திரிபுரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரிபுரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

நாட்டிற்கே வழிகாட்டுகிறது திரிபுரா மாநில அரசு...!


ஒரு அரசாங்கம் எப்படிச் செயல்பட வேண்டும் 
என்று நாட்டிற்கே முன்னுதாரணமாக வழிகாட்டுகிறது 
தோழர். மாணிக் சர்க்கார்  தலைமையிலான் திரிபுரா மாநில அரசு...!

          அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்ற  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன சிறப்பு மாநாட்டில் (பிளீனத்தில்) திரிபுரா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு :
           இடது முன்னணி அரசாங்கத்தின் கீழ், வடகிழக்கில் உள்ள ஒரு சிறிய மாநிலமான திரிபுரா, பல்வேறு முனைகளிலும் சக்திவாய்ந்த முறையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இடது முன்னணி அரசாங்கம் தன்னுடைய மக்கள் ஆதரவு கொள்கைகள் மூலமாக, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியிருப்பது மட்டுமல்லாமல், மிகவும் குறைவான வள ஆதாரங்களே இருந்தபோதிலும் அதில்கூட மக்களுக்கு ஆதரவாக எந்தவிதமான மாற்றுக் கொள்கைகளைப் பின்பற்ற முடியும் என்பதைக் காட்டியிருக்கிறது. திரிபுரா மாநிலம் 1978இலிருந்து இடது முன்னணி அரசாங்கத்தைப் பெற்றிருக்கிறது. இடது முன்னணி அரசாங்கத்தின் முதல் இரு ஆட்சிக்காலத்தில், மாபெரும் இரு சாதனைகளை அது நடத்தி இருக்கிறது. நிலச்சீர்திருத்தங்களை அமல்படுத்தியதும், அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பழங்குடியின மக்களை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆறாவது அட்டவணையின்கீழ் திரிபுரா பழங்குடியினப் பகுதிகள் சுயாட்சி மாவட்டக் கவுன்சில் அமைத்ததுமே மேற்படி இரு பெரும் சாதனைகளாகும்.
              1988-93 ஆண்டு காலத்தில் தேர்தலில் மோசடி நடத்தி, ஓர் அரைப்பாசிச பயங்கர ஆட்சி (காங்கிரஸ் ஆட்சி) நடத்தப்பட்ட காலத்திற்குப்பின், நடைபெற்ற தேர்தலில் இடது முன்னணி மீண்டும் ஆட்சி அமைத்தது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் இடது முன்னணி மீது மக்கள் அளவிடற்கரிய நம்பிக்கைகளை வெளிப்படுத்தினார்கள். கடந்த 22 ஆண்டுகள் மாநிலத்தின் வளர்ச்சியில் அபரிமிதமான முன்னேற்றத்தை இடதுமுன்னணி அரசு ஏற்படுத்தி இருக்கிறது. முன்மாதிரி மாநிலம் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்து நின்று முறியடித்து முன்னேறிய முன்மாதிரியான மாநிலமாக திரிபுரா மாறி இருக்கிறது. ஒருகாலத்தில் ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்டுகளால் நிதிஉதவி மற்றும் ஆதரவுடன் தீவிரவாதிகளின் வன்முறைச் சம்பவங்கள் மாநிலத்தையே சிதைத்து சின்னாபின்னமாக்கி இருந்தது.
         அவற்றையெல்லாம் மக்களின் ஒற்றுமையுடன் உறுதியுடன் எதிர்த்து நின்று அமைதியை நிலைநிறுத்திய ஒரு முன்மாதிரியான மாநிலமாக உருவாகியிருக்கிறது. இத்தகைய அமைதி நிலைமையை நிர்வாக உறுதியால் மட்டும் எய்தியதாகக் கொள்ள முடியாது. மாறாக, மக்களை அரசியல் ரீதியாக அணி திரட்டியிருப்பதும் குறிப்பாக பழங்குடியினர் பகுதிகளில் வளர்ச்சி நடவடிக்கைகளை அமல்படுத்தி இருப்பதுமே காரணங்களாகும். சுயாட்சி மாவட்டக் கவுன்சிலுக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சிகள், பஞ்சாயத்துகள், கிராமக் குழுக்களிடையே அதிகாரங்களைப் பரவலாக்கியதன் மூலம் அரசியல் ஜனநாயகம் ஆழமாக வேரூன்றி இருப்பதும், வளர்ச்சி நடவடிக்கைகளில் மக்கள்ஆர்வத்துடன் பங்களிப்பினைச் செய்வதற்கு வழிவகுத்தது.

எழுத்தறிவில் சாதனை                  

         இடதுமுன்னணி அரசாங்கம் பல்வேறு முனைகளிலும் மகத்தான சாதனைகளைப் பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக, மனிதவள வளர்ச்சியில் அது மிகவும் உன்னதமான முறையில் அமைந்திருக்கிறது. நாட்டில் எழுத்தறிவு பெற்றோர் விகிதம் 97 சதவீதத்தை எட்டி, நாட்டில் உயர்ந்த அளவிற்கு கல்வியறிவு பெற்றோர் மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பெண்களில் எழுத்தறிவு பெற்றோர் விகிதம் 95.71 சதவீதமாகும். இலவச பாடப் புத்தகங்களுடன் பள்ளிக் கல்வியை கல்லூரி வரைக்கும் இலவசமாக்கி இருப்பதன் மூலம் திரிபுரா அனைவருக்கும் இடைநிலைக் கல்விவரை உத்தரவாதப்படுத்தியிருக்கிறது. 

மனிதவள வளர்ச்சி                   

         மனிதவள வளர்ச்சி குறித்த இதர அட்டவணைகளும் மக்களின் தரமான வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. குழந்தைகள் இறப்பு விகிதம் (ஐகேயவே ஆடிசவயடவைல) அகில இந்திய அளவில் 40 ஆக இருக்கும் அதே சமயத்தில், திரிபுராவில் அது 26 மட்டும்தான். பிறப்பு விகிதம் அகில இந்திய அளவில் 21.4 சதவீதமாக இருக்கக்கூடிய அதே சமயத்தில் திரிபுராவில் அது 13.7 சதவீதம் மட்டுமேயாகும். அதேபோன்று இறப்பு விகிதம் அகில இந்திய அளவில் 7 சதவீதமாக இருக்கக்கூடிய அதே சமயத்தில் திரிபுராவில் அது 4.7 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தபோதிலும் மாநிலத்தின் பூகோள அமைப்பு மிகவும் சிக்கலானதாக அமைந்துள்ள போதிலும், திரிபுரா இத்தகு சாதனைகளை எய்தி இருக்கிறது.

அனைவருக்கும் பொது விநியோகம்                 

          திரிபுரா, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்துக் குடும்பங்களையும் கொண்டுவந்து உணவுப் பாதுகாப்பை எய்தி இருக்கிறது. மக்கள் தொகையில் பெரும்பகுதியினருக்கு கிலோ ஒன்றிற்கு 2 ரூபாய் விலையில் அரிசி வழங்கப்படும் அதே சமயத்தில், இதரர்களுக்கும் அரிசி, வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கான விலைவிகிதத்தில் அளிக்கப்படுகிறது.கிராமப்புற வேலைத்திட்டத்தில் சாதனை திரிபுரா அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களின் மூலம் வேளாண்மை, காடு வளர்ப்பு, மீன்வளம், தோட்டக்கலை மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி முதலானவை அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. இத்துடன் திரிபுரா, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை அமல்படுத்துவதில் நாட்டிலேயே உயர்ந்தநிலையில் இருப்பதை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 2013-14ஆம் ஆண்டில், கிராமப்புற மக்களுக்கு வேலை அளித்த நாட்கள் அகில இந்திய அளவில் சராசரி 38 நாட்கள் மட்டுமே என்று இருக்கக்கூடிய அதே சமயத்தில், திரிபுராவில் அது 88 நாட்களாகும். நகர்ப்புற வேலைத்திட்டம் அறிமுகம் நாட்டிலேயே முதன்முதலாக நகர்ப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கும் குறைந்தபட்சம் 75 நாட்களுக்கு ஊதியத்துடன் வேலை அளிக்கப்பட்டிருக்கிறது.
    வன உரிமைகள் சட்டத்தின்கீழ் மக்களுக்கு நில உரிமை அளிக்கப்பட்டிருப்பதிலும் திரிபுரா உயர்ந்த இடத்தில் இருக்கிறது. 1 லட்சத்து 24 ஆயிரத்து 541 நபர்களுக்கு நிலப் பட்டாக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவர்களில் 99 சதவீதத்தினர் பழங்குடியினர். உள் கட்டமைப்பு விரிவாக்கம் கடும் சிரமங்கள் இருந்தபோதிலும், இடது முன்னணி அரசாங்கம் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கி இருக்கின்றது.
           மொத்தம் 8,313 மக்கள் வாழும் பகுதிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் மின்சாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. பாசனத்திற்குரிய நிலங்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமான அளவு பாசனவசதிகளைப் பெற்றிருக்கின்றன. முன்னெப்போதும் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு சாலைப்போக்குவரத்து வசதிகள் உள்கிராமங்கள் வரை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
               ஏழைகளின் அரசு மக்களின் வாழ்வாதாரங்களின் மீது நவீன தாராளமயக் கொள்கைகள் கடும் தாக்குதல்களைத் தொடுத்துள்ள நிலையில், இடது முன்னணி அரசாங்கம் அணிதிரட்டப்படாத ஏழைத் தொழிலாளர்கள் பக்கம் நின்று அவர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை விரிவாக்கி இருக்கிறது. 27 விதமான ஓய்வூதியத் திட்டங்கள் திரிபுராவில் வீட்டுவேலைகள் செய்யும் பெண் தொழிலாளர்கள், ஊனமுற்றோர், விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள், ரிக்ஷா இழுக்கும் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், மீனவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் நலம் பயக்கும் விதத்தில் 27 விதமான ஓய்வூதியத்திட்டங்கள் மாநில அரசால் அமல்படுத்தப் பட்டு வருகின்றன.
           அதுமட்டுமல்ல, திருநங்கையர் மற்றும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் ஓய்வூதியத் திட்டங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. தலித்துகள், இதர பிற்பட்ட வகுப்பினர் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 

உள்ளாட்சிகளில் சரிபாதி பெண்கள்                 

          உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 57 சதவீதம் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. பொது வாழ்வின் அனைத்து முனைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதையே இது பிரதிபலிக்கிறது. மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறந்த வாய்ப்புகளை அளித்திட இடது முன்னணி அரசாங்கம் திட்டமிட்டமுறையில் விடாது முயற்சிகளை மேற்கொண்டு வருவது அவர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

மக்கள் நலனுக்கான மாற்றுக்கொள்கைகள்                 

       அகில இந்திய அளவில் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதன் காரணமாக ஏற்பட்டுள்ள வரையறைகளுக்கு உட்பட்டும், ஏற்றத்தாழ்வான கூட்டாட்சி அமைப்பிலும் மற்றும் நிதி நிலைமை மிகவும் சுருங்கியநிலையில் இருந்தபோதிலும்கூட, இடது முன்னணி அரசாங்கம் தன்னுடைய மாற்றுக் கொள்கைகளின் அடிப்படையில் இவற்றை அளித்திட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கக்கூடிய விதத்தில் முன்வைத்துள்ள மக்கள் நலன் காக்கும் மாற்றுக்கொள்கைகளை முன்னெடுத்துச் சென்றிட திரிபுரா மாநில இடதுமுன்னணி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் உத்வேகம் அளிக்கக்கூடியவைகளாக அமைந்துள்ளன. சதி செய்யும் பிற்போக்கு சக்திகள்இருப்பினும் சுயதிருப்தி மனப்பான்மைக்கு இடம் அளித்திடவில்லை. திரிபுரா மாநிலத்தில் இத்தகைய அளப்பரிய முன்னேற்றத்திற்கு அடிப்படைக்காரணமாக விளங்கும் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினரல்லாதவர் இடையே நிகழும் ஒற்றுமையைக் குலைத்திட திரிபுராவிற்கு உள்ளேயும் வெளியேயும் இயங்கும் பிற்போக்கு சக்திகள் சமயம் பார்த்துக்கொண்டிருக்கின்றன. 
             எனவே, இத்தகைய சதிவேலைகள் எதுவரினும் அதனை உடனடியாகத் தடுத்துநிறுத்தக்கூடிய விதத்தில் மக்களை அணி திரட்டுவதில் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வாழும் திரிபுரா மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும், இடது முன்னணி மீதும் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்கள் உட்பட தொடர்ந்து நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அளவிடற்கரிய நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பிரதிபலித்துள்ளனர்.
               மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன சிறப்பு மாநாடு (பிளீனம்) திரிபுரா மக்கள் மற்றும் இடதுமுன்னணி அரசாங்கத்திற்குத் தன் மனமார்ந்த ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. நாட்டின் அனைத்துப்பகுதி மக்களுக்கும் இந்த சாதனைகளை கொண்டுசெல்லுமாறு நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிக் கிளைகளையும் கேட்டுக்கொள்கிறது. 
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நன்றி :
தீக்கதிர் 

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

இந்திய மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டும் திரிபுரா மாநிலம்...!

அறிவொளி பட்டியலில் திரிபுரா முதலிடத்தை பிடித்தது...!                              
        
              இந்திய அறிவொளி வளர்ச்சி பட்டியலில் திரிபுரா, கேரளாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனாலும் முழு கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலமாக அது மாறவில்லை. இன்றைய தினத்தில் திரிபுராவில் 94.65 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நூறு விழுக்காடு கல்வியறிவு என்பது எங்கள் இலக்கு. அதை விரைவில் நாங்கள் எட்டுவோம் என்று மிக நம்பிக்கையுடன் கூறுகிறார் திரிபுரா மாநிலத்தை வழிநடத்திச் செல்லும் இடது முன்னணியைச் சார்ந்த முதல்வர் மாணிக் சர்க்கார்.                                     
         உலக கல்வியறிவு தினத்தையொட்டி அகர்தலாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மாநில அறிவொளி இயக்கத்திற்கு அவர் நன்றி கூறியதுடன், மாநிலத்துக்கு பெருமை சேர்த்துத் தந்த இந்த பிரம்மாண்டமான இயக்கத்தில் தங்களது உடல் வருத்தங்களை பொருட்படுத்தாது பாடுபட்ட அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார். மாநிலத்தின் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் கிடைத்த மதிப்பீடுகளின் அடிப்படையில் அவர் மாநிலத்தின் அறிவொளி வளர்ச்சி 94.65 விழுக்காட்டை எட்டியது என்ற அறிவிப்பை கூட்டத்தில் வெளியிட்டார்.
            இந்த அருமையான தருணத்தில் மாநிலத்தை முழுகல்வியறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் சில பிரிவு மக்களை, குறிப்பாக மூத்த குடிமக்களை எங்களால் எட்ட முடியவில்லை என்று அறிவொளி இயக்க அதிகாரி வருத்தப்பட்டார். எஞ்சியுள்ள 5.35 விழுக்காடு மக்களுக்கும் கல்வியறிவு அளிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன என்றும் அவர் கூறினார். சுமார் 38 லட்சம் மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் முழுவெற்றி அடைவோம் என்றும் அவர் உறுதிபடக்கூறினார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் அதிகபட்ச கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் பட்டியலில் திரிபுரா நான்காவது இடத்தில் இருந்தது. 2011 புள்ளிவிவரப்படி திரிபுராவில் 87.75 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றிருந்தனர். பாதுகாப்பு படையினர் ஆயுதமேந்திய கலவரக்காரர்களைக் கட்டுக்குள் கொண்டு வந்த பின் அறிவொளி இயக்கத்தினரால் தொலைதூர மலைப்பகுதி மக்களை அடைய முடிந்தது. அதன் பலனாக அப்பகுதிகளில் அறிவொளி இயக்க வேலைகள் சிறப்பாக நடந்தன. மிசோரமில் கல்வியறிவு வளர்ச்சி 88.80 விழுக்காடு என்றும் கேரளாவில் இது 93.91 விழுக்காடு என்றும் திரிபுரா அரசு அதிகாரிகள் கூறினர்.
          2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திரிபுரா கல்வியறிவு வளர்ச்சியில் பன்னிரண்டாம் இடத்தில் இருந்தது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது திரிபுரா நான்காவது இடத்துக்கு முன்னேறியது என்றும் அவர் கூட்டத்தில் கூறினார். 2011 கணக்கெடுப்பில் திரிபுரா 87.75 விழுக்காட்டை அடைந்த பின்பு, ஆகஸ்ட் 2012, அரசு எட்டு மாவட்ட ஆட்சியாளர்களைக் கொண்டு ஒரு ஆய்வை நடத்தியது. 38 லட்சம் மக்கள் வாழும் மாநிலத்தில் ஐம்பது வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களும் அடங்கிய 1.31 லட்சம் மக்கள் மட்டுமே கல்வியறிவு பெறாதவர்கள் என்று தெரியவந்தது என்று மாணிக் சர்க்கார் கூறினார். ஆகஸ்ட் 10 முதல் 25 தேதிவரை கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்ட இந்திய புள்ளிவிவர நிறுவனத்தின் (ஐஎஸ்ஐ) தலைமையில் புதிதாக கல்வியறிவு பெற்றவர்கள் பற்றிய இறுதி மதிப்பீடு நடத்தப்பட்டது. ஐஎஸ்ஐ இடைக்கால அறிக்கையின்படி மாநிலத்தின் கல்வியறிவு 94.65 விழுக்காட்டை எட்டியுள்ளது தெரியவந்துள்ளது. ஐஎஸ்ஐ இறுதி அறிக்கை கிடைக்கும் போது மாநிலம் 96 விழுக்காட்டை எட்டியிருக்கும் என்று முதல்வர் தெரிவித்தார். கிராம பஞ்சாயத்து, கிராம சபைகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், உள்ளூர் மன்றங்கள் ஆகியவை முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான மாநில அறிவொளி இயக்கத்தின் மேற்பார்வையில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டதால் திரிபுரா இச்சாதனையை அடைய முடிந்தது. திரிபுராவில் ஆண்களை விட பெண்களின் கல்வியறிவு வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் திலிப் அச்சர்ஜீ கூறினார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பெண்களின் கல்வியறிவு 64.91 விழுக்காடாக இருந்தது.
                  2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் இது 83.15 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது 18.24 விழுக்காடு உயர்வாகும். ஆண்கள் மத்தியில் இந்த உயர்வு 11.18 விழுக்காடுதான். ஆண்கள் மத்தியில் 2001ல் 81 விழுக்காடாக இருந்த கல்வியறிவு 92.18 விழுக்காடாக உயர்ந்தது என்றும் அவர் கூறினார். இடது முன்னணி அரசின் திட்டங்களும் இதற்கு முன்னோடியாக இருந்தன. மாநிலத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகள் அனைவருக்கும் இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல் படிக்கும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்குஆண்டுதோறும் ரூ.1718ம், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1485ம் வழங்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு முறையே ரூ.856ம், ரூ.645ம் வழங்கப்படுகிறது. அதேபோல் கலைப்பிரிவு மாணவர்களுக்கு முறையே ரூ.855ம், ரூ.706ம் வழங்கப்படுகிறது. இதுபோன்ற முனைப்புகளை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.

வெள்ளி, 19 அக்டோபர், 2012

அப்பழுக்கற்ற மனிதர் - இப்படியும் ஒரு மனிதர் இந்தியாவிலா...?

           இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவிற்கு திரிபுரா முதலமைச்சர் மாணிக்சர்க்கார் விளங்குகிறார். ஊழல்மயமான இக்காலச் சூழ்நிலையில் தான் அணிந்துள்ள வெள்ளை நிற குர்தாவைப்போல் அப்பழுக்கற்ற மனிதராக திகழ்கிறார் மாணிக்சர்க்கார். இவருக்கு சொந்தமாக வீடு கிடையாது. கார் கிடையாது. குறிப்பிடத் தக்க அளவிற்கு வங்கியில் இருப்பு ஏதுமில்லை. பாரத ஸ்டேட் வங்கியில் இவருடைய கணக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதியன்று இருப்பில் இருந்த தொகை ரூ.6,500 மட்டுமே! இவர் தனது சம்பளம் ரூ.12,500 - ஐ தனது கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு கொடுத்துவிடுகிறார். பின்னர் அக்கட்சியிடமிருந்து தனக்காக மாதம் ரூ.5000 மட்டும் திரும்ப பெற்றுக்கொள்கிறார். முதல்வராக உள்ள ஒருவருக்கு இந்த தொகை எப்படி போதும் என்று வினா எழுப்பினால், தனது மனைவியின் மாதாந்திர ஓய்வூதியமே தங்கள் இருவருக்கும் போதுமானது என்றும், தனக்கு ஒரு நாள் தேவை என்பது ஒரு பாக்கெட் சார்மினார் சிகரெட் என்கிறார்.
             இவருக்கு பிடித்தமான ரசமாலவும் முந்திரியுமே இவருடைய காலை உணவாகும். இவருக்கு பீம்சென் ஜோஷியின் இசை மிகவும் பிடிக்கும். தினசரி காலை 10 மணிக்கு அரசு தமக்கு அளித்த காரில் அலுவலகத்திற்கு செல்கிறார். னது மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யாவைக் கூட இந்த அரசு வாகனத்தில் அவர் ஏற்றுவது கிடையாது. அவரது மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யாவின் வயது 61. இவர் மத்திய சமூகநலத்துறை வாரியத்தில் பணியாற்றி கடந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். இவர் வாடகை ஆட்டோ ரிக்ஷாவில் இன்றும் அகர்தலா தெருக்களில் சென்றுவருவதைப் பார்க்கலாம். இவர் தனது கணவரின் அலுவலக விஷயங்களில் நேரிடையாகவோ மறைமுகமாகவோ தலையிடுவது கிடையாது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை மாணிக்சர்க்கார் முதலமைச்சராக இருந்த போது காலையில் நடைபயணம் மேற்கொள்ள விருப்பப்பட்டார். அவருடன் துணை சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் அவருடடைய பாதுகாப்பு கருதி, அவர் சக்கரம் அணிந்த காலணியை அணிந்துகொள்ள சொல்லும்படி அவரது மனைவியிடத்தில் தெரிவித்தனர். அவரது மனைவியும் தனது கணவருக்காக ஒரு காலணியை வாங்கிக்கொடுத்தார். இதுவே அவர் அரசு விவகாரங்களில் தலையிட்ட நிகழ்வாகும். இதை ஒப்புக்கொண்ட மாணிக்சர்க்கார் சக்கர காலணியில் செல்வது நடைபயணத்திற்கு ஒப்பாகாது என தெரிவித்து விட்டார். 
         2013 பிப்ரவரியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் இவரது நேர்மை இவருக்கு வெற்றி பெற்று தருமா ? இந்தியாவில் கம்யூனிசத்தின் இறுதித்தளமான திரிபுராவில் வெற்றி கிடைக்குமா என்று இவரிடம் வினவினால் இவர் கம்யூனிசத்தின் கடைசித்தளம் திரிபுரா என்பதை மறுக்கிறார். மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம். அங்கு 41 விழுக்காடு வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம் என்று உறுதியுடன் சொல்கிறார் திரிபுராவின் நீண்ட நாள் முதலமைச்சராக உள்ள மாணிக்சர்க்கார்.
1998 - ம் ஆண்டிலிருந்து முதலமைச்சராக உள்ள மாணிக்சர்க்கார் இந்தமுறை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சமீர்ராய் பர்மனின் மகன் சுதீப்ராய் பர்மனின் சவாலை எதிர் நோக்கியுள்ளார். 
             சுதீப் திரிபுரா அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள 40,000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதையும், கடந்த 14 ஆண்டு காலமாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாமல் உள்ளதையும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார். மாணிக்சர்க்கரின் மனைவி காலிப்பணியிடங்கள் குறித்தும் வேலையின்மை குறித்தும் குறிப்பிடுகையில், இது திரிபுராவின் பிரச்சனை மட்டுமல்ல, இந்தியாவின் பிரச்சனையாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். திரிபுரா போன்ற ஊரக மாநிலங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குகின்ற கொள்கை ஏதும் மத்திய அரசிடம் இல்லாததால்தான் இந்த நிலைமை என்று சொல்லும் மாணிக்சர்க்கர், இருப்பினும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 20,000 பணியிடங்களை தமது அரசு உருவாக்கி கொடுத்துள்ளது என்று தெரிவிக்கிறார். இவரது நேர்மை குறித்து சுதீப் குறிப்பிடுகையில், எச்சரிக்கையுடன் திட்டமிட்டு நேர்மையாக மாணிக் சர்க்கார் உள்ளார் என்றும் இவரால் எப்படி 100 குர்தா பைஜாமா வாங்க முடிந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அது மட்டுமல்ல, அவரது ஓரா கண் கண்ணாடி ரூ.60,000 எனவும் அவரது காலணி ரூ.6,000 எனவும் குற்றம் சாட்டியுள்ளார். ஊழல் அமைச்சர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம், அவர்களை தவறு செய்ய அனுமதித்துவிட்டு, பின்னர் தனக்கு எதிராக அவர்கள் செயல்படாமல் பார்த்துக்கொள்ளும் நடவடிக்கை என்று சுதீப் தெரிவித்துள்ளார். இதற்கு மாணிக்சர்க்கார், தான் எப்பொழுதும் சுத்தமாக இருக்க ஆசைப்படுபவர் என்றும் ஆனால் அதற்காக அதிகமாக செலவு செய்பவன் கிடையாது என்றும் தனது கண் கண்ணாடியின் விலை ரூ.1800 என்றும், காலணி மிகவும் மலிவானது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தனது அமைச்சரவை சகாக்களின் மீது எதிர்க்கட்சியினர் ஊழல் புகார்களை சொல்லி வருகின்றனர் என்றும், இது குறித்து தக்க ஆதாரங்கள் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்க தயார் என்றும் கூறியுள்ளார். தனது அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப முடிந்தாலும் நேர்மை குறித்து எழுப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார்.
             மாணிக்சர்க்கார் குறித்து திரிபுரா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் குறிப்பிடுகையில், மாணிக்சர்க்கார் நேர்மையானவராக இருக்கலாம். ஆனால் உறுதியற்ற அரசியல்வாதி. தன்னை யாராவது மிரட்டுகிறார்கள் என்றால் தன்னுடைய சிறகுகளை மூடிக்கொள்வார் எனவும், தற்போது காங்கிரசுக்கு மாணிக்சர்க்காரை வீழ்த்த வாய்ப்பு இருந்தாலும் அதன் உட்பூசல்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். மாணிக்சர்க்கார் இது குறித்து குறிப்பிடுகையில், அதிகாரம் ஏது? அனைத்தும் மத்திய அரசிடம் இருக்கிறது. திரிபுரா போன்ற மாநிலங்கள் இதனால் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொன்றிற்கும் நாங்கள் போராட வேண்டியுள்ளது என்கிறார். மாணிக்சர்க்கார் கிரிக்கெட் பிரியர். இவர் கல்லூரியில் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி. முகமது அசாரூதீன் ஆகியோரின் விசிறி. தற்போது இந்திய அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள விராத் கோஹ்லி தனக்கும் பிடிக்கும் என்கிறார்.

நன்றி: “இந்திய டுடே” 10-10-2012