            முதலாவதாக, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கூட்டு நிறுவனமாக செயல்படத் தொடங்கிவிட்டது. இதில், பிரதான கூட்டாளி என்ற முறையில் ஆர்எஸ்எஸ் அரசின் அனைத்து முடிவுகளிலும் அதிகமாக தலையிடுகிறது. இரண்டாவதாக, மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றவுடன், பதவிக்கு வந்த மோடி அரசு தனதுஅலுவலகத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைமையிலான இந்துத்வா சக்திகளின் அலுவலகமாக மாற்றிவிட்டது.
            மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அது ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயலுக்கேற்ப மட்டுமல்லாமல், நாட்டிலுள்ள மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கிவிட்டது. அந்தநிறுவனங்கள் தங்களது புதிய தாராளமய, பொருளாதாரக் கொள்கைகளை மோடி அரசாங்கத்தின் மூலம் மிகத்தீவிரமாக அமல்படுத்த தொடங்கிவிட்டன. கடந்த10 மாதங்களுக்குள் நாட்டின் வளத்தை மோடி அரசு மிகப்பெரிய கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது.

பலன் பெற்றது யார்?                    

             கனிம வளங்கள், நிலக்கரி சுரங்கங்கள், காப்பீடு, ரயில்வே, நிலம் என அனைத்தும் மிகப்பெரிய உள்நாட்டுமற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம்தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வரி 5 விழுக்காடாக குறைக்கப்பட்டதோடு, சொத்து வரி முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்பட்டுள்ளது.
             மோடி அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் யார் பலன் அடைந்தார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய முதலாளியான கவுதம் அதானியின் சொத்து மட்டும் 2014ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டிற்குள் 25ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. ஒருபுறம் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளை கடைபிடிக்கும் மோடி அரசு, மறுபுறம் உழைக்கும் மக்கள் மீதும் அவர்களின் உரிமைகள் மீதும் கொடூர தாக்குதல்களைத் தொடங்கி உள்ளது. தங்களது விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்ற துயரத்திலும், இடுபொருட்களின் விலை அதிகரித்துவிட்டது என்ற கவலையிலும் விவசாயிகள் உள்ளனர்.மேலும், வேளாண் மற்றும் பாசனத்துறை மீதான தனது முதலீட்டை அரசு கணிசமாக குறைத்துக் கொண்டுவிட்டது.
              எதிர்பார்க்காத பருவத்தில் பெய்த மழையால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டதோடு, அதனால் நஷ்டம் அடைந்த பல விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. விவசாய தொழிலாளர்களுக்கும், கிராமப்புற ஏழைகளுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதும் அரிதாக மாறிவிட்டது.

பழங்குடி மக்களை வெளியேற்றத் திட்டம்                    

               சாமானிய மக்களுக்கோ கடுமையான விலைவாசியிலிருந்து நிவாரணம் கிடைக்கவில்லை. தொழிலாளர் நலச்சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்து உழைக்கும் மக்களின் உரிமைகள் மீதும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. புதிய சுரங்கம் மற்றும்கனிம வளச்சட்டத்தை இயற்றி பழங்குடி மக்களை அவர்களது இருப்பிடத்திலிருந்து அகற்றும் நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளன.

அனைத்துத் துறையிலும் மதவெறி                  

                 மூன்றாவதாக, இந்துத்துவா சக்திகள் தங்களின் மதவாத செயல்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துவதற்கான வழிகளை மோடி அரசு திறந்து விட்டுள்ளது. கல்வித்துறையில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆர்எஸ்எஸ் கற்றுக் கொடுக்கிறது. ஆராய்ச்சி மற்றும்கலாச்சார நிறுவனங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அதுவே தீர்மானிக்கிறது. மறுபுறம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக விஷம் கக்கக்கூடிய பிரச்சாரம் தீவிரமாக நடைபெறுகிறது. மறு மதமாற்றம் சிறுபான்மை மக்களின் தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அம்மக்களின் உணவு மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான அத்துமீறல்கள், மாட்டிறைச்சி மீதான தடை ஆகியவை இதில் அடங்கும்.

பெண்கள் நடமாட்டத்தை ஒடுக்க சதி                    

              பொது வாழ்விலும், பொது இடங்களிலும் பெண்களின் நடமாட்டத்தை ஒடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் மீது சமூக ரீதியாகவும், உடைக்கட்டுப்பாடு போன்றவற்றை திணிப்பதிலும் இந்துத்வா சக்திகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

அமெரிக்காவுக்கு சேவகம்                  

              இறுதியாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச்சேர வேண்டும் என்று துடிக்கும் மோடி அரசு அதற்கேற்ப தனது வெளியுறவுக் கொள்கைகளை மாற்றி வருகிறது. அந்தக் கொள்கைகள் வலதுசாரி சக்திகளின் செயல்பாடுகளை எதிரொலிக்கும் வகையில் உள்ளன. ஆசியாவில் தனது கொள்கைகளை விரிவாக்கத் துடிக்கும் அமெரிக்காவுடன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியாக செயல்படுவதற்கான நடவடிக்கைகளில் மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மோடி அரசு, அமெரிக்க நிர்பந்தத்திற்கு அடிபணிந்து நமது பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீடுகளுக்காக மேலும் திறந்துவிட்டதோடு, அறிவுச்சொத்துரிமை விஷயத்திலும் இந்தியாவின் நலன்களை பலி கொடுத்துவிட்டது.

தீவிரம் அடையும் போராட்டங்கள்                

              தங்களது வாழ்வுரிமையை பாதுகாப்பதற்காக ஏற்கெனவே உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவினர் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்திற்கு எதிராகவிரிவான இயக்கங்கள் தொடங்கி உள்ளன.
             தொழிலாளர் நலச்சட்டங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களை எதிர்த்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்தி வருகின்றன.ஏற்கெனவே, நிலக்கரி சுரங்கங்களை தனியார்மயமாக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நிலக்கரி மசோதாவை எதிர்த்து நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை நடத்தினர். காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை எதிர்த்துஅத்துறையில் உள்ள ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
         இதேபோல் மோடி அரசாங்கத்தின் மோசமான கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பிரிவினரும் தங்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தெருக்களில் இறங்கியுள்ளனர்.

முரண்பாடு முற்றும்             

                 தனியார் பெரு நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு ஆதரவான மோடி அரசின் கொள்கைகளால் வரும் நாட்களில் உழைக்கும் மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடுகள் ஏற்படப்போகிறது. எனவே, இத்தகைய காலகட்டத்தில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தை ஒருங்கிணைத்து வலதுசாரி சக்திகளின் சவால்களை முறியடிப்பது குறித்து கட்சியின் மாநாடு விவாதிக்க உள்ளது.

மேற்குவங்கத் தோழர்களுக்கு பாராட்டு                  

            நம் நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தனித்தும், இடதுசாரி அணியையும் வலுவாக கட்டும் கடமை நம் முன் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி சக்திகளுக்கு குறிப்பாக, மேற்குவங்கத்தில் ஏற்பட்ட பின்னடைவிலிருந்து நாம் மீண்டு வரவேண்டி உள்ளது. கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறும்இந்த வேளையில் மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் கொடூரமான தாக்குதல்களை எதிர்கொண்டு இயக்கங்களை நடத்தி வரும் ஆயிரக்கணக்கான நமது கட்சி ஊழியர்களையும், இடதுசாரி கட்சிகளின் தொண்டர்களையும் பாராட்டுகிறோம். தற்போதுகூட, அம்மாநிலத்தில் நகராட்சி தேர்தல்களில் ஆளும் கட்சி கொடூரமான வன்முறையை ஏவி உள்ளது. இதில் நமது தோழர்கள் சுபாஷ் முகோபாத்தியாயா, மனேஷ் முகர்ஜி ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அவர்கள் மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் குணமடைய மாநாட்டின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டு எழுவோம்!          

            கடந்த அகில இந்திய மாநாட்டிற்குப் பின்னர் மேற்குவங்க மாநிலத்தில் உயிர் நீத்த 99 தோழர்களின் தியாகம் வீண்போகாது. மக்களின் ஆதரவோடு நாம் மீண்டெழுந்து இத்தகைய சக்திகளை தோற்கடிப்போம்.

அனைத்து இடதுசாரிகளையும் ஒருங்கிணைப்போம்!        

            நாட்டில் வலதுசாரி சக்திகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், இடதுசாரி ஒற்றுமையை மேலும் விரிவுபடுத்த வேண்டிய முக்கியமான தருணத்தில் நாம் உள்ளோம். விரிவான இடதுசாரி அணியில் அனைத்து இடதுசாரி கட்சிகளும், குழுக்களும், தனி நபர்களும் இணைய வேண்டும். இடதுசாரி கட்சிகளின் வெகுஜன அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் பணியிலும் நாம் ஈடுபட வேண்டி உள்ளது. வலுவான இடதுசாரி ஒற்றுமை உருவானால், மற்ற ஜனநாயகசக்திகளை நம்மால் திரட்டி வலுவான இடது மற்றும் ஜனநாயக மாற்றை உருவாக்க முடியும். எனவே, கட்சியின் 21வது மாநாடு கட்சிக்கு புதிய வழியை காட்டும். அந்த வகையில் இந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதியை பாதுகாக்கவும், இடது மற்றும் ஜனநாயக மாற்றை உருவாக்கவும், கட்சிக்கு இம்மாநாடு வழிகாட்டும். வலுவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவோம். விரிவான இடது ஒற்றுமையை கட்டுவோம். இடது மற்றும் ஜனநாயக மாற்று அணியை உருவாக்கும் பணியை நோக்கி முன்னேறுவோம்.

இவ்வாறு தோழர்.பிரகாஷ்காரத் பேசினார்.

நன்றி : தீக்கதிர்

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

வலிமை மிக்க கட்சியை கட்டுவோம்...! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

         
                வரவிருக்கும் காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் பின்பற்றப்பட வேண்டிய அரசியல்-நடைமுறை உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டின் வரைவு அரசியல் தீர்மானம் விளக்கி இருக்கிறது. சர்வதேச மற்றும் தேசிய நிலைமைகளைப் பகுப்பாய்வு செய்திருப்பதுடன், இன்றுள்ள நிலைமைகள் என்ன என்பதையும் சுட்டிக்காட்டி, அவற்றின் அடிப்படையில் கட்சி மேற்கொள்ள வேண்டிய அரசியல் - நடைமுறை உத்தி மற்றும் பணிகள் என்ன என்பது குறித்தும் குறிப்பிட்டிருக்கிறது. 

வலதுசாரிகளின் தாக்குதல்                   

           இந்தியாவில் 2014 மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் உருவாகியுள்ள நிகழ்ச்சிப்போக்குகள் மற்றும் புதிய அரசியல் நிலைமைகள் குறித்தும் தீர்மானம் கவனம் செலுத்தியுள்ளது. பாஜக பெரும்பான்மை பெற்று மோடி அரசாங்கம் அமைந்திருப்பது வலதுசாரித் தாக்குதலுக்கு வழிவகுத்துத்தந்துள்ளது. இத்தாக்குதல்கள் இரு விதங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலாவதாக, நவீன தாராளமயக் கொள்கைகளை உந்தித்தள்ளுவதில் காட்டும் வெறித்தனமான ஆர்வம். இரண்டாவது, இந்துத்வா மதவெறி சக்திகளின் பன்முகப்பட்ட நடவடிக்கைகள். 

நிச்சயமற்ற நிதி மூலதனம்                  

         இவ்வாறு இந்தியாவில் வலதுசாரித் திருப்பம் ஏற்பட்டிருப்பதற்கு சர்வதேச நிலைமையின் இரு அம்சங்கள் நேரடியான காரணிகளாக அமைந்திருக்கின்றன. 2008ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியிலிருந்து எப்போது மீள்வோம் என்று தெரியாது நிச்சயமற்ற தன்மை தொடர்கிறது. இத்தகைய நிலைமையானது, சர்வதேச நிதி மூலதனத்தையும், ஏகாதிபத்தியத்தையும் உலக அளவில் நவீன தாராளமயக் கொள்கைகளை மேலும் தீவிரமாக உந்தித்தள்ள இட்டுச்சென்றிருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததன் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நிலைமைகளிலிருந்து மீள்வதற்காக இந்திய ஆளும் வர்க்கங்களும் வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றன. 

சீனாவுக்கு எதிரான அமெரிக்கத் திட்டம்                 

         சீனாவைக் கட்டுப்படுத்துவதற்காக ஆசியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அமெரிக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இத்தகைய அமெரிக்காவின் செயல்உத்தி நடவடிக்கைகளில், இந்தியா ஒரு கேந்திரமான பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமான கேந்திரக் கூட்டணி நடவடிக்கைகள் வலதுசாரிப்பக்கம் போவதற்கு ஒரு தூண்டுவிசையாக அமைந்திருக்கிறது.

அவசரச் சட்ட ஆட்சி                 
       
          மோடி அரசாங்கத்தின் கடந்த பத்து மாதகால ஆட்சி, பெருமுதலாளிகளின் கட்டளைக்கிணங்க நடந்துகொண்டு உறுதிப்படுத்தி இருக்கிறது. பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டிற்குத் திறந்துவிட்டிருப்பது, நிலக்கரித்துறையை பொதுத்துறையிலிருந்து தனியாருக்கு மிகப்பெரிய அளவில் தாரை வார்த்திருப்பது, நிலம் கையகப்படுத்தல் சட்டத்தைத் திருத்தி அதன் மூலம் அதிக நிலத்தை கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்க முன்வந்திருப்பது - ஆகிய அனைத்தும் நவீன தாரளமயக் கொள்கைகளை முன்னிலும் வேகமாக எடுத்துச் செல்வதற்கான தெளிவான அறிகுறிகளாகும். அதேபோன்று நாட்டிலுள்ள ஒருசிலர் சுகபோகமாக வாழ்வதற்கு, நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கக்கூடிய விதத்தில் சிக்கன நடவடிக்கைகள் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற நவீன தாராளமயக் கொள்கையின்மீதும் மோடி அரசாங்கம் நம்பிக்கை வைத்திருக்கிறது. பொதுச்செலவினங்களைக் குறைத்திருப்பதும், சுகாதாரம், கல்வி மற்றும் சமூகத்துறைகளுக்கு அளித்துவந்த பட்ஜெட் ஒதுக்கீடுகளை வெட்டிக் குறைத்திருப்பதும் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது நேரடித் தாக்குதலை விளைவிப்பவைகளாகும். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் சுருக்கப்பட்டிருக்கிறது, குழந்தைகள் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்துத் திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் பாதியாக்கப்பட்டிருக்கின்றன. உணவுப் பாதுகாப்புச் சட்டம், வன உரிமைகள் சட்டம் போன்ற சில சட்டங்களில் மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ஒருசில உரிமைகளும் பறிக்கப்பட்டிருக்கின்றன. தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவந்து தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்திடவும் மோடிஅரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. மோடி அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிற அவசரச்சட்ட ஆட்சி, அரசாங்கம் எதேச்சாதிகாரத்தை நோக்கி விரைவாக சென்றுகொண்டிருப்பதை எடுத்துக் காட்டும் எச்சரிக்கை மணியாகும். 

அதிகரிக்கும் பதற்றம்              

        வலதுசாரித் தாக்குதலின் மற்றோர் அம்சம், இந்துத்வா திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக பல்வேறு வடிவங்களில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருவதாகும். பாஜக அரசாங்கம் ஆர்எஸ்எஸ்-சுடன் மிகவும் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவதன் காரணமாக சமூகத்தில் பல்வேறு பிரிவினரும் மிகவும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்த நிலைமைகளில் மிகப் பெரிய அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி மற்றும் கலாச்சார நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல் அறிமுகப்படுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் கீழ் இயங்கும் பல்வேறு அமைப்புகளும் பசுவதை, ‘காதல் ஜிகாத்’ மற்றும் வங்கதேசத்தினர் ஊடுருவல் போன்ற பல்வேறு பிரச்சனைகளைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பதற்ற நிலைமைகளை அதிகரித்திட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 

அமெரிக்கக் கூட்டணி              

            அதிகார மையத்தின் வலதுசாரித் திருப்பம், மோடி அரசாங்கத்தின் அயல்துறைக் கொள்கையிலும் பிரதிபலிக்கத் தொடங்கி இருக்கிறது. அணிசேராக் கொள்கையிலிருந்து வெகு தூரம் விலகி வந்திருப்பது, அயல்துறைக் கொள்கையில் அமெரிக்க ஆதரவு நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பது 1990களின் ஆரம்பத்தில் நவீன தாராளமயக் கொள்கைகளைத் தொடங்கிய போதே ஆரம்பித்துவிட்டன. மோடி அரசாங்கம் அவற்றை முன்னிலும் வேகமாக முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவுடன் ஐமுகூ அரசாங்கம் கொண்டிருந்த கேந்திர கூட்டு உறவுகளை மோடி அரசாங்கம் மேலும் தீவிரமானமுறையில் மேற்கொண்டு வருகிறது. இந்திய - அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் மேலும் பத்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவுக்கு வருகை தந்த சமயத்தில் ஆசியா - பசிபிக்மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் குறித்த ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இது, அமெரிக்கா ஆசியாவில் மேற்கொள்ளவிருக்கும் அடாவடி நடவடிக்கை களுக்கு இந்தியா பக்கபலமாக நிற்கும் என் பதைத் தெளிவு படுத்துகிறது. மேலும் மோடி ஜப்பானுடனும், ஆஸ்திரேலியாவுடனும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் கட்டியெழுப்பவும் கோரி இருக்கிறார். இவ்வாறு ஏற்படும் உறவுகளுடன், அமெரிக்காவின் அணுகுமுறையும் சேர்ந்து அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கூட்டணி அமைவதற்கு வழிவகுத்திருக்கிறது.

முறியடிப்பது எப்படி?            

           வரைவு தீர்மானத்தின் சாரம், இவ்வாறு தொடுக்கப்பட்டுள்ள வலதுசாரித் தாக்குதலை எப்படி முறியடிப்பது, அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறை உத்தி என்ன என்பவை களேயாகும். நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறை உத்தி, மக்கள் திரளின் பல்வேறு பிரிவினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மீது இயக்கங்களையும் வெகுஜனப் போராட்டங்களையும் கட்சியும், வெகுஜன அமைப்புகளும் வளர்த்திட வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. எண்ணற்ற வெகுஜன அமைப்புகள், தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் இயக்கங்களையும், போராட்டங்களையும் வளர்த்தெடுப்பதற்கான திசைவழியை வரைவு தீர்மானம் அளித்திருக்கிறது. 

தத்துவார்த்தப் போராட்டம்                    

             வரைவு தீர்மானம், இந்துத்வா சக்திகள் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டியதன் முக்கியத்துவத்தை கூறுகிறது. மதவெறி சக்திகள், சமூகரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் மற்றும் கல்வி அமைப்புகள் என பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த முன்வந்திருப்பதை முறியடிப்பதற்கான உத்திகளைத் துல்லியமான முறையில் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அரசியல் - நடைமுறை உத்திகளுக்கான ஆய்வறிக்கை சுட்டிக்காட்டி இருந்தது. இதன் அடிப்படையில், கட்சிக்கும், வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகளுக்கும் ஐந்து பரிந்துரைகளை வரைவு தீர்மானம் அமைத்துத் தந்திருக்கிறது. இவற்றில், மதவெறி சக்திகளுக்கு எதிராக தத்துவார்த்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக கட்சியின் அறிவுஜீவிகள் மற்றும் கலாச்சாரப் பகுதியினரை ஒருங்கிணைத்தல், ஜனநாயக மதச்சார்பற்ற கல்வியைப் பாதுகாத்திட கல்வி முறையில் தலையிடல், சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்குத் திட்டமிடல், குறிப்பாக தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளில் இவற்றை மேற்கொள்ளுதல், மதவெறி சக்திகளால் கட்டவிழ்த்து விடப்படும் சாதிய மற்றும் மூடத்தனமான பழக்கவழக்கங்களுக்கு எதிராக கலாச்சார மற்றும் சமூக நடவடிக்கைகளை வளர்த்தெடுத்தல், நிறைவாக, பழங்குடியினர் பகுதிகளிலும் தலித்துகள் மத்தியிலும் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கை களை எதிர்த்து முறியடிக்கக்கூடிய விதத்தில் அமைப்பை வளர்த்தெடுத்தல் ஆகியவையும் அடங்கும். 

பாஜக எதிர்ப்பே பிரதானம்                   

              பாஜக மற்றும் மோடி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதே பிரதானக்கடமை என அரசியல் நிலைப்பாடு வகுக்கப்பட்டிருக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும், மக்களின் வாழ் வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான போராட் டங்களுடன் ஒருங்கிணைப்பதுடன், மத வெறிக்கு எதிராகவும் மற்றும் பாஜக-ஆர்எஸ்எஸ் பரிவாரங்களுக்கு எதிரான அரசியல்-தத்துவார்த்த போராட்டங்களையும் ஒருங்கிணைத்திடவும் அறைகூவி அழைக்கிறது.

காங்கிரஸ் எதிர்ப்பும் தொடரும்                   

             பாஜகவிற்கு எதிராக போராட்டத்தின் பிரதான திசை வழி இருந்திடும் அதே சமயத்தில், நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றி வந்த காங்கிரசை எதிர்ப்பதும் தொடரும். காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளும் மற்றும் அதன் ஊழலும் தான் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு உதவியுள்ளது. எனவே, காங்கிரசுடன் எவ்விதமானப் புரிந்துணர்வோ அல்லது தேர்தல் கூட்டணியோ வைத்துக் கொள்வதை கட்சியின் அரசியல் நிலைப்பாடு நிராகரிக்கிறது.
இடதுசாரி ஜனநாயக மேடை                   
               அரசியல் நிலைப்பாடு ஒரு புதியதிசை வழியையும் தற்போது சேர்த்துக் கொண்டிருக்கிறது. அதாவது, பிராந்தியக் கட்சிகளின் தலைமையில் உள்ள மாநில அரசாங்கங்கள் பின்பற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதையும் வலியுறுத்தியுள்ளது. மாநிலக் கட்சிகளின் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அரசியல் மற்றும் கொள்கைகளை எதிர்க்க வேண்டும் என்பதையும் அரசியல் நிலைப்பாடு உறுதிப்படுத்தி இருப்பதுடன்  அதன் அடிப்படையில் தொழிலாளி வர்க்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் ஜனநாயக மேடையைச் சுற்றி அணிதிரட்ட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருக்கிறது. இதுவரை கடைப்பிடித்து வந்த அரசியல் - நடைமுறை உத்தியை மறு ஆய்வு செய்ததன் வெளிப்பாடு இதுவாகும்.
சுயேச்சையான பலத்தைப் பெருக்குவோம்!                   
                  அரசியல் நிலைப்பாடு, கட்சியின் சுயேச்சையான வலுவை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அழுத்தமாகக் கூறியிருக்கிறது. கட்சியும், இடதுசாரி சக்திகளும் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ள இன்றைய சூழ்நிலையில், கட்சியின் சுயேச்சையான வலுவைத் தக்கவைத்துக்கொண்டு மேலும் விரிவுபடுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகும். கட்சியின் சுயேச்சையான வலுவை அதிகரித்திட ஒன்றுபட்ட போராட்டங்களும் கூட்டு இயக்கங்களும் ஒரு முக்கியமான தேவையாகும்.
            மக்கள் பிரச்சனைகள், தேசிய இறையாண்மையைப் பாதுகாத்தல், மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கங்கள் ஆகியவற்றின் மூலம் ஒன்றுபட்ட மேடைகளும், வெகுஜன இயக்கங்களும் இதர ஜனநாயக சக்திகளுடனும் காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுடனும் நடத்தப்பட வேண்டும். வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகள் இவ்வாறு ஒன்றுபட்ட இயக்கங்கள் நடத்துவதன் நோக்கமே, காங்கிரஸ், பாஜக மற்றும் இதர முதலாளித்துவக் கட்சிகளின் பின் உள்ள மக்களை கூட்டு இயக்கத்திற்குள் கொண்டுவர முயல்வதேயாகும்.

இடதுசாரி ஒற்றுமையை பலப்படுத்துவோம்!                 
                இடது மற்றும் ஜனநாயக முன்னணியைப் படிப்படியாக அமைத்திடுவதை நிறைவேற்றுவதற்கு, இடது மற்றும் ஜனநாயக சக்திகளை அணிதிரட்டிட வேண்டியது அவசியம். கட்சியின் தேர்தல் உத்திகள் கட்சியை வலுப்படுத்துவதற்கும், இடது மற்றும் ஜனநாயக சக்தி களை அணிதிரட்டுவதற்கும் உதவக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும். கட்சியின் சுயேச்சையான வலுவை அதிகரித்திட வேண்டும், விரிவாக்கிட வேண்டும், இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்திட வேண்டும் மற்றும் இடதுசாரி மற்றும் ஜனநாயகக் கூட்டணியை அமைத்திட வேண்டும் என்பவைகளே அரசியல் நடைமுறை உத்தியின் ஆணி வேராக அமைந்திருக்கிறது.
உள்ளூர் பிரச்சனைகளில் போராடுவோம்!                

                  கட்சியை சுயேச்சையான முறையில் விரிவாக்கம் செய்வதற்கு வர்க்க மற்றும் வெகுஜன இயக்கங்களை வளர்த்தெடுப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியமாகும். ஸ்தலப்பிரச்சனைகள் மீது தொடர்ந்து போராட்டங்கள் மேற்கொள்வது, நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துடனான இணைப்புச் சங்கிலியாக அமையும்! கட்சி சமூகப் பிரச்சனைகள் மீதும் நேரடியாகத் தலையிட்டு, போராட்டங்களைத் தன் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெகுஜன செல்வாக்கை விரிவுபடுத்துவோம்!             
             கட்சியின் சுயேச்சையான வலுவை விரிவுபடுத்துவது என்பது, மேற்கு வங்கத்திலும் வெகுஜன ஆதரவு தளத்திலும் அரிப்புஏற்பட்டிருப்பதை சரி செய்து முன்னேறு வது என்றும் பொருளாகும். கட்சி, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திலும், திரிணாமுல் காங்கிரசின் வன்முறை வெறியாட்டங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத்திலும் ஏற்பட்டிருக்கும் நிலைமைகளை முறித்துக்கொண்டு முன்னேறவும், மக்களின்வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் பிரச்சனைகளின் மீது மக்களைத் திரட்டிடவும், மதவெறியர்களின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை முறியடித்து முன்னேறவும் வேண்டியிருக்கிறது.
              கேரளாவிலும் கட்சி தன் ஆதரவு தளத்தை கெட்டிப்படுத்துவதுடன், இடது ஜனநாயக முன்னணியை வலுப்படுத்திடவும் வேண்டியிருக்கிறது. திரிபுராவில், கட்சி தன் ஆதரவு தளத்தை விரிவுபடுத்தி இருக்கிறது. இடது முன்னணி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நற்பணிகள் அங்கே கட்சியின் செல்வாக்கு விரிவடைவதற்கு உதவி இருக்கிறது. இந்த செல்வாக்கை மேலும் கெட்டிப்படுத்திடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மத்தியில் உள்ள பாஜக அரசாங்கத்தின் தாக்குதல்களிலிருந்து இடது முன்னணி அரசாங்கத்தைப் பாதுகாத்திடவும் மிகவும் விழிப்புடன் இருந்திட வேண்டும்.
அனைத்து இடதுசாரிகளையும் ஒருங்கிணைப்போம்!               
            இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்துவது என்பதும் வரைவு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்றுமொரு பணியாகும். இதற்கு அனைத்து இடதுசாரிக் கட்சிகளையும், குழுக்களையும் மற்றும் தனிநபர்களையும் ஒரு பொதுவான இடதுசாரி மேடைக்குக் கொண்டுவந்து, அதனை விரிவுபடுத்துவதும் அவசியமாகும். தற்சமயம், ஆறு இடதுசாரிக்கட்சிகள் கூட்டு நடவடிக்கைகளுக்கு ஒன்றிணைந்திருக்கின்றன. இதனை மேலும் விரிவான இடதுசாரி மேடையைக் கட்டக்கூடிய விதத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது தேவை. 

தமிழில் : ச. வீரமணி

நன்றி : தீக்கதிர்