வியாழன், 1 ஜனவரி, 2015

''P K'' - மூடநம்பிக்கை எனும் போதை தெளிவிக்கும் திரைப்படம்


 விமர்சனம் : அ. குமரேசன், பத்திரிக்கையாளர்                            
        பேரண்டத்தையே படைத்து, உலகத்தை உருவாக்கி, அதில் உயிரினங்களை உற்பத்தி செய்து, எது எது எப்படி நடக்க வேண்டும் என்று தானே தீர்மானித்து, ஒவ்வொரு அணுவையும் இயக்குகிறவர் எனக் கூறப்படும் கடவுளை எந்த அற்ப மானிடப் பிறவியாவது அவமதித்துவிட முடியுமா...? நம்பிக்கைகளை கேள்வி கேட்பதென்பது அப்படி அவமதிக்கிற செயல்தான் என்று கூறி, அதிலிருந்து காப்பாற்றப் போவதாகக் கிளம்புவதை விடவும் கடவுளை அவமதிக்கிற வேலை இருக்க முடியுமா? ஆண்டவனைக் காப்பாற்ற அவதாரமெடுத்தவர்கள் அப்படிச் சொல்லித்தான் மக்களைக் கூறுபோடுகிறார்கள், மதங்களின் பெயரால் மோதவிடுகிறார்கள், உண்மைப் பிரச்சனைகளுக்காக ஒன்றுபட்டுப் போராட விடாமல் தடம் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
          இதைப்பற்றிய விழிப்புணர்வோடு பகுத்தறிவுக் கருத்துகளைக் கூறுகிற திரைப்பட ஆக்கங்கள் அவ்வப்போது வந்திருக்கின்றன. ‘3 இடியட்ஸ்’ போன்ற மாறுபட்ட படங்களால் ஆரோக்கியமான விவாதங்களுக்கு வழியமைத்த ராஜ்குமார் ஹிரானி, பொதுவெளியிலும் மனசாட்சியைத் தட்டியெழுப்பிடும் விவாதங்களை நடத்திடும் அமீர்கான் கூட்டில் இந்தப் படமும் ஒரு மாற்றுத் தடத்தைப் பதிக்கிறது. கோடிக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் உள்ள இந்தப் பேரண்டத்தில் ஏதோவொரு மண்டலத்தில், ஏதோவொரு சூரியனைச் சுற்றி, ஏதோவொரு கோளில், இந்த பூமியில் இருப்பது போன்றே உயிரினங்களும் சிந்திக்கத் தெரிந்த மனிதர்களும் ஏன் இருக்கக்கூடாது...? அறிவியல் உலகம் ஆர்வத்தோடு ஆராய்ந்து கொண்டிருக்கிற இந்தக் கேள்வியில் தொடங்குகிறது  படம்.
       ஏதோவொரு கோளிலிருந்து வரும் விண் வாகனத்திலிருந்து ஆராய்ச்சிக்காக ராஜஸ்தான் பாலைவனத்தில் வந்து இறங்குகிறான் நாயகன். ஆடையணிகலன்களால் கூட பாகுபாடு காட்டாத, மொழியே தேவைப்படாத கோள் அது. அவன் திரும்பிச் செல்வதற்கான ஒரே ஏற்பாடு, கழுத்தில் தொங்குகிற மின்னணுத் தகவல் பதக்கம்தான். அந்தப் பதக்கத்தை ஒருவன் வழிப்பறி செய்து தப்பித்துவிடுகிறான். அதைத் தேடிப் போகிறவனுக்கு மற்றவர்கள் சூட்டுகிற பெயர்: ‘போதைக்காரன்’ - அதன் சுருக்கெழுத்துதான் ''பி.கே.'' “கடவுள்தான் உனக்கு உதவ முடியும்” என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு கடவுளின் முகவரியை விசாரிக்கிறான்.
.         அவனுக்குக் கடவுள் கிடைக்கவில்லை, மாறாக கடவுளின் பெயரால் நடக்கும் கொடுமைகளும், மோசடிகளும், திசைதிருப்பல்களும், மதவாத வெறுப்புகளும் எங்கும் பரவிக் கிடப்பதைக் கண்டறிகிறான். இந்தச் செய்திகள் தரமான நகைச்சுவையும், கலகலப்பும், விறுவிறுப்புமாகப் பரிமாறப்படுவது படத்தின் முக்கிய வெற்றி. இங்குள்ள நடைமுறைகள் எதுவும் தெரியாத அந்த போதைக்காரன் கணினியின் கோப்புகளை மற்றொரு கணினிக்கு மாற்றுவது போல் ஒரு மொழியைத் தெரிந்து கொள்கிறான் என்பது போன்ற அறிவியல் கற்பனைகளோடு கலந்து, இந்த மண் எப்படி மூடநம்பிக்கைகளும் மத வேற்றுமை அடையாளங்களுமாக போதையில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையைக் காட்டுகிறது படம்.
         இதை, ஒரு வேற்றுலகவாசியைக் கொண்டுதான் சொல்ல முடியும் என்ற கதாசிரியர் - இயக்குநரின் வெளிப்பாட்டு உத்தி பலனளித்திருக்கிறது. தொடக்கத்தில் அவனை மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று நினைக்கிறாள் தொலைக்காட்சி செய்தியாளரான ஜக்கு. பின்னர் அவனைப் புரிந்துகொண்டு, அவனுடைய பதக்கத்தைக் கண்டுபிடிக்க ஒத்துழைக்கிறாள். அவனிடமிருந்து பறிக்கப்பட்ட அந்தப் பதக்கம் தற்போது ஒரு பெரிய ஆன்மீக போதனை குருவிடம் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். அவரோ அது தனக்கு கடவுளால் வரமாகத் தரப்பட்டது என்று கதை விட்டுக்கொண்டிருக்கிறார். சொந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு தேடி தன்னிடம் வருகிற பக்தர்களை, எளிதில் செல்லமுடியாதபடி இமயமலைச்சாரலில் இருக்கிற ஒரு கோவிலுக்குச் சென்று வழிபட்டால் வழி பிறக்கும் என்கிறார் குரு.
        இறைவனின் கருணையைப் பெற்றுத் தருவதற்கு பல இடங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடவுளை நோக்கி கடுமையான விரதங்களை மேற்கொண்டால்தான் வேண்டுதல்கள் நிறைவேறும் என்கிறார்கள். அந்த குரு, கடவுளிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசுவதாகக் கூறப்படுவதைப் பலரும் நம்பியிருக்க, இப்படியெல்லாம் கடினமான வழிகளைத் தான் கடவுள் சொல்வார் என்றால், குரு பேசுவது உண்மையான கடவுளின் சரியான எண்ணில் அல்ல, “ராங் நம்பரில்தான் பேசுகிறார்” என்று தொலைக்காட்சி உதவியோடு அறிவிக்கிறான் பி.கே. அவனுடன் நேரடி விவாதம் நடத்த முன்வரும் குரு, “நான் பேசுவது ராங் நம்பர் என்றால், ரைட் நம்பர் எது” என்று கேட்டு மடக்குகிறார்.
        அதற்கு பி.கே. அளிக்கிற விளக்கம் ஒரு ஆழ்ந்த தத்துவ விசாரணை. வாழ்க்கையைப் பற்றிய அச்சம் தான் ஆன்மீக வணிகத்திற்கு ஆதாரம் என்பதை பி.கே. சொல்வது, மாற்றுக் கருத்துகளை மதவெறிக்கும்பல்கள் பொறுத்துக் கொள்வதில்லை என்பதற்கு அடையாளமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பொறுப்பாளருக்கு விழுந்த சூலாயுதக் குத்து பற்றிய தகவல்,
    மனிதர்களின் மத அடையாளங்கள் செயற்கையாக அணிவிக்கப்பட்டவையே என்று நிறுவுவது - இவையெல்லாம் வழக்கமான வர்த்தக சினிமாக்களில் காண முடியாத காட்சிகள். கடவுளைக் காப்பாற்றுவதற்காக நடக்கும் சண்டையின் தொடர்ச்சியாக, கொஞ்சமும் எதிர்பாராத ஒரு நொடியில் நடக்கிற அந்த குண்டு வெடிப்பும், தொடரும் அவலங்களும் மனதை உறையவைக்கின்றன. அவ்வளவு நேரம் வாய்விட்டு சிரித்ததற்கு ஈடாகக் கண்ணீரை வரவழைக்கின்றன. எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் தாக்காமல், ஆனால் உலகம் முழுவதுமே இப்படியான நம்பிக்கைகளின் பெயரால் குதறப்பட்டிருக்கிறதே என்ற எண்ணம் ஊன்றப்படுகிறது. 
          அந்த ஜக்கு பெல்ஜியத்தில் இருந்தபோது பாகிஸ்தான் நாட்டு இளைஞனைக் காதலித்தவள். அந்தக் காதல் என்ன ஆனது என்ற பின்னணி, நாடுகளின் எல்லைக்கோடுகளாலும், பகைமை வளர்க்கும் அரசியலாலும் மனித உறவுகள் சிதைக்கப்படுவது பற்றிய உறுத்தலை ஏற்படுத்துகிறது. ஜக்கு மீது காதல் கொள்ளும் பி.கே., அந்தப் பின்னணியை அறிவதோடு அதை முன்னணிக்கும் கொண்டுவருவது கவித்துவமானது. நடிப்பில் அமீர்கான் புதிய எல்லைகளைத் தொடுகிறார். ஜக்குவாக அழகிய பங்களிப்பைச் செய்திருக்கிறார் அனுஷ்கா சர்மா. கடவுள் என்ற ஒரு சக்தி இல்லை என்று சொல்வதற்கு பி.கே. முன்வரவில்லைதான். “இரண்டு கடவுள்கள் இருக்கிறார்கள். ஒரு கடவுள் நம்மைப் படைத்தவன். அவனை நம்பினால் போதும். இன்னொரு கடவுள் மனிதர்களால் படைக்கப்பட்டவன். அவனை எண்ணி அச்சப்பட வேண்டியிருக்கிறது, அவனிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டியிருக்கிறது, அவனுக்காகச் சண்டைபோட வேண்டியிருக்கிறது,” என்று பி.கே. கடைசியில் சொல்கிறான். அதிலே ஒரு சிறு சமரசம் இருக்கிறது, “அவன்” என்று சொல்வதன் மூலம் கடவுளை ஆணாகச் சித்தரிப்பதும் தொடர்கிறது. இருந்தபோதிலும் கூட, அவரவர் நம்பிக்கைகளைப் பின்பற்றிக்கொண்டே, மற்ற நம்பிக்கைகள் கொண்டோரைப் பகைவர்களாகப் பார்க்காமல் நேசம் வளர்க்க முடியும் என்ற உன்னதமான சிந்தனையைத் தெளித்து, “போதை” தெளிவிக்கிற கலைத்தொண்டாக வந்திருக்கிறது பி.கே. சஞ்சய்தத், சவுரப் சுக்லா, சுஷாந்த்சிங் ராஜ்புத், போமன் இரானி ஆகியோரின் ஒத்துழைப்பான நடிப்பு, அஜய் அதுல், ஷாந்தனு மொய்த்ரா, அங்கிட் திவாரி ஆகியோரின் கூட்டு இசையினிமை, சி.கே. முரளிதரன் ஒளிப்பதிவுத் தெளிவு, அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி இருவரின் திரைக்கதை உரையாடல் கூர்மை எல்லாமாக இணைந்து பி.கே.யை மறக்க முடியாத படமாக்கியிருக்கின்றன. 
        “படம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் பார்க்காதீர்கள், ஆனால் மற்றவர்கள் பார்க்கிற உரிமையைத் தடுக்காதீர்கள்,” என்று, இந்தப் படத்திற்குத் தடை விதிக்கக்கோரிய ஒரு அமைப்பின் மனுவைத் தள்ளுபடி செய்து, வரவேற்கத்தக்கதொரு தீர்ப்பை அளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். நீதி மன்றத்தின் ஆதரவோடுதான் இத்தகைய மாற்றுக் கலைமுயற்சிகள் மக்களிடம் வர முடியும் என்பது ஜனநாயகத்தில் கவலைக்குரிய போக்குதான். அதே நேரத்தில், இப்படிப்பட்ட படங்கள் பிடிக்காதவர்களும் இதைப் பார்க்க வேண்டும், இது எழுப்புகிற கேள்விகளுக்கான பதில்களைத் தேட வேண்டும். வேலிகள் தாண்டி மானுடம் வேர் விட்டுக் கிளை பரப்பிட அந்தத் தேடல் வழிவகுக்கும்.
நன்றி : தீக்கதிர்  

கருத்துகள் இல்லை: