வெள்ளி, 6 டிசம்பர், 2013

திருடன் கையிலேயே சாவியை கொடுக்கும் மன்மோகன் அரசின் எஜமான விசுவாசம்...!

      
 
        ''ஆதார் அட்டையை'' பற்றி நாம் ஏற்கனவே சந்தேகித்தது போல் மத்திய அரசு ''ஆதார் அட்டை'' என்ற பெயரில் இந்திய குடிமக்களின் ரகசியத் தகவல்களையும், அவர்களின் கருவிழி மற்றும் கைரேகைகளையும் திரட்டி அமெரிக்காவின் கையில் ஒப்படைக்கும் இரகசிய உடன்பாட்டிற்கு மத்திய அரசு வந்திருப்பதாக திடுக்கிடும் செய்தி ஒன்று இப்போது வெளியே வந்திருக்கிறது. 
         ஏற்கனவே   அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் (என்.எஸ்.ஏ.) முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்கள் உலக நாடுகளையே அதிரவைத்தன. அமெரிக்க நாசகர அமைப்புகளான சி.ஐ.ஏ - புலனாய்வு நிறுவனமும், என்.எஸ்.ஏ - தேசிய பாதுகாப்பு அமைப்பும் அந்த நாட்டைச் சேர்ந்த பன்னாட்டுத் தொலைத்தொடர்பு நிறுவனங்களை பயன்படுத்தி பெரும்பாலான அண்டை  நாடுகளின்  ஆவணங்களை  திருடியுள்ளன என்ற ஸ்னோடென் வேல்லியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்திகளை அறிந்த ஏனைய நாடுகளெல்லாம் அமெரிக்க அரசிடம் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கும் இன்றைய சூழ்நிலையில், மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் அரசு மட்டும் எஜமான விசுவாசத்தோடு வாய் மூடி மவுனியாக இருந்தது மட்டுமல்லாமல்,  அமெரிக்க இலட்சணம் தெரிந்திருந்தும் இந்திய குடிமக்களின் தகவல்கள்  அனைத்தையும் ரொம்ப தாராளமாக தானாகவே ஒப்படைப்பது என்பது மத்திய அரசு தன்னுடைய ஒவ்வொரு குடிமக்களுக்கும் செய்கிற நம்பிக்கைத் துரோகம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. மத்திய அரசின் இந்த செயலை இந்திய மக்கள் அனைவரும் மிகக் கடுமையாக கண்டிக்கவேண்டும்.  

              இந்திய ஒருங்கிணைந்த அடையாள ஆணையம் (UIDAI) என்கிற ஆதார் அட்டை வழங்கும் இந்திய அரசு நிறுவனம், அமெரிக்காவின் உளவு ஸ்தாபனமான சிஐஏ-வுடன் தொடர்புடைய மோங்கோ டிபி (Mongo DB) என்றஅமெரிக்க நிறுவனத்துடன் கூட்டு வைத்திருக்கிறது என்று வெளியாகியுள்ள செய்தி என்பது இந்திய மக்கள் அனைவரும் வருத்தப்படவேண்டிய செய்தியாகும். இந்திய குடிமக்களை அமெரிக்காவின் அடிமைகளாக அடகுவைக்கும் மத்திய அரசின் சதி வேலையை பற்றி மக்கள் அறிந்துகொண்டால் கோபப்படுவார்களே - எதிர்ப்பார்களே  என்ற அச்சம் துளி  கூட இல்லாமல் மன்மோகன் அரசு மிகத் துணிச்சலாக செய்திருக்கும் காரியம் இது. இது திருடன் கையிலேயே சாவியை கொடுக்கும் முட்டாள்தனமான செயலாகும்.      
            இந்திய மக்களின் இரகசியங்களை அமெரிக்காவின் கைகளில் ஒப்படைத்திருக்கும் அந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு உடனடியாக நீக்கவேண்டும்.  ஆதார் அட்டை வழங்கும்  பணி என்பது இதுவரை சட்டப்பூர்வமாக நடைபெறவில்லை என்பது மட்டுமல்ல, அரசின் சலுகைகளை பெறுவதற்கும், வங்கி கணக்கு துவக்குவதற்கும், வங்கி கடன் பெறுவதற்கும், பள்ளி மாணவ - மாணவியர்களுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்று அறிவித்திருப்பதும் சட்டவிரோதம் ஆகும். எனவே ஆதார் அட்டை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்படவேண்டும். அதன் மூலம் ஆதார் அட்டையை  சட்டப்பூர்வமாக்கப்பட்டு, அது சம்பந்தமான எந்த நடவடிக்கைகளும் மக்கள் அறியும் வண்ணம் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும். குடிமக்களின் இரகசியங்களை  அண்டை நாடுகளோடு பரிமாற்றம் செய்துகொள்வது அல்லது ஒப்பந்தம் செய்துகொள்வது போன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்படவேண்டும். அதற்கு மத்திய அரசும் சட்டப்பூர்வமான உத்திரவாதமும் தரவேண்டும்.

கருத்துகள் இல்லை: