ஜி. ராமகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜி. ராமகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 ஜூலை, 2014

மகத்தான மாமனிதர் தோழர். என். சங்கரய்யா வாழ்க பல்லாண்டு...!


 கட்டுரையாளர் : தோழர். ஜி. ராமகிருஷ்ணன்                           
                                 மாநிலச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                
               ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவர் தோழர் என். சங்கரய்யா. அவருடைய தந்தை 1911-இல் பம்பாய் சென்று கொதிகலன் பொறியியல் படிப்பை முடித்து மதுரையில் அரசுத்துறை பொறியாளராகப் பணியாற்றியவர். 1922-இல் பிறந்த சங்கரய்யா வழக்குரைஞராக வர வேண்டுமென்பது தந்தையாரின் விருப்பம். அவரும், தாத்தாவும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.
             விடுதலைப்போராட்டம் வீறு கொண்டு எழுந்த நகரங்களில் ஒன்று மதுரை. அந்தப் போராட்டத்தில் மற்ற பகுதி மக்களோடு மாணவர்களும் ஈடுபட்டார்கள். அப்போது அந்நியர் ஆட்சியை எதிர்த்து அமெரிக்கன் கல்லூரி மாணவரான சங்கரய்யா அக்கல்லூரியில் கண்டனக் கூட்டம் நடத்தியதோடு, மதுரை நகரில் மாணவர்களைத் திரட்டி பெரும் ஊர்வலத்தையும் நடத்தினார். நாட்டின் அரசியல் விடுதலையோடு சமுதாய விடுதலையும் லட்சியமாகக் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். போராட்டத்தை ஒடுக்க முற்பட்ட அந்நியர் ஆட்சி நிர்வாகம் மாணவன் சங்கரய்யாவையும் கைது செய்தது. பட்டப்படிப்பின் இறுதியாண்டுத் தேர்வுக்கு 15 நாள்களே இருந்த நிலையில் கைது செய்யப்பட்ட சங்கரய்யா வேலூர் சிறையிலடைக்கப்பட்டார்.
           சிறையில் அவருக்கு அரசியல் படிப்பு தொடர்ந்தது. தோழர்கள் ப. ஜீவானந்தம், வ.சுப்பையா, பி. சீனிவாசராவ், எம்.ஆர். வெங்கட்ராமன், வி.பி. சிந்தன் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களுடன், காங்கிரஸ் தலைவர்களும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். வேலூர் சிறையில்தான் காமராஜரை முதன்முதலாக சங்கரய்யா சந்தித்தார்.
           18 மாதங்களுக்குப் பிறகு 1942 ஜூன் மாதம் தலைவர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். விடுதலையான பிறகு முழுநேரமாக சங்கரய்யா இயக்கப் பணிகளில் ஈடுபட்டார். பட்டப்படிப்பு இறுதித்தேர்வுக்கு சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட சங்கரய்யா தனது எதிர்காலம் பற்றி முடிவெடுக்க வேண்டிய அந்த முக்கியமான தருணத்தில், தனிப்பட்ட முறையில் தன்னுடைய சொந்தத் தேவைகள் பற்றிக் கவலைப்படாமல், நாட்டுக்கு சேவை செய்வதையே இலக்காகக் கொண்டு சிறை சென்றார்.
         1942-இல் காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாளையங்கோட்டையில் மாபெரும் மாணவர் பேரணி நடைபெற்றது. அதில் தமிழ்நாடு மாணவர் சங்க பொதுச் செயலாளரான சங்கரய்யாவும் கலந்து கொண்டார். பேரணியைத் தடுத்த காவல்துறையினர் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் சங்கரய்யாவும் படுகாயம் அடைந்தார். நெல்லை மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து 1942 ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் சங்கரய்யா கைது செய்யப்பட்டு கேரளத்தில் உள்ள கண்ணனூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1944-இல் அண்ணல் காந்தி விடுதலையானபோதுதான் சங்கரய்யாவும் மற்ற கம்யூனிஸ்ட் தலைவர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள். மீண்டும் கட்சிப்பணியில் ஈடுபட்டபோது, கம்யூனிஸ்ட் கட்சியில் அன்றைய மதுரை மாவட்ட (மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல்) செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
              1946-ஆம் ஆண்டு இந்தியாவை உலுக்கிய கடற்படை எழுச்சி பம்பாயில் தொடங்கி கல்கத்தா, சென்னை என்று அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது. கடற்படையிலிருந்த இந்திய வீரர்கள் அந்நிய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். அந்தப் போராட்டத்தை முறியடிக்க ஆங்கிலேய அரசு கடுமையான ஒடுக்குமுறையை ஏவிவிட்டது. இந்திய கடற்படை வீரர்களின் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவளித்தது. கடற்படை வீரர்களின் போராட்டத்தை ஆதரித்து மதுரையில் ஒரு பேரணியை சங்கரய்யா தலைமை தாங்கி நடத்தினார். பேரணியைக் கைவிடுமாறு அவரை காவல்துறை அதிகாரி துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். அதற்கெல்லாம் சங்கரய்யா பணியவில்லை. மதுரையில் முன்னைக்காட்டிலும் சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. அதில் கம்யூனிஸ்ட்டுகள் பிரதானமான பாத்திரம் வகித்தனர்.
              இந்தப் பின்னணியில் தான் கம்யூனிஸ்ட்டுகள் மீது மதுரை சதி வழக்கு தொடுக்கப்பட்டது. தோழர்கள் பி. ராமமூர்த்தி, சங்கரய்யா, கே.டி.கே. தங்கமணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் 1946 டிசம்பரில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து, நாடு முழுவதும் மகிழ்ச்சியோடு சுதந்திரத்தை கொண்டாடத் தொடங்கிய 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவுதான் இந்தத் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
               அந்த வழக்கிலிருந்து விடுதலையான பிறகு செப்டம்பர் 18 அன்று கட்சி அலுவலகத்தில்  சங்கரய்யா ~ நவமணி திருமணம் பி. ராமமூர்த்தி தலைமையில் எளிமையாக நடைபெற்றது. இது சாதி மறுப்புத்திருமணம் மட்டுமல்ல, மத மறுப்புத் திருமணமும் கூட. ஆசிரியர் நவமணி பிராட்டஸ்டன்ட் கிறித்தவ குடும்பத்தைச் சார்ந்தவர். சங்கரய்யாவின் பெற்றோர்களுக்கு தொடக்கத்தில் இத்திருமணத்தை ஏற்பதில் தயக்கம் இருந்தாலும் அவருடைய உறுதியால் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டனர். சங்கரய்யா - நவமணி திருமணம் மட்டுமல்லாமல், அவர்களது பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கூட பெரும்பாலும் சாதி மறுப்புத் திருமணம் தான். ஆம், சங்கரய்யா வீட்டில் ஒரு சமத்துவபுரமே இருக்கிறது!
          1948-ஆம் ஆண்டு கல்கத்தாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் 2-ஆவது அகில இந்திய மாநாடு நடந்தது. மாநாடு முடிந்தவுடன் நேரு அரசு கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதித்து ஆணையிட்டது. கல்கத்தாவிலேயே பல தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக சங்கரய்யா, பயணத்தின்போது ஒரிசாவில் இறங்கி அங்கிருந்து சில நாள்களில் தமிழகம் வந்து சேர்ந்தார். கட்சியின் கட்டளையை ஏற்று, கைதாகாமல்  தலைமறைவாகவே இயக்கப் பணியாற்றி வந்தார். தலைமறைவாக இருந்துகொண்டு கட்சி வேலை செய்வது கடினமானது, ஆபத்து மிக்கது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, காவல்துறையினர் சங்கரய்யாவை கைது செய்தனர். பின்னர் நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் விடுதலையானதைத் தொடர்ந்து, 6 மாத சிறைவாசத்திற்குப் பிறகுதான் சங்கரய்யாவும் விடுவிக்கப்பட்டார்.
           அடுத்து நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட சங்கரய்யா, மாநில மையத்திலிருந்து செயல்படுவதற்காக குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார். இந்நிலையில், 1962ஆம் ஆண்டு தோழர் சங்கரய்யா மறுபடியும் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறைப்படுத்தப்பட்டார்.
            1964-ஆம் ஆண்டு கல்கத்தாவில் கட்சியினுடைய 7வது அகில இந்திய மாநாடு நடைபெற்று, அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. 1964 டிசம்பரில் கட்சியினுடைய மத்தியக்குழு கூட்டத்திற்குச் சென்றுவந்த  பி. ராமமூர்த்தி, சுர்ஜித், பசவபுன்னையா ஆகியோருடன், சங்கரய்யாவும் கைது செய்யப்பட்டார். 16 மாதங்களுக்குப் பிறகுதான் விடுதலை செய்யப்பட்டார்கள்.
           1967-இல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட சங்கரய்யா வெற்றிபெற்றார். 12 உறுப்பினர்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுவுக்கு சங்கரய்யாதான் தலைவர். சங்கரய்யா 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு செயலாற்றியிருக்கிறார்.
           தோழர் சங்கரய்யா சிறந்த பேச்சாளர். அவருடைய கணீர் என்ற பேச்சு எவரையும் சுண்டி இழுத்து உணர்வூட்டக்கூடியது. ஒருமுறை பொதுவாக பேச்சு வன்மையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர், உள்ளத்தில் உண்மை உண்டாயின், வாக்கினிலே ஒளி உண்டாகும் என்றார்.
             தன்னுடைய உடல்நலம் பாதித்ததால் மாநிலம் முழுவதும் சென்று சுறுசுறுப்பாக செயல்பட இயலாது என்று கூறி தன்னை மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று 2002ஆம் ஆண்டு அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அதன் பிறகும், இன்று வரையில் தன்னால் இயன்ற இயக்கப் பணியை தோழர் சங்கரய்யா நிறைவேற்றி வருகிறார்.

இன்று என். சங்கரய்யாவின் 93ஆவது பிறந்த நாள்.                    
 நன்றி :          
 தினமணி               

செவ்வாய், 7 ஜனவரி, 2014

மிஸ்டர் மன்மோகன்... தலைவலிக்கு மாற்று திருகுவலி அல்ல...!

  கட்டுரையாளர் : தோழர். ஜி. ராமகிருஷ்ணன்     
                                 தமிழ் மாநிலச்செயலாளர்,                  
                                 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                        
               பிரதமர் மன்மோகன் சிங் பொதுவாக பத்திரிகையாளர்களை சந்திப்பதே இல்லை. கடந்த பத்தாண்டுகால ஆட்சிக்காலத்தில் மூன்றுமுறை மட்டுமே பத்திரிகையாளர்களை அழைத்து பேசியுள்ளார்.                 அவருடைய பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் பிரதமராக மாட்டேன் என்று கூறியுள்ளதோடு அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு ஏற்பட்டதையே தமது பதவிக்காலத்தின் முக்கியமான தருணமாகவும், சாதனையாகவும் கருதுகிறேன் என்று திருவாய் மலர்ந்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1 அரசுக்கு இடதுசாரிக்கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்து வந்தன. குறைந்தபட்ச செயல்திட்டத்திற்கு மாறாக அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டில் மன்மோகன் சிங் அரசு கையெழுத்திட முயன்றதால் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக்கட்சிகள் வாபஸ்பெற்றன.
               நாட்டின் இறையாண்மைக்கும், சுயாதிபத்தியத்திற்கும் பேராபத்தை இந்த உடன்பாடு விளைவிக்கும் என்பதாலேயே இடதுசாரிக் கட்சிகள் இந்த முடிவை எடுத்தன. இது மிகவும் சரியான ஒன்று என்பதை காலம் நிரூபித்துள்ளது.அமெரிக்க நிறுவனங்கள் நிறுவும் அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் குறைந்தபட்ச இழப்பீடு வழங்குவதற்கான ஷரத்துகளைக் கூட உடன்பாட்டிலிருந்து நீக்க வேண்டுமென அமெரிக்க அரசு நிர்ப்பந்தம் செய்கிறது.
                      மன்மோகன் சிங் அரசும் இதற்கு வளைந்து கொடுத்தே வந்துள்ளது. இந்த உடன்பாடு ஏற்பட்ட பிறகுதான் நாட்டில் சமூக, பொருளாதார தொழில்நுட்பத்துறையில் வளர்ச்சி அதிகரித்தது என்று மன்மோகன்சிங் கூறியுள்ளார். ஆனால் உண்மையில் இந்தியாவின் சுயசார்புக்கு பல்வேறு வழிகளில் ஆபத்து ஏற்பட்டது இந்த உடன்பாடு எட்டப்பட்டபிறகு தான். குறிப்பாக சில்லரை வர்த்தகத்தில் கூட அந்நியரை அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
               அதுமட்டுமின்றி காப்பீட்டுத்துறை, வங்கி போன்ற கேந்திரமான துறைகளிலும் அந்நிய முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கமுதலாளிகள் வெளிப்படையாகவே மிரட்டுகின்றனர். நாட்டின் சமூகப் பொருளாதார தொழில்நுட்பத்துறைக்கு அமெரிக்கா எந்தவகையில் உதவியுள்ளது என்று விளக்கவில்லை பிரதமர். விளக்குவதற்கு ஒன்றுமில்லை என்பதுதான் இதற்கு காரணம்
       இடதுசாரிக்கட்சிகள் ஆதரவுடன் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்றவை நிறைவேற்றப்பட்டன. இன்றைக்கு இவற்றைத்தான் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு தன்னுடைய சாதனையாக கூறிக்கொள்கிறது.
             சுதந்திர இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர் மட்ட ஊழல்கள் மலிந்த ஆட்சியாக ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்தது. தமது அரசின் மீது ஊழல் புகார் கூறப்படுவதாகவும் 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த போதும் 2009 தேர்தலில் மீண்டும் மக்கள் வாக்களித்து ஐமுகூ ஆட்சி அமைந்தது என்றும் பிரதமர் கூறியுள்ளார். அலைக்கற்றை வரிசை ஊழலுக்கான அடித்தளம் முந்தைய பாஜக ஆட்சிக் காலத்திலேயே போடப்பட்டுவிட் டது.
             எனினும், 2009ம் ஆண்டிற்கு பிறகு தான் ஐமுகூ அரசின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து ஊர்வலம் போல அணிவகுத்தன என்பதை மறந்து விடமுடியாது. குறிப்பாக, மத்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை தலைமை அதிகாரி பல்வேறு முறைகேடுகளை வெளிக்கொணர்ந்தார்.
                 நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் பெருமளவு ஊழல் நடந்ததாக தகவல்கள் வெளிவந்தன. இதில், பிரதமர் அலுவலகமே நேரடியாக குற்றம் சாட்டப்பட்டது. ஐ.மு.கூ. - 2 ஆட்சி காலத்தில்தான் இயற்கை வளங்கள் பெருமளவு சூறையாடப்பட்டன என்பது நிதர்சனமான உண்மை. இந்த கொள்ளையை தொடரவேண்டும் என்பதற்காகவே பன்னாட்டு மற்றும் உள் நாட்டு முதலாளிகள் தாராளமயமாக்கல் கொள்கையைப் பின்பற்றும் மோடி பிரத மராக வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்து வருகின்றனர்.
           நரசிம்மராவ் பிரதமராகவும், இப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் நிதியமைச்சராகவும் இருந்த காலத்தில்தான் தாராளமயமாக்கல் கொள்கை எனும் நாசகர பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து வந்த ஆட்சிகள் இதே பாதையைத்தான் பின்பற்றின. இன்றைக்கு நாடு அனுபவித்துக் கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை போன்ற பிரச்சனைகளுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்குவது இந்தக் கொள்கை கள்தான்.
              ஆனால், பிரதமர் தனது பேட்டியில் இந்த கொள்கைகள் தொடரும் என்று கூறியுள்ளார். இதிலிருந்தே ஆட்சியாளர்கள் கடந்த கால அனுபவத்திலிருந்து எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. பிரதமர் பதவிக்கு தகுதியானவர் ராகுல்காந்தி என்றும் மன்மோகன்சிங் முன்மொழிந்துள்ளார். அவர் பேட்டியளித்ததன் நோக்கமே இதை கூறத்தான்.
                           இந்திய நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு மாறாக, பிரதமர் வேட்பாளர் மோடி என்று பாஜக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களுக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியும் புறப்பட்டிருப்பதையே இது காட்டுகிறது. மறுபுறத்தில், பிரதமர் வேட்பாளர் என்று பாஜகவால் பரிவட்டம் கட்டப்பட்டுள்ள நரேந்திரமோடி, மன்மோகன்சிங் பேட்டி குறித்து கருத்து தெரிவிக்கையில், நாட்டில் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்.
                     இதற்கு காரணம் பாஜகவும் ஆதரிக்கும் தாராளமயமாக்கல் கொள்கைத்தான். இந்திய விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்துள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென இடதுசாரிக்கட்சி கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை பற்றி வாய்திறக்க மோடி மறுக்கிறார். ஏனென்றால் பல்வேறு சந்தர்ப்பங்களில் விவசாயிகளுக்கு எதிரான கொள்கையை செயல்படுத்த காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு துணை நின்ற கட்சிதான் அது. பாஜக ஆட்சி க்கு வந்தாலும் இதே கொள்கைகளைத் தான் அவர்கள் தொடர்வார்கள்.
                அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட் டை நிறைவேற்ற கைதூக்கி ஆதரவு தெரிவித்த கட்சிதான் அது. இதை மறைக்கத்தான் கடந்த கால வரலாற்றுப் பெருமை என்று தங்களது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன் நிறுத்துகிறார் மோடி. ஒளரங்கசீப் ஆட்சிக்காலம் குறித்தெல்லாம் அவர் பேசுவது இதற்காகத்தான். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு விஷேச அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவை மறுபரிசீலனை செய்வோம் என்று கூறுவதன் மூலம் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை தீவிரப்படுத்தவே அந்தக் கட்சி முயல்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.காங்கிரசும், பாஜகவும் ஒன்றுக்கொன்று மாற்று அல்ல.
                தாராளமயமாக்கல் கொள்கையை தடம் மாறாமல் பின்பற்றுவதில் அவர்களுக்குள் அபூர்வ ஒற்றுமை உள்ளது. மோடி ஆட்சிக்கு வந்தால் பேரழிவு என்று மன்மோகன்சிங் கூறுகிறார். காங்கிரஸ் கட்சியால் பேரழிவு என்று மோடி கூறுகிறார். ஆனால், இந்த இரு கட்சிகளுமே நாட்டிற்கு பேரழிவை தரும் பாதையைத்தான் முன்நிறுத்துகின்றன. இந்த இரு பேரழிவு சக்திகளும் ஒருசேர முறியடிக்கப்பட வேண்டும். தலைவலிக்கு மாற்றாக திருகுவலியை ஏற்க முடியாது. காங்கிரசுக்கு மாற்றாக பாஜகவை ஏற்க முடியாது.
          இரு வலிகளுக்கும் நிவாரணம் தேடும் வகையில், மாற்று வழியை, மாற்றுக் கொள்கையை முன்நிறுத்துவதே தேசத்திற்கு இப்போதைய தேவையாகும். இந்த அடிப்படையில்தான் மதச்சார்பற்ற மாநிலக்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பெரும்பணியில் இடதுசாரிக்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
நன்றி:
 

செவ்வாய், 31 டிசம்பர், 2013

தலைமுறைகள் - அர்த்தமுள்ள திரைப்படம்...!

 விமர்சனம் : தோழர் ஜி. ராமகிருஷ்ணன்                                                  

               கடந்த டிசம்பர் 20ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘தலைமுறைகள்’ திரைப்படம் மூன்று தலைமுறைகள் பற்றிய கதை.தாத்தா, மகன், பேரன் ஆகிய மூன்று தலைமுறைகளுக்குள் இருக்கும் இடைவெளியையும், பிறகு மூன்று தலைமுறைகளும் ஒரு புள்ளியில் (கருத்தால்) இணைவதையும் அழகுற இயக்குநர் பாலுமகேந்திரா கையாண்டுள்ளார். பத்தாம்பசலித்தனமான நடைமுறையை கொண்ட தாத்தா, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு சென்னையில் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மகன், தமிழ் தெரியாத ஆங்கிலம் மட்டுமே தெரிந்த சென்னையில் பிறந்து வளரும் பேரன் ஆகிய மூன்று தலைமுறைகளை கொண்ட படம்.
        சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு தன்னை சந்திக்க வந்த மகனையும், மருமகளையும் கடுமையாக திட்டி விரட்டிவிடுகிறார். தாத்தாவிற்கு உடல்நலம் பாதித்த போது அவருக்கு உதவி செய்ய மகனும், மருமகளும், பேரனும் கிராமத்திற்கு வருகிறார்கள். தாத்தா தன்னுடைய மகன் மற்றும் மகள் வழி பேரக் குழந்தைகளுக்கு பிள்ளை என்ற சாதிய அடையாளத்தோடு தான் பெயர் வைத்தார். தன்னுடைய பேரன் ஆதித்யாவை அழைத்து ‘உன்னுடைய பெயர் ஆதித்யா அல்ல ஆதித்யாபிள்ளை’ எனக் கூறுகிறார். தாத்தாவினுடைய கிராம நண்பர் (கிறித்துவ பாதிரியார்) தாத்தவைச் சந்தித்து ‘இந்த சாதி மதமெல்லாம் நம்மோடு போகட்டுமே, ஏன் இன்றைய தலைமுறைக்கு கொண்டுட்டு போற’ என்று கூறியதை தாத்தா அசைபோடத் துவங்கிவிட்டார். ஒரு நாள் தன்னுடைய மருமகள் (கிறித்துவர்) 8 கி.மீட்டர் தூரம் நடந்து அடுத்த கிராமத்தில் உள்ள சர்ச்சுக்கு சென்று வருகிறார். தனக்கு எல்லா உதவிகளையும் செய்து வரும் மருமகள் மழை, வெயிலை பாராமல் 8 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று வருவதைப் பார்த்து, ஏம்மா ஏன் கஷ்டப்படுறே எனக் கேட்கிறார். அடுத்தநாள் பேரன் தன்னுடைய தாயிடம் ‘அம்மா தாத்தா பூஜை ரூம வந்து பாருங்க:’ என்று அழைக்கிறான்.
              இந்துக் கடவுளை வணங்கும் தாத்தா (சைவப்பிள்ளை) பூஜை அறையில் இந்துக் கடவுளுக்கு மத்தியில் ஏசுநாதர் படம் இருக்கிறது. இதைப் பார்த்த மருமகள் உணர்ச்சிவசப்படுகிறார்.கிராமத்தில் இருப்பவர்கள் தாத்தாவைச் சந்தித்து நம்ம ஊர்ல மருத்துவமனை இல்லையே என்று கேட்டதை அறிந்த மருமகள் அதே கிராமத்தில் ஒரு சிறிய மருத்துவமனையை துவக்குகிறார். ‘சென்னையிலிருக்கும் மருத்துவமனையை யார் பார்ப்பது, நீ சென்னைக்குத் தான் வர வேண்டும். பையன் சென்னையில் தான் சரியாக படிக்க முடியும், இங்கு படிப்பதற்கு வசதியில்லை’ என்று தனது கணவன் கூறியதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு மருமகள் கிராமத்திலேயே தங்கி கிராமத்து மக்களுக்கு மருத்துவ சிகிச்சையளிக்கிறார். மகனையும், அந்தப் பகுதியில் உள்ள தமிழ் வழி பள்ளியிலேயே சேர்க்க முடிவு செய்கிறார். இதைக் கண்ட தாத்தா நெகிழ்ந்து விடுகிறார். தாத்தாவிற்கும், பேரனுக்கும் இரண்டு தலைமுறை இடைவெளியாயிற்றே! தாத்தாவுக்கு ஆங்கிலம் தெரியாது, பேரனுக்கு தமிழ் தெரியாது. பேரனுக்கு தாத்தா தமிழ் கற்றுத் தர, தாத்தாவிற்கு பேரன் ஆங்கிலம் கற்றுத் தருகிறான்.
                   இந்தக் காட்சியெல்லாம் நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலுமகேந்திரா. சாதி, மத ஆச்சாரத்தோடு வாழ்க்கை நடத்திய தாத்தா நவீனமாகிறார். சாதி, மத வேறுபாடு கூடாது என்பதை எளிமையாக அனைவரும் ஏற்கும்படி அழகாக தாத்தா மூலம் இயக்குநர் வெளிப்படுத்துகிறார். பேரனிடம் உங்க அப்பா இந்து, உங்க அம்மா கிறிஸ்தவர், நீ யார்? என்று கேட்க, நான் ஆதி என்று மட்டும் பதில் சொல்ல வைத்திருப்பது அருமை.தாத்தா இறந்த பிறகு பேரன் ஆதித்யா வளர்ந்து பெரியவனாகி சென்னைக்குச் சென்று விடுகிறான். சென்னையில் தாத்தா, பேரன் உறவு குறித்து அவன் எழுதிய தமிழ்க் கவிதை நூலுக்கு விருது கிடைக்கிறது. விருதைப் பெற்றுக் கொண்ட ஆதித்யாவை பேசச் சொல்லுகிறார்கள். தாத்தா இறுதியாக பேரனுக்கு சொன்ன வார்த்தைகளை நினைவுப்படுத்தி பேரன் மேடையில் கண்ணீர் வடிக்கிறான். கடைசியாக இறப்பதற்கு முன்னதாக தாத்தா பேரனிடம் கூறியது, ‘ஆதி தமிழை மறந்திடாதே, தாத்தாவையும் மறந்திடாதே’திரைப்படத்தில் பாடல் இல்லை. ஆனால் இளையராஜாவின் பின்னணி இசை அருமை. இயக்குநர் பாலுமகேந்திரா தாத்தாவாக நடித்திருப்பது அபாரம். பாலுமகேந்திராவின் கேமராவின் கை வண்ணம் சொல்லத் தேவையில்லை.
              நுகர்வு கலாச்சாரம் அனைத்து துறை சார்ந்தவர்களையும், ஆட்டிப் படைக்கின்ற போது என்னுடைய படம் இப்படித் தான் இருக்கும். நான் பணம் சம்பாதிக்க படம் எடுக்க மாட்டேன் என்று தொடர்ந்து கூறி வருபவர் இயக்குநர் பாலு மகேந்திரா. அவருடைய சமீபத்திய படங்களில் ஏதாவது அர்த்தமுள்ள செய்தி ஒன்று இருக்கும். இன்றுள்ள சமூகத்தை ஒருபடி முன்னேற்ற அவரது படம் பயன்படும். அர்த்தமுள்ள படங்களை தொடர்ந்து எடுத்து வரும் பாலு மகேந்திராவின் கலைப் பணி தொடரட்டும். ஜாதியம் தகர்க்கும் தலைமுறைகள் வெற்றி பெறும்.
 நன்றி : 

சனி, 3 நவம்பர், 2012

கொள்ளைக்குத் துணைபோகும் கொள்கை...!

        "கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக அல்ல - கடந்த 15-20 ஆண்டுகளாகவே அமலாக்கப்பட்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கையினால் மக்களுக்குப் பலன் கிடைக்கும், நாடு வல்லரசாக மாறும்'' என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியிருக்கிறார். நிதியமைச்சரின் கூற்று உண்மைக்கு மூடுதிரை போடுவதாக உள்ளது.
        1991-ஆம் ஆண்டு துவங்கி மத்திய அரசு அமலாக்கிவரும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் ஆக்கிடுவதற்கே வழி வகுத்துள்ளது.
       ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையில் இமாலய இடைவெளியை உருவாக்கியுள்ளது. மேலும், நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட இக்காலத்தில் வரலாறு காணாத ஊழல்கள் நடந்தேறி வருகின்றன.
            இரண்டாண்டுகளுக்கு முன்புவரை விவசாயம், தொழில், சேவைத்துறை ஆகிய மூன்றும் சேர்ந்து நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார உற்பத்தி மதிப்பு 7-8 சதவிகிதம் வரை அதிகரித்தது. இந்த வளர்ச்சியைச் சுட்டிக்காட்டி, நாடு வல்லரசாகப் போகிறது என மார்தட்டிக் கொண்டார்கள். மொத்த உற்பத்தி அதிகரித்து வந்த இதே காலத்தில்தான் வறுமையில் வாடுவோரின் மொத்த எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது என்பதை புறம்தள்ளக் கூடாது.
         தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் அளித்துள்ள புள்ளிவிவரத்தின்படி 1993-1994-ஆம் ஆண்டில் கிராமப்புறத்தில் 59 சதவிகிதமாக இருந்த வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை 2009-2010-இல் 76 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
          நகர்ப்புறங்களில் வறுமையில் வாடுவோர் 1993-1994-இல் 57 சதவிகிதமாக இருந்தது.  2009-2010-இல் 73 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு 2,100 கலோரி சத்துள்ள உணவும், கிராமப்புறங்களில் 2,200 கலோரி சத்துள்ள உணவும் கிடைக்காதவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளதாகக் கணக்கிடப்படுகிறது. (இதற்கு முன்பு 2,400 கலோரி என்று இருந்ததை 2,200 கலோரி ஆக அரசு குறைத்திருக்கிறது)  வளர்ச்சி 8 சதவிகிதத்தை எட்டினாலும், அதன் பலன் சாதாரண மக்களுக்குக் கிடைக்காதது மட்டுமல்ல, வளர்ச்சியின் பலன் பன்னாட்டு முதலாளிகளுக்கும், உள்நாட்டுப் பெரிய முதலாளிகளுக்கும் கிடைத்துள்ளது என்பதே உண்மை.
             கடந்த 20 ஆண்டுகளில் இந்திய பெரிய வர்த்தக நிறுவனங்களின் சொத்து மதிப்பு வேகமாக பலமடங்கு உயர்ந்துள்ளது. 2003-இல் "டாலர் பில்லியனர்'களின் எண்ணிக்கை (ஒரு பில்லியன் டாலர் உத்தேச மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி) 13 ஆக இருந்ததிலிருந்து 2011-ல் 55 ஆக உயர்ந்துள்ளது.
           அரசின் கொள்கையும், இவர்களுக்கு அரசு அளித்த சலுகையும், இன்றைய பொருளாதார அமைப்பு முறையும்தான் டாலர் பில்லியனர்களின் சொத்து பலமடங்கு அதிகரிக்க வழி வகுத்துள்ளது.
           மேலும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்ட காலத்தில் ஆளும் அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள், அதிகாரிகள், கூட்டுக் கொள்ளையும் இத்தகைய போக்குக்குத் துணையாக இருந்துள்ளது.
             வறுமை ஒருபக்கமும், செழிப்பு மறுபக்கமும் உருவாவதற்கு இன்னொரு காரணம் தொழில் துறையில் நிகர மதிப்பு கூட்டலில் 1980-களில் ஊதியத்தின் பங்கு 30 சதவிகிதமாக இருந்தது 2010-இல் 10 சதவிகித அளவுக்குக் குறைந்து விட்டது.
             முறைசார் அல்லது நிரந்தரத்தன்மையுள்ள துறையில் வேலைவாய்ப்பு 1998-இல் 2.82 கோடியாக இருந்தது. 2008-இல் 2.75 கோடியாகக் குறைந்துள்ளது. நிரந்தரத்தன்மையுள்ள வேலைவாய்ப்பு குறைந்து, உத்தரவாதமும், சமூகப் பாதுகாப்பும் இல்லாத முறைசாராத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது நவீன தாராளமயப் பொருளாதார கொள்கையின் விளைவேயாகும்.
                   நாட்டின் ஒட்டுமொத்த உழைப்பாளர்கள் எண்ணிக்கையில் (45.6 கோடி) 86 சதவிகிதம் (39.3கோடி) முறைசாராத் தொழிலாளர்கள் தான். குழந்தைகள், முதியோர் ஆகிய பிரிவைத் தவிர்த்து மற்ற பகுதியினரில் ஒட்டுமொத்த உழைப்பாளர்கள் எண்ணிக்கை 45.6 கோடி. மேற்கண்ட முறைசாராத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் கடந்த 20 ஆண்டுகளில் உயரவில்லை. மாறாக, சரிந்துள்ளது.
               நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமலாக்கம் தொடங்கிய இக்காலத்தில், அரசு திட்டமிட்டு பன்னாட்டு முதலாளிகளுக்கும், உள்நாட்டுப் பெரிய முதலாளிகளுக்கும் மூலதனம் சேர்க்க, தங்கள் சொத்தைப் பெருக்கிக்கொள்ள சலுகை அளித்து வருகிறது.
         உண்மையில், சில அம்சங்களில் சலுகையல்ல - முறைகேடுகள் மூலமாக - மூலதனம் ஈட்ட முதலாளிகளுக்கு அரசு தன்னுடைய தவறான கொள்கை மூலம் துணை போயுள்ளது. இது நாட்டினுடைய இயற்கை வளத்தை முதலாளிகள் கொள்ளையடிக்கவே வழி வகுத்துள்ளது.
             "2ஜி'' அலைக்கற்றை ஊழலில், 1,76,000 கோடி ரூபாயும், நிலக்கரி ஒதுக்கீட்டில் 1,86,000 கோடி ரூபாயும், கர்நாடக மாநிலத்தில் இரும்புத்தாதுவை வெட்டியெடுத்து ஏற்றுமதி செய்ததன் மூலம் ரூ.50,000 கோடியும், தமிழகத்தில் உரிய அனுமதியின்றித் தனியார் கிரானைட் வெட்டி எடுத்து விற்பனை செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாயும் என இயற்கை வளங்களை முதலாளிகள் கொள்ளையடிக்க அனுமதிப்பதும் நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியே.
            ரிலையன்சுக்குச் சொந்தமான "சாசன் அல்ட்ரா' மெகா மின் திட்டத்துக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்ததில் மட்டும் அரசுக்கு ரூ.29,033 கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை (சி.ஏ.ஜி.) அதிகாரியின் அறிக்கை கூறுகிறது.  
           ப.சிதம்பரம் நிதியமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, அரசுக்கு "வோடாபோன்' நிறுவனம் செலுத்த வேண்டிய வரி ரூ.12,000 கோடியை வசூலிக்கத் தேவை இல்லை என அறிவித்துவிட்டார். (இத்தொகையை வசூலிக்க ஏற்கெனவே சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது).
              தில்லி சர்வதேச விமான நிலையக் கட்டுமானத்திற்கு ஜி.எம்.ஆர். என்ற தனியார்  நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்தது. விமான நிலையத்திற்கான மொத்த நிலத்தில் பெரும் பகுதியை ஜி.எம்.ஆர். கம்பெனிக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.100-க்கு குத்தகைக்கு விட்டது. ஆனால், ஜி.எம்.ஆர். கம்பெனி, "வளர்ச்சிக் கட்டணம்' என்ற பெயரில் பயணிகளிடமிருந்து ரூ.3,415 கோடி அளவுக்குச் சட்டவிரோதமாக வசூலித்துள்ளது!
          கிருஷ்ணா - கோதாவரி நதிப் படுகையில் இயற்கை எரிவாயு எடுப்பதை ரிலையன்ஸ் கம்பெனிக்கு அளித்ததையே மார்க்சிட் கட்சி ஆட்சேபித்தது. தான் உற்பத்தி செய்கிற எரிவாயுவுக்கு மிக அதிகமாக செலவாகிறது என்று கணக்கை மிகைப்படுத்திக் காட்டி, மிக அதிகபட்சமான விலையை நிர்ணயிக்க வேண்டுமென அரசை நிர்பந்தித்து, திட்டமிட்டு ஒரு விலை உயர்வை ஏற்படுத்தி ரிலையன்ஸ் நிறுவனம் கொள்ளை லாபம் அடித்தது.
        இதன் விளைவாக மின்சாரம் மற்றும் உர விலை அதிகரித்தது போன்ற அனைத்து அம்சங்கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்திருக்கிறார்கள்.
             மீண்டும் விலையை உயர்த்திட அரசுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் பல வகைகளில் நிர்பந்தம் கொடுத்து வருகிறது. ரிலையன்ஸ் கம்பெனி நிர்பந்தத்தை ஏற்று எரிவாயு விலையை உயர்த்தக் கூடாது என 2012 மே மாதத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தபன் சென், பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதினார்.
            விலையை உயர்த்த வேண்டும் என்று ரிலையன்ஸ் கம்பெனியின் கோரிக்கையை பெட்ரோலிய அமைச்சகம் நிராகரித்த பின்னரும்கூட ரிலையன்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சகத்திற்குப் பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது!
             2014 ஏப்ரல் வரையில் விலை உயர்வு இல்லை என்று ஏற்கெனவே அரசுக்கும் ரிலையன்ஸ்  கம்பெனிக்கும் ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு முரணாக விலையை உயர்த்த முடியாது என பெட்ரோலியத்துறை அமைச்சராக இதற்கு முன் பதவி வகித்த ஜெய்பால் ரெட்டி கூறியிருக்கிறார்.
              ரிலையன்ஸ்  கம்பெனியின் விலை உயர்வு கோரிக்கையை நிராகரித்த ஜெய்பால் ரெட்டியை மாற்றிவிட்டு வீரப்ப மொய்லியைப் பெட்ரோலியத்துறை அமைச்சராகக் கொண்டு வந்ததே ரிலையன்ஸ் கம்பெனியின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகத்தான் என பிரதமர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
         மத்திய அமைச்சரவை உருவாக்கத்தில் பெரு முதலாளிகளின் தலையீடு எந்த அளவுக்கு உள்ளது என்பதை முன்னர் வெளியான "நீரா ராடியா டேப்' உரையாடல் மூலம் புரிந்துகொள்ள முடியும்.
               இயற்கை வளங்களை அன்னியக் கம்பெனிகளும், உள்நாட்டுப் பெரு முதலாளிகளும் "கொள்ளை அடிக்க' அனுமதிப்பதையே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு "கொள்கை'யாகக் கொண்டு உள்ளது.
           இத்தகைய கொள்கையைத்தான், "கொஞ்சம் கொஞ்சமாக ஏழை,எளிய மக்களின் வறுமையைப் போக்கும்' என மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறுகிறார். இவர்களுடைய பார்வையில் அம்பானிபோன்ற பெரு முதலாளிகள் தான் "பரம ஏழைகள்'' போலும்.
 ரிலையனஸ் - க்கு சலுகை வழங்கத் துடிக்கும் இவர்கள்தான், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என அனைத்தின் விலைகளையும் ஏற்றி இந்திய மக்களின் தலையில் மேலும் மேலும் சுமையை ஏற்றுகிறார்கள்.
            "பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ, நாங்கள் சாகவோ''  என்று அன்று நாடு அடிமைப்பட்டிருந்தபோது மகாகவி பாரதி கண்டனக் குரல் எழுப்பினார். இன்று நாடு சுதந்திரம்பெற்ற பிறகும், நாட்டின் சொத்துகள் - கொள்கை என்ற பெயரில் - கொள்ளையடிக்கப்படும்போது பாரதியின் முழக்கத்தை மீண்டும் எழுப்பவேண்டிய தேவை உள்ளது.

நன்றி :
தினமணி / 03.11.2012