டி. கே. ரங்கராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டி. கே. ரங்கராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 நவம்பர், 2014

அவதூறுகளால் அசைக்க முடியாத பேரியக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...!



 கட்டுரையாளர் : தோழர். டி. கே. ரங்கராஜன், எம்.பி.,                   
                                      மத்தியக்குழு உறுப்பினர்,                 
                                      மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.                            
           மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டுக்கான தயாரிப்புப் பணிகள் முழு வீச்சுடன் துவங்கி நடந்துவருகின்றன. நாடு முழுவதும் கிளை மாநாடுகள் முடிந்து வட்ட, ஒன்றிய மாநாடுகள் நடந்து வருகின்றன. மாவட்ட, மாநில மாநாடுகள் 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும். இந்த மாநாடுகளில் கடந்த மூன்றாண்டுகளில் நடந்துள்ள பணிகள் குறித்தும், இன்றைய அரசியல் நிலவரம் குறித்தும், கட்சிஅமைப்புகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகின்றன. இந்த மாநாடுகளில் எடுக்கப்படும் முடிவுகள், பெற்ற அனுபவங்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு வழிகாட்டுவதாக அமையும்.கட்சியின் அகில இந்திய மாநாடு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
        அதற்கான தயாரிப்புப் பணிகளும் நடந்து வருகின்றன. மற்ற கட்சி மாநாடுகளில் தலைவரின் அனுமதியுடன் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், தலைவரின் ‘எழுச்சியுரை’ என்ற அளவோடு முடிந்துவிடும். குறிப்பிட்ட காலவரையறையில் மாநாடுகளை நடத்த வேண்டும் என்ற அவசியமும் அந்தக்கட்சிகளுக்கு இல்லை. எப்போதாவது நடத்தப்படும் மாநாடுகளும் தலைவரையே சுற்றிவரும். அந்தக்கட்சிகளைப் பொறுத்தவரை தலைவர்தான் கடவுள். அவரது வார்த்தைகள்தான் வேதம்.கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தக்கட்சிகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. கட்சியின் கொள்கைகள் மற்றும் திசைவழியை தீர்மானிப்பது கட்சியின் தலைவரோ பொதுச் செயலாளரோ அல்ல.
             கிளை துவங்கி அகில இந்திய அமைப்புவரை முழுக்க முழுக்க உட்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும். கட்சியின் அகிலஇந்திய மாநாடுதான் கொள்கை முடிவுகளைஎடுக்கக்கூடிய அதிகபட்ச அதிகாரம் கொண்டது. அந்த மாநாட்டில் தேர்வு செய்யப்படும் மத்தியக்குழுதான் அந்தக்கொள்கைகளை அரசியல் சூழலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்டது. மாநிலங்களிலும் அப்படியே. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது மாநாட்டிற்கான அறிக்கைகளை ஆவணங்களை உருவாக்கிட அக்டோபர் மாதம் 26-29 தேதிகளில் தில்லியில் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்படவேண்டிய அரசியல் அறிக்கை மற்றும் அரசியல் ஸ்தாபன அறிக்கை குறித்து இந்தக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட் டது. மேலும் கடந்த ஆண்டுகளில் கட்சி எடுத்த அரசியல், ஸ்தாபன நடைமுறை உத்திகள்குறித்து விவாதித்து அகில இந்திய மாநாட்டில் ஒரு அறிக்கையை முன் வைத்து இறுதி செய்வது என்று ஏற்கெனவே எடுக்கப்பட்டமுடிவின் அடிப்படையில் அதற்கான விவாதமும் நடைபெற்றது.
           இந்த மத்தியக்குழு கூட்டம் குறித்து சில ஆங்கில பத்திரிகைகள் அவதூறான செய்திகளை அள்ளித்தெளித்து வருகின்றன. தங்களது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு மனம்போன போக்கில் எழுதி வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதிதல்ல. மக்கள் நலன் ஒன்றையே உயிர் மூச்சாகக் கொண்டு, பாட்டாளி வர்க்க புரட்சிக்காக படை நடத்தி வரும் இந்த இயக்கத்தை அழித்துவிட கடந்த காலங்களிலும் பல முயற்சிகள் நடந்துள்ளன. அதையெல்லாம் முறியடித்துத்தான் இந்த இயக்கம் வீறு நடை போட்டு வந்துள்ளது.ஊடகங்களால் பெரிதாக ஊதப்படும் அந்த மத்தியக்குழு கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழுவின் சார்பில் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத், ஒரு அறிக்கையை முன்வைத்தார்.
                சில விஷயங்களில் தங்களுக்கு மாறுபட்ட கருத்து இருப்பதை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர் சீத்தாராம் யெச்சூரியும், தோழர் பி.வி.ராகவலுவும் மத்தியக்குழு முன்பு வைத்தனர். இது குறித்துத்தான் சில ஊடகங்கள் தங்களது நோக்கத்திற்கு கும்மியடிக்கின்றன. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இது ஒன்றும் புதிய நடைமுறையல்ல. காலம் காலமாக நடைபெற்று வரும் ஒன்றுதான். உட்கட்சி ஜனநாயகத்தை முழுமையாக பின்பற்றும் கட்சி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கட்சிக்கூட்டங்க ளில் தங்களது கருத்தை முன்வைக்க யாருக்கும் உரிமை உண்டு. அதுகுறித்து விரிவான விவாதம் நடத்தி எடுக்கப்படும் முடிவுகள் அனைவரையும் கட்டுப்படுத்தும். உட்கட்சி ஜனநாயகத்தில் இது ஒரு அம்சம். ஆனால் பல ஆங்கில பத்திரிகைகள்இந்தக்கூட்டம் குறித்து கொச்சையாக வும், விபரம் புரியாமலும், அரைவேக்காட்டுத் தனமாகவும் விமர்சனம் செய்து வருகின்றன. ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்க முயற்சிக்கின்றன.
          கட்சியின் முடிவுகள் குறித்து யாருமே விமர்சிக்கக்கூடாது என்று கருதுகிற கட்சியல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி. விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமானதாகவும், அறிவுப்பூர்வமானதாகவும் இருந்தால் எங்கிருந்து வந்தாலும் அந்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் கட்சிக்கு உண்டு. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஜனநாயகமேஇல்லை என்று சில ஊடகங்கள் கூப்பாடு போடும். விவாதம் நடந்தது குறித்த செய்திகள் வெளிவந்தால் கோஷ்டிப்பூசல் என்றுஎழுதுவார்கள். கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றும்ஜனநாயகம் என்பது முதிர்ச்சியானஒன்று.
         இந்த நடைமுறையைத்தான் ஸ்டாலின்காலத்து அணுகுமுறை என்று சில ஆங்கிலப் பத்திரிகைகள் கூசாமல் எழுதுகின்றன. தில்லியில் நடந்த மத்தியக்குழு கூட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். விருப்புவெறுப்பு இல்லாமல் கடந்த கால அனுபவத் தின் அடிப்படையில் கட்சியின் எதிர்கால திசைவழி எவ்வாறு அமைய வேண்டும் என்பதைமட்டுமே கருத்தில் கொண்டு முன்வைக்கப் பட்ட விவாதங்கள் அவை. இந்த விவாதங்களை தொகுத்து வேண்டிய மாற்றங்களைச் செய்து கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கான ஆவணம் இறுதி செய்யப்படும். அதே நேரத்தில் அதுவே முடிவானது அல்ல.
       இந்த அறிக்கைகள் கட்சியின் கிளை துவங்கி அனைத்து நிலைகளிலும் விவாதிக்கப் படும். கட்சி உறுப்பினர்கள் அனைவரும் திருத்தங்களை முன்மொழியலாம். அகில இந்திய மாநாட்டிலும் அறிக்கை மீது விவாதம் நடைபெற்று, தேவையானால் வாக்கெடுப்பும் நடத்தி அதன் பிறகுதான் ஆவணம் முழுமை பெறும். அதன் பிறகு அந்த வழிகாட்டு ஆவணம் கட்சியின் சொத்தாகக் கருதப்படும். அடுத்துவரும் காலங்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக அது தொடரும். இந்த அறிக்கைகள் கட்சி மட்டத்தில் மட்டுமின்றி இணையதளத்திலும் வெளியிடப்படும். இதன் மீது யார் வேண்டுமானாலும் திருத்தங்களை முன்மொழியலாம். இத்தகைய விரிவடைந்த, வலுவான ஜனநாயகம் வேறு எந்த முதலாளித்துவக் கட்சியிலாவது பின்பற்றப்படு கிறதா என்பதற்கு இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிக்கும் ஊடகங்கள் தங்களது மனச்சாட்சியைத் தொட்டு பதில் சொல்லட்டும். இவர்கள் ஆதாரமின்றி அவதூறுகளை மட்டுமே எழுதும்போது மகாகவி பாரதி சொன்ன, ‘நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி!’ என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
          இந்தியாவில் இயங்கும் பல்வேறு கட்சிகள் தங்களிடம் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் இருப்பதாக அவ்வப்போது கூறுவ துண்டு. ஒவ்வொரு கட்சியும் கூறும் எண்ணிக் கையை எண்ணிப்பார்த்தால் அது உலக மக்கள்தொகையைவிட கூடுதலாக இருக்கும். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறித்து சுய தணிக்கை செய்யும் கட்சி. அதில் பலவீனம்தென்பட்டால் அதைக் களைய ஆக்கப்பூர்வ மான முயற்சிகள் செய்யப்படும். கட்சியின் மத்தியக்குழுவில் முன்வைக்கப் பட்ட சில விவரங்களை தப்பும் தவறுமாக புரிந்துகொண்டு கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை சரிந்துவிட்டது. விழுந்துவிட்டது என்றெல்லாம் சில ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதுகின்றன.
        பாட்டாளி வர்க்கப்புரட்சியை மையமாகக் கொண்ட கட்சி என்ற முறையில் தொழிலாளி வர்க்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. எனவேதான் இந்தக்கட்சி வளரக்கூடாது என்று கார்ப்பரேட் ஊடகங்கள் நினைக்கின்றன. அர்த்தமற்ற முறையில் அவதூறு களை எழுதி இந்த இயக்கத்தை முடக்கிவிட முயல்கின்றன. ஆனால் அது வெற்றி பெறாது. 1990-களில் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்டு அதன் பின் தொடர்ச்சியாக வந்த காங்கிரஸ் மற்றும் பாஜககூட்டணி ஆட்சிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட நவீன தாராளமய பொருளாதாரக்கொள் கையால் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நலிவுற்ற பிரிவினர், சிறு, நடுத்தர தொழில் முனைவோர் என அனைத்துப்பகுதி மக்களும் புதிய சவால்களை சந்தித்து வருகின்றனர்.
          முதலாளித்துவ வளர்ச்சிப்போக்கில் இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். ஒருபுறத்தில் ஒரு சிலரின் கையில் சொத்துகள் குவிக்கின்றன. கோடீஸ்வரர்கள் மேலும் கொழுக்கின்றனர். மறுபுறத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் அவலம் நிறைந்ததாக மாற்றப்படுகிறது. இவ்வாறு இருவேறு இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் அரசு நவீன தாராளமயமாக்கல் கொள்கையை தீவிரமாக பின்பற்றியதால் மக்களிடம் செல்வாக்கு இழந்து காங்கிரஸ் கட்சி காலாவதி ஆகிவிட்டது. எதிர்க்கட்சியாகக்கூட அந்தக்கட்சியால் வர முடியவில்லை. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, திமுக போன்ற காங்கிரஸ் ஆதரவுக் கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. இந்த நிலையில் தாராளமயமாக்கல் கொள்கையை வேகமாக செயல்படுத்த முதலாளிகளுக்கு புதிய ஏஜெண்டு தேவைப்பட்டார்.
          அவ்வாறு அவர்களால் ஆதரிக்கப்பட்டவர் தான் நரேந்திரமோடி. பெருமுதலாளிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவோடு அவர் ஆட்சியமைத்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கார்ப்பரேட் ஊடகங்கள் மோடியை ஆதரித்து கடுமையாக பிரச்சாரம் செய்தனர். ‘வளர்ச்சி’ என்ற முழக்கத்தை நரேந்திர மோடிமுன்வைத்தாலும் அவர் பின்பற்றுவது கடைந்தெடுத்த வலதுசாரி பொருளாதாரமே ஆகும். அந்தக்கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்போது மக்களின் துன்ப துயரங்கள் அதிகரிக்கின்றன. இதை மடைமாற்றம் செய்ய- மக்களின் அதிருப்தியை திசை திருப்ப வகுப்பு வாத பழமைவாத தீயை விசிறிவிடுகின்றனர். உ.பி. மாநிலம் முசாபர் நகர் உட்பட நேரடியான மதக்கலவரங்களைத் தூண்டிவிடுவது மறுபுறத்தில் அரசின் அனைத்துத் துறைகளிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கடைந்தெடுத்த பழமைவாத சித்தாந்தத்தை புகுத்துவது என மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
        இரட்டை அபாயத்தை நாடு சந்திக்க வேண்டியுள்ளது. நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்தவுடன் பொதுத்துறை பங்குகளை விற்பது, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளி லும் அந்நிய முதலீட்டை அதிகரிப்பது, நிலங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்றிவிட்டு பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரை வார்ப்பது, தொழிலாளர் நல சட்டங்களைத் திருத்தி தொழிலாளர் உரிமைகளை பறிப்பது, கிராமப்புற வேலைவாய்ப்புத்திட்டத்தை சீர்குலைப்பது, மானியங்களை வெட்டுவது பொது விநியோக முறையை சீரழிப்பது என முற்றிலும் மக்கள்விரோதப் பாதையில் மோடி அரசு நடைபோடு கிறது. பொருளாதாரக் கொள்கையை பொறுத்தவரை முந்தைய காங்கிரஸ் அரசுக்கும் இப்போதைய பாஜக கூட்டணி அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
             நவீன தாராளமயமாக்கல் கொள்கையின் தவிர்க்க முடியாத விளைவாக ஊழலும், லஞ்சமும் அதிகரித்துள்ளது. கருப்புப்பணத்தைவெளிக்கொணர்வது குறித்து ஏற்கெனவேஆட்சியிலிருந்த காங்கிரசும், இப்போது ஆட்சியிலிருக்கும் பாஜகவும் நடத்தும் விவாதங்களைப் பார்த்தால் இரு கட்சிகளுமே இந்த விஷயத்தில் ஒரே மாதிரி செயல்பட்டுவருவதை புரிந்துகொள்ள முடியும். ஊழல் புரிவதில் இரு கட்சிகளுக்கும், ஆட்சிகளுக்கும் வித்தியாசமில்லை. சாமர்த்தியமாக மறைத்தது யார் என்பது தான் அவர்களுக்குள் நடக்கும் விவாதம்.
        நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கிறது. ஒரு கிலோ தக்காளி விவசாயிகளிடம் 2 ரூபாய்க்கு வாங்கப் பட்டு சந்தையில் 25 ரூபாய்க்கு விற்கும் நிலைகூட உள்ளது. இதனால் இரு தரப்பும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்தெல்லாம் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிக்கும் ஊடகங்கள் எழுதுவதே இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்வி மற்றும் மாநில நிலைமைகள், கடந்த காலத்தில் கட்சி பின்பற்றிய உத்திகள், அதில் ஏற்பட்ட அனுபவங்கள் என கட்சியின் மத்தியக்குழு அனைத்து அம்சங்களையும் விரிவாக விவாதித்தது. சில ஊடகங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறிவைத்து அவதூறு செய்வதற்கு ஒரு நோக்கம் உள்ளது. நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிராக ஒரு உண்மையான மாற்றை முன்வைப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே. எனவே கார்ப்பரேட் ஊடகங்கள் அந்த இயக்கத்தை இழிவு படுத்த முயல்கின்றன.கம்யூனிஸ்ட் இயக்கம் இத்தகைய அவதூறுகளை சந்திப்பது வரலாற்றில் ஒன்றும் புதிதல்ல.
            மாமேதை கார்ல் மார்க்ஸ் மீது அவதூறுகளை அள்ளித்தெளித்து அவர் ஒரு நாட்டில் நிரந்தரமாக இருக்க முடியாமல் விரட்டினார்கள். ஆனால் அவர் ஓய்ந்துவிடவில்லை, சோர்ந்துவிடவில்லை.மாமேதை லெனின் ரஷ்யாவில் நடந்த புரட்சிக்கு தலைமை தாங்கியதற்குக் காரணம்அவர் ஜெர்மனியின் தூண்டுதலின்பேரில் செயல்பட்டதுதான் என்று அன்றைக்குசிலர் எழுதினார்கள். ஐரோப்பாவில் சிலநாடுகளில் இப்போதும் அதை பாடமாக சொல்லித்தருகின்றன. பாசிசமும், மார்க்சியமும் ஒன்றுதான். இரண்டுமே சர்வாதிகாரம்தான் என்று கூட இவர்கள் வரலாற்று அறிவு கொஞ்சமும் இல்லாமல் எழுதுவார்கள். கம்யூனிஸ்ட் தலைவர்களையும் சர்வாதிகாரிகள் பட்டியலில் சேர்ப்பார்கள். ஹிட்லரையும், பாசிசத்தை முறியடித்து உலகை பாதுகாத்த மாவீரர் ஜோசப் ஸ்டாலினையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்துவார்கள். கார்ப்பரேட் ஊடகங்களுக்கு இத்தகைய அரைகுறை அறிவு ஜீவிகள் தற்போது மலிவான விலைக்குக் கிடைக்கிறார்கள். வாங்கிய கூலிக்கு விசுவாசமாக சிலர் கூவுகிறார்கள். சிலர் பெற்ற கூலிக்கு அதிகமாகவே கூவு கிறார்கள். கட்சியின் அகில இந்திய மாநாடு முடியும்வரை இவர்களுடைய கூச்சல் உச்ச ஸ்தாயில் இருக்கக்கூடும். ஆனால் ஒன்றை மட்டும்சொல்லிக்கொள்வோம்.
         உங்கள் பேனா, உங்கள் காகிதம். எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு எடுக்கப்போகும் முடிவுகள், வகுக்கப்போகும் வியூகங்கள் உங்களுக்கு பொருத்தமான பதிலைச் சொல்லும். மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாட்டு இது. “உண்மை ஒருநாள் வெளியாகும்- அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும், பொறுமை ஒருநாள் புலியாகும்- அதற்கு பொய்யும், புரட்டும் பலியாகும்”          
நன்றி : தீக்கதிர்
 

சனி, 19 ஏப்ரல், 2014

தில்லி கோட்டைக்குச் சென்று திமுகவும், அதிமுகவும் இதுவரை செய்தது தான் என்ன?



  கட்டுரையாளர் : தோழர். டி. கே. ரங்கராஜன், எம்.பி                
           தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் நடத்தும் தேர்தல் பிரச்சாரத்தைக் கவனித்தால், நடப்பது நாடாளுமன்றத்தேர்தலா அல்லது சட்டமன்றத்தேர்தலா....? என்ற சந்தேகம் தான் வருகிறது. இரண்டு கட்சிகளும், பரஸ்பரம் சொத்துப்பட்டியலையும், ஊழல் பட்டியலையும் மக்கள் முன்னால் வைத்து, திகில் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. திமுகவைப் பொறுத்தவரை, காங்கிரஸ், பாஜகவை விட- வேறெந்த மாநிலக் கட்சியையும் விட, கூடுதலான காலம் மத்திய அமைச்சரவையில் இருந்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மூன்று தவணைகளாக 6 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இரண்டு தவணையாக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. இதில், இரண்டு கூட்டணியிலும் மாறி, மாறி திமுக மட்டும் 14 ஆண்டுகாலம் மத்திய அமைச்சரவையில், ''வலுவான- வளமான'' இலாகாக்களைப் பெற்று, ஆட்சியில் இருந்துள்ளது.
          அதிமுக, பாஜக கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டவுடன், “அண்ணன் எப்போது சாவான்; திண்ணை எப்போது காலியாகும்?” என்று காத்திருந்த திமுக, ஓடோடிச் சென்று, அந்த ஆட்சியில் ஒட்டிக் கொண்டது. திமுக இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்று மறைந்த காங்கிரஸ் தலைவர் சி.சுப்பிரமணியம் சொன்னதாக கலைஞர் தன்னுடைய நிலையை நியாயப்படுத்தினார். இக்கட்டான நிலை வரும்போதெல்லாம், இறந்துபோன தலைவர்களை மேற்கோள் காட்டுவது, கலைஞருக்கு வாடிக்கை. “இந்தியா ஒளிர்கிறது” என்று கூறிய பாஜக கூட்டணி ஆட்சி மங்கிப்போனது. உடனே அணி மாறிய திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசில் சேர்ந்தது. காங்கிரசின் “பி” டீமாகவே, திமுக இருந்தது. எல்லா பருவநிலைகளுக்கும் ஒத்துப்போகும் ஒரு கட்சி, இந்தியாவில் உண்டென்றால், அது திமுகதான். எங்கு சேர்ந்தாலும், அதற்கான வியாக்யானங்களை, விளக்கங்களைத் தருவதில் அவர்களை மிஞ்ச முடியாது. பதினான்கு ஆண்டுகாலம் மத்திய ஆட்சிப் பொறுப்பில் தொடர்ந்து பதவி வகித்த திமுக, தமிழகத்திற்கு செய்தது என்ன...? “வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” என்று ஒரு காலத்தில் குரல் கொடுத்தவர்கள், டாடா, பிர்லா, அம்பானிகளின் சேவகர்களாக மாறிப் போனார்கள்.
             “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்“ என்றார் அண்ணா. இவர்களோ, அம்பானியின் சிரிப்பில் அண்ணாவையே கண்டார்கள். இவர்கள் அண்ணா கண்ட கனவை நிறைவேற்றவில்லை. மாறாக, அதிகாரத் தரகர் நீரா ராடியா கண்ட கனவையே நிறைவேற்றினார்கள். மத்திய ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததைப் பயன்படுத்தி, தமிழை மத்திய ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஆக்கினார்களா? நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழைக் கொண்டுவந்தார்களா? மாநிலத்தில் சுயாட்சி,மத்தியில் கூட்டாட்சி என்று முழக்கமிட்ட வர்கள்; மாநில சுயாட்சிக்காக ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டார்களா? ராஜமன்னார் குழு பரிந்துரைகளை நிறை வேற்றப் பாடுபட்டார்களா? எதுவுமில்லை. மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்து, இவர்கள் சாதித்தது, அலைவரிசைக் கற்றை ஊழல் மட்டுமே.டி.ஆர்.பாலு, கப்பல்துறை அமைச்சராக இருந்தபோதுதான் சேது சமுத்திரத் திட்டத் துவக்க விழா நடைபெற்றது. இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவோடு அந்த அரசு செயல்பட்டதால்தான், அது சாத்தியமானது. ஆனால், அந்த திட்டத்தை எதிர்த்து, சுப்பிரமணியசாமியால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்ட நிலையில், திட்டம் முடக்கப்பட்டது.
         பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்த அதிமுக, அதற்குச் சொன்ன காரணங்களில் ஒன்று, ‘சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வாஜ்பாய் அரசு மறுக்கிறது’ என்பதாகும். ஆனால், அதே அதிமுக அரசு இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று மனு போட்டிருப்பது விசித்திரமானதாகும். சேதுசமுத்திரத் திட்டம் முடக்கப்பட்டதை எதிர்த்து, திமுகவும் அங்கம் வகித்த மத்திய அரசு, நீதிமன்றத்தில் முறையாக வாதாடியதா? வாய்தா வாங்கி, அந்த வழக்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதற்கும், திட்டம் முடக்கப்பட்டதற்கும், திமுகவுக்கும் பொறுப்பு உண்டு. இந்த திட்டம் முடங்கியதில், அதிமுகவுக்கு மட்டுமல்ல, திமுக வுக்கும் பங்கு உண்டு. 1983-ல் ‘தமிழ் ஈழத்தை ஏற்காதவர்கள் தமிழர்களே அல்ல’; என்று கலைஞர் பேசினார். ஆனால், திமுக அங்கம் வகித்த மத்திய ஆட்சி நடந்தபோதுதான், இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.
        அதைத் தடுத்து நிறுத்த, தனது அதிகாரத்தை, அரசியல் செல்வாக்கை திமுக பயன்படுத்தவில்லை. இந்த குற்றச்சாட்டுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். அதன்பிறகு டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, இலங்கைக்குச் சென்று ராஜபக்சேவுடன் அளவளாவிவிட்டு வந்தது. இது என்ன தமிழர் பாசம்? என்று தமிழக மக்களுக்குப் புரியவில்லை. மத்திய அரசில் நீண்டகாலம் இருந்து விட்டு, “எங்கள் சாதனை இது” என்று எதனையும் உருப்படியாக சொல்ல முடியாத தால்தான், தேர்தல் களத்தில் அதிமுக-வை மட்டும் திமுக விமர்சிக்கிறது. கலைஞர் மட்டுமல்ல, அவருடைய மகன் - சகோதரர் மு.க.ஸ்டாலினும் இதைத்தான் செய்து வருகிறார். தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல.

நாளை நமதே; நாற்பதும் நமதே

          நாளை நமதே; நாற்பதும் நமதே என்று அதிமுகவினர் தேர்தலுக்கு முன்பிருந்தே உற்சாகமாக கூறி வந்தனர். நாடாளுமன்றத்தை வரைந்து, அதன் முன்பு, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நிற்பது போல, டிஜிட்டல் பேனர்களை வைத்து அகமகிழ்ந்தனர். இடதுசாரிக் கட்சிகளுடன் தான் எங்களது கூட்டணி என்று கூறிய அதிமுக, கடைசியில் சந்தோஷமாக பிரியலாம் என்று சென்றது. இந்த தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள், சந்தோஷமாக மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றன.
        ஆனால், அதிமுகவின் சந்தோஷம்தான் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. முதல்வர் ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் பறந்து பறந்து சென்று சாமானிய மக்களைச் சந்திக்கிறார். ஒவ்வொரு கூட்டத்திலும், திமுகவையும், காங்கிரசையும் கடுமையாக விமர்சிக்கிறார். மோடியையும், பாஜகவின் மதவெறியையும் விமர்சிக்க மறுப்பது ஏன்..? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பியது. மோடி வேறு மாநில முதல்வர்; அவரை ஏன் விமர்சிக்க வேண்டும்? என்று அவர்களது ஏடான ‘நமது எம்ஜிஆர்’ பெட்டிச் செய்தியில் கெட்டிக்காரத்தனம் என நினைத்துக் கொண்டு பதில் எழுதியது. இந்த நிலையில் கரூர் கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருந்த போது, நடிகர் ரஜினிகாந்த்தை மோடி சந்திக்க இருப்பதாக தகவல் வந்தது.
           உடனே பூமியில் காய்ந்து கிடந்த, காவிரி, அமராவதி நதிகளும், காவிரி பிரச்சனையில் பாஜக செய்த துரோகமும், முதல்வருக்கு நினைவுக்கு வந்துள்ளது. காவிரிப் பிரச்சனையில் காங்கிரசும், பாஜகவும் துரோகம் இழைத்ததாகப் பேசினார் முதல்வர். அடுத்து நடிகர் விஜய்யை, மோடி சந்தித்தவுடன், குஜராத்தை விட தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளது என்று பட்டியலிடுகிறார் முதல்வர். இப்போது கூட, குஜராத்தில் இஸ்லாமிய மக்களை மோடி நரவேட்டை ஆடியது குறித்தோ, பாஜக தேர்தல் அறிக்கையில் காணப்படும் மதவெறி குறித்தோ எதுவும் கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால், தன்னுடைய கட்சியின் தேர்தல் அறிக்கையில், கூறியுள்ள விஷயங்களைக் கூட அதிமுகவினரால் எடுத்துச் சொல்ல முடியவில்லை.

இருவரும் பொறுப்பு

           தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள்தான் மாறி மாறிஆட்சி செய்து வருகின்றன. ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆனாலும் வேலைவாய்ப்பு பெருகவில்லை. இந்த ஆண்டு ஜனவரி மாத கணக்குப்படி தமிழ்நாட்டில் 90லட்சம் பேர் வேலையின்றி காத்திருக்கின்றனர்.  இவர்களில் 45லட்சம் பேர் பெண்கள். இதில் தான் பாலின சமத்துவம் ஏற்பட்டுள்ளது. 3லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர். வளாகத் தேர்வில் தேர்வு பெறும் பொறியியல் பட்டதாரிகள் தவிர மற்றவர்களுக்கு நல்ல வேலைகிடைப்பதில்லை. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். சிறு, குறு தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயத்துறை நாளுக்கு நாள் நலிந்துவருகிறது.
        மின்வெட்டு தமிழகத்தை மிரட்டுகிறது. திமுக -அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்றையொன்று குற்றம்சாட்டுகின்றன. ஆனால் இரண்டு கட்சிகளுமே இந்த நிலைமைக்கு காரணம். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இரு கட்சிகளுக்கும் உண்டு. ஆனால் இந்த கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு, என்ன செய்யும்? என்று யாரும் இப்போது கூற முடியாது. அனைத்து வாய்ப்புக் களுக்குமான வாசல்களை இவர்கள் திறந்தே வைத்துள்ளனர்.
        ஆனால், அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு இடம் தராமல், மத்தியில் அமைகிற அரசு மதச்சார்பற்ற- மாற்று அரசாக அமைய வேண்டும் என்று கம்பீரமாக களத்தில் நிற்பவர்கள் இடதுசாரி வேட்பாளர்களே... அவர்களை ஆதரிப்பதன் மூலம்தான் தேச நலனை மட்டுமல்ல; தமிழக நலனையும் பாதுகாக்க முடியும்.
 

ஞாயிறு, 16 மார்ச், 2014

இளைஞர்களே...! அரசியல் களம் புகுந்து தேசத்தை காத்தல் செய்யுங்கள்...!


 தோழர். டி. கே. ரங்கராஜன், எம்.பி., மாணவர்களிடையே ஆற்றிய உரை :                                
           ஒருமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை வழிகாட்டுவது, வழிநடத்துவது தான் அரசியல். இந்த அரசியலின் தொடர்ச்சி தான் யுத்தம். இராமாயண, மகாபாரத காலத்திலிருந்து பொருளாதாரத்திற்காக சொத்திற்காகத்தான் போர் நடந்துள்ளது. பொருளாதாரத்தை தெரிந்து கொள்ளாமல் அரசியலை புரிந்துகொள்ள முடியாது. நமது இந்தியாவில் 1990 வரை ஒரு திட்டமிட்ட பொருளாதாரம் நிலவியது. 1990க்கு பின்னர் நவீன தாராளமய கொள்கை காரணமாக திட்டமிட்ட பொருளாதாரம் என்பது சந்தைப் பொருளாதாரமாக மாற்றப்பட்டது.
               நவீன தாராளமயக் கொள்கையினால் விஞ்ஞான முன்னேற்றம் குறிப்பாக தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு, மென் பொருள், கட்டுமானப் பணிகள் என்பனவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை தான். இந்த முன்னேற்றம் என்பது சாதாரண மக்கள் மற்றும்  உழைப்பாளி மக்களுக்கு பயன்படவில்லை. மாறாக வேலையின்மை, வேலை வாய்ப்பின்மை மேலோங்கி உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய எண்ணெய் வளத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் ஈரான், இராக் போன்ற நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க அனைத்து முயற்சிகளும் ஏன் இராணுவத்தின் மூலமாக கூட முயற்சி செய்து வந்துள்ளது.
              குறிப்பாக இராக் நாட்டில் ஜனநாயகம் இல்லை என்றும், மனித உரிமைகள் மீறப்படுகிறது என்றும், அணு ஆயுதங்கள் உள்ளன என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நேட்டோ படைகள் மூலமாக போர் தொடுத்து பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தது. நமது நாட்டில் எண்ணெய், எரிவாயு போன்றவற்றை இந்திய ரூபாய் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்று ஈரான் கூறியது. ஆனால் அமெரிக்கா தலையிட்டு நமது அரசுக்கு ஈரானில் இருந்து எவ்வித வர்த்தகமும் செய்யக்கூடாது என்று தடை போட்டது. மேலும் ஈரானில் அணு ஆயுதங்கள் உள்ளது என்று குற்றச்சாட்டு கூறி ஈரான் மீது படையெடுக்க முனைந்தது. மேலும் இந்நாட்டிற்கு ஐ.நா. மூலம் பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியது அமெரிக்க ஏகாதிபத்தியம். இவ்விசயத்தில் இந்தியா மௌனம் சாதித்தது. காரணம் இந்திய அரசு உலகமயம் அமல்படுத்தப்படுமென்று உலக நாடுகளுக்கு கையெழுத்திட்டுள்ளது. எந்த நாடு எந்த நாட்டுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று உலகமயம் நிர்ணயிக்கிறது. தன் நாட்டு மக்களுக்காக பொருளாதார வளர்ச்சிக்காக எந்த நாடும் சுதந்திரமாக சட்டத்திட்டங்கள் நிர்ணயிக்க இயலாது.
            சந்தைப் பொருளாதாரத்தில் அந்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு அந்த முதலாளிகள் விலை நிர்ணயிக்க முடியாது. மாறாக அமெரிக்கா தலைமையில் இருக்கும் உலக சந்தைதான் விலை நிர்ணயிக்கும். அதன் நோக்கம் வர்த்தகம் செய்பவர்களுக்கு லாபம் அதிக லாபம் என்பதுதான். உலகமயத்தின் அதிர்வுகளினால் இந்திய அரசு மக்களை காக்கும் மிக முக்கியமான பொறுப்பிலிருந்து விலகி, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய பெரும் முதலாளிகள் நலன்களை மட்டுமே பாதுகாத்து வருகிறது. சுதந்திரத்திற்கு பிறகு இந்திய பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திட, மேம்படுத்திட இந்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை துவக்கியது. அதன் மூலம் சிறு தொழில்கள், இணைத்தொழில்கள் என ஏற்படுத்தப்பட்டு பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு நவீன தாராளமயக் கொள்கையினால் அரசின் தொழில்கள் அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ஏற்பாடுகள் நடந்தேறி வருகிறது. சந்தைப் பொருளாதாரத்தின் விளைவாக விலைவாசி உயர்வு வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
                     யூக வணிகம், முன்பேர வர்த்தகம், ஆன் லைன் வர்த்தகம் என புதிய முறைகளினால் பொருட்கள் பெரும்முதலாளிகளால் பதுக்கல் செய்யப்பட்டு அதனால் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, சந்தையில் பல மடங்கு விலைவாசி உயர்த்தப்படுகிறது. நாம் பயன்படுத்தும் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டு மக்கள் இலவசமாக பயன்படுத்திய தண்ணீர் தற்போது பாட்டில்களில் அடைக்கப்பட்டு பால் விலையைவிட அதிகமாக விற்கப்படுகிறது. ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ள இந்த தண்ணீர் வியாபாரம் டாடா, கின்லே போன்ற பெரும் முதலாளிகள் கைவசம் வைத்துள்ளார்கள். அதேபோன்று சுகாதாரமும் தனியார் கையில் சிக்கி விலை பொருளாக மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக நோய் தடுப்பூசி நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு நமது நாட்டு மக்களுக்கு இலவசமாகவும், குறைந்த விலையிலும் விற்கப்பட்டு வந்தது. ஆனால் அரசின் உலகமய கொள்கையினால் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு அரசு அந்த மருந்து நிறுவனங்களை மூடிவிட உத்தரவிட்டது.
               நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர். மேலும் பல்வேறு முற்போக்கு தேசப்பற்று அமைப்புகளை திரட்டி பல கட்டப் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக அந்நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டு தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தாராளமயத்தின் நோக்கம் என்னவெனில், எதை அது உருவாக்கியதோ அது தனியாரிடமே இருக்கவேண்டும் என்பது தான். எந்த ஒரு அரசும் நவீன தாராளமய கொள்கைகளை அமல்படுத்திட வேண்டுமே தவிர அதைக் கட்டுப்படுத்திடவோ, தளர்த்திடவோ அல்லது ரத்து செய்யவோ அதிகாரம் இல்லை என்று இந்திய பெருமுதலாளிகளும், பன்னாட்டு பெருநிறுவனங்களும் கூறி வருகின்றனர். அதனால் தான் ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, எண்ணெய் படுகை போன்றவற்றில் பெருமுதலாளிகள் பல லட்சக்கணக்கான கோடிகள் சம்பாதித்துள்ளனர்.
அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் கூட்டணியால் தான் இந்த கொள்ளைகள் நடந்து வருகின்றது. இந்தியா வளர்ந்துள்ளது ஆம். மத்தியதர வர்க்கத்தினர் மற்றும் பெரும் பணக்காரர்கள்தான் வளர்ந்துள்ளார்களே தவிர சாதாரண மக்கள், உழைப்பாளி மக்கள் வளரவில்லை. இன்றைய இந்தியாவை நாம் இரண்டாக சித்தரிக்கலாம். ஒரு பகுதி இந்தியா ஒளிர்கிறது. மற்றொரு பெரும் பகுதி இந்தியா வாடுகிறது. ஒளிரும் இந்தியாவில் 20 சதவீத மக்கள் பயன் பெறுகிறார்கள். வாடும் இந்தியாவில் 80சதவீத மக்கள் வேலையின்றி வாழவழியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். ஊடகங்கள் உண்மையான நிலைகளை மக்களுக்கு தெரிவிப்பதில்லை. உலகம் முழுவதும் வேலைவாய்ப்பின்மை தென்னாப்பிரிக்காவில் 28சதவீதம், இந்தியாவில் 9.9சதவீதம், அமெரிக்காவில் 3சதவீதம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றது.
         ஆனால் இந்தியாவில் 15 சதவீதம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 90லட்சம் பேர் இளைஞர்கள், 3 லட்சம் இளம் பொறியாளர்கள் வேலைதேடி அலைகின்றனர். ஏன்? உற்பத்தி அதிகமாகிறது, ஆனால் வேலைவாய்ப்பு இல்லை. ஏனெனில் ஒரு பக்கம் தொழில்கள் நவீனமயமாகிறது. மற்றொரு பக்கம் ஏற்கெனவே இருந்த தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா நடத்தப்படுகிறது. இந்திய அரசின் தவறான கொள்கைகளினால் இன்றைக்கு 4.5 கோடி சிறு வியாபாரிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்து வால்மார்ட், டெசோ என்ற பகாசுர கம்பெனிகள் இந்திய சில்லரை வர்த்தகத்தை சூறையாட உள்ளது. ஆனால் சீனாவில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும்போது 72 சதவீத பொருட்கள் சீனாவில் உற்பத்தியாவதைத்தான் கொள்முதல் செய்திட வேண்டுமென்று நிபந்தனை விதிக்கிறது. இந்த நவீன தாராளமய கொள்கையினால் இந்தியாவில் கலாச்சார சீரழிவு வளர்ந்துள்ளது. குறிப்பாக பாலியல் வன்முறைகள் 50 சதவீதமும், குழந்தை கடத்தல்கள் 100 சதவீதமும் அதிகமாகியுள்ளது. மேலும் மனித உறவுகள் பணத்துடன் இணைத்து பெண்களை ஒரு போகப் பொருளாக சித்தரித்துள்ளது.
               அரசு நினைத்தால் மூலதனத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால் இந்த அரசு மக்களின் வளர்ச்சி மற்றும் நலத்தை பார்க்காமல் பெருமுதலாளிகளுக்கு சாதகமாக உள்ளது. மூலதனத்தின் போக்கில் மனிதன் சென்றால் அவன் மனிதனாக இருக்க முடியாது. அந்நிய மூலதனத்தை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள் நாங்கள் இல்லை. அந்த மூலதனம் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கிட வேண்டும். உள்கட்டமைப்புகளை உருவாக்கிட வேண்டும். அப்போதுதான் சிறு மற்றும் உபதொழில்கள் உருவாகும். இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
          ஆகவே இந்திய அரசு நவீன தாராளமய கொள்கைகளை தவிர்த்து இந்திய நாட்டு மக்களுக்கு, இளைஞர்களுக்கு உரிய வளர்ச்சிக் கொள்கைகளை வகுத்திட வேண்டும். இந்திய நாட்டின் அடிப்படை அமைப்பை மாற்றிட முயற்சிகளை இன்றைய இளைஞர் சமுதாயம் மேற்கொள்ள வேண்டும். அரசியல் என்பது புனிதமானது. இன்றைய அரசியலில் ஏராளமான படித்த இளைஞர்கள் களம் புகுந்து இந்திய தேசத்தை பாதுகாத்திட வேண்டும்.  
(சேலம் பைசியா கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில்ஆற்றிய உரையிலிருந்து)
 நன்றி :