ஞாயிறு, 29 டிசம்பர், 2013

முரண்பாடுகளுடன் டெல்லியில் ''ஆம் ஆத்மி கட்சி'' ஆட்சி...!


                       தலைநகர் டெல்லியில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், கடந்த காலங்களில் தொடர்ந்து ஆட்சியில் இருந்துவந்த காங்கிரஸ் கட்சி டெல்லி மாகலின் மிக கடுமையான கோபத்திற்கு பலியாகி போனது. மீண்டும் உயிர் பெற்று எழுந்திருப்பது என்பது அவர்களால் நினைத்துக்கூட  பார்க்கமுடியாது. காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் உட்பட பல முக்கிய  காங்கிரஸ் கட்சித் தலைவர்களெல்லாம் படுதோல்வி அடைந்து, 70 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் எட்டே தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று மண்ணைக் கவ்வியது.  கடந்த ஐந்து ஆண்டுகால மகா ஊழல்கள், கடுமையான விலைவாசி உயர்வு என மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு சீர்கேடுகள் நிறைந்த   ஆட்சியினால் பாதிக்கப்பட்ட மக்கள் காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
           இன்னொரு பக்கம், மத்தியில் ஆட்சியை பிடிக்க அலைந்து கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சி, டெல்லியில் பிரபலமான நபர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து, முதலில் டெல்லியை பிடிக்கும் ஆசையில் அனைத்து 70 தொகுதிகளிலும் களத்தில் இறங்கியது. ஆனால் ஊழலை பொருத்தவரை பாரதீய ஜனதாக் கட்சியும் விதிவிலக்கல்ல. அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களும், ஆட்சி செய்த மாநிலங்களுமே மிகப்பெரிய சாட்சியாக நிற்கிறது என்பதாலும், மதவாதம் மற்றும்  சிறுபான்மையினருக்கு எதிரான போக்குகள் கொண்ட  ஒரு சீர்குலைவு சக்தியாக காட்சிதரும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஆட்சியமைக்க முழு அளவிற்கான மெஜாரிட்டியை மக்கள் தாராமல் 30 தொகுதிகளை மட்டுமே கொடுத்தார்கள். அந்த முப்பது இடங்களில் பெற்ற வெற்றி கூட, காங்கிரஸ் கட்சியின் மீதான கோபத்தினால் மக்கள் அளித்த காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் தான் என்பதும் உண்மை.
          இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஊழல் எதிர்ப்பை மட்டுமே முழக்கமிட்டு தலைநகர் டெல்லியில், வெளிநாட்டுப் பணத்தை செலவு செய்து, கார்ப்போரேட் கம்பெனிகள் மற்றும் இந்திய - அந்நிய பெருமுதலாளிகளின் ஆதரவுடன் இரண்டு முறை உண்ணாவிரதமிருந்த ''ஊழலை ஒழிக்க ஆதாரம்'' எடுத்த அண்ணா ஹசாரே உடன் மேடையில் காட்சியளித்து, ஊடகங்களின் மூலம் மக்களின் மத்தியில் பிரபலமான கெஜ்ரிவால், ஹசாரேவை முந்திக்கொண்டு ''ஊழலை ஒழிக்கப்போகிறேன்'' என்று ''ஆம் ஆத்மி கட்சியை'' துவக்கி மக்களிடம் அறிமுகமே இல்லாத பலரையும் தேர்தல் களத்தில் இறக்கி 70 தொகுதிகளிலும் போட்டியிட்டார். உளவியல் ரீதியாக இந்திய மக்களை மிகவும் பாதித்த விஷயம் காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாக் கட்சியும் செய்த ஊழல் என்பது மட்டுமே மக்களின் மூளைகளில் பிரதானமாக ஆக்கிரமித்த ஒன்றாகிவிட்டது. ஊழலை மட்டுமே வைத்துக்கொண்டு மக்களை மூளைச் சலவை செய்து அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கெஜ்ரிவால் கனவுகண்டு களத்தில் இறங்கினார். ஆனால்  28 இடங்களிலேயே வெற்றி பெற முடிந்தது. இவருக்கு கிடைத்ததும் காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளே என்பதும் உண்மை.
          கெஜ்ரிவால் மிகவும் மிகவும் கெட்டிக்காரர். அனுபவமில்லாமலேயே மிகவும் தேர்ந்த அரசியல்வாதியை போல் நடந்துகொண்டிருக்கிறார். அண்ணா ஹசாரே ஏதோ  சிரமப்பட்டு உண்ணாவிரதமெல்லாம் இருந்து மக்கள் மத்தியில் ஒரு ''பரமாத்மா'' போல் காட்சி தந்து பிரபலமாகிக்கொண்டிருந்த கூழ்நிலையில், தான் ஒரு அரசியலில் குதித்து ஒரு கலக்கு கலக்கலாம் என்று ஹசாரே நினைத்துக்கொண்டிருக்கும் போதே அவரை முந்திக்கொண்டு ஊழல் எதிர்ப்பு கோஷத்தை யாரும் எதிர்பாராத விதமாக அரசியலில் தொபுக்கடீரென்று குதித்தார் இந்த குருவை மிஞ்சிய சிஷ்யன் கெஜ்ரிவால். ''வடை போச்சே'' என்று ஹசாரே கெஜ்ரிவாலை திட்டித்தீர்த்தார். சாபமிட்டார். தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு நான் ஆதரவு தரமாட்டேன் என்று சபதமிட்டார். சட்டமன்றத்தேர்தலில் கெஜ்ரிவால் 28 இடங்களே கிடைத்ததில் ஹசாரேக்கு மகிழ்ச்சி தான். நான் ஆதரவு கொடுத்திருந்தால் இன்னும் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்திருப்பார் என்று ஹசாரே கர்ஜித்தார். இதிலே என்னன்னா.... விதைத்தவன் ஒருத்தன் அறுவடை செய்தவன் வேறோருத்தனா போய்ட்டான் என்பது தான் உண்மை. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு கெஜ்ரிவால்  சொல்லுவாரு போலிருக்கு. அந்த அளவிற்கு தேர்ந்துவிட்டார்.
         ஆனால் இந்த டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவின் மூலம் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சியும் 36 இடங்களில் வெற்றி பெற்றால் தான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கமுடியும். ஆனால் இந்த தேர்தலில் டெல்லி மக்கள் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மையை தராதது என்பதிலிருந்து நாம் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். ''எங்களுக்கு எந்த ஒரு  கட்சியின் ஆட்சியும் வேண்டாம்'' என்று ''NOTA'' வை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
   # அப்படியிருக்க மக்களின் விருப்பத்திற்கு எதிராக கெஜ்ரிவால் ஆட்சியமைத்திருப்பது என்பதே ஒரு முரண்பாடு தான்.
              # அதுமட்டுமல்லாமல், ஊழல்கள் மலிந்த காங்கிரஸ் கட்சியே வேண்டாம் என்று தான் டெல்லி மக்கள் அக்கட்சியை தூக்கி எறிந்திருக்கிறார்கள். அப்படியிருக்கையில் மக்கள்
தூக்கி எறிந்த கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருப்பது என்பது இன்னொரு முரண்பாடு.
          # காங்கிரஸ் கட்சி செய்த ஊழலைப்பார்த்து தான் ஊழலை ஒழிக்கபோறேன்னு கட்சியை ஆரம்பித்து மக்களிடம் ஒட்டு கேட்டு வந்தார். இப்போது அதே காங்கிரஸ் கட்சியோடு கைகொர்த்திருப்பது மற்றுமொரு முரண்பாடு.
          # யாருக்குமே தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில் எண்ணிக்கை மட்டுமே உண்மையான ஜனநாயகமாக கருதமுடியாது. ஜனநாயகத்தில் இதுவே ஒரு முரண்பாடு தான்.

3 கருத்துகள்:

Jayadev Das சொன்னது…

\\ஊழலை மட்டுமே வைத்துக்கொண்டு மக்களை மூளைச் சலவை செய்து அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கெஜ்ரிவால் கனவுகண்டு களத்தில் இறங்கினார். ஆனால் 28 இடங்களிலேயே வெற்றி பெற முடிந்தது. இவருக்கு கிடைத்ததும் காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளே என்பதும் உண்மை.\\ காங்கிரஸ் BJP, இரண்தோடு போட்டியிட்டு 28 சீட்டுகளைப் பிடித்ததே பெரிய சாதனையாகவே எனக்குப் படுகிறது. இதே தமிழ் நாட்டில், ரெண்டு பெரிய கட்சிகளுமே ஊழலில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்றாலும், மாற்றி மாற்றி இவர்களையேதானே தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது?

\\ஆனால் இந்த தேர்தலில் டெல்லி மக்கள் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மையை தராதது என்பதிலிருந்து நாம் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். ''எங்களுக்கு எந்த ஒரு கட்சியின் ஆட்சியும் வேண்டாம்'' என்று ''NOTA'' வை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. \\ அதற்க்கு வாக்கு சீட்டிலேயே தெரிவித்திருக்கலாமே!! இரண்டு ஊழல் கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என்றே மக்கள் நினைக்கிறார்கள் என்பது எனது கருத்து!!

\\
# அதுமட்டுமல்லாமல், ஊழல்கள் மலிந்த காங்கிரஸ் கட்சியே வேண்டாம் என்று தான் டெல்லி மக்கள் அக்கட்சியை தூக்கி எறிந்திருக்கிறார்கள். அப்படியிருக்கையில் மக்கள்
தூக்கி எறிந்த கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருப்பது என்பது இன்னொரு முரண்பாடு.\\ ஆட்சியின் செயல்பாட்டை வைத்தே இதைத் தீர்மானிக்க வேண்டும்.

\\# காங்கிரஸ் கட்சி செய்த ஊழலைப்பார்த்து தான் ஊழலை ஒழிக்கபோறேன்னு கட்சியை ஆரம்பித்து மக்களிடம் ஒட்டு கேட்டு வந்தார். இப்போது அதே காங்கிரஸ் கட்சியோடு கைகொர்த்திருப்பது மற்றுமொரு முரண்பாடு.\\ அப்படியில்லாவிட்டால் உடனே இன்னொரு தேர்தல் தான் வழி.


\\ # யாருக்குமே தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில் எண்ணிக்கை மட்டுமே உண்மையான ஜனநாயகமாக கருதமுடியாது. ஜனநாயகத்தில் இதுவே ஒரு முரண்பாடு தான்.\\ இது உண்மை.

please remove \\நீங்கள் ஒரு ரோபோ இல்லையென நிரூபிக்கவும்\\.

ஜோதி சொன்னது…

\\ஆனால் இந்த தேர்தலில் டெல்லி மக்கள் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மையை தராதது என்பதிலிருந்து நாம் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். ''எங்களுக்கு எந்த ஒரு கட்சியின் ஆட்சியும் வேண்டாம்'' என்று ''NOTA'' வை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. \\ அதற்க்கு வாக்கு சீட்டிலேயே தெரிவித்திருக்கலாமே!! இரண்டு ஊழல் கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என்றே மக்கள் நினைக்கிறார்கள் என்பது எனது கருத்து!!\\
கடந்த ஆட்சிக்கு மாற்றாக தான்
அம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் பெரும்பான்மை கொடுக்காமல் மேலும் தனி ஒரு கட்சி ஆட்சி நடத்த தடை செய்திருப்பதன் மூலம் கட்சிகளுக்கு இடையே போட்டியை உருவாக்கி இருக்கிறார்கள் எந்த ஒரு சட்டத்தையும் ஆளும் கட்சிக்கு சாதகமாக பயன்படுத்தமுடியாமல் போகும் உண்மையில் மக்களுக்காக என்றால் எதிர்க்கும் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

வேகநரி சொன்னது…

முன்பு ஆட்சியில் இருந்த கட்சிக்கு ஒரு மாற்று வேண்டும் என்றே மக்கள் நினைக்கிறார்கள்.
//ஜோதி சொன்னது… கடந்த ஆட்சிக்கு மாற்றாக தான்//
அவர் சொன்னது சரியே.
முன்பு ஆட்சியில் இருந்த கட்சிக்கு ஒரு மாற்று வேண்டும் என்றே மக்கள் நினைக்கிறார்கள் என்பதே சரியானது.
கடந்த ஆட்சிக்கு மாற்றாக ஒரு கட்சியை தேர்ந்து எடுப்பதில் மக்களிடையே நிறையவே குழப்பங்கள் நிலவுகிறது என்பதையும் இந்த முடிவு வெளிபடுத்தியுள்ளது.