மூடநம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூடநம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 டிசம்பர், 2015

இந்தியாவின் வளர்ச்சிக்கு தடை போடுவது மூடநம்பிக்கையே...!


            ''இந்தியாவின் வளர்ச்சிக்கு தடை போடுவது மூடநம்பிக்கையே'' என்கிறார் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் ராமகிருஷ்ண வெங்கட்ராமன். மைசூரு பல்கலைக் கழகத்தின் சார்பில் பங்கேற்று 'யாருக்கும் சொந்தமில்லா உலகம்: சான்றுகள் மற்றும் நவீன அறிவியல்' என்ற தலைப்பில் அவர் பேசினார்.

#
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய அய்ரோப்பா நாடுகள் முன்னேறியுள்ளதற்கு நவீன அறிவியல் பயன்பாடுதானே தவிர, அது விபத்தால் நேர்ந்ததல்ல. ஆதாரங்கள் இல்லாத பல வழக்கங்கள் இந்தியாவின் முன்னேற்றத்தை தடுத்து வருகின்றன.

#
இந்தியர்கள் மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபடவேண்டும் அல்லது குறையப்பட வேண்டும்.

# இந்தியர்கள் எதையும் ஆராய்ந்து நோக்கும்  பகுத்தறிவாளர்களாக மாற வேண்டும்.

#
மேற்கத்திய நாடுகளில் விண்கலங்கள் விண்ணில் ஏவப்படுவதற்கு முந்தைய கடைசி நிமிடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
#
ஆனால் இந்தியாவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த மங்கள்யான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டப்போது, அப்போதைய இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழக (இஸ்ரோ) தலைவர் கே.ராதாகிருஷ்ணன் திருப்பதிக்கு சென்று பிரார்த்தனை செய்தார். இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நல்ல நேரம் பார்த்து செவ்வாய்க்கிழமை அன்று ஏவினார்கள். இது போன்ற நடவடிக்கைகள் மேற்கத்திய நாடுகளில் காணமுடியாதது.

#
மக்களிடையே உயிரியல் சார்ந்த அடிப்படை புரிதல் இல்லை. ஆண் குழந்தையை ஈன்றெடுக்காததற்கு தாயை குறைசொல்லும் மூடநம்பிக்கை இந்தியாவில் உள்ளது. இதை எப்படிஏற்றுக்கொள்ள முடியும்?

#
2009 ஆம் ஆண்டில் சூரியகிரகணம் ஏற்பட்ட போது அதனால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்க கர்நாடக அரசு சார்பில் கோயில்களில் பூஜை நடத்த தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டது. விண்வெளி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ள கர்நாடகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது ஆச்சரியமளித்தது.

#
ஒருபக்கம் அதிநவீன தொழில்நுட்பமும், மறுபக்கமும் மூடநம்பிக்கையும் இந்தியாவில் குவிந்து கிடக்கின்றன. தவறான நம்பிக்கைகள், ஜோதிடம் போன்றவற்றின் எதிர்வினையால் தான் உண்மையான அறிவியல் மலர்ந்தது. மனிதர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜோதிடர்கள் கருதியதன் விளைவால் கோள்கள், நட்சத்திரங்கள் குறித்த அறிவியல் ஆராய்ச்சிகள் தொடங்கின. மாறிக்கொண்டே இருக்கும் அறிவியலைப் போல அல்லாமல் ஜோதிடம் வளர்ச்சியில்லாமல் உறைந்துபோயுள்ளது என்றார் அவர்.

நன்றி : விடுதலை

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

அட்சய திருதியை வேட்டிகள் - இந்த ஆண்டின் புதிய கண்டுபிடிப்பு

                  
                 ஒவ்வொரு ஆண்டும் இந்த சித்திரை மாதம் வந்தா ''அட்சய திருதியை'' வரும். அது வருவதற்கு முன்பே இந்த நகைக்கடைக்காரங்க தொந்தரவு தாங்கவே  முடியாது. அப்பப்பா... தொலைக்காட்சிகளிலும், வானொலியிலும், செய்தித்தாள்களிலும் ''அட்சய திருதியை அன்று எங்க கடையில நகையை வாங்குங்க... சேதாரம் இல்லை... செய்கூலி இல்லை... முன் பணமா கட்டிடுங்க... வட்டியும் இல்லை...'' அப்படி...  இப்படி... என்று ஒரே நொடிக்கு ஒரு முறை ஒரே நச்சரிப்பு தான். அன்றைக்கு நகைகள் வாங்கினால் அந்த ஆண்டில் நிறைய நகைகளை வாங்குவார்களாம். இப்படியொரு பொய்யை கிளப்பிவிட்டுடுவாங்க. நம்ம ஆளுங்களோ இருக்கிற நகையை வெச்சியாவது கடன் வாங்கி அன்றைய தினம் புதிய நகையை வாங்குவார்கள். பின்னாளில் கடனுக்கு வைத்த நகையை  மீட்ட முடியாமல் போய்விடும். 
              இருபது ஆண்டுகளுக்கு முன்பும் இந்த அட்சய திருதியை வந்தது. ஆனால் அன்றைய தினம் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை யாரும் கிளப்பிவிடவில்லை. ஆனால் இன்றைக்கு தாராளமயமும், உலகமயமும் மக்களிடம் பொய் சொல்லி இலாபம் சம்பாரிக்க சொல்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக தான் நாடு முழுதும் தங்க நகை வியாபாரத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள மிக பெரிய நகைக்கடை நிறுவனங்கள் மக்களின் பணத்தையே குறிவைத்து துணிந்து அப்படியான பொய் கதைகளை அவிழ்த்துவிட்டு கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றன. அதை நம்பி அப்பாவி மக்களும் ஏமாந்து போகிறார்கள். 
                    இந்த கூட்டத்தை துணிக்கடைக்காரங்க பார்த்தாங்க. நாமும் எதையாவது கதையை சொல்லி ஏன் இலாபம் சம்பாதிக்கக்கூடாது என்று யோசித்தார்கள். அவங்க பங்குக்கு அட்சய திருதியை பயன்படுத்திக்கொண்டார்கள். அன்றைக்கு புதிய ஆடைகளை வாங்கினால், ஆண்டு முழுதும் புதிய ஆடைகள் சேருமாம். 
               இப்போது இந்த ஆண்டு தமிழகத்தில் வேட்டிகளை தயார் செய்து விற்பனை செய்யும் ஒரு பெரிய நிறுவனம் அட்சய திருதியை அன்று அவங்ககிட்ட வேட்டியை வாங்கி அட்சய திருதியை மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்து அந்த வேட்டியை மத்தவங்ககிட்ட கொடுத்தா பேஷா இருக்குமாம். சகல சவுபாக்கியத்தையும் பெற்று ஷேமமா வாழலாமாம். இப்படியொரு விளம்பரம் இன்றைக்கு பத்திரிகைகளில் வந்திருக்கு. பெரிய நிறுவனங்களின் இலாபம் மக்களை மூளைச் சலவை செய்வது தான். அதன் விபரீதத்தைப்பற்றி பார்க்காது.

வியாழன், 1 ஜனவரி, 2015

''P K'' - மூடநம்பிக்கை எனும் போதை தெளிவிக்கும் திரைப்படம்


 விமர்சனம் : அ. குமரேசன், பத்திரிக்கையாளர்                            
        பேரண்டத்தையே படைத்து, உலகத்தை உருவாக்கி, அதில் உயிரினங்களை உற்பத்தி செய்து, எது எது எப்படி நடக்க வேண்டும் என்று தானே தீர்மானித்து, ஒவ்வொரு அணுவையும் இயக்குகிறவர் எனக் கூறப்படும் கடவுளை எந்த அற்ப மானிடப் பிறவியாவது அவமதித்துவிட முடியுமா...? நம்பிக்கைகளை கேள்வி கேட்பதென்பது அப்படி அவமதிக்கிற செயல்தான் என்று கூறி, அதிலிருந்து காப்பாற்றப் போவதாகக் கிளம்புவதை விடவும் கடவுளை அவமதிக்கிற வேலை இருக்க முடியுமா? ஆண்டவனைக் காப்பாற்ற அவதாரமெடுத்தவர்கள் அப்படிச் சொல்லித்தான் மக்களைக் கூறுபோடுகிறார்கள், மதங்களின் பெயரால் மோதவிடுகிறார்கள், உண்மைப் பிரச்சனைகளுக்காக ஒன்றுபட்டுப் போராட விடாமல் தடம் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
          இதைப்பற்றிய விழிப்புணர்வோடு பகுத்தறிவுக் கருத்துகளைக் கூறுகிற திரைப்பட ஆக்கங்கள் அவ்வப்போது வந்திருக்கின்றன. ‘3 இடியட்ஸ்’ போன்ற மாறுபட்ட படங்களால் ஆரோக்கியமான விவாதங்களுக்கு வழியமைத்த ராஜ்குமார் ஹிரானி, பொதுவெளியிலும் மனசாட்சியைத் தட்டியெழுப்பிடும் விவாதங்களை நடத்திடும் அமீர்கான் கூட்டில் இந்தப் படமும் ஒரு மாற்றுத் தடத்தைப் பதிக்கிறது. கோடிக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் உள்ள இந்தப் பேரண்டத்தில் ஏதோவொரு மண்டலத்தில், ஏதோவொரு சூரியனைச் சுற்றி, ஏதோவொரு கோளில், இந்த பூமியில் இருப்பது போன்றே உயிரினங்களும் சிந்திக்கத் தெரிந்த மனிதர்களும் ஏன் இருக்கக்கூடாது...? அறிவியல் உலகம் ஆர்வத்தோடு ஆராய்ந்து கொண்டிருக்கிற இந்தக் கேள்வியில் தொடங்குகிறது  படம்.
       ஏதோவொரு கோளிலிருந்து வரும் விண் வாகனத்திலிருந்து ஆராய்ச்சிக்காக ராஜஸ்தான் பாலைவனத்தில் வந்து இறங்குகிறான் நாயகன். ஆடையணிகலன்களால் கூட பாகுபாடு காட்டாத, மொழியே தேவைப்படாத கோள் அது. அவன் திரும்பிச் செல்வதற்கான ஒரே ஏற்பாடு, கழுத்தில் தொங்குகிற மின்னணுத் தகவல் பதக்கம்தான். அந்தப் பதக்கத்தை ஒருவன் வழிப்பறி செய்து தப்பித்துவிடுகிறான். அதைத் தேடிப் போகிறவனுக்கு மற்றவர்கள் சூட்டுகிற பெயர்: ‘போதைக்காரன்’ - அதன் சுருக்கெழுத்துதான் ''பி.கே.'' “கடவுள்தான் உனக்கு உதவ முடியும்” என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு கடவுளின் முகவரியை விசாரிக்கிறான்.
.         அவனுக்குக் கடவுள் கிடைக்கவில்லை, மாறாக கடவுளின் பெயரால் நடக்கும் கொடுமைகளும், மோசடிகளும், திசைதிருப்பல்களும், மதவாத வெறுப்புகளும் எங்கும் பரவிக் கிடப்பதைக் கண்டறிகிறான். இந்தச் செய்திகள் தரமான நகைச்சுவையும், கலகலப்பும், விறுவிறுப்புமாகப் பரிமாறப்படுவது படத்தின் முக்கிய வெற்றி. இங்குள்ள நடைமுறைகள் எதுவும் தெரியாத அந்த போதைக்காரன் கணினியின் கோப்புகளை மற்றொரு கணினிக்கு மாற்றுவது போல் ஒரு மொழியைத் தெரிந்து கொள்கிறான் என்பது போன்ற அறிவியல் கற்பனைகளோடு கலந்து, இந்த மண் எப்படி மூடநம்பிக்கைகளும் மத வேற்றுமை அடையாளங்களுமாக போதையில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையைக் காட்டுகிறது படம்.
         இதை, ஒரு வேற்றுலகவாசியைக் கொண்டுதான் சொல்ல முடியும் என்ற கதாசிரியர் - இயக்குநரின் வெளிப்பாட்டு உத்தி பலனளித்திருக்கிறது. தொடக்கத்தில் அவனை மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று நினைக்கிறாள் தொலைக்காட்சி செய்தியாளரான ஜக்கு. பின்னர் அவனைப் புரிந்துகொண்டு, அவனுடைய பதக்கத்தைக் கண்டுபிடிக்க ஒத்துழைக்கிறாள். அவனிடமிருந்து பறிக்கப்பட்ட அந்தப் பதக்கம் தற்போது ஒரு பெரிய ஆன்மீக போதனை குருவிடம் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். அவரோ அது தனக்கு கடவுளால் வரமாகத் தரப்பட்டது என்று கதை விட்டுக்கொண்டிருக்கிறார். சொந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு தேடி தன்னிடம் வருகிற பக்தர்களை, எளிதில் செல்லமுடியாதபடி இமயமலைச்சாரலில் இருக்கிற ஒரு கோவிலுக்குச் சென்று வழிபட்டால் வழி பிறக்கும் என்கிறார் குரு.
        இறைவனின் கருணையைப் பெற்றுத் தருவதற்கு பல இடங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடவுளை நோக்கி கடுமையான விரதங்களை மேற்கொண்டால்தான் வேண்டுதல்கள் நிறைவேறும் என்கிறார்கள். அந்த குரு, கடவுளிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசுவதாகக் கூறப்படுவதைப் பலரும் நம்பியிருக்க, இப்படியெல்லாம் கடினமான வழிகளைத் தான் கடவுள் சொல்வார் என்றால், குரு பேசுவது உண்மையான கடவுளின் சரியான எண்ணில் அல்ல, “ராங் நம்பரில்தான் பேசுகிறார்” என்று தொலைக்காட்சி உதவியோடு அறிவிக்கிறான் பி.கே. அவனுடன் நேரடி விவாதம் நடத்த முன்வரும் குரு, “நான் பேசுவது ராங் நம்பர் என்றால், ரைட் நம்பர் எது” என்று கேட்டு மடக்குகிறார்.
        அதற்கு பி.கே. அளிக்கிற விளக்கம் ஒரு ஆழ்ந்த தத்துவ விசாரணை. வாழ்க்கையைப் பற்றிய அச்சம் தான் ஆன்மீக வணிகத்திற்கு ஆதாரம் என்பதை பி.கே. சொல்வது, மாற்றுக் கருத்துகளை மதவெறிக்கும்பல்கள் பொறுத்துக் கொள்வதில்லை என்பதற்கு அடையாளமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பொறுப்பாளருக்கு விழுந்த சூலாயுதக் குத்து பற்றிய தகவல்,
    மனிதர்களின் மத அடையாளங்கள் செயற்கையாக அணிவிக்கப்பட்டவையே என்று நிறுவுவது - இவையெல்லாம் வழக்கமான வர்த்தக சினிமாக்களில் காண முடியாத காட்சிகள். கடவுளைக் காப்பாற்றுவதற்காக நடக்கும் சண்டையின் தொடர்ச்சியாக, கொஞ்சமும் எதிர்பாராத ஒரு நொடியில் நடக்கிற அந்த குண்டு வெடிப்பும், தொடரும் அவலங்களும் மனதை உறையவைக்கின்றன. அவ்வளவு நேரம் வாய்விட்டு சிரித்ததற்கு ஈடாகக் கண்ணீரை வரவழைக்கின்றன. எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் தாக்காமல், ஆனால் உலகம் முழுவதுமே இப்படியான நம்பிக்கைகளின் பெயரால் குதறப்பட்டிருக்கிறதே என்ற எண்ணம் ஊன்றப்படுகிறது. 
          அந்த ஜக்கு பெல்ஜியத்தில் இருந்தபோது பாகிஸ்தான் நாட்டு இளைஞனைக் காதலித்தவள். அந்தக் காதல் என்ன ஆனது என்ற பின்னணி, நாடுகளின் எல்லைக்கோடுகளாலும், பகைமை வளர்க்கும் அரசியலாலும் மனித உறவுகள் சிதைக்கப்படுவது பற்றிய உறுத்தலை ஏற்படுத்துகிறது. ஜக்கு மீது காதல் கொள்ளும் பி.கே., அந்தப் பின்னணியை அறிவதோடு அதை முன்னணிக்கும் கொண்டுவருவது கவித்துவமானது. நடிப்பில் அமீர்கான் புதிய எல்லைகளைத் தொடுகிறார். ஜக்குவாக அழகிய பங்களிப்பைச் செய்திருக்கிறார் அனுஷ்கா சர்மா. கடவுள் என்ற ஒரு சக்தி இல்லை என்று சொல்வதற்கு பி.கே. முன்வரவில்லைதான். “இரண்டு கடவுள்கள் இருக்கிறார்கள். ஒரு கடவுள் நம்மைப் படைத்தவன். அவனை நம்பினால் போதும். இன்னொரு கடவுள் மனிதர்களால் படைக்கப்பட்டவன். அவனை எண்ணி அச்சப்பட வேண்டியிருக்கிறது, அவனிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டியிருக்கிறது, அவனுக்காகச் சண்டைபோட வேண்டியிருக்கிறது,” என்று பி.கே. கடைசியில் சொல்கிறான். அதிலே ஒரு சிறு சமரசம் இருக்கிறது, “அவன்” என்று சொல்வதன் மூலம் கடவுளை ஆணாகச் சித்தரிப்பதும் தொடர்கிறது. இருந்தபோதிலும் கூட, அவரவர் நம்பிக்கைகளைப் பின்பற்றிக்கொண்டே, மற்ற நம்பிக்கைகள் கொண்டோரைப் பகைவர்களாகப் பார்க்காமல் நேசம் வளர்க்க முடியும் என்ற உன்னதமான சிந்தனையைத் தெளித்து, “போதை” தெளிவிக்கிற கலைத்தொண்டாக வந்திருக்கிறது பி.கே. சஞ்சய்தத், சவுரப் சுக்லா, சுஷாந்த்சிங் ராஜ்புத், போமன் இரானி ஆகியோரின் ஒத்துழைப்பான நடிப்பு, அஜய் அதுல், ஷாந்தனு மொய்த்ரா, அங்கிட் திவாரி ஆகியோரின் கூட்டு இசையினிமை, சி.கே. முரளிதரன் ஒளிப்பதிவுத் தெளிவு, அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி இருவரின் திரைக்கதை உரையாடல் கூர்மை எல்லாமாக இணைந்து பி.கே.யை மறக்க முடியாத படமாக்கியிருக்கின்றன. 
        “படம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் பார்க்காதீர்கள், ஆனால் மற்றவர்கள் பார்க்கிற உரிமையைத் தடுக்காதீர்கள்,” என்று, இந்தப் படத்திற்குத் தடை விதிக்கக்கோரிய ஒரு அமைப்பின் மனுவைத் தள்ளுபடி செய்து, வரவேற்கத்தக்கதொரு தீர்ப்பை அளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். நீதி மன்றத்தின் ஆதரவோடுதான் இத்தகைய மாற்றுக் கலைமுயற்சிகள் மக்களிடம் வர முடியும் என்பது ஜனநாயகத்தில் கவலைக்குரிய போக்குதான். அதே நேரத்தில், இப்படிப்பட்ட படங்கள் பிடிக்காதவர்களும் இதைப் பார்க்க வேண்டும், இது எழுப்புகிற கேள்விகளுக்கான பதில்களைத் தேட வேண்டும். வேலிகள் தாண்டி மானுடம் வேர் விட்டுக் கிளை பரப்பிட அந்தத் தேடல் வழிவகுக்கும்.
நன்றி : தீக்கதிர்  

ஞாயிறு, 9 நவம்பர், 2014

நிலக்கடலை செய்யும் அற்புதம்...!

              நிலக்கடலை குறித்த மூடநம்பிக்கைகள் அவநம்பிக்கைகள் உலகம் முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
           நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
         நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நீரழிவு நோயை தடுக்கும்:           

         நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப்பை கல்லைக் கரைக்கும்:            

        நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:          

          நிலக்கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச்சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்:                 

           இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:                  

         நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:               

       நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:                

               தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.
          இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:                   

           உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில் தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள் பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப்பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
              கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடி இருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:        

           பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்:           

100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:          

                 நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும்  நிலக்கடலைக்கு தான் உண்டு. 
நன்றி  www.puradsifm.com

சனி, 19 அக்டோபர், 2013

மத்திய அரசின் கோமாளித்தனமும், மோடியின் பகுத்தறிவு வேஷமும்....!

   
      உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவிலிருந்து சுமார் 50 கி. மீ. தொலைவில் உள்ள உன்னாவ் என்ற ஊரின் காட்டுப் பகுதியில் இருக்கும் டோண்டியா கேடா எனும் கிராமத்தில் 19 - ஆம் ஆம் நூற்றாண்டில் ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங் எனும் அரசரின் கோட்டை இருந்ததாகவும், தற்போது பகலில் கூட பொதுமக்கள் செல்லமுடியாத வகையில் சிதிலமடைந்த நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது வரையில் பொதுமக்களே செல்லாத அந்த இடத்திற்கு தற்போது மத்திய அரசின்  அகழ்வாராய்ச்சி நிபுணர்களும், நடமாடும் தொலைக்காட்சி நிறுவனங்களும், ஊடகத்துறையை சேர்ந்தவர்களும், இவர்களுடன் பொதுமக்களும் என ஆயிரக்கணக்கில் வந்தவண்ணம் இருக்கிறார்கள். நாட்டின் அனைவரின் பார்வைகளும் அங்கு தான் இருக்கின்றன. காரணம் அங்கு ''தங்கப்புதையல் வேட்டை'' நடைபெறுகிறது.
         ''தங்கப்புதையலா...!'' என்று வாயை பிளக்கவேண்டாம். சாதாரணமாக ''உங்க வீட்டில் புதையல் இருகிறது'' என்றும், ''உங்க நிலத்தில் புதையல் இருக்கிறது'' என்றும் சாமியார்களும், ஜோசியக்காரர்களும் சாதாரண பாமரமக்களிடமும், படிப்பறிவில்லாத மக்களிடமும் தான் பிழைப்புக்காக பொய் சொல்லுவார்கள். இது போல் நம் நாட்டில் விழிப்புணர்வில்லாத பொதுமக்கள் ஏமாறுவது என்பது இயற்கை. ஆனால் மத்திய அரசே யாரோ சாமியார் தன் கனவில் வந்ததாக சொல்லுவதையெல்லாம் நம்பி தன்  நேரத்தையும் பணத்தையும் செலவழிக்கிறது என்பது கோமாளித்தனமாக இருக்கிறது. மத்திய அமைச்சர்களோ அல்லது மத்திய அரசு அதிகாரிகளோ அறிவுப்பூர்வமாக அல்லது அறிவியல்பூர்வமாக சிந்திக்காமல் மூளையை கழட்டி வைத்துவிட்டார்களோ என்று சந்தேகமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. தங்கப்புதையல் கிடைக்கவேண்டுமென்றால் ''உயிர் பலி'' கொடுக்கவேண்டுமென்று சாமியார்கள்  சொன்னால், இந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் அதையும் செய்யத் துணிவார்களோ....?  இதுபோன்ற மூடநம்பிகைகளை அரசே நம்புவது என்பதும், அதை மக்களிடையே பரப்புவது என்பதும் அறிவுடைமைச் செயலாகாது. முட்டாள்தனமானது.
          இது ஒருபுறமிருக்க. இன்னொரு புறம், பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி நேற்று சென்னை வந்த நரேந்திர மோடி மத்திய அரசின் இச்செயலை கிண்டலடித்து பேசியிருக்கிறார். ''சாமியார் சொன்ன புதையல் வேட்டையை நிறுத்திவிட்டு, சுவிஸ் வங்கியில் இந்திய பணக்காரர்கள் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்யட்டும்'' என்று மோடி மத்திய அரசை கிண்டலடித்து பேசியது என்பது நகைச்சுவையாக இருந்தது. சாத்தான் வேதம் ஓதினால் ஆச்சரியப்படலாம். ஆனால் மோடி வேதம் ஒதுவதைப்பார்த்து ஆச்சரியப்பட தேவையில்லை.
           மோடி பிரதமர் பதவிக்காக வேதம் ஓதுவதும், வேஷம் போடுவதும் அன்றாட நடவடிக்கையாக போய்விட்டது. ஓட்டுக்காக பொதுமக்களை கவர நேரத்திற்கு தகுந்தாற்போல் இடத்திற்கு தகுந்தாற்போல் மோடி வேஷம் போடுவதை தவறுவதே இல்லை. இஸ்லாமியர்களை கவருவதற்கு ஷர்வாணி அணிவதும், அவருடைய ஆட்களுக்கே இஸ்லாமியர் வேடமிட்டு அவரது பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளச் செய்வது, சுதந்திரமடைந்து 67 ஆண்டுகள் ஆகியும் சாதாரண கழிப்பறைக்கே வக்கில்லாத மக்களிடம்''முதலில் கழிப்பறை... பிறகு தான் கோயில்'' என்ற வீரவசனம் பேசுவதும் மோடிக்கு கைவந்தக் கலை என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
          அதேப்போல் தான், நேற்றைய தினம் சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில்- தந்தை பெரியார் வாழ்ந்த பூமியில் பேசும் போது, ''பகுத்தறிவாளர்'' வேஷம் போட்டு பேசியது என்பது அவர் முன்பு போட்ட வேஷங்களை விட ''பகுத்தறிவாளர்'' வேஷம் நம்மை ஆச்சரியப்பட வைத்தது மட்டுமல்லாமல் வாய் விட்டு சிரிக்கவும் செய்துவிட்டது. ''பகுத்தறிவாளர்'' மோடியைப் பார்த்து ஒரு கேள்வியை கேட்கத்தோன்றுகிறது. அயோத்தி இராமன் பிறந்த இடம் என்பதும், சேது சமுத்திரத்தின் குறுக்கே வாருவது இராமர் பாலம் என்பதும் மூடநம்பிக்கை தான் என்பதை மோடியும் அவரது கூட்டாளிகளும் ஏன் உணரவில்லை என்பது தான் நமது கேள்வி....?