தமுஎகச லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமுஎகச லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 டிசம்பர், 2015

சகிப்புத்தன்மையின் அடையாளம் கம்யூனிஸ்ட்டுகளே...!


        சென்ற 29/11/2015 ஞாயிறன்று மதுரையில் நடைபெற்ற          
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்           
40ஆம் ஆண்டு  விழா மாநாட்டை துவக்கி வைத்து எழுத்தாளர்        
பிரபஞ்சன் ஆற்றிய உரையிலிருந்து சிறுபகுதி...                               

           தமிழ் கலாச்சாரத்திற்கும் பெருமைக்கும் அடையாளமாகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்  திகழ்கிறது. இந்தப் பிரபஞ்சனையும்   உருவாக்கியது முற்போக்கு அமைப்புகள் தான். யு.ஆர்.அனந்தமூர்த்தி, இப்போதைய ஆட்சியாளர்கள், அதிகாரத்துக்கு வந்தால் நான் நாட்டைவிட்டு வெளியேறிவிடுவேன் என்று தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். அதனால் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தினம் தினம் அவருக்கு டார்ச்சர் கொடுத்தனர். அவர் மிகுந்த மனவேதனையுடன் தான் இறந்தார். அதுபோலத்தான் மதங்களை மறுத்து மனிதர்கள் பக்கம் நிற்கிறார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக பன்சாரே, தபோல்கர், கல்புர்கி போன்ற அறிஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகள் மதவெறியர்களால் நடத்தப்பட்டிருந்தாலும் காங்கிரஸ், பிஜேபி ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சியின் கீழேயே இது அரங்கேறியுள்ளது.
           சிவாஜியை உயர்த்தியும், திப்புசுல்தானை தாழ்த்தியும் தற்பொழுது விமர்சிக்கிறார்கள். இரண்டுமே தவறானது. சிவாஜியை தங்கள் நோக்கத்துக்காகப் பயன்படுத்தியதை அம்பலப்படுத்தி அவரது உண்மை வரலாற்றை சிறு புத்தகமாக வெளியிட்டதற்காகத் தான் பன்சாரேவை கொலை செய்தார்கள் மதவெறியர்கள். எதிரி நாட்டு ராணி சாவித்திரி தேசாயை பாலியல் கொடுமைக்குள்ளாக்கியதைக் கேள்விப்பட்ட சிவாஜி, தனது உயர்வுக்கு காரணமாக இருந்த  தளபதியையே  கண் இரண்டையும் தோண்டி சிறையில் அடைக்க உத்தரவிட்டான். ரஞ்சி பட்டேல் எனும் உயர் சாதிக்காரன் தெருவில் சென்ற பெண்ணை மானபங்கம் செய்துவிட்டதால் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டாள் என்பதை கேள்விப்பட்ட சிவாஜி, ரஞ்சிபட்டேலின் இரு கைகளையும், இரு கால்களையும் துண்டித்து சிறையில் அடைத்தான். இத்தகைய உண்மைகளை எல்லாம் பொறுக்காமல் தான் மதவெறியர்கள் பன்சாரேவை கொலை செய்தார்கள். எல்லா காதலும் கைக்கிளையில்தான் துவங்குகிறது. ஆனால், அதை திணையிலேயே சேர்க்கவில்லை. மக்கள் மொழியில் பாடியதை இழிசனர் வழக்கு என்றனர். அது அக இலக்கியம் அல்ல. அகப்புற இலக்கியம் என்றே வகுத்துள்ளனர்.
            நதியாக இருந்த கூவம் சாக்கடையாக மாறியதைப்போல தான்  நமது சமூகம் மாறியிருக்கிறது. இந்திய ஆட்சியாளர்களைவிட பிரெஞ்சுக்காரர்கள் சிறந்தவர்கள் என்று சிலர் கூறுகிறார்கள். பாண்டிச்சேரியில் பொன்னுத்தம்பி என்ற வழக்கறிஞரை செருப்பும் கோட்டும் போட்டுக்கொண்டு வாதாடக்கூடாது என்று கட்டளையிட்டவர்கள் புதுச்சேரி பிரெஞ்ச் ஆட்சியாளர்கள். ஏகாதிபத்தியம் எத்தகையதானாலும் அது நல்லதாக இருந்தது இல்லை. 
       பிரான்ஸ் அறிஞர் ஜீன்பால் சர்தார் கம்யூனிஸ்ட் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்வார். ஆனால், வருடம்தோறும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்று தனது உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்துக்கொள்வார். கம்யூனிஸ்ட் கட்சியை இவ்வளவு கடுமையான விமர்சனம் செய்யும் நீங்கள் ஏன் அதில் உறுப்பினராக நீடிக்கிறீர்கள் என்று கேட்ட போது, எனக்கு இப்படி விமர்சனத்தை முன்வைக்கக் கற்றுக்கொடுத்ததே கம்யூனிஸ்ட் கட்சிதான். அவர்கள்தான் எத்தகைய விமர்சனத்தையும் சகித்துக்கொள்பவர்களாகவும் அதற்கு பதில் சொல்பவர்களாகவும் இருக்கின்றனர் என்றார். 
           எந்தக் காலத்திலும், எந்தத் தனிமனிதனும் அமைப்பைவிடப் பெரியவன் இல்லை. அமைப்புதான் நம்மை வழிநடத்துகிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.     

நன்றி :

புதன், 21 டிசம்பர், 2011

சாகித்ய அகாதமி விருது பெற்ற தோழர். சு.வெங்கடேசனுக்கு பாராட்டுகள்...!

               2011க்கான தமிழ் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு அவர் எழுதிய ''காவல் கோட்டம்'' நாவலுக்காக வழங்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியையும் பெருமித்தையும் ஒருசேர எமக்கு வழங்கியுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளரான அவர் பெற்றுள்ள இவ்விருது எம் அமைப்புக்கே கிடைத்த விருதாக எமது இயக்கத்தின் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களும் பெருமையுடன் கொண்டாடுகிறார்கள்.
          தமிழ் நாவல் வரலாற்றில் அழுத்தமான தடம் பதித்த காவல் கோட்டம் நாவலுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது இன்னும் சிறப்பான செய்தியாகும். அறுநூறு ஆண்டுகால மதுரையின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு கி.பி.1300லிருந்து 1900 வரையிலான காலத்தின் கதையை அரசியல், சமூகவியல், இனவரைவியல் கண்ணோட்டத்துடன் இந்நாவல் பேசுகிறது. வரலாறும் புனைவும் பிரித்தறிய முடியாதபடிக்குப் பின்னிச்செல்லும் நுட்பமான அழகியலோடு இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது. தாதனூர் என்னும் சிறு கிராமத்து மக்களின் களவும் காவலுமான வாழ்வினூடாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதுரையைக் கைப்பற்றுவதில் துவங்கி ரேகைச்சட்டத்தால் களப்பலியாகும் ஒரு மக்கள் குழுவின் வரலாறாகவும் இந்நாவல் விரிகிறது. என்னதான் முயன்றாலும் ஆங்கிலேய மூளைகளால் கணித்திடவே முடியாத ஒரு எளிய ஆனால் வலுவான உள்ளூர் பண்பாட்டு வரலாற்றைப் பதிவு செய்வதாகவும் காவல் கோட்டம் அமைகிறது. ஏற்கனவே இருந்த பண்பாட்டை அழித்து புதிதாக எதையும் தராத ஆங்கில அரசு என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்ட ஒரு வரலாற்று உண்மையின் கலாபூர்வமான வடிவமாகவே காவல் கோட்டம் நாவல் அமைந்துள்ளது. 1050 பக்கங்களில் விரியும் ஒரு பெருங்கதையாக ஓர் உள்ளூர் வரலாறு சொல்லப்பட்டிருப்பது தமிழில் அரிதாக நடக்கும் படைப்பு முயற்சியாகும்.ஏழு ஆண்டுகால கடுமையான ஆய்வுகளையும் உழைப்பையும் உண்டு செறித்து எழுந்து நிற்கும் காவல் கோட்ட்த்துக்காக இவ்விருது வழங்கப்பட்டிருப்பது அந்த உழைப்புக்குக் கிடைத்த உரிய அங்கீகாரமாகவே தமுஎகச கருதுகிறது.
ஓட்டையிடாத புல்லாங்குழல், பாசி வெளிச்சத்தில், ஆதிப்புதிர் போன்ற தொகுப்புகளின் வழியே ஒரு நுட்பமான கவிஞராக வெளிப்பட்ட எழுத்தாளர் சு.வெங்கடேசன் தொடர்ந்து ஆட்சித்தமிழ்,கலாச்சாரத்தின் அரசியல், கருப்பு கேட்கிறான் கிடா எங்கே, மதமாற்றத்தடைச்சட்டம், சமயம் கடந்த உ.வே.சா போன்ற பல நூல்களால் ஓர் ஆழமிக்க ஆய்வாளராக முகம் காட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக அவர் ஆற்றிவரும் களப்பணிகள் அவரது இன்னொரு முகம்.தன் ஆவேசமிக்க உரைகளின் மூலம் அணிகளை மன எழுச்சிகொள்ள வைப்பவர் சு.வெங்கடேசன்.
     2011 செப்டம்பரில் விருதுநகரில் நடைபெற்ற தமுஎகசவின் மாநில மாநாட்டில் அவர் தமுஎகசவின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இவ்வளவு இளம் வயதில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தமிழ்ப் படைப்பாளி என்கிற பெருமையையும் இதன்மூலம் அவர் பெறுகிறார்.
    தமுஎகச படைப்பாளிகள் இன்னும் உற்சாகத்துடன் தம் படைப்பு முயற்சிகளில் ஈடுபட இவ்விருது தூண்டுதலாக அமையும். தோழர் சு.வெங்கடேசனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஆவிசேரக் கட்டியணைத்துத் தெரிவித்துக்கொள்கிறது.
அருணன்                          ச.தமிழ்ச்செல்வன்
கௌரவத்தலைவர்           மாநிலத்தலைவர்