புதன், 30 அக்டோபர், 2013

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மோடி அனுமானே...!

        
          இந்திய நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும், சுதந்திரப்போராட்டத் தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் கட்சித்தலைவர்களில் ஒருவருமான  சர்தார் வல்லபாய் பட்டேல் மீது 2014 - ஆம் ஆண்டில் பிரதமாரகத் துடிக்கும் திருவாளர் நரேந்திரமோடிக்கு திடீர் பாசம் - திடீர் பக்தி என்னவென்று புரியவில்லை.
          பட்டேலுக்கு உலகிலேயே மிக உயரமான - பிரமாண்டமான சிலைவைக்க ஏற்பாடுகளை செய்யும் மோடி, பட்டேல் ''இரும்பு மனிதர்'' என்று அழைக்கப்படுவதால்  அந்த சிலையை சிம்பாலிக்கா இரும்பிலேயே செய்வதற்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறார். இப்படி சிலை வைப்பதற்கும் அவர் புகழ் ''பஜனை'' பாடுவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. அது எப்படியாவது போகட்டும். 
              மோடி பேச்சில் வழக்கமாக பொய் ''மை'' பூசப்பட்டிருக்கும் என்பதை எல்லோரும் அறிந்ததே. அதிலும் நடந்த வரலாற்றையும் திரித்து மோடி பொய் பொய்யாய் புளுகுவது என்பது ஏற்றத்தக்கதல்ல. சமீபத்தில் ஒரு பேட்டியில் பட்டேலைப் பற்றி பேசும்போதும் ஒரு மாபெரும் பொய்யை சொல்லி, முழு பூசணிக்காயை மறைத்து, வரலாற்றையே மாற்றி எழுத துணிந்திருக்கிறார் என்பது கண்டிக்கத்தக்கது. வரலாற்றை மாற்றி எழுதுவது என்பது ''காவிக்கூட்டத்திற்கு'' கைவந்த கலை. அதைத்தான் இந்த மோடியும் அழகாக செய்கிறார்.
         அவர் என்ன அப்படி சொல்லிவிட்டார் என்று தானே கேட்கிறீர்கள்....? சர்தார் வல்லபாய் பட்டேல் 1950 - ஆம் ஆண்டில்  இந்திய நாட்டின் துணை பிரதமராகவும் பணியாற்றி மறைந்த போது  அன்றைய பிரதமர் நேரு அவரது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று சொல்லி முழுப் பொய்யை அவிழ்த்துவிட்டு வரலாற்றின் பக்கத்தை மூடி மறைக்கப்பார்க்கிறார் என்பது தான் வரலாறு தெரிந்தவர்களின் கோபமாக வெடித்திருக்கிறது. 
            இங்கு காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது நேருவுக்கோ வக்காலத்து வாங்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் மீதும், நேருவின் மீதும் மாற்றுக்கருத்து என்பது எப்போதும் உண்டு. எப்படியாவது பிரதமராக வேண்டும் என்பதற்காக இது மாதிரியான பொய்களையும், புரட்டுகளையும் கிளப்புவது என்பது மோடிக்கு தெரிந்த  ''வித்தை'' தான் என்றாலும், நடந்த ஒரு வரலாற்று நிகழ்வை மறைத்து பொய் சொல்லுவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதை அனுபதித்தால் அடுத்தத் தலைமுறையையும் இந்த தவறான செய்தியே சென்று அடையும். 
              பட்டேலின் இறுதி நிகழ்ச்சியில் நேரு கலந்துகொண்ட காட்சியையும், மொரார்ஜி தேசாய் தன்னுடைய சுயசரிதையில் அந்த நிகழ்ச்சிப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதையும் இங்கே பதிவு செய்துள்ளேன். 

Ex PM of India Morarji Desai's Autobiography - THE STORY OF MY LIFE Volume 1 Page 271


ஞாயிறு, 27 அக்டோபர், 2013

பி. ஜே. பி., - க்கு பிரச்சாரம் செய்கிறாரா ராகுல்காந்தி....?

          
                                                                              

                                                                                                                                                                                                                    
        இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ''குட்டித்தலைவர்'' ராகுல் காந்தி, உத்திரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் கலவரத்தைப் பற்றி பேசும்போது, அந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர்களுக்கும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ. எஸ். ஐ., - க்கும் தொடர்பு ஏற்பட்டிருப்பது போன்று தகவல் வந்திருப்பதாக  ''சி.ஐ.டி - 007'' போல உளறிக்கொட்டியிருக்கிறார். இதைக்கேட்ட இஸ்லாமியர்களையும், நடுநிலையாளர்களையும் முகம் சுளிக்கவைத்தது மட்டுமல்லாது, பொதுவாகவே இது போன்று இஸ்லாமியர்களுக்கெதிரான கருத்துப் பிரச்சாரங்களை தாங்கள் தானே  செய்வது  வழக்கம். இந்த விஷயத்தில் ராகுல்காந்தி முந்திக்கொண்டாரே என்று பி.ஜே.பி.,-காரர்களுக்கு கோபம் வந்துவிட்டது.
          ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு நேரம் சரியில்லை. மன்மோகனோ பேசாமலேயே காங்கிரஸ் கட்சியை சாகடிக்கிறாரு .... ராகுல் காந்தியோ பேசியே கட்சிய சாகடிச்சு தொங்கவிட்டுடுவார் போல் இருக்கிறதே...!
         ''குட்டித்தலைவர்'' இஸ்லாமியர்களுக்கு எதிராக இப்படி பேசறாரே... ஒரு வேலை பி.ஜே.பி., கட்சிக்குத் தான் பிரச்சாரம் பண்ணுறாரோ...?

வெள்ளி, 25 அக்டோபர், 2013

தமிழக அரசியல்வாதிகளே....! ஓட்டுக்காக இலங்கை தமிழர்களின் அமைதியை மீண்டும் கெடுத்துவிடாதீர்கள்....!

           
           பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உலகத்தில் உள்ள பலநாடுகளை காலனி ஆதிக்கம் புரிந்து கோலோச்சியிருந்த காலத்தில் அவர்கள்  ஆட்சி செய்த நாடுகளின் கூட்டமைப்பே காமன்வெல்த் அமைப்பாக கருதப்பட்டது.  சோவியத் யூனியன் பின்னடைவிற்குப் பிறகு உலக நாடுகளை தன் கைக்குள் கொண்டுவர துடித்த அமெரிக்க ஏகாதிபத்தியம் தலைத்தூக்க ஆரம்பித்தவுடன் அமெரிக்காவின் சுரண்டலுக்கு ஒத்துப்போகிற நாடுகள் ஒரு குழுவாகவும், அதே சமயத்தில் சுரண்டலுக்கு எதிரான நாடுகள் ஒரு குழுவாகவும் என வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பு ஜி -5, வளரும் நாடுகளின் கூட்டமைப்பு ஜி-20, தெற்காசிய நாடுகளின் அமைப்பு SAARC., எண்ணெய் வள நாடுகளின் அமைப்பு OPEC., தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பு ASEAN போன்ற பல புதிய புதிய அமைப்புகள் நாடுகளுக்கிடையேயான ராஜ்ஜிய உறவுகளை மேம்படுத்துதல் என்ற பெயரில் மற்ற நாடுகளின் வளங்களையும், வளமான பொருளாதாரத்தையும் சுரண்டுவதற்கும், பாதுகாப்பு ஒத்துழைப்பு என்ற பெயரில் ஆயுதங்களை விற்பதற்கும்,  அமெரிக்காவின் ஏற்றுமதியை பலப்படுத்துவதற்கும் தோற்றுவிக்கப்பட்டவுடன் ''காமன்வெல்த்'' போன்ற பழைய அமைப்புகள் செயலற்றுப்போய் காலாவதியாகிவிட்டன. இருந்தாலும் ''பழைய நெனப்புடா பேராண்டி'' என்று உலக வரைபடத்தில் விழுந்துவிட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சுவடுகள் மறைந்துவிடாமல் இருப்பதற்காகவும், உலகத்திற்கு அவ்வப்போது நினைவுப்படுத்துவதற்காகவும் அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அப்படி ஒரு ''சம்பிரதாயமான'' மாநாடாக தான் அடுத்த மாதம் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த மாநாடு ஒன்றும் உருப்படியாக எதையும் சாதிக்கப்போவதில்லை என்பது தான் உண்மை. பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கூடிக் கலையும் சம்பிரதாயமான மாநாடாகத் தான் இருக்கப்போகிறது. இப்படிப்பட்ட இந்த மாநாடு என்பது இந்த முறை இலங்கையில் நடக்கப்போகிறது என்பதால் தமிழக அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக அதை கடந்த பல மாதங்களாக அரசியலாக்கி வருகிறார்கள். இவர்கள்   இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இலங்கையை வைத்து பிழைப்பு நடத்துவார்கள் என்று தெரியவில்லை.
          இந்த முறை இந்த மாநாடு என்பது இலங்கையில் நடப்பது என்பது இந்தியாவிற்கு சாதகமானதாகவே நாம் கருத வேண்டும். ஏனென்றால் கடந்த காலங்களில் நம் சொந்தங்களான தமிழர்களை கொடூரமான முறையில் கொன்று குவித்த இலங்கை அரசின் செயல்பாடுகளை நேரில் இடித்துரைத்து கண்டிப்பதற்கும், மிச்சமிருக்கக்கூடிய தமிழர்களின் வாழ்வாதரங்களை மீட்பதற்கும், அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக மாற்றுவதற்கும்   நல்லதொரு வழிகாட்டுதல்களையும், திட்டங்களையும் உறுதி செய்வதற்கும் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு நம் பிரதமர் கலந்து கொள்வது தான் சிறந்த பொறுப்புள்ள செயலாக இருக்கமுடியும். இலங்கைத் தமிழர்களைப் பொருத்தவரையில் அவர்கள் இழந்த உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் மீண்டும் பெறும் வரை இந்திய அரசின் தலையீடு என்பது மிகவும் அவசியமாகிறது. ஏற்கனவே அங்கு தமிழர்கள் வாழும் பகுதியில் இரயில் பாதை அமைப்பது, சாலை போடுவது, வீடுகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுவது போன்ற வளர்ச்சிக்கான கட்டுமானப்பணிகளை செய்துவருகிறது. ராஜ்ய ரீதியாக தலையிட்டு கண்காணித்து வருகிறது. அரசு முறையாக அவ்வப்போது இரண்டு நாட்டுத் தலைவர்களும் நான்கு சுவருக்குள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த மாநாட்டில் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சனைகளை பற்றியும், நடந்து வரும் பணிகள் பற்றியும் நான்கு பேருக்கு மத்தியில் பேசுவது என்பது தான் பொருத்தமானதாகவும், பொறுப்புள்ளதாகவும் இருக்கும். அதைவிடுத்து கலந்துகொள்ளாமல் தவிர்ப்பது என்பது பொறுப்பை தட்டிக்கழிப்பது போன்றதாகவும், இந்திய அரசின் அக்கறையின்மையை காட்டுவதாகவும் அமைந்துவிடும். அப்படியாகத்தான் அதில் கலந்துகொள்ளும் மற்றைய நாடுகளும் புரிந்துகொள்ளும் வாய்ப்பாக அமைந்துவிடும். அதுமட்டுமல்ல இப்படிப்பட்ட பொறுப்பற்ற செயலினால், இந்தியா அல்லது இந்திய அரசு தனிமைப்படுத்தப்பட்டுவிடும் ஆபத்தும், இலங்கை தமிழர் பிரச்சனையில் மூன்றாம் நாடுகளின் தலையீடு என்பது பலம்பெற்றுவிடும் ஆபத்தும் உள்ளன  என்பதையும் இங்குள்ள அரசியல் கட்சிகள் உணரவேண்டும். மேலும், தமிழக கட்சிகளின் விருப்பப்படி இந்திய அரசு  தலையீடு இல்லாமல் ஒதுங்கிக்கொண்டால், தமிழர்கள் ஆட்சி செய்யும் மாகாண சபைக்கான அதிகாரம் மற்றும் நிதி பகிர்வு, தமிழர்கள் வாழும் குடியிருப்புப்பகுதிகளில் இலங்கை இராணுவ ரோந்து, 13-ஆவது அரசியல் அமைப்பு தீர்மானம் நிறைவேற்ற மறுப்பு போன்ற தான்தோன்றித்தனமான வேலைகளை இலங்கை அரசு தைரியமாக செய்வதற்கு வழிவகுத்துவிடும். எளிய வாய்ப்பாக அமைந்துவிடும். 
          இலங்கை நாடு என்பது நமக்கு அருகிலேயே இருக்கின்ற ஒரு சிறிய நாடு. இலக்கியங்களிலும், அரசியலிலும், கலாச்சாரம் - பண்பாடுகளிலும், பொருளாதாரத்திலும், ராஜ்ஜிய உறவுகளிலும் இலங்கை நாடு என்பது நம்மோடு கலந்துவிட்ட ஒரு நாடு. இன்னும் இங்குள்ள கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காகவும், ஓட்டுக்காகவும் முடிந்துபோன விஷயங்களையே பேசிக்கொண்டிராமல், இப்போது இலங்கையில் இத்தனை ஆண்டுகளாக வாழ்வாதாரத்தையும்,  நிம்மதியையும், அமைதியையும் இழந்துவிட்ட மிச்சமுள்ள  தமிழர்களின் எதிர்காலம் செழிப்பதற்கும், எப்போதும் போல் கல்வி, சுகாதாரம் எல்லோருக்கும் கிடைப்பதற்கும்,  மற்ற மக்களைப்போல் அவர்களும் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ்க்கை நடத்துவதற்கும் வழிகாட்டுவதும், நிதியுதவி செய்வதும், அதை நேரில் கண்காணிப்பதுமான நம்முடைய பொறுப்புள்ள பணிகளே இலங்கைத் தமிழர்களின் இன்றைய தேவையும் அவசியமுமாகும். உண்மையிலேயே  இதைத்தான் அங்குள்ள தமிழர்கள் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார்கள்.
           அதைவிட்டுவிட்டு, இலங்கையில் தமிழர் பகுதியில் அமைந்திருக்கும் தமிழர்களால் ஒருமித்து தேர்ந்தெடுக்கப்பட்ட விக்னேஸ்வரன் தலைமையிலான அரசிற்கும், அங்குள்ள தமிழ்  மக்களுக்கும் தர்மசங்கடம் உண்டுபண்ணும் வகையில் இங்குள்ள சிறுசிறு கட்சிகளும், செல்வி. ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசும் மற்றும் கருணாநிதி, வைகோ, நெடுமாறன் போன்ற தலைவர்களும் அரசியல் ஆதாயத்திற்காக பொறுப்பில்லாமல் செயல்படுவது என்பது சிறப்புடையதாக அமையாது. அதுமட்டுமல்லாது இவர்களின் இந்தப் போக்கு என்பது இலங்கை அரசுக்கு கோபமூட்டும் செயலாக மாறிவிடும். அதனால் அமைதியை விரும்பும் அங்குள்ள தமிழர்களுக்கு தான் சங்கடமாக அமைந்துவிடும் என்பதை இவர்கள் உணரவேண்டும். இவர்கள் தமிழகத்தில் செய்யும் அரசியல் ''வேலைகளால்'' அங்குள்ள தமிழர்களுக்கு நியாயமாகவும் காலத்தோடும் கிடைக்கவேண்டிய உரிமைகளும், வாழ்வாதாரங்களும் அவர்களை சென்றடைவதற்கு காலதாமதமாகும் என்பதையும் மனதில் வைத்துக்கொண்டு இங்குள்ள தமிழகக் கட்சிகள் புரிந்து செயல்படவேண்டும்.
           அதுமட்டுமல்ல ''இங்கே எங்களுக்கான மாகாண அரசை விக்னேஸ்வரன் தலைமையில் நாங்கள் முறையாக தேர்ந்தெடுத்திருக்கிறோம்.  அந்த மாகாண அரசு என்பது இலங்கை அரசின் ஒத்துழைப்போடு தான் ஆட்சி நடத்தி, எங்களுக்கான வளர்ச்சிப்பணிகளையும், திட்டங்களையும் நிறைவேற்றிடவேண்டும். இன்னும் ''பழங்கதைகளைப்'' பேசி எங்கள் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் வீணாக்கிவிடாதீர்கள். நாங்கள் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழவிடுங்கள்''  என்று இலங்கைத் தமிழர்கள் குரல் கொடுப்பது இங்குள்ள கட்சிகளுக்கு கேட்கவில்லையா...? 

வியாழன், 24 அக்டோபர், 2013

அனுதாபத்தைத் தேடுகிறார் காங்கிரஸ் கட்சியின் ''குட்டித்தலைவர்'' ராகுல் காந்தி....!

         
                                                                                                                                                                   
         இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் அனைத்தும் மோடியையும், ராகுல் காந்தியையும் 2014 - ஆம் ஆண்டின் பிரதமர் வேட்பாளர்கள் என்று அவர்களாகவே முடிவுபண்ணி, அந்த இரண்டு பேரையும் உசுப்பேத்திவிட்டதால் அந்த ரெண்டு பெரும் கள்ளு குடிச்ச குரங்குகளைப்போல் செய்யற லொள்ளு இருக்கே தாங்கமுடியலடா சாமி. தினம் தினம் இவர்களைப்பற்றிய செய்திகளைத் தான் ஊடகங்கள் முன்னிலைப்படுத்துகின்றன.   இப்படித்தான் நேற்று இராஜஸ்தான் மாநிலத்தில் சுரு என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில்  காங்கிரஸ் கட்சியின் ''குட்டித்தலைவர்'' ராகுல் காந்தி, மத்தியில் தங்கள் கட்சியின்  தலைமையிலான ஆட்சியில் அதை வெட்டி முறிச்சோம், இதை கிழிச்சோம் என்று சாதனைகளை எடுத்துச் சொல்ல முடியாமல், மக்கள் மறந்து போன ''பழங்கதைகளை'' எல்லாம் சொல்லி ஒப்பாரி வெச்சிருக்கிறார்.  ''நாட்டுக்காக உயிர் நீத்த என் பாட்டி, தந்தையைப் போல நானும் ஒரு நாள் கொல்லப்படலாம். அதற்காக நான் கவலைப்படவில்லை. இதனை என் இதயத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறேன்'' என்று சோகமாக சொல்லி ராகுல் காந்தி அழுதிருக்கிறார். தொலைக்காட்சி சீரியலை பாக்கிறமாதிரி ஜெனங்கல்லாம் ''ஓவென்று'' அழுதிருக்கிறார்கள்.   காங்கிரஸ் கட்சிக்கு சாதனைகள்  என்று ஒன்றும் சொல்வதற்கில்லை. மக்களுக்கு கொடுத்த வேதனைகள் தான் அதிகம். வேதனையில் தத்தளிக்கும் மக்களை திசைத்திருப்புவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு இப்படிப்பட்ட ''நாடகம்'' தேவைபடுகிறது. ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதையும், அப்பா ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதையும் சொல்லி மக்களிடையே அனுதாப அலையை உருவாக்கி தேர்தலில் வெற்றிப்பெற்றுவிடலாம் என்று கனவு காண்கிறது காங்கிரஸ் கட்சி.
          தனது பாட்டி மற்றும் அப்பாவின் மறைவிற்கு பிறகு, கார்ப்போரேட் கட்சிகளான   காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தவறான மக்கள் விரோத கொள்கைகளின் காரணமாக கடந்த 23 ஆண்டுகளாக இன்று வரை மூன்றரை இலட்சம் விவசாயிகள் ''தற்கொலை'' செய்துகொண்டார்களே அதை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.
          கடந்த 23 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும் மாறி மாறி ஆட்சி செய்த நம் நாட்டில் வேலையின்மை, வேலையிழப்பு, வருமானம் வெட்டு, விலைவாசி உயர்வு, கடன் தொல்லை என பல்வேறு வேதனைகளுக்கு ஆளான இளைஞர்கள் திருடர்களாகவும், அடியாட்களாகவும், கூலிப்படைகளாகவும், நக்சலைட்டாகவும், தீவிரவாதிகளாகவும் மாறி சீரழிந்துப்போய் திரிகிறார்களே அதை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.
        காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் தங்களை வாழவைக்கும் கார்ப்போரேட் முதலாளிகளுக்கு சலுகைகளையும், வருமானவரி விலக்கையும், மானியங்களையும் அள்ளி அள்ளி கொடுத்துவிட்டு, ஆனால் தங்களுக்கு மட்டும் நின்னா வரி, உட்காந்தா வரி, நடந்தா வரி, சாப்பிட்டா வரி,  தூங்கினா வரி என்று ஏராளமான வரிகளைப்போட்டு மத்திய அரசே மக்களிடம் ''கொள்ளையடித்தது'' மட்டுமல்லாது, இதுவரை அளித்து வந்த சலுகைகளையும், மானியங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டினார்களே அதை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.
              கொள்ளுத்தாத்தா நேரு உருவாக்கிய பொதுத்துறை ஆயுள் காப்பீட்டையும், பாட்டி இந்திரா காந்தி உருவாக்கிய அரசு வங்கிகளையும், பொதுத்துறை பொதுக்காப்பீட்டையும் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும் சேர்ந்து கொன்றீர்களே அதை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.
       இந்த இரண்டு மக்கள் விரோதக் கட்சிகளின் வேதனைமிகுந்த ஆட்சிகளின் ''சாதனைப்பட்டியலை'' அடுக்கிக்கிட்டே போகலாம். கடந்த பல ஆண்டுகளாக இத்தனை வேதனைகளிலும் அல்லல்படும் மக்களை திசைத்திருப்புவதற்கு ராகுல் காந்திக்கு மக்கள் மறந்து போன ''பழங்கதைகள்'' தேவைப்படுகிறது. இதன் மூலம் ஓட்டுகளை பெற்றுவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார்.    

திங்கள், 21 அக்டோபர், 2013

வல்லரசுகளுக்கு இராணுவப்பாடம் கற்றுத்தந்த வியட்நாம் வீரத்தளபதி வோ கியென் கியாப்...!

 
 

''மாற்று'' - வலைதளத்தில் வெளியான என்னுடைய கட்டுரையின் மறுபதிவு இது...!     

        உலகத்திலேயே இராணுவப்பயிற்சி இல்லாமலேயே மாவீரன் நெப்போலியனுக்கு நிகராக படைத்தளபதியாக உயர்ந்தவர்கள் இருவர். ஒருவர் இந்திய தேசியப்படையை அமைத்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய மாவீரன் நேதாஜி. இன்னொருவர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த இராணுவத் தளபதி வோ கியேன் கியாப். நேதாஜியும்,  கியாபும் இராணுவப் பயிற்சி இல்லாமலேயே அன்றைய இரு பெரும் ஏகாதிபத்தியங்களை எதிர்த்து ஆயுதம் தாங்கி போர் செய்தவர்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நேதாஜியும், வியட்நாமில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரஞ்ச் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களை  கியாபும் விரட்டியடித்து நெப்போலியனுக்கு நிகராக உயர்ந்தவர்கள் என்றாலும் பெரும் வல்லரசுகளை எதிர்த்துப் போரிட்டவர்கள் என்பதால், நெப்போலியனைப் போல் இருவரும் சரித்திரத்தில் இடம் பெறாமல் மறைக்கப்பட்டனர் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது.
            அப்படிப்பட்ட இரு மாவீரர்களில் வியட்நாம் வீரத்தளபதி வோ கியேன்  கியாப் அண்மையில் தனது 102 - ஆவது வயதில் வியட்நாமில் காலமானார். அவரது மறைவை உலக பத்திரிகைகள் பலவும் அவரை நினைவு கூர்ந்து அவருக்கு புரட்சிகரமான அஞ்சலியை செலுத்தியது. எதிரிகளை மிரளச்செய்யும் கியாப்பின் போர் முறைகளையும், இராணுவ உத்திகளையும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் படைத்தலைவர்களும், படை வீரர்களும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் மறக்கவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் இந்த நாடுகளை சார்ந்த பத்திரிக்கைகளும் மறக்கவில்லை என்பது தான் ஆச்சரியம்.
        அமெரிக்கா இராணுவம் ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போன்ற மற்ற நாடுகளோடு போரில் ஈடுபடும் போதெல்லாம், அமெரிக்கப் படைத்தலைவர்கள் போருக்குச் செல்லும் படை  வீரர்களிடம், ''வியட்நாம் போரில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை மனதில் வைத்துக்கொண்டு போர் செய்யவேண்டும்.'' என்று ஒரு ''பாலர் பாடம்'' நடத்தி தான் அனுப்புவார்கள். அந்த போர்களில் அமெரிக்காவிற்கு பின்னடைவு ஏற்படும் போதெல்லாம் அமெரிக்க ஊடகங்களும் ''வியட்நாம் போரில் அமெரிக்கர்கள் கற்றுக்கொண்ட பாடம் மறந்து போனதா...?'' என்று அதே வாசகத்தை தான் பயன்படுத்துவார்கள்.
           பிரான்ஸ் நாட்டிலும் இதேக் கதை தான். அந்நாட்டு இராணுவ வீரர்களுக்கும் கியாப்பின் இராணுவப்பாடம் தான் கற்பிக்கப்படுகிறது. பிரான்ஸ் நாட்டுப் படைகளின் பின்னடைவின் போதெல்லாம் கூட அந்நாட்டு ஊடகங்களும் ''வியட்நாம் கற்றுத்தந்த இராணுவப்பாடம் மறந்து போனதோ....?'' என்ற அதே வாசகத்தை தான் பயன்படுத்துவார்கள். அந்த அளவிற்கு இந்த இரு வல்லரசுகளுக்கும் இராணுவப்பாடத்தைக்
கற்றுக்கொடுத்த மாபெரும் பெருமை வியட்நாம் வீரத்தளபதி வோ கியென் கியாப்பிற்கு உண்டு.
          இவர் பன்முகத்தன்மை வாய்ந்த மனிதர். இவர் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், படித்து பட்டம் பெற்றது அரசியல், பொருளாதாரம், சட்டம். ஆனால் பணியில் சேர்ந்தது ஆசிரியர் பணி. வியட்நாம் நாடு அப்போது பிரஞ்சு காலனி நாடாக இருந்தது. தேசபக்தியும், சமூக அக்கறையும் இவரிடம் மேலோங்கி இருந்ததால், காலனி ஆதிக்க எதிர்ப்புணர்வு என்பதும் இவரிடம் தீவிரமாக காணப்பட்டது. அதன் காரணமாக வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். நிறைய புத்தகங்களை சேகரித்து படித்தார். ''தீன் டாங்'' என்ற வியட்நாமிய பத்திரிக்கையில் நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தன் நாட்டை பிரஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்ததால், வோ கியென் கியாப் பிரஞ்சு மொழியிலும் தேர்ச்சிப்பெற்றிருந்தார். பிரஞ்சு ஆதிக்கத்திலிருந்து வியட்நாம் விடுதலை பெற்றப்பிறகு வியட்நாம் மொழியிலும், பிரஞ்சு மொழியிலும் இரு வேறு பத்திரிக்கைகளை நடத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டார்.
         பிரஞ்சு ஆதிக்கக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டு, ஆதிக்கக்காரர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை வேட்டையாடினர். அப்போது வோ கியென் கியாப் சீன நாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அங்கு தான் வியட்நாமின் மக்கள் தலைவர் ஹோ சி மின்னை சந்தித்து அவருடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பின்னர் 1944 - ஆம் ஆண்டு மீண்டும் வியட்நாமிற்கு திரும்பியதும் அவரது விடுதலைப் போராட்டப் பாதை என்பது அதிதீவிரமானதாக மாறுகிறது. தேசத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் தீரமிக்க மாவீரராக - போர் படைத்தளபதியாக வோ மாறினார். அதுவரையில் இராணுவப்பயிற்சி என்பதே இல்லாத மாவீரன் வோ கியென் கியாப், உலகிலேயே தீரமிக்க - உறுதிமிக்க சேனையை கட்டமைத்தார். அதற்கு மக்கள் சேனை என்றும் பெயர் சூட்டினார்.  பழைய வாகனங்களிலிருந்து கிடைத்த டயர்களில் இருந்து செருப்பு மற்றும் பூட்சுகளை செய்து, அதை வீரர்களுக்கு அணிவித்து, தீரமிக்க போர்ப்பயிற்சியும் கொடுத்து, தனது திறமையான இராணுவ உத்திகளைப் பயன்படுத்தி பிரஞ்சுக்காரர்களையும், பின்னர் அமெரிக்கர்களையும் தோற்று ஓடச்செய்தார் என்பது தான் வரலாறு.
           பிரான்சு நாட்டின் மாவீரன் நெப்போலியனுக்கு இணையான தோழர்.வோ கியென் கியாப் ஒரு கம்யூனிஸ்ட் நாட்டின் வீரத்தளபதி என்பதால் இத்தனை ஆண்டுகளாய் மூடி மறைத்து வைக்கப்பட்ட அவரது வரலாற்றுப் புத்தகம், இன்று அவர் மறைவிற்குப் பின்பு தான் திறந்து படிக்கப்படுகிறது. அதைப் படிக்கிறபோது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் எழுப்பிய வீர முழக்கங்கள் எழுச்சியோடு ஒலித்து நம்மை மெய்ச்சிலிர்க்கச்செய்கிறது. மறைந்த தோழர். வோ கியென் கியாப்பிற்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

நினைவுகள் அழிவதில்லை - தியாகிகளின் வீர வரலாறு அழிவதில்லை...!

      
    
          
இயக்குனர் மற்றும் படக்குழுவினருடன் நான்
           புதுச்சேரி சி.ஐ.டி.யு சார்பில், இயக்குனர் பகத்சிங் கண்ணன் இயக்கத்தில் உருவான ''நினைவுகள் அழிவதில்லை'' திரைப்படத்தை புதுவை ராஜா திரையரங்கில் நேற்றும், இன்றும் காலை 9.30 மணி காட்சியாக திரையிடப்பட்டது.
            குத்துப்பாட்டு, வன்முறை, பலாத்காரம், வெட்டுக்குத்து, டுமில்... டுமில்..., கொலை, இரட்டை அர்த்த வசனங்கள் என அனைத்து மசாலாக்களும் கலந்தப் படங்களை மட்டுமே போட்டிப்போட்டுகொண்டு திரையிடப்படும் இன்றைய சூழ்நிலையில், மேலே சொன்ன எவையும் இல்லாமல் தேசபக்தி, வீரம், தோழமை, அரசியல் விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை, கோபமூட்டும் வசனங்கள், விரசமில்லாத காதல் போன்ற சினிமாவிற்கே இல்லாத இலக்கணங்களோடு ''மாற்றத்திற்காக'' மாறுபட்டு எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் தமிழக திரையரங்குகள் திரையிடுவதற்கு தயங்கின என்பது வெட்கக்கேடானது.
           இந்த சூழ்நிலையில் தான் தமிழகத்திலுள்ள இடதுசாரி தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு., அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சங்கம், விவசாயிகள் சங்கம் என பல்வேறு அமைப்புகளும் இணைந்து திரையிட முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடனும் நிதியுடனும் நேற்றும், இன்றும் காலை காட்சியில் மட்டும் திரையிட முயற்சி செய்யப்பட்டு, கடினமான ஏற்பாடுகளுக்கு பின் திரையிடப்பட்டது.
          நான், என் மனைவி மற்றும் மகள்கள் மட்டுமல்லாது, எல்.ஐ.சி முகவத்தோழர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், டாக்டர் அம்பேத்கர் பயிற்சி வகுப்பில் படிக்கும் மாணவ- மாணவியர் என 30 பேர் இன்று ஒரே காட்சியில் அந்த திரைப்படத்தை பார்த்தோம் என்பது மறக்க முடியாத இனிமையான நிகழ்ச்சியாகும். இயக்குனர் பகத்சிங் கண்ணன் அவர்களும், அந்த திரைப்படத்தில் நடித்த கலைஞர்களும் தோழர்களோடு தோழர்களாக சேர்ந்து படம் பார்த்தார்கள். அரங்கு நிறைந்த காட்சி என்பது மனதிற்கு நிறைவைத் தந்தது.
         நினைவுகள் அழிவதில்லை - இந்திய விடுதலை என்பது கத்தியின்றி, இரத்தமின்றி, யுத்தமின்றி, சத்தமின்றி யாசித்துப்பெற்றதல்ல. மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மற்றும் கையூர் தியாகிகள் அப்பு, மணி, அபுபக்கர், சங்கர் போன்ற வீர இளைஞர்கள் தூக்குமேடை ஏறி உயிர்த்தியாகம் செய்து பெற்ற சுதந்திரம் இது என்பதை உணர்த்தும் திரைப்படம் இது. இந்த தேசத்தின் விடுதலையைப் பெற்றுத் தந்ததில் செங்கொடி இயக்கத்திற்கும் மாபெரும் பங்கிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் புரட்சிகரத் திரைப்படம் இது. ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கும், பண்ணையாரின் சுரண்டலுக்கும் அடங்கிப்போன கையூர் மக்களை அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் எதிராக எழுச்சிபெற்ற வீர வரலாற்றை திரை ஓவியமாக நம் கண் முன்னே நிறுத்திய இயக்குனர் பகத்சிங் கண்ணன் அவர்களை நிச்சயம் நெஞ்சாரப் பாராட்டவேண்டும். நாட்டைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், சமூக அக்கறையுமில்லாமல் இலாபம் ஒன்றே குறிக்கோளாக திரைப்படம் எடுப்போர் மத்தியில் இப்படியொரு திரைப்படத்தை உருவாக்கிய அத்துணை நல்லிதயங்களுக்கும் புரட்சிகர நல்வாழ்த்துகள்.
         நம் நாட்டின் மறைக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வரலாறுகளும், விடுதலைப் போராட்டத்தலைவர்களும் ஏராளம்...ஏராளம். அப்படி மறைக்கப்பட்ட வரலாற்று வரிசையில் கையூர் தியாகிகள் வரலாறும் ஒன்று. அந்த வீர வரலாற்றுச் செய்திகள் கொஞ்சமும் தொய்வில்லாமல் படமாக்கப்பட்டு காட்டப்படுகிறது. ஆங்காங்கே அனல்தெறிக்கும் வசனங்கள், உணர்ச்சிமிக்க பாடல்கள், இயக்கத்தோடு கலந்த காதல், புரட்சிகர இயக்கம் செய்யும் மாற்றங்கள், அடக்குமுறைக்கு எதிரான முழக்கங்கள் என பல இடங்களில் தோழர்களின் கைத்தட்டல்களையும், ஆரவாரங்களையும் கேட்க முடிந்தது. ஏராளமான காட்சிகளில் வசனங்கள் மெய்சிலிர்க்கச் செய்கின்றன. அதேப்போல் படத்தில் வரும் பல சம்பவங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றன. மொத்தத்தில் படம் அருமை. ஒரு வீர வரலாற்றை தெரிந்து கொண்டோம் என்ற மனநிறைவை ஏற்படுத்தியது. மனம் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. மனசுக்குள் ஒரு தாக்கத்தை உண்டுபண்ணிவிட்டது இந்தத் திரைப்படம்.
         கல்வி கற்றுக்கொடுக்கும் போதே அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் எதிராக மாணவர்களை தயார்படுத்தும் பள்ளி ஆசிரியராக இயக்குனர் பகத்சிங் கண்ணனே அருமையாக நடித்திருக்கிறார். ஒரு ஆசிரியர் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு சரியான இலக்கணம் வாழ்ந்திருக்கிறார் அந்த கையூர் ஆசிரியர். உண்மையிலேயே அந்த ஆசிரியரைப் பார்த்து இன்றைய சமூக அக்கறையில்லாத பள்ளி ஆசிரியர்கள் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.
        உங்கள் ஊரில் இந்த திரைப்படத்தை திரையிட்டால் உங்கள் குடும்பத்துடன், நண்பர்கள்,  உறவினர்களுடன், தோழர்களுடன் கண்டிப்பாகப் பாருங்கள்.   

சனி, 19 அக்டோபர், 2013

மத்திய அரசின் கோமாளித்தனமும், மோடியின் பகுத்தறிவு வேஷமும்....!

   
      உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவிலிருந்து சுமார் 50 கி. மீ. தொலைவில் உள்ள உன்னாவ் என்ற ஊரின் காட்டுப் பகுதியில் இருக்கும் டோண்டியா கேடா எனும் கிராமத்தில் 19 - ஆம் ஆம் நூற்றாண்டில் ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங் எனும் அரசரின் கோட்டை இருந்ததாகவும், தற்போது பகலில் கூட பொதுமக்கள் செல்லமுடியாத வகையில் சிதிலமடைந்த நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது வரையில் பொதுமக்களே செல்லாத அந்த இடத்திற்கு தற்போது மத்திய அரசின்  அகழ்வாராய்ச்சி நிபுணர்களும், நடமாடும் தொலைக்காட்சி நிறுவனங்களும், ஊடகத்துறையை சேர்ந்தவர்களும், இவர்களுடன் பொதுமக்களும் என ஆயிரக்கணக்கில் வந்தவண்ணம் இருக்கிறார்கள். நாட்டின் அனைவரின் பார்வைகளும் அங்கு தான் இருக்கின்றன. காரணம் அங்கு ''தங்கப்புதையல் வேட்டை'' நடைபெறுகிறது.
         ''தங்கப்புதையலா...!'' என்று வாயை பிளக்கவேண்டாம். சாதாரணமாக ''உங்க வீட்டில் புதையல் இருகிறது'' என்றும், ''உங்க நிலத்தில் புதையல் இருக்கிறது'' என்றும் சாமியார்களும், ஜோசியக்காரர்களும் சாதாரண பாமரமக்களிடமும், படிப்பறிவில்லாத மக்களிடமும் தான் பிழைப்புக்காக பொய் சொல்லுவார்கள். இது போல் நம் நாட்டில் விழிப்புணர்வில்லாத பொதுமக்கள் ஏமாறுவது என்பது இயற்கை. ஆனால் மத்திய அரசே யாரோ சாமியார் தன் கனவில் வந்ததாக சொல்லுவதையெல்லாம் நம்பி தன்  நேரத்தையும் பணத்தையும் செலவழிக்கிறது என்பது கோமாளித்தனமாக இருக்கிறது. மத்திய அமைச்சர்களோ அல்லது மத்திய அரசு அதிகாரிகளோ அறிவுப்பூர்வமாக அல்லது அறிவியல்பூர்வமாக சிந்திக்காமல் மூளையை கழட்டி வைத்துவிட்டார்களோ என்று சந்தேகமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. தங்கப்புதையல் கிடைக்கவேண்டுமென்றால் ''உயிர் பலி'' கொடுக்கவேண்டுமென்று சாமியார்கள்  சொன்னால், இந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் அதையும் செய்யத் துணிவார்களோ....?  இதுபோன்ற மூடநம்பிகைகளை அரசே நம்புவது என்பதும், அதை மக்களிடையே பரப்புவது என்பதும் அறிவுடைமைச் செயலாகாது. முட்டாள்தனமானது.
          இது ஒருபுறமிருக்க. இன்னொரு புறம், பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி நேற்று சென்னை வந்த நரேந்திர மோடி மத்திய அரசின் இச்செயலை கிண்டலடித்து பேசியிருக்கிறார். ''சாமியார் சொன்ன புதையல் வேட்டையை நிறுத்திவிட்டு, சுவிஸ் வங்கியில் இந்திய பணக்காரர்கள் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்யட்டும்'' என்று மோடி மத்திய அரசை கிண்டலடித்து பேசியது என்பது நகைச்சுவையாக இருந்தது. சாத்தான் வேதம் ஓதினால் ஆச்சரியப்படலாம். ஆனால் மோடி வேதம் ஒதுவதைப்பார்த்து ஆச்சரியப்பட தேவையில்லை.
           மோடி பிரதமர் பதவிக்காக வேதம் ஓதுவதும், வேஷம் போடுவதும் அன்றாட நடவடிக்கையாக போய்விட்டது. ஓட்டுக்காக பொதுமக்களை கவர நேரத்திற்கு தகுந்தாற்போல் இடத்திற்கு தகுந்தாற்போல் மோடி வேஷம் போடுவதை தவறுவதே இல்லை. இஸ்லாமியர்களை கவருவதற்கு ஷர்வாணி அணிவதும், அவருடைய ஆட்களுக்கே இஸ்லாமியர் வேடமிட்டு அவரது பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளச் செய்வது, சுதந்திரமடைந்து 67 ஆண்டுகள் ஆகியும் சாதாரண கழிப்பறைக்கே வக்கில்லாத மக்களிடம்''முதலில் கழிப்பறை... பிறகு தான் கோயில்'' என்ற வீரவசனம் பேசுவதும் மோடிக்கு கைவந்தக் கலை என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
          அதேப்போல் தான், நேற்றைய தினம் சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில்- தந்தை பெரியார் வாழ்ந்த பூமியில் பேசும் போது, ''பகுத்தறிவாளர்'' வேஷம் போட்டு பேசியது என்பது அவர் முன்பு போட்ட வேஷங்களை விட ''பகுத்தறிவாளர்'' வேஷம் நம்மை ஆச்சரியப்பட வைத்தது மட்டுமல்லாமல் வாய் விட்டு சிரிக்கவும் செய்துவிட்டது. ''பகுத்தறிவாளர்'' மோடியைப் பார்த்து ஒரு கேள்வியை கேட்கத்தோன்றுகிறது. அயோத்தி இராமன் பிறந்த இடம் என்பதும், சேது சமுத்திரத்தின் குறுக்கே வாருவது இராமர் பாலம் என்பதும் மூடநம்பிக்கை தான் என்பதை மோடியும் அவரது கூட்டாளிகளும் ஏன் உணரவில்லை என்பது தான் நமது கேள்வி....?
       

செவ்வாய், 15 அக்டோபர், 2013

அவர்கள் பட்டாம்பூச்சிகள்... சுதந்திரமாய் பறக்கவிடுங்கள்....!

                  நேற்று விஜயதசமி நாள். பிறந்து பதினெட்டே மாதங்களான குழந்தைகளுக்கு சோதனையான நாள். அதுமட்டுமல்ல இந்த நாளில் தான் புற்றீசல் போல ஏகப்பட்ட பாலர் பள்ளிகள் - Kids School என்ற பெயரில் வீதிக்கு வீதி தொடங்கப்படும். LPG - தாராளமயம், தனியார்மயம், உலகமயம் போன்ற இலாப வெறிப்பிடித்த இந்த மயங்களின்  கண்டுபிடிப்புகள் தான் இந்த Kids School என்பதெல்லாம். கல்வியை வணிகமயமாக்கி  ஆங்கில வழிக்கல்வி மூலம் மக்களிடம் கொள்ளையடிப்பது தான் இதன் நோக்கமேத் தவிர, கல்விப்பணி என்பதல்ல. இப்படிப்பட்ட இந்த ''உயரிய நோக்கத்திற்காக'' நாடு முழுதும் நேற்று வகைவகையான ''கிட்ஸ் ஸ்கூல்கள்'' மூலைக்கு மூலை தொடங்கப்பட்டிருக்கின்றன வேதனைக்குரிய விஷயமாகும்.
             பெற்றோர்களையும் நேற்று பார்க்கணுமே...  என்ன பரபரப்பு....? அவர்கள் குழந்தைகளை தூக்கிக்கிட்டு அங்கிட்டுக்கும், இங்கிட்டுக்கும் அலையும் போது குழந்தைகளுக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்குது. பலி ஆடு மாதிரி முழிக்கிறாங்க பாவம். பெரும்பாலான குழந்தைங்க ஒரே அழுகை தான். விளையாட வேண்டிய காலத்தில் இப்படி ஒரு  சித்திரவதையா என்ற ஏக்கம். நிச்சயமாக அந்த வயதுக் குழந்தைகளுக்கு படிப்புன்னா என்னான்னே தெரியாது. ஏன் படிக்கவேண்டும் என்று கூட அறியாத வயது. அப்படிப்பட்ட இந்தப் பருவத்தில போயி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது என்பது என்ன நியாயம்....?
            விளையாடுகிற நேரத்தையும், தூங்குகிற நேரத்தையும், பாடுகிற நேரத்தையும், கொண்டாடுகிற நேரத்தையும் தொலைத்துவிட்டு  இப்போதே இவர்கள் என்ன சாதித்து விடப்போகிறார்கள். ஆனால் ஒன்று நிச்சயம். இப்படி செய்வதன் மூலம் உளவியல் ரீதியாக குழந்தைகளின் மனநலம் பாதிக்கும் என்பது தான் உண்மை. இதை பெற்றோர்கள் உணரவேண்டும். விளையாடுகிற நேரத்தையும், தூங்குகிற நேரத்தையும் தொலைக்கவா இவர்கள் பூமியில் பிறந்தார்கள். அல்லவே. இவைகள் எல்லாவற்றையும் பெற்று அனுபவித்து சாதிக்க அல்லவா பிறந்தார்கள். பெற்றோர்களே... அவர்கள் பட்டாம்பூச்சிகள்... சுதந்திரமாய் பறக்க அனுமதியுங்கள்....!

புதன், 9 அக்டோபர், 2013

பிரிவினையை விரும்பாத ஆந்திர மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டும்...!

 

                எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியடைகிறதோ அல்லது நாட்டு மக்கள் எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருக்கிறார்களோ அப்போதெல்லாம் கட்சியை காப்பாற்றிக்கொள்ள மக்களை திசைத்திருப்புவதற்கு ஏதாவது ''சித்து விளையாட்டில்'' ஈடுபடுவது என்பது காங்கிரஸ் கட்சியின் கடந்த கால வரலாறாக இருந்து வருகிறது. சுதந்திரம் அடைவதற்கு முன்பும் பின்பும் இது தான் காங்கிரஸ் கட்சியின் அரசியலாக கருதப்படுகிறது. தற்போது நாடு முழுதும் மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமையினான மத்திய ஆட்சியாளர்கள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, எங்கும் ஊழல், எதிலும் ஊழல், பெருகிவரும் வேலையின்மை, வேலையிழப்பு, பணவீக்கம், ரூபாய் மதிப்பிழப்பு போன்ற மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் கையாலாகாதத்தனத்தால் மக்கள் ஒரு பக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் நாடு முழுதும் மக்களின் செல்வாக்கை இழந்துவிட்ட காங்கிரஸ் கட்சி, குறிப்பாக ஆந்திர மக்களிடம் மிகப்பெரிய சரிவை சந்தித்துக்கொண்டிருக்கிறது.
          அரசியல் ஆதாயத்திற்காக தெலங்கானா பிரிவினைக்கு ஊக்கம் கொடுத்தது மட்டுமல்லாது, அதை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தத் துடித்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி நாடு முழுதும் குழப்பத்தை உண்டாக்கியிருக்கிறது. பிரிவினையை விரும்பாத ஆந்திர மக்கள் - ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தையே விரும்பக்கூடிய ஆந்திர மக்கள், அரசே செய்யும் பிரிவினை வேலைகளைக் கண்டு கோபங்கொண்டு மாபெரும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை - ஒற்றுமையை சீர்குலைக்கின்ற வகையில் தனி மாநிலம் வேண்டும் என்று போராடவில்லை. ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் வலுசேர்க்கும் விதமாகத்  தான் போராடுகிறார்கள். ஒன்றுபட்ட ஆந்திரமாநிலத்திற்காக ஒட்டுமொத்த மாநில மக்களும், அரசு ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் பக்கம் நிற்கவேண்டிய மத்திய அரசு அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஊரடங்குச்சட்டம், கண்டதும் சுடுதல் போன்ற அடக்குமுறை உத்திரவுகளை பிறப்பித்துள்ளது என்பது துரதஷ்டமானது. மேலும் இச்செயல் பிரிவினை வேண்டுவோர்க்கு பலம் சேர்க்கும் நியாயமற்ற செயல் மட்டுமல்ல, ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சீர்க்குலைக்கும் செயல். இது ஆபத்தானது. விபரீதமானது. இது அரசே செய்யும் பயங்கரவாத செயலாக கருதப்படும்.
             குழம்பியக்குட்டையில் மீன் பிடிக்கும் வேலையை காங்கிரஸ் கட்சி நிறுத்திக்கொள்ளவேண்டும். பிரிவினை விரும்பாத ஆந்திர மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் எதிர்காலத்தை பலியிடக்கூடாது.திங்கள், 7 அக்டோபர், 2013

சென்றுவாருங்கள் வியத்நாம் வீர தளபதி வோ...!

       
       இராக், ஆப்கன் என்று அமெரிக்கர்கள் ஆங்காங்கே சென்று போரில் அடிபடும் போதெல்லாம் அமெரிக்கப் பத்திரிகைகள் தவறாமல் எழுதும் வாசகம் ஒன்று உண்டு: 'வியத்நாம் போரிலிருந்து நம்மாட்கள் என்ன கற்றுக்கொண்டார்கள்?'               
           பிரான்ஸிலும் இதே கதைதான். அங்கு 'வியத்நாம் பாடம் மறந்து போய்விட்டதோ என்று தோன்றுகிறது' என்று எழுதுவார்கள் பிரெஞ்சு பத்திரிகையாளர்கள். இரு வல்லரசுகளுக்கும் இப்படி வரலாற்றுப் பாடம் கற்றுக்கொடுத்த பெருமை இரு வியத்நாமியர்களைச் சேரும். ஒருவர்: அன்றைய வியத்நாமிய அதிபர் ஹோசி மின்; இன்னொருவர் ராணுவத் தளபதி வோ கியென் கியாப். 
             லாங் சோன் (1950) ஹோ பின் (1951-52), டீன் பின் பூ (1954), தி டெட் தாக்குதல் (1968), தி ஈஸ்டர் தாக்குதல் (1972), ஹோ சி மின் முற்றுகை (1975) எனப் பல போர்களில் ராணுவ உத்திகளை வகுத்துச் செயல்படுத்தியவர் தளபதி வோ.
           1911 ஆகஸ்ட் 25-ல் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர் வோ. ஹனோய் பல்கலைக்கழகத்தில் அரசியல், பொருளாதாரம், சட்டம் ஆகியவற்றில் பட்டம் பெற்ற வோ முதலில் தேர்ந்தெடுத்த வேலை பள்ளிக்கூட ஆசிரியர். அப்போதே 'தீன் டாங்' என்ற பத்திரிகைக்குக் கட்டுரைகளும் எழுதிவந்தார்.
        வியத்நாம் அப்போது பிரெஞ்சு காலனி நாடாக இருந்தது. காலனி ஆதிக்க எதிர்ப்புணர்வால், வியத்நாமின் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். நிறையப் படித்தார். சுன் சூ அவருக்கு மிகவும் பிடித்த முன்னோடி. இன்னொரு வீரரையும் அவருக்குப் பிடிக்கும். தங்களை ஆக்கிரமித்திருந்த பிரான்ஸைச் சேர்ந்தவர் என்றாலும் நெப்போலியன்.
        பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் பங்கேற்றதற்காக விதிக்கப்பட்ட 13 மாதச் சிறைத் தண்டனை வோவைப் புடம்போட்டது. விடுதலையான பிறகு வியத்நாமிய மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் இரு பத்திரிகைகளை நடத்தினார். வியத்நாமில் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டதும் சீனத்துக்குத் தப்பினார் வோ. ஹோ சி மின்னுடன் இணைந்தார். 1944-ல் மீண்டும் வியத்நாமுக்கு வந்தார்.
           ராணுவப் பயிற்சியே இல்லாத வோ, உலகிலேயே தீரம் மிக்க சேனையைக் கட்டியமைத்தார். பழைய வாகனங்களின் டயர்களிலிருந்து செய்யப்பட்ட செருப்பு அல்லது பூட்ஸ்களை அணிந்த வீரர்கள்தான் அவரால் பயிற்றுவிக்கப்பட்டு பிரெஞ்சுக்காரர்களையும் பிறகு அமெரிக்கர்களையும் தோற்று ஓட வைத்தனர்.
          "நான் போர் உத்திகளைப் படித்தது ராணுவக் கல்லூரிகளில் அல்ல, எங்கள் நாட்டுப் புதர்களில்தான்" என்று அவரே வேடிக்கையாகப் பின்னர் தெரிவித்திருக்கிறார்.
              வோவின் படை முதலில் மோதியது ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு சேனைக்கு எதிராக. இரண்டாவது உலகப் போரில் நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்த பிறகு, தங்கள் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் நேச நாடுகளுக்குத் தொல்லைதர ஜப்பானியர்கள் தீர்மானித்தனர். வியத்நாமிலிருந்த பிரெஞ்சுக்காரர்களைச் சிறையில் அடைத்து விட்டு, முக்கிய அரசுக் கட்டடங்களை அரசு எதிர்ப்பாளர்களான வியத்நாமிய கம்யூனிஸ்டுகள் கைப்பற்றிக்கொள்ள அனுமதித்தனர். அப்போது 'மக்கள் சேனை' பல்வேறு நகரங்களில் அரசு அலுவலகங்களையும் கேந்திர முக்கியத்துவம் வாயந்த இடங்களை யும் கைப்பற்றிக்கொண்டு 'இடைக்கால தேசிய அரசை' அமைத்தது. அதன் உள் நாட்டுப் பாதுகாப்பு அமைச்சராக வோ அறிவிக்கப்பட்டார்.
           இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு ஜப்பானியர்களை வியத்நாமிலிருந்து வெளியேற்றிய நேச நாடுகளின் தலைவர்கள், வியத்நாமை இரண்டாகப் பிரித்து வடக்கு வியத்நாமை சீனர்களின் கட்டுப்பாட்டிலும் தெற்கு வியத்நாமை பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டிலும் விடுவதென்று முடிவுசெய்தனர். இது அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், ரஷ்யத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோரின் கூட்டு முடிவு. அப்போது மீண்டும் வியத்நாம் மீது ஆதிக்கம் செலுத்த பிரான்ஸ் முயன்றது. கம்யூனிஸ்டுகளின் நெப்போலியன் என்று அழைக்கப்பட்ட வோ, இந்த நிலையை மாற்ற படிப்படியாக 'மக்கள் சேனை'யை வலுப்படுத்தினார். வியத்நாமில் பிரெஞ்சுக்காரர்களின் ராணுவ மையங்கள் இருந்த மலைப் பகுதிகளுக்கு வோவின் துருப்புகள் பீரங்கிகளை பாகம் பாகமாகப் பிரித்து எடுத்துச் சென்று தங்களுக்கு ஏற்ற இடத்தில் இணைத்துக்கொண்டனர். 1954-ல் தீன் பீன் பு என்ற இடத்தில் வியத்நாமியர்களின் வீரியம் மிக்க திடீர் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரெஞ்சு ராணுவம் சீர்குலைந்தது. அந்தப் போருக்குப் பிறகு வியத்நாமுக்குச் சுதந்திரம் கிடைத்தது. அத்துடன், இந்தோ-சீனப் பகுதியில் காலனியாதிக்கத்தின் முதுகெலும்பும் முறிக்கப்பட்டுவிட்டது. பிறகு தெற்கு வியத்நாமில் அமெரிக்க ஆதரவில் நடைபெற்ற அரசையும், 1975 ஏப்ரலில் வோ தலைமையிலான 'மக்கள் சேனை' போரில் வென்று அகற்றியது.
            ஆனால் இதற்கு வியத்நாமிய புரட்சிப் படை கொடுத்த விலை அதிகம். அமெரிக்கா சுமார் 5 லட்சம் துருப்புகளை வியத்நாமில் நிறுத்தியும் அதற்குத் தோல்வியே ஏற்பட்டது. வியத்நாமியர்கள் அமெரிக்காவுடனான யுத்தத்தில் இழந்தது 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை. ஐந்து லட்சம் துருப்பு களை வெல்லவோ விரட்டவோ முடியாது என்பது தெரிந்திருந்தபோதிலும், 'வியத்நாமில் சண்டையிட்டது போதும்; இனியும் தொடர வேண்டாம்' என்று அமெரிக்க ஆட்சியாளர்கள் நினைக்கும் அளவுக்கு அலையலையாகத் தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தார்கள் வியத்நாமின் 'மக்கள் சேனை'வீரர்கள். 'அடுத்த முறை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன்' என்று லிண்டன் ஜான்சனையே சலிப்புடன் சொல்ல வைத்தனர். 1975 ஏப்ரல் 30-ல் கம்யூனிஸ்ட் படைகள் தலைநகர் சைகோனில் டாங்குகள், பீரங்கிகளுடன் நுழைந்து நகரைக் கைப்பற்றியதோடு வியத்நாம் போர் முடிவுக்கு வந்தது.
            வியத்நாம் போரில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகளும் சிவிலியன்களும் இறந்தனர். தெற்கு வியத்நாமைச் சேர்ந்த இரண்டரை லட்சம் பேரும் அமெரிக்கத் துருப்புகள் 58,000 பேரும் இறந்தனர். இந்தப் போர் நடந்த காலங்களில் பெரும்பாலும் ராணுவ அமைச்சராக 'வோ'தான் பதவி வகித்தார். அவரே ராணுவத் தலைமைத் தளபதியாகவும் இருந்தார். 1969-ல் ஹோ சி மின் இறந்த பிறகு வோ பின்னுக்குத் தள்ளப்பட்டார்.
           1979-ல் அவரிடமிருந்து ராணுவத் துறை பறிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் தலைமைக் குழுவிலிருந்தும் நீக்கப்பட்டார். 1991-ல் துணைப் பிரதமர் பதவியிலிருந்து அவராகவே விலகிக்கொண்டார். பதவியில் இல்லாதபோதும் வியத்நாமிய மக்கள் அவரைப் புரட்சி வீரராகவே கடைசி வரை பாராட்டினர். அவரும் மக்களிடம் மிகுந்த நேசம் பாராட்டினார்.
         எந்த அமெரிக்காவைக் கடுமையாக எதிர்த்தாரோ அந்த அமெரிக்காவுடனேயே நெருங்கிய நட்பு பாராட்ட வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறினார். இராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது அமெரிக்கா செய்யும் தவறை அமெரிக்க உயர் அதிகாரிகளிடம் நேரிலேயே சுட்டிக்காட்டினார்.
          "ஒரு நாடு எதனால் பலமடைகிறது, ராணுவ வீரர்களுக்குத் தரும் பயிற்சியாலா, நவீன ஆயுதங்களாலா?" என்று வெளிநாட்டு நிருபர்கள் 2004-ல் அவரிடம் கேட்டனர். "எதிரியை எதிர்ப்பதில் ஒரு நாட்டுக்குத் துணிவு ஏற்பட்டுவிட்டால் போதும், மற்றதெல்லாம் இல்லாவிட்டாலும் வெற்றி நிச்சயம்" என்றார் அவர்.
        "கடந்த காலத்துக் கசப்புணர்வுகளை நாம் மூட்டைகட்டி வைக்கலாம். ஆனால் கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்ற பாடங்களை மறக்கக் கூடாது" என்பார் வோ. இது வியத்நாமுக்கு மட்டும் அல்ல உலகம் முழுக்க உள்ள நாடுகளுக்குப் பொருத்தமானது.
முதுமை, உடல் நலிவு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாகவே ஒடுங்கிவந்த வோ தன்னுடைய 102-வது வயதில் ஹனோய் நகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு மரணம் அடைந்தார்.
ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அவருடைய வீர முழக்கம் இன்னும் ஒலிக்கிறது!      
நன்றி :   
           

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

மோடியுடன் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் நெத்தியடி....!

              

 
      எப்படியாவது பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்துவிடவேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கும் நரேந்திர மோடி மக்களை தன்  பக்கம் இழுத்து ஓட்டுக்களை பெறுவதற்கு வகைவகையான தில்லுமுல்லுகளை அரங்கேற்றிவருகிறார். ஏற்கனவே இந்தி நடிகர் அமிதாப்பச்சன் என்றோ பேசிய பழைய வீடியோவை தூசுத்தட்டி எடுத்து அதில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பேசுவது போல் பதிவு செய்து வெளியிட்டு அமிதாப்பச்சன் கையாலேயே மோடி குட்டு வாங்கியதை நாடு இப்போது தான் பார்த்தது. அதற்குள் இன்னொரு தில்லுமுல்லை அரங்கேற்றியிருக்கிறார். சமீபத்தில் ''இளந்தாமரை  மாநாட்டிற்கு'' கலந்து கொள்வதற்காக மோடி திருச்சி வந்தபோது அவரை வரவேற்கும் பெரும்பாலான போஸ்டர்களிலும், டிஜிட்டல் பேனர்களிலும் மோடியுடன் ரஜினிகாந்த் படத்தையும் இணைத்து போட்டிருந்தார்கள். இதைப்பார்த்த இளைஞர்கள் - இரசிகர்கள்  முகம் சுளித்தனர். ஆனால் இந்த போஸ்டர் குறித்து ரஜினிகாந்திடமிருந்து மட்டும் ஏனோ எந்தவிதமான கருத்தும் வரவில்லை. வழக்கம் போல் மவுனம் தான்.
         ஆனால் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசும் போது நடிகர் கமல்ஹாசன், திருச்சியில் நடைபெற்ற நரேந்திர மோடியின் கூட்டத்தின் போது ரஜினியின் போஸ்டரைப் பயன்படுத்தினார்கள். அதற்கு ரஜினி எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் நான் அப்படியில்லை. அதேப்போல் என்னுடைய போஸ்டரை பயன்படுத்த நிச்சயமாக அனுமதிக்கமாட்டேன் என்று ஆவேசமாக நெத்தியடிக் கொடுத்திருக்கிறார். உண்மையிலேயே காவிக்கூட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த கமல்ஹாசனின் துணிச்சலை  பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.
          


வியாழன், 3 அக்டோபர், 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா....?


                                                                                                                                                            
          குற்றவாளி என கருதப்படும் எம். பி., மற்றும் எம்.எல்.ஏ., -க்களின் பதவிப்பறிப்பை தடுக்கும் அவசரச்சட்டம் ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் அவசரமாக குடியரசுத்தலைவரின் தபால் பெட்டியில் போட்டுவிட்டு, அவசரமாக அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். அமெரிக்காவிலிருந்து திரும்பி வருவதற்குள் குடியரசுத்தலைவரும் அவசரமாக கையெழுத்திட்டு விடுவார் என்ற நம்பிக்கையில் தான் பிரதமரும் அவசரமாக கிளம்பிப்போனார். ஆனால் மாநிலங்களவையில் இதற்கான மசோதா ஒன்று நிலுவையில் உள்ள போது, இப்படிப்பட்ட அவசரச்சட்டத்தின் மீது பிரதமருக்கு அப்படியென்ன அவசரம் இருக்கிறது...? அப்படி ஏன் அவசரம் காட்டுகிறார் என்பதை புரிந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமரின் இந்த அவசர செயலை மிகக் கடுமையாக விமர்சித்தனர். பிரதமரின் இந்த அவசர செயல் என்பது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது என்று குற்றஞ்சாட்டினர்.
          இந்த சூழ்நிலையில் தான், பத்திரிக்கையாளர் கூட்டத்திற்கு அழைப்பில்லாமலேயே அவசரமாக ஆஜரான காங்கிரஸ் கட்சியின் ''குட்டித்தலைவர்'' ராகுல் காந்தி ''இந்த அவசரச்சட்டம்  முட்டாள்தனமானது. அதை கிழித்து குப்பையில் தூக்கி எறியவேண்டும்.'' என்று கடுமையாக சாடினார். ராகுல் காந்திக்கு உண்மையிலேயே சட்டத்தின் மீது எரிச்சலா... அல்லது பிரதமரின் மீது எரிச்சலா...'' என்பதை அவரது அம்மா தான் அறிவார். அதனால் தான் அவரது அம்மா சோனியா காந்தி உடனடியாக அமெரிக்காவில் இருந்த மன்மோகன் சிங்கிடம் தன் மகன் செய்த ''அவசரக்குடுக்கை'' தனத்திற்கு சமாதானப்படுத்தினார். மன்மோகன் சிங்கிற்கும் அமெரிக்காவில் செய்யவேண்டிய பல்வேறு வேலைகளைவிட ராகுல் காந்தியின் பேச்சு பெரும் சுமையாகப் போய்விட்டது.
           நாட்டில் எல்லோருடைய எதிர்ப்பார்ப்பும் மன்மோகன் சிங் பதவி விலகிவிடுவார் என்பதில் தான் இருந்தது. என்னென்றால் மன்மோகன் சிங் ரொம்ப ரோஷக்காரர். ராகுல் காந்தியின் பேச்சால் தன்னுடைய மரியாதை அமெரிக்காவிலேயே போய்விட்டது. அதனால் நான் பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று சொல்லிவிடுவார் என்று எல்லோரும் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் அந்த ரோஷக்காரர் ராகுல் காந்தியின் நாடகத்திற்கு பதில் நாடகம் போடாமல், அவசரமாக குடியரசுத்தலைவரை சந்தித்தார். அவசரமாக சட்டவல்லுனர்களை சந்தித்தார். அவசரமாக மந்திரிசபையை கூட்டினார். அவசர அவசரமாக ''அவசரச்சட்டத்தை'' திரும்பப்பெறுவதாக நேற்று முடிவெடுத்துவிட்டார்.
            இத்தனை நிகழ்வுகளிலும் ஒரு சந்தேகம் என்னன்னா....? இந்த அவசரச்சட்டம் குடியரசுத்தலைவரிடம் அனுப்புவதற்கு முன்பு மந்திரி சபை கூட்டத்திலும், காங்கிரஸ் கட்சியின் தலைமையிடத்திலும் கலந்தாலோசிக்கப்பட்டே அனுப்பப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் ''குட்டித்தலைவர்'' ராகுல் காந்தியிடமும் ஆலோசனை செய்யாமலா இருந்திருப்பார்கள். இந்த அவசரச்சட்டத்தின் மீது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பியவுடன், ஆளும்கட்சியின் ''குட்டித்தலைவராக'' அந்த எதிர்ப்பில் தானும் பங்கெடுத்துக்கொண்டு மக்கள் மத்தியில் தன்னை ஒரு ''கதாநாயகனாக'' காட்டிக்கொள்ள ராகுல் நடத்திய நாடகம் தான் இது என்பது மக்களுக்கு நன்றாக புரியும்.
             அவசரச்சட்டத்தை கிழித்து குப்பையில் போடவேண்டும் என்று பேசுவது என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பது கூட அறியாமல், தான் காட்டிய எதிர்ப்புக்குப்பின் அந்த அவசரச்சட்டம் திரும்பப்பெறப்பட்டதன்  மூலம் தான் ''கதாநாயகன்'' ரேஞ்சிக்கு உயர்ந்துவிட்டோம் என்று ராகுல் காந்தி சந்தொஷப்பட்டுக்கொண்டிருப்பார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா....?
            நாடு இன்னும் என்னென்னத்த எல்லாம் தாங்கவேண்டி வருமோ தெரியில... ஒரு பக்கம் மோடி... இன்னொரு பக்கம் ராகுல்... முடியில...!

புதன், 2 அக்டோபர், 2013

திவாலாகிறது டாலர் தேசம் - செயலிழந்து தவிக்கிறது ஒபாமா நிர்வாகம்...!

   
( இது ''மாற்று'' - இணையத்தளத்தில் வெளியான எனது கட்டுரையின் விரிவு....! ) 
          உலகத்திலேயே தன்னை ஒரு ''பொருளாதார வல்லரசாக'' தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அமெரிக்காவில் புதிய நிதியாண்டிற்கான பட்ஜெட் நிதிப்பற்றாக்குறை காரணத்தால் நிறைவேற்றப்படாமல் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல்  அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் வைக்கப்பட்ட புதிய நிதியாண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தில் ''ஒபாமா கேர்'' என்று அழைக்கப்படும் ''தனி நபர் சுகாதார காப்பீட்டு திட்டத்திற்கான'' நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வரவு - செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்காததால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இதனால் அமெரிக்க அரசு இயந்திரமே செயலிழந்து தவிக்கிறது.
          அமெரிக்காவின் நிதியாண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 - ஆம் தேதி முடியும். நேற்று அக்டோபர் 1 - ஆம் ஆண்டு புதிய நிதியாண்டின் தொடக்கமாகும். ஒவ்வொரு ஆண்டும் நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பே வரும் ஆண்டிற்கு எவ்வளவு ''பொதுக்கடனை'' வாங்கலாம் என்பதை தீர்மானித்து அதற்கான சட்டத்தை நிறைவேற்றி அதிபருக்கு அனுப்புவது என்பது வழக்கம். அதே போன்று அடுத்த நிதி ஆண்டுக்கு 17.8 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் = 1 லட்சம் கோடி) டாலர் அளவுக்கு ''பொதுக்கடன் தொகை'' உயர்த்தப்பட்டால் மட்டுமே அடுத்த ஆண்டு பட்ஜெட்டை உருவாக்க முடியும் என்ற வழக்கமும் இருந்து வருகிறது.  ஆனால்  வழக்கப்படி கடன் வாங்கும் அளவை உயர்த்த எதிர்க்கட்சி இம்முறை  அனுமதிக்கவில்லை. அதனால் அமெரிக்க அரசாங்கம் மிகப்பெரிய இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டது. இதன் காரணமாக அந்நாட்டில் மாபெரும் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இந்த நிலை என்பது அதிபர் ஒபாமாவிற்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான பின்னடைவு என்றே சொல்லவேண்டும். இப்படியாக பொருளாதார பின்னடைவால் ''டாலர் தேசம்'' தத்தளித்துக் கொண்டிருப்பதை உலக நாடுகள் உண்ணிப்பாக பார்த்துக்கொண்டிருக்கின்றன.
              அதென்ன  ''ஒபாமா கேர்''....? நம்ம ஊரு ''கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'' போல், ''ஒபாமா கேர்'' என்ற பெயரில் அமெரிக்காவில் பிரபலமாக அழைக்கப்பட்ட ஒபாமாவின் சுகாதார நலத்திட்டமாகும். நம்ப நாட்டுல  சோனியா காந்தியின் ''கனவு திட்டம்'' போல, இது அமெரிக்காவுல அதிபர் ஒபாமாவின் ''கனவு திட்டம்'' என்று சொல்லப்படுகிறது. நம்ம ஊரு தலைவர்களைப் போல அரசு திட்டங்களுக்கு தன்னுடைய பெயரையே வைத்துக்கொண்டு விளம்பரத்தைத் தேடிக்கொள்ளும் மலிவு அரசியல் புத்தி அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் விட்டுவைக்கவில்லை. இது ஏழை - எளியவர்களுக்கான திட்டம் என்பதால் அப்படிப்பட்ட இந்த சுகாதார நலத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவிற்கு எதிர்க்கட்சியான குடியரசு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்க்கட்சியினரான குடியரசுக்கட்சியினர் அதிக எண்ணிக்கையில் உள்ள பிரதிநிதிகள் சபை என்பதால் ஒபாமாவின் இத்திட்டத்திற்கு ஆதரவு கிடைக்காமல் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல்  இந்த மசோதா நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவும் முடிவடைந்துவிட்டது.
              இப்படிப்பட்ட பொருளாதார சீர்கேடுகள் நிறைந்த கடுமையான சூழ்நிலையில் அமெரிக்காவில் உள்ள அரசு நிறுவனங்களை ''தற்காலிகமாக'' மூடிவிடுவதென முடிவெடுத்து வெள்ளை மாளிகையிலிருந்து அதிபர் ஒபாமா கெடுபிடியான - அபாயகரமான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால் அமெரிக்க அரசு நிறுவனங்களில் வேலை செய்யும் சுமார் 8லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளமின்றி கட்டாய விடுப்பில் அனுப்பட்டுள்ளனர். மேலும் இலட்சக்கணக்கான பேர் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலை எத்தனை நாட்களுக்கு நீட்டிக்கும் என்பதையும் ஒபாமா அறிவிக்கவில்லை. நாடு சந்தித்துக்கொண்டிருக்கும் இவ்வளவு மோசமான சூழ்நிலையைப் பற்றி அமெரிக்க மக்களிடமும் கூட ஒபாமா இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. இதே நிலை 15 நாட்களுக்கு மேல் நீடித்தால், 2009 - ஆம் ஆண்டு அமெரிக்கா சந்தித்த ''ரெசஷன்'' என்று சொல்லக்கூடிய பொருளாதார வீழ்ச்சி என்பது மீண்டும் பூதாகரமாய் உருவெடுக்கும் வாய்ப்பிருக்கிறது. இதனால் அமெரிக்க மக்கள் மேலும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பார்கள். வேலையை இழந்த - வருமானத்தை இழந்த குடும்பங்கள் கடுமையான அளவிற்கு பாதிக்கும் என்றும், வியாபாரம் நடைபெறாமல் வருமானமில்லாமல் பல்வேறு வியாபார நிறுவனங்களும் மூடப்படும் அபாயத்தில் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அமெரிக்க  பங்கு சந்தையும் விழ்ச்சியுற்று ''வால் வீதியே'' ஸ்தம்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களும் ஒபாமா மீது வெறுப்பும், கோபமும் அடைந்திருக்கிறார்கள்.
             அதுமட்டுமல்ல இதுபோன்று அரசு நிறுவனங்கள் மூடப்படுவது என்பது அமெரிக்காவிற்கு இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பு 1995 - 96 நிதியாண்டிலும் இதுபோன்ற மோசமான சூழ்நிலையை அமெரிக்கா  சந்தித்து அரசு நிறுவனங்களை மூடியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் அதிலிருந்து 17 ஆண்டுகள் ஆகியும் அமெரிக்கா பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தான் இன்றைய சூழ்நிலை நமக்கு உணர்த்துகிறது.