வியாழன், 31 ஜனவரி, 2013

கமல்ஹாசனின் சிந்தனையில் ஏனிந்த மாற்றம்...?

அ. குமரேசன்
பத்திரிகையாளர்  
 
    உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத ஒரு தகவல் இப்படிக் கூறுகிறது: ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் தொடர்பான வணிக பேரம் படியாததால், அது வேறு நிறுவனத்திற்குக் கைமாறியதால் ஏற்பட்ட ''ஆத்திரம்'' தான் தடையாகத் தொடங்கி தாக்குதல்களாகத் தொடர்கிறது.
             இது உண்மையெனில், தங்களது நியாயமான கவலையையும் கோபத்தையும் இப்படி வர்த்தகம் சார்ந்த, உள்நோக்க அரசியலுக்குப் பயன்படுத்துகிற ஆட்சிபீடத்தை வன்மையாகக் கண்டிக்க இஸ்லாமிய அமைப்புகள் முன்வர வேண்டும். இதற்கு உடன்படமாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்.
            ‘விஸ்வரூபம்’ எதிர்ப்பு இங்கே இஸ்லாமிய மக்களுக்கு எதிராகப் பகை வளர்க்கத் துடிப்போருக்கும் சாதகமாகியிருக்கிறது. நாளை இது, பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த சிலரது வெறித்தனம் பற்றிய திரைப்படம் ஒன்று வருமானால் அதற்கு எதிராக சூலாயுதம் தூக்க முகாந்திரம் அமைத்துக் கொடுக்கும். ‘ஆதிபகவன்’ என்ற பெயரே இந்துக்களைப் புண்படுத்துவதாகக்கூறி கிளம்பிவிட்டார்கள் என்பதைக் காணத் தவறக்கூடாது. ஏற்கெனவே ‘வாட்டர்,’ ‘ஃபயர்’ போன்ற படங்களின் மீதும், எம்.எப். உசேன் போன்ற கலைஞர்கள் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் நினைவுகூரப்பட வேண்டியவை.
              அடிப்படையில், ஒரு திரைப்டம் சரியானதா தவறானதா என்பதை மக்கள் பார்த்து முடிவு செய்கிற உரிமையை மதத்தின் பெயரால் தட்டிப்பறிப்பது ஜனநாயக விரோதம்.
         உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத இன்னொரு தகவல் இப்படிக் கூறுகிறது: திமுக தலைவர் முன்னிலையில் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் புகழ்பாடும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தபோது, அதில் பேசிய கமல்ஹாசன், ''வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வரவேண்டும்'' என்று கூறினாராம். அப்புறம் கலைஞர் பேசும்போது, சேலை கட்டிய தமிழரை விட வேட்டி கட்டிய தமிழர் பிரதமராவது நல்லது தான் என்ற விருப்பம் வெளிப்பட்டதாக விரிவாக்கம் செய்து தனது சொல்லாளுமையைக் காட்டியிருக்கிறார். ஆட்சியாளர்களின் ஆத்திரத்துக்கு இதுதான் அடிப்படைக் காரணம் என்கிறார்கள்.
             இது உண்மையெனில் இதுவும் கண்டனத்திற்கு உரியதே. 
ஆனால் கமல் சிந்தனை பற்றிய சில கேள்விகள் எழுகின்றன....!
 பெண் பிரதமராகக்கூடாது என்ற பொருளில் கமல் அப்படிப் பேசவில்லை, வட மாநிலங்களின் குர்தா, பஞ்சகட்சக்காரர்களுக்கு பதிலாக தமிழ்நாட்டின் வேட்டிக்காரர் பிரதமராக வர வேண்டும் என்ற கோணத்தில் தான் அவர் அப்படிப் பேசியதாகவே எடுத்துக்கொள்வோம். ஆனால், மக்களைக் கைவிட்டு பெருமுதலாளிகளுக்கு சேவையாற்றும் பொருளாதாரக் கொள்கைகளின் பிடிவாதப் பிரதிநிதியான ப. சிதம்பரம் போன்றவர்கள் வேட்டி கட்டிய தமிழர்கள் என்பதால் பிரதமராக வேண்டும் என்பது என்ன அரசியல் முதிர்ச்சியோ?
             தாக்குதல்களை எதிர்கொண்டு, தங்களது சம்பாத்தியத்தின் ஒரு கணிசமான பகுதியை ‘விஸ்வரூபம்’ பார்க்கச் செலவிடுகிற உழைப்பாளி தமிழர்களை வேட்டி கட்டிய பொருளாதார அடியாட்களிடம் பிடித்துக்கொடுக்கிற வேலை கமலுக்கு எதற்கு? ‘சேலை... வேட்டி...’ என்பது வெறும் அரசியல் நையாண்டி மட்டுமல்ல. சரியான நடவடிக்கை எடுக்காத ஆண்களைப் பார்த்து ‘வேட்டியை அவிழ்த்துவிட்டு சேலையைக் கட்டிக்கொள்’ என்று கேலியாய் அல்லது கோபமாய்ச் சொல்கிற பழக்கம் இங்கு உண்டு. பிடிக்காத செயலைச் செய்கிற தலைவர்கள், அதிகாரிகள் போன்றோருக்கு சேலை, வளையல் என்று அனுப்பி வைக்கப்படுவதுண்டு. பெண்ணை இழிவுபடுத்துகிற இந்தப் பண்பாட்டு ஒடுக்குமுறையோடு கமல் தன்னை அடையாளப்படு
த்திக்கொள்ளலாமா?
      எப்படிப்பார்த்தாலும் கமலின் பேச்சை ஆதரிக்க முடியவில்லை. அதற்காக மக்களின் திரைப்படத் தேர்வு உரிமையைத் தடுக்கிற அராஜக அரசியலையும் அனுமதிப்பதற்கில்லை.
       

கருத்துகள் இல்லை: