நடிகர் விஜய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடிகர் விஜய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 அக்டோபர், 2014

கோக் விளம்பரத்தில் நடித்த நடிகர் விஜய் கம்யூனிசம் பேசுகிறாராம்...!


                       ''கோக்'' விளம்பரத்தில் நடித்த நடிகர் விஜய் மற்றும் ''ஏழாம் அறிவு'' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் முருகதாஸ்  இருவரும் ''கத்தி'' திரைப்படத்தின் மூலம் பிராயச்சித்தம் தேடியிருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். இதுவரையில் கடத்தல், தீவிரவாதம், பயங்கரவாதம் என வெறும் மசாலா படங்களிலேயே நடித்து தன்னுடைய இரசிகர்களை திருப்திப்படுத்த திணறிக்கொண்டிருந்த விஜய் இதுவரையில் யாரும் கையில் எடுக்காத - தற்போது நாடு முழுதும் எரிந்துகொண்டிருக்கும் மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து அதற்காக போராடும் இளைஞனாக தன் இரசிகர்கள் முன் நின்றது என்பது உண்மையிலேயே பாராட்டுதற்குரியது.
              திரைப்படத்தின் முன் பாதி எப்போதும் போல் வழக்கமான விஜய் பாணியாக நகர்கிறது. ஆனால் பின் பாதியில் தான் ஊடக தர்மமே இல்லாமல் அம்மணமாய் நிற்கும் இந்திய ஊடகங்களின் உண்மை முகத்தை தன் இரசிகர்களுக்கு தோலுரித்துக்காட்டியிருக்கிறார். இந்த தேசத்தின் வயிற்றுக்கு சோறிட்ட இந்திய விவசாயிகளின் இரத்தத்தையும், உயிரையும் குடித்து தேசத்தையே கபளீகரம் செய்யத்துடிக்கும்  இராட்சச பகாசூர பன்னாட்டு கம்பெனியின் முதலாளிகளை எதிர்த்து மக்களை திரட்டிப்போராடும் இளைஞனாக விஜய்யை பார்க்கும்போது அவரின் மீது இதுவரை இல்லாத மரியாதை உண்டாகிறது.
              ஏனென்றால் அண்மையில் பாராளுமன்றத்தேர்தலின் போது  தான் தமிழகத்திற்கு நரேந்திரமோடியை சந்தித்த நடிகர் விஜய்  தன்னை ஒரு போராளியாக காட்டிக்கொண்டு நடித்தது என்பது ரசிகர்களிடையே குழப்பத்தை உண்டுபண்ணும். ''கத்தி'' திரைப்படம் யாருடைய சிந்தனையில் உதித்தது என்பது தெரியவில்லை. ஆனால் இத்திரைப்படத்தின் ''கரு'' படம் வெற்றியடையடைவதற்கும், விஜய்யின் இரசிகர்களை திருப்திப்படுத்துவதற்கும், வசூலில் சாதனைப்படைப்பதற்கும் பெரிதும்  பயன்பட்டிருக்கிறது. இதோடு நிறுத்திக்கொள்ளாமல் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் அனைவரும் மக்கள் பிரச்சனைகளை பேசும் திரைப்படங்களில் நடிக்க முன்வரவேண்டும்.  அதுமட்டுமல்லாது தங்கள் கட்- அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதும், கொடிக்கட்டுவதுமான போக்குத்தனமான செயல்களில் ஈடுபடும் தங்கள் இரசிகர்களை   மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுபவர்கள் பின்னால் நிற்கச் செய்யுங்கள். அப்படி செய்யவில்லை என்றால் நீங்கள் இதுபோன்ற படங்களில் ஒரு போராட்டக்காரனாக நடிப்பதெல்லாம் விளம்பரத்திற்காகவும், வருமானத்திற்காகவும் நீங்கள் போடும் வெளிவேஷமாக போய்விடும். அன்னா  அசாரேக்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்.

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

நண்பன் - குடும்பத்துடன் பார்க்கவேண்டிய திரைப்படம்...!

பெற்றோர்களுக்கும்,
இளைஞர்களுக்கும் 
ஒரு நல்ல பாடம்...!
                                    
        தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று கேளிக்கை வரிவிலக்கு  பெறுவதற்கான விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்ட பிறகு வரிவிலக்கு பெற்ற முதல் திரைப்படம் இது தான்.          
                   இந்த திரைப்படம் பழைய இந்தி படத்தை தழுவி எடுக்கப்பட்டதால், இயக்குனர் சங்கர் மற்றும் நடிகர் விஜய்யின் வழக்கமான முத்திரைகளும், அடையாளங்களும் இந்த படத்தில் இல்லை. வழக்கமாக விஜய் படமென்றால், விஜய்யை அறிமுகப்படுத்தும் போதே ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும்  இருக்கும். ஏகப்பட்ட சண்டைக்காட்சிகளும், கார்கள் பறப்பதும் உருளுவதும், எதிர்களின் எலும்புகள் உடைக்கப்படுவதும், கத்தியால் வெட்டப்படுவதும், பன்ச் டயலாக்கும், படம் முழுக்க விஜய் முகமும்  - என நம் மண்டைய பொலந்துகட்டும். தாங்கவே முடியாது. ஆனால் அந்த விஷயமெல்லாம் இந்த படத்தில் இல்லை. விஜய் மட்டுமல்லாமல், அவருடன் ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள். மூவருக்கும் சமமான வாய்ப்பு. படம் முழுக்க நகைச்சுவை. பரவாயில்லை... காசு கொடுத்து கடைசிவரை சிரித்துக்கொண்டே இருக்கலாம்.
                இந்த படம் மற்றப் படங்களைப்போல் குறைகளும் நிறைகளும் கொண்ட படமாக இருந்தாலும், நிறைகளை பாராட்டாமல் இருக்கமுடியாது. இந்த படத்தின் கதையே ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடக்கும் நிகழ்வுகள் தான். அதில் படிக்கும் மாணவர்கள்,  கல்லூரி நிர்வாகம், இன்றைய கல்வி முறை, அந்த கல்லூரியில் படிக்கும் நாயகர்களின் குடும்பம், அவர்களின் எதிர்பார்ப்பு - போன்ற இன்றைய பிள்ளைகள் மீதான பெற்றோர்களின் திணிப்பையும்,  அறிவையும், திறமையையும் வளர்க்காமல், கோழைத்தனத்தை மட்டுமே வளர்த்து, கடைச் சரக்காகிப் போன கல்விமுறையில் உண்டான போட்டி மனப்பான்மையையும்,   அதனால் படிக்கும் மாணவர்களிடத்தில் உருவாகியிருக்கும் மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் படம் பிடித்து காட்டுகிறப் படமாக இந்த படம் அமைந்திருக்கிறது.
                 பிள்ளைகள் விருப்பப்பட்டதை படிக்கவும், அதில் அவர்கள் திறமையை வளர்த்துக்கொள்வதற்கும்  பெற்றோர்கள் அனுமதிக்கவேண்டும். மாறாக பெற்றோர்கள் தங்கள்  விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது என்பது தான் இந்தப் படத்தின் மையக்கருத்து. ''ஏ. ஆர். ரகுமான் கிரிக்கெட் பிளேயர் ஆனாலோ... சச்சின் மியூசிக் டைரக்டர் ஆனாலோ... அவர்கள் இந்த அளவுக்கு சாதனையாளர்களாக வந்திருக்க மாட்டார்கள்'' என்ற வசனம் அருமை. ஆர்வம் இருக்கும் துறையில் திறமையை வளர்த்துக்கொண்டால் தான் சாதனையாளர்களாக வரமுடியும் என்று அழுத்தமாக இந்த திரைப்படம் கூறுகிறது. 
         அதேப்போல் இன்றைய தனியார் பொறியியல் கல்லூரிகள் எப்படியெல்லாம் மாணவர்களிடையே  போட்டிகளையும், வெறித்தனத்தையும்  உண்டாக்கி அவர்களுக்கு மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் உண்டாக்குகிறார்கள் என்பதையும்  காட்டுகிறார்கள்.
இப்படிப்பட்ட கல்லூரிகள் உண்டாக்கும் மன அழுத்தத்தினால் வசதியில்லாத வீட்டுப் பிள்ளைகள், கிராமப்புறத்து இளைஞர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்கிற பயங்கரத்தையும் இந்த படம் எடுத்துக் காட்டுகிறது. 
              கதாநாயகர்களில் ஒருவனான ஜீவா தான் நன்றாக படிப்பதற்கும், தேர்வில் தேர்ச்சிப்பெருவதற்கும் ஏகப்பட்ட சாமிப்படங்களை வைத்து பூஜை செய்வதும், தன்னுடைய கைகளில் சாமிக்கயிறுகளை கட்டிக்கொள்வதுமாக இருப்பதையும் காட்டி, பிறகு உனக்குள் இருக்கும் கோழைத்தனத்தைப் போக்கி, தைரியத்தை வரவழைத்துகொள்... உனக்குள் இருக்கும் திறமைகள் தானாக வெளியேவரும் என்று சொல்லியிருப்பது மட்டுமல்லாமல், அந்த கதாநாயகனே மனம் மாறி தன் கைகளில் கட்டியிருந்த சாமிக்கயிறுகளை கழற்றி மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தும் ''மலத்தொட்டியில்'' போடுவது போல் காட்டியிருப்பதும் மூடநம்பிக்கைக்கு எதிரானது மட்டுமல்ல. இந்த விஷயத்தில்  இயக்குனரின் துணிச்சலை பாராட்டாமல் இருக்கமுடியாது.
              மேலே ''நண்பன்'' படத்தில் உள்ள நிறைகள் சிலவற்றைத்தான் சொல்லியிருக்கிறேன். படத்திலுள்ள குறை என்று கேட்டால்  சிலது இருக்கிறது.
          படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக, படிப்பே வராத தன் எஜமான் வீட்டு பையனுக்காக அவன் பெயரில் பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று பட்டம் வாங்கி அவனிடம் கொடுத்து, அந்த பையனை பட்டதாரியாக ஆக்கியிருப்பது என்பது ''ஆள்மாறாட்டத்தை'' அல்லவா குறிக்கிறது...?  அதேப்போல் தன் நண்பன் ஜீவா தேர்வில் பாஸ்பண்ண வேண்டும் என்பதற்காக பிரின்சிபால் அறையை திருட்டுச் சாவி போட்டு திறந்து, உள்ளே சீல் வைத்து வைக்கப்பட்டிருக்கும் வினாத்தாளை  எடுத்து வந்து ஜீவாவிடம் கொடுப்பது என்பது கள்ளத்தனம் அல்லவா...?  எவ்வளவோ நல்ல கருத்துக்களை உதிர்க்கும் கதாநாயகன் விஜய், இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதாக காட்டியிருப்பது என்பது நெருடலாக இருக்கிறது.
             தமிழ்நாட்டுப் பெண்கள்  கருப்பாக - குண்டாக - குள்ளமாக இருப்பது போன்ற கேலியான சித்தரிப்பை இயக்குனர் சங்கர் வரும் காலங்களில் தூக்கி எறியவேண்டும். இது போன்ற செயல்களும்  ஒரு சமூக குற்றம் தான் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. 
           கடைசியா ஒன்னேஒன்னு சொல்லிபுடுறேங்க.... அந்த கதாநாயகியா வர்றாங்களே இலியானா... ஒல்லியானான்னு வெச்சிருக்கலாம்... அம்புட்டு கோடி பணத்தைப் போட்டு இந்த படத்தை எடுத்ததா சொல்லுறாங்களே....இந்த டைரக்கேட்டருனால.... அந்தம்மாவுக்கு சரியான சாப்பாடு போட முடியலையாக்கும்... அது மட்டுமில்லைங்க... பாட்டு சீன்ல கூட  இலியானாவுக்கும், அவங்க கூட ஆடுற பொண்ணுங்களுக்கும் கூடவா முழு டிரஸ் வாங்கிக்கொடுக்க காசு இல்ல... ஆம்புளைங்கல்லாம்  மூணு நாலு டிரஸ் போட்டு ஒடம்பு பூரா மறைச்சிகீறாங்க... பாவமுங்க இந்த பொம்பளை புள்ளைங்க ரெண்டே பீசை போட்டு ஆடுதுங்க... எவ்வளவோ செலவு பண்றீங்க...அவங்க ஒடம்ப மறைக்கிறதுக்கு நல்ல டிரஸ் - ஆ வாங்கிக்கொடுங்க அய்யா...  அவங்க உடம்பையும் காசாக்கிற வேலையை விட்டுடுங்க அய்யா...