புத்தாண்டையொட்டி ஒரே நாளில் அரசு மதுபானக்கடைகளில் 12 லட்சம் பீர்
பாட்டில்கள் விற்றுத்தீர்ந்தன என்றும், அவற்றின் மதிப்பு ரூ.95 கோடி
என்றும், கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக விற்பனையாகி உள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 800
மதுபானக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் தினமும் மது விற்பனை நன்றாக
உள்ளது. திருவிழா, பண்டிகைக் காலங்களில் மது விற்பனை அமோகமாக இருக்கிறது
என்றும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி நிச்சயமாக
புத்தாண்டின் பெருமமைக்குரியது அல்ல. புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே, மதுபானங்களுடன் ஆட்டம்-பாட்டம் போடுவது தான் என்ற நடைமுறை போக்கு சர்வசாதாரணமாகி வருவது மிகமிக ஆபத்தானது. இதனால், விபத்துகள் அதிகரிப்பது மட்டுமல்ல
சமூக விரோதிகளின் அட்டூழியங்களும் அதிகரிக்கின்றன.
குடிப்பழக்கத்திற்குப்
பலர் அடிமையாவது என்பது தனிப்பட்ட முறையில் அவர்களது உடல் நலக்கேடு,
குடும்பத்தினருக்கு சிக்கல் ஆகியவற்றோடு நிற்பதில்லை. அவர்களது செயல்திறன்
சீர்குலைவதால் நாட்டின் பொருளாதாரத்திலும் அவர்களது பங்களிப்பு இல்லாமல்
போகிறது. அத்துடன் போதைக்கு அடிமையாகிறார்கள். ஜனநாயக, சமூக இயக்கங்களிலிருந்தும் ஒதுங்கி தனிமைப்படுகிறார்கள். சுரண்டல், பிற்போக்கு
சக்திகளுக்கு இது வசதியாகிவிடுகிறது. ஆகவேதான் மக்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் அக்கறை கொண்டுள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்,
போதைக்கு அடிமையாகும் வாலிபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால்
அந்த பழக்கத்திலிருந்து விடுத்து நல்வழிக் கொண்டு வர வேண்டும் என்று தொடர்
பிரச்சாரம் செய்து வருகின்றனர். போதைப்பழக்கத்தில் இருந்து இளைஞர்களை
மீட்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அண்மையில் தமிழகத்தில்
4 ஆயிரம் கி.மீட்டருக்கு நடை பயணம் மேற்கொண்டனர்.
குடிப்பழக்கத்திற்கு
அடிமையாகிவிடும் ஆண்களால் பெண்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த குடும்பமே சித்ரவதைப்படுவதைத் தடுக்க அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் விழிப்புணர்வுப்
பிரச்சாரம் செய்து வருகிறது. பண்டிகைக் காலங்களில் மது விற்பனையை
அதிகரித்து, அரசுக்கு வருமானத்தை கூடுதலாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்
அரசு அதிகாரிகளே இலக்கு நிர்ணயம் செய்து குறியீடு வைப்பது ஆரோக்கியமான
செயல் அல்ல. அரசின் இந்த நடவடிக்கை ‘குடி குடியை கெடுக்கும், குடி பழக்கம்
உடல் நலத்தை அழிக்கும்’ என்ற வாசகத்திற்கு எதிரானதாக அமைந்துள்ளது. மது
விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ஆண்டு வருமானம் அதிகமாகிறது என்பதை
காட்டிலும் அந்த விற்பனையைக் குறைக்க நடவடிக்கைகள் எடுப்பதே மக்கள் நல
அரசுக்கு நல்லது. சமூகத்தின் மீது அக்கறைக்கொண்டுள்ள அரசியல்
இயக்கங்களோடும் ஜனநாயக அமைப்புகளோடும் அரசு இணைந்து சக்தி வாய்ந்த
விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கத்தை நடத்த வேண்டும். புத்தாண்டையொட்டி
இரண்டு நாட்களாவது கடைகளை மூட வேண்டும், விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும்
என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை பல அமைப்புகள் கூறியுள்ளன. இதற்காக சட்டம் கூட
கொண்டு வரவேண்டும். அப்போதுதான் நல்ல ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க
முடியும்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக