தோழர். டி. கே. ரங்கராஜன், எம்.பி., மாணவர்களிடையே ஆற்றிய உரை :
ஒருமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை வழிகாட்டுவது, வழிநடத்துவது தான் அரசியல். இந்த அரசியலின் தொடர்ச்சி தான் யுத்தம். இராமாயண, மகாபாரத காலத்திலிருந்து பொருளாதாரத்திற்காக சொத்திற்காகத்தான் போர் நடந்துள்ளது. பொருளாதாரத்தை தெரிந்து கொள்ளாமல் அரசியலை புரிந்துகொள்ள முடியாது. நமது இந்தியாவில் 1990 வரை ஒரு திட்டமிட்ட பொருளாதாரம் நிலவியது. 1990க்கு பின்னர் நவீன தாராளமய கொள்கை காரணமாக திட்டமிட்ட பொருளாதாரம் என்பது சந்தைப் பொருளாதாரமாக மாற்றப்பட்டது.
நவீன தாராளமயக் கொள்கையினால் விஞ்ஞான முன்னேற்றம் குறிப்பாக தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு, மென் பொருள், கட்டுமானப் பணிகள் என்பனவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை தான். இந்த முன்னேற்றம் என்பது சாதாரண மக்கள் மற்றும் உழைப்பாளி மக்களுக்கு பயன்படவில்லை. மாறாக வேலையின்மை, வேலை வாய்ப்பின்மை மேலோங்கி உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய எண்ணெய் வளத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் ஈரான், இராக் போன்ற நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க அனைத்து முயற்சிகளும் ஏன் இராணுவத்தின் மூலமாக கூட முயற்சி செய்து வந்துள்ளது.
குறிப்பாக இராக் நாட்டில் ஜனநாயகம் இல்லை என்றும், மனித உரிமைகள் மீறப்படுகிறது என்றும், அணு ஆயுதங்கள் உள்ளன என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நேட்டோ படைகள் மூலமாக போர் தொடுத்து பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தது. நமது நாட்டில் எண்ணெய், எரிவாயு போன்றவற்றை இந்திய ரூபாய் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்று ஈரான் கூறியது. ஆனால் அமெரிக்கா தலையிட்டு நமது அரசுக்கு ஈரானில் இருந்து எவ்வித வர்த்தகமும் செய்யக்கூடாது என்று தடை போட்டது. மேலும் ஈரானில் அணு ஆயுதங்கள் உள்ளது என்று குற்றச்சாட்டு கூறி ஈரான் மீது படையெடுக்க முனைந்தது. மேலும் இந்நாட்டிற்கு ஐ.நா. மூலம் பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியது அமெரிக்க ஏகாதிபத்தியம். இவ்விசயத்தில் இந்தியா மௌனம் சாதித்தது. காரணம் இந்திய அரசு உலகமயம் அமல்படுத்தப்படுமென்று உலக நாடுகளுக்கு கையெழுத்திட்டுள்ளது. எந்த நாடு எந்த நாட்டுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று உலகமயம் நிர்ணயிக்கிறது. தன் நாட்டு மக்களுக்காக பொருளாதார வளர்ச்சிக்காக எந்த நாடும் சுதந்திரமாக சட்டத்திட்டங்கள் நிர்ணயிக்க இயலாது.
சந்தைப் பொருளாதாரத்தில் அந்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு அந்த முதலாளிகள் விலை நிர்ணயிக்க முடியாது. மாறாக அமெரிக்கா தலைமையில் இருக்கும் உலக சந்தைதான் விலை நிர்ணயிக்கும். அதன் நோக்கம் வர்த்தகம் செய்பவர்களுக்கு லாபம் அதிக லாபம் என்பதுதான். உலகமயத்தின் அதிர்வுகளினால் இந்திய அரசு மக்களை காக்கும் மிக முக்கியமான பொறுப்பிலிருந்து விலகி, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய பெரும் முதலாளிகள் நலன்களை மட்டுமே பாதுகாத்து வருகிறது. சுதந்திரத்திற்கு பிறகு இந்திய பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திட, மேம்படுத்திட இந்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை துவக்கியது. அதன் மூலம் சிறு தொழில்கள், இணைத்தொழில்கள் என ஏற்படுத்தப்பட்டு பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு நவீன தாராளமயக் கொள்கையினால் அரசின் தொழில்கள் அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ஏற்பாடுகள் நடந்தேறி வருகிறது. சந்தைப் பொருளாதாரத்தின் விளைவாக விலைவாசி உயர்வு வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
யூக வணிகம், முன்பேர வர்த்தகம், ஆன் லைன் வர்த்தகம் என புதிய முறைகளினால் பொருட்கள் பெரும்முதலாளிகளால் பதுக்கல் செய்யப்பட்டு அதனால் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, சந்தையில் பல மடங்கு விலைவாசி உயர்த்தப்படுகிறது. நாம் பயன்படுத்தும் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டு மக்கள் இலவசமாக பயன்படுத்திய தண்ணீர் தற்போது பாட்டில்களில் அடைக்கப்பட்டு பால் விலையைவிட அதிகமாக விற்கப்படுகிறது. ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ள இந்த தண்ணீர் வியாபாரம் டாடா, கின்லே போன்ற பெரும் முதலாளிகள் கைவசம் வைத்துள்ளார்கள். அதேபோன்று சுகாதாரமும் தனியார் கையில் சிக்கி விலை பொருளாக மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக நோய் தடுப்பூசி நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு நமது நாட்டு மக்களுக்கு இலவசமாகவும், குறைந்த விலையிலும் விற்கப்பட்டு வந்தது. ஆனால் அரசின் உலகமய கொள்கையினால் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு அரசு அந்த மருந்து நிறுவனங்களை மூடிவிட உத்தரவிட்டது.
நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர். மேலும் பல்வேறு முற்போக்கு தேசப்பற்று அமைப்புகளை திரட்டி பல கட்டப் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக அந்நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டு தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தாராளமயத்தின் நோக்கம் என்னவெனில், எதை அது உருவாக்கியதோ அது தனியாரிடமே இருக்கவேண்டும் என்பது தான். எந்த ஒரு அரசும் நவீன தாராளமய கொள்கைகளை அமல்படுத்திட வேண்டுமே தவிர அதைக் கட்டுப்படுத்திடவோ, தளர்த்திடவோ அல்லது ரத்து செய்யவோ அதிகாரம் இல்லை என்று இந்திய பெருமுதலாளிகளும், பன்னாட்டு பெருநிறுவனங்களும் கூறி வருகின்றனர். அதனால் தான் ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, எண்ணெய் படுகை போன்றவற்றில் பெருமுதலாளிகள் பல லட்சக்கணக்கான கோடிகள் சம்பாதித்துள்ளனர்.
அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் கூட்டணியால் தான் இந்த கொள்ளைகள் நடந்து வருகின்றது. இந்தியா வளர்ந்துள்ளது ஆம். மத்தியதர வர்க்கத்தினர் மற்றும் பெரும் பணக்காரர்கள்தான் வளர்ந்துள்ளார்களே தவிர சாதாரண மக்கள், உழைப்பாளி மக்கள் வளரவில்லை. இன்றைய இந்தியாவை நாம் இரண்டாக சித்தரிக்கலாம். ஒரு பகுதி இந்தியா ஒளிர்கிறது. மற்றொரு பெரும் பகுதி இந்தியா வாடுகிறது. ஒளிரும் இந்தியாவில் 20 சதவீத மக்கள் பயன் பெறுகிறார்கள். வாடும் இந்தியாவில் 80சதவீத மக்கள் வேலையின்றி வாழவழியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். ஊடகங்கள் உண்மையான நிலைகளை மக்களுக்கு தெரிவிப்பதில்லை. உலகம் முழுவதும் வேலைவாய்ப்பின்மை தென்னாப்பிரிக்காவில் 28சதவீதம், இந்தியாவில் 9.9சதவீதம், அமெரிக்காவில் 3சதவீதம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றது.
ஆனால் இந்தியாவில் 15 சதவீதம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 90லட்சம் பேர் இளைஞர்கள், 3 லட்சம் இளம் பொறியாளர்கள் வேலைதேடி அலைகின்றனர். ஏன்? உற்பத்தி அதிகமாகிறது, ஆனால் வேலைவாய்ப்பு இல்லை. ஏனெனில் ஒரு பக்கம் தொழில்கள் நவீனமயமாகிறது. மற்றொரு பக்கம் ஏற்கெனவே இருந்த தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா நடத்தப்படுகிறது. இந்திய அரசின் தவறான கொள்கைகளினால் இன்றைக்கு 4.5 கோடி சிறு வியாபாரிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்து வால்மார்ட், டெசோ என்ற பகாசுர கம்பெனிகள் இந்திய சில்லரை வர்த்தகத்தை சூறையாட உள்ளது. ஆனால் சீனாவில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும்போது 72 சதவீத பொருட்கள் சீனாவில் உற்பத்தியாவதைத்தான் கொள்முதல் செய்திட வேண்டுமென்று நிபந்தனை விதிக்கிறது. இந்த நவீன தாராளமய கொள்கையினால் இந்தியாவில் கலாச்சார சீரழிவு வளர்ந்துள்ளது. குறிப்பாக பாலியல் வன்முறைகள் 50 சதவீதமும், குழந்தை கடத்தல்கள் 100 சதவீதமும் அதிகமாகியுள்ளது. மேலும் மனித உறவுகள் பணத்துடன் இணைத்து பெண்களை ஒரு போகப் பொருளாக சித்தரித்துள்ளது.
அரசு நினைத்தால் மூலதனத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால் இந்த அரசு மக்களின் வளர்ச்சி மற்றும் நலத்தை பார்க்காமல் பெருமுதலாளிகளுக்கு சாதகமாக உள்ளது. மூலதனத்தின் போக்கில் மனிதன் சென்றால் அவன் மனிதனாக இருக்க முடியாது. அந்நிய மூலதனத்தை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள் நாங்கள் இல்லை. அந்த மூலதனம் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கிட வேண்டும். உள்கட்டமைப்புகளை உருவாக்கிட வேண்டும். அப்போதுதான் சிறு மற்றும் உபதொழில்கள் உருவாகும். இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ஆகவே இந்திய அரசு நவீன தாராளமய கொள்கைகளை தவிர்த்து இந்திய நாட்டு மக்களுக்கு, இளைஞர்களுக்கு உரிய வளர்ச்சிக் கொள்கைகளை வகுத்திட வேண்டும். இந்திய நாட்டின் அடிப்படை அமைப்பை மாற்றிட முயற்சிகளை இன்றைய இளைஞர் சமுதாயம் மேற்கொள்ள வேண்டும். அரசியல் என்பது புனிதமானது. இன்றைய அரசியலில் ஏராளமான படித்த இளைஞர்கள் களம் புகுந்து இந்திய தேசத்தை பாதுகாத்திட வேண்டும்.
(சேலம் பைசியா கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில்ஆற்றிய உரையிலிருந்து)
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக