நிலக்கரி சுரங்க ஊழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிலக்கரி சுரங்க ஊழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 ஆகஸ்ட், 2013

நாட்டையே தொலைத்தவர்கள் கோப்புகளை தொலைத்துவிட்டார்கள் - சாதனை ஆட்சியாளர்கள்...!


                                                
சரித்திர சாதனை....!
                                                        
        
          சுதந்திர இந்தியாவில் இதுவரை 14 பிரதமர்கள் பதவி வகித்திருக்கிறார்கள். அவர்கள் யாருக்குமே இல்லாத பெருமைகள் இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மட்டுமே உண்டு. தனது ஒன்பது ஆண்டு பதவிக் காலத்தில், இதற்கு முன் எந்தப் பிரதமரின் ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு ஊழல்களும் முறைகேடுகளும் நடந்திருக்கின்றன என்று அவர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அதைவிடப் பெரிய சாதனை, ஒரு மிக முக்கியமான வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய 257 கோப்புகளை காணவில்லை, மாயமாக மறைந்து விட்டன என்று கிஞ்சித்தும் கூச்சமில்லாமல் சொல்லும் முதல் அரசும் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாகத்தான் இருக்கும்.
             நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான 257 கோப்புகள் சொல்லி வைத்தாற்போல காணாமல் போவது என்பது எப்படி நடந்திருக்க முடியும்? மாயமாய் மறைந்துவிட்ட 257 கோப்புகளில், 157 கோப்புகள், நரசிம்மராவில் தொடங்கி அடல் பிகாரி வாஜ்பாய் வரையிலான நான்கு பிரதமர்கள் பதவியில் இருந்த 1993 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பானவை. ஏனைய 100 கோப்புகள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தவை. இதில் வேடிக்கை என்னவென்றால், 2006 முதல் 2009 வரை, சம்பந்தப்பட்ட துறை, நேரடியாக பிரதமர் மன்மோகன் சிங்கின் பொறுப்பில் இருந்தது என்பதுதான்.
           இந்தக் கோப்புகள் என்னென்ன பிரச்னைகள் தொடர்பானவை தெரியுமா? நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான விண்ணப்பங்கள், அந்த விண்ணப்பங்கள் பற்றிய விவரங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் என்ன காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன என்பது தொடர்பான குறிப்புகள், சுரங்க ஒதுக்கீட்டிற்காக என்னென்ன விதிமுறைகளும், வரைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டன என்கிற விவரங்கள், ஒதுக்கீடு பெறப்பட்டதால் லாபமடைந்த நிறுவனங்களும் அவர்களது பின்னணியும், மாநில அரசு அல்லது மத்திய நிலக்கரி அமைச்சகத்தால் இன்னாருக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கோரும் பரிந்துரைகள் போன்றவைதான் காணாமல்போன கோப்புகளில் காணப்பட்ட விவரங்கள்.
           உதாரணத்திற்கு, காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டாலின் நிறுவனம் அளித்திருந்த தவறான தகவல்கள், இன்னொரு காங்கிரஸ் எம்.பி.யான விஜய் தாப்தாவின் கோரிக்கையைப் பரிசீலிக்கும்படி பணித்த மாநில, மத்திய அரசுகளின் பரிந்துரைகள் போன்றவையும் இந்த காணாமல்போன கோப்புகளில் காணப்பட்டவைதான்.
             ஆரம்பம் முதலே, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான சி.பி.ஐ.யின் விசாரணையை முடக்கவும், தடம் புரளச் செய்யவும் என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் அரசு செய்து வந்திருக்கிறது. இதனை உணர்ந்துதான் உச்ச நீதிமன்றம் தனது நேரடிக் கண்காணிப்பில் சி.பி.ஐ. இந்த விசாரணையைத் தொடர வேண்டும் என்று உத்தரவிட்டது.
             அப்படியும்கூட, சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்திற்கு அளித்த வழக்கு நிலவர வரைவு அறிக்கையை சட்ட அமைச்சரும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும் மாற்றியும் திருத்தியும், அந்த அறிக்கையை நீர்த்துப்போகச் செய்தனர் எனும்போது, இப்போது ஒட்டுமொத்தமாக கோப்புகளே காணாமல் போயிருப்பதாகக் கூறுவதில் வியப்பொன்றும் இல்லை.
               அது மத்திய அரசோ, மாநில அரசோ பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்திய நிர்வாக அமைப்பின் சிறப்பே, தேவைப்படுகிற எந்தவொரு கோப்பையும் 24 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து விடலாம், நகலெடுத்து விடலாம் என்பதுதான். ஒவ்வொரு கோப்பும் ஒன்றுக்கு நான்கு இடங்களில் பதிவாகும் விதத்தில் அமைந்ததுதான் இந்திய நிர்வாக அமைப்பு. ஆனால், அரசு கூறுகிறது, குறிப்பிட்ட 257 கோப்புகள் சம்பந்தப்பட்ட எல்லா தடயங்களும் மறைந்துவிட்டன என்று.
              கோப்புகளைக் கண்டுபிடித்துக் கொண்டு வாருங்கள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் தேடுதல் குழு ஒன்று அமைத்தார்கள். அந்தக் குழுவின் பரிந்துரை என்ன தெரியுமா? விண்ணப்பித்தவர்களிடமிருந்து அவர்கள் கொடுத்த தகவல்களை மறுபடியும் கேட்டு வாங்கலாம் என்பது. குற்றவாளியிடம் காரணம்கூறச் சொல்லும் கதையாக அல்லவா இருக்கிறது இது!
              கோப்புகளைக் காணவில்லை என்றால் உடனே என்ன செய்ய வேண்டும்? அதைப் பாதுகாக்கத் தவறியவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதுதானே நியாயம்? கோப்புகளைத் தேடி எடுக்கக் குழுவை அமைத்திருக்கிறார்களே தவிர, அதற்குப் பொறுப்பான அதிகாரிகளைக் கைது செய்து விசாரணை நடத்தவில்லையே, ஏன்? இதிலிருந்தே எதையோ மறைக்கப் பார்க்கிறார்கள் என்று தெரிகிறது.
                 பிரதமர் உள்ளிட்ட முக்கியமான நபர்கள் மாட்டிக் கொள்வதைவிட கோப்புகளைத் தொலைத்ததற்கு உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தையும், எதையும் மறந்துவிடும் மக்கள் மன்றத்தின் விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்வது என்று முடிவெடுத்து விட்டார்களோ என்னவோ?
              மிக முக்கியமான கோப்புகளைக்கூட பத்திரமாகப் பாதுகாக்கத் தெரியாத அரசின் பாதுகாப்பில் 120 கோடி இந்தியர்களின் தலையெழுத்தும் வருங்காலமும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றம் நடந்தால் என்ன நடக்காமல் முடங்கினால்தான் என்ன?
நன்றி :




வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

கரியை காசாக்கிய காங்கிரஸ் கட்சியும், காசைக் கரியாக்கும் பாரதீய ஜனதா கட்சியும்...!

        கடந்த மூன்று நாட்களாகவே இந்திய பாராளுமன்றத்தில் அனல் பறக்கிறது. பாராளுமன்றத்தின் மக்களவை  மற்றும் மாநிலங்களவை ஆகிய   இரு அவைகளும் நடத்த முடியாமல்  பாரதீய ஜனதா கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளினால் முடக்கப்பட்டிருக்கின்றன. சென்ற வாரம் மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் கிளப்பிவிட்ட புயல் ஓயவே இல்லை. திடிரென்று வந்த ''தானே'' புயல் மாதிரி, தலைமை கணக்கு தணிக்கையாளர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையே ஆட்டம் காண வைத்திருக்கிறது என்பது உண்மை தான்.  
              இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊழல்.... 2 ஜி-ஸ்பெக்ட்ரம் ஊழலையே   மிஞ்சி விட்ட மெகா  ஊழல்... அரசின் கையிலிருந்த  நிலக்கரி சுரங்கங்களை தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு   திறந்துவிடப்பட்டதில் அரசுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய  வருமான இழப்பு என்பது 1.86 இலட்சம் கோடி என்ற தகவலை தலைமை கணக்கு தணிக்கையாளர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துயிருக்கிறார். இது ''திருவிளையாடல்'' எப்போது நடந்தது என்றால்...  நிலக்கரி சுரங்கம்  பிரதமரின் கட்டுப்பாட்டில் இருந்த காலக்கட்டத்தில்  தான் என்பது குறிப்பிடத்தக்கது.

             பாராளுமன்றத்தை முடக்குவதற்கு வாய்ப்புகளை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கு இந்த அறிக்கை என்பது மிகப்பெரிய அல்வா துண்டு போல கிடைத்துவிட விட்டேனா பார் என்று குழப்பத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கி கடந்த மூன்று நாட்களாக பிரதமர் பதவி  விலகவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் முடக்கி வருகின்றனர். ''விடாக்கண்டன்- கொடாக்கண்டனான'' நம்ம பிரதமர் மன்மோகன் சிங் வழக்கம் போல் இதுவரை வாயையே திறக்கவில்லை. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட ''தலை'' ஆடவில்லை... ஆனால்  ''வால் '' மட்டும் துடித்து ஆடியது. ஆம்... பிரதமரின் வாலாக ஒட்டிக்கொண்டிருக்கக்கூடிய மத்திய அமைச்சர் நாராயணசாமி தலைமை கணக்கு தணிக்கையாளரை  மிரட்டுவதுபோல் பேசினார். தலைமை கணக்கு தணிக்கையாளர் அரசை கலந்தாலோசிக்காமல் அறிக்கையை நேரடியாக தாக்கல் செய்தது என்பது தவறானது என்று கர்ஜித்தார். தலைமை கணக்கு தணிக்கையாளர் என்பவர் இந்திய அரசியல்சாசன சட்டப்படி பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்டவர் என்பதையே இந்த  அமைச்சர் மறந்துவிட்டு பேசினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஒட்டிக் கொண்டிருக்கக்கூடிய திமுகஉள்லிட்ட கட்சிகளும் வாயை திறக்கவில்லை.
             ஆனால் ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகளெல்லாம் பேசவே முடியாமல் ஆடிப்போயிருக்கின்றன. இன்னொரு பக்கம் இந்த ஊழலை காரணம் காட்டி வரும் 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி விட்டு  தாங்கள்    எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியினர் துடித்துக்கொண்டிருக்கின்றனர்.
         கர்நாடகா மாநிலத்தில் இதே போல் நிலக்கரி ஊழலில் சிக்கி நாறிக்கொண்டிருக்கிற பாரதீய ஜனதா கட்சி தங்களை உத்தமர்களைப் போல் காட்டிக்கொள்ள பாராளுமன்றத்தைப் பயன்படுத்துகின்றனர். தாங்கள் தான் ஊழலை ஒழிக்க வந்த பரமாத்மா போல் ஊழலுக்கு காரணமான மன்மோகன் சிங் பதவி விலகும் வரை ஓயமாட்டோம் என்று கூறி  இரு அவைகளையும் நடத்தவிடாமல் கடந்த மூன்று நாட்களாக பாராளுமன்றத்தையே முடக்கிவருகின்றனர். இது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரான செயல் ஆகும்.பாராளுமன்ற ஜனநாயகத்தின் குரல்வளையையே நெரிக்கும் செயலாகும்.
            அது மட்டுமல்லாமல், குற்றம்  சாட்டப்பட்ட பிரதமர் தன்னுடைய கருத்துக்களை பாராளுமன்றத்தில் எடுத்துரைப்பதற்கும், இந்த ஊழல் சம்பந்தமாக மற்ற எதிர்க்கட்சிகளும் பாராளுமன்றத்தில்  தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்வதற்குமான  வாய்ப்பைகளை  தடுக்கின்ற  செயலாகும். பறிக்கின்ற செயலாகும். . இப்படி மற்றவர்களை பேசவிடாமல், பாராளுமன்றத்தில் அடாவடித்தனமாக தகராறு செய்வதன்  மூலம், தாங்கள் மட்டுமே ஊழலுக்கு எதிராக  குரல் கொடுப்பவர்கள் போலவும், பாரதீய ஜனதா கட்சி மட்டுமே ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று என்பது போலவும்  ஆன கருத்துக்களை மக்களிடம் உருவாக்கவே பாரதீய ஜனதா கட்சி  இந்த பாராளுமன்ற சீர்குலைவு வேலைகளை செய்து நாடகம் ஆடி வருகின்றனர்.  
                உண்மையிலேயே பாரதீய ஜனதா கட்சியினர் ஊழலுக்கு எதிராக போராடுகின்றார்கள் என்றால், நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும்...? இந்த ஊழல் சம்பந்தமாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அரசை வற்புறுத்தியிருக்க வேண்டும். இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட பிரதமரையும், கோடிக்கணக்கான அரசின் பணத்தை சுருட்டிய பெருமுதலாளிகளையும் விசாரணைக்குள்  உட்படுத்த வேண்டும் என்று போராடியிருக்க வேண்டும்.
             அதேப்போல், இந்திய பன்னாட்டு பெருமுதலாளிகள் கோடிகோடியாய் கொள்ளையடித்த மக்கள் பணத்தையும் அதனால் சேர்த்த சொத்துக்களையும் அரசு பறிமுதல் செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்து  பாரதீய ஜனதா கட்சியினர் வலுவாக நாடாளுமன்றத்தில் போராடியிருக்கலாமே...? ஏன்  செய்யவில்லை...?
          ஏனென்றால், பாரதீய ஜனதா கட்சியினர் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக செயல் படுவார்களே தவிர எதிராக  செயல்பட மாட்டார்கள். இவர்களின் தேர்தல் செலவை கவனிப்பவர்கள் அவர்கள் தானே...? பாரதீய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியினை போலவே மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாதர்ககள். பெருமுதலாளிகளுக்கு ஆதரவானவர்கள்.

சனி, 18 ஆகஸ்ட், 2012

மன்மோகன் சிங்கின் புதிய ஊழல் சாதனை - 2ஜி - யை மிஞ்சியது...!


                      ஒரு கிலோ அரிசி ரூ. 2 /- வீதம் ஒரு குடும்ப அட்டைக்கு மாதம் 35 கிலோ அரசி கொடுக்க ஏற்பாடு செய்வதன் மூலம் நாட்டிளுள்ள அனைத்து மக்களுக்கும் உணவு பாதுகாப்பை ஏற்படுத்து என்று மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் போராடி வருவதுடன் அதற்கான கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து மனு ஒன்றையும் கொடுத்திருக்கிறார்கள். வெறும் 1.50 இலட்சம் கோடி ரூபாய்களே தேவைப்படும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மன்மோகன் சிங் யோசிக்கிறார். அதற்கு நிதி இல்லை என்று நழுவுகிறார். மக்களுக்கென்று ஒரு திட்டம் நிறைவேற்றவேண்டுமென்றால் மத்திய அரசு தயங்குகிறது. ஆனால் இதே மத்திய அரசு இந்திய பெருமுதலாளிகளுக்கு 5 இலட்சம் கோடி வரை மானியமும், வரிச்சலுகைகளையும் தாராளமாக வாரி வழங்குகிறது. 
              ஆனால் ''பொருளாதார வளர்ச்சி'' என்ற பேரில் சாதாரண மக்களுக்கு மட்டும் கூடுதல் வரி, புதிய வரி, மானியம் வெட்டு என பல்வேறு கோணங்களில் மக்களை நசுக்குகிற வேலைகளை மத்திய அரசு மனசார செய்கிறது. 
            அண்மையில் சுதந்திரதினத்தன்று கொடியினை ஏற்றிவைத்து விட்டு சந்தோஷமாக நாலு வார்த்தைகளை பேசாமல், மன்மோகன் சிங் ஒப்பாரிவைத்து அழுதே விட்டார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கிறதாம். அதற்கு காரணம்  அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்தொற்றுமை இல்லையாம். மக்களை திசைத் திருப்புவதற்கு எதிர் கட்சியின் மீது இப்படியொரு குற்றச்சாட்டு. 
            மன்மோகன் சிங் செய்கிற ஏகாதிபத்திய ஆதரவு கொள்கைகளுக்கும், முதலாளித்துவ ஆதரவு கொள்கைகளுக்கும் இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால் அவருக்கு எரிச்சல் வருகிறது.  அரசியல் கட்சிகள் அனைத்தும் அறிவுப்பூர்வமாக சிந்தனை செய்யாமல், மக்களைப் பற்றி யோசிக்காமல், கண்மூடித்தனமாக இவரையும், இவர்  கொண்டுவரும் அறிவிலித்தனமான  திட்டங்களையும் ஆதரிக்கவேண்டும் என்று கூசாமல் எதிர்ப்பார்க்கிறார். 
              இப்படியாக மண்ணுமோகன் ஆட்சி என்பது திக்குத் தெரியாமல் திக்குமுக்காடி கொண்டிருக்கும் வேளையில் - ஏற்கனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலும், காமன்வெல்த் விளையாட்டு ஊழலும், ஆதர்ஷ் வீட்டு ஊழலும் கொடிகட்டிப் பறக்கும் இந்த சூழ்நிலையில் தான்,  இந்த ஊழல்கள்   எல்லாம் தோற்கும் விதமாக 3.86 இலட்சம் கோடி அளவில் புதிய ஊழல்களை புரிந்து மண்ணு மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி புதிய சாதனையை புரிந்திருக்கிறது. மிகப்பெரிய சாதனை - பெருமையாக இருக்கிறது. இத்தனைக்கும் மன்மோகன் சிங்கிற்கு நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு  தனியாருக்கு அனுமதியளித்ததில் 1.86 இலட்சம் கோடி ரூபாயை, மக்களுக்கு திட்டங்களை தருவதில் நிதியை காரணம் காட்டுகிற மத்திய அரசு இழந்திருக்கிறது என்பது காரித்துப்புகிற அளவிற்கு கேவலமானது.
             அதில் மன்மோகன் சிங்கின்  காங்கிரஸ் கட்சிக்கு  தேர்தல் செலவை கவனிக்கின்ற - பாராளுமன்றத்தில் சோதனையான காலங்களில் மன்மோகனை காப்பாற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதிகளை கொட்டி இறைக்கின்ற  ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகை அளித்ததில், 29 ஆயிரத்து 33 கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு  இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை சொன்னது வேறு யாரும் அல்ல. மத்திய கணக்கு தணிக்கை  குழு நேற்று  பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த விவரங்களில் மிகவும் முக்கியமானது. 
             ''பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ; நாங்கள் சாகவோ'' என்று  பாரதியை போல் ஆட்சியாளர்களுக்கு  எதிராக ஒரு நாள் மக்கள் கொதித்தெழுவார்கள்.