திங்கள், 24 மார்ச், 2014

அத்வானி - ஜஸ்வந்த்சிங் -ஹரேன் பாண்டியா - சற்றுப் பின்னோக்கி பாருங்கள்...!


   கட்டுரையாளர் : தோழர். அன்வர் உசேன்         
        
          பாரதீய ஜனதாக் கட்சியினுள் கடும் உள்குத்து நடந்துகொண்டிருக்கிறது. பா.ஜ.க. உருவாக பாடுபட்ட பல மூத்த தலைவர்கள் மோடியால் ஓரம் கட்டப்படுகின்றனர் எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
              அத்வானி மோடியின் கட்டுப்பாடிற்குள் இருக்க விரும்பவில்லை. எனவே குஜராத்திற்கு பதிலாக அவரை ஆதரிக்கும் சவுகான் முதல்வராக உள்ள போபாலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அது அத்வானிக்கு மறுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். மூலமாக மோடி மீண்டும் ஒரு முறை அத்வானியை மண்டியிட வைத்தார்.
             ஜஸ்வந்த்சிங்கின் சொந்த ஊர் இராஜஸ்தானில் பார்மர் தொகுதி. அங்கு அவர் போட்டியிட விரும்பினார்.ஆனால் அவருக்கு அந்த தொகுதி ஒதுக்கப்படவில்லை. எனவே அவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
            மோடிக்காக தனது வாரணாசி தொகுதியை முரளி மனோகர் ஜோஷி தாரைவார்க்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டார்.
                யஷ்வந்த்சின்கா, லால்ஜிடாண்டன், கைலாஷ் மிஸ்ரா, உமாபாரதி, சூர்யபிரதாப் சாஹி ஆகியோர் தொகுதி மறுக்கப்பட்டுள்ளனர்.
             தனது கருத்தை தலைமை புறக்கணிக்கிறது என பகிரங்கமாக சுஷ்மா சுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
                 மோடியின் இந்த செயல்பாடுகள் சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் மோடியின் குணத்தை புரிந்தவர்கள் இத்தகைய நிகழ்வுகளினால் அதிர்ச்சி அடையமாட்டார்கள்.

ஹரேன் பாண்டியாவின் படுகொலை - சற்றுப் பின்னோக்கி பாருங்கள் :

              2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பா.ஜ.க.வால் நியமிக்கப்பட்டார். இந்திய அரசியல் சட்டப்படி ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். குஜராத்திலேயே எல்லீஸ்பிரிட்ஜ் தொகுதிதான் பாஜகவுக்கு சாதகமான தொகுதி என மோடி மதிப்பிட்டார். எனவே அந்த தொகுதியின் உறுப்பினர் ஹரேன் பாண்டியாவை அழைத்து தான் போட்டியிட வசதியாக ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தினார். ஹரேன் பாண்டியா கேசுபாய் பட்டேல் மந்திரிசபையில் உள்துறை மற்றும் தகவல் துறை அமைச்சராகவும் இருந்தவர். மோடியின் சமகாலத்து சங் பரிவாரத் தலைவர்.
             அவர் தனது தொகுதியை மோடிக்கு விட்டுத்தர மறுத்துவிட்டார். மோடி கடுமையாக மிரட்டியும் ஹரேன் பாண்டியா அசரவில்லை. எனவே மோடி ராஜ்கோட் தொகுதியில் 24.02.2012 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு 14000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆனால் பொதுத்தேர்தலில் இத்தொகுதியில் பா.ஜ.க. 28000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.ஹரேன் பாண்டியா தன்னை அவமானப்படுத்திவிட்டதாக மோடி கருதினார். அவரை பழிவாங்கிட காத்திருந்தார். இடைத்தேர்தலில் வென்றதும் ஹரேன் பாண்டியாவை அமைச்சரவையிலிருந்து விலக்கினார். பின்னர் 2002 தேர்தலில் அவருக்கு போட்டியிட அனுமதியை மோடி வழங்கவில்லை.
                    எனவே அத்வானி, அருண் ஜெட்லி, வாஜ்பாய் ஆகியோரிடம் ஹரேன் பாண்டியா புகார் செய்தார். அவர்கள் ஹரேன் பாண்டியாவுக்கு போட்டியிட அனுமதிக்குமாறு மோடியை வற்புறுத்தினார்கள். இதனைத் தவிர்க்க மோடி மருத்துவமனை ஒன்றில் சேர்ந்து எவரிடமும் பேசுவதை தவிர்த்தார். எனினும் ஹரேன் பாண்டியா முக்கியமான தலைவர் என்பதால் அவர் போட்டியிட வேண்டும் என மேலிடம் வற்புறுத்தியது. ஹரேன் பாண்டியா போட்டியிட்டால் தான் போட்டியிலிருந்து விலகிவிடுவதாக மோடி கூறினார். வேறு வழியின்றி மேலிடம் ஹரேன் பாண்டியாவை கைகழுவி விட்டது.தேர்தலுக்கு சில மாதங்களுக்கு பிறகு ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இதுவரை கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் ஹரேன் பாண்டியாவின் மனைவியும் அவரது தந்தையும் இந்த படுகொலை ஒரு அரசியல் படுகொலை எனவும் அதனை செய்தது யார் என்பது அனைவரும் அறிந்த ரகசியம் எனவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். என்கவுண்டர்களில் சிக்கி சிறையில் உள்ள மோடிக்கு வலது கரம் போன்று செயல்பட்ட வன்ஜாரா போன்ற அதிகாரிகளிடம் தனது கணவரின் கொலை குறித்தும் விசாரிக்க வேண்டும் என ஹரேன் பாண்டியாவின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
                தன்னை எதிர்க்கும் சங்பரிவாரத்தின் ஊழியர்களையே தன் பாதையிலிருந்து ‘அகற்றுவது’ எப்படி என்பதை கை வந்த கலையாக கொண்டவர் மோடி. அன்று குஜராத்தில் செய்ததை இன்று அகில இந்திய அளவில் செய்கிறார்.இத்தகைய நபர் பிரதமர் ஆனால் ஜனநாயகம் என்ன பாடுபடும் என்பதை வைகோக்களும் விஜய்காந்த்களும் இன்னும் தேர்தலுக்கு பிறகு அவருக்கு ஆதரவு தர காத்திருப்போரும் உணர்ந்து கொள்வது நல்லது.
நன்றி : 
 

கருத்துகள் இல்லை: