சனி, 29 மார்ச், 2014

இடதுசாரிகளே நாட்டின் இன்றைய தேவை...!

          
       காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், கடந்த பத்தாண்டுகளில் தங்களின் சாதனைகளாக மக்கள் முன் வைத்திருப்பது உணவுக்கான உரிமை (Right to food), தகவலுக்கான உரிமை (Right to information) மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் (Land Acquisition Act) ஆகியவை தான். ஆனால் இவை மூன்றும் ஐ.மு.கூ-1 அரசின் முதல் நான்கு ஆணடுகளில் இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். 2004ம் ஆண்டில் ஐ.மு.கூ.-1 அரசிற்கு குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் தான் இடதுசாரிகள் ஆதரவு அளித்தனர். இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தால் தான் இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. இந்திய நாட்டில் வளங்களுக்கு எந்தவித குறைவுமில்லை. ஆனால் வளங்கள் அனைத்தும் பணக்காரர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களின் கஜானாவை நோக்கித் திருப்பப்படுகின்றன.
           கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரும்பணக்காரர்களுக்கும் அளிக்கப்பட்டு வரும் சலுகைகள், இடதுசாரிகள் முன்வைக்கும் ''மாற்றுப்பொருளாதாரக் கொள்கைகள்'' மூலம் நிறுத்தப்படும்; அவர்களிடம் சரியான முறையில் வரி வசூல் செய்யப்படும்; அதன் மூலம் கிடைக்கும் வருவாயை இந்தியத் திருநாட்டின் வளர்ச்சிக்கு திருப்பிவிட வேண்டும்.
            அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சியில் செய்யப்படும் முதலீடு அதிகரிக்க அதிகரிக்க நாட்டில் புதிது புதிதாக வேலைவாய்ப்புகள் பெருகும். அதன்மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இதற்கு மாறாக, காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொருளாதாரக் கொள்கைகளால், புதிது புதிதாக ஊழல்களும், முறைகேடுகளும் உருவாகிக்கொண்டிருப்பதை மக்கள் உணர வேண்டும்.
        வருகிற நாடாளுமன்றத் தேர்தல் இந்திய நாட்டின் ஏழை-எளிய நடுத்தர மக்களைப் பொறுத்தவரையில் மிக மிக முக்கியமான தேர்தல் ஆகும். இந்த தேர்தல் இந்திய நாடு வருங்காலத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பொருளாதாரக் கொள்கைகளை தீர்மானம் செய்யக்கூடிய தேர்தல் என்பதை மக்கள் உணரவேண்டும். இந்திய மக்கள் நான்கு சாலைகளின் சந்திப்பில் நின்று கொண்டு இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறார்கள். மாற்று பொருளாதாரக் கொள்கைகள் தான் சரியான பாதை, அதுவே மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என சரியான பாதையை இடதுசாரிக் கட்சிகள் கை காட்டிகளாக நின்று சொல்கின்றனர். அடுத்து அமையக்கூடிய நாடாளுமன்றத்தில் இத்தகைய மாற்று பொருளாதாரக் கொள்கைகளை கொண்டு செல்லவும், மக்கள் ஒற்றுமையை உறுதிப்படுத்தவும், இடதுசாரி எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது மிக மிக அவசியமானது. 
           நாட்டில் கொட்டிக்கிடக்கும் எண்ணற்ற வளங்களின் பயன்கள் அனைத்தும், கோடானுகோடி மக்களுக்கும் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் திருப்பிவிட வேண்டியது காலத்தின் காட்டாயம்!
           அசாம் மாநிலத்தில் பார்பேட்டா, தேஜ்பூர், சில்சார் ஆகிய 3 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். கவுகாத்தியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சீதாராம் யெச்சூரி ஆற்றிய உரையின் பகுதிகள் இவை. 
தொகுப்பு : வெ.ராகுல்ஜி

கருத்துகள் இல்லை: