கமல்ஹாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கமல்ஹாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 நவம்பர், 2014

கலைஞானி கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம்...!


 கடிதம் எழுதியது : ப.கவிதா குமார்                    

அன்பான கமல்ஹாசன் அவர்களுக்கு,                        

வணக்கம்....!
          
          தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு அடுத்ததாக நடிப்பிற்கு இலக்கணம் என்றால் நீங்கள்தான் என தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகமே பேசி வருவதன் பின்னணியில் உங்கள் உழைப்பு இருக்கிறது. ஆறு வயதில் களத்தூர் கண்ணம்மாவில் துருதுருவெனத் துவங்கிய உங்கள் கலைப்பயணம், 60 வயது நிரம்பிய போதும் அப்படியே இருப்பதுதான் ஆச்சரியம். 1960-ஆம் ஆண்டு முதல் படத்திலேயே சிறந்த நட்சத்திரத்திற்கான தேசிய விருதை களத்தூர் கண்ணம்மா படத்தில் பெற்ற காரணத்தினாலோ என்னவோ, நான்கு முறை தேசிய விருதும், பதினெட்டு முறை ஃபிலிம்ஃபேர் விருதும் இன்று வரை ப்ரியமிக்க ஒரு குட்டி நாயைப் போலஉங்கள் பின்னாலேயே வந்து கொண்டிருக்கிறது.
           நடிகர், நடன அமைப்பாளர், கதாசிரியர், கவிஞர், பாடலாசிரியர், இயக்குநர் என அத்தனை அவதாரங்களையும் எடுத்துள்ள தாங்கள் பரமக்குடியைச் சேர்ந்த ஒரு சுதந்திரப்போராட்டவீரரின் மகன் என்ற பெருமிதத்துடனே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 
         1996ம் ஆண்டு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்ததனம் என்ற சிறுமியை ஆசிரியர் அடித்ததில் ஒரு கண்ணை இழந்தார். அப்போது அச்சிறுமியின் கண் சிகிச்சைக்காக நிதியளித்ததுடன், உங்கள் உள்ளக் கிடக்கையை ஒரு கவிதையாக்கித் தந்தீர்கள்.
“தேடித் தேடி மருத்துவம் செய்தும்
மாறாது இந்த சாதி சுரம்கேடிகள்
ஆயிரம் கூட்டணி சேர்ந்துகேட்டில் வந்து முடிந்தது காண் !
காவியும் நாமமும் குடுமியும் கோசமும்கண்டு
மயங்கும் மந்தைகளாய்ஆகிப் போனதில் வந்த விளைவுகள்
சொல்லிப் புரியும் வேளையிலே
ஆரிய வேடத்தை திராவிடன் பூண்டதில்
காரியம் கெட்டுப் போனது காண் !
ஓசையும் பூசையும் பார்பனன் சொல்படி
ஆயிரம் ஆண்டுகள் செய்ததனால்ஆகமம் பழகிப் போனது காண் !
அன்றொரு பெரியவர் சாடிய சாடலில்
காவியின் வண்ணம் சற்றே மாறிகருப்பாய் சிவப்பாய் திரியுது காண் !
சாதியும் சாமியும் சாராயம் போல்சந்தைக் கடையில் விற்குது காண் !
சர்கார் எத்தனை மாறி வந்தாலும்
மாறா வர்ணம் நாலும் காண் !
புத்தன் சொன்ன தம்மிம பதத்தில்பாதி மட்டுமே பிரபலம் காண் ! ’’
            சாதிவெறி குறித்து மிகச்சரியாகவே இந்தக்கவிதையில் பதிவு செய்தீர்கள். முற்போக்கு முகாமில் எப்போதும் இருப்பவர் எனக் கருதப்படும் நீங்கள், மதம்குறித்தும், சாதி குறித்தும் எந்த சமரசமின்றி கருத்தைப் பதிவுசெய்து வந்துள்ளீர்கள். சமீபத்தில் 60-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகள். நான் பேச வேண்டிய விஷயம் என்பது உங்களின் திரைவெளி குறித்ததல்ல. பொது வெளி குறித்து. அண்ணல் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ம் தேதி ‘தூய்மையான இந்தியா-2014’ என்ற திட்டத்தை தலைநகர் தில்லியில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.
        அவர் அந்த நாளைத் தேர்ந்தெடுத்ததிலேயே ஒரு அரசியல் இருக்கிறது. ஒருவரின் பிறப்பு குறித்துப் பேசப்படும் போது, இறப்பு குறித்தும் பேசப்படவேண்டும். காந்தியின் பிறந்த நாள் அன்று இந்தியா முழுவதும் நாதுராம் விநாயக் கோட்சே என்ற மதவெறியனின் துப்பாக்கித் தோட்டாவால் காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி மக்களிடையே எடுத்துச் செல்வதை மடைமாற்றம் செய்ய பிரதமர் நரேந்திரமோடி மிகச் சாதுர்யமாக அதேதேதியில், “ஸ்வச் பாரத்” என்று `ஹிந்தியில் அழைக்கப்படும், “தூய்மையான இந்தியா” என்பதைத் துவக்கி வைத்தார். அந்த உண்மையை அறிவீர்களா கலைஞானி? இந்தத் திட்டம் குறித்து உங்களிடம் நான் கேள்வி எழுப்புவதற்குக் காரணமிருக்கிறது. இந்தத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களான 9 பேருக்கு அழைப்பு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்தார்.
         அந்த 9 பேரில் நீங்களும் ஒருவர்! அவரின் அழைப்பை ஏற்று தங்கள் பிறந்த நாளையொட்டி தாம்பரம்- வேளச்சேரி முதன்மை சாலையில் உள்ள ராஜ கீழ்ப்பாக்கம் சந்திப்பு மாடம்பாக்கம் ஏரி அருகில் தூய்மைப்பணி திட்டத்தைத் துவக்கி வைத்து நீங்கள் பேசிய பேச்சைக் குறிப்பிட வேண்டும் என விரும்புகிறேன். “வழக்கமாக எல்லாரும் பிறந்தநாள் விழாக்களை ‘கேக்’ வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். கேக் வெட்டி மகிழ்ச்சி அடைவதைவிட, குப்பையை வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதை பெருமையாக கருதுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது ’’ என்று பேசினீர்கள். ஒரு நாள் குப்பை வெட்டியதை பெருமை பொங்க பேசுகிறீர்கள்.
        அவ்வளவு பெருமை வாய்ந்த பேச்சுகளை அனைத்து ஊடகங்களும் வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டன. இந்தியாவில் மட்டும் பாதாளச் சாக்கடைகளில் இறங்கி விஷவாயுக்கள் தாக்கி இறப்பவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 22 ஆயிரம் பேர் என்று புள்ளி விபரத்தை இந்த ஊடகங்கள் ஏன் வெளியிடுவதில்லை...? என்று என்றாவது நீங்கள் நினைத்ததுண்டா கமல்...? ‘மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளக்கூடாது’ என்று உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தும், தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் இதனால் உயிரிழந்தோர் 800 பேர் என்றால், குப்பையை வெட்டி எப்படி பெருமையாகக் கொண்டாட முடியும்...? நாம் பெற்ற குழந்தையே மலங்கழித்தால் இரத்த சம்பந்தப்பட்ட உறவினர் ஒருவரே கூட அவற்றை அகற்ற முன் வரமாட் டார்கள்.
         ஆனால், செத்துப்போன எலிகள், பூனைகள், பிராணிகளின் தசைகள் மக்கிச் சிதைந்து அரைகுறையாக மிதந்து கொண்டிருக்கும் பாதாளச் சாக்கடையில், நகர மக்களின் மலமும் சிறுநீரும் அசுத்தங்களும் கரைந்து கூடியிருக்கும் பாதாளச் சாக்கடையில், அசுத்த நீரில் தலை நனைய உடல் நனைய, காது மூக்கு துவாரங்களிலும், வாயிலும் அசுத்த நீர் நுழைய, மூழ்கிச் சாகும் துப்புரவுத் தொழிலாளர்கள் அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்கிறார்களே, இதுவரை அவர்கள் குறித்து நீங்கள் கொண்ட கருத்துதான் என்ன...? இந்தியாவில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் 26 லட்சம் குடும்பங்கள் ஈடுபட்டிருப்பதாக மத்திய அரசின் புள்ளி விபரம் கூறுகிறது. இவர்களை மீட்பதற்கான வழிவகைகளை பற்றி “ஸ்வச் பாரத்” பேர்வழி நரேந்திரமோடி இதுவரை வாய்திறக்கவில்லையே.... ஏன்...?
        தூய்மை என்பது புறம் சார்ந்தது மட்டுமல்ல அகம் சார்ந்ததும்தான். இந்தியாவில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளுக்கு நடுவில் 32 குழந்தைகள் மட்டும் இறந்தே பிறக்கும் நிலை என்றால் எங்கே இருக்கிறது தூய்மை...? இந்தியாவில் ஆண்டுதோறும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரண்டு லட்சம் பேர் மடிகின்றனர். அசுத்தமான தண்ணீர், முறையான துப்புரவு வசதிகள் இல்லாமை ஆகிய காரணங்களால் உருவாகும் வயிற்றுப்போக்கு வியாதியால் தான் இந்த குழந்தைகள் மடிகின்றனர்.
            இவற்றில் பெரும்பாலும் தலித் மற்றும் பழங்குடி மக்களின் குழந்தைகளே அதிகம். அப்படியென்றால் மோடியின் தூய்மைத் திட்டம் யாருக்கானது...? கையால் மலம் அள்ளுதல் ஒரு தேசிய அவமானம் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறோம். கையால் மலம் அள்ளுவதையே ஆதரித்துப் பேசிய மோடியின் அழைப்பை ஏற்றுள்ள உங்களிடம் நான் கேட்பது, காந்தி வலியுறுத்தியது தூய்மையை மட்டும்தானா...? “மதம் அரசியலில் ஊடுருவக்கூடாது. அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூகவாழ்வின் விரிவான பகுதிகள், பண்பாடு ஆகியவற்றில் இருந்து மதம் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். இவை தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இந்திய மதச்சார்பின்மை என்ற பெயரில் இதை மறுப்பதானது. மதச்சார்பின்மையையே மறுப்பதாகும். மதச்சார்பற்ற அரசு என்றால், மதத்தை ஊக்குவிப்பதல்ல’’  என்று மகாத்மா காந்தி சொன்ன கருத்துக்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தானே அவரை ஆர்எஸ்எஸ் கூட்டம் பழிவாங்கியது. அப்படிப்பட்டவர்களின் தூய்மை செயல் திட்டத்தில் எப்படி சேர்ந்தீர்கள் கமல்....? “காவியும் நாமமும், குடுமியும் கோசமும் கண்டு மயங்கும் மந்தைகளாய்” நீங்கள் மாறமாட்டீர்கள் என்ற நட்புடனே இந்தக் கடிதம்.  நலமே விளையட்டும். 

என்றும் தங்களன்பான,

லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவன்.

நன்றி : தீக்கதிர்

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

மோடியுடன் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் நெத்தியடி....!

              

 
      எப்படியாவது பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்துவிடவேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கும் நரேந்திர மோடி மக்களை தன்  பக்கம் இழுத்து ஓட்டுக்களை பெறுவதற்கு வகைவகையான தில்லுமுல்லுகளை அரங்கேற்றிவருகிறார். ஏற்கனவே இந்தி நடிகர் அமிதாப்பச்சன் என்றோ பேசிய பழைய வீடியோவை தூசுத்தட்டி எடுத்து அதில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பேசுவது போல் பதிவு செய்து வெளியிட்டு அமிதாப்பச்சன் கையாலேயே மோடி குட்டு வாங்கியதை நாடு இப்போது தான் பார்த்தது. அதற்குள் இன்னொரு தில்லுமுல்லை அரங்கேற்றியிருக்கிறார். சமீபத்தில் ''இளந்தாமரை  மாநாட்டிற்கு'' கலந்து கொள்வதற்காக மோடி திருச்சி வந்தபோது அவரை வரவேற்கும் பெரும்பாலான போஸ்டர்களிலும், டிஜிட்டல் பேனர்களிலும் மோடியுடன் ரஜினிகாந்த் படத்தையும் இணைத்து போட்டிருந்தார்கள். இதைப்பார்த்த இளைஞர்கள் - இரசிகர்கள்  முகம் சுளித்தனர். ஆனால் இந்த போஸ்டர் குறித்து ரஜினிகாந்திடமிருந்து மட்டும் ஏனோ எந்தவிதமான கருத்தும் வரவில்லை. வழக்கம் போல் மவுனம் தான்.
         ஆனால் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசும் போது நடிகர் கமல்ஹாசன், திருச்சியில் நடைபெற்ற நரேந்திர மோடியின் கூட்டத்தின் போது ரஜினியின் போஸ்டரைப் பயன்படுத்தினார்கள். அதற்கு ரஜினி எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் நான் அப்படியில்லை. அதேப்போல் என்னுடைய போஸ்டரை பயன்படுத்த நிச்சயமாக அனுமதிக்கமாட்டேன் என்று ஆவேசமாக நெத்தியடிக் கொடுத்திருக்கிறார். உண்மையிலேயே காவிக்கூட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த கமல்ஹாசனின் துணிச்சலை  பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.
          


திங்கள், 18 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் : கமல்ஹாசன் எங்கள ஏமாத்திட்டாருங்க சார்...!

           நேற்று ஞாயிற்றுக்கிழமை மதிய வேளை கட்சி கிளைக்கூட்டம் முடித்துவிட்டு, வெளியே வீதியோரமாய் தோழர்களோடு பேசிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று யாரோ இரண்டு ''குடிமகன்கள்'' எங்களை நெருங்கி வந்தனர். அவர்கள் குடித்திருந்தாலும் நிதானமாகத்தான் இருந்தார்கள். வந்தவர்கள் எங்களிடம், '' சார்... கமல்ஹாசன் எங்கள ஏமாத்திட்டாருங்க சார்...அதைப் பத்தியும் நீங்க பேசுங்க சார்..."  என்று கொஞ்சம் கோபமும்,
ஏமாற்றமும் கலந்து கூறினார்கள். ''என்னாப்பா...  என்ன ஆச்சு...?"  என்று கேட்டோம். ''சார்... விசுவரூபம் ஒரு தமிழ்ப் படம்ன்னு கமல்ஹாசன் சொன்னார் சார்... ஆனா அது இங்கிலீஷ் படம் சார்... எங்களுக்கு ஒண்ணுமே புரியல சார்... பாதியிலேயே எழுந்து வந்துட்டோம் சார்... கமல்ஹாசன் எங்கள ஏமாத்திட்டாரு சார்... இதப் பத்தியும் நீங்க பேசுங்க சார்..." என்று அந்த இருவரில் ஒருத்தர் கோபமாகவே சொன்னார். இதைக் கேட்டதும் எங்களுக்கு சிரிக்கிறதா, அழுகிறதா என்றே தெரியவில்லை. ''இதுக்கெல்லாம் வந்துடுங்க...பெட்ரோல் விலை ஏறிப்போச்சி... போராட வாங்கன்னு கூப்பிட்டா வராதீங்க... '' என்று எங்களோடு இருந்த ஒரு தோழர் அவர்களிடம் கடுமையாக கடிந்து கொண்டார். ஆனால் அவர்களைப் பார்த்து எனக்கு கோபமே வரவில்லை. ஏனென்றால், அவர்களைப் பொருத்தவரை இதுவும் ஒரு பிரச்சனை தான். தமிழ் என்று வெளியே போஸ்டரில் போட்டிருப்பதை நம்பி உள்ளேப் போய் பார்த்தால், தமிழைத் தவிர வேறு மொழியில் இருந்தால் ஏமாற்றமாக தானே இருக்கும். டிக்கெட் காசை திரும்பக்கேட்டால் கூடத் தவறில்லை தான்.
       கலை - இலக்கியம் என்பது சாதாரண பாமரனையும் சென்றடைய வேண்டும். கலை - இலக்கியம் என்பது மக்களுக்காகவே. அந்த கலையும் இலக்கியமும் மக்களின் புரிதலுக்கு அந்நியப்பட்டுப்போனால் மக்கள் அவைகளை விட்டு விலகிச் சென்றுவிடுவார்கள் என்பதற்கு மேலே சொன்ன அந்த இருவரே சாட்சி என்பதை புரிந்து கொள்ளவேண்டும். கலைஞர்கள்  தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிற ஒரு களமாக திரைப்படம் இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட திறமைசாலிகளும், அறிவுஜீவிகளும் திரைப்படம் எடுப்பதற்கு முன்பு, திரைக்கு முன்னால்  உட்கார்ந்து கொண்டு  திரைப்படம் பார்க்கும் பாமரனை நினைத்துப் பார்த்து திரைப்படம் எடுக்கவேண்டும். இல்லையென்றால், அப்படிப்பட்ட கலைஞர்கள்  மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப்போவார்கள். சாதாரண பாமரனை நினைத்துப் திரைப்படம் எடுத்ததால் தான் எம்ஜியார்  இன்று வரை மக்களின் மனதில் நிற்கின்றார்.
        நடிகர் கமல்ஹாசன் பன்முகத்தன்மை வாய்ந்த ஒரு மகா கலைஞன் தான். அதில் மாற்றுக் கருத்து என்பதே இல்லை. அந்த திறமைகள் எல்லாம் பாமர மக்கள் புரிந்துகொள்ளும் படி இருத்தல் அவசியம். திரைப்படம் என்பது மக்கள் மொழியிலேயே இருந்தால் தான் அது வெற்றிபெறும்.

உறுத்தலும், மறுத்தலும்....

              நான் விஸ்வரூபம் படம் பார்த்தபோது எனக்கு விளங்கின இரண்டு விஷயங்கள். ஒன்று கடவுள் மறுத்தல் சம்பந்தமான வசனம். இன்னொன்று அமெரிக்க விசுவாச வசன உறுத்தல். வழக்கமாக கமல்ஹாசன் படத்தில் இடம்பெறும் கடவுள் மறுப்பு சம்பந்தமான வசனம் இதிலேயும் வருகிறது. அமெரிக்க போலீஸ் கமலையும், அவரது மனைவியையும் கைது செய்து விசாரணை நடத்துவார்கள். கமலின் மனைவி விசாரணையை பொறுத்துக்கொள்ள முடியாமல் சம்ஸ்கிருத மந்திரம் சொல்லுவார். என்னை திட்டுகிறாயா என்று அந்த பெண் போலீஸ் கேட்க, இல்லை கடவுளை கும்பிடுகிறேன்னு கதாநாயகி சொல்லுவார். அவர் எங்க கடவுளுக்கு நான்கு கைகள் இருக்கும் என்று சொல்லும் போது, அந்த பெண் போலீஸ் ''நாலு கை இருந்த எப்படி சிலுவையில் அறைவார்கள்'' என்று கேட்பார். அதற்கு அவர் ''இல்ல நாங்க கடல்ல போட்டுடுவோம்'' என்று சொல்லுவார். இந்த காட்சியின் போது மக்கள் ஒரு சலனமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.காரணம் அது ஆங்கில வசனம் என்பதால்.
             ஒரு காட்சியில் ''அமெரிக்ககாரன் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லமாட்டான்'' என்று வரும். கமலுக்கு ஏன் இந்த அமெரிக்க விசுவாசம்...? இந்த வசனம் அவரை அறியாமல் வந்திருக்கமுடியாது. எதற்காக இப்படி வசனத்தை திணிக்கவேண்டும் என்பது தான் திரைப்படத்தை பார்க்கும் போது ஒரு உறுத்தலான விஷயமாக பட்டது.
        மேலே சொன்ன  இரண்டும் விஸ்வரூபம் படத்தைப் பார்த்து என்னால் புரிந்துகொள்ள முடிந்த இரண்டு காட்சிகளும் வசனங்களும் மனதில் நின்றவைகள்.  

வியாழன், 31 ஜனவரி, 2013

கமல்ஹாசனின் சிந்தனையில் ஏனிந்த மாற்றம்...?

அ. குமரேசன்
பத்திரிகையாளர்  
 
    உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத ஒரு தகவல் இப்படிக் கூறுகிறது: ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் தொடர்பான வணிக பேரம் படியாததால், அது வேறு நிறுவனத்திற்குக் கைமாறியதால் ஏற்பட்ட ''ஆத்திரம்'' தான் தடையாகத் தொடங்கி தாக்குதல்களாகத் தொடர்கிறது.
             இது உண்மையெனில், தங்களது நியாயமான கவலையையும் கோபத்தையும் இப்படி வர்த்தகம் சார்ந்த, உள்நோக்க அரசியலுக்குப் பயன்படுத்துகிற ஆட்சிபீடத்தை வன்மையாகக் கண்டிக்க இஸ்லாமிய அமைப்புகள் முன்வர வேண்டும். இதற்கு உடன்படமாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்.
            ‘விஸ்வரூபம்’ எதிர்ப்பு இங்கே இஸ்லாமிய மக்களுக்கு எதிராகப் பகை வளர்க்கத் துடிப்போருக்கும் சாதகமாகியிருக்கிறது. நாளை இது, பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த சிலரது வெறித்தனம் பற்றிய திரைப்படம் ஒன்று வருமானால் அதற்கு எதிராக சூலாயுதம் தூக்க முகாந்திரம் அமைத்துக் கொடுக்கும். ‘ஆதிபகவன்’ என்ற பெயரே இந்துக்களைப் புண்படுத்துவதாகக்கூறி கிளம்பிவிட்டார்கள் என்பதைக் காணத் தவறக்கூடாது. ஏற்கெனவே ‘வாட்டர்,’ ‘ஃபயர்’ போன்ற படங்களின் மீதும், எம்.எப். உசேன் போன்ற கலைஞர்கள் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் நினைவுகூரப்பட வேண்டியவை.
              அடிப்படையில், ஒரு திரைப்டம் சரியானதா தவறானதா என்பதை மக்கள் பார்த்து முடிவு செய்கிற உரிமையை மதத்தின் பெயரால் தட்டிப்பறிப்பது ஜனநாயக விரோதம்.
         உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத இன்னொரு தகவல் இப்படிக் கூறுகிறது: திமுக தலைவர் முன்னிலையில் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் புகழ்பாடும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தபோது, அதில் பேசிய கமல்ஹாசன், ''வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வரவேண்டும்'' என்று கூறினாராம். அப்புறம் கலைஞர் பேசும்போது, சேலை கட்டிய தமிழரை விட வேட்டி கட்டிய தமிழர் பிரதமராவது நல்லது தான் என்ற விருப்பம் வெளிப்பட்டதாக விரிவாக்கம் செய்து தனது சொல்லாளுமையைக் காட்டியிருக்கிறார். ஆட்சியாளர்களின் ஆத்திரத்துக்கு இதுதான் அடிப்படைக் காரணம் என்கிறார்கள்.
             இது உண்மையெனில் இதுவும் கண்டனத்திற்கு உரியதே. 
ஆனால் கமல் சிந்தனை பற்றிய சில கேள்விகள் எழுகின்றன....!
 பெண் பிரதமராகக்கூடாது என்ற பொருளில் கமல் அப்படிப் பேசவில்லை, வட மாநிலங்களின் குர்தா, பஞ்சகட்சக்காரர்களுக்கு பதிலாக தமிழ்நாட்டின் வேட்டிக்காரர் பிரதமராக வர வேண்டும் என்ற கோணத்தில் தான் அவர் அப்படிப் பேசியதாகவே எடுத்துக்கொள்வோம். ஆனால், மக்களைக் கைவிட்டு பெருமுதலாளிகளுக்கு சேவையாற்றும் பொருளாதாரக் கொள்கைகளின் பிடிவாதப் பிரதிநிதியான ப. சிதம்பரம் போன்றவர்கள் வேட்டி கட்டிய தமிழர்கள் என்பதால் பிரதமராக வேண்டும் என்பது என்ன அரசியல் முதிர்ச்சியோ?
             தாக்குதல்களை எதிர்கொண்டு, தங்களது சம்பாத்தியத்தின் ஒரு கணிசமான பகுதியை ‘விஸ்வரூபம்’ பார்க்கச் செலவிடுகிற உழைப்பாளி தமிழர்களை வேட்டி கட்டிய பொருளாதார அடியாட்களிடம் பிடித்துக்கொடுக்கிற வேலை கமலுக்கு எதற்கு? ‘சேலை... வேட்டி...’ என்பது வெறும் அரசியல் நையாண்டி மட்டுமல்ல. சரியான நடவடிக்கை எடுக்காத ஆண்களைப் பார்த்து ‘வேட்டியை அவிழ்த்துவிட்டு சேலையைக் கட்டிக்கொள்’ என்று கேலியாய் அல்லது கோபமாய்ச் சொல்கிற பழக்கம் இங்கு உண்டு. பிடிக்காத செயலைச் செய்கிற தலைவர்கள், அதிகாரிகள் போன்றோருக்கு சேலை, வளையல் என்று அனுப்பி வைக்கப்படுவதுண்டு. பெண்ணை இழிவுபடுத்துகிற இந்தப் பண்பாட்டு ஒடுக்குமுறையோடு கமல் தன்னை அடையாளப்படு
த்திக்கொள்ளலாமா?
      எப்படிப்பார்த்தாலும் கமலின் பேச்சை ஆதரிக்க முடியவில்லை. அதற்காக மக்களின் திரைப்படத் தேர்வு உரிமையைத் தடுக்கிற அராஜக அரசியலையும் அனுமதிப்பதற்கில்லை.
       

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் கமல்ஹாசன்....!

      இலஞ்சம் வாங்குகிற அரசு அதிகாரிகளைப் பற்றிப்  படம் எடுத்தா, அதிகாரிங்க கோச்சிப்பாங்க..
     அதிகமா துட்டு வாங்குகிற டாக்டரைப் பற்றிப்  படம் எடுத்தா, டாக்டருங்க கோச்சிப்பாங்க..
                போலீஸ்காரர்களைப் பற்றிப் படம் எடுத்தா போலீஸ்காரங்க கோச்சிப்பாங்க...
                வக்கீலைப் பற்றிப் படம் எடுத்தா வக்கீலுங்க கோச்சிப்பாங்க...
          படத்தை DTH - ல திரையிடப்போகிறேன் சொன்னா தியேட்டர்காரங்க கோச்சிப்பாங்க...
            முஸ்லீம்  தீவிரவாதத்தைப் பற்றிப் படம் எடுத்தா ஜவஹிருல்லா கோச்சிப்பாரு...
            இந்து தீவிரவாதத்தைப் பற்றிப் படம் எடுத்தா இராமகோபாலன் கோச்சிப்பாரு...
           அமெரிக்க அட்டூழியங்களைப் பற்றிப் படம் எடுத்தா ஒபாமா கோச்சிப்பாரு..
          'இவிங்க' ஆட்சியில இருக்கும் போது 'அவருடைய' கூட்டத்தில கலந்துகிட்டா 'இவிங்க' கோச்சிப்பாங்க...
     'அவரு' ஆட்சியில இருக்கும் போது 'இவிங்க' கூட்டத்துல கலந்துகிட்டா 'அவரு' கோச்சிப்பாரு...
          அதுக்கு படம் எடுக்கிறதையே நிறுத்தி விடலாமே... 
அப்படித்தான் கமல்ஹாசனின் விஸ்வரூபம் ஒரு குறைப்பிரசவமாக போய்விட்டது.           
        ஆரம்பத்திலேயே DTH - இல் திரையிடுவதற்கு கமல்ஹாசன் முடிவெடுத்த போதே திரையரங்கு உரிமையாளர்கள் முரண்டு பிடித்தார்கள். பிறகு கமல்ஹாசன் தனது முடிவை மாற்றிக்கொண்டு திரையரங்கில் திரையிட முடிவெடுத்து தேதியும் குறித்தாகிவிட்டது. இவைகள் எல்லாமே இந்திய திரைப்பட தணிக்கை வாரியம் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கிய பின்னரே நடக்கும் விஷயங்கள் ஆகும். தணிக்கைக் குழுவே எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்காமல் சான்றிதழ் வழங்கி பச்சைக்கொடி காட்டிய பின்னர், ஒரு மாநில அரசு எப்படி இஸ்லாமிய அமைப்பைக் காரணம் காட்டி படத்தை முடக்கி வைக்கமுடியும். அதுவும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட மத்திய அரசின் நிறுவனம் ஒன்று சட்டத்தின் அடிப்படையில் படத்தை தணிக்கை செய்து திரையிட அனுமதியளித்தப் பிறகு அதை ஒரு மாநில அரசு தடை செய்வது என்பது சட்டவிரோதமானது.
            திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதியளித்த பிறகு, அந்த படத்தை திரையிடலாமா என்று யாரிடமும் உத்தரவு கேட்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் கமல்ஹாசன் இஸ்லாமிய அமைப்பினர் கேட்டுக்கொண்ட போது, பிடிவாதம் பிடிக்காமல் 100 பேர் அடங்கிய இஸ்லாமிய அமைப்பினர்களுக்கு படம் திரையிடுவதற்கு முன்பே தனியாக போட்டுக் காண்பித்தது என்பது கமல்ஹாசனின் பெருந்தன்மையையும், நேர்மையையும் காட்டுகின்றது. நல்ல வேளை ஒபாமா கோச்சிப்பாருன்னு அவருகிட்டேயும் உத்தரவு வாங்கனும்னு யாரும் சொல்லவில்லை. ரசிகர்கள் தான் திரைப்படத்தை பார்த்து சரியா தவறா என்பதை முடிவு செய்யவேண்டுமே தவிர, குறிப்பிட்ட 100 பேர்கள் அல்ல. அவர்கள் சொல்லுவது போல தமிழக அரசும் படத்தை தடை செய்தது என்பதும் ஜனநாயகம் அல்ல. இந்த விஷயத்தில் ஏதோ ''அரசியல் நெடி'' அடிப்பது போல் தெரிகிறது. ''நாரத வேலையை'' செய்தவர் சக்கர நாற்காலியில் நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டிருப்பது நமக்கு தெரிகிறது.
           தீவிரவாதத்தைப் பற்றிய மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க முடியாது. அது இந்துமத தீவிரவாதமானாலும், கிருத்துவமத தீவிரவாதமானாலும், இஸ்லாமிய தீவிரவாதமானாலும் அவைகள் அத்தனையும் எதிர்க்கவேண்டியவையே. எந்த மத தீவிரவாதத்தையும் அனுமதிக்க முடியாது. மனித இனத்தையே அழிக்கக்கூடிய - மனிதநேயத்தையே அழிக்கக்கூடிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட  வேண்டிய இந்த மதவாத அமைப்பினர் தீவிரவாதத்தை பற்றி திரைப்படத்தில் காட்டினால் அதை எதிர்ப்பது ஏன் ...? தீவிரவாதத்தினாலேயே  அழிக்கமுடியாத மதத்தை ஒரு திரைப்படத்தின் மூலம் அழித்துவிட முடியுமா...?
          திரைப்படம் என்பது ஒரு கற்பனை உலகம் தான். அது பலத்தரப்பட்ட தொழிலாளர்களை கொண்ட ஒரு கனவு தொழிற்சாலை. திரைப்படங்களை  ஒரு பொழுதுபோக்கு அம்சங்களாக மட்டுமே பார்க்கவேண்டும். அது ஒரு கலை. அதற்கு மதமோ... சாதியோ கிடையாது என்பதை சாதிய, மதவாத அமைப்பினர் புரிந்துகொள்ளவேண்டும்.
         இப்படியே போச்சினா.... படம் ஷூட்டிங் நடக்கும் போதே ஜவஹிருல்லாவையும், இராமகோபாலனையும் கூடவே வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்பார்கள்.            

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு : திரைப்பட கலைஞர் கமல்ஹாசன் எதிர்ப்பு!


வாலில் தீ....   

   ஆற்றுப் படுகையில் யாரோ முன் தோண்டி வைத்திருந்த ஊற்றுப் பள்ளத்தை ஒரு கடுங்கோடை மாலையில் தாகத்துடன் பார்த்தபடி நிற்கின்றேன், குப்புறப்படுத்துத் தோண்டி வைத்த குழியில் ஆசையாய் மேலும் ஐந்து கையளவு மண்ணைக் கோதி எடுக்கிறேன். மூன்றாம் கோதலில் என் புறங்கையில் சற்றே ஈரம், ஆறு, ஏழு, எட்டு, நீர் எட்டிப் பார்க்கிறது. நாவறண்ட என் முகத்தை பிம்பமாய்ப் பிடித்துக் காட்டி விட்டு தாகம் தணிக்கிறது. மூக்கில் ஒட்டிய ஈர மணலையும் முன் சட்டையில் ஒட்டிய காய்ந்த மணலையும் தட்டி விட்டு எழுகிறேன் கனவு கலைகிறது - அத்தனையும் கனவுதான். 
             பரமக்குடிக்கார ஆள் என் நினைவில் தற்போது இது நடக்க வாய்ப்பில்லை. பரமக்குடி கடக்கும் ஆற்றுப் படுகைக்கே மூடு விழா நடத்தத் துவங்கி பல மாமாங்கங்கள்  ஆகிவிட்டன. கரையோர வீடுகள் கள்ளழகர் போல் தம் களம் விட்டிரங்கி ஆற்றுப்படுகையில் புது மனைகள் புகுந்து தம் கழிவுகளை ஆற்றுப்படுகையில் கலக்க விட்டு ஓரிரு மாமாங்கங்கள் ஆகிவிட்டன. பன்றிகள் போல் மனிதர்கள் நாமும் சர்வாஹாரிகள் (omnivore) தான் எனினும் கழிவு பொருட்களையும் களை பொருட்களையும் நாம் நித உணவுகளாக்கிக் கொண்டு, திட உணவுகளை மெதுவாய் அப்புறப்படுத்தி வருகிறோம்.
                மேற்சொன்னவற்றிற்கும் வால் மார்ட் (Wall Mart) இந்தியாவிற்குள் நுழைவதற்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் கேட்டால் விவரம் சொல்ல நிறைய இந்தியர்கள் ஆதாரங்களோடு கடும் வாதம் புரியக் காத்திருக்கிறார்கள். தமிழகத்தின் நுழைவாயிலை தற்காலிகமாகத் தமிழக முதல்வர் தாழிட்டு வைத்திருக்கிறர். அதற்கு என் போன்ற ஆட்களின் தற்காலிகமான நன்றி தமிழக முதல்வருக்கு உரித்தாகும். இந்த வைராக்கியத்தை அவர் கடைப் பிடித்தால் எங்கள் நன்றி என்றென்றும் உண்டு. எதிர் காலச் சந்ததிகளின் விவரமறிந்த நன்றியும் கூட. 
            என்ன செய்து விடப் போகிறது இந்த வால் மார்ட் (Wall Mart)... இப்படிப் பதறுகிறீர்கள்...? என்று கேட்டால்; வால் மார்ட் (Wall Mart) என்ற அமெரிக்க பல் பொருளங்காடி கிராமவாசிகளையும் வாடிக்கையாளர்களாக்கிக் கொண்டு, அவர்களே அறியாமல் அவர்கள் பிடரியில் கையை வைத்துத் தள்ளிக் கொண்டு போய் தம் கல்லாவில் காசு போட வைக்கும். ஊற்று நீரை பாட்டிலில் நிரப்பி விற்கும். பதனி பருக ஆசை என்று என் போன்ற பழைய ஆட்களுக்கும் பாட்டிலில் அடைத்து விற்றாலும் விற்கும் வால் மார்ட் (Wall Mart) சொல்லமுடியாது. மீனுக்கு வாலும் பாம்புக்குத் தலையும் காட்டி மயக்கும் விளாங்குத்தனம் உள்ள அமெரிக்க வியாபாரக் குழுமங்கள் கிராம உத்யோக பவனின் காதியுக்திகளையும் அனுமதியின்றி அபகரித்துத் தனதாக்கிக் கொள்ளும். பனம்பழமும் கிழங்கும் என்னவென்றே தெரியாத இந்தியப் பிள்ளைகள் பிட்சாவே தன் பாரம்பரிய உணவு என மயங்கும். மயங்கட்டுமே, இதில் என்ன கெட்டுப் போகிறது? எனச் சிலர் கேட்கலாம்.
                யோசித்துப் பார்த்தால் ஒன்றும் கெட்டுப் போகாதுதான் .கம்யூனிசமோ ஜனநாயகமோ செத்தாலும் பனைமரம் உயிரோடு நிற்கும். ரோம் ராஜ்யம் துளிர்த்தெழும். பல்லாயிரம் வருடங்களுக்கும் முன்னால் மஹாவீரரின் முந்தைய  தீர்த்தங்கரர்களுக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுட்கு முன்னால் இந்நாட்டை வளமாக்கிய மண்ணும் மரமும் சரியாது சாயாது. ஆளெல்லாம் மடிந்து சில நூறு வருடங்களில் மீண்டும் உயிர்த்தெழுந்து தோப்புகள் சூழும். ஆற்றுப்படுகையில் இன்றைய வீடுகள் நிர்மூலமாகி மண்ணோடு கலந்து புதிய கரடு முரடான ஆற்றுப்படுகையாகும். இதெல்லாம் முன் வீடுகளும் மனிதர்களும் இருந்த இடம் என்று நினைவு கூற ஒரு மனம்கூட மிஞ்சாது.
நாம் அழிவோம்... உலகழியாது. நாம் உலகத்தின் அச்சாணியல்ல.
சுழலும் அச்சக்கரத்தின் சரித்திரப் புத்தகத்தின் நடுவில் ஒரு சிறிய வாக்கியத்தின் கடைசியில் வரும் முற்றுப் புள்ளி.

நன்றி : ஆனந்த விகடன்

வெள்ளி, 8 ஜூலை, 2011

கமல்ஹாசனின் சமூக பார்வை...

                 உறுப்பு தானங்கள் செய்வது அதிகரித்து வரும் வேளையில், அது பற்றிய படம் ஒன்றை எடுக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.
                 நாடு முழுவதும் உறுப்பு தானம் வழங்குவது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் உறுப்பு தானங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வந்துள்ளது. இந்திய நாட்டின் மாபெரும் தலைவரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்த்தவர்களில் ஒருவருமான ஜோதிபாசுவின் உடல்தானம், மேற்கு வங்கத்தில் பெரும் எழுச்சியையே ஏற்படுத்தியது.
               தமிழகத்தில் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும், நடைமுறையில் தானம் செய்வதில் தயக்கம் இருக்கவே செய்கிறது. அண்மையில் கேரளா சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன் உறுப்பு தானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ''டிராபிக்'' என்ற மலையாளப்படத்தின் கதை தனக்குப் பிடித்துள்ளது என்று கூறி அதன் உரிமையை வாங்கியுள்ளார்.
இந்தக் கதை தமிழில் திரைப்படமாக உருவாகப்போகிறது. அதைத் தயாரிக்க முடிவு செய்துள்ள கமல்ஹாசன், தான் நடிக்காமல் வேறு நடிகர்களை வைத்து அப்படத்தை உருவாக்க முடிவு செய்துள்ளார். உறுப்பு தானம் செய்ய வலியுறுத்தும் ஆர்வலர்கள் மத்தியில் இந்த செய்தி நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
                 கமல்ஹாசனின் சமூகப்பார்வையை ''ஆயுத எழுத்து'' நெஞ்சார பாராட்டுகிறது